Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஆகஸ்ட் 2007

ஜிந்தாபாத் ஜிந்தாபாத்

- இரா. எட்வின்

நேரடியாகவும் மொழிபெயர்க்கப்பட்டும் என்று ஏராளமாய் சுயசரிதைகளை வாசித்தாயிற்று.

sa.tamilselvan's book காந்தியின் “சத்ய சோதனை”, நேருவின் “இந்திய தரிசனம்”, கலைஞரின் “நெஞ்சுக்கு நீதி”, வைர முத்துவின் “இதுவரை நான்”,என்று இந்தப் பட்டியல் இன்னும் நீளமாய் நீளும்.

சரி, சுயசரிதை என்றால்தான் என்ன?

ஒருவரது வரலாற்றினை அவர் தானே எழுதினால் அது சுயசரிதை அடுத்தவர்; எழுதினால் அது சரிதை என்று பள்ளியில் நமக்கு சொல்லித் தரப்பட்டிருக்கிறது.

எனில் “ஜிந்தாபாத் ஜிந்தாபாத்” சுயசரிதைதானா?

“உன் வாழ்க்கை வரலாற்றை எழுதுகிற அளவுக்கு நீ என்ன அவ்வளவு பெரிய தியாகியா? என்கிற காட்டமான எதிர் வினைகளோடு இக்கட்டுரைகள் ‘தீம்தரிகிட’ இதழில்; தொடராக வெளிவந்தன” என்று முன்னுரைப்பதன் மூலம்; தனது சுயசரிதையைத்தான் தமிழ்ச்செல்வன்; முயன்றிருப்பதாகக் கொள்ளலாம்.

பொதுவாக தனது பிறப்பு, பெற்றோர் மேன்மை, குடும்பப் பாரம்பரியம், கல்வியில் பணித்தளத்தில், நட்பு வட்டத்தில், சமூகத்தில் தனது இடத்தின் உயரம், தனது சாணக்கியத்தனம், தியாகம் போன்றவற்றை கற்பனை; அல்லது முடிந்தவரை மிகைப்படுத்தி எழுதுவதுதான் சுயசரிதையாளர்களின் வாடிக்கை. விதி விலக்குகளை நிராகரிப்பதற்கில்லை.

ஆனால் மேலே குறிப்பிட்ட எந்த குணாதிசயங்களும் ஏழெட்டு முறை தேடியும் முப்பத்தியெட்டு அத்தியாயங்களிலும் எங்கும் கிடைக்கவில்லை. சத்திய சோதனையில் காந்தி கிடைப்பது மாதிரி, இந்திய தரிசனத்தில் நேரு கிடைப்பது மாதிரி, நெஞ்சுக்கு நீதியில் கலைஞரும், இதுவரை நானில் வைரமுத்துவும் கிடைப்பது மாதிரி “ஜிந்தாபாத் ஜிந்தாபாத்”தில் தனி ஆளாய் தமிழ்ச்செல்வன் கிடைக்கவில்லை.

தியாகி பாஸ்கரதாஸின் பேரன் தானென்ற அகம்பாவமோ, கர்வமோ இந்த நூலின் எந்த வரியிலும் இல்லை. பாஸ்கரதாஸ் என்ற பேரொளியின் வெளிச்சத்தில் தான் ஜொலிப்பதை இவர் விரும்பவில்லை என்பதென்னவோ சரிதான். ஆனால் தியாகி பாஸ்கரதாஸைப் பற்றி கொஞ்சமாவது சொல்லியிருக்க வேண்டும் என்பது என்ன சொன்னாலும் குறைதான்.

சி.ஈ.ஓ ரொம்ப அழிம்பு பண்றான். அவனுக்கு ஒருநாள் ஜிந்தாபாத் வைக்கணும்” என்று ஜிந்தாபாத்துக்கே ஜிந்தாபாத் போடும் நம்பி வாத்தியாரோடு தொடங்குகிறது “ஜிந்தாபாத் ஜிந்தாபாத்”

தோழர் பால்வண்ணம், வீரண்ணன், சுவடி, பாலு, நம்பி சார், ஆதிமூலம், வி.எஸ்.கணபதி, தீக்கதிர் சங்கரப்ப நைனா, பெயரைக் கேட்ட காவலர்களிடம் “கம்யூனிஸ்ட்” என பிரகடனப் படுத்திக்கொண்ட சி.எஸ், தோழர் ஊத்துமலை ராமகிருஷ்ணன், கரிசல் கிருஷ்ணசாமி, சந்திரசேகர், தோழர்.பால்கந்தன், தோழர். ராமசுப்பு, தோழர்.கணபதி, தோழர்.வானமாமலை, டி.வி.சுப்பிரமணி, தோழர்கள். ஜெயலட்சுமி, ராஜேஸ்வரி, லோகநாயகி, முத்துலட்சுமி, சகுந்தலா, ஜோதிபாசு சலூன்கடை, தொழிற்சங்கம், கமிட்டிகள், மாநாடுகள், “மக்கள் ரயில்” ஸ்ட்ரைக்குகள் இவர்களோடு இரண்டறக் கலந்துதான் தமிழ்ச்செல்வன் நமக்கு கிடைக்கிறார்.

இவர்களன்றி தன்னைப் பற்றியும் தனது குடும்பம் பற்றியும் தனித்த முறையில் தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டுள்ளவை ஒரு பத்து பத்திகளுக்குள் அடங்கும். “நான் அம்பைக்குப்போனது 1983 மார்ச்சில் 1983 ஆகஸ்ட்டில் எங்களுக்கு மகன் பிறந்தான். கர்ப்பினி மனைவியைச் சிறை வைத்ததுபோல தனியாக விட்டு விட்டு சங்கம் சங்கம் என்று அலைந்த குற்ற உணர்வு உறுத்த ஒரு மாதம் லீவு போட்டு மனைவியுடன் கூட மாட இருந்து உதவிகள் செய்து கொண்டிருந்தேன்” என்பதுபோல குடும்பத்தைப் பற்றியும் நான்கைந்து இடங்களில் எழுதக்கூடிய அளவுக்கு பெருந்தன்மை இருக்கவே செய்கிறது தமிழ்ச்செல்வனுக்கு.

ஆனால் மேற்படி ராப்பாடித் தோழர்களுக்கு குடும்பம் குறித்த சரியான புரிதல் இருந்திருக்கிறது. ஆசிரியத் தோழர் இசக்கியம்மாள் அவரது கணவரால் தொடர்ந்து அடிபட தோழர்கள் தலையிட்டிருக்கிறார்கள். தொடர்ந்து அவரது கணவர் மாறாது போகவே தோழர். இசக்கியம்மாளுக்கு மணவிலக்கு பெற்றுத் தந்திருக்கிறார்கள் என்பது ஊழியர்கள் தங்களது தோழர்களின் குடும்பங்களிலும் அக்கறை கொள்ள வேண்டியதின் அவசியத்தை உணர்த்துகிறது.

இவரது மண் மற்றும் இயக்கத்தின் சுயமே இவரது சுயம். இயக்கம் மற்றும் மேற்சொன்ன இயக்கத் தோழர்களின் வரலாறோடு இரண்டறக் கலந்துள்ளதே இவரது வரலாறு. மொத்தத்தில்; தன்னை தனது இயக்கத்தின் கருவியாக மட்டுமே பார்க்கக்கூடிய, தனக்கான ஆளுமையையோ, வரலாற்றையோ, பிம்பத்தையோ முற்றாய் நிராகரிக்கும் ஒரு இயக்க ஊழியனது குறிப்பிட்ட கால வரலாறே தமிழ்ச்செல்வனின் வரலாறு.

குடும்ப வாழ்க்கைக்கும் சமூக வாழ்க்கைக்கும் ஊடே நடக்கும் ஊசலாட்டங்களை நுணுக்கமாக முன்வைப்பதுடன், கொஞ்சம் பொறுப்போடு நடந்து கொண்டால் குடும்பம் சமூகத்திற்கும், சமூகம் குடும்பத்திற்கும் குறுக்கே நிற்காது என்பதையும், இன்னுங்கொஞ்சம் நுணுக்கமாக புரிந்து கொண்டால் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் இடையில் உள்ள மதில் சுவரைத் தகர்த்துவிட முடியும் என்பதையும் தெளிவாக புரிய வைக்கிறது இந்தப் புத்தகம்.

“அண்ணன்கள் தோழர்களாவது ரொம்பச் சிறப்பு. தோழர்கள் அண்ணன்களாகும் போது தோழமையின் அடிநாதமாகிய விமர்சிக்கும் உரிமையை நாம் விட்டு விடாமல் இருந்தால் போதும்” என்று தோழமையின் அடிப்படை குணாதிசயம் குறித்து அக்கறைப்படுகிறது புத்தகம்.

தமிழ்ச்செல்வனின் தெருவில் வசிக்கும் குழந்தைகள் எல்லோரும் தீப்பெட்டி ஒட்டுபவர்கள். மாலையில் கலர் கலராய் கண்ணாடி அடைத்த மிட்டாய் வண்டியை பார்க்க அந்தக் குழந்தைகள் வெளியே ஓடி வருவார் களாம். மிட்டாய் வண்டியை பார்ப்பதில் அந்தக் குழந்தைகளுக்கு திருப்தி. அந்தக் குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த பண்டங்களுக்கு நேராக கையை நீட்டி எடுத்துச் சாப்பிடுவதுபோல பாவனை செய்து மென்று தின்பதுபோல “ஞம்..ஞம்” என்று சத்தம் போட ஆரம்பிப்பார்களாம்.

அடுத்து விழுங்குவது போல “கடக்.. கடக்” என்று சத்தம் எழுப்பி சிரிப்பார்களாம். ஓரு பெரும் வெடிப்பை அந்தச் சிரிப்பு தன்னுள் ஏற்படுத்திய தாக தமிழ் சொல்கிற இடம் படிப்பவனுக்குள்ளும் நிச்சயம் ஒரு வெடிப்பை ஏற்படுத்தும்.

சங்கரப்ப நைனா பற்றிய பதிவு நெஞ்சைத் தொடுகிறது. அவர் ஆக்ரோசமாக அரசியல் பேசுவதாலேயே வியாதி என்று எல்லோரும் விசனப்பட வியாதிக்கான காரணத்தை “நான் கோபப்பட்டு பேசறதனால எனக்கு வியாதியே கிடையாது. தீக்கதிருக்கு துட்டு பிரியலேங்கிறது கூட ஒரு விசயமில்லே. துண்டு விழுந்தா பால்வண்ணம் கொடுப்பாரு. ஆனா படிக்கிற எண்ணிக்கையப் பாருங்க. தீக்கதிர் படிக்காம எப்படி இயக்கம் வளரும்? நம்ம லைன் என்னான்னு தெரியாம எப்படி வேலை செய்யப்போறான்?” என்று அவர் சொல்வதைக் கேட்கும் போது அப்பேர்பட்ட தோழர்கள் வெறுங்கால்களால் ரத்தம் சொட்டச் சொட்ட நடந்து நடந்தே சமைத்துத் தந்த பாதைகளில்தான் நாம் சொகுசாக பயணிக்கிறோம் என்ற உண்மை உறைக்கிறது.

தமிழ்ச்செல்வனின் வரலாறு கிடைக்கும் என்று உள்ளே போனால் இயக்கத்திற்காக உழைத்த பல தோழர்களின் வரலாறு கிடைக்கிறது.

மொத்தத்தில் இந்தப் புத்தகம் நமக்குள் இருக்கும் களைப்பை துடைத்துப்போடும்.

நமக்குள் இருக்கும் ஊசலாட்டத்தை உடைத்துப் போடும்.

நாம் போக வேண்டிய தூரமும் செய்ய வேண்டிய வேலைகளும் மிக அதிகம் என்ற பொறுப்புணர்வைத் தரும்.

இயக்கத்தோடு முற்றாய் முழுசாய் நம்மை கரைந்து போகத் தூண்டும்.

முத்தாய்ப்பாய் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் இடையில் உள்ள மதில் சுவரைத் தகர்த்தெரியும் தெம்பு தரும்.

ஆகவே இந்தப் புத்தகத்தை வாசிப்பதும் அடையாளங் காணப்பட்டத் தோழர்களை வாசிக்க வைப்பதும் அவசியம்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com