Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஏப்ரல் 2008

நாளைய வரலாற்றிற்கான சுயபரிசோதனை
எஸ்.கண்ணன்

கட்சி நடத்துவது அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கு என்ற புரிதல், நிலப்பிரபுத்துவம் மற்றும் முதலாளித்துவம் ஆகிய இரண்டு காலங்களிலும் இருக்கிறது. ஜனநாயகத் தன்மையில் தான், மாற்றங்கள் சில ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும் வாய்ப்புண்டு. கோவையில் மார்ச் 29 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெற்று முடிந்த மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு உட்கட்சி ஜனநாயகத்தின் அடையாளமாக விளங்குகிறது. கம்யூனிஸ்ட் கட்சியில் கூட இந்த வித்தியாசம் இல்லையென்றால் எப்படி? என்று சிலர் கேள்வி கேட்கலாம். அதே சிலர் கம்யூனிஸ்ட் கட்சி என்றாலே ஜனநாயகம் இல்லாத கட்சி என்று பேசுகிறார்கள், என்பதாலேயே ஒப்பிட்டுச் சொல்லவேண்டியிருக்கிறது. அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியம், எழாத கட்சியாக தனது மாநாட்டை நிறைவு செய்திருக்கிறது.

மாநாடு துவங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே, நிறைவேற்றப்பட்ட வேண்டிய அரசியல் நகல் தீர்மானம், கிளை வரை சுற்றுக்கு விடப்பட்டது. கிளைகளில் விவாதித்து, செய்யப்பட வேண்டிய திருத்தங்-களை எழுதி அனுப்பியிருந்தனர். அனுப்பப்பட்ட திருத்தங்கள் 4 ஆயிரத்து 61, ஆலோசனைகள் 713. இதுவரை நடைபெற்ற மாநாடுகளில், அதிகமான திருத்தங்கள் வரப்பெற்றது என்ற வரிசையில் கோவை மாநாடு இரண்டாம் இடத்தைப் பெறுகிறது. பெறப்பட்ட திருத்தங்களில் 868 ஏற்றுக் கொள்ளப்பட்டது. வழக்கம் போல், யார் யார், என்ன என்ன திருந்தங்களை அனுப்பினர் என்கிற விவரத்தை அச்சிட்டு சுற்றுக்கு விட்டனர். ஒரு கட்சி உறுப்பினருக்கு இதைவிட பெருமை வேறு என்ன இருக்க முடியும்? இதைவிட விமர்சனங்களுக்கு வேறு எந்த வகையில் இடமளிக்க முடியும்?

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், பெரும்பாலும் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டோரின் திருத்தங்களுடனேயே ஏற்றுக் கொள்ளப்பட்டது. கட்சியின் அடுத்த மூன்றாண்டுகளுக்கான கொள்கைகளைக் கட்டமைக்கும் பொறுப்புகளைக் கொண்டவர்களாக பிரதிநிதிகள் இருந்தது கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மட்டுமே உள்ள பெருமை. உட்கட்சி ஜனநாயகத்தின் அடையாளமாக இறுதியில் தேர்வு செய்யப்பட்ட மத்தியக் குழு தேர்தல் ஆகும்.

பொதுச் செயலாளர் முன்மொழிந்த, பின் மாற்று முன்மொழிவதற்காக சில நிமிடங்கள் கொடுக்கப்படுகிறது என்ற அறிவிப்பு வேறு எந்த ஜனநாயகத்திலும் பார்க்கவோ, கேட்கவோ இயலாதது. விடுதலைப் போர் இந்திய துணைக்கண்டம் முழுவதும் ஆவேசமாகிக் கொண்டிருந்த போது, பகத்சிங்கும் அவனுடைய தோழர்களும், யார் நாடாளுமன்றத்தில் குண்டு வீசுவது என ஒருவருக்கு ஒருவர் போட்டியிட்டனர் என்பது வரலாறு. அதுபோல், பொறுப்புகளுக்குத் தீவிர போட்டியில்லாமல், செயலுக்காகப் போட்டியிடும் குணாதிசயம், மாநாடு முழுவதும் விரவிக்கிடந்தது ஆச்சரியமல்ல, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு.

2005ஆம் ஆண்டு புதுதில்லியில் 18ஆவது மாநாடு முடிந்த பிறகு, 2008 மார்ச் வரை, கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 244. ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கும் ஒருமுறை ஒரு தோழர் கொல்லப்பட்டிருக்கிறார். இடதுமுன்னணி ஆட்சியில் உள்ள மேற்குவங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களில்தான், தீவிரவாதிகள், வலதுசாரிகள், பாசிஸ்டுகள் போன்றோரின் கொலைவெறிக்கு இறையானோர் அதிகம். ஆட்சிபீடத்தைக் கூட, அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கு பயன்படுத்தவில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.

2002இல் கோவையில் கட்சியின் 17ஆவது மாநில மாநாடு நடைபெற்றது. அப்போது மாநிலச் செயலாளர் பெறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட தோழர் என்.சங்கரய்யாவைப் பற்றி பத்திரிக்கைகள் இரயிலில் பாதி, ஜெயிலில் பாதி என்று குறிப்பிட்டிருந்தன. இந்த மாநாட்டிலும் அப்படி சிறை வாழ்க்கை அனுபவித்த, தலைவர்கள் ஏராளமாக இடம்பெற்றிருந்தனர். 500க்கும் அதிகமானோர் சிறை வாழ்க்கை அனுபவித்துள்ளனர். தலைமறைவாக வாழ்ந்து இயக்கப் பணி ஆற்றியுள்ளனர்.

நினைத்துப் பார்க்க முடியாத வரலாற்றுத் தடங்களைப் பதித்த வீரர்களைக் கொண்ட இயக்கம் என்பதை பறைசாற்றும் வகையில், சுதந்திரப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா மாநாட்டுக் கொடியேற்றினார். தெலுங்கானா போராட்ட வீராங்கனை தோழர் மல்லு ஸ்வராஜ்யம் வெண்மணி தியாகிகளின் அணையாப் பெரும் நெருப்பான ஜோதியைப் பெற்றுக் கொண்டு, தியாகிகள் ஸ்தூபியை ஏற்றிவைத்தார். தோழர் சுர்ஜித் மாநாட்டுக்கு வர இயலவில்லை. தோழர் ஜோதிபாசுவின் ஒளிப்பேழை ஒளிபரப்பப்பட்டது. இவையெல்லம் முதியோருக்கான மரியாதை என்பது மட்டுமல்ல, ஒரு நெடிய வரலாற்றின் வடுக்கள், நாளை தலைமுறைக்கான பாடங்கள் என்பதால்.

கல்வி, வேலை, விலை உயர்வைத் தடுக்கக் கோருதல், கிராமப்புற வேலை உறுதிச் சட்டம், நகர்புற வறுமை ஒழிப்புத் திட்டம், விவசாயப் பிரச்சனைகள், பொதுத் துறை நிறுவனங்களைப் பாதுகாத்தல், தலித் மற்றும் பழங்குடியினரின் உரிமைகள், சிறுபான்மையோர் நலன், இந்துத்துவாவை எதிர்த்தல், மாநில அரசுகளுக்கான உரிமைகளை அதிகரித்தல், இலங்கைப் பிரச்சனை, பாலஸ்தீனம் குறித்து உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சேதுக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படுதல், நோய்த் தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்களை மூடுதலை எதிர்த்து தீர்மானங்களைப் பிரதிநிதிகள் கொடுத்துள்ளவற்றை ஏற்றுக் கொண்டனர். உலகின் அனைத்துப் பிரச்சனைகளையும் ஒருசேர விவாதித்து, முடிவு எடுக்கும் திறன்கொண்ட ஊழியர்களைக் கொண்ட இயக்கமாகத் தொடர்ந்து செயல்படுவதை இம்மாநாட்டிலும் மார்க்சிஸ்ட் கட்சி முன்நிறுத்திக் கொண்டது.

அரசியல் நகல் தீர்மானத்தின் மீது 78 தோழர்கள், ஸ்தாபன அறிக்கையின் மீது 38 தோழர்கள், இடதுமுன்னணி அரசுகளின் கொள்கை குறித்து 32 தோழர்கள் விவாதித்தனர். 6 நாட்கள் மாநாட்டில் தலைவர்கள் ஆற்றிய உரையின் அளவும், காலத்தின் அளவும் குறைவானதுதான். பிரதிநிதிகள் ஆற்றிய உரையை தலைவர்கள் செவிகொடுத்துக் கேட்ட நேரமே அதிகம். ஒவ்வொரு அறிக்கையையும் தொகுத்து ஏற்றுக் கொண்டது மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாததற்கான காரணங்களைத் தெளிவுபடுத்திய பின்னரே, ஓட்டெடுப்பு மூலம் அறிக்கை நிறைவு செய்யப்படுகிறது. இதற்கு அர்த்தம், ஜனநாயகம் மட்டுமல்ல, அறிக்கையை முழுமைப்படுத்துவதற்கான பங்கேற்பு என்பதே சரியானதாகும். அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயக மத்தியத்துவம் என்று குறிப்பிடுகிறது.

அரங்கத்திற்குள் நடந்த விவாதங்களின் நிறை, குறைகளை மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போது தெளிவுபடுத்தியிருந்தனர். அமெரிக்கவுடனான அணு ஒப்பந்தம் குறித்து, இடது முன்னணி ஆட்சியில் உள்ள மாநிலங்களின் கொள்கை குறித்து, ஸ்தாபனம் குறித்து என சீத்தாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், ராமச்சந்தின் பிள்ளை, புத்ததேவ் பட்டாச்சரியா ஆகியோர் 4 தினங்கள் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர்.

மாநாட்டில் 33 அமைச்சர்கள், 54 எம்.எல்.ஏக்கள், 40 எம்.பிக்கள் உள்ளிட்ட 182 பேர் (787 க்கு) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். ஆளோடு ஆளாக, பத்தோடு பதினொன்றாகத் தான் கலந்து கொண்டனர். பிரதிநிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் தன்னுடைய பேட்ஜை மறந்துவிட்டு, அரங்க வாசல்வரை வந்துவிட்டார். வாயிலில் நின்று பாதுகாப்புப் பணியை மேற்பார்வையிட்ட தொண்டர், தோழர் உங்க பேட்ஜ் எங்கே என்றபோது, வேறு வியாக்கியானம் எதுவும் செய்யாமல், நேரே திரும்பிச் சென்று எடுத்துக் கொண்டு வந்தார்.

சுமார் 6 கிலோ மீட்டர் அலைச்சல். வேறு ஏதாவது காரணம் சொல்லி, சிறப்பு அனுமதிக்கு அவர் முயற்சிக்கவில்லை என்பதிலிருந்தே, அதிகாரத்தை நிலை நிறுத்தாத கட்சியினர் என அடிக்கடி குறிப்பிட வேண்டியிருக்கிறது. சுமார் ஒரு மாநிலத்தின் கேபினட் அளவிலான எண்ணிக்கையில் அமைச்சர்கள் இருந்த போதிலும் கூட, மாநில அரசின் நிர்வாகத்திற்கோ, தமிழகத்தின் நிர்வாக ஏற்பாடுகளுக்கோ எந்த சிரமமும் கொடுக்கப்படவில்லை. சலுகைகளும் கொடுக்கப்படவில்லை. மாநாட்டை கட்சித் தலைமை நடத்தியதே ஒழிய அரசுப் பொறுப்பில் உள்ளவர்கள் நடத்தவில்லை. கட்சித் தலைமைக்கும், அரசுப் பொறுப்புக்குமான இடைவெளியைத் தெளிவாகப் பார்க்கவும், உணரவும் முடிந்தது.

மாநாடு 11 பெண்கள் உட்பட 86 பேர் கொண்ட மத்தியக் குழுவைத் தேர்வு செய்தது. அதில் 22 பேர் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள். இதுவும் கட்சி மற்றும் அரசு நிர்வாகத்திற்கான இடை-வெளியை உணரச் செய்வதற்கான அடையாளமே ஆகும். ஆகவேதான், உழைக்கும் மக்களுக்கான உரிமைப் போரில் மார்க்சிஸ்ட் கட்சியால் தனித்தன்மையுடன் செயலாற்ற முடிகிறது. பங்கேற்ற பிரதிநிதிகளில் உழைக்கும் வர்க்கம் 106 பேர், விவசாயத் தொழிலாளி 29, ஏழை விவசாயி 90, நடுத்தர விவசாயி 149 என்று உழைக்கும் மக்களின் பிரதிநிதியாகவே மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இந்த விகிதாச்சாரமே இந்தியாவின் விகிதாச்சாரமாகும். எனவே, நாளைய இந்தியாவை மாற்றிக்காட்டும் போருக்கான ஆயுதத்தை மார்க்சிஸ்ட் கட்சி முன்னிலும் கூர்மையாக்கிக் கொள்ள கோவையைப் பயன்படுத்திக் கொண்டது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com