Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஏப்ரல் 2008

நார்மன் பெத்யூன் நினைவாக மா சே துங்


டாக்டர் நார்மன் பெத்யூன் கதை, ஒரு சர்வதேசப் போராளியின் உயிர்ப்பும், அர்ப்பணிப்பும்.
சிட்னி கார்ட்டன், டெட் ஆலென், தமிழில்: சொ.பிரபாகரன்
வெளியீடு: சவுத் விஷன்
விலை: 125

டிசம்பர் 21, 1939

தோழர் நார்மன் பெத்யூன் கனடிய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்; அவர் கனடிய மற்றும் ஐக்கிய அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சிகளால் சீனாவுக்கு அனுப்பப்பட்ட போது, அவருக்கு வயது கிட்டத்தட்ட ஐம்பதுதான் இருக்கும். ஜப்பானியர்களுக்கு எதிரான எதிர்ப்புப் போரில், சீனாவுக்கு உதவுவதற்காக ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து வந்திருந்தார். கடந்த வருடம் வசந்தத்தின் போது, அவர் யெனானுக்கு வந்தார்; உண்டை மலைப்பகுதியில் பணியாற்றச் சென்றார். அங்கு பணியாற்றும் போது வீரமரணம் அடைந்தார்.

சீன மக்களின் விடுதலையைத் தனது சொந்த விடுதலையாகக் கருதி, ஒரு வெளிநாட்டினர் தன்னலம் கருதாமல் உழைத்தார் எனில், அவர் எந்த மாதிரியான உணர்வு நிலையில் இருந்திருப்பார்? அவரது இந்த உண்மையான உணர்வுநிலைதான் உண்மையான சர்வதேசியமாகும், இதுதான் உண்மையான கம்யூனிச உணர்வாகும். இப்படிப் பட்டவர்களிடம் இருந்து தான், ஒவ்வொரு சீன கம்யூனிஸ்டுகளும் கற்றுக் கொள்ள வேண்டும்.

லெனினிசம் உலகப் புரட்சியைப் பற்றிப் பேசுகிறது. உலகப்புரட்சி வெற்றி பெற வேண்டுமானால், முதாளித்துவ நாடுகளில் உள்ள பாட்டாளி மக்கள், காலனிய மற்றும் அரைக்காலனிய நாடுகளில் உள்ள மக்களின் விடுதலைக்காக உதவவேண்டும் என்றும், அதுபோலவே காலனிய மற்றும் அரைக்காலனிய நாட்டில் உள்ள பாட்டாளி மக்கள், முதலாளித்துவ நாடுகளில் உள்ள பாட்டாளிகளுக்கு உதவ வேண்டும் என்றும் லெனினிசம் கூறுகிறது. தோழர் பெத்யூன் லெனினது இந்தத் தத்துவத்தை நடைமுறைப்படுத்தியவர்.

சீன கம்யூனிஸ்டுகளாகிய நாமும், இந்தத் தத்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். நாம் முதலாளித்துவ நாடுகளில் உள்ள அனைத்துப் பாட்டாளிகளையும் இணைக்க வேண்டும்; ஜப்பானிய, பிரித்தானிய, அமெரிக்க, ஜெர்மானிய, இத்தாலிய மற்றும் முதலாளித்துவ நாடுகளில் உள்ள பாட்டாளிகளும் இணைய வேண்டியது என்பது அவசியம். அதுதான் ஏகாதிபத்தியத்தைத் தூக்கி எறிவதற்கு உதவும் ஒரே வழியாகும். இதுதான் நமது தேசத்தையும், மக்களையும் விடுவிக்கும்; கூடவே உலகத்திலுள்ள மற்ற தேசத்தையும் மக்களையும் விடுவிக்கவும் உதவும். இப்படியான உணர்வுதான், நமது சர்வதேசியம். இந்தச் சர்வதேசியத்தைக் கொண்டுதான், நாம் குறுகிய தேசியவாதத்தையும், குறுகிய நாட்டுப்பற்றையும் எதிர்த்து வெற்றி பெற முடியும்.

தோழர் பெத்யூனின் ஆர்வமும், தன்னைப் பற்றி நினைக்காமல் மற்றவர்களிடம் அவர் காட்டும் முழுமையான ஈடுபாடும், அவர் பணிபுரியும்போது எடுத்துக்கொள்ளும் பொறுப்புணர்வும், மக்களிடமும் மற்றும் தோழர்களிடமும் அவர் காட்டும் பெரும் கனிவும் அனைவருக்கும் தெரியும். இதை ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டுகளும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். தனது வேலையில் பொறுப்பில்லாமலும், எளிதான வேலையை எடுத்துக் கொண்டு, கடினமான வேலைகளைப் புறம் தள்ளும் ஆட்கள் நம்மிடம் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவர்கள் சுமையான பணிகளை மற்றவர்களுக்குத் தள்ளி விட்டுவிட்டு, எளிதான வேலைகளைத் தாங்கள் செய்வதற்கு எடுத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் பிறரைக் காட்டிலும், தங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏதாவது சிறிய பங்களிப்பு செய்தாலும் போதும், அப்படியே பெருமையால் வீங்கிப் போவார்கள். மற்றவர்களுக்குத் தாங்கள் செய்த காரியம் தெரியாமல் போய் விடுமோ என்ற பயத்தில் தங்களைப் பற்றித் தாங்களே அவர்கள் பெருமையாகப் பேசிக்கொண்டு திரிவார்கள்.

அவர்கள் மற்றத் தோழர்களிடமும் மக்களிடமும் நிசிநேகபூர்வமாக இருக்க மாட்டார்கள்; சொல்லப் போனால் அவர்கள் அக்கறையற்றும், அலட்சியமாகவும் இருப்பார்கள். உண்மையான அர்த்தத்தில் பார்த்தால், அப்படிப்பட்டவர்கள் கம்யூனிஸ்டுகளாய்க் கணக்கில் நாம் எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால், போர்முனையில் இருந்து வந்த யாராய் இருந்தாலும், அவரிடம் பெத்யூனுடைய பெயரைச் சொன்னால் போதும், அவர் பெத்யூன் மேல் தனக்குள்ள மரியாதையை வெளிப்படுத்தாமல் இருந்ததே இல்லை எனலாம்.

அவரது ஆன்மபலத்தினால் அசையாதவர்கள் யாரும் இல்லை என்று கண்டிப்பாகக் கூறலாம். சான்ஸி, சாஹர், ஹோபெய் எல்லைப்பகுதியில், டாக்டர் பெத்யூனினால் குணமாக்கப்பட்ட எந்த இராணுவவீரனும் அல்லது சாதாரண மக்களும் அல்லது அவர் எப்படிப் பணிபுரிகிறார் என்பதைப் பார்த்த மற்றவர்களும், அவரால் கவர்ந்திழுக்கப்படாமல் இருந்ததில்லை. ஒவ்வொரு கம்யூனிஸ்டும் தோழர் பெத்யூனிடம் இருந்து உண்மையான கம்யூனிச உணர்வைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

தோழர் பெத்யூன் ஒரு மருத்துவர். மற்றவர்களைக் குணப்படுத்துவது தான் அவரது தொழில். அவர் தொடர்ந்து தனது திறனை மென்மேலும் வளர்த்துக் கொண்டே இருந்திருக்கிறார். அவரது திறன் எட்டாவது வழி இராணுவத்தின் மருத்துவச் சேவையில் (The Eighth route Army’s Medical Service) மிகவும் உயர்ந்ததாக இருந்திருக்கிறது. ஏதாவது ஒன்றை வித்தியாசமாகப் பார்த்தால் போதும், உடனே தனது வேலைமுறையையும் மாற்றிக் கொள்ள விரும்புபவர்களுக்கும், தொழில்நுட்பப் பணியினால் எந்தப் பயனும் இல்லை என்றும், அதற்குப் பிரகாசமான எதிர்காலம் இல்லை எனவும் அதை வெறுப்பவர்களுக்கும், அவரது உதாரண வாழ்க்கை ஒரு அருமையான பாடமாக இருக்கும்.

தோழர் பெத்யூனும் நானும் ஒருமுறை சந்தித்து இருக்கிறோம். அதற்குப் பிறகு அவர் எனக்குப் பல கடிதங்களை எழுதியுள்ளார். நான் மிகவும் வேலைப்பளுவுடன் இருந்ததால், அவருடைய ஒரு கடிதத்திற்கு மட்டுந்தான் நான் பதில் எழுதினேன்; அதுவுங்கூட அவரது கைகளுக்குக் கிடைத்ததா என்பது எனக்குத் தெரியாது. அவரது மரணத்தால் நான் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளேன். தற்போது நாம் அவரை நினைவுகூர்ந்து கொண்டுள்ளோம்; இதுவே நம் ஒவ்வொருவரையும் அவரது நினைவுகள் எவ்வளவு தூரத்திற்கு உந்தித்தள்ளியுள்ளது என்பதைக் காட்டுகிறது. எப்படி முற்றிலும் தன்னலமற்று இருப்பது என்ற வித்தையை, நாம் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

அந்தத் தன்னலமற்ற உணர்வு மட்டும் இருந்தால், நாம் அனைவரும் மக்களுக்கு மிகுந்த பயனுள்ளவர்களாய் இருப்போம். ஒரு மனிதனின் செயற்திறன் மகத்தானதாய் இருக்கலாம் அல்லது சின்னதாக இருக்கலாம். ஆனால், அவனுக்கு இந்தத் தன்னலமற்ற தன்மை மட்டும் இருந்தால், அவன் ஏற்கனவே சிறந்த கண்ணியமான மனநிலையையும், சுத்தத்தையும், மிகச்சிறந்த அறவியலையும், அனைத்துவித மோசமான சுயநலத்திற்கும் அப்பாற்பட்டவனாகவும் ஆகிவிடுகிறான்; அப்படிப்பட்டவர்கள் தான் மக்களிடம் பெரும் மதிப்பு மிக்கவர்களாய்த் திகழ்கிறார்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com