Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
செப்டம்பர் 2008
அத்தியாயம் 6

மதக் கலவரங்கள்


நுட்பமான மதவாத அரசியலின் மேலோட்டமான வெளிப்பாடுகள் தான் மதக் கலவரங்கள். அது மற்ற சமூகங்களை வெறுப்பின் சின்னங்களாக சித்தரித்து வன்முறையை தொடுக்கிறது. மத நடைமுறைகளின் வேற்றுமைகளை ஒப்பிட்டு, அதனை வன்முறையின் தொடக்கப் புள்ளியாக மதவாதிகள் உருமாற்றுகிறார்கள். இந்த அடிப்படையில் தான் தெருக்களில் வன்மம் பாய்ந்து ஓடுகிறது. மக்கள் மனங்களில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மனசாட்சிகள், இந்த கலவரங்களை தக்கவைக்க உதவுகிறது. மத அடிப்படையிலான பல குழுக்கள் உருவாக்கப்பட்டு, அதனை அரசியல் மற்றும் கலவரங்களுக்குப் பயன்படுத்துவதும் இங்கு திட்டமிட்டு நடத்தப்படும் விஷமத்தனமே.

குழு அடையாளம்

மிகப்பரவலாக மக்களிடையே பரவியுள்ள இந்த குழு அடையாளம், பிற சமூகங்கள் பற்றிய ஒற்றை சித்திரத்தையே அளிக்கிறது. பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் மற்றும் முஸ்லிம், கிறித்துவர்கள், வங்காளதேசத்தில் உள்ள இந்துக்கள், இந்தியாவில் உள்ள கிறித்துவர்கள் என அனைவர் குறித்தும் சீரான வெறுப்பின் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. கடந்த பல பத்தாண்டுகளாக நடந்து வரும் இந்த திட்டம், அண்மையில் அதன் உச்சத்தை அடைந்துள்ளது. வட்டார வாரியாக மிக நுணுக்கமான அளவில் சமூக எந்திரங்கள், சமூக மனம், சமூக வரலாறு, சமூக பாங்குகள் என பலவற்றின் ஊடே அது இயங்குகிறது. இதன் இயக்கத்தை விவரிப்பது மிகவும் சிக்கலானது.

இந்தியாவில் நடைபெறும் மதக்கலவரங்கள்

இந்திய சமூகத்தின் மீது ஆறா ரணமாக மதக்கலவரங்கள் பதிந்துள்ளன. சுதந்திரத்திற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் இந்துக்களும் முஸ்லிம்களும் போட்டிப் போட்டு பல முறை வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். ஆங்கிலேய காவல் துறை வந்து தான் சமரசம் செய்து அமைதியை நிலைநாட்டும். ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு இந்த கலவரங்களின் தன்மை வெகுவாக மாறியுள்ளது. இப்பொழுது கலவரங்களில் பெரும்பாலும் முஸ்லிம்கள் மட்டுமே இறந்து போகிறார்கள். முஸ்லிம்ளின் சொத்துக்கள் தான் அதிகளவில் சூறையாடப்படுகின்றன. காவல்துறை எப்பொழுதுமே பெரும்பான்மையினரின் சார்பாகவே இயங்குகிறது. முதலில் ஏழை முஸ்லிம்கள் மட்டுமே தாக்கப்பட்டனர். ஆனால் அண்மைக்காலமாக நடுத்தர, மேட்டுக்குடி முஸ்லிம்களின் மீதும் தாக்குதல் நடைபெறுகின்றது.

பிரிவினைக்குப் பிறகு நடைபெற்ற கலவரங்களுக்குப் பின் பெரும் அமைதி 50 களிலிருந்து இங்கு நிலவியது. ஆனால் அந்த அமைதியை 1962, 1964இல் நடந்த ஜபல்பூர் கலவரங்கள் கலைத்தன. அதைத் தொடர்ந்து ஜாம்ஷெட்பூர், ரூர்கேலாவில் கலவரங்கள் நடந்தது. 60 களில் நடந்த ரத்தக் களரிகளில், ராஞ்சி -பீகார் (1962) அகமதாபாத் -குஜராத் (1969) தான் மிகப்பெரும் சம்பவங்கள். 70களிலும் கலவரங்கள் தொடர்ந்தன. 1976இல் காவல் துறையின் தூண்டுதலின் பெயரில் துர்கமான் கேட் படுகொலைகள் நடந்தன. மொராதாபாத் (1980), நெல்லி, நவாகாவ்ன் -(அசாம்(1983), பிவாண்டி (1984) மற்றும் மீரட் (1987) ஆகிய கலவரங்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாயின.

ராம ஜென்மபூமி பிரச்சாரப் பயணத்தைத் தொடர்ந்து நடந்த ரத்தக் களரியில், 1989இல் மட்டும் 1000 பேர் கொல்லப்பட்டனர். ஏற்கனவே 1980களில் நடந்த பகல்பூர், அய்தராபாத், அலிகார் கலவரங்கள் தான் உச்சமாகக் கருதப்பட்டன. ஆனால் அத்வானியின் ரதயாத்திரை மற்றும் பாபர் மசூதி இடிப்புக்குப் பிந்தைய கலவரங்கள் தான் நாடு சந்தித்திராத அவலங்கள். மசூதி இடிப்புக்குப் பின் மும்பை, சூரத், போபால் நகரங்கள் கலவர பூமிகளாக மாறின. 1960 -1995 வரை கலவரங்கள் ஏறுமுகம் கண்டன. உத்திரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பீகார், மத்தியப்பிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தான் அதிகப்படியான கலவரங்கள் நடந்தன. இதுவரை நகரங்களில் மட்டுமே நடைபெற்ற கலவரங்கள் மெல்ல சிறு நகரங்கள், கிராமங்கள் நோக்கியும் இடம் பெயர்ந்தன.

கலவரத்துக்கு முந்தைய கும்பல் மனநிலை

மதவாத சமூக வெளியில் தான் கும்பல் மனநிலை கட்டமைக்கப்படுகிறது. இந்த இழிவில் தீவிரத்துடன் முதலில் ஈடுபடுவது இந்து மதவாதிகளே. அதனை முஸ்லிம் மதவாதிகள் தொடர்வார்கள். எதிரிகள் நம்மை எந்த நேரமும் தாக்கக்கூடும் என்கிற அச்ச உணர்வை விதைப்பது, அதன் பிறகு வன்முறை மனநிலையை கும்பலில் கட்டமைப்பது என்பதுதான் நடைமுறை. நம் கோயில் தாக்கப்படவிருக்கிறது, மசூதியில் ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளன என மதவாதிகள் அடிக்கடி வதந்திகளை பரப்புகின்றனர்.

எப்பொழுதுமே பெரும்பான்மை சமூகத்துக்குப் பல விதங்களிலும் அரசும், காவல் துறையும் பக்கபலமாக செயல்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் காவல் துறையும் இணைந்து வன்முறையில் ஈடுபடுகிறது. மதப்பகைமையை, மதவாத ஊடகங்கள்தான் -பெரும் படுகொலைகள் அளவுக்கு இட்டுச் செல்கின்றன. அரசு எந்திரங்களில் இந்துத்துவ உறுப்பினர்கள் ஊடுறுவியுள்ளதால், அவர்களின் நிலை பலம் கொண்டதாக உள்ளது.
கும்பல் வன்முறை மனநிலையை தகவமைப்பதில் வன்முறையைத் தூண்டும் பேச்சுக்கள், எழுத்துக்கள் பெரும் பங்காற்றுகின்றன. இங்கிருந்து கிளம்பும் வதந்திகள் கும்பல் மனநிலையின் உந்து விசையாக மாறுகிறது.

பசுக்கள் வெட்டப்படுகின்றன, இந்து பெண்களின் மார்பு அறுக்கப்பட்டது, கோயில் தாக்கப்படவிருக்கிறது, மசூதியில் ஆயுதங்கள் குவிக்கப்பட்டு தாக்குதல் திட்டமிடப்படுகிறது, பாலில் விஷம் கலக்கப்பட்டுள்ளது, பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடற்கரையில் ஆயுதங்களுடன் தரை இறங்கியுள்ளனர் என்பது சில பொது வதந்திகள். முதலில் ஊர்வலங்கள், கீழான முழக்கங்கள், மசூதி முன்பு பாடல்கள், தாக்குதல்கள், பெண் சீண்டல்கள் என நிகழ்வுகள் தொடங்கும். அண்மைக் காலமாக சர்வதேச தீவிரவாதத்துடன் உள்ளூர் முஸ்லிம்களை தொடர்புபடுத்துவதும் நடைபெற்று வருகிறது. ஒரு சமூகத்தைச் சேர்ந்த சில தனி நபர்களின் குற்றச் செயல்பாட்டின் தன்மை, அச்சமூகத்தின் தன்மையாக மாற்றப்படுகிறது.

கலவரங்களை யார் தொடங்குகிறார்கள்?

யார் கலவரங்களை தொடங்குகிறார்கள் என்பதை அய்ந்து விசாரணைக் குழுக்களின் தகவல்களின் அடிப்படையில், தனது கட்டுரையில் விளக்குகிறார் தீஸ்தா செடல்வாட் :

1) அகமதாபாத் 1969 : “ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், ஜன்சங்காரர்கள் இந்த கலவரத்தைத் தொடங்கினார்கள் என்கிற உண்மையை கமிஷன் அறிக்கையில் இடம்பெறாமல் மூடிமறைக்க, பல வெளிப்படையான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டார்கள்'' (நீதிபதி ஜக்மோகன் ரெட்டி அறிக்கையிலிருந்து).

2) பீவாண்டி, ஜல்காவ்ன் 1970 : தனது உயர் அதிகாரிக்கு அளித்த அறிக்கையில் "தானே' மாவட்ட காவல் துறை எஸ்.பி. இவ்வாறு கூறுகிறார் : “ஆர்.எஸ்.எஸ். இந்து விஷமிகளில் ஒரு பகுதியினர் தான் சில சேட்டைகளின் மூலம் பதற்றத்தை தூண்டினார்கள். சிவாஜிக்கு மரியாதை செலுத்தும் ஊர்வலத்தில் பங்கு பெற்ற அவர்களது நோக்கம், அத்தகையதாக இல்லை. தங்களின் வெறியை வெளிப்படுத்த முஸ்லிம்களை ஆத்திரமூட்டுவது போல் அவர்களது செயல்கள் இருந்தன. அவதூறான முழக்கங்களை எழுப்பிக் கொண்டே மோதி மசூதி, பங்காட் கலீ ஹைதர் மசூதி என பல இடங்களில் அவர்கள் கல் எறிந்தார்கள். காவல் துறையும் அமைதியாக சென்றது'' (நீதிபதி டி.பி.மடோன் கமிஷன் அறிக்கை).

3) தெல்லிச்சேரி (கேரளா) 1971 : தெல்லிச்சேரியில் இந்துக்களும் முஸ்லிம்களும் பல நூற்றாண்டுகளாக சகோதரர்களாக இணக்கத்துடன் வாழ்ந்து வந்தார்கள். அங்கு ஆர்.எஸ்.எஸ்., ஜன் சங் ஆகிய அமைப்புகள் தங்கள் நடவடிக்கைகளை தொடங்கிய பிறகு தான் தெல்லிச் சேரியின் சூழல் மாறியது. தொடர்ந்து முஸ்லிம் விரோத கருத்துக்களை இவர்கள் பிரச்சாரம் செய்ததின் விளைவாக, முஸ்லிம்கள் தாங்கள் சார்ந்த மதவாத அமைப்புகளை நடத்தத் தொடங்கினர். முஸ்லிம் லீக் களம் கண்டது..... இந்த மதவாத பதற்றங்கள் தான் அங்கு நடந்த கலவரத்தின் பின்னணியாக அமைந்தது' (நீதிபதி ஜோசப் விதையலில் கமிஷன் அறிக்கையிலிருந்து).

4) ஜெம்ஷெட்பூர் 1979 : அங்கு நடைபெறவிருந்த தேர்தலுக்கு முன்பு உளவுத் துறை மதவாத பதற்றம் குறித்து தயாரித்த அறிக்கையில், அந்தப் பகுதியில் நடைபெறவிருந்த ஆர்.எஸ்.எஸ்.இன் வட்டார மாநாடு குறித்து சிறப்பு கவனத்துடன் எச்சரிக்கப்பட்டிருந்தது. அதில் ஆர்.எஸ்.எஸ் இன் "சர்சங்சலக்' கலந்து கொண்டார் (மார்ச் 31, ஏப்ரல் 1, 1979). ஊர்வலத்தின் பாதை குறித்த சர்ச்சை தொடர்ந்தது. சம்யுக்த பஜ்ரங் பலி அகாரா சமிதியின் உறுப்பினர்களாக தங்களை கூறிக்கொண்ட சில நபர்கள், மதவாத பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் துண்டறிக்கைகளை அங்கு விநியோகித்தனர். அவர்கள் ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்புடையவர்கள்; அதிகாரிகள் ஊர்வலப்பாதைக்கு அனுமதி மறுத்த போது அதனை மீறப் போவதாக அவர்கள் மிரட்டினார்கள்.

5) கன்னியாகுமரி கலவரம் (1982) : கிறித்துவர்கள் இந்த நாட்டுக்கு விசுவாசமான குடிமக்கள் அல்லர் என பெரும்பான்மை சமூகத்திடம் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் செய்தது. கிறித்துவர்களின் மக்கள் தொகை ஏறுமுகத்தில் இருப்பதாக பிரச்சாரம் செய்யப்பட்டது. வாள், கோடரி போன்ற ஆயுதப் பயிற்சியை இந்து இளைஞர்களுக்கு வழங்குவது என இந்து மதவெறி இயக்கங்கள் அங்குள்ள சூழ்நிலையை சீர்குலைத்து, மதக்கலவரங்களை ஏற்படுத்தின (நீதிபதி வேணுகோபால் கமிஷன் அறிக்கையிலிருந்து).

காவல் துறை அதிகாரியின் ஆய்வு

மதவாத கலவரங்கள் குறித்த ஆய்வினை தேசிய காவல்துறை அகாதமியின் ஆய்வாளர் வி.என்.ராய் மேற்கொண்டார். 1968 மற்றும் 1980 கலவரங்கள் குறித்த தகவல்களை ஆராய்ந்து, அந்த கலவரங்களை முஸ்லிம்கள் தொடங்கவில்லை என்கிற உண்மையை அவர் நிறுவினார். அதுவரை முஸ்லிம்கள் தான் தூண்டியதாகக் கருதப்பட்டது. அரசுப்புள்ளி விவரங்களின் படி, 3,949 சம்பவங்களில் 2,289 பேர் பலியானார்கள். அதில் 530 பேர் இந்துக்கள்; 1,598 பேர் முஸ்லிம்கள். இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் வெறும் 12 சதவிகிதம் தான் உள்ளனர். ஆனால் கலவரங்களில் 65 சதவிகிதம் முஸ்லிம்கள் பலியாகிறார்கள்.

காவல் துறை முற்றாக இந்துக்களுக்கு சாதகமான நிலை எடுத்து கலவர காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகிறது. எப்பொழுதுமே மதக்கலவரத்தின் வேலைகள் நீண்ட காலமாக நடைபெறும். ஆனால் ஒரு சிறிய விஷயம் தான் கலவரத்தை தொடங்கி வைக்கும். பல சந்தர்ப்பங்களில் வியாபார, நிலத் தகராறுகளுக்கு கலவரங்களின் போது தீர்வு காணப்படும். அச்சமடைந்த சமூகம் தான் கலவரத்தின் முதல் அடியை எடுத்து வைக்கும். ராய் மேலும் கூறுகிறார் : “பல கலவரங்களில் எறியப்பட்ட முதல் கல்லின் விதத்தை ஆராய்ந்து பார்த்தால், அதை செய்தவர்கள் வெளியிலிருந்து பணியில் அமர்த்தப்பட்ட குழுக்கள் போலவே உள்ளது. இந்த சம்பவத்தை முஸ்லிம்கள் செய்ததாக வதந்தி கிளப்பப்படுகிறது. வலுவற்றவனை பலசாலி ஒரு மூலையில் தள்ளும்போது, அவன் வேறு வழி இல்லாமல் கையை உயர்த்துகிறான். உடனே அதைப் பெரும் தாக்குதல் போல் ஊரெல்லாம் பிரச்சாரம் செய்கிறார்கள்.நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com