Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
செப்டம்பர் 2005

ஜாதி இந்து ஏவல் துறை
முருகப்பன்


ஞானவேல் 9 ஆம் வகுப்பு மாணவன். விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறான். தலித் மாணவன். ஆசிரியர்கள் யாரும் இவனை வகுப்பறைக்குள் உட்கார வைக்காமல், படிப்பதற்கான வாய்ப்பை உருவாக்காமல், பள்ளிக்கு எடுபிடி வேலை செய்வதற்குப் பயன்படுத்தி உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்த மாலா, அப்பள்ளியில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றுகிறார். இவர் வன்னியர் இனத்தைச் சேர்ந்தவர். பொறுப்பாளர் மாலா, மாணவர்களுக்கு தினம் சாப்பாடு போடுகிறாரோ இல்லையோ, பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தினம் தன்னுடைய வீட்டில் இருந்து தேநீர் தயாரித்து கொடுக்கத் தவறுவதில்லை. பள்ளியில் படிக்கும் ஞானவேலையும் வீட்டுக்கு அனுப்பி தேநீரை எடுத்துவரச் சொல்வார்கள்.

இதுபோன்றுதான் 24.8.2005 அன்று காலை 11 மணிக்கு ஞானவேலை அழைத்த மாலா, “வீட்ல டீ போட்டு வச்சிருக்கேன், போய் எடுத்துக்கிட்டு வா'' என்று கூறியுள்ளார். வீட்டுக்கு தேநீர் எடுக்கச் சென்றவன், மூடியிருந்த கதவைத் தள்ளி உள்ளே சென்றுள்ளான். அப்போது வீட்டிலிருந்த மாலாவின் கணவர் முனுசாமி, “ஏண்டா பற நாயே எவ்வளவு திமிர் இருந்தா வீட்டுக்குள் நுழைவ'' என்று திட்டிக்கொண்டே இரும்புத்தடி ஒன்றால் ஞானவேலின் நெஞ்சில் வேகமாக குத்தி உள்ளார். அடிதாங்க முடியாமல் தப்பித்தால் போதும் என ஞானவேல் பள்ளியை நோக்கி ஓடி உள்ளான். கூடவே முனுசாமியும் தெருவில் இறங்கி ஞானவேலை துரத்தியுள்ளார்.

Gnanavel அப்போது எதிரில் வந்த சிலரைப் பார்த்து, "பிடிங்க அவனை' என்று முனுசாமி கத்தியுள்ளார். எதிரில் ஓடிவந்த 7 பேர் அவனைப் பிடித்து, தெருவில் இருந்த மின்கம்பத்தில் கட்டிப் போட்டுள்ளனர். அங்கிருந்த கலியன் (கவுண்டர்) என்பவர், ஞானவேலின் வாயிலும் மார்பிலும் குத்தி, அடித்துள்ளார். இதற்குப் பிறகுதான் பள்ளியில் இருந்து தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள், ஊர்க்காரர்களிடம் பேசி ஞானவேலின் கட்டுகளை அவிழ்த்துவிட்டு, "போடா ஸ்கூலுக்கு' என்று அனுப்பி உள்ளனர். பள்ளிக்குச் சென்ற பிறகும் விடாமல், அதே ஊரைச் சேர்ந்த வேலு (கவுண்டர்) என்பவர், ஞானவேலுவை ஆசிரியர் கண் எதிரிலேயே “இவன்தானா'' என்று கேட்டு செருப்புக்காலுடன் அவனை எட்டி உதைத்து, கல் உடைக்கும் டிரில்லிங் இரும்பு ராடால் முதுகில் கடுமையாக அடித்துள்ளார். இதற்கடுத்த சில நிமிடங்களில் ஞானவேல் நினைவிழந்து விழுந்துள்ளான்.

பக்கத்து ஊரில் கூலிவேலை செய்து கொண்டிருந்த ஞானவேலின் தாயார் ஏகவள்ளி, கேள்விப்பட்டு பதட்டமடைந்து பள்ளிக்குச் சென்றுள்ளார். இதற்குப் பிறகு ஞானவேலின் உறவினர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். வன்னியரான அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவர், ஞானவேலின் நிலையைப் பார்த்து காரில் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்துள்ளார். மறுநாள் 25 ஆம் தேதி சரியாகி விட்டதென மருத்துவமனையில் இருந்து மாணவன் அனுப்பப்பட்டுள்ளான். அன்று பகல் 12 மணிக்கு நேராக வானூர் காவல் நிலையம் வந்து ஞானவேலும், அவரது தாயார் ஏகவள்ளியும் புகார் அளித்துள்ளனர்.

அப்போது ஞானவேல் வாந்தி எடுத்துள்ளான். வாந்தி முழுவதும் கட்டி கட்டியாக ரத்தமாக வந்துள்ளது. காவல் நிலையத்தில் இருந்த ஏட்டு இதைப் பார்த்துள்ளார். அவர் கூறியபடி உடனடியாக ஞானவேலை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கும் அவன் தினம் 2 அல்லது 3 முறை வாந்தி எடுக்கும் போதெல்லாம் ரத்தமாக எடுத்துள்ளான். ஆனால் சரியாகிவிட்டதென, 29 ஆம் தேதி அங்கிருந்தும் அவனை மருத்துவர்கள் அனுப்பி உள்ளனர்.

Egavalli இதற்கிடையில் 25 ஆம் தேதி புகார் தந்தும், அவன் ரத்த வாந்தி எடுப்பதை காவலர் நேரில் பார்த்த பிறகும் குற்றமிழைத்தவர்கள் மீது வழக்குப் போடவில்லை. அதன் பிறகு 26 ஆம் தேதி, உரோசனை தலித் இளைஞர் இயக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பூபால், கேபிள் சாரதி ஆகியோர் காவல் நிலையம் சென்று வலியுறுத்தி ஞானவேல் உறவினர்களுடன் கூடி மறியல் செய்ய முயன்ற பிறகுதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

குற்றமிழைத்த சாதி இந்துக்கள் மீது, வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 3 (1) (x) மட்டுமே போடப்பட்டுள்ளது. ஆனால், ஞானவேலை தாக்கியவர்கள் மீது வழக்குப் பதிய வேண்டும் எனக் கேட்ட ஞானவேலின் உறவினர்கள் 12 பேர் மீது, “திருடியதாக'' சாதி இந்துக்களிடம் புகார் வாங்கி வைத்துள்ளது காவல் துறை. இது, காவல் துறையா இல்லை, சாதி இந்துக்களின் ஏவல் துறையா?

சென்ற ஆண்டு விக்கிரவாண்டி அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்த தலித் மாணவன் சிவராமன், சாதி இந்து ஆசிரியர்களால் தூண்டிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டான். மேலும், இவ்வாண்டு திருவெண்ணெய் நல்லூர் அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் தலித் மாணவி சரண்யா, ஆசிரியை அவமானப்படுத்தியதில் தீக்குளித்து இறந்தார். விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்கள் மீது தொடரும் இந்த வன்கொடுமைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்காது. ஏனெனில், மாணவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்பதால், ஜெயலலிதா அரசு இதில் உடனடி கவனம் செலுத்தாது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com