Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஆகஸ்ட் 2007

ஆந்திர காங்கிரஸ் அரசின் கொலைவெறித் தாண்டவம்
துப்பாக்கிச் சூட்டில் 8 நிலப்போராளிகள் பலி

- எஸ்.வி. சசிகுமார்

நிலமற்ற, கிராமப்புற ஏழைகளுக்குச் சாகுபடி நிலமும், வீடற்ற நகர்ப்புற மக்களுக்கு வீட்டு மனையும் வழங்க வற்புறுத்தி கடந்தமூன்று மாதங்களாகத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் மாபெரும் போராட்டம் நடந்து வருகிறது. வீரம் செறிந்த இப்போராட்டத்தை முறியடிக்க ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு காவல்துறையின் கடுமையான அடக்குமுறைகளைக் கட்ட-விழ்த்து விட்டிருக்கிறது. மே 2 இல் போராட்டம் தொடங்கிய நாளிலிருந்தே தடியடி, கண்ணீர்ப் புகை பிரயோகம் என்று ஒவ்வொரு கட்டத்திலும் அடக்குமுறையை ஏவிவிட்டு நூற்றுக்கணக்கானோரைக் காயப்படுத்தியும் அஞ்சாத மக்கள் ஆண்களும், பெண்களும், முதியவர்களும், இளைஞர்களும் நாளுக்கு நாள் தங்கள் ஆதரவையும் பங்கெடுப்பையும் அதிகரித்துக் கொண்டே வந்ததைப் பொறுக்க முடியாத அரசு தனது இறுதி ஆயுதமான துப்பாக்கிச் சூட்டையும் பயன்படுத்தி இருக்கிறது.

Andra Violence ஜூலை 28 அன்று கம்மம் மாவட்டத்திலுள்ள முடிகொண்டா என்ற ஊரில் அரசின் அடக்குமுறையை எதிர்த்து அமைதி-யான முறையில் சாலை மறியல் செய்த நூற்றுக்கணக்-கான ஏழை மக்கள் மீது துப்பாக்கியால் சுட்டு எட்டு உயிர்களைப்பலி கொண்டிருக்கிறது காவல்துறை. பலர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டை எதிர்த்து நாடெங்கும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் பல இடங்களில் நடைபெற்றிருக்கின்றன. கம்யூனிஸ்ட் எதிர்ப்பில் என்றும் முன்னணியிலிருக்கும் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு கூட ஆந்திரஅரசின் அடக்குமுறையைக் கடுமையாகக் கண்டித்து தலையங்கம் எழுதியிருக்கிறது. “துப்பாக்கிச் சூட்டில் எந்த விதமான விதிமுறைகளையும் காவல்துறை பின்பற்ற-வில்லை. துப்பாக்கியை நேரடியாகவே போராட்டத்தினரை நோக்கி குறிபார்த்துச் சுட்டிருக்கின்றனர். முன்னெச்சரிக்கை எதுவும் கொடுக்கவில்லை.

விதிமுறைகளின்படி முதலில் தண்ணீர்க் குண்டுகளையோ, ரப்பர் குண்டுகளையோ பயன்படுத்தி நிலைமையைச் சமாளிக்கவும் முயற்சிக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய தலையங்கம், “இந்த ராட்சஸக் காவல்துறை நடவடிக்கையை ராஜசேகர ரெட்டி அரசு நியாயப்படுத்துவது அதிர்ச்சி அளிக்கிறது’’ என்றும் கண்டித்திருக்கிறது.

போராட்டத்திற்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவையும் அது தவறாது சுட்டிக் காட்டியிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பிற இடது-சாரிக் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் அரசு வன்-முறையைக் கடுமையாகக் கண்டித்திருக்கின்றன. ராஜசேகர ரெட்டி உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பிரதமர் மன்மோகன் சிங் இந்த கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக்கொள்ளாமல் வெறும் “வருத்தத்தை’’ மட்டும் தெரிவித்திருக்கிறார். “வன்முறையை உபயோகிக்காதீர்கள், கவனமாகச் செயல்படுங்கள் என்ற என் அறிவுறுத்தலைக் காவல்துறை கேட்கவே இல்லை’’, என்று கூறி ராஜசேகர ரெட்டி தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்க முயற்சிக்கிறார். நட்டஈடு கொடுத்தும், நீதி விசாரணைக்கு உத்தரவிட்டும் தனது அரசின் மீதான களங்கத்தை நீக்க முடியுமென்று அவர் நினைப்பது பரிதாபத்திற்குரியதே.

“நிலமும், வீடும் எளியோர்க்குக் கிடைப்பது உறுதி செய்யப்படும் வரை போராட்டம் தொடரும்’’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருக்கிறது. “இக்கோரிக்கை ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே ஏற்கப்பட்டு ஆளும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில்கூட உறுதி செய்யப்பட்டிருக்கிறது’’ என்பதை கட்சி சுட்டிக்காட்டி இருக்கிறது.

“போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படுவது மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்லப்படும்’’ என்று மார்க்சிஸ்ட் கட்சியின் அரசி-யல் தலைமைக்குழுவும் அறிவித்திருக்கிறது.

கட்சித் தலைமையின் இந்த உறுதிப்பாட்டிற்குக் காரணம் மூன்று மாதங்கள் கடும் அடக்குமுறைக்கு மத்தியில் இப்போராட்டத்தைத் தொய்வின்றி வழிநடத்திச் செல்லும் மாநிலச் செயலாளர் பி.வி.ராகவலு மற்றும் பொறுப்பாளர்களுக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, சில மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சிகள், 195 தன்னார்வத் தொண்டு இயக்கங்களும், குறிப்பாக பெண்களும், கொடுத்துவரும் பேராதரவுதான் என்பது மறுக்கமுடியாத உண்மை. மக்கள் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட போதிலும், புற்றீசல்கள் போல மக்கள் தொடர்ந்து களம் இறங்கிப் போராடியது வியக்கத்தக்கது.

மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்திலும் பிறஇடங்களிலும் மறியல் செய்வது முதல் அரசு அலுவலக வளாகங்களுக்குள் புகுந்து அங்கேயே தங்கும் போராட்டம் வரை ஒவ்வொரு கட்டத்-திலும் கூட்டம் கூட்டமாக மக்கள் உணர்வுப்பூர்வமாக உறுதியாகப் பங்கெடுத்த காட்சியை செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சி காட்சியிலும் தினமும் பார்க்க முடிகிறது. நிலமும், வீடும் பெற்றே தீருவோம் என்ற உறுதியுடன் குண்டாந்தடிகளையும், துப்பாக்கி முனைகளையும் துச்சமெனக் கருதி செங்கொடி ஏந்தி சாரிசாரியாக நெஞ்சுரம் மிக்க போராளிகளின் தலைமையில் மக்கள் கூட்டம் திரண்டு சென்ற காட்சி உழைக்கும் மக்களுக்கு உற்சாகமும், உத்வேகமும் கொடுத்த அதே நேரத்தில் அதிகார வர்க்கத்தினர் மத்தியில் அச்சத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்துவதாய் இருந்தது. ஒவ்வொரு நாளும் புதிய, புதிய பகுதிகளில், வெவ்வேறு மக்கள் மத்தியில் போராட்டம் விரிந்து, பரந்து அரசைத் திக்குமுக்காடச் செய்தது என்றால் மிகை இல்லை.

நாடு விடுதலை பெற்று 50 ஆண்டுகளுக்குப் பின்னரும் உழுபவனுக்கு நிலமும், உழைக்கும் மக்-களுக்குக் குடியிருக்கச் சிறுகுடிலும்கூட எட்டாக்கனியாக இருந்துவருவது சாமானிய மக்களிடம் ஒரு நியாயமான கோபத்தை ஏற்படுத்தி இருப்பதில் வியப்பில்லை. நாளுக்குநாள் கொதிநிலை ஏறிக்கொண்டே வந்திருக்கிறது. நியாயமான கோரிக்கைகளானாலும் போராடித்தான் பெறமுடியும் என்ற உணர்வு ஏற்படுத்தப்பட்டபொழுது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் முழுமையான நம்பிக்கை வைத்துக் களம் இறங்க அவர்கள் தயாராகிவிட்டனர்.

போராட்ட உணர்வையும், நம்பிக்கையையும் அவர்கள் மத்தியில் ஏற்படுத்தத் தொடர்ந்து பல மாதங்கள் கட்சி எடுத்த முனைப்பும் முயற்சியும் பலனளித்துள்ளன.

வாக்குறுதிகளை நிறைவேற்றப் போதுமான அக்கறை ஆளும் கட்சியில் இல்லை என்பதைப் புரிந்துகொண்ட மக்கள் போராட வேண்டிய கட்டாயத்தை உணர்ந்ததால் இது சாத்தியமாயிற்று என்று ராகவலு ஒரு பேட்டியில் கூறியுள்ளார். கோரிக்கைகளின் நியாயத்தை உணர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சில மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் அமைப்புகள் மற்றும் சுமார் 200 தொண்டு அமைப்புகள் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள முன்வந்தபோது போராட்ட அமைப்பின் பலம் பன்மடங்கு அதிகரித்தது.

அதுவே மக்களிடம் ஏற்பட்டிருந்த நம்பிக்கையையும் பன்மடங்கு பெருகச் செய்தது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். மக்களுடைய கோபத்தின் நியாயமான வெளிப்பாடும், போராடும் இயக்கங்களின் நம்பகத் தன்மையும்தான் ஆந்திர மக்களிடையே இத்தகைய பேரெழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பது தெளிவாகிறது.

ஆளும் கட்சியினர் கூறுவதுபோல நிலப்போராட்டம் திடீரெனத் தோன்றிய ஒன்றல்ல. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஓராண்டிற்கும் மேலாகவே இத்தகைய போராட்டத்தைத் துவக்குவதற்கான ஆரம்பப் பணிகளை செய்து வந்திருக்கிறது. குறிப்பாகச் சொல்வதானால், கடந்த ஆண்டு கொண்டாடப்பட்ட ‘தெலுங்கானா போராட்ட 60வது ஆண்டு விழா’ கட்சியின் புதிய போராட்ட முயற்சிகளுக்கு உந்துதலாக அமைந்திருக்கிறது.

கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஹைதராபாத் சுந்தரையா அறிவியல் மையத்தில் 2006, ஜூலை 23 அன்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ராகவலு ஆற்றிய உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 1946 முதல் 1951 வரை ஆந்திராவின் ஒரு பகுதியான தெலுங்கானாப் பகுதியில் நடைபெற்ற அன்றைய கம்யூனிஸ்டுகளின் ஆயுதம் தாங்கிய போராட்த்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பைக் குறிப்பிட்ட அவர், கடுமையான அடக்குமுறையை எதிர்த்தும், உழுபவனுக்கு நிலமும் அடித்தள ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் “கிராம ராஜ்ய’’ அமைப்பும் வேண்டி விவசாயத் தொழிலாளரும், விவசாயிகளும் நடத்திய போராட்டம் ஆறு ஆண்டுகள் நடந்து இறுதியில் கைவிடப்படும் நிலை நேரிட்டாலும் போராட்டமும், போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த ஆயிரக்கணக்கானோரின் நினைவும் இன்றும் உழைக்கும் வர்க்கத்திற்கு உத்வேகம் ஊட்டுவதாய் இருக்கும் மாண்பினை ராகவலு சுட்டிக்காட்டினார்.

(ஹைதராபாத் நிஜாமின் யதேச்சாதிகாரத்தையும், நிலஉடைமை வர்க்கத்தின் மூர்க்கத்தனமான சுரண்டலையும் எதிர்த்து நடைபெற்ற இயக்கம் தான் தெலுங்கானா ஆயுதம் ஏந்திய போராட்டம். இதன் குறிப்பிடத்தக்க தலைவர்கள் எம். பசவபுன்னையா, பி. சுந்தரையாவும். நளகொண்டா, வாரங்கல், கம்மம் என்ற மூன்று மாவட்டங்களிலுள்ள 3000 கிராமங்களைச் சேர்ந்த 30 லட்சம் மக்களின் போராட்டக் குழுவின் ஆளுகைக்குள் கொண்டு வரப்பட்டன. அனைத்து கிராமங்களும் போராடும் பஞ்சாயத்துகளைக் கொண்ட கிராம ராஜ்யம் இப்பகுதியில் நிறுவப்பட்டது.

மக்கள் குழுக்களின் வழிகாட்டுதலில் 10 லட்சம் ஏக்கர் நிலம் உழுபவர்களுக்குச் சொந்தமாக்கப்பட்டது. எனினும் 1951வாக்கில் கடுமையான அடக்குமுறையைப் பிரயோகித்து ஜவஹர்லால் நேரு தலைமையிலான மத்திய அரசின் இராணுவ உதவியுடன் ‘தெலுங்கானா ஆயுதம் தாங்கிய போராட்டம்’ முடிவிற்கு கொண்டுவரப்பட்டது. இப்பொழுது துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்ற முடிகொண்டா இருப்பது அன்றைய போராட்டக் களமாக விளங்கிய மூன்று மாவட்டங்களுக்குள் ஒன்றான கம்மம் மாவட்டத்தில் இருக்கிறதென்பது குறிப்பிடத்தக்கது).

Andra Violence சுந்தரையா அறிவியல் மன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உருப்பினரும், மாநிலச் செயலாளராகவும் விளங்கும் ராகவலு எப்படி தெலுங்கானா போராட்டம் இன்னும் மக்களுக்கு ஆதர்சமாக விளங்குகிறது என்பதை விவரித்தார். அன்று அவர்கள் எடுத்துப் போராடிய இரண்டு பிரச்னைகளும், உழுபவனுக்கு நிலம், கிராம அளவிலான ஜனநாயகம் - இன்னமும் தீர்க்கப்படாத பிரச்னைகளாகவே இருப்பதை அவர் சுட்டிக்-காட்டினார்.

காங்கிரஸ் அரசின் நிலச்சீர்திருத்தச் சட்டங்களெல்லாம் இவ்விஷயத்தில பயனற்றுப் போனதையும், மாநிலத்தில் தொடர்ந்து வரும் அரசுகள் அனைத்துமே இதில் போதிய அக்கரை செலுத்தவில்லை என்பதையும் அரசியல் சட்டத் திருத்தங்களுக்குப் பின்னரும் உண்மையான ஜனநாயகப்பூர்வமான கிராமப் பஞ்சாயத்து நிர்வாகம் ஏற்படுவதற்கு மாநில அரசு உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பதையும் புள்ளி விபரங்களுடன் தெளிவாகக் கூறினார். இவற்றை பற்றியெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு பசவபுன்னையா, சுந்தரையா மற்றும் உயிர்த்தியாகம் செய்த ஆயிரக்கணக்கானோரின் நினைவுகள் தரும் உத்வேகத்துடன் புதிய போராட்டங்களைப் புதிய பலத்துடன் தொடங்க வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டுச் சொன்னார்.

தொடர்ந்து பல மாதங்களாக மக்கள் மத்தியில் சிறு சிறு இயக்கங்களை அவ்வப்போது எடுத்துச் சென்று, பிற கட்சிகளின், அமைப்புக்களின் உதவி-யையும் ஒருங்கிணைத்து லட்சக்கணக்கான மக்களைப் போர்க்களத்திற்கு திரட்டிவரும் சக்தி மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஊழல் நிறைந்த, லஞ்சம் கொடிகட்டிப் பறக்கின்ற ஒரு ஆட்சி பெயரளவிற்குத் திட்டங்கள் தீட்டி மக்களுக்குக் குடியிருப்புக்கள் கொடுத்திருப்பதாகச் சொல்லி ஏமாற்றுவதெல்லாம் அணிதிரட்டப்பட்டுள்ள, புதிய எழுச்சி கொண்ட மக்களிடம் நடக்காது என்பதை ராஜசேகர ரெட்டி அரசு உணர்ந்து போராடும் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று உறுதியுடன் செயல்படுத்துவதே மாநில அரசு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒரே வழியாகும். தலைமை மாறினாலே அது சாத்தியமாகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com