Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஆகஸ்டு 2008

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் வினாக்களும் விடைகளும்
எஸ்.கண்ணன்

கேள்வி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிற்கு அளித்துவந்த ஆதரவை இடதுசாரிகள் ஏன் விலக்கிக் கொண்டார்கள்?

பதில்: 2008 ஜூலை 9 ஆம் தேதி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிற்கு அளித்துவந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைந்தபோது. குறைந்தபட்ச பொதுத்திட்டத்தின் அடிப்படையில் வெளியிலிருந்து ஆதரிக்க இடதுசாரி கட்சிகள் முடிவெடுத்தன. மதவாதசக்திகளை எதிர்த்துப் போரிடுவதும், அவர்களது ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு ஏற்பட்ட சேதங்களை சரிசெய்வதும் நோக்கமாக இருந்தது.

இதற்கு மக்கள்நலம், தேசஒற்றுமை, சுயேட்சையான அயலுறவுக் கொள்கை ஆகியவற்றைப் பாதுகாக்க ஒன்றோடொன்று தொடர்புடைய கொள்கைகள் தேவைப்பட்டன. ஆனால் உடனடியாக கவனிக்க வேண்டிய, அத்தியாவசியப் பொருட்களின் விண்ணைமுட்டும் விலையேற்றம் போன்ற மக்கள் பிரச்சனைகளை கவனிக்காது, மன்மோகன்சிங் அரசு இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை விரைந்து முடிப்பதிலேயே தனது சக்தியை செலவழித்தது. இந்திய மக்களுக்கு அளித்த வாக்குறுதியை விட புஷ் நிர்வாகத்திற்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதைத்தான் இந்த அரசு முக்கியமானதாகக் கருதுகிறது.

குறைந்தபட்ச பொதுத்திட்டத்தின் வாக்குறுதிகளை கைவிட்டுவிடக்கூடாது என ஐமுகூ அரசை இடதுசாரிகட்சிகள் தொடர்ந்து எச்சரித்து வந்தன. நவீன தாராளமயக் கொள்கைகளின் ஈர்ப்பால், நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல், அமைச்சரவையின் முடிவுகள் மூலம் அரசு தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தி வந்தது. பல்வேறு துறைகளை கண்மூடித்தனமாக அந்நிய மூலதனத்திற்குத் திறந்துவிடும் முயற்சிகள், விவசாயிகளின் துயர் துடைக்க மறுத்தல், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளைக் கொல்லைப்புறம் வழியாக அனுமதித்தல், சச்சார் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துவதில் தோல்வி என இவையனைத்தும், குறைந்தபட்ச பொதுத்திட்டத்திலிருந்து அரசு விலகிச் செல்வதையே காட்டுகின்றன. உள்நாட்டு, வெளிநாட்டு மூலதனத்திற்குச் சாதகமான இக்கொள்கைகளுக்கு, அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் அரசு காட்டும் பணிவு மற்றும் அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியாவின் தேசிய இறையாண்மையைச் சமரசம் செய்யும் போக்கிற்கும் நெருங்கிய தொடர்புண்டு.

இந்த அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது. காங்கிரஸ் தலைமையிலான அரசு அமெரிக்காவுடன் ஒரு கேந்திரக் கூட்டை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ ஒத்துழைப்பு, நிதித்துறை, விவசாயம், சிறுவணிகம் போன்ற பல்வேறு துறைகளில் அமெரிக்க மூலதனத்திற்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் அனைத்திற்கும் அதிபர் புஷ்சுடனான இந்த ஒப்பந்தம் மைய அச்சாகத் திகழ்கிறது. இந்த அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவிற்கு எரிசக்திப் பாதுகாப்பை வழங்காது. மாறாக ஹைட் சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதால், அது இந்தியாவின் சுயேட்சையான அயலுறவுக் கொள்கையை பாதிக்கும். நமது கேந்திர தன்னிச்சை செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தம், குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சுயேட்சையான அயலுறவுக் கொள்கை என்று அறிவிக்கப்பட்டதற்கு மாறாக அமெரிக்காவுடன் கேந்திரக் கூட்டு அமைத்ததன் காரணமாக மன்மோகன்சிங் அரசு மாபெரும் தவறிழைத்துள்ளது. நாட்டு மக்களுக்குத் தீங்கிழைக்கும், நாட்டின் இறையாண்மையை வேரறுக்கும் இத்தகைய செயல்பாட்டை இடதுசாரி கட்சிகள் எப்படி ஆதரிக்க முடியும்.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக எழுந்த ஜனநாயகக் கருத்துக்களை ஐ.மு.கூ அரசு தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறது.

2006 ஆகஸ்டில் நாடாளுமன்றத்தில் இந்த உடன்பாட்டில் இந்திய நலன்கள் பாதுகாக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார். 2006 டிசம்பரில் அமெரிக்க காங்கிரசில் நிறைவேறிய ஹைட் சட்டம் இந்த உறுதிமொழிகளை ரத்துசெய்துவிட்டது.இருப்பினும் இடதுசாரிகள், மற்ற வட்டாரங்களின் தொடர்ந்த கடுமையான எதிர்ப்பிற்கு இடையில் 123 அயலுறவுக்கொள்கை ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக பிரதமர் அறிவித்தார். விஞ்ஞானிகளில் ஒரு கணிசமான பகுதியினரும் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர்.

2007 டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் விவாதங்களிலும் ஏற்பட்ட தெளிவான, பெரும்பான்மை முடிவுகளை ஏற்காததன் மூலம் பிரதமர் நாடாளுமன்றத்தை அவமதித்துள்ளார். சர்வதேச அணுசக்தி முகமை செயலாக்கத்துடனான பேச்சுவார்த்தையின் முடிவுகள் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய ஐ.முகூ இடதுசாரிகள் கமிட்டியில் வைக்கப்படும் என 2007 நவம்பரில் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை காங்கிரஸ் தலைமை மீறியுள்ளது.

சர்வதேச அணுசக்தி முகமை பாதுகாப்பு ஒப்பந்தத்தின் நகலை இடதுசாரிகட்சிகளிடம் காட்ட நான்கு மாதங்களாக அரசு மறுத்து வந்தது. இதனால் ஐ.முகூ இடதுசாரி ஒருங்கிணைப்புகுழு எவ்வித முடிவுகளும் எடுக்க இயலவில்லை. ஐப்பானில் நடைபெறும் ஜி8 மாநாட்டிற்குச் செல்லும்போது, விரைவில் அரசு சர்வதேச அணுசக்தி முகமையிடம் பேசப்போவதாக பிரதமர் அறிவித்தார். ஆனால் அதுவரை நாட்டுமக்களிடம் அது குறித்து வாய் திறக்கவில்லை.

சாதாரண மனிதனின் துயர் துடைப்பதாக காங்கிரஸ் தலைமை உறுதியளித்திருந்தது. நான்காண்டு கால ஐ.மு.கூ ஆட்சிக்குப் பிறகு மக்கள் இதுவரை கண்டிராத அளவு விலைவாசி உயர்வால் துன்புறுகிறார்கள். அரிசி, கோதுமை, எண்ணெய், பருப்பு, காய்கறி, இதர அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துவிட்டன. எகிறும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துமாறு இடதுசாரிகள் விடுத்த கோரிக்கையை அரசு கண்டுகொள்ளவில்லை. விவசாய நெருக்கடி, விவசாயிகள் தற்கொலை, கடுமையான ஏழ்மை, விலைவாசி உயர்வு, வேலையின்மை என இன்று நிலவும் மோசமான சூழலுக்கு ஐ.மு.கூ அரசின் கொள்கைகளே முற்றிலும் பொறுப்பு. மற்றொருபுறம் சூப்பர் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிறார்கள். கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை வளர்ந்துகொண்டே செல்கிறது.

மாற்றுக்கொள்கையின் அடிப்படையில் மதவாத சக்திகளை எதிர்த்துப் போரிடுவது என்ற வகையில்தான் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ அரசு அமைக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ அரசு அத்தகையை மாற்றுக் கொள்கைகளை அமல்படுத்தத் தவறிவிட்டது. மாறாக கடந்த பாஜக தலைமையிலான அரசின் கொள்கைகளையே கடைப்பிடித்தது. அரசு தேசத்தின் இறையாண்மையிலும் சமரசம் செய்துவிட்டது. உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளில் மேலும் வலதுசாரிப் போக்கில் செல்ல முடிவெடுத்துவிட்டது. இச்சூழல் மதவாத சக்திகள் வளரவே துணைபுரியும். ஐ.மு.கூ அரசு அறிந்துகொண்டே, குறைந்தபட்ச பொதுத்திட்டத்தைக் கைவிடுவதால் இடதுசாரி கட்சிகளுக்கு ஆதரவை விலக்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

கேள்வி: இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை ஐ.மு.கூ அரசு ஏன் விரும்புகிறது?

பதில்: இந்தியா உலகில் ஒரு பெருமைமிகு சக்தியாக மாற அமெரிக்கா உதவும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், அமெரிக்காவின் இளைய பங்காளியாக மாறுவதுதான் இந்திய அயலுறவுக் கொள்கைக்கு நல்லது என ஐ.மு.கூ அரசு கருதுகிறது. மன்மோகன் சிங், ஜார்ஜ் புஷ் இந்தியாவின் சிறந்த நண்பர் என்று கருதுகிறார். இந்தியா அமெரிக்காவின் கூட்டாளி என்பதை உறுதிசெய்யும் வகையில் பாதுகாப்பு, ராணுவம், பொருளாதார அம்சங்களில் பல்வேறு உடன்பாடுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இத்தகைய கேந்திரக் கூட்டில் அணுசக்தி ஒப்பந்தம் மையமாகத் திகழ்கிறது.

ஈராக் ஆக்கிரமிப்பு, ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ போன்ற புஷ் நிர்வாகத்தின் கடும் ராணுவ நடவடிக்கைகளால், உலகில் அமெரிக்கா தனிமைப்பட்டு உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரானப் போரை ‘கலாச்சாரங்களுக்கிடையிலான மோதலாக’ சித்தரித்து, ஒரு இஸ்லாமிய வெறுப்பைத் தூண்ட புஷ் கும்பல் முயற்சித்து வருகிறது. தனது ஆட்சியின் பொய்கள், வஞ்சகம், கொடூரம் ஆகியன அம்பலமானதால், புஷ் சொந்த நாட்டில் செல்வாக்கை இழந்துவிட்டார். புதிய கூட்டாளியான இந்தியா மூலம் ஆசியாவிலும், பிற இடங்களிலும் அமெரிக்க கேந்திர நலன்கள் பாதுகாக்கப்படும் என்ற புஷ்சின் அயலுறவுக் கொள்கையின் வெற்றிக்கு உதவ மன்மோகன் சிங் முயற்சிக்கிறார்.

கேள்வி: இந்த ஒப்பந்தத்தை முடிக்க ஐ.மு.கூ அரசு ஏன் அவசரப்படுகிறது?

பதில்: புஷ் நிர்வாகத்தின் ஆட்சிக்காலம் முடிவடையப் போகிறது. 2008 நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரங்கள் ஏற்கனவே துவங்கிவிட்டன. இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய ஒரு சில கட்டங்களைத் தாண்ட வேண்டும். அதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும். முதலில் இந்திய அரசு சர்வதேச அணுசக்தி முகமை உடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும். அடுத்த கட்டத்தில் 45 நாடுகளை கொண்ட அணு எரிபொருள் விநியோகிப்போர் குழு என்னும் அமைப்பு உள்ளது. இதுதான் அணு எரிபொருள், தொழில்நுட்ப விநியோகத்தைக் கட்டுப்படுத்துகிறது. இக்குழுவிடம் இந்தியாவுடன் அணு வர்த்தகம் செய்ய அமெரிக்கா அனுமதி பெற வேண்டும். இதன்பின் 123 ஒப்பந்தம் அமெரிக்க காங்கிரஸின் ஒப்புதலுக்கு வைக்கப்படும்.

அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் தந்த பின்புதான் அமெரிக்காவும், இந்தியாவும் கையெழுத்திட்டு, உடன்பாடு ஏற்படுத்த முடியும். சர்வேதச அணுசக்தி முகமை பாதுகாப்பு ஒப்பந்தம் முடிந்தவுடன், இதில் இந்தியாவிற்கு எவ்வித வேலையும் இல்லை. ஒப்பந்தத்தை ஒவ்வொரு கட்டமாக நகர்த்த வேண்டிய பொறுப்பு அமெரிக்காவிற்குத்தான். இதில் சர்வதேச அணுசக்தி முகமை பாதுகாப்பு ஒப்பந்தத்தை முடிக்க அமெரிக்கா இந்தியாவிற்குத் தந்த கால அவகாசம், இங்கு ஏற்பட்ட எதிர்ப்பால் பலமுறை நீட்டிக்க வேண்டியதாகிவிட்டது. இப்போது புஷ் நிர்வாகத்தின் ஆட்சிக் காலத்திலேயே அமெரிக்க காங்கிரஸ் 123 ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கிவிடுமா என்பதே ஐயமாக உள்ளது. எனினும், குறைந்தபட்சம் அணு எரிபொருள் விநியோகிப்போர் குழு ஒப்புதலையாவது ஆட்சி முடிவிற்குள் வாங்கி மற்றவற்றை புதிய அதிபர் பார்த்துக் கொள்ளுமாறு செய்ய வேண்டும் என புஷ் நிர்வாகம் விரும்புகிறது.

2008 ஜூலை ஆகஸ்டிற்குள் இந்தியா சர்வதேச அணுசக்தி முகமை பாதுகாப்பு ஒப்பந்தத்தை முடித்தால்தான் இது சாத்தியம். எனவே, புஷ் நிர்வாகத்தின் அவசரத் தேவைக்காகவே ஐ.மு.கூ அரசும் இவ்விஷயத்தில் இத்தனை அவசரம் காட்டுகிறது. அடுத்த 40 ஆண்டுகளுக்கு இந்த நாட்டைக் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு முக்கியமான சர்வதேச ஒப்பந்தம் என்பதால், இதில் பரந்துபட்ட அரசியல் கருத்தொற்றுமை ஏற்படுவதுதான் இந்தியாவிற்கு நல்லது. ஆனால், ஜார்ஜ் புஷ்சுக்குத் தந்த வாக்கைக் காப்பாற்ற அனைத்து ஜனநாயக நெறிகளையும், ஐ.மு.கூ இடதுசாரி கமிட்டிக்குத் தந்த உறுதிமொழிகளையும் மீறி, மன்மோகன் சிங் உடன்பாடு காண அவசரப்படுகிறார்.

கேள்வி: இடதுசாரிகளின் இந்த நிலைபாடு, மதச்சார்பின்மை, மதவாத சக்திகளை ஆட்சியதிகாரத்தை நெருங்காவிடாமல் செய்யும் இடதுசாரிகளின் கொள்கைகளுக்கு ஒத்திசைவானது தானா?

பதில்: ஆர்.எஸ்.எஸ் பாஜக தலைமையிலான மதவாத சக்திகளை இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. இனிவரும் காலங்களிலும் இது தொடரும். காங்கிரஸ், ஐ.மு.கூவும் தான் நாட்டின் சுயேட்சையான அயலுறவுக் கொள்கையிலிருந்து விலகி, ஆர்.எஸ்.எஸ். பாஜக கூட்டின் அயலுறவுக் கொள்கையை கடைப்பிடிக்கினறன. பாஜக அமெரிக்காவுடனான கேந்திரக் கூட்டை வெளிப்படையாகவே ஆதரிக்கிறது. அமெரிக்காவின் நவீனப்பழமைவாதிகளின் (neoconservatives) இஸ்லாமிய எதிர்ப்புப் பார்வை தனக்கும் உள்ளதால், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் இத்தகைய கொள்கைகளை மாற்றாமல், ஐ.மு.கூ அரசும் அதே கொள்கை வழி செல்கிறது.

அணுசக்தி ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவுடன் சேர்வது, மதவாத சக்திகள் வகுத்த அயலுறவுக் கொள்கையை ஏற்றுக் கொண்டதாகவே அர்த்தமாகும். இதன் காரணமாகத்தான், மன்மோகன் சிங் 2008 மார்ச் 5ம் தேதியன்று, முன்னாள் பிரதமர் வாஜ்பாயை ‘இந்திய அரசியலின் பீஷ்ம பிதாமகன்’ என்றழைத்து நாடாளுமன்றத்தில் ஒப்பந்தத்தை ஆதரிக்குமாறு வேண்டினார். மதச்சார்பின்மை பற்றிய கவலைகள் ஒப்பந்தத்திற்கு பாஜகவின் ஆதரவு நாடும்போது வசதியாக மறந்துபோய் விடுகின்றன. மதவாத சக்திகளின் திட்டம் சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் வெவ்வேறானவை என நாம் கருதவில்லை. ஐ.மு.கூ அரசுதான் சுயேட்சையான அயலுறவுக் கொள்கையைக் கைவிட்டு, மதவாத சக்திக்கு வசதி செய்து தருகிறது.

பெருவாரியான இடதுசாரிப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் எல்லாம் பிரதான எதிரி காங்கிரஸ் கட்சிதான் என்ற போதிலும், மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தோடுதான் குறைந்தபட்ச பொதுத்திட்டம் அடிப்படையில் 2004 முதல் ஐ.மு.கூ அரசை இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரித்து வந்தனர். அமெரிக்காவோடு கேந்திரக் கூட்டு, மதவாத சக்திகளின் அயலுறவுக் கொள்கைகளை ஏற்பது போன்ற காரியங்களால், ஐ.மு.கூ அரசுதான் மதச்சார்பற்ற சக்திகள் ஒற்றுமையைக் குலைத்துள்ளது. கடந்த நான்காண்டுகளில் மதவாத சக்திகளைக் கட்டுக்குள் வைக்க ஐமுகூ அரசு தவறிவிட்டது. ஐமுகூ அரசின் நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாக ஏற்பட்ட பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை பாஜக பயன்படுத்தி, மக்களின் அதிருப்தியைச் சாதகமாக்கி கர்நாடகா, இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஆட்சிக்கு வந்துவிட்டது. காங்கிரசால் குஜராத்தின் நரேந்திர மோடியை ஒன்றும் செய்ய முடியவில்லை.

2002 கோத்ரா சம்பவத்திற்குப் பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்க இயலவில்லை. மகாராஷ்ட்ராவின் காங்கிரஸ் அரசும் பம்பாய் கலவரங்கள் குறித்த ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவில்லை. ஐ.மு.கூ அரசு நான்கு ஆண்டுகள் பதவியில் இருந்தும், வகுப்புவாத வன்முறைத் தடுப்பு மசோதா (Prevention of communel violence bill) சட்டமாக்கப்படவில்லை. சச்சார் குழு பரிந்துரைகளும் கவனிக்கப்படவில்லை. மதவாத சக்திகளை வெறும் அரசியல் சாகசங்களால் மட்டுமே வென்றுவிட முடியாது. மக்களைத் திரட்டி, ஒன்றுபடுத்தும் ஒரு மாற்றுக் கொள்கைகளின் அடிப்படையில்தான் அவற்றை வெல்ல இயலும், உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளில் ஒரு வலதுசாரி சாய்மானப் போக்கு, அறிந்தே குறைந்தபட்ச பொதுத்திட்டத்திலிருந்து விலகுதல் போன்ற செயல்களால், காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ அரசுதான் மதவாத சக்திகள் தலைதூக்கத் துணைபுரிகிறது.

கேள்வி: இந்தியாவில் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இடதுசாரிகள் காட்டும் எதிர்ப்பு சீனா, பாகிஸ்தானுக்கு சாதகமாக அமையுமா?

பதில்: இந்த ஒப்பந்தத்திற்கு இடதுசாரிகள் காட்டும் எதிர்ப்பு சீனா, பாகிஸ்தானுடைய நலன்களுக்குச் சாதகமாக அமைந்துவிடும் என்ற துர்நோக்கம் கொண்ட பிரச்சாரம், இந்திய அதிகார மையங்கள், ஊடகங்களின் அமெரிக்கச் சார்புள்ளோர் கூட்டத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே இதன் நோக்கம். இந்த வாதம் உண்மை என்றால், 2007 டிசம்பரில், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை இந்த ஒப்பந்தத்தை எதிர்த்ததே! அப்போது இந்தியப் நாடளுமன்றமே சீன, பாகிஸ்தான் நலனுக்காகவா குரல் கொடுத்தது? இந்த ஒப்பந்தத்தின் விமர்சகர்கள் சிலர், இவ்வொப்பந்தம் இந்திய அணு ஆயுதத்திட்டத்திற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கும் என்று கருத்துக் கூறியுள்ளனர். எனவே இந்த ஒப்பந்தம் சீனா, பாகிஸ்தான் நலன்களுக்குத்தான் உதவிகரமாக இருக்கும். எனவே, இடதுசாரிகளின் எதிர்ப்பு எப்படி சீனாவிற்கு சாதகமாகும் என்று புரியவில்லை.

சீனா அணு பரவல் தடை ஒப்பந்தம் மற்றும் CTBT யில் இந்தியா கையெழுத்திட வேண்டும் என்று விரும்புகிறது. அணு ஆயுதப் பரவல் தடுப்பில் இந்தியா சேர்ந்தால், தானும் சேர்வதில் பிரச்சனை ஒன்றுமில்லை என்பதுதான் பாகிஸ்தானின் நிலைபாடு, மாறாக, இடதுசாரிகள் இந்தியாவை ஒரு அணு ஆயுத நாடாக மாறுவதை விரும்பாவிட்டாலும் கூட, உலகை நிரந்தமாக, அணு ஆயுத நாடுகள், அணு ஆயுதமற்ற நாடுகள் என்று பிரிக்கும் அணு பரவல் தடை ஒப்பந்தம், CTBT போன்ற பாரபட்சமான ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திடுவதை தொடர்ச்சியாக எதிர்த்தே வந்துள்ளன. இடதுசாரிகள் உலகளாவிய அணு ஆயுதக் குறைப்பிற்குக் குரல் கொடுத்து வருகிறார்கள். அதில் அணு ஆயுத நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனாவும் அடக்கம்.

கேள்வி: ஹைடு சட்டம், 123 ஒப்பந்தம் மற்றும் சர்வதேச அணுசக்தி முகமை பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகியவற்றிற்குள்ள தொடர்பு என்ன?

பதில்: இந்தியா அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பிற்கான 123 ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2006 டிசம்பரில் அமெரிக்க காங்கிரஸ் ஹைட் சட்டத்தை நிறைவேற்றியது. இந்தியாவின் அயலுறவுக் கொள்கை அமெரிக்க அயலுறவுக் கொள்கைக்கு ஒத்திசைந்ததாக இருக்க வேண்டும்.

ஈரானுக்கு எதிராக இந்தியா அமெரிக்காவுடன் இணைய வேண்டும். தனது அணு உலைகளை இயக்குவதற்குப் போதுமான அளவிற்கு மேல் அணு எரிபொருள் கையிருப்பை இந்தியா வைத்துக் கொள்ளக்கூடாது. ஹைட் சட்டடத்தின் நிபந்தனைகளின்படி இந்தியா நடந்து கொள்ளாவிட்டால், அதன் மீது தடைகள் கொண்டு வரலாம்.

சர்வதேச அணுசக்தி முகமை பாதுகாப்பின் கீழ் தனது ராணுவம் சாராத அணு உலைகள் அனைத்தையும் இந்தியா கொண்டு வர வேண்டும். இந்தியா அமெரிக்கா வகுத்த பாதையில்தான் செல்கிறது என அமெரிக்க அதிபர் ஆண்டுதோறும் சான்றிதழ் தரவேண்டும். இந்தியாவுடனான தனது அணு வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தினால், மற்ற அனைத்து அணு எரிபொருள் விநியோகிப்போர் குழு நாடுகளும் அதே போல் செய்ய வேண்டும். அணு எரிபொருள் விநியோகிப்போர் குழு இந்தியாவிற்கு அளிக்கும் அனுமதியில் இது குறிப்பிடப்பட வேண்டும். அமெரிக்கா 123 ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வரை, வேறு எந்த நாடும் இந்தியாவுடன், அணுவர்த்தகம் செய்யக்கூடாது. இதுவும் அணு எரிபொருள் விநியோகிப்போர் குழு அனுமதியில் குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் மறுசுழற்சி, செறிவூட்டல், கனநீர் தயாரிப்பு தொடர்பான தொழில்நுட்பம் இந்தியாவிற்கு வழங்கப்படமாட்டாது, இவை தொடர்பான இரட்டைப் பயன்பாட்டுத் தொழில் நுட்பத்திற்கும் அனுமதியில்லை. எதிர்காலத்தில் இந்தியா அணுஆயுதச் சோதனைகள் நடத்தினால் மீண்டும் தடைகள் சுமத்தப்படும். ஹைடு சட்டத்தோடு சேர்த்துப் பார்க்கும்போது, 123 ஒப்பந்தத்தில் தடையற்ற எரிபொருள் இந்தியாவிற்குக் கிடைக்க உத்தரவாதம் எதுவும் இல்லை. ஏதாவது ஒரு காரணம் கூறி ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்வதற்கான ஷரத்துக்கள் உள்ளன. இவற்றின் காரணமாகத்தான், எதிர்காலத்தில் அமெரிக்க மிரட்டலுக்கு இந்தியா அடிபணிய நேரிடும் அபாயம் உள்ளது. உதாரணமாக, ஈரான் மீதான தனது தாக்குதலுக்கு இந்தியா ஆதரவு தர வேண்டும் இல்லாவிட்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்து தடைகளைக் கொண்டு வருவேன் என அமெரிக்கா மிரட்டலாம்.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், இறக்குமதி செய்யப்பட்ட உலைகள், எரிபொருளை நம்பி இருக்கும் இந்திய அணுசக்தித் திட்டங்கள் அப்படியே முடங்கிப் போய்விடும். ஆனால் சர்வதேச அணுசக்தி முகமை பாதுகாப்பு ஒப்பந்தம் நிரந்தரமானது என்பதால், அது அப்படியே தொடரும், முன்பு இந்தியா போட்ட சர்வதேச அணுசக்தி முகமை பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கும், இப்போது போடப் போகும் ஒப்பந்தத்திற்கும் ஒரு குறிப்பிடத்தகுந்த வேறுபாடு உண்டு. முன்பெல்லாம் ஒரு அணுசக்தி ஒப்பந்தம் போட்டபின், அதை மேற்பார்வை பார்க்க சர்வதேச அணுசக்தி முகமை பாதுகாப்பு ஒப்பந்தம் போடப்படும். இப்போதோ, அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்ய முன் நிபந்தனையாக சர்வதேச அணுசக்தி முகமை பாதுகாப்பு ஒப்பந்தம் போடப்படுகிறது.

கேள்வி: அணு மின்சாரம் உற்பத்திச் செலவு என்ன?

பதில்: இறக்குமதி உலைகளுடனான அணு மின் நிலையம் உருவாக்க அனல் மின் நிலைய உருவாக்கச் செலவு போல் 3 மடங்கு ஆகும். சுருங்கச் சொன்னால் ஒரே உற்பத்தித் திறனுள்ள, ஒரு அணுமின் நிலையத்திற்குப் பதிலாக 3 அனல் மின் நிலையங்களை உருவாக்கலாம். அனல் மின் நிலைய மின்சாரத்தின் விலை யூனிட் ஒன்றுக்கு ரூ. 2 முதல் 2.50 அனால், அணு மின்சாரம் யூனிட்டுக்கு ரூ. 5 ஆகும். எரிசக்தி பாதுகாப்பிற்காக இறக்குமதி உலைகள் மூலம் 40 ஆயிரம் மெகாவாட் கூடுதலாக நாம் உற்பத்தி செய்ய முடியும் என்று அரசு கூறுகிறது. அணு மின் நிலையத்தின் குறைந்த பட்ச உற்பத்திச் செலவு ஒரு கிலோ வாட்டிற்கு 2 ஆயிரம் டாலர் என வைத்துக் கொண்டால் இதற்கு ரூ. 3.6 முதல் 4 லட்சம் கோடி ஆகும். இதே செலவில் அனல் மின் நிலையத்தில் 1லட்சம் மெகாவாட் உற்பத்தி செய்துவிடலாம். இந்தியாவிற்கு 4 லட்சம் கோடி செலவிட முடியும் என்றால், அனல்மின் நிலையம் மூலம் 40 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்து, மின் பாதுகாப்பை உறுதிபடுத்தி, மிச்சப்பட்ட தொகை மூலம் அனைவருக்கும் கல்வி, சுகாதாரம், உணவு போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துவிடலாம். எனவே இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு உகந்ததல்ல, தனது உலைகளை இந்தியாவிடம் விற்க ஆர்வமாக உள்ள அமெரிக்காவிற்கே உகந்தது.

கேள்வி: நமது எரிசக்தி தேவைகளை அணுமின்சாரம் எந்த அளவு பூர்த்தி செய்யும்?

பதில்: இந்தியாவின் மொத்த எரிசக்தித் தேவையில் அணு மின்சாரத்தின் பங்களிப்பு மிகச் சொற்பமே. இன்றைய இந்திய மின் உற்பத்தி சக்தி 1 லட்சத்து 43 ஆயிரம் மெகாவாட், இதில் 3 சதம் (4120 மெகாவாட்) மட்டுமே அணு மின்சாரம், 2032 வாக்கில் இந்தியா 7லட்சம் மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடும் எனவும் இதில் 6 முதல் 8 சதம் அணு மின்சாரம் மூலம் வரும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்று நிலக்கரி மூலம்தான் 66 சதவீதம் மின் உற்பத்தி நடக்கிறது. எதிர்காலத்திலும் அவ்வாறேதான் இருக்கும். அடுத்த 100 ஆண்டுகளுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு நம்மிடம் உள்ளது. எனவே நாட்டில் ஏராளமாய் கிடைக்கும் நிலக்கரியை வைத்து திட்டமிடுவதுதான் ஒரு யதார்த்தமான திட்டமாக இருக்கும்.

இந்த அணுசக்தி மின்சாரத்திற்கான அதிக செலவு பிடிக்கும் உலைகளின் இறக்குமதிக்கான அவசரம் நமக்கு 1992 என்ரானை நினைவூட்டுகிறது. என்ரானிடமிருந்து மின்சாரம் வாங்க அமெரிக்கா நிர்பந்தித்தது மட்டுமின்றி, மகாராஷ்ட்டிரா மின்வாரியம் பல சலுகைள் தரவும், மகாராஷ்ட்ரா அரசு பல எதிர் உத்தரவாதங்களைத் தரவும் நிர்பந்திக்கப்பட்டனர். 1999ல் என்ரானில் தாபேல் மின் நிலையம் யூனிட்டுக்கு ரூ. 5.7 என்ற அதிக விலையில் மின்சாரம் தயாரிக்கத் துவங்கிய போது அதை வாங்க நிர்பந்திக்கப்பட்ட மகாராஷ்ட்டிர மாநில மின்வாரியம், இரண்டாண்டுகளில் கடனில் மூழ்கியது, ஒரு 2000 மெகாவாட் என்ரான் மின் நிலையம் நாட்டின் மிகப்பெரிய மின்வாரியத்தையே மூழ்கடித்தது என்றால், இறக்குமதி உலைகளின் அதிக விலை 40000 மெகாவாட் மின் உற்பத்தியை ஐ.மு.கூ அரசு நாட்டின் மீது திணித்தால், விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com