Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஆகஸ்டு 2008

மஞ்சள் நதியின் நாட்டில் மகத்தான திருவிழா
சங்கர நயினார்

மழை மேகங்கள் மக்கள் சீனத்தை மையம் கொள்ளும் ஆகஸ்ட் மாதத்தில் உலகின் மாபெரும் விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகளின் 29வது பதிப்பு அரங்கேறவுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் அரிய வாய்ப்பு தனக்கு கிடைத்ததிலிருந்தே அதை சரித்திர சாதனையாக்கிக் காட்டும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, அதை மிகச் சிறப்பாகவும் செய்து முடித்துள்ளது மக்கள் சீனம்.

இதற்கிடையில் சீனம் சந்தித்த இடையூறுகள் ஏராளம். கடுமையான இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்ட சீன மக்கள் ஏகாதிபத்தியத்தின் பொய்ப் பிரச்சாரங்களையும் முறியடித்து ஒலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக்குவதில் தங்கள் வியர்வையை சிந்தியுள்ளார்கள் என்றால் அது தகும். ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது முதல் ஏகாதிபத்திய சக்திகள் சீனத்திற்கெதிரான பொய்ப்பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டன. இல்லாத திபெத் பிரச்சினையை மலிவான அரசியாலாக்கி ஒலிம்பிக் போட்டிகளுக்கு இடையூறு செய்யும் வேலையில் அவை இறங்கின. அத்துடன் மனித உரிமை மீறல், வாயு மாசுக்கட்டுப்பாடு, பாதுகாப்பு, பத்திரிகை சுதந்திரம் என்று பல்வேறு பிரச்சினைகளைக் கிளப்பி குழப்பங்களை உண்டு பண்ண அவை முயற்சித்தன. இவை அனைத்தையும் முறியடித்து மக்கள் சீனம் ஒலிம்பிக் போட்டிகளைச் சிறப்பாக நடத்தும் அனைத்து ஏற்பாடுகளையும் உலகமே வியக்கும் வகையில் செய்து முடித்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்துள்ளது மக்கள் சீனம். வாயு மாசுபடுவதைத் தவிர்க்கும் அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபடாமலிருக்க நகர வீதிகளில் வாகனங்கள் ஓடுவதிலும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக போட்டிகள் நடைபெறும் மைதானத்திற்குள் பலூன்கள், குடிநீர் பானங்கள் அடங்கிய பாட்டில்கள் ஆகியவற்றைக் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடையும் வரையும் சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளையும் பார்சலிலும் அனுப்ப வேண்டாம் என்று சீன அஞ்சல்துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளின் செய்திகளைச் சேகரிக்க உலகம் முழுவதிலுமிருந்து வரும் 21 ஆயிரத்திற்கு மேற்பட்ட பத்திரிகையாளர்கள் தங்குவதற்கென ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு சிறப்பான ஏற்பாடுகளை சீன அரசு செய்துள்ளது. போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் அதிநவீன வசதிகளுடன வடிவமைக்கப்பட்டுள்ளன. பறவைக்கூடு எனும் ஒலிம்பிக் மைதானம் சீன மக்களின் உழைப்பை பறைசாற்றுவதாகும். இதன் பிரம்மாண்டத்தை ஊடகங்கள் வெளிப்படுத்திய விதமே இதற்கு சாட்சி.

அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்துள்ள பெய்ஜிங் ஒலிம்பிக் கமிட்டியினர் இயற்கையை வெல்லும் முயற்சியிலும் இறங்கியுள்ளார்கள். போட்டிகள் ஆகஸ்ட் 8 அன்று இரவு 8 மணி 8 நிமிடத்திற்கு துவங்கும் வேளையில் துவக்க நிகழ்ச்சிகள் மழையால் பாதிக்கப்படாமலிருக்க 32 ஆயிரம் பொறியாளர்கள் குழுவை நியமித்துள்ளது. செயற்கை கோள்கள் உதவியுடன் வானிலையைக் கண்காணிப்பதிலும், செயற்கை மேகங்களை உருவாக்குவதிலும் வல்லவர்களான இவர்கள் ஆகஸ்ட் 8 அன்று துவக்க நிகழ்ச்சியின் போது மழை பெய்யாமலிருக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வார்கள். துவக்க நிகழ்ச்சிகள் நடைபெறும் இரவு 8 மணி 8 நிமிடம் முதல் ஏறக்குறைய 11.30 மணிவரை பறவைக்கூடு மைதானத்தில் மழை பெய்யாமலிருக்கும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு இவர்கள் பணிக்கப்பட்டுள்ளார்கள். இது போன்ற பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளையும் ஒலிம்பிக் குழுவினர் செய்து முடித்துள்ளனர்.

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வரும் விளையாட்டு வீரர்கள், பத்திரிகையாளர்கள், பார்வையாளர்கள் ஆகியோரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு தனிப்பயிற்சியே கொடுக்கப்பட்டுள்ளது. எந்தவிதக் குறையுமில்லாமல் உலகத் திருவிழாவை வெற்றிகரமாக்கிட மக்கள் சீனம் தயாராகி நிற்கிறது.

அனைத்து சிறப்புக்களுடனும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திக் காட்டும் முயற்சியில் இறங்கியுள்ள சீனம் பதக்கப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிக்க முயற்சிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே. ஒன்றுபட்ட சோவியத் யூனியன் இல்லாமல் போன பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சவாலான எதிரி இல்லாமல் தனி ராஜ்ஜியம் நடத்தி வந்த அமெரிக்காவிற்கு இந்த முறை சீனா சவாலாக விளங்கும் என்று எதிர்பார்க்கலாம். இதன் முன்னோடியாக ஏதென்ஸில் நடைபெற்ற கடந்த ஒலிம்பிக் போட்டியில் 36 தங்கப்பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து அமெரிக்காவை நிமிர்ந்து பார்க்கச் செய்தது. இதன் தொடர்ச்சியாக சொந்த மண்ணில் நடைபெறும் 29வது ஒலிம்பிக் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிப்பதற்காக 639 பேர் அடங்கிய வீரர்கள் குழுவை சீனா களத்தில் இறக்குகிறது.

இதில் 439 பேர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு புதியவர்கள். வழக்கமாக ஆதிக்கம் செலுத்தும் டைவிங், பேட்மிட்டன், டேபிள் டென்னிஸ் ஆகியவற்றுடன் புதியதாக வேறு சில விளையாட்டுப் போட்டிகளிலும் வென்று சாதிக்க சீன வீரர்கள் காத்திருக்கிறார்கள். நீச்சல், கூடைப்பந்து, தடகளம் ஆகியவற்றில் அதிகப் பதக்கங்களைக் குறிவைக்கும் அமெரிக்கா 596 வீரர்களை மக்கள் சீனத்திற்கு அனுப்பியுள்ளது. அமெரிக்காவிற்கு பதக்கம் பெற்றுத் தருவதில் வெளிநாட்டு வீரர்கள் பெரும் பங்கு வகிப்பார்கள். 20 வகையான விளையாட்டுகளில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து மொத்தம் 313 வீரர்களை பெய்ஜிங்கிற்கு அனுப்பி வைத்துள்ளது. இது போன்று பல்வேறு நாடுகளும் தங்களது வீரர்கள் குழுவை சீனத்திற்கு அனுப்பியுள்ளன. மஞ்சள் நதியின் நாட்டில் நடக்கவிருக்கும் இந்த மகத்தான திருவிழா சரித்திர சாதனையாக மாறும் என்பதில் ஐயமில்லை.

பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இந்தியாவின் நிலைமை என்ன?

2004ல் நடைபெற்ற ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டிகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலைமையில் பெரிய மாற்றம் எதுவும் வந்துவிட்டதாகக் கூற இயலாது. மக்கள் தொகையில் மக்கள் சீனத்துடன் மல்லுக்கு நிற்கும் இந்தியா வெறும் 57 வீரர்களை மட்டுமே பெய்ஜிங்கிற்கு அனுப்பியுள்ளது என்பதிலிருந்தே நமது நிலைமையைப் புரிந்து கொள்ளலாம். பெய்ஜிங்கில் ஒரு தங்கப்பதக்கத்தை இந்தியா பெறவேண்டுமானால் அற்புதம் நிகழ வேண்டும்.

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா முத்திரை பதித்துள்ள ஒரே விளையாட்டு ஹாக்கி விளையாட்டுதான். இந்த முறை அதுவும் கண்ணீர் கதையாகி விட்டது. ஹாக்கியில் தங்கப்பதக்கம் வென்றுள்ள நாம் 1980க்குப் பிறகு அதுவும் இல்லையென்ற நிலைமைக்கு தள்ளப்பட்டோம். என்றபோதிலும் அனைத்து ஒலிம்பிக் போட்டியிலும் நமது ஹாக்கி அணி விளையாடியுள்ளது. இந்த முறை அதுவும் இல்லை. இது ஒரு தேசத் துயரமாகும். இந்திய ஹாக்கி அணி விளையாடாத ஒலிம்பிக் என்ற பெயர் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கு கிடைத்துள்ளது. இந்த லட்சணத்தில் நமது ஹாக்கி அணியில் இடம் கிடைக்க லஞ்சம் கொடுத்த கதை கேட்டு நாடே நாறியது.

தடகளத்தில் தங்கப்பதக்கம் என்பது இந்தியாவைப் பொறுத்தவரையில் கனவாகவே தொடர்கிறது. அஞ்சு பேபி ஜார்ஜ் நீளம் தாண்டுதலிலும், ரஞ்சித் மகேசுவரி டிரிபிள் ஜம்பிலும் போட்டியிடும் போது இந்தக் கனவு நனவாகிவிடாதா என்ற நப்பாசை நம்மைத் தொற்றிக் கொள்கிறது. கடந்த முறை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ராஜ்ஜியவர்த்தன் சிங் ரதோர் வெள்ளிப் பதக்கம் பெற்று இந்தியாவும் பதக்கப் பட்டியலில் இடம் பிடிக்க உதவினார். இந்த முறையும் ரதோர் சாதிப்பார் என எதிர்பார்ப்போம்.

இந்தியா பங்கேற்கும் போட்டிகளும் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளும்

பதக்கம் பெற வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் அம்பு எறிதல் போட்டியில் டோலா பானர்ஜி, பிரனிதா வர்தினேனி, பாம்பேயலா தேவி, மங்கள் சிங் சாம்பியா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

தடகளம்: நீளம் தாண்டுதலில் அஞ்சு பேபி ஜார்ஜ், வட்டு எறிதலில் கிருஷ்ய பூனியா, 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் பிரிஜா ஸ்ரீதரன், 400 மீட்டர் ஓட்டத்தில் மன்ஜித் கவுர் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

4 * 400 மீட்டர் ரிலே: சிட்ரா சோமன், சினி ஜோஸ், பூவம்மா, மன்தீப் கவுர், கீதா, மிருதுளா

ஹெப்டட்லான்: ஜே.ஜே.ஷோபா, சுஷ்மிதா சிங் ராய், ஜி.ஜி.பிரமிளா, விகாஸ் கவுடா (வட்டு எறிதல்), ரஞ்சித் மகேசுவரி(டிரிபிள் ஜம்ப்), சுரேந்தர் சிங்(10 ஆயிரம் மீட்டர்)

பேட்மிட்டன்: ஜிதேந்தர் (51 கி), அகில் குமார் (54 கி), ஏ.எல்.லாக்ரா (57 கி), விஜேந்தர் (75 கி), தினேஷ் குமார் (81 கி)

ஜூடோ: குமுஜம் டாம்பி தேவி, திவ்யா.

துடுப்பு படகு: பஜ்ரன் லால் தக்கார் (சிங்கிள்), தேவேந்தர் கந்ட்வால், மன்சித் சிங் (லைட் வெயிட் டபுள் ஸ்கள்)

துப்பாக்கி சுடுதல்: (கிலே பீஜி யான் டிரேப்) மானவ்ஜித் சிங் சாந்த், மன்சர் சிங், ராஜ்ஜியவர்தன் சிங் ரதோர், (10 மீ ஏர் ரைபிள்) ககன் நரங், அபினவ் பிந்திரா, சமரேஜ் ஜங், (10 மீ ஏர் பிஸ்டல்), சஞ்சீவ் ராஜ் புத் (50 மீ. ரைபிள் 3 பொசிசன்), அஞ்சலி பகவத் (50 மீ ரைபிள் 3 பொசிசன்) அவ்நீட் கவுர் சித்து (10 மீ ஏர் ரைபிள்)

நீச்சல்: வீர்தவால் காடே ( 50 மீ, 100 மீ, 200 மீ பிரீ ஸ்டைல்), ஆங்குர் போசெரியா (100 மீ பட்டர் பிளை), சந்தீப் சேஜ்வால் ( 100 மீ, 200 மீ பிரெஸ்ட் ஸ்ட்ரோக்), ரேகான் போஞ்சா (200 மீ பட்டர் பிளை)

டேபிள் டென்னிஸ்: அசந்தா சரட் கமல், நேஹா அகர்வால்

டென்னிஸ்: லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி (இரட்டையர்), சான்யா மிர்ஷா (ஒற்றையர் மற்றும் இரட்டையர்), சுனிதா ராவ் (இரட்டையர்)
பளுதூக்குதல்: மோனிகா தேவி (69 கி)

மல்யுத்தம்: சுஷில் குமார் (66 கி பிரீஸ்டைல்), யோகேஷ்வர் தத் (60 கி பிரீஸ்டைல்), ராஜீவ் தோமர் (120 கி பிரீஸ்டைல்)

பாய்மரப் படகு: மாஜ் என்.எஸ்.ஜோஹால் (ஹெவி வெயிட் டிங்கி)

ஒலிம்பிக் போட்டிகள் துவங்கும் ஆகஸ்ட் 8 அன்று திருமணம் செய்து கொள்ள சீனாவில் கடும் போட்டி நிலவுகிறது. பெய்ஜிங் திருமண பதிவு அலுவலகத்தில் மட்டும் சுமார் 9000க்கும் அதிகமான இளைஞர்கள் இத்தினத்தில் திருமணம் செய்து கொள்வதற்காக முன் பதிவு செய்துள்ளார்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com