Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
டிசம்பர் 2006

வேலை - சமூக முன்னேற்றத்தின் ஆணிவேர்
வெங்கடேஷ்

வேலை. சமூகத்தில் உழைக்கும் சக்தி படைத்தவர்களை வாங்கும் சக்தி உடையவர்களாக மாற்றும் மந்திரச் சொல். முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்ற சந்தை என்பதை உயிரோட்டமாக வைத்திருக்க அருள் பாலிக்கும் அற்புதம் ‘வேலை’. பொதுவாக பொருளாதார வளர்ச்சி வேலைவாய்ப்பு வளர்ச்சியில் பிரதிபலிக்க வேண்டும். இதுதான் மக்களுக்கான பொருளாதார கோட்பாடாக இருக்க முடியும். கொய்ன்ஸ் எனும் பொருளாதார நிபுணர் சந்தையை விரிவாக்க அரசு தலையிட்டு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்றார். இது வேலையின்மையை போக்கிட வைத்த ஆலோசனை அல்ல. முதலாளித்துவ உற்பத்தி முறையை ஸ்திரமாக வைத்திருக்க கூறப்பட்ட கோட்பாடு. ஆயினும், கெயின்ஸ் கோட்பாட்டின் நோக்கம் சமூகத்திற்கு பயன்படுவதாக இருந்தது. ஆனால் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் புதிய தாராளவாத சீர்த்திருத்தங்கள் கெயின்ஸ் கோட்பாட்டையே காலில் போட்டு மிதிக்கின்றன. இதைத்தான் வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி, வேலைவாய்ப்பை பறிக்கின்ற வளர்ச்சி என்று ஐ.நா. சபை குறிப்பிடுகிறது. ஆக, வேலை என்பது பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல, அது சமூக முன்னேற்றத்தின் ஆணிவேர் என்ற புரிதல் தேவைப்படுகிறது.

சுடும் உண்மைகள்:

இந்த பின்னணியில், ஏகாதிபத்திய உலகமய கொள்கைகள் வேலைவாய்ப்பின் மீது ஏற்படுத்தியிருக்கும தாக்கத்தை பரிசீலிக்க வேண்டியுள்ளது. அணி திரட்டப்பட்ட பணியாளர்களைக் கடுமையாக குறைப்பதும், ஒப்பந்த பணியாளர்கள் அதிகரிப்பதும் தற்காலச் சூழலின் அடிப்படை அம்சமாக உள்ளது. சமீபத்தில் வெளியாகியுள்ள தேசிய மாதிரி கருத்தாய்வின் 60வது சுற்று முடிவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. வேலையின்மை அபாயகரமாக அதிகரித்து வருவதை இதன் முடிவுகள் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றன. வேலையில்லா கால நிவாரணமோ, காப்பீட்டின் பாதுகாப்போ இல்லாத இந்திய தேசத்தில் வேலையின்மை இரட்டிப்பு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

இது குறித்து 20.06.2006 தேசிய எகனாமிக் டைம்ஸ் ஏட்டில் அலாக் என் சர்மா (இயக்குநர், மனித வளர்ச்சி மையம்) எழுதுகையில், ஒப்பந்த முறையில் பணியாளர்களை அமர்த்தியது அரசியல் தளத்தில் எதிர்க்கப்படுகிறது என்பது மட்டுமல்ல, அது பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் சமூக பொருளாதார தளத்தில் ஒருமுகப்படுத்தப்பட்ட விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். அதிலும் தாராளமான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று கூறியிருக்கிறார். ஆகவே, வேலையின்மை எனும் கொடிய நோய் தீர்க்கப்பட்டே தீரவேண்டும்.

ஆனால் அரசு நிறுவனங்களில் ஆள் எடுப்பதை உலகவங்கி கட்டளைக்கேற்ப சட்டம் போட்டு தடுத்துவிட்டது மத்திய அரசு. வேலைநியமன தடைச் சட்டத்தை நீக்கிவிட்டதாக பெருமை பேசும் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள், மத்திய அரசின் வேலை நியமனத் தடையை நீக்க சொல்வதில் தயக்கம் காட்டுகிறார்கள். இந்த விஷயத்தில் இடதுசாரி கட்சிகள் மட்டுமே நிலையான , உறுதியான கொள்கையுடன் போராடுகின்றன. இது ஒரு முக்கிய அம்சம். மறுபுறத்தில் அரசு பொருளாதார நடவடிக்கைகளிலிருந்து விலகுகிற உலகமயச் சூழலில், தனியார் துறையின் பங்களிப்பு அதிகமாகிவருகிறது. இங்கு தான் மிகவும் முக்கியமான சமூகப் பொறுப்பு தட்டிக் கழிக்கப்படுகிறது. சமூகநீதி, எனும் முக்கிய அம்சம் அம்போவென கைவிடப்படுகிறது.

சமூகநீதியும், முதலாளிகளும்:

தனியார் துறையில் இடஓதுக்கீடு என்பது குறித்து வீரவசனங்கள் பேசப்படுகின்றன. ஆனால் நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ சமூக அமைப்பில் இது அத்தனை எளிதாக நிறைவேறக்கூடியதல்ல என்பதே உண்மை. அரசு உறுதியாக தலையிடாத பட்சத்தில், இது நிறைவேற வாய்ப்பே இல்லை என்று கூறலாம். மத்திய அரசு தன் குறைந்தபட்ச பொது திட்டத்தில் இது குறித்து வாக்குறுதி கொடுத்திருக்கிறது. ஆனால் இது நடைபெற உருப்படியாக எதையும் இதுவரை மைய அரசு செய்திடவில்லை.

இந்தச் சூழலில் கடந்த நவம்பர் 15ம் நாள் மத்திய அரசின் மத்திய தொழில் கொள்கை மற்றும வளர்ச்சி துறையின் செயலாளர் அஜய் துவா என்பவர், பெருமுதலாளிகளிடம் விவாதம் நடத்தினார். அவ்விவாதங்களின் அம்சங்களை பிரதமரின் பிரதான செயலர் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் உயர்நிலைக் குழுவிடம் அளிக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டிருக்கிறது. இந்த விவாதங்களில் பங்கேற்று முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த முதலாளிகளின் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் திரு. து.து. இரானி நாங்கள் இதை (இடஓதுக்கீடு) எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம், அதையும் மீறி அரசு சட்டமியற்றினால் அது துரதிஷ்டவசமாகும் என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் அழுத்தம் திருத்தமாக பேசியுள்ளார். லாபமீட்ட அரசு நிலம், வரிச்சலுகை உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும். ஆனால் அரசு எந்த சமூகப் பொறுப்பையும் தலையில் கட்டக்கூடாது என்பதில் பெருமுதலாளி வர்க்கம் தெளிவாக உள்ளது.

மடிப்பிச்சை கேட்கும் மத்திய அரசு:

இங்குதான் உறுதிப்படுத்தப்பட்ட தலையிடும் நடவடிக்கை என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. வரலாற்றில் இந்த வார்த்தையை முதன் முதலாக 1965ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த லிண்டன் ஜான்சன் தனது அரசானை எண் 11246 ல் பிரயோகித்தார். அரசு ஒப்பந்தக்காரர்கள் உள்ளிட்ட சமூகத்தின் பலவீனமானோர் பயன்பெறும் வகையில் உறுதியான தலையீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது அவரது ஆணையின் சாரம்சம். சமுகத்தின் அடித்தட்டில் இருக்கும் பலவீனமான பிரிவினர்கள் வாய்ப்புகளை பெற அரசு உறுதியுடன் தலையிட வேண்டும் என்பது வெறும் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, அரசின் கடமையும் கூட.

அதிக வேலைவாய்ப்பை குறிப்பாக கிராமப்புறங்களில் உருவாக்கும் விவசாயத்துறை 1970-களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 50 சதம் பங்களித்தது. ஆனால் இதுவே 2004ல் வெறும் 21 சதம் ஆக குறைந்துவிட்டது என்ற யதார்த்த நிலையின் பின்புலத்தில், சமூகத்தின் தேவைகளை நிறைவேற்ற வேண்டியது ஓர் ஜனநாயக அரசின் தலையாய, தட்டிக்கழிக்க முடியாத கடமையாகும். ஆனால் அரசு உறுதியாக நிர்பந்திக்காமல் தனியாக பெருமுதலாளிகளிடம் மடிப்பிச்சை கேட்கிறது.

நீதித்துறையின் வர்க்க பாசம்:

குறுக்குசால் ஓட்டுவது என்பார்களே அந்த வேலையை இந்த காலக்கட்டத்தில் உச்சநீதிமன்றம் செய்திருக்கிறது. பணி நியமனத்தில் எஸ்.சி/எஸ்.டி. பிரிவினருக்கு வடிகட்டும் முறை ( ஒதுக்குதல்) கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. தலைமை நீதிபதி சபர்வால் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் இந்த தீர்ப்பை சொல்லியிருக்கிறது. இந்திரா சஹானி இந்திய யூனியன் வழக்கில் (மண்டல் கமிஷன் தொடர்பான வழக்கு இது) ஒரு சில விதிகளுக்கு உட்பட்டு பிற்ப்படுத்தப்பட்டவர்களில் வசதி படைத்தவர்களை விலக்கி வைக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இப்போது நாகராஜ் மற்றும் பலர் இந்திய யூனியன் வழக்கில் சம்பந்தமேயில்லாமல் நடந்த எஸ்.சி/எஸ்.டி. பிரிவினருக்கும் இந்த முறை பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வாசித்திருக்கிறது. சமூக எதார்த்தங்களை கொஞ்சம் கூட கருத்தில் கொள்ளாமல், மிகவும் பொறுப்பற்ற முறையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் விசித்திரம் என்னவென்றால் அரசியல் சட்ட பிரிவுகள் 16(4) - அனைத்தும் சரி என்று ஒப்புக் கொண்டுவிட்டு, இறுதியில் creamy layer முறை அமலாக்கப்பட வேண்டும் என்கிறது உச்ச நீதிமன்றம்.

மக்கள் தலைநிமிர்ந்தால், நீதி தலைவணங்கும்:

தாழ்த்தப்பட்ட தலித் மக்கள் பொருளாதாரச் சுரண்டலுக்கு மட்டுமல்லாது சமூக ஒடுக்கு முறைகளுக்கும் ஆளாகி வரும் இந்திய சமூகச் சூழலை உச்சநீதிமன்றம் பார்க்கத் தவறிவிட்டது. எத்தனை பெரிய பொறுப்பில் இருந்தாலும் தலித் மக்கள் புறக்கணிப்பட செய்கிறார்கள். தீண்டாமை உள்ளிட்ட சமூக ஒடுக்குமுறைகள் பலப்பல வடிவங்களிலும், கிராமங்களில் மட்டுமல்ல நகரங்களிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இப்படி வர்க்கச் சுரண்டலோடு, சமூக, அரசியல், பண்பாட்டு தளங்களிலும் தாக்குதலுக்கு ஆளாகும் தலித் மக்கள் மீது கிரிமீலேயர் எனும் முறையிலான வடிக்கட்டும் (ஒதுக்கும்) ஏற்பாட்டை திணிப்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பகிரங்கமாக விமர்சித்தது மிகவும் பாராட்டக்குரியது. அதை தொடர்ந்து சமூகத்தின் பல மட்டங்களில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு விமர்சிக்கப்பட்டது. இந்தச் சூழலில் மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில் மத்திய தலைமை வழக்கறிஞர் மிலன் பானர்ஜி உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பது தீர்ப்பாக முடியாது, அது வெறும் கருத்துதான், என்று விளக்கம் கூறினார். உச்ச நீதிமன்றம் இதை எதிர்த்துப் பேசவில்லை. எம்பி. ஒருவர் இடஒதுக்கீடு தொடர்பாக தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளிக்கும் போது எஸ்சி/எஸ்டி. பிரிவினர்களுக்கு கீரிமீலேயர் முறை பொருந்தாது என்று பொருள்பட தெளிவு படுத்தியது உச்சநீதிமன்றம். ஆக சமூகத்தில் ஏற்பட்ட கடுமையான விமர்சனம், கொந்தளிப்பும் உச்சநீதிமன்றத்தின் போக்கில் மாற்றத்தை உண்டாக்க முடிந்திருக்கிறது. இது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

போர் முரசு கொட்டட்டும் - அரசின் கும்பகர்ண தூக்கம் கலையட்டும்:

சரி ஆரம்பித்த இடத்திற்கு வரலாமா? வேலை என்பது மூச்சுக்காற்று போல முக்கியமான ஒன்றாகும். சமூக மேம்பாடுக்கான வேலை என்பது இன்றியமையாததாகும். அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்ற வாதத்தை மாற்றி அனைவருக்கும் வேலை கொடுக்கப்பட்டாக வேண்டும் என்று போர்முரசு கொட்டவேண்டும். அரசு பொருளாதாரத்திலிருந்து விலகி செல்வதை அனுமதிக்க முடியாது. நாட்டின் சமூக, பொருளாதார மட்டங்களில் தலையிட்டு, மக்களை பாதுகாக்கவும், முன்னேற்றவும் அரசுக்கு கடமையும், பொறுப்பும் உண்டு. வித்தாரமாக பேசப்படும் பொருளாதார வளர்ச்சியும், பங்குசந்தை மாயைகளும் உண்மையில் மக்களுக்கு பயன்படுவதில்லை. பொருளாதார வளர்ச்சி மக்களின் வாழ்வுரிமையை, வாழ் நிலையையும் சுருக்கமாக சொன்னால் சமூக மேம்பாட்டிற்கு பயன்பட வேண்டும். அதோடு கூடவே சமூக நீதி பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்த உறுதியாக செயல்பாடாமல் அனைவரையும் உள்ளடக்கிய உலகமயம் குறித்து மன்மோகன்சிங் போன்றவர்கள் பேசுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. டிசம்பர் 14 நாடு தழுவிய வேலைநிறுத்தம் மறியல் போராட்டங்களும் ஆளும் வர்க்கங்களின் கும்பகர்ண தூக்கத்தை கலைக்கட்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com