Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
டிசம்பர் 2006

பகத்சிங் உரைத்த அரசியல்
எஸ்.கண்ணன்

பகத்சிங் ஒரு தீவிரவாதி என்று மகாராஷ்டிரா மாநில அரசு வகுத்தளித்த பாடத் திட்டம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இதை எதிர்த்து அந்த மாநிலத்தில் நடந்த போராட்டம், அரசை பணிய வைத்ததாக தகவல்கள் சொல்கின்றன. இது நமது தேசம் விடுதலை அடைந்த காலங்களில் பயிற்றுவிக்கப்பட்ட பாடம் அல்ல. இந்த 2006 ம் ஆண்டு துவக்கத்தில் சொல்லப்பட்ட வரலாற்றுத் திரிபு. காலம் காலமாக வரலாறு, ஆள்பவர்களுக்கு சாதகமாக படைக்க படுவதன் பின்னணியில் இருந்து, பகத்சிங் ஒரு தீவிரவாதி என்ற பாடமும் எழுதப்பட்டது.

இந்தியாவை பிற்காலத்தில் ஆட்சி செய்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலர் மதிக்கப்படுகிற இந்த தேசத்தில், பகத்சிங்ன் வரலாறும், எண்ணிறைந்த இளம் போராட்டக்காரர்களின் வரலாறும், திரித்துக் கூறப்படுவதற்கு காரணம் என்ன? தங்களின் தாய், தந்தை, உடன் பிறந்தோர் என்ற உறவுகளை இழந்து, இளமையில் சாகடிக்கப்பட்ட வீரர்களின் வரலாறு ஏன் அவமரியாதை செய்யப்படுகிறது? பகத்சிங் வெடிகுண்டு வீசியதும், சாண்டர்ஸ் என்ற காவல் துறை அதிகாரியை கொன்றது மட்டுமே காரணமா? பகத்சிங்கிற்கு அரசியல் கொள்கை கோட்பாடு போன்ற எந்தப் பின்னணியும் இல்லையா? வாலிப வேகத்தில் உணர்ச்சி வசப்பட்டு எடுக்கப்பட்ட முடிவுகளில் இருந்து செயல்பட்ட நபரா பகத்சிங்? என்ற எண்ணற்ற கேள்விகளால் அன்றைய அரசியலையும், பகத்சிங்கின் கொள்கைகளையும் அலசிப்பார்ப்பது அவசியம்.

நூற்றாண்டு விழா கொண்டாடப்படுபவர்கள், அவர்களின் பெருமைகளில் இருந்து மட்டுமே, இளம் தலைமுறைக்கு சொல்லப்படுகிறார்கள். ஆனால் பகத்சிங் மட்டும் தான், நூற்றாண்டு விழாவை சந்திக்கிற நேரத்திலும் சில எதிர்மறை கருத்துக்களையும் சந்திக்கிற நபராக இருக்கிறான். காரணம், கொள்கைகளில் இருந்தே, எதிர்மறை, நேர்மறை கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. பகத்சிங் விடுதலைப்போரில் ஈடுபடத் துவங்கிய காலத்தில், காந்தியடிகள், பண்டித நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட பலரும் அரசியலில் முன்னணி தலைவர்களாக இருந்தனர். இவர்கள் அனைவரும் விடுதலைக்கு ஆற்றிய பங்கில் இருந்து, எள்முனை அளவும் குறைந்ததாக பகத்சிங் ஆற்றிய பணியை மதிப்பிட முடியாது. காந்தி ராமராஜ்ஜியம் பேசியதைப் போலவே, பகத்சிங் சோசலிசம் பற்றி பேசினார்.

அது தான் ஆளும் அரசின் நெருடலுக்குக் காரணம். பகத்சிங்கின் அரசியல் கொள்கைகள் தான் இந்திய ஆளும் வர்க்கம், பகத்சிங்ஐ தீவிரவாதி என சுட்டுவதற்கு காரணம். இதுபற்றி பகத்சிங்ம் அவருடைய நண்பர்களும் வெடிகுண்டுகளை கையாண்டனர். போலீஸ் அதிகாரியை கொன்றனர் என்கிற குற்றச்சாட்டு மட்டும் காரணமாக இருந்தது? என்பதை தேவைக்-காக மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

விடுதலைப் போரில், அஹிம்சா வாதம் மட்டுமே போராடி வெற்றி பெற்றதா? என்பதை அவசியம் விவாதிக்க வேண்டும். அஹிம்சைக்குப் பயந்து வெள்ளையர்கள், விடுதலைக்கு சம்மதித்தார்கள் என்பது தெருவில் செய்து காட்டும் குரலி வித்தையைப் போன்றது. நபர்களை ஒப்பிட்டுப் பார்ப்பதை விட, கொள்கைகளை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய தேவை அதிகரித்துள்ளது.

விடுதலை இந்தியாவின் பாடத் திட்டங்கள், குறிப்பாக எழுதப்பட்ட வராலாறு, பகத்சிங்ன் அரசியல் இயக்கம் குறித்தோ, அனுசீலன், ஜூகாந்தர், கத்தார், வஹாபி போன்ற இயக்கங்கள் குறித்தோ, விவாதிக்கிற நோக்கத்தோடு தயாரிக்கப்படவில்லை. மாறாக, இந்தியாவை ஆண்ட, ஆளுகிற அரசுகளுக்கு வலுச் சேர்க்கிற கொள்கையில் இருந்தே, வரலாறு எழுதப்பட்டது. ஆகவே தான், இந்தியாவை அடக்கி ஆட்சி செய்த, ஆங்கிலேயர்களின் வருகை முதல் முடிவு வரை, விலாவாரியாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், அவர்களை எதிர் கொண்ட இளைஞர்களை புறக்கணித்துள்ளனர். இப்படி பகத்சிங் மறைக்கப்பட்டதற்கும் ஒரு அரசியலே அடிப்படைக் காரணம் என்பதை நூற்றாண்டுக் கொண்டாட்டங்களில் பேச வேண்டும். பகத்சிங், வீரனாக, எழுத்தாளனாக, தத்துவவாதியாக, சாதி மறுப்பு பேசியவனாக, இலக்கியவாதியாக என பல முகங்களில் பேசுவதற்கு தகுதி படைத்தவன் என்றாலும் அவனுடைய அரசியல் கொள்கையே அடிப்படையானது.

இந்தியாவுக்கு விடுதலை வேண்டும் என்பது எல்லோரின் கோரிக்கை. ஆனால், எப்படிப்பட்ட விடுதலை என்கிற விவாதத்தை துவக்கிய பெருமை பகத்சிங்கிற்கு உண்டு. 1917 ல் சோவியத் யூனியனில் ஏற்பட்ட புரட்சி, தமிழகத்தில் இருந்த மகாகவி பாரதியை, “ஆகாவென்று எழுந்தது பார்யுகப் புரட்சி” என பாட வைத்தது. நீலகண்ட பிரம்மச்சாரியின் வார்த்தைகளில், சோலிசமும் சரளமாக பயன்படுத்தப்பட்டது. பெரியார் சோவியத் பற்றி நிறைய பேசியிருக்கிறார். கம்யூனிஸ்ட் அறிக்கையை தமிழில் முதன்முதலாக மொழி பெயர்த்தவர் பெரியார். இப்படி எத்தனையோ தலைவர்களிடம் சோவியத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்களைப் பேச வைத்தது.

ஆனால் பகத்சிங் சோவியத் யூனியன் குறித்து, புரட்சி குறித்து, சோசலிசம் குறித்து பேசும் போது, உணர்ச்சி வசப்பட்டு பேசுபவனாக இல்லை. நிதானமாக கையாளும் மனப்பக்குவத்தை பகத்சிங் பெற்றிருந்தான். “இந்துஸ்தான் சோசலிச குடியரசுப்படை” (HSRA) என்ற அரசியல் அமைப்பை பிரகடனப்படுத்தும் போது, பகத்சிங்கின் வயது 20 மட்டுமே. அந்த வயதில் நிதானமான, கொள்கைப் பிரகடனத்தை வெளியிடுபவர் ஆச்சரியம் மட்டுமல்ல. அதிசயமும் கூட. இதற்குக் காரணம் பகத்சிங் உள்வாங்கிக் கொண்ட அரசியல். அதனால் தான், இந்துஸ்தான் சோசலிச குடியரசுப்படை, தனது மத்திய கமிட்டி உறுப்பினர்கள் 8 பேரை தீர்மானித்த உடன், அவர்களுக்கான வேலைப் பிரிவினையையும் தீர்மானிக்கிறது.

அதாவது, 1928 செப்டம்பர் 8,9 தேதிகளில் டில்லி மாநகரம் ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் கூடிய பிரதிநிதிகள் இந்துஸ்தான் சோசலிச குடியரசுப்படை (HSRA) என்ற அமைப்பை நிறுவுகின்றனர். இந்தக் கூட்டத்தில் பஞ்சாப், உத்திரப்பிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் செயல்பட்டு வந்த போராட்டக் குழுக்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இவர்களல்லாமல் வங்கத்திலிருந்து, HSRA ன் பணியில் ஈடுபடுவதற்காக ஜதீந்திரநாத் தாஸ் பின்னாளில் வந்து இணைந்தார். அன்றைய நாள்களில் சந்திர-சேகர ஆசாத் வலை வீசித் தேடப்பட்ட காரணத்தால் அவர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

பகத்சிங் கூட்டத்தை நடத்தியது அல்லாமல், அவர் கூட்டத்தில் முன்வைத்த ஆலோசனைகள் மிக முக்கியமான ஒன்றாக இன்றைக்கும் விளங்கி வருகிறது. 1. சோலிசம் தான் நமது இறுதி லட்சியம், 2. கட்சியின் பெயரை இந்துஸ்தான் சோசலிச குடியரசுப்படை என மாற்ற வேண்டும். அப்போது தான் மக்கள் நமது இறுதி லட்சியத்தை புரிந்து கொள்வார்கள் 3. இதை மனதில் கொண்டு, இதற்கு இசைவான மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து போராட வேண்டும். தேவையில்லாமல், சிறுசிறு உளவாளிகளையும், காவல் துறையினரையும் கொலை செய்து, நமது ஆற்றலை இழப்பதோடு, மக்களையும் அச்சுறுத்த வேண்டாம். 4. பணத்திற்காக தனி நபர்களை கொள்ளையடிப்பது வேண்டாம் 5. கூட்டுத் தலைமை உறுதி செய்யப்பட வேண்டும். மேற்படி 5 கொள்கைகளும் பகத்சிங்கினால் முன் மொழியப்பட்டது. இக்கருத்தை பகத்சிங், சுகதேவ், சிவவர்மா, பிஜாய் குமார் சின்ஹா, ஜெய்தேவ் கபூர், சுரேந்திர நாத் பாண்டே ஆகியோர் ஏற்றுக் கொண்டனர். பணிந்திர நாத் கோஷ், மன்மோகன் பானர்ஜி ஆகியோர் எதிர்த்தனர்.

அதற்கு இருவரும் சொன்ன காரணம் மேற்படி கொள்கைகள் தீவிரவாதச் செயல்களுக்கு எதிரானவை என்பதாகும். ஆனால் பகத்சிங் உள்ளிட்ட நபர்கள் கைது செய்யப்பட்ட பிறகு, அனைவரையும் காட்டிக் கொடுக்கும் அப்ரூவராகவும் மேற்படி இருவர் தான் இருந்தனர் என்பது கவனிக்கத் தக்கது. இந்தக் கூட்டத்தில் 7 பேர் கொண்ட மத்திய கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. சந்திரசேகர் ஆசாத் கமாண்டர் இன் சீஃப் ஆகவும், பகத்சிங் தத்துவார்த்த பணிகளின் பொறுப்பாளர் என்றும் தீர்மானிக்கப்பட்டது. HSRA அமைப்பின் கொள்கை அறிக்கையை பகவதி சரண் வோரா தயாரிப்பது என்றும் முடிவு செய்தனர். இந்த கொள்கை அறிக்கை தான் 1929 ம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் விநியோகிக்கப்பட்டது. பகத்சிங்கும் மற்ற தோழர்களும் இந்த கொள்கை அறிக்கைக்காக உழைத்தார்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

கொள்கைப் பிரகடனத்தில் புரட்சியைக் குறித்து தோழர்கள் எழுதிய விதம் ஒரு கவிதையைப் போல் இருந்தது என்கின்றனர். “புரட்சி என்பது அன்பை குறிப்பிடுகிற ஒன்று. புரட்சி இல்லாமல் இயற்கையோ அல்லது மனித குலமோ வளர்ச்சி குறித்து சிந்திக்க முடியாது. புரட்சி என்பது உறுதியாக, சிந்தனையற்றதோ, மனிதர்களைக் கொல்லும் வன்முறை செயலோ அல்ல அல்லது சில துப்பாக்கிக் குண்டுகளாலும், வெடி குண்டுகளாலும் நடத்துகிற விஷயமும் அல்ல. புரட்சி என்பது வெறுப்பை உமிழும் தத்துவத்தின் வெளிப்பாடும் அல்ல. அல்லது மனித நாகரிகத்தின் அடையாளங்களை அழித் தொழிக்கும் ஆயுதமும் அல்ல. மாறாக, நீதியையும், சமத்துவத்தையும் கூர்மைப்படுத்துகிற ஒன்று. புரட்சி ஒருவேளை கடவுளுக்கு எதிரானதாக இருக்கலாம்.

சத்தியமாக மனிதனுக்கு எதிரானது அல்ல. புரட்சி பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான முரண்பாட்டை அல்லது உயிர் உள்ள ஒன்றிற்கும், இறந்து போனதற்குமான வித்தியாசத்தை அல்லது இருட்டுக்கும் வெளிச்சத்துக்குமான வேறுபாட்டை சுட்டிக்காட்டும் அறிவாற்றல் கொண்டது. புரட்சி சட்டத்தைப் போன்றது,
புரட்சி கட்டளைகளைப் போன்றது. புரட்சி உண்மையைப் போன்றது”, என்று HSRA ன் கொள்கைப் பிரகடனம் சொல்கிற வாதம், அரசினைப் பற்றியும், அதிகாரத்தைப் பற்றியும் பேசுபவர்களை அசைத்துப் பார்க்காமல் வேறென்ன செய்யும்?

மேலே குறிப்பிட்ட வார்த்தைகளுக்கான தேவை எங்கிருந்து உருவானது? என்பதை தெரிந்தால் தான், பகத்சிங்கும் அவனுடைய தோழர்களும் இந்திய சமூகத்தை எவ்வளவு ஆழமாக ஆய்வு செய்திருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். ஏன் இந்திய உழைப்பாளி இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கிறான் என்பதை புரிந்து கொள்ளும் நபரால் தான் அதற்கான மாற்றைப் பற்றி கவலை கொள்ள முடியும்.
இதைப்போலத்தான் HSRA தோழர்கள் இந்திய தொழிலாளி பற்றியும், விவசாயத் தொழிலாளர்கள் பற்றியும் மிகத் தெளிவான புரிதலைக் கொண்டிருந்தார்கள். “இந்தியத் தாய் ஏகாதிபத்தியத்தின் கோரப்பிடியில் துவண்டு கொண்டிருக்கிறாள். அவளுடைய கோடானு கோடி குழந்தைகள் வறுமையிலும், அறியாமையிலும் உதவியற்ற இரக்கத்திற்குரியவர்களாகவும் இன்றைய தினம் இருக்கிறார்கள்.

அந்நிய ஆதிக்கம், இந்தியாவின் பெரும்பான்மை மக்களான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மீது மனிதத்தன்மையற்ற பொருளாதார சுரண்டலை செய்யக் கூடியதாக இருக்கிறது. இந்திய உழைப்பாளி வர்க்கம் ஒரு புறம் அந்நிய முதலாளிகள் தாக்குதலுக்கும், மற்றொரு புறம் இந்திய முதலாளிகளின் சுரண்டலுக்கும் ஆளாகி வருகின்றனர். இந்த இருபக்கத் தாக்குதல்களில் இருந்து தான் சோசலிசம் மட்டுமே தீர்வு என்பதை முன் வைக்கிறோம். ஆனால், விவசாயிகளின் எழுச்சியைக் கண்ட இந்திய முதலாளி வர்க்கம், டொமினியன் (ஆட்சியுரிமை) அந்தஸ்து என்ற கோரிக்கையை கைவிட்டு பூரண சுதந்திரம் என முழங்கத் துவங்கியிருக்கின்றனர். ஆனால், உழைப்பாளி வர்க்கத்தை தலைமையாகக் கொண்ட, சோசலிச கொள்கையால் மட்டும் தான், சமூக பாகுபாடுகள் அற்ற, அனைவருக்குமான முழுமையான சுதந்திரத்தைப் பெற்றுத் தரமுடியும்”, என்ற வரிகளால் பிரகடனம் எழுச்சி நடைபோடுகிறது.

இருபது வயதையொத்த இளைஞர் கூட்டத்தின் ஆழமான ஆய்வு, அன்றைய இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களைப் புரட்டி போட்டிருப்பது ஆச்சரியமில்லை. ஏதோ ஒரு இளைஞன் இதுபோல் சிந்திக்கிறான் என்றால், அதிசயப் பிறவி என சொல்லலாம். ஆனால், வேறு வேறு மாநிலங்களை பிரதிநித்துவப்படுத்தும் ஒரு இளைஞர் கூட்டம், தீவிர அரசியல் புரிதல் இல்லாமல் மேற்படி விசயங்களைப் பேசவோ, எழுதவோ முடியாது. அதுவும் காங்கிரஸ் மாநாட்டிற்குள் கலகக் கொடி உயர்த்திய இந்த மானுடர்கள் வரலாற்றில் இருட்டடிப்பு தானே செய்யப்படுவார்கள். எத்தனை இருட்டடிப்புகள் தொடர்ந்தாலும், பகத்சிங் இந்திய அரசியலில் மைல் கல் என்பது அசைக்க முடியாத உண்மை.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com