Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
டிசம்பர் 2006

போலி விசாரணையும் நியாயமற்ற தீர்ப்பும்
எஸ்.வி.சசிகுமார்

ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து தொண்டூழியம் செய்ய மறுத்துச் சுதந்திரமாக செயல்பட விழையும் நாடுகளையெல்லாம் தன் காலடியில் போட்டு மிதித்து அவற்றை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்தொழிக்கத் துடிக்கும் அமெரிக்க அதிபர் புஷ் இன்னுமொரு கபட நாடகத்தை இராக் மண்ணில் அரங்கேற்றியிருக்கிறார்.

கோடானு கோடி உலகமக்களின் எதிர்ப்பு உணர்வுகளையெல்லாம் துச்சமென மதித்து போலிக் காரணங்களுக்காக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இராக்நாட்டின் மீதுப்படையெடுத்துப் பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்த புஷ்ஷிற்கு இன்னமும் ஆத்திரம் அடங்கியபாடில்லை. அந்நாட்டைக் கைப்பற்றி ஒருபோலி அரசை நிறுவியபின்னரும் அவரது வெறியாட்டம் ஓயவில்லை. ஆக்கிரமிப்புப் படைகளின் துணையோடு, ஜனநாயகப் போர்வையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் அங்கே இயங்கி வரும் பொம்மை அரசைப் பயன்படுத்தியே முன்னால் அதிபர் சதாம் உசேனுக்கு எதிராக விசாரனை நீதிமன்றத்தை ஏற்படுத்தி ஓராண்டுப் போலி விசாரனையையும் நடத்தி அவருக்கு மரணதண்டனையும் விதிக்கச் செய்து தனது பழிவாங்கும் முயற்சியில் முதல்கட்ட வெற்றியைப் பெற்றிருக்கிறது புஷ் அரசு.

அமெரிக்காவில் நவம்பர் முதல் வார இறுதியில் நடைபெற்ற இடைக்கால, பாராளுமன்றத் தேர்தலில் புஷ் கட்சியின் வெற்றிக்கு உதவும் என்ற எண்ணத்தில் அவசர கோலத்தில் வந்த நீதிமன்ற தீர்ப்பும், பாவம் அவரது முகத்தில் கரியைத் தான் பூசியது. அவரது குடியரசுக் கட்சி பெரும் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது என்பது சாதாரண விஷயமில்லை. புஷ்ஷின் இராக் கொள்கைக்கு அமெரிக்க மக்கள் கொடுத்த நெற்றியடி அது என்று சொன்னால் மிகையல்ல.

நவம்பர் 5 அன்று பாக்தாத் விசாரணை மன்றம் சதாம் உசேனுக்கு அளித்த மரணதண்டனையை எதிர்த்து உலகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களுக்கு அமெரிக்க மக்கள் அளித்த பேராதரவாகவே புஷ் கட்சியின் தேர்தல் பின்னடைவு கருதப்படுகிறது. எனவே, சதாம் உசேன் மீது கொலை குற்றம் சாட்டித் தொடுக்கப்பட்ட வழக்கில் விசாரணை நீதிமன்றம் அளித்த மரணதண்டனை புஷ்ஷிற்கு ஒரு தற்காலிக மகிழ்ச்சியைக் கூடத் தரவில்லை. வெள்ளை மாளிகையில் தனது அரசியல் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் அவர் பரிதாபகரமாகத் தள்ளப்பட்டிருக்கிறார்.

அமெரிக்கத் தொழிலாளர் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரத்தில் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட வீழ்ச்சியும், புஷ் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளும் கூட புஷ் கட்சியான குடியரசுக் கட்சியின் தோல்விக்குக் காரணமாக இருந்தாலும், சதாம் உசேனுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையும் அமெரிக்க மக்கள் இத்தேர்தலில் புஷ்ஷிற்கு கொடுத்த மரண அடியில் பெரும் பங்கு வகித்திருக்கிறது. என்று கொள்ளலாம். அதனால்தான் பாதுகாப்புச் செயலர் டொனால்டு ரம்ஸ்பெல்ட் ராஜினாமா செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. தீர்ப்பின் கடுமையை விடவும் விசாரணை என்ற பெயரில் நடத்தப்பட்ட கபட நாடகமும், அத்துமீறல்களும், பின்பற்றப்பட்ட நடைமுறைத் தவறுகளும், இழைக்கப்பட்ட உரிமை மறுப்புக் கொடுமைகளும் தான் உலக மக்களின் கோபத்தை அதிகரிக்க செய்திருக்கின்றன.

உலகளாவிய நிறுவனங்களான ஆம்னெஸ்டி இன்டெர்நேஷனல், மனித உரிமை கண்காணிப்புக்குழு போன்றவை சதாம் உசேனுக்கு எதிரான குற்றச் சாட்டுகளை விசாரித்த இராக் உயர் விசாரணை மன்றத்தில் பின்பற்றிய நடைமுறைகளைப் பற்றிக் கடுமையாக விமர்சித்துள்ளன. விசாரணையில் பல அடிப்படைக் கோளாறுகளும் விதிமீறல்களும் இருந்தன என்று அவ்வியக்கங்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளன. மனித உரிமைக் கண்காணிப்புக் குழு நவம்பர் 15ம் தேதியில் வெளியிட்ட ஒரு 97 பக்க அறிக்கையில் பல தவறுகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறது.

இராக் உயர் விசாரணை மன்றம் சதாம் உசேனுக்கு எதிரான இரண்டு முக்கிய வழக்குகளை விசாரிக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்டது. முதல் வழக்கு 1982 ல் நடந்த ஒரு துயர சம்பவம் பற்றியது. அதிபர் சதாம் உசேனுக்கு எதிரான ஒரு கொலை முயற்சியைத் தொடர்ந்து துஜைல் என்ற நகரத்தில் உசேன் அரசு 148 அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. இதைக் குறித்தது தான் முதல் வழக்கு. சதாம் உசேனுடன் சேர்த்து இன்னும் ஆறு நபர்களும் இதில் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் தான் இப்பொழுது தீர்ப்பு வந்திருக்கிறது. சதாம் உசேனுடன் மேலும் இருவர் இவ்வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர்.

சதாம் உசேனுக்கு எதிரான இரண்டாவது வழக்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் விசாரணை மன்றத்தில் கொண்டு வரப்பட்டது. 1970 களின் இறுதியில் சுமார் இரண்டு லட்சம் (சரியாகச் சொல்வதானால் 1 லட்சத்து 87 ஆயிரம்) குர்து இன மக்களைக் கொன்றதாக அவ்வழக்கில் சதாம் உசேன் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். 2006 மே மாதம் தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முதல் விசாரணை நவம்பர் 8 ல் நடந்தது. ஒரு லட்சத்து 97 ஆயிரம் குர்து இனமக்களை, அவர்களது வீடுகளை எரித்தும், விஷ வாயுக்களை அவர்கள் மீது பாய்ச்சியும் சித்ரவதை செய்தும் கொன்றதாக சதாம் உசேனும் அவருடைய நெருங்கிய உறவினரான ‘கெமிக்கல் அலி’ என்ற அலி ஹாசன் அல் - மஜித் உள்பட மேலும் 6 பேரும் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இப்படுகொலைகளைச் செய்ய சதாம் உசேன் அரசு பயன்படுத்தியதாகச் சொல்லப்படும் விஷவாயுவை அவருக்கு கொடுத்தனுப்பியதே அப்போதைய அமெரிக்க அரசு தான். அப்பொழுது அமெரிக்க அதிபராக இருந்தது யார் தெரியுமா? இந்த புஷ்ஷின் தந்தை சீனியர் ஜார்ஜ் புஷ் தான். விசாரணை முடிய சில மாதங்கள் ஆகலாம்.

சதாம் உசேனுக்கு எதிரான முதல் வழக்கு விசாரணை எவ்வளவு போலித்தனமான கேலிக்கூத்தென்று பல பத்திரிக்கைகள் விபரமான செய்திகள் வெளியிட்டுள்ளன. விசாரணை மன்றத்தின் பல குறைபாடுகளையும், முறைகேடுகளையும் விபரமாகப் பட்டியலிட்டிருக்கிறார் மனித உரிமைக் கண்காணிப்பின் அறிக்கையைத் தயாரித்த நேஹல் பூட்டா. இராக் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நம்பக்தன்மை கொண்ட தீர்ப்பை வழங்கத் தவறிவிடடதாக பூட்டா விசாரணை மன்றத்தின் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். ஒரு நியாயமற்ற விசாரணையின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இந்த மரண தண்டனையை எவ்விதத்திலும நியாயப்படுத்த முடியாது என்று அவர் குறிப்பிடுகிறார்.

விசாரணையின் தொடக்கத்திலிருந்த தலைமை நீதிபதி மாற்றப்பட்டிருக்கிறார். ஓராண்டுக்குள் 2 பேர் பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நேர்மையானவராகத் தோற்றமளித்த முதல் நீதிபதி பதவி விலக நேரிட்டது. உசேனுக்கு ஆதரவாக விசாரணை மன்றத்தில் வாதாடிய இரு வழக்கறிஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சாட்சிகள் விசாரணைகள், குறுக்கு விசாரணை போன்றவைகளிலும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்களைப் பெறுவதிலும் பல விதமான முறைகேடுகளும் அதிகாரத் துஷ்பிரேயாகங்களும் நடந்துள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான பல சாட்சியங்கள் அவர்களிடம் சொல்லப்படவே இல்லை. அவைபற்றி தங்கள் கருத்துக்களைக் கூறும் வாய்ப்பு கூட அவர்களுக்குத் தரப்படவில்லை. பல சாட்சிகள் திரை மறைவில் வேண்டுமென்றே மாற்றப்பட்ட தங்கள் வாக்கு மூலங்களைப் பதிவு செய்ததாக ஒரு அறிக்கை கூறுகிறது.

குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லும் உரிமை கூட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நியாயமாகத் தரப்படவில்லை எள்பது வேதனையுடன் சுட்டிக்காட்டப்படும் முக்கிய குறைபாடு. ஏன் பல சாட்சியங்கள் என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது. இவ்வாறு பொய் வாக்கு மூலங்களையும், நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளையும், போலி ஆவணங்களையும் அடிப்படையாகக் கொண்டு தான் விசாரணை மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதிகாரிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே விசாரணையின் ஒவ்வொரு கட்டத்திலும் சதாமுக்கு எதிராகத் தலையிட்டு விசாரணை மன்றத்தின் மீது ஆதிக்கம் செலுத்த முற்பட்டிருப்பதையும் சில பத்திரிக்கைகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

கடந்த அக்டோபரில் தொடங்கி இவ்வாண்டு நவம்பரில் முடிந்த இந்த விசாரணை முற்றும் போலியானது, நியாயமற்றது, சட்ட விரோதமானது, நம்பத்தன்மை சிறிதும் இல்லாதது என்றே அரசியல் நோக்கர்களும் உலகின் பல்வேறு பகுதிகளில் கருத்துச் சொல்லியிருக்கின்றனர்.

தீர்ப்பை எதிர்த்து சதாம் உசேனும் மற்றவர்களும மேல்முறையீடு செய்துள்ளனர். மேல் முறையீட்டுத் தீர்ப்பும் சதாமுக்கு சாதகமாக இல்லையனில், 35 நாட்களுக்குள் அவர் தூக்கிலிடப்படுவது உறுதியாகிவிடும்.

சாதாரண நடைமுறைகளைக் கூடப் பின்பற்றாத ஒரு விசாரணை மன்றத்தின் தீர்ப்பை, சர்வதேச விசாரணைகளில் பின்பற்ற வேண்டிய எந்த ஒரு சட்ட நெறிமுறைகளையும் ஏற்றுக் கொள்ள மறுத்து செயல்பட்டிருக்கும் ஒரு மன்றத்தின் தீர்ப்பை, பொய்க் காரணங்களுக்காக இராக்கின் மீது போர் தொடுத்து ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களைப் பலி கொண்ட சர்வதேச குற்றவாளி புஷ்ஷின் கைப்பாவையான அரசால் நிறுவப்பட்ட ஒரு விசாரணை மன்றத்தின் தீர்ப்பை மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்பதை இராக்கில் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற, நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் தெளிவாக்கியுள்ளன.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com