Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஏப்ரல் 2008

அனைவருக்கும் மதிப்பளிக்கும் சமூகத்தை படைப்போம்: பேராசிரியர் பிரபாத் பட்நாயக்
நேர்காணல்: பி. வெங்கடேஷ், எஸ்.ஜி. ரமேஷ்பாபு

பிரபல பொருளாதார வல்லுநரும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியரும் தற்போது கேரள மாநில திட்டக் குழுவின் துணைத்-தலைவராக பணியாற்றி வருபவருமான பேரா. பிரபாத் பட்நாயக் அவர்கள் இளைஞர் முழக்கம் வாசகர்களுடன் தன் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறார். பொருளாதாரம், பட்ஜெட், சமூக மாற்றம் போன்ற பல அம்சங்களை நமக்கு மிகவும் எளிமையாக விவரிக்கிறார். இதோ உங்களுடன் பேராசிரியர் பிரபாத் பட்நாயக்...

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய அரசின் பட்ஜெட் பற்றி சொல்ல முடியுமா? விவசாயக் கடன் ரத்து என்ற ஒற்றைப் புள்ளியைச் சுற்றியே இந்த பட்ஜெட் பற்றிய விவாதங்கள் சுருங்கியுள்ளதாக தோன்றுகிறதே?

நீங்கள் சொல்வது சரிதான்! இந்த பட்ஜெட் one point budget. புதிதாக எதுவுமில்லாத பட்ஜெட். விவசாயிகள் நாட்டுடைமையாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள விவசாயக் கடனை தள்ளுபடி செய்வதாக கொள்கை அறிவிப்பை இந்த பட்ஜெட் செய்துள்ளது. இதை நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளும் கூட்டுறவு வங்கிகளும் தான் செய்யப் போகின்றன. அரசு இதற்காக உடனடியாக எந்த ஒதுக்கீட்டையும் செய்திடவில்லை. ஆகவே, இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு பட்ஜெட் வரை காத்திருக்க வேண்டிய தேவை ஏதும் இல்லை.

அதுவும் 2 ஹெக்டேர் நிலம் என்ற அளவு நிர்ணயிக்கப்பட்டிருப்பது, பாசன வசதியில்லாத விவசாயிகளுக்கு இந்த பலனை கிடைக்கச் செய்யாது. அதுமட்டுமல்ல, விதர்பா போன்ற விவசாய நெருக்கடி நிலவும் பகுதி விவசாயிகள் இந்த திட்டத்தால் எந்த பலனும் அடைய முடியாது. தனியார் கந்துவட்டிக்காரர்களின் கடன் வலையில் சிக்குண்டு தவிக்கும் விவசாயிகளுக்கு எந்த நிவாரணத்தையும் பட்ஜெட் அறிவிப்பு தரப்போவதில்லை. பட்ஜெட் செய்துள்ள கடன் தள்ளுபடி அறிவிப்பு விவசாய நெருக்கடியை தீர்க்கவல்ல முழுமையான நடவடிக்கை அல்ல. ஓரளவுக்கு மட்டுமே, அதுவும் தற்காலிக நிவாரணம் மட்டுமே இந்த அறிவிப்பால் விவசாயிகள் பெற முடியும்.

ஆனால் விவசாய நெருக்கடிக்கு வங்கிக் கடன் மட்டும் காரணமல்ல. விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணயம், விலை உத்திரவாதம், வர்த்தக கட்டமைப்பை உறுதி செய்வது, இடுபொருட்கள் (மின்சாரம், உரம் போன்றவை) கிடைத்திட வழி வகுப்பது என பல முனைகளில் விவசாய நெருக்கடியை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. நெருக்கடியை தீர்ப்பதற்கான விரிவான நடவடிக்கைகள் எதுவுமே பட்ஜெட்டில் இல்லை. கடன் தள்ளுபடி அறிவிப்பின் பலன் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்காது என்பதும், அது போதுமானதல்ல என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களாகும்.

இந்த பட்ஜெட்டில் ‘தேவைப் பெருக்க’ (demand stimulation) நடவடிக்கைகள் இருப்பதாக நிதியமைச்சர் சொல்கிறாரே?

மத்திய கூட்டு வரி (CENVAT) குறைப்பால் சந்தையில் தேவை பெருகும் என்று நிதியமைச்சர் சொல்வது முற்றிலும் தவறு. இதனால் நுகர்வோருக்கு நேரடியாக எந்த பலனும் கிடைக்காது. அதாவது பொருட்களின் சந்தை விலை இதனால் குறையாது. பெரு முதலாளிகளுக்கும் பெரும் நிறுவனங்களுக்கும் மட்டுமே வரி குறைப்பின் பலன் கிடைக்கும். ஆகவே, சந்தையில் புதிய தேவைகளை இது உருவாக்கும் என்ற நிதியமைச்சரின் வாதத்தை என்னால் ஏற்கமுடியவில்லை.

விவசாய நெருக்கடி, விவசாய நெருக்கடி என்று பலரும் கூக்குரல் எழுப்புகிறார்கள். மற்ற தொழில்களைப் போலவே விவசாயமும் ஒரு தொழில்தான். அதில் லாபம் வரும், நஷ்டமும் வரும். விவசாயிகள் பிரச்சனையை விவசாயிகள்தானே பார்த்துக் கொள்ள வேண்டும்?

அப்படி இல்லை நண்பர்களே. விவசாயம் ஒரு தொழில்தான். சந்தேகமில்லை. ஆனால் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நம் போன்ற நாட்டில், விவசாயம் மூன்று அம்சங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் உணவு பாதுகாப்பு, வேலை வாய்ப்பு மற்றும் உள்ளூர் சந்தை விஸ்தரிப்பு. விவசாயம் நன்றாக நடைபெற்று, விவசாயிக்கு லாபம் கிடைத்தால், அது தொடர்ச்சியான பல சாதகமான நன்மைகளை பொருளாதாரத்தில் ஏற்படுத்தும். உள்ளூர் பொருளாதாரத்திற்கு கூடுதல் நன்மை கிடைக்கும்.

இது பல கட்டங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும். விவசாயத்துறை தேக்கத்தை சந்திப்பதும், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை இருப்பதும் பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல, வேலையின்மைக்கும் பணவீக்கத்திற்கும் பாதிப்பானவையே ஆகும். ஆகவே விவசாய நெருக்கடி விவசாயிகளின் பிரச்சனை மட்டுமல்ல, ஒட்டு-மொத்த நாட்டின் பிரச்சனை என்று பார்க்க வேண்டும்.

நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதிக்கும் அதிகமாக இருக்கும் இளைஞர்களுக்கு இந்த பட்ஜெட் ஏதாவது நன்மை செய்யுமா?

இளைஞர்கள் நலனா? அதற்கு நேர் எதிராகத்தான் இந்த பட்ஜெட் இருக்கிறது. இந்த பட்ஜெட் புதிய தாராளமய கோட்பாட்டின் தொடர்ச்சியேயன்றி வேறல்ல. புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதுபற்றி இந்த பட்ஜெட் வாயே திறக்கவில்லை. கிராமப் பகுதிகளில் வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை நிறைவேற்றியிருந்தாலும், அரசு அதற்கு தேவையான அளவு நிதி ஒதுக்கிடவில்லை. எனவே, அச்சட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் போகும் அபாயம் உள்ளது.

இன்று உலகப் பொருளாதாரமே சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. இது இந்தியப் பொருளாதாரத்தையும், பாதிக்கவே செய்கிறது. அதன் தாக்கம் இந்திய இளைஞர்களையும் விட்டு வைக்கவில்லை. இன்று பூதாகரமான பிரச்சனையாக இருக்கும் பணவீக்கமும், இளைஞர்களை கடுமையாக பாதித்துள்ளது. ஊரக பகுதியில் அரசு முதலீடுகள் அதிகரிப்பதே கிராமப்பகுதிகளில் வேலை வாய்ப்பு பெருக்கத்திற்கு வழிகோலும். ஆனால், செலவினச் சுருக்கம் என்ற பெயரில் அரசின் செலவினங்களையும் முதலீடுகளையும் வெட்டிச்சுருக்கும் என்று பட்ஜெட் பிரகடம் செய்துள்ளது. ஆகவே, இந்த பட்ஜெட் வேலை வாய்ப்புக்களை அதிகரிக்காது, மாறாக வேலையின்மையை அதிகரிக்கும். எனவே இளைஞர் நலன்களை இந்த பட்ஜெட் புறக்கணித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

அரசாங்கத்தால் எல்லோருக்கும் வேலை வாய்ப்பை கொடுக்க முடியுமா? இது போகாத ஊருக்கு ஆகாத வழி சொல்லும் வேலை என்று சிலர் விமர்சிக்கிறார்களே?

சீர்திருத்த ஆதரவு பிரச்சாரத்தில் இந்த அம்சமும் உள்ளடக்கப்படுகிறது. வேலை கேட்பது நியாயமல்ல என்ற உணர்வை இளைஞர்களுக்கு ஏற்படுத்தும் நோக்கம் இதில் அடங்கியுள்ளது. ஆனால், எல்லோருக்கும் அரசு அலுவலகங்களில் வேலை கொடுப்பது என்று இதற்கு அர்த்தம் கொடுப்பது சரியல்ல. சந்தையில் வேலைக்கான தேவையை உருவாக்குவது அரசின் அடிப்படைக் கடமை என்பதே சரியான புரிதலாகும். பொருட்களும் சேவைகளும் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்திடவும், அதை அதிகரிக்கவும் அரசு கூடுதல் முதலீடுகளை செய்திட வேண்டும். உதாரணத்திற்கு, அரசு கொடுக்கும் சலுகைகளைக்கூட சொல்லலாம்.

ஒரு தனியார் நிறுவன உயரதிகாரி விடுமுறைக்கு வெளிநாடு செல்ல அந்நிறுவனம் பணம் கொடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதனால், என்ன நடக்கும். அவர் போகக் கூடிய விமான நிறுவனத்திற்கும், அவர் போகும் வெளிநாட்டிற்கும் வருமானம் கிடைக்கும். ஆனால், அந்த தொகையை அவர் இந்தியாவில் செலவிட்டால், வேலை வாய்ப்புக்கள் இங்கு பெருகும். வரி வருவாயை கொண்டு ஊரக வேலை உத்திரவாத திட்டத்திற்கு கூடுதல் நிதியை ஒதுக்கினால், உள்ளூரில் வேலை வாய்ப்பு பெருகும். எனவே, உள்ளூர் சந்தையில் தேவையை அதிகரிக்க அரசு திட்டவட்டமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அது அந்தந்த பகுதிகளிலேயே வேலை வாய்ப்பு பெருக்கத்திற்கு வழிவகுக்கும். இதனால் வேலை தேடி புலம் பெயர்வது பெருமளவு குறையும். எனவே, வேலை கிடைப்பதற்கான வாய்ப்பை அனைவருக்கும் அரசாங்கத்தால் ஏற்படுத்தித்தர முடியும். ஏற்படுத்த வேண்டும்.

ஊரக வேலை உறுதி சட்டத்தால் மக்களுக்கு பலன் கிடைக்கிறதா? எடுத்துக்காட்டாக ஏதாவது சொல்லமுடியுமா?

நிச்சயமாக. இது உள்ளூர் பொருளாதாரத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. கேரளத்தை என்னால் உதாரணமாக சொல்ல முடியும். ஒரு மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பணிக்காக இந்த வேலை உறுதி திட்ட நிதியை ஒதுக்கினோம். அந்த பணியில் சுமார் 4000 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ச்சியான வேலை கிடைக்கவே, தோசை மாவிற்கான தேவை அந்த தொழிலாளர்களுக்கு எழுந்தது. இத்தனை பேருக்கு தோசை மாவு தேவைப்பட்டதால், மாவு ஆட்டும் கல்லுக்கு தேவை எழுந்தது. அரிக்கேன் விளக்குக்கும் தேவை எழுந்தது. ஆகவே, அந்த தொழில்களில் ஈடுபட்டவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பும் ஒரு புதிய சந்தையும் கிடைத்தது. அரசு மேற்கொண்ட செலவினம், உள்ளூர் பொருளாதரத்திற்கு புத்துயிர் அளித்தது. ஆகவேதான், அரசின் செலவினங்களும் முதலீடுகளும் அதிகரிக்க வேண்டும் என்று சொல்கிறேன்.

இந்த திட்டத்தை முழு மனதோடு நிறைவேற்ற அரசு ஏன் தயங்குகிறது?

அரசின் தாராளமய மனோபாவமே காரணம். சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக கிராமப்புற மக்களுக்கு வேலை கொடுப்பதை அரசு உறுதிமொழியாக கொடுக்கும் வகையிலான சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. இடதுசாரி கட்சிகளுக்கு நாடு நன்றி சொல்ல வேண்டும். வேலை கேட்டு பதிவு செய்து கொள்பவர்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கொடுக்க வேண்டும். அப்படி தராவிட்டால், இழப்பீடு தர வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இந்த சட்டத்தின் அம்சங்களை மக்கள் இன்னமும் அறிந்து கொள்ளவில்லை.

வேலை என் உரிமை என்று கேட்கும் விழிப்புணர்வு மக்களிடம் வரவில்லை. இந்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். தொழிற்சங்கங்களும், சமூக அமைப்புகளும், DYFI போன்ற வெகுஜன இயக்கங்களும் இந்த விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்க களமிறங்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு வீடு கட்டித்தருவது கேரள அரசின் திட்டம். இதை கட்டும் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை வழங்க ஊரக வேலை உறுதி திட்ட நிதியை பயன்படுத்த மத்திய அரசை நாடினோம். ஆனால், மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது. இத்தகு அதிகார வர்க்க போக்கையும் களைய வேண்டியுள்ளது. சுருங்கச் சொன்னால், கிராமப்புற வேலை உறுதி சட்டத்தை நிறைவேற்ற மக்களை திரட்ட வேண்டும்.

மானியங்கள் கொடுப்பதால் பொருளாதாரம் கெடுகிறது என்ற அரசின் வாதம் குறித்து...?

மானியம் என்றால் என்ன? பலவீனமானவர்களுக்கு நீட்டப்படும் ஆதரவுக்கரம். அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கும், மிக சொற்ப வருவாய் ஈட்டுபவர்களுக்கும் ஒரு சமன்பாட்டை உருவாக்கும் முயற்சிதான் இது. வருவாய் பகிர்ந்தளிப்பு என்பதே மானியத்தின் நோக்கம். இன்று குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச ஊதியங்களுக்கிடையேயுள்ள இடைவெளி அதிகரித்து வருகிறது. சமூக கொந்தளிப்பு ஏற்படுவதை தடுக்க மானியம் என்ற வகையில் அரசின் தலையீடு அவசியமானது. பன்னாட்டு கம்பெனிகளுக்கும், பெரு நிறுவனங்களுக்கும் முதலாளிகளுக்கும் காட்டப்படும் சலுகையை ‘ஊக்கம்’ என்று அழைக்கிறார்கள். ஏழைகளுக்கு கொடுத்தால் ‘மானியம்’ என்கிறார்கள். நவீன தாராளவாத கோட்பாடுகள் மானியங்களை வெட்டிச் சுருக்குகின்றன. இது நியாயமல்ல.

இந்த ஏற்றதாழ்வு, சமூக படிமானங்களிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றதே?

உண்மைதான். நெருக்கடியில் சிக்கி மக்கள் பரிதவிக்கிறார்கள் என்றாலும், சாதிய படிமானங்களின் அடித்தட்டில் உள்ள தலித் மக்கள் மிகவும் கொடூரமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே சுரண்டல் சமூகத்தால் வஞ்சிக்கப்படும் தலித் மக்களும் இதர பலவீனமான சமூகப்பிரிவினரும் அரசின் நவீன தாராளமய கொள்கைகளால் மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையின்மை, விவசாய நெருக்கடி இவை எல்லாவற்றாலும் பாதிக்கப்படும் தலித் மக்கள் சமூக ஒடுக்குமுறைகளாலும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறார்கள். அதனால்தான் சொல்கிறேன், பொருளாதார தளத்தில் அசமத்துவம் அகல சமூக தளத்தில் விழிப்புணர்வும் போராட்டமும் தேவைப்படுகின்றன.

இன்று நில உடைமையை எடுத்துக் கொள்ளுங்கள். கிராமங்களில் நிலம் வைத்திருப்பவர்கள் ஆதிக்க சாதியினராக இருக்கிறார்கள். விவசாயக்கூலிகள் பெரும்பாலும் தலித் மக்களாக இருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையை நடத்த பொருளாதார ரீதியாக ஆதிக்க நில உடைமையாளர்களை தலித் மக்கள் சார்ந்திருக்கும் நிலை நீடிக்கிறது. இது சமூக ரீதியாக தலித் மக்கள் ஒடுக்கப்படுவதற்கு வழிவகுக்கிறது. எனவே, சமூக விடுதலைக்கான போராட்டமும் பொருளாதார மேம்பாட்டிற்கான போராட்டமும் இணைக்கப்பட வேண்டும்.

இந்த சமூக ஏற்றத்தாழ்வுகளை களையவும், பொருளாதார முன்னேற்றம் காணவும், பெண்களின் நில உரிமையை நிலைநாட்டவும் ஒட்டுமொத்தமாக சமூக மேம்பாட்டிற்கு தீவிர நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் பெரிதும் உதவும் என்பதுதான் மேற்கு வங்கம், கேரளம் மற்றும் திரிபுரா மாநில அனுபவம். ஆகவே, இந்தியச் சூழலில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டமும் சமகாலத்தில் நடத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது.

அந்நிய கடன்கள் நம்மை நிர்ப்பந்திப்பதாக பலரும் சொல்கிறார்கள். இடதுசாரி அரசு நடைபெறும் கேரள மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவர் நீங்கள். அந்நிய கடன்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

நவீன தாராளமய கோட்பாட்டின் விளைவாக, மாநில அரசின் வருவாய் பெரிதும் குறைந்துள்ளது. அதிகாரமும், நிதியாதாரமும் மத்திய அரசிடம் குவிந்துள்ளன. மக்கள் நல திட்டங்களுக்கான மத்திய ஒதுக்கீடு குறைவதால், மாநில அரசுகள் திட்டங்களை நிறைவேற்ற முடிவதில்லை. ஆனால், மாநில மக்களுக்கு அரசு கடமைப்பட்டுள்ளது. மத்திய அரசின் மீது பழியைப் போட்டுவிட்டு சும்மா இருக்க மாநில அரசால் முடியாது. மத்திய அரசோ நிதி தராது. இந்தச் சூழலில்தான் கடன் பெறுவது மாநில அரசுகள் தவிர்க்க முடியாததாக ஆகின்றன. உலக வங்கி போன்ற அமைப்புகள் கடனோடு பல நிபந்தனைகளை இணைக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், அரசியல் உறுதிமிக்க இடதுசாரி அரசுகள் இத்தகு நிபந்தனைகளை சிரமேற்கொண்டு ஏற்பதில்லை. முடிந்தவரை போராடுகின்றன. ஆனாலும், அந்நிய கடன்களை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது என்றே நான் கருதுகிறேன்.

நவீன தாராளமய கோட்பாட்டிற்கு மாற்று என்ன? மக்களுக்கான பட்ஜெட் என்றால் அது எப்படி இருக்க வேண்டும்?

நவீன தாராளமயத்திற்கு மாற்று வலுவான அரசு தலையீடே ஆகும். உள்ளூர் சந்தையை விரிவுபடுத்துவது மிகவும் முக்கியம். அதைச் செய்யும்போதுதான், மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். அது புதிய தொழில்களையும் வேலை வாய்ப்புக்களையும் உருவாக்கும். ஏற்றுமதிக்கான உற்பத்திக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மாற்றப்பட வேண்டும். உற்பத்தியின் பெரும்பகுதி உள்ளூர் சந்தைக்காகவே இருக்க வேண்டும். நம் தேவைக்குப் போக மீதமிருந்தால், அதை ஏற்றுமதி செய்து கொள்ளலாம். விவசாயத்தைப் பொறுத்தவரை கூட்டுப்பண்ணைகள் அமைக்கலாம். அது விவசாய வருவாயில் இருக்கும் இடைவெளியை பெரிதும் குறைக்கும்.

விவசாய விளை பொருட்களுக்கு உத்திரவாதமான, நியாயமான விலை கிடைக்கச் செய்ய வேண்டும். விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும். கல்வி, சுகாதாரம் போன்ற சமூக கட்டமைப்பில் அரசு அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும். சமூக நீதியை நிலைநாட்ட அரசு அதிக அளவில் தலையிட வேண்டும். நிலச்சீருத்தம் ஒரு திட்டவட்டமான நடவடிக்கையாகும்.

நிலத்தை ஏழை எளிய, சமூகத்தில் பலவீனமான மக்களுக்கு பிரித்து கொடுப்பது அவர்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றும், விவசாய உற்பத்தியை அதிகரிக்கும், சமூக நீதிக்கு வழிகோலும். எனவே நிலச்சீருத்தம் என்பது மிக மிக முக்கியமான நடவடிக்கையாக அமையும். இப்படி உள்ளூர் பொருளாதாரத்தில் தேவைகள் பெருகும்போது, அதற்கேற்ப உற்பத்தி அதிகரித்தாக வேண்டும். அது தொழில்மயமாக்கலுக்கு வழிகோலும். உற்பத்தி துறையில் தனியாரும் பங்கேற்க முடியும்.

பட்ஜெட் என்பது அரசின் வருமானத்துக்கும் செலவுகளுக்குமான திட்டம்தான். அதிக வருமானம் ஈட்டுபவர்களிடம் வரியை வசூலித்து, அதை சமூக மேம்பாட்டிற்காக முதலீடாகவும் செலவாகவும் மேற்கொள்வதே மக்கள் நல பட்ஜெட்டின் நோக்கமாக இருக்க முடியும். எனவே, அரசு பொருளாதாரத்திலும் சமூகத்திலும் தலையிடக்கூடாது என்ற நவீன தாராளமய கோட்பாட்டிற்கு மாற்று மக்களின் நலன்களை உத்திரவாதப்படுத்த அரசு தலையிட வேண்டும் என்பது மட்டுமல்ல, அரசு ஒரு உந்துசக்தியாக செயல்பட வேண்டும். இது தானாக நடக்காது. மாற்றம் என்பது மக்கள் போராடினால்தான் வரும்.

தமிழகத்தின் வாலிபர் சங்க தோழர்களுக்கும் இளைஞர் முழக்கம் வாசகர்களுக்கும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இந்த சமூகம் அனைவருக்கும் வாய்ப்பளிக்கக்கூடிய சமூகமாக மாற்றப்பட வேண்டும். இங்கு எல்லோருக்கும் மதிப்பும் மரியாதையும் கிடைக்க வேண்டும். மதச்சார்பின்மையும், சமத்துவமும், ஜனநாயகமும் தழைக்கும் சமூக அமைப்பு வேண்டும். அதற்கு லாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ சமூக அமைப்பு உதவாது. சோசலிச சமூகமே சமத்துவத்தை உத்திரவாதப்படுத்த முடியும். ஆனால் சோசலிசத்திற்கான லட்சியப் பயணம் நெடியது. ஆகவே மதச்சார்பின்மை, முற்போக்கு சிந்தனை, ஜனநாயகம் ஆகியவற்றின் அடிப்படையில் சமூக மாற்றத்திற்கான போராட்டத்தை நடத்த வேண்டியதே தற்போது நம் முன் உள்ள கடமை-யாகும். மாற்றத்திற்கான இந்த போராட்டத்தில் அணி அணியாய் இணையுங்கள்... மற்றவர்களையும் இணைத்திடுங்கள்...இப்போராட்டத்தின் வெற்றிக்கு உங்கள் பங்களிப்பை தந்திடுங்கள்... என்பதே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வேண்டுகோள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com