Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஏப்ரல் 2008

மருந்தீடு எனும் மாயை
சமூக மருத்துவன்

மதிய உணவிற்காகவும், முட்டைக்காகவும் பள்ளிக்கு வந்து போகும் சிறுவர்கள் சிலரை போல், கண்மணியும் ஒருத்தி. பல வாரங்களாக எண்ணெய் தேய்க்காத செம்பட்டையான தலையுடனும், மூக்கில் சளி சிந்தி சிந்தி மேல் உதட்டிற்கு மேல் புண்ணுடனும், கிழிந்த மேல் சட்டை, பாவாடையுடனும், சிறுவர் பள்ளிக்கு தினமும் வரும் கண்மணிக்கு 31 வகுப்பு நண்பர்கள், பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாத கரிபடிந்த சமையல் அறையில் மதிய உணவும், முட்டையும் தயாரித்து கொண்டிருந்தாள் துளசி ஆயம்மா, அன்று பள்ளிக்கு 22 சிறுவர்கள் வந்திருந்தார்கள். உணவு தயாரானவுடன் அனைத்து குழந்தைகளும் வரிசையில் உட்கார வைக்கப்பட்டு சாதம், பருப்பு, தண்ணி, முட்டையும் பரிமாறினாள் துளசியம்மா. 32 முட்டைகள் கொடுக்கப்பட்டதாக கணக்கை முடித்துவிட்டு கிளம்புவதற்கு தயாரானாள் வசந்தி டீச்சர்.

அன்று காலையிலிருந்தே கண்மணிக்கு இலேசான வயிற்று வலியும், குமட்டலும் இருந்ததை யாரிடமும் சொல்லாமல் இருந்தாள். மதிய உணவு உண்பதற்கு உட்கார்ந்தவள் தீடீரென எழுந்து வெளியே ஓடினாள். ஒதுக்குப்புறமாக சென்று உட்காருவதற்கு முன்பே பாவாடையில் கழிந்து விடுகிறாள். உணவு பரிமாறிவிட்டு கண்மணியை தேடிக்கொண்டு வெளியில் வரும் துளசியம்மா ஒதுக்குப்புறமாக கண்மணி கழிந்திருப்பதை பார்த்துவிட்டு, தண்ணி இல்லாதபோது ஏண்டி என் உயிரை எடுக்கிறே என திட்டுகிறாள். அருகிலுள்ள கை பம்பிலிருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து கண்மணியை சுத்தம் செய்துவிட்டு, முதலில் உன்னை வீட்டில் விட்டு விடுகிறேன் என அழைத்துச் செல்கிறாள் துளசி ஆயாமா.

65 குடும்பங்கள் வாழும் அந்த கிராமத்தின், ஒதுக்குப்புறமாகத் தென்னை ஓலையால் வேயப்பட்ட குடிசையில் கண்மணியின் குடும்பம் பல வருடங்களாக வாழ்ந்து வருகிறார்கள். பக்கத்து கிராமத்தில் களையெடுக்கும் கூலி வேலைக்காகச் சென்றிருக்கும் கண்மணியின் அம்மா லட்சுமி, வரும் வழியில் உள்ள கருவேலம் காட்டில் காய்ந்த முள் செடிகளை வெட்டி எடுத்துவர மாலை 6 மணி ஆகிவிடும் என்பதால், துளசியம்மாள் கண்மணியை பக்கத்து வீட்டில் இருக்கும்படி விட்டுவிட்டுச் செல்கிறாள்.

குடிப்பதற்கு, குளிப்பதற்கு மற்றும் சமையல் செய்வதற்கும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறைவிடப்படும் பஞ்சாயத்துக் குழாய்த் தண்ணீர் அன்று வரும் என்பதால், தலையில் காய்ந்த முள் செடிகளையும், இடுப்பில் 6 மாதம் ஆகும் தம்பியையும் எடுத்துக் கொண்டு வேகமாக வருகிறாள் லட்சுமி. வீட்டின் பின்புறம் மூன்று ஓலைகளால் மறைக்கப்பட்ட குளிக்கும் இடத்தைச் சுற்றியும், ஏரிபோல் தேங்கிநிற்கும் கழிவு நீருக்கு அருகில், மீண்டும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு, மலம் கழிக்க உட்கார்ந்திருக்கும் கண்மணியைப் பார்த்து ஏண்டி இந்த நேரத்துல உட்காருர என லட்சுமி கேட்கிறாள். அப்பகுதி பெரியவர்கள் பக்கத்தில் உள்ள கருவேலம் காட்டில் மலம் கழிப்பதோடு, சிறுவர்கள் ஓரமாக மலம் கழிக்கக் கூடிய சூழல் வாழும் கண்மணிக்கும், வயிற்றுப் போக்கு, சளி, காய்ச்சல் என்பதெல்லாம் அடிக்கடி வந்து போகும் உடன்பிறவா பந்தங்கள் என்பதால், அப்பகுதியில் வயிற்றுப் போக்கு அடிக்கடி வரும் என்பதாலும், லட்சுமி அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டாள்.

கண்மணிக்கு மதியத்திலிருந்து நான்கு ஐந்து முறை வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால், உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு, தாகத்துடன் தண்ணீரை பானையிலிருந்து எடுத்துக் குடிக்கிறாள். பசி எடுக்கிறது எதாவது சாப்பிடத்தாமா என லட்சுமியிடம் கண்மணி கேட்கிறாள். சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும் என்றும், வயிற்றைக் காயவைத்தால், வயிற்றுப் போக்கு நின்றுவிடும் என்கிற (மூட) நம்பிக்கையில் இரவு உணவோ, நீரோ கொடுக்காமல், கண்மணியை உறங்கவைக்கிறாள்.

அன்றைய இரவு நான்கு முறை வயிற்றுப் போக்கு ஏற்பட்டதால், அடுத்தநாள் காலை கண்மணி மிகவும் பலவீனத்துடன் காணப்படுகிறாள். கண்மணிக்கு உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு, நாக்கு வறண்டு, சிறுநீரளவு குறைந்து மஞ்சளாக வருகிறது. அப்பகுதியில் சற்று அனுபவம் மிக்க நடுத்தவர வயது பெண்மணி பச்சையம்மாள். அவரிடம் தன் குடும்பத்தில் என்ன பிரச்சனையானாலும் கலந்து பேசிக் கொள்வாள் லட்சுமி. கண்மணியைப் பச்சையம்மாளிடம் அழைத்துச் செல்கிறாள். விவரத்தைக் கேட்டறிந்த பச்சையம்மாள், சில வேப்பிலைகளைப் பிடிங்கி எடுத்துக் கொண்டு வாயில் ஏதோ முணுமுணுத்தபடி திருநீறை எடுத்து கண்மணி நெற்றியில் தடவினாள்.

சிறிது நேரத்திற்குப் பின்னர் மீண்டும் கண்மணிக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டு முன்பை விட உடல்நிலை மோசமாக, ‘உன்குடும்பத்திற்கு யாரோ செய்வினை வைத்திருகிறார்கள்’ அதனால் தான் இப்படி நடக்கிறது என்று லட்சுமியிடம் கூறிவிட்டு, அதைத் தீர்ப்பதற்கு ஊருக்கு வெளியில் இருக்கும் வீராசாமி கிழவனிடம், அவர்களைப் பச்சையம்மாள் அழைத்துச் செல்கிறாள். தீராத காய்ச்சல், வயிற்றுவலி, பேதி, தலைவலி போன்ற உடல் உபாதைகள் செய்வினை வைக்கப்படுவதால் உருவாவதாகவும், அதற்கு மருந்தீடு எடுப்பதில் வீராசாமி கிழவன் கைதேர்ந்தவன் எனவும் அப்பகுதி மக்கள் நம்பிவந்தார்கள். தினமும் பத்து பதினைந்து நபர்கள் வெளியூரிலிருந்தும் கூட வந்து செய்வினையைத் தீர்த்துக் கொண்டு போகக்கூடிய அளவுக்கு, அவனைக் கைராசியானவனாக அப்பகுதி மக்கள் ஆழமாக நம்பினார்கள்.

தீர்வுக்காக வந்தவர்களிடம் பிரச்சனையைப் பற்றிக் கேட்டறிந்து கொண்டு அவரின் மனோ நிலையை ஆழமாகப் புரிந்து கொள்வார் வீராசாமி கிழவன். பின்னர் நோய்பட்டவருக்கு உப்பு கலந்த நீரை அதிகமாகக் குடிக்க வைப்பார். ஒருவேட்டி துணியை நோய்ப்பட்டவரின் முன்னால் விரித்து வைத்து, அவரது கண்களை மூடிக்கொண்டு வாந்தியெடுக்குமாறு கூறுவார். அப்போது யாருக்கும் தெரியமல் தந்திராமாகத் தன் கையில் வைத்திருக்கும் பழைய இரும்புத் துண்டு, உணவுப் பொருள், பழம், இனிப்பு ஏதாவது ஒன்றையை அந்த வேட்டியில் போட்டுவிடுவார். உடனே செய்வினையாக வைக்கப்பட்டுள்ள பொருள் வெளியே வந்து விட்டதாகவும், இனி எல்லாம் சரியாகிவிடும் என்றும் தைரியம் ஊட்டி அனுப்பி வைப்பார்.

கண்மணியைப் பார்த்துவிட்டு, வயிற்றுப் போக்கினால் அவதிப்படுகிறாள் என்பதை அறிந்து கொண்டு, உப்பு நீரை அவளுக்குக் கொடுத்துக் குடிக்கச் சொல்லி வாந்தியெடுக்கச் சொன்னாள். இந்த முறை பழைய தக்காளித் துண்டு, தொண்டையில் மாட்டியிருப்பதாகவும், அது வாந்தியில் வெளியேறிவிட்டதால் இனி வயிற்றுப் போக்கு சரியாகிவிடும் என்று கூறி ரூ. 150 தச்சனை பெற்றுக் கொள்கிறார்.

கண்மணியை வீட்டிற்கு அழைத்து வந்து, கடையில் பால் வாங்கிக் கொடுத்துப் படுக்க வைத்துவிட்டு, வீட்டு வேலையை லட்சுமி பார்க்கிறாள். திடீரென மீண்டும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு வெளியில் ஓடினாள் கண்மணி. இதன்பிறகு கண்மணி மேலும் பலவீனத்துடன் காணப்பட்டாள். அப்போது வேலையை முடித்துவிட்டு குடிபோதையில் வந்த தந்தை முனியப்பன், கண்மணி படுக்கையில் இருப்பதைப் பார்த்து விட்டு நிலைமையைப் புரிந்து கொண்டு மருந்துக் கடைக்குச் சென்று வயிற்றுப் போக்கு நிற்பதற்கான மாத்திரை கேட்டார்.

மருத்துவரின் மருந்துச் சீட்டு இல்லாமல், எந்த மருந்தையும் கொடுக்கக் கூடாது என சட்டம் இருந்தாலும், மருந்துக் கடைக்காரர் வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்தக் கூடிய ஒரு தடை செய்யப்பட்ட மருந்தை முனியப்பனுக்குக் கொடுத்தார். அந்த மருந்து தடை செய்யப்பட்ட மருந்து என்பதையும், அதை உட்கொண்ட சிறிது நேரத்திற்கு எல்லாம் காற்று கூட வெளியேறாத அளவுக்கு ஆசன வாயின் தசைகள் இறுகி, வயிற்றுப் போக்கு மட்டுமல்ல, மலம் கூட கழிக்க முடியாமல் போகும் என்பதும், கடைக்காரருக்குத் தெரியும் என்றாலும், மருந்து விற்பனையாக வேண்டும் என்பதற்காகவும், நோயாளிகள் எதிர்ப்பார்க்கும் தீர்வு உடனே கிடைக்க வேண்டும் என்பதாலும், அப்படிப்பட்ட வியாபார உத்திகளைக் கையாள வேண்டிய நிலையில் இருக்கிறார்.

மருந்து கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் வயிற்றுப் போக்கு உத்தமமாக நின்றுவிடுகிறது. இரண்டு நாட்களாக உணவு மற்றும் நீர் சரிவர கொடுக்கப்படாததால், கண்மணி பலவீனத்துடன் இருப்பதால், உடனடியாகத் தூங்கி விடுகிறாள். கண்மணியில் குடலில் ஏற்படும் அசுத்தக் காற்றும், நீரும் வெளியேற்றப்படாததால், வயிறு வீங்க ஆரம்பிப்பதோடு, நச்சுப் பொருட்களால் காய்ச்சலும் வர ஆரம்பிக்கிறது. நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் கண்மணி திடீரென எழுந்து, வயிறு வலி என்று கத்துகிறாள். பதறியடித்து எழும் லட்சுமி, கண்மணியை அனைத்துக் கொண்ட போது, அவள் உடம்பு கொதிக்கிறது. என்ன செய்வது என தெரியமால், வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் அலைந்து கொண்டிருக்கிறாள்.

கண்மணிக்கு என்ன ஆனது....


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com