Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu width=
 width=செப்டம்பர் 2007

‘விதை'யின் பிடியில் உலகம்

இனி பேரழிவு ஆயுதங்கள் தேவை இல்லை; விதைகளே போதுமானவை!
அ. முத்துக்கிருஷ்ணன்

Seeds மகாராட்டிர மாநிலம் யோவத்மல் மாவட்டத்தின் சீங்காபூர் கிராமத்திலிருந்து கடந்த ஆண்டு, இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு மிகவும் விசித்திரமான ஓர் அழைப்பு அனுப்பப்பட்டது. இவர்கள் இருவரையும் அந்த கிராமத்தில் நடைபெற இருந்த விழாவை தொடங்கி வைக்க வருமாறு, அனைத்து கிராம மக்களும் ஒன்றிணைந்து வேண்டுகோள் விடுத்திருந்தனர். விவசாயம் பொய்த்துப் போன சூழலில், கடன்களைக் கட்ட இயலாமல், தங்கள் பசியைப் போக்க கதியற்று அந்த கிராமத்தினர் அனைவரும் தங்களுடைய சிறுநீரகத்தை விற்க முன்வந்தனர்.

அந்த விழாவை தொடங்கி வைக்கத்தான் அப்துல் கலாம் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக அவர்கள் அழைத்திருந்தனர். அந்த அழைப்பு புது தில்லியை சென்றடைந்த நேரம், அடுத்த ஆண்டு கொண்டாடவிருக்கும் 60ஆவது சுதந்திரநாள் கொண்டாட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பிரதமர் அலுவலகத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது.

மகாராட்டிர மாநிலம் வார்தா மாவட்டத்து டோர்லி கிராமத்தின் மரங்களிலும், ஊர் எல்லையிலும் பரவலாக அறிவிப்புகள் : ‘கிராமம் விற்பனைக்கு உள்ளது’. அடுத்த கிரõமமான ஷவானி ரேகிலாப்பூரில் மொத்த கிராமமும் தங்களை கூட்டுத் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை அனுப்பியிருந்தது. பஞ்சாபில் உள்ள மல்சீங்வாலா கிராமத்தினர் வங்கிகளுக்கு அளிக்க வேண்டிய மொத்த தொகை ரூபாய் அய்ந்து கோடி. கந்து வட்டிக்காரர்களுக்கு அளிக்க வேண்டிய ரூபாய் 2.5 கோடி. இதைக் கட்ட முடியாத அந்த பஞ்சாயத்து ஒன்று கூடி, கிராமத்தின் மொத்த 1800 ஏக்கரையும் ஏலம் மூலம் விற்க ஆயத்தமானது.

கர்நாடகாவுக்கு அருகில் உள்ள ஆந்திரத்தின் வழியில் தற்கொலை விகிதத்தில் உயர்வு காணப்படுகிறது. இரு மாநிலங்களும் கணினி மென்பொருள் தொழில் நோக்கி சாய்வு கண்டிருப்பதால், அவற்றின் கண்களுக்கு இந்த சாவுகள் ஒரு பொருட்டே அல்ல. நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 65 சதவிகிதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள்தான் இந்த நூறு கோடி மக்களின் பசியைப் போக்குபவர்கள். பசியைப் போக்கும் நடவடிக்கையில் கடந்த பத்தாண்டுகளில் 1,50,000 விவசாயிகள் பூச்சிக் கொல்லி அருந்தி தங்களை மாய்த்துக் கொண்டனர். இருப்பினும் எந்தப் பாடமும் கற்காத நம் அரசுகள், பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தொண்டாற்றுவதில் அதிதீவிரமாக செயல்படுகின்றன.

1985 இல் கிடைத்த விலையில் பெரிய மாற்றம் எதுவும் விளைபொருட்களுக்கு கிடைத்திடவில்லை. ஆனால், இடு பொருட்களின் விலை 34 மடங்கு உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் அய்ரோப்பாவில் விவசாயிகளுக்கு அந்த அரசுகள் மானியத்தை வழங்கியிருக்கின்றன. ஆனால், அந்த நாடுகளிலிருந்து இந்தியா நோக்கி வரும் பரிந்துரைகள் ‘மானியங்கள் கூடாது' என உத்தரவிடுகின்றன. பசுமைப் புரட்சியின் பெயரால் ரசாயனக் கழிவுகளை கடந்த 40 ஆண்டுகளாக நம் பூமியில் கொட்டி, மொத்த நிலத்தின் வளத்தையும் பாழடித்து விட்டார்கள். நுண்ணுயிர்கள் எல்லாம் அழிந்து, மண் செத்துக் கிடக்கிறது. செத்த மண்ணுடன் உரையாடும் விவசாயியும் சாகிறான்.

1986 இல் ‘பம்பர்ஸ் சட்டத்திருத்தம்' (Bumper’s Amendment) அமெரிக்காவில் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின்படி, உலக அளவில் நடக்கும் விவசாயம் தொடர்புடைய ஆய்வுகளுக்கு, அது வரையிலும் வழங்கப்பட்ட அமெரிக்க நிதியுதவியை நிறுத்த வழிவகுக்கும் சட்டம் அது. விவசாய நூல்களைப் பதிப்பித்தல், மாநாடுகள் நடத்துதல் என ஏராளமான நடவடிக்கைகள் உலகெங்கிலும் பாதி வழியில் திசை அறியாது நின்றன. இவை அமெரிக்க உயிரியல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியைத் தடுத்திடும் என்பது அவர்களது வாதம். இந்த சட்டத்திற்குப் பிறகு, அமெரிக்காவை சேர்ந்த 20 நிறுவனங்கள் மட்டுமே உலகளவில் இத்துறையில் கோலோச்ச வழி செய்தது.

உலகின் மூன்றில் ஒரு பங்கு கச்சா எண்ணெய்யை தன் வசப்படுத்திய பிறகு, தற்பொழுது அமெரிக்காவின் மொத்த பார்வையும் உணவு சந்தையை நோக்கி திசை திரும்பி உள்ளது. உலகத்தின் பசியைப் போக்க கிளம்பிய புதிய தேவதூதராக காட்சியளிக்கிறார் ஜார்ஜ் புஷ். பசியைப் போக்கும் அருமருந்துடன் அவர் உலகை வலம் வரத் தொடங்கி விட்டார். அவரது கைகளில் மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகள் உள்ளன. இந்த ‘விதை'களில்தான் உலகின் பசியை, வறுமையைப் போக்கும் மந்திரம் பொதிந்துள்ளதாக அவர் கூறுகிறார்.

ஆயுத நிறுவனங்களைத் தொடர்ந்து ஜார்ஜ் புஷ் அலுவலகத்தில் அதிக செல்வாக்கு செலுத்துபவை, உயிரியல் தொழில்நுட்ப நிறுவனங்கள்தான். இந்த நிறுவனங்கள் உலகின் பல நாடுகளில் நுழைய முடியாமல் தவிக்கின்றன. அய்ரோப்பா அடுத்த அய்ந்தாண்டுகளுக்கு தங்கள் திசை பக்கம் வரக் கூடாது என அறிவித்துவிட்டது. இந்த அறிவிப்பால் அமெரிக்க நிறுவனங்கள் கதிகலங்கியுள்ளன. அமெரிக்க அரசின் தொழில் பிரதிநிதி ரோபர்ட் சோலிக், இந்தத் தடை அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்றும், உயிரியல் தொழில்நுட்ப வளர்ச்சியை பாதிக்கிறது என்றும், இறுதியாக அய்ரோப்பாவின் இந்தத் தடை உலகில் பட்டினியை அதிகரிக்கும் என்றும் மிரட்டுகிறார். உலகின் மொத்த விதைகளையும் இந்த நிறுவனங்கள் திருடி தங்கள் வசம் வைத்துள்ளன.

இதில் இந்தியாவிலிருந்து மட்டும் 1,50,000 நிலைத்திணை வகைகள், அமெரிக்க உயிரியல் ஆய்வுக் கூடங்களில் உள்ளன. அமெரிக்க அரசின் விவசாய அமைச்சகமும், உயிரியல் தொழில்நுட்ப வல்லுநர்களும் ஏராளமான இந்தியத் தொண்டு நிறுவனங்களைப் பணியில் அமர்த்தினர். கடந்த அய்ந்தாண்டுகளாக இந்தியா முழுவதிலும் இந்த 1,50,000 செடி வகைகள் குறித்த மரபான அறிவை சேகரித்து வருகிறார்கள். இந்த திட்டங்களுக்காக பல பன்னாட்டு நிறுவனங்கள் கோடிக்கணக்கான தொகையை ஒதுக்கி வருகின்றன. அதில் குறிப்பாக ‘போர்டு' நிறுவனம் விதைகள் பற்றிய தகவல்களை இரு தலைப்புகளில் சேகரித்து வருகிறது.

1. ‘பயோடெக்' சார்ந்த அறிவியல் தகவல்கள் 2. வாய்மொழி வரலாற்றில் இருக்கும் தகவல்களை, நாட்டுப்புறவியல் சார்ந்த ஆய்வுகளின் மூலம் பெறுவது. எனவே, உங்கள் கிராமங்களை நோக்கி வரும் ஆய்வாளர்களிடம், ‘யாருக்காக இந்த ஆய்வை செய்கிறீர்கள்?' என்ற கேள்வியை முதலில் எழுப்புங்கள். இந்த 1,50,000 நிலைத்திணை வகைகளை அமெரிக்காவிற்கு கள்ளக் கடத்தல் செய்தவர்கள், இந்தியாவின் உயர் பதவிகளில் சொகுசாய் வாழ்ந்து வருகிறார்கள். அடிமைகள் இருக்கும் வரை ஏகாதிபத்தியம் செழித்தோங்கும் என்பதில் அய்யமில்லை.

கலிபோர்னியாவின் சேக்ரமென்டோ டவுன் டவுனில் சூன் 2325, 2007இல் ஒரு மாநாடு நடைபெற்றது. அமெரிக்க விவசாயத் துறை செயலர் ஆன் வெனேமன் விடுத்த அழைப்பின் பெயரில், 180 நாடுகளை சேர்ந்த விவசாய அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர். மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகள் தரும் நன்மைகள், லாபங்கள் குறித்த விவாதங்கள் இங்கு நடைபெற்றன. உலகின் பட்டினியை, பசியைப் போக்க தவம் செய்து வரும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு நீங்கள் ஒத்துழைக்க மறுத்தால், அரசியல் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரித்தார்.

இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்து வைத்துள்ள மரபீனி மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை ஒட்டுமொத்தமாக எல்லா நாடுகளும் அனுமதிக்கவில்லை. எனவே, ஆத்திரத்தில் அலையும் இந்த நிறுவனங்கள் தற்காலிக இடைவெளிகளை கண்டுபிடித்துள்ளன. பட்டினியால் வாடும் பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு உணவு உதவி அளிக்கப் போவதாகக் கூறி, இந்த விலை போகாத சரக்கை ஏற்றுமதி செய்கிறார்கள். அய்.நா. உலக உணவுக் கழகம், செஞ்சிலுவை சங்கம் என அனைத்து நிறுவனங்களும் இனி தங்கள் திட்டங்களுக்கு, உயிரியல் தொழில் நிறுவனங்களிடமிருந்து தான் கொள்முதல் செய்ய வேண்டும் என கட்டளையிட்டுள்ளனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் நடைமுறையில் உள்ள மதிய உணவுத் திட்டங்களில் இனி மரபீனி மாற்று உணவுகள்தான் வழங்கப்படும். தன் சொந்த தேசம் உண்ண மறுக்கும் தானியங்களை, மற்றவர்கள் மீது திணிப்பது உலகின் மிகப் பெரிய மனித உரிமை மீறல். அப்படி எந்த தேசமும் இனி இந்த நிறுவனங்களை அனுமதிக்க மறுத்தால் ஈராக், ஆப்கானிஸ்தான் கதிதான். பேரழிவு ஆயுதங்கள் அல்ல; விதைகளே போதுமானவை. இவை போக புதிய மரபீனி மாற்று விளை பொருட்கள் அங்காடியை ‘ராக்பெல்லர் பவுன்டேஷன்' மற்றும் மேடிசன் நிறுவனம் தொடங்கியுள்ளது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இவர்கள் தங்கள் புதிய வியாபாரத்தை தொடங்குவார்கள்.

எய்ட்ஸ் நோயால் ஏராளமான ஆப்பிரிக்க நாடுகளில் கிராமப்புற ஆண்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. விவசாயக் கூலிகளின் பற்றாக்குறையை போக்கும் அந்த நாடுகளை, மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறார்கள். இந்த விதைகளைப் பயன்படுத்தினால் அதிக பூச்சிக் கொல்லி அடிக்க வேண்டியதில்லை, வேலை குறைவு என கதை அளந்து வருகிறார்கள். இவர்களின் இந்த ‘பி.டி.' ரக விதையை பயன்படுத்திதான் விதர்பா, ஆந்திரப் பகுதி விவசாயிகள் பூச்சிக்கொல்லி தெளித்து, தெளித்து இறுதியில் கடன்களை சமாளிக்க முடியாமல் மிச்ச மீதி பூச்சிக்கொல்லியை தாங்களே குடித்து மாண்டனர். மேடிசன் நிறுவனத்தின் அடுத்த இலக்கு இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், தாய்லாந்து மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள். இவர்களின் வேலை புள்ளி விவரங்களைத் தயாரிப்பது, பஞ்சங்களை ஏற்படுத்துவது (யோக்கியன் வரான் சொம்பை எடுத்து உள்ள வை).

அமெரிக்க உயிரியல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தொடர்ந்த அழுத்தம் காரணமாக, இந்தியா தனது கதவுகளை அகலத் திறந்துள்ளது. இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் மரபீனி மாற்று விதைகளை ஆய்வு நோக்கில் பயிரிட அனுமதி அளித்துள்ளனர். எராளமான காய்கறி, எண்ணெய் வித்துக்கள் என உணவு வகை ஆய்வுகள் நடக்கின்றன. ஆனால், இந்த ஆய்வுகள் முறைப்படி நிகழ்த்தப்படுவதில்லை. இந்திய தட்பவெப்ப சூழலுக்கு இவை உகந்ததா? நம் மண்ணில் இவை விளையுமா? என்பது போன்ற நூற்றுக்கணக்கான கேள்விகள் நம்முன் விடையின்றி நிற்கும்போது, நம் விஞ்ஞானிகள் மற்றும் அரசு செயலர்கள் இந்த விதைகளுக்கு நற்சான்றிதழ் வழங்கி வருகின்றனர். இதில் சமீபத்திய வேடிக்கை உயிரியல் தொழில் நுட்பத் துறையின் செயலர், ஜி.எம். உருளைக்கிழங்கில் 40 சதவிகிதம் புரதச்சத்து இருப்பதாக பேட்டியளித்தார். மறு நாள் அது 2.5 சதவிகிதம்தான் என ஆய்வு நிறுவனம் அறிவித்தது. இது போல் இனி எல்லா மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகள் குறித்த கட்டுக் கதைகளும் மடை திறந்த வெள்ளமாய் வரும். குடிமைச் சமூகமே எச்சரிக்கை!

இந்த ஆய்வுகள் நிகழ்த்தப்பட்ட எல்லா இடங்களிலும் நடந்த முறைகேடுகள் தற்பொழுது வெளிவருகின்றன. இந்த ஆய்வுக்காக குத்தகைக்கு எடுக்கப்பட்ட வயல்களில், அந்த வயலின் உரிமையாளர்களிடம் என்ன ஆய்வு நிகழ்த்தப்படுகிறது என தெரிவிக்கப்படுவதில்லை. அண்டை வயல் உரிமையாளர்களிடம் இந்தத் தகவல்கள் பரிமாறப்படவில்லை. அந்த மாநில அரசுகளிடம் அனுமதி பெறுவதில்லை. மரபீனி தொடர்புடைய இந்த ஆய்வுகளை கண்காணிக்க சுற்றுப்புறச் சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மரபீனி தொழில்நுட்ப அனுமதி குழு உருவாக்கப்பட்டுள்ளது (Genitic Engineering Approoval Committee- GEAC). இக்குழுவின் அனுமதியின்றி எந்த ஆய்வும் நிகழாது. இக்குழுவிற்கு விண்ணப்பிக்கும் முன்பே பஞ்சாயத்துக்களில் அனுமதி பெற வேண்டும். கிராம பஞ்சாயத்துகள் இனி இந்த அதிகாரத்தை செம்மையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Farmer கோக்கோகோலா நிறுவனத்தை பிளாச்சிமடாவிலிருந்து விரட்டியடித்ததில் அந்த பஞ்சாயத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் எல்லையோரத்தில் கேரளாவுக்குள் அமைந்துள்ள கிராமம் பிளாச்சிமடா. அங்கு கோக்கோ கோலா ஆலை பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. பிளாச்சிமடா மக்களும் அந்த பஞ்சாயத்தும் விழித்துக் கொண்ட பிறகு, அந்தப் பன்னாட்டு நிறுவனத்தால் ஆலை நடவடிக்கைகளை தொடர இயலவில்லை. இந்திய அளவிலான ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் மற்றும் உலகமயமாக்கல் எதிர்ப்பாளர்கள், முன்னணித் தலைவர்கள் பலரும் பிளாச்சிமடாவுக்கு கடந்த அய்ந்து ஆண்டுகளாக நடந்து வந்த மக்கள் இயக்கத்திற்கு வலு சேர்த்தாலும், பிளாச்சிமடா பஞ்சாயத்து அந்த ஆலையை ரத்து செய்த முடிவுதான் இந்தப் போராட்டத்தின் மிகப் பெரிய பலம். உச்ச நீதிமன்றம்கூட பஞ்சாயத்தின் தீர்மானத்தை மாற்ற முடியாமல் திணறியதைக் காண முடிந்தது. இதுபோலவே கங்கைகொண்டானில் சிவகங்கையிலிருந்து விரட்டப்பட்ட கோக் நிறுவனத்தை நிறுவ முயன்றபோதும், அங்கு பல்வேறு மக்கள் இயக்கங்கள் களமிறங்கிப் போராடினர். இதில் பங்கேற்ற பஞ்சாயத்து தலைவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இனி இத்தகைய ஆய்வுகளுக்காக எந்த பஞ்சாயத்திலும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம் அனுமதி கோரினால், உடனடியாக கிராம அவை கூட்டப்பட வேண்டும். அதில் இந்த விதைகள் குறித்த ஆபத்துகள், தீமைகள் குறித்து விவாதங்கள் நடைபெற வேண்டும். அந்த விதிமுறைகள், எச்சரிக்கைகளைத் தெரிந்து கொண்டு, ஆய்வு நடக்கும் காலங்களில் அண்டைய வயல்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கலாம். மரபீனி மாற்றம் செய்ய நடைபெற்ற பயிற்சிகள் குறித்த வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாகக் கூறியுள்ளது. சம்பந்தப்பட்ட விஞ்ஞானிதான் இத்தகு ஆய்வுகளை நிகழ்த்த வேண்டும். இந்த வயலில் இருந்து 200 மீட்டர் தூரத்துக்குள் இதே பயிரின் மரபான ரகம் பயிரிடப்பட்டிருக்கக் கூடாது. எனவே, இந்திய பஞ்சாயத்துகள் விழிப்போடு இருந்தால், நம் எதிர்காலத் தலைமுறையையே சீரழிக்கக் கூடிய நிறுவனங்களை கால் பதிக்க விடாமல் விரட்டியடிக்க முடியும்.

தினமும் 32 கோடி பேர் பசியுடன் படுக்கைக்குச் செல்லும் நாடு இது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 6.5 கோடி டன் உணவு தானியங்கள் உபரி கையிருப்பாக இருந்த தேசமிது. ஒரிசாவின் காலாஹந்தி பகுதி மக்கள் தங்கள் கண் முன்னால் அரசு கிடங்குகளில் அரிசி அழுகி நாற்றமெடுப்பதை காண்கிறார்கள். ஓராண்டில் ஆறு மாதத்திற்கு ஒரு நேரம் மட்டுமே உண்ணுகிறார்கள். 6.5 கோடி டன் உபரி உணவு தானியங்களால் இந்தியாவின் பசியை, பட்டினியைப் போக்க இயலாதபொழுது -மரபீனி மாற்று தானியங்கள் மட்டும் எப்படி உலக மக்களின் பசியைப் போக்கும்?

உயிர்க்கொல்லிகள்

பூமிப்பந்தின் மேல் சில அங்குல அளவே படிந்துள்ள ‘மேல் மண்' (Top Soil) தான் நாகரிகங்கள் தோன்ற அடிப்படையாக இருந்து வந்துள்ளது. இந்த மேல் மண் உருவாக பூமியின் பரிணாமத்தில் பூகோள ரீதியான பல அம்சங்கள் துணை புரிந்துள்ளன. இயற்கையான அரிமானத்தின் அளவை புதிய மண் உருவாவது மிஞ்சும்பொழுதுதான் மேல் மண் உருவாகிறது. இந்த மேல் மண்தான் பூமியில் உள்ள அத்துணை தாவரங்களையும், மரங்களையும் தன் சிசுவாய் வளர்த்தது. இதற்கு கைமாறாக இந்தச் செடிகளும், மரங்களும் மண் அரிமானத்தை தடுத்து உதவுகின்றன. மனித நடவடிக்கைகள், இந்த ஆயிரம் ஆண்டு பந்தத்தை சீர்குலைத்து விட்டன. உலக சாகுபடி நிலத்தில் முக்கால் பங்கு ‘மேல் மண்'ணை இழந்து விட்டது. கண்மூடித்தனமான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் இந்த கதி ஏற்பட மூலகாரணமாகும். உலகத்தை மீண்டும் நுண்ணுயிர்களுடன் கூடிய சத்தானதாக மாற்ற, வட்டார அளவிலான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இவை எதற்கும் அரசு உதவி என்பது கிஞ்சித்தும் இல்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com