Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஆகஸ்ட் 2007

சுயநிதி கல்லூரிகள் தரும் கழிசடைக் கல்வி

“நீ பெரியவனாயிட்டா டாக்டராவியா? இன்ஜினீயராவியா? ” என்று. நம் குழந்தைகளிடம் அடிக்கடி கேட்கப்படுகிறது. ஏதோ இந்த இரண்டைத்தவிர அடையவேண்டிய உச்சம் வேறொன்றுமேயில்லை என்பது எவ்வளவு பெரிய அபத்தம். இந்த அபத்தத்தினால் உண்டான ஆபத்தாகத்தான் தமிழ்நாட்டில் தேனீர் கடைகளுக்கு இணையாக பொறியியல் கல்லூரிகள் பிறப்பெடுத்துக் கொண்டுள்ளன.

College இந்தியாவிலே மட்டுமல்ல, உலகத்திலேயே, தமிழ்நாட்டைப்போல் இவ்வளவு சிறிய நிலப்பரப்பிற்குள் 251 இன்ஜினீயரிங் கல்லூரிகள் கிடையாது. ஆஹா எவ்வளவு வளர்ச்சி என்று சந்தோஷமடைய வழியின்றி பல சங்கடங்கள்! ஏனெனில், இதில் அரசு சார்ந்த 13 கல்லூரிகள்தான் உருப்படியாகச் செயல்படுகின்றன.

அடுத்ததாக சொல்ல வேண்டுமெனில், 238 சுயநிதிக் கல்லூரிகளில் ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவான கல்லூரிகளையே வேலைவாய்ப்பு தரும் கல்வி நிலையங்கள் முதல் தர வரிசையில் அங்கீகரித்துள்ளன. அதாவது வருடாவருடம் வெளியேறும் 70,000 மாணவர்களில் சுமார் 10 சதவீதத்-தினருக்குத்தான் சரியான வேலைக்கு உத்தரவாதமுள்ளது. ஆக இப்படி-யான கழிசடைக் கல்வியைத்தான் பெரும்பாலான சுயநிதிக் கல்லூரிகள் தந்து கொண்டுள்ளன. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் வேண்டுமெனில், நம்ம ரயில்வேயில் “கலாசி” எனப்படும் கடைநிலை ஊழியர் பணிக்கு 2000 பேரைத் தேர்தெடுக்க 2004 -ல் ஒரு விளம்பரம் வெளியானது, இந்த வேலைக்கு 20,000 இன்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த லட்சணத்திலான கல்வியைப் பெறுவதற்காகத்தான் நமது பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் வீட்டையோ, நிலத்தையோ, நகைகளையோ விற்று பிள்ளைகளைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கல்வித்துறை வியாபாரமாகிவிட்டதே என்று சிலர் கோபப்படுகிறார்கள். இப்படிப் பேசுபவர்கள் வியாபாரம் பற்றித் தவறான புரிதல்களைக் கொண்டுள்ளனர். ஓரு பொருளுக்குரிய விலை வைத்து விற்பனை செய்து, அதன் தரம், பயன்பாடு நியாயமான விலை இவற்றில் வாங்குபவரை திருப்தியடைய வைப்பதே வியாபாரம். இந்த வகையில் பார்த்தால், சுயநிதிக் கல்லூரிகள் நடத்துவது வியாபாரமல்ல, சுரண்டல்.

அடிப்படை வசதிகளற்ற கட்டமைப்பு, தகுதியற்ற ஆசிரியர்கள், மோசமான கல்வித்தரம், போன்றவற்றோடு மருத்துவம், இன்ஜினீயரிங் படிப்புகள் குறித்த மக்களிடமுள்ள மாயையையே முதலீடாகக் கொள்கின்றன, சுயநிதி கல்லூரிகள்.

மாயைகளை உருவாக்குவதிலும், மாயைகளில் பலனடைவதிலும் வேறெவர்களையும் விட, அரசியல்வாதிகளே அதிக அனுகூலமடைகின்-றனர். இந்த வகையில் தமிழகத்தில் 1984ல் தொடங்கி அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள் கல்விச் சுரண்டலை கைகோர்த்து நடத்தி கொண்டிருக்கின்றன. இதில் பா.ம.க. இதுவரை பார்ட்டனராகவில்லை. ஆகவேதான், “அநியாய கல்விக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. ஏன் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை” என்கிறார் மருத்துவர் ராமதாஸ்.

கல்வி அமைச்சரும், முதல்வரும், “ அடடா அப்படியா! எங்களுக்கொன்றும் புகார்கள் வரவில்லை. ஆதாரம் தாருங்கள், நடவடிக்கை எடுக்கிறோம்” என்கிறார்கள். எல்லோருக்கும் புரிந்த உண்மை, கல்வித்துறையை பொன் முட்டையிடும் வாத்தாகப் புரிந்து வைத்திருக்கும அமைச்சருக்கும், முதல்வருக்கும் புரியவில்லை... பாவம்!

ஆதாரம் திரட்டும் அருகதை ஆட்சி நடத்து பவர்களுக்கு இல்லையா? என மக்கள் ஆச்சரியப்-படுகிறார்கள். அன்iறைய மன்னர்கள் மாறுவேஷமிட்டுச் சென்று மக்கள் குறைகளைக் கேட்டார்களாம். இன்றைய ஆட்சியாளர்களோ நிஜத்திலேயே வேஷம் போடுகிறார்கள்.

இன்றைய நிலவரப்படி, பிரபல பொறியியல் கல்லூரிகளின் நிர்வாக கோட்டாவிற்கான அனைத்து இடங்களும் ஜனவரி, பிப்ரவரியிலேயே 8 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரை விலைபேசி விற்கப்பட்டுவிட்டன.

மற்றொருபுறம் விலை போகாத கல்லூரிகளே எஜீகேஷன் எக்ஸிபிஷன் நடத்தி, 80,000 தான் ஒரு லட்சம் தான். ஹாஸ்டல் வசதி இருக்கு, வாங்க வாங்க என்று கையைப்பிடித்திழுக்காத குறையாகக் கெஞ்சுகிறார்கள்.

நீதிபதி ராமன் கமிட்டி நிர்ணயித்த கல்விக் கட்டணம் 32,500 முதல் 40,000 ரூபாய் வரைதான். எனில் தனியார் கல்லூரிகளில் ஒரு சிலவற்றைத் தவிர மற்றவை எப்படி தங்கள் இஷ்டம் போல் வசூலிக்க முடிகிறது? பொறியியல் கல்லூரிகளில் தான் பொறுக்க முடியாத கொடுமை என்று மருத்துவக் கல்லூரி சென்றால், அங்கோ மகாமோசம். அரசாங்கம் நிர்ணயித்த கட்டணம் 1,30,000 என்றால், இவர்கள் வசூலிக்கும் கட்டணமோ நாலரை லட்சத்திலிருந்து 40 லட்சம் வரை! இப்படி படித்துவிட்டு வருகிறவர்கள் நாளைக்கு மனிதாபிமானத்தையே விலை பேச மாட்டாங்களா?

1992 ல் கட்டாய நன்கொடை தடுப்புசட்டம் வந்தது. இதுவரை இதில் ஒரு கல்லூரி அதிபர் கூட கைதாகவில்லை.

இந்தச் சட்டம் ஆட்சியாளர்களின் கைகளிலுள்ள ஆயுதம் என்பது, அந்த அதிபர்களுக்கு தெரியும். அதேசமயம் உரியவர்களுக்கு பங்கு தராவிட்டால்தான் இது தங்கள் மீது பாயும் என்பதும் புரியும்.

“அரசாங்கத்திற்கு புகார்கள் தந்ததால் கல்லூரியைவிட்டே நீக்கப்பட்டவர்களையும், அரசிடமா புகார் செய்தாய் அபராதம் கட்டு என இன்னும் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலையும் தரட்டுமா என்கிறது இந்திய மாணவர் சங்கம். இவ்வளவு ஏன்?

தமிழகத்திலுள்ள அனைத்து கல்வியாளர்களும் கொதித்துக் குமுறுகிற வகையில் இதுவரை கறை படியாதிருந்த அண்ணா பல்கலைக்கழகத்தையே இந்த ஆட்சி களங்கப்-படுத்திவிட்டது. ஸ்பெஷல் ஸ்கீம் என்று பகிரங்கமாகவே 15 லட்சத்திற்கு இன்ஜினீயரிங் சீட்டை விற்கிறார்கள். சென்ற ஆண்டு இதுபோல் 60 சீட்டுகள் அதிகாரப்பூர்வமாக சில நிறுவனங்களுக்கு விற்றார்கள். இந்தாண்டு இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவுள்ளது. ஏழை, எளிய திறமையான மாணவர்களுக்கு கருணை காட்டவென ஒதுக்கப்பட்ட முதல்வர் கோட்டா, கவர்னர் கோட்டாவெல்லாம் கூட கல்விச் சந்தையில் காசாக மாற்றப்பட்டுக் கொண்டுள்ளன.

1948 ல் தாராசந்த் கமிட்டி தொடங்கி, சமீபத்திய ராமன் கமிட்டி சுப்பிரமணியன் கமிட்டி வரை எத்தனையோ கமிட்டிகள், என்னென்னவோ ஆய்வுகள், கட்டண வரைமுறைகள், அட்மிஷன் வரைமுறைகள், எந்த நியாயத்தை நாம் எடுத்துச் சொன்னாலும் நடைமுறையில் கேட்கப்படுகிற கட்டணத்தைக் கொட்டிக் கொடுக்க மக்கள்-திரளின் ஒரு பகுதி தயாராக இருக்கிறது என்பதே நிதசர்னம். அப்படி கொட்டுபவர்கள் எங்கேயோ போய்கொட்டாமல் அரசாங்க கஜானாவிலேயே கொட்டிவிட்டுப் போகட்டுமே! மதுக்கடைகளை அரசாங்கமும், கல்வி நிறுவனங்களை தனியாரும் நடத்துவது அவலம் அநீதி.

மழைக்கும் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர்கள் கூட ஒரு கல்லூரி துவங்கி காசுபார்க்க முடியுமெனில் அரசாங்கம் மேலும் சில கல்லூரி-களை நடத்தினால் என்ன?

வசதியானவர்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை ஏழை எளிய நடுத்தர வர்க்க மாணவர்கள் ஏற்றம் பெற பயன்படுத்தலாமே!.

நன்றி குமுதம்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com