Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
டிசம்பர் 2006

பகத்சிங் ஒரு நாத்திகன்
சு.பொ.அகத்தியலிங்கம்

“பல நூற்றாண்டுகளாக சமயம் சக்திவாய்ந்த மேலாதிக்கக் கோட்பாடாகத் திகழ்ந்தது. தத்துவம் கூடசமயத்திடம் பணிந்து நடக்க வேண்டியதாயிற்று. இதன் காரணமாகத்தான் இந்தியாவில் தொடக்க காலத்தில் தே சியம் தோன்றி உருக்கொண்டு வளர்ச்சிபெற்ற காலத்தில் அது பலவகையான சமயக் கோட்பாடுகள், சமய சீர்திருத்தங்கள் வாயிலாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முயன்றது“ என்பார் பண்டிட் ஜவஹர்லால் நேரு.

இந்திய விடுதலை ஒற்றை இரவில் ரகுபதிராஜவ பஜனையில் பெறப்பட்டதல்ல. இதற்கு கொடுக்கப்பட்ட விலை அதிகம். இந்திய விடுதலைப் போரை ஓரே தேசிய நதியாக நம் பள்ளிப்பாடங்கள் கிளிப்பிள்ளைக்குச் சொல்லிக் கொடுப்பதைப்போல் கற்றுக் கொடுத்தாலும் உண்மை அதுவல்ல. திலகர் போல் தீவிரமிக்க விடுதலைப் போராளிகள் சமூகப் பிரச்சனைகளில் மிகவும் பிற்போக்காளர்களாக இருந்ததும், ராணடே போன்று மிதவாதிகளாக இருந்தவர்கள் சமூக சீர்திருத்தக் கருத்துகளில் உறுதியாக இருந்ததும் விசித்திரமான முறையாகும்.

மகாத்மா காந்தியின் வருகை மக்களை விடுதலைப் பேரெழுச்சியில் பங்கேற்க பெரிதும் உந்து சக்தியாகியது ஆனால் காந்தி தீவிரமான இந்துமத அபிமானி. இவரின் நம்பிக்கைக்குரிய பிரதான சீடராகத் திகழ்ந்த பண்டிட் ஜவஹர்லால் நேருவோ தன்னை நாத்திகன் என அறிவித்துக் கொண்டவர்.

இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் சுட்டிக் காட்டுவது போல காங்கிரஸ் கட்சி பொற்கால இந்தியா பற்றி பேசப்பேச ஒடுக்கப்பட்ட மக்கள் அந்நியமாயினர். சுதந்திர இந்தியாவில் தங்கள் நிலை என்னவாகும் என கவலை கொண்டனர். விளைவு ஒடுக்கப்பட்ட மக்கள் தனிப்பாதை காணத் துவங்கினர்.

அதிதீவிரவாதம் தலைதூக்கிட்டபோது, துப்பாக்கிகளோடு, வெடிகுண்டுகளோடு புறப்பட்ட வீர இளைஞர்கள் நாட்டுக்காக தங்கள் உயிரையும் அர்ப்பணிக்காதத் தயாராக களத்தில் குதித்தனர். அவர்கள் எல்லோரும் சுயநலமற்றவர்கள் தேசபக்த வேள்வியில் தங்களை நிவேதனைப் பொருளாக செரித்தவர்கள். ஆயினும் எல்லோரின் சமூகப் பார்வையிலும் ஒரே மாதிரியாக இல்லை. முதல் முதல் தூக்குமேடை ஏறிய குதிராம்போஸ் தொடங்கி மரணத்தை ஆலிங்கனம் செய்துகொண்ட எண்ணற்ற தீரர்கள் தேசபக்தியையும் ஒரு தெய்வீக உணர்வோடு கலந்தனர்.

மும்பையில் பிளேக் நோய் பரவிய போது எலிவேட்டைக்கு பிரிட்டீஷ் அரசு உத்தரவிட்டது. ஆனால் எலிவேட்டைக்குப் போன சில பிரிட்டீஷ் அதிகாரிகள் மனிதர்களை குறிப்பாக பெண்களை மிக இழிவாக நடத்தியது ஒரு கசப்பான உண்மை. அதையே சாக்காக்கி கோப நெருப்பை ஏவி விட்டு எலி எங்கள் பிள்ளையாரின் வாகனம் அதைக் கொல்லாதே என திலகர் ஊர்வலம் போனார். எலி வேட்டையில் ஈடுபட்ட பிரிட்டீஷ் அதிகாரிகளை தங்கள் துப்பாக்கி குண்டுக்கு பலி கொண்டவர்கள் சபோதர் சகோதரர்கள் மூவர். அதன் காரணமாக பிரிட்டீஷ்ஷாரின் தூக்குக்கயிற்றை முத்தமிட்டவர்கள் அந்த சகோதர்கள். அவர்களின் தியாகம் அளப்பரியது. ஆயினும் அதற்குள் மதசனதானப் பார்வை புதைந்திருந்தது தற்செயலானதா? ஆஷ் துரையைக் கொன்று தன்னையும் சுட்டுக் கொண்ட வாஞ்சிநாதன் தன் சட்டைப்பையில் வைத்திருந்த துண்டுச் சீட்டில் ‘சுயராஜ்யம் சனாதன தர்மம் இவற்றைப் பாதுகாக்க’ என்று எழுதியிருந்தான்.

லண்டனிலேயே பிரிட்டீஷ் அதிகாரியை சுட்டுக் கொன்று தூக்குக்கயிற்றை பரிசாகப் பெற்ற மதன்லால் துங்காரா எம்தேசக் காரியம் ஸ்ரீராமனின் காரியம் என வாக்குமூலம் கொடுத்தான். மாவீரன் குதிராம் போஸ் தொடங்கி மகாத்மா காந்தி மட்டும் அல்ல அந்த காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே வரை பலர் பகவத்கீதை தங்களுக்கு வழிகாட்டி என பிரகடனம் செய்ததை மறந்துவிடக்கூடாது.

இச்சூழலில் ஒங்கி வளர்ந்த சமூக சீர்த்திருத்த இயக்கம் விடுதலைப்போரைவிட சீர்த்திருத்தப் பணிகளிலேயே அதிக அக்கறை காட்டியது. மதவாத அமைப்புகள் இன்னொரு புறம் தலைதூக்கின. மதம் கடவுள் இவற்றில் தெளிவான பார்வையுடன் கம்யூனிஸ்ட்கள் மக்கள் பிரச்சனைகளிலும் தேச விடுதலையிலும் மிகுந்த அக்கறை காட்டினார்கள். தங்களை பகிரங்கமாக நாத்திகவாதி என அறிவித்துக் கொண்டு விடுதலைப் போர்க் களத்தில் நின்றவர்கள் ஒருவர் பண்டிட் ஜவஹர்லால் நேரு, இன்னொருவர் மாவீரன் பகத்சிங்.

பகத்சிங்குக்கு மதம் பற்றி ஆரம்பம் முதலே ஒரு முற்போக்குக்கான கருத்தே இருந்து வந்துள்ளது. தனது 16 வயதில் எழுதிய பஞ்சாபி மொழி மற்றும் எழுத்து வடிவம் பற்றிய கட்டுரையில் இப்பிரச்சனையில் மத அடிப்படையை விட்டொழித்துவிட்டு அணுக வேண்டும் என எழுதியவர் பகத்சிங்.

மதத்திற்கு எதிராக சிந்திப்பதற்கு நாம் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளோம் என 1928ல் பகத்சிங் எழுதியதும், ‘எல்லாம் வல்லவர் கடவுள் நாம் ஒன்றுமில்லை நாம் களிமண் என்று குழந்தைகளிடம் சொல்லப்படுகிறது. அது நல்ல விஷயம் என்ற பெயரில் அவர்களைப் பலவீனமாக்குவதற்கு ஒப்பாகும்’ என்று அதே கட்டுரையில் பகத்சிங் குறிப்பிட்டதும் கோடிட்டு பார்க்க வேண்டியுள்ளது.

சுதந்திரம் என்பதன் பொருள் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தில் இருந்து விடுதலையடைவது மட்டுமல்ல, எந்தவொரு மனோரீதியான அடிப்படைத்தளத்திலிருந்தும் விடுபட்டு மக்கள் அனைவரும் ஓருயிராக உணர்வுப் பூர்வமாக ஒன்றுபட்டு நிற்கும் முழு விடுதலையே சுதந்திரம் என்று அக்கட்டுரையில் முத்தாய்ப்பாய்க் கூறியவர் பகத்சிங். பிள்ளைப்பருவத்தில் மற்ற குழந்தைகளைப்போல் சீக்கிய மத அடையாளத்துடனும், நம்பிக்கையுடனும் பெற்றோர்களால் வளர்க்கப்பட்டவர்தாம் பகத்சிங்கும். ஆனால் பகத்சிங் எப்போது நாத்திகன் ஆனார்? நான் ஏன நாத்திகன் என்ற புத்தகத்தில் இதுபற்றி எழுதுகிறார்.

ஒத்துழையாமை இயக்கம் நடந்து கொண்டிருந்த காலத்தில் நான் தேசியக் கல்லூரியில் சேர்ந்தேன். இங்கு தான் சுதந்திரமாக சிந்திக்கத் தொடங்கினேன். எல்லா மதப்பிரச்சனைகளை பற்றியும் கடவுள் பற்றியும் கூட விவாதிக்கவும் விமர்சிக்கவும் தொடங்கினேன். ஆனால் இக்காலத்திலும் கூட நான் ஒரு ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை உடையவனாகவே இருந்தேன். இதற்கிடைப்பட்ட காலத்தில் மழிக்கப்படாமலும் கத்திரித்து விடப்படாமலும் வளர்க்கப்பட்ட நீண்ட தலைமுடியை (சீக்கிய மத வழக்கப்படி) பேணிப் பாதுகாக்கத் தொடங்கியிருந்தேன். எனினும் சீக்கிய மதத்திலோ வேறு எந்த மதத்திலுமோ உள்ள புராணங்களிலும் கோட்பாடுகளிலும் எனக்கு எந்த நம்பிக்கையும் இருக்கவில்லை. ஆனால் கடவுள் இருக்கிறார் என்பதில் உறுதியான நம்பிக்கை வைத்திருந்தேன்.

புரட்சியாளர்களும் மத நம்பிக்கையிருந்து விடுபட்டவர்களாக இல்லை:

பிற்காலத்தில் நான் புரட்சிகர கட்சியில் இணைந்தேன். அங்கு நான் சந்தித்த முதல் தலைவர், கடவுளை நம்பவில்லை என்றாலும் கூட கடவுள் இல்லை என்று கூறும் துணிவு அவருக்கு இருக்கவில்லை. கடவுளைப் பற்றிய எனது விடாப்பிடியான கேள்விகளுக்குப் பிறகு அவர் “எப்பொழுதாவது நீ விரும்பினால் கடவுளை தொழு” என்று கூறுவது வழக்கம். இதுதான், நாத்திகக் கோட்பாட்டை கைக்கொள்வதற்குத் தேவைப்படக்கூடிய தைரியம் இல்லாதவர்களின் நாத்திகவாதமாகும்.

அரசுத் தரப்பு வழக்கில் சொல்லப்பட்ட கதையின்படி 1925ம் ஆண்டு ஜனவரி 28ம் நாளன்று இந்தியா முழுவதும் வினியோகிக்கப்பட்ட “புரட்சிக்கரத் துண்டுப் பிரசுரமானது” இவரது மூளையில் பிறந்ததாகும். முக்கியத்துவம் வாய்ந்த தலைவர், தனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்தமான தனது சொந்தக் கருத்துக்களையும் சேர்த்து வெளியிடுவதும், மற்ற தொண்டர்களுக்கு அக்கருத்துக்களில் மாறுபாடுகள் இருந்தாலும் கூட அவர்கள் அவற்றை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ள வேண்டியிருப்பதும் இரகசிய வேலைகளில் தவிர்க்க முடியாதனவாகும். அத்துண்டுப் பிரசுரத்தில், கடவுளைப் புகழ்வதற்கும், அவன் ஆடும் ஆனந்தக் கூத்துகள், திருவிளையாடல்களை புகழ்வதற்கும் ஒரு முழுப் பத்தியே ஒதுக்கப்பட்டிருந்தது. அவை அனைத்துமே இறையுள் அடக்கம் தேடும் கோட்பாடே (Mysticism).

நான் சுட்டிக்காட்ட விரும்புவது என்னவென்றால், அப்போது, கடவுள் மறுப்புக் கொள்கை புரட்சிகரக் கட்சியில் கூட வளரத் தெடங்கியிருக்கவில்லை. புகழ் பெற்ற காகோரி தியாகிகள் நால்வருமே தங்களது இறுதி நாட்களை பிரார்த்தனையிலேயே கழித்தனர். நாம் பிரசாத் பிஸ்மில் ஒரு வைதீக ஆரிய சமாஜியாகவே இருந்தார். ராஜன் லாகிரியோ, சோசலிசம் மற்றும் கம்யூனிசம் பற்றி பரந்த அளவில் படிந்திருந்தும் கூட கீதை மற்றும் உபநிடதங்களின் சுலோகங்களை ஜெபிக்க வேண்டுமென்ற ஆவலை அவரால் அடக்க முடியவில்லை. அவர்கள் மத்தியில் ஒரு நாளும் பிரார்த்தனை செய்யாமலும், “மனித பலவீனம் அல்லது மனித அறிவிற்கே உரிய வரம்பின் வெளிப்பாடே தத்துவம்“ என்று கூறிக் கொண்டும் இருந்தவர் ஒருவரை மட்டுமே நான் பார்த்தேன். அவரும் ஆயுள் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரும் கூட கடவுள் இல்லை என்று கூறுவதற்கு ஒரு போதும் துணியவில்லை.

புரட்சிகர இயக்கத்தின் தேவையினால் உருவான தேடல்:

அந்தக் காலகட்டம் வரையிலும், கனவுலகில் உலாவரும் இலட்சியப் பரட்சியாளனாகவே நான் இருந்தேன். அப்போது வரையிலும் நாங்கள் (தலைவர்களைப்) பின்பற்றி நடப்பவர்களாகவே இருந்தோம். இந்த சமயத்தில்தான் முழுப்பொறுப்பையும் சுமக்க வேண்டிய நேரம் வந்தது. தவிர்க்க முடியாத எதிர்த்தாக்குதலின் காரணமாக சில நேரங்களில் கட்சியைக் காப்பாற்றுவதே சாத்தியமற்றதாகத் தோன்றியது. உணர்ச்சி மிக்க தோழர்கள் இல்லை. தலைவர்கள் எங்களைப் பார்த்து ஏளனம் செய்யத் தொடங்கினர். சில நேரங்களில், எங்களது சொந்த செயல்திட்டம் பயனற்றது என்று நானும் ஏற்றுக் கொள்ள வேண்டியதிருக்குமோ என்று கூட அஞ்சினேன். அதுவே எனது புரட்சிகர வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கற்றுணர் என்ற குரலே எனது உள்ளத்தினுள் திரும்பத் திரும்ப எதிரொலித்துக் கொண்டிருந்தது. கற்றுணர்! எதிர்த்தரப்பினரின் வாதங்களை எதிர்க்கொள்வதற்கு உன்னைத் தகுதியுடையவனாய் ஆக்கிக் கொள்ளும் படி கற்றுணர்! உனது கோட்பாட்டிற்கு ஆதரவான வாதங்களால் உன்னை ஆயுதபாணியாக்கிக் கொள்ளும் படி கற்றுணர்!.

புரட்சிகர இயக்கத்தில் ஏற்பட்ட அடிப்படை மாற்றங்கள்:

எதற்காக நாங்கள் போராட வேண்டும் என்ற இலட்சியம் பற்றிய தெளிவான கருத்தை உருவாக்க வேண்டியதே மிக முக்கியமான விஷயமாக இருந்தது. நேரடி நடவடிக்கைக்கான செயற்களத்தில் முக்கியமான நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் இருந்ததால் உலகப் புரட்சியின் பல்வேறு இலட்சியங்கள் பற்றியப் படிப்பதற்கு அதிகமான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அனார்கிஸ்ட் தலைவர் பக்குனினைப் படித்தேன். கம்யூனிசத்தின் தந்தை மார்க்ஸ்-ன் நூல்கள் கொஞ்சம் படித்தேன். லெனினையும், ட்ராட்ஸ்கியையும் தங்களது நாட்டில் புரட்சியை வெற்றிகரமாகக் கொண்டுவந்த மற்றவர்களையும் அதிகம் படித்தேன். பக்குனின் எழுதிய “கடவுளும் அரசும்“ எனும் நூல் முழுமையான பார்வையைக் கொண்டதாக இல்லாவிட்டாலும் இத்தலைப்பு பற்றியதொரு சுவையான ஆய்வாகவே அது இருக்கிறது.

1926ம் ஆண்டின் இறுதியில் முழுமையான நாத்திகனானேன்:

அதன் பின்னர் நிர்லம்ப சுவாமின் “காமன் சென்ஸ்“ எனும் நூலை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இது ஒருவகையான ஆன்மீகம் சார்ந்த நாத்திகமாகவே இருந்தது. இதற்கிடையில் இந்த ஆய்வுப்பொருள் (கடவுள் பற்றிய ஆய்வு) எனக்கு அதிகபட்ச ஆர்வம் தரக்கூடியதாகவே ஆகிவிட்டது. 1926ம் ஆண்டின் இறுதிவாக்கில், இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவரும் அதனை கட்டுப்படுத்தி இயக்கி வருபவருமான எல்லாம் வல்ல இறைவன் ஒருவர் இருக்கிறார் என்ற கொள்கை அடிப்படை ஆதாரமற்றது என்பதை என் மனம் ஏற்றுக்கொண்டு விட்டது. என்னிடம் கடவுள் நம்பிக்கை இல்லை என்பதை நான் வெளிப்படையாய் அறிவேன். என் நண்பர்களுடன் இது பற்றிய விவாதத்தை தொடங்கினேன்.

இப்படி அறிவுப்பூர்வமாக நாத்திகனான பகத்சிங் அதைப்பற்றி பகிரங்கமாக எழுதும் சந்தர்ப்பம் சிறையில் ஏற்பட்டது. 1936 ஏப்ரல் லாகூர் சிறையில் இருந்த போது (தூக்குத் தண்டனைக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருந்த காலத்தில்) யாபா நந்தீர் சிங் அதே சிறையில் இருந்தார். பகத்சிங் நாத்திகன் என்பதையறிந்து வேதனைப்பட்டார். கடைசி காலத்திலாவது பகத்சிங் மாற வேண்டும் என விருப்பப்பட்டார். சிறையில் பகத்சிங்கை சந்தித்து விவாதம் செய்தார். பகத்சிங்கின் தர்க்க வாதங்களை எதிர்கொள்ள முடியாமல் வெகுண்டார். உனக்குக் கிடைத்துள்ள புகழின் மயக்கத்தில் நீ இருக்கிறாய் அதனால்தான் உனக்கு ஆணவம் ஏற்பட்டுள்ளது. அந்த ஆணவம் தான் உனக்கு கடவுளுக்கும் இடையில் கருத்துரையாக நிற்கிறது என்று கோபத்தில் கூறினார் பாபா நந்தீர்சிங்.

அவரின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லும் விதத்திலும், தான் நாத்திகனான காரணத்தை விளக்கும் கட்டுரைதான் “நான் ஏன் நாத்திகன்?” என்ற புகழ் பெற்ற கட்டுரையாகும். 28 பக்கங்கள் கொண்ட அந்த கட்டுரை பா.ஜீவானந்தம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு குடியரசு இதழில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. அந்த கட்டுரையில் தெளிவாகக் கூறுவார்:

முன்னேற்றத்திற்காக இருக்கும் எந்தவொரு மனிதனும், பழைய நம்பிக்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் விமர்சிக்க வேண்டும். நம்ப மறுக்க வேண்டும். எதிர்க்க வேண்டும், நடப்பிலிருக்கும் நம்பிக்கையின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் அதன் தனித்தனி அம்சங்கள் வாரியாக பகுத்து ஆராய வேண்டும். போதுமான அளவிற்கு பகுத்து ஆராய்ந்த பின்னர் எந்தவொரு கொள்கையினையோ தத்துவத்தையோ நம்புகின்ற முடிவுக்கு ஒருவர் வருவாரெனில், அவரது நம்பிக்கை வரவேற்கத்தக்கதே. அவரது பகுத்தாய்வு தவறானதாக, பிழைபட்டதாக, தவறான வழியை காட்டுவதாக, சில நேரங்களில் தவறான தர்க்க அடிப்படை கொண்டதாக கூட இருக்கலாம். ஆனால் அவர் தனது தவறை திருத்திக் கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால், அவரது வாழ்க்கையை வழிநடத்தும் துருவ நட்சத்திரமாக அவரது பகுத்தறிவு இருக்கிறது. ஆனால் வெறும் நம்பிக்கையும் குருட்டுத்தனமான நம்பிக்கையும் அபாயகரமானவை. அவை மூளையை மழுங்கடித்து விடுகின்றன. ஒரு மனிதனை பிற்போக்குவாதியாக சீரழித்து விடுகின்றன. யதார்த்தவாதி என்று தன்னை கூறிக் கொள்ளும் ஒருவர், பழைய நம்பிக்கை முழுவதையும் அடியோடு எதிர்க்க வேண்டும். பகுத்தறிவின் கடுந்தாக்குதலை எதிர்த்து அதனால் நிற்க முடியவில்லையென்றால் அது தூள் தூளாய் நொறுங்கி விடும்.

வெறும் வறட்சி நாத்திகமாக அல்லாமல் டார்வின் உயினங்களின் தோற்றம் சோகன் சுவாமி எழுதிய காமன் சென்ஸ் போன்ற நூல்களைக் காட்டி அறிவுபூர்வமாக அறிவியலாக நாத்திகத்தை பார்த்தவன். எனதருமை நண்பர்களே! இந்த மதக்கொள்கைகள் எல்லாம் சமூகத்தில் தனிச்சலுகை பெற்றவர்களாய் இருப்பவர்களின் கண்டுபிடிப்புகளே, அவர்கள் தாங்கள் அபகரித்து வைத்திருக்கும் அதிகாரம், செல்வம் மற்றும் உயர்தகுதி இவையனைத்தையும் இந்தக் கொள்கைகளின் உதவியால் தான் நியாயப்படுத்துகிறார்கள். உப்தன் சிங்க்லேர் என்று நினைக்கிறேன், அவர் ஏதோ ஒரிடத்தில் நித்தியத்துவத்தில் ஒரு மனிதனை முதலில் நம்பிக்கை கொள்ளச் செய்துவிடு, அதன் பிறகு அவனது அனைத்து செல்வங்களையும் உடமைகளையும் கொள்ளையிடு என்று எழுதினார். ஆம் அப்போது அவனைக் கொள்ளையிடுவதற்கு அவனே எந்த முணுமுணுப்பும் இன்றி உங்களுக்கு உதவி செய்வான். மத குருக்களுக்கும் அதிகாரம் படைத்தவர்களுக்கும் இடையில் இருக்கும் வஞ்சகக் கூட்டே, இந்த உலகிற்கு சிறைச் சாலைகளையும், தூக்கு மேடைகளையும் சவுக்கடிக்களையும் கொண்டு வந்தது.

இப்படி மதம் சுரண்டும் வர்க்கத்தின் ஆயுதமாக இருப்பதை அந்தக் கட்டுரையில் படம் பிடித்தவர் பகத்சிங். மதம் ஒரு அபினி என்று மட்டுமா மார்க்ஸ் கூறினார் இல்லை, அத்தோடு மதம் இதயமற்றவர்களின் இடமாக ஏழைகளின் ஏக்கப் பெருமூச்சாக இருப்பதைப் படம் பிடித்தார் அல்லவா? அதே வேலை பகத்சிங் கட்டுரையில் காணலாம்.

மேலும் கடவுளின் தோற்றம் குறித்தும் இருந்து வந்த ரகசியம் குறித்தும் பகத்சிங்குக்கு தெளிவான புரிதல் இருந்தது, அதனால்தான் கீழ்கண்டவாறு எழுதினார்:

கடவுளின் தோற்றத்தை பொறுத்தவரை எனது கருத்து இது தான்: தனக்கு இருக்கும் வரம்புகளை உணர்ந்து கொண்ட மனிதன், தனது பலவீனங்களையும் போதமைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, கடும் சோதனையான சூழ்நிலைகள் அனைத்தையும் தைரியமாக எதிர்கொள்வதற்கும், அனைத்து ஆபத்துக்களையும் ஆண்மையோடு சந்திப்பதற்கும், செல்வச் செழிப்பில் திளைக்கும் காலத்தில் அவன் தறிகெட்டுப் போய்விடாமல் தடுத்து நிறுத்துவதற்கும் தேவையான துணிவைக் கொடுப்பதற்காக கடவுள் என்றொரு கற்பனைப் பாத்திரத்தை தானே கற்பித்துக் கொண்டான்.

இதைக் கூறிய அதே மூச்சோடு கூறினான்

கடைசி மூச்சிருக்கும் வரை நான் நாத்திகனே! ஒரு மனிதனைப் பொறுத்தவரை சுயநலமிக்க, தரம் தாழ்ந்த செயலாக நான் கருதும் கடவுள் நம்பிக்கையும், தினசரி பிரார்த்தனைகளும் என் விஷயத்தில் உதவிகரமானவையாக இருக்கப் போகிறதா அல்லது நிலைமையை மேலும் மோசமாக்கப் போகிறதா என்பது எனக்குத் தெரியாது. இன்னல்கள் அனைத்தையும் அதிகபடச துணிவுடன் எதிர் கொண்ட நாத்திகவாதிகளைப் பற்றி நான் படித்திருக்கிறேன் எனவே நானும், எனது கடைசி மூச்சிருக்கும் வரை தூக்கு மேடையிலும் கூட தலை நிமிர்ந்து நிற்பதற்கே முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

இதனை எவ்வாறு நிறைவேற்றுகிறேன் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். ஒரு நண்பர், என்னை பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். என்னுடைய நாத்திகத்தைப் பற்றிச் சொன்ன போது அவர் சொன்னார்: உன்னுடைய கடைசி நாட்களில் நீ கடவுளை நம்பத் தொடங்கி விடுவாய்“ நான் சொன்னேன்: “இல்லை எனதருமைக்குரியவரே, அப்படி ஒரு நாளும் நடக்காது அவ்வாறு செய்வது என் தரப்பில் மனவுறுதிக் குலைவான, தரம் தாழ்ந்த செயல் என்றே நான் நினைப்பேன். சுயநல நோக்கங்கருதி நான் கடவுளை பிராத்தனை செய்யப் போவதில்லை” வாசகர்களே, நண்பர்களே, இது என்ன ஆணவமா? இது ஆணவம் தான் என்றார், அந்த ஆணவத்தை நான் உறுதியாகப் பற்றிக் கொள்கிறேன்.

நான் ஏன் நாத்திகன்? என்ற பகத்சிங்கின் உயரிய படைப்பை இதுவரை நீங்கள் படிக்காமல் இருந்தால் தயவு செய்து இப்போதேனும் படியுங்கள், இப்போதும் காலம் தாழ்ந்து விடவில்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com