Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
அக்டோபர் 2008
திட்டுக்காட்டூர்: ஜாதித் தீவில் தலித்துகளின் வாழ்க்கை
முருகப்பன்


திட்டுக்காட்டூர் - கடலூர் மாவட்டத்தின் உள்ளடங்கிய கிராமம். தலைமுறை தலைமுறையாக இங்கு வாழ்ந்து வரும் 19 தலித் குடும்பங்களுக்கு 1965 இல் அரசு பட்டா வழங்கியுள்ளது. 1 ஏக்கர் 32 சென்ட் நிலப்பரப்பில் 19 தலித் குடும்பத்தினரும் வாழ்ந்து வருகின்றனர். குடிசை வீட்டைத் தவிர வேறு எந்த உடைமையும் இல்லாத மக்கள், அன்றாடக் கூலி வேலை செய்து பிழைத்து வருகின்றனர். தலித் மக்கள் குடியிருப்பின் நான்கு பக்கங்களும் வன்னியர் சமூகத்தவர்களின் வயல்களும், தோப்புகளும், நிலங்களும், வீடுகளும் சூழ்ந்துள்ளன. 19 தலித் குடும்பத்தினரும் குடியிருப்பில் இருந்து வெளியில் செல்லவோ, உள்ளே வரவோ அன்றாடம் பெரும் போராட்டத்தையே நிகழ்த்தி வருகிறார்கள். பொது வழியின்றி ஒரு தனித் தீவாக சிறை வாழ்க்கையை அய்ந்து தலைமுறையாக அனுபவித்து வருகிறார்கள்.

Thittukattur அவசரத்தின் பொருட்டு செல்கின்ற ஓர் ஒற்றையடிப் பாதைகூட, சாதி இந்து ஒருவருக்கு சொந்தமானது. யாரேனும் ஒரு தலித் அந்த வழியாகச் சென்றால், உடனடியாக அந்த வழி வேலி போட்டு அடைக்கப்படுகிறது; பாதை மறுக்கப்படுகிறது. வயல் வரப்புகளின் வழியே நடந்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. மிக அவசரத்தின் பொருட்டு அவ்வழியே செல்கின்ற தலித் மக்கள் சாதியின் பெயரால் இழிவு செய்யப்பட்டு, அவமானப்படுத்தப்படுவதுடன், தாக்கப்படுகின்றனர். ஒவ்வொரு தலித்தும் எப்படி வெளியே செல்வது, உள்ளே வருவது எனத் தெரியாமல், நாள்தோறும் வாழ்வா, சாவா என்ற போராட்டத்தை சந்தித்து வருகிறார்கள். தங்களின் ஆடு, மாடுகளுக்கு புல் அறுப்பதைக்கூட சாதி இந்துக்கள் தடை செய்துள்ளனர்.

சாதி ஆதிக்கத்தால் இப்பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் தலித் குழந்தைகள் படிக்க இயலாமல்,
அருகில் இருக்கும் கீழகுண்டலவாடி கிராமத்தில் உள்ள ராசப்பா உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் படிக்கும் அவலநிலை நிலவுகிறது. அதுவும் சாதி இந்துக்கள் வசிக்கின்ற தெரு வழியே செல்ல முடியாமல் வெகுதூரம் சுற்றிக்கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதன் காரணமாக, கடந்த அய்ந்து தலைமுறைகளாக வசித்து வரும் இம்மக்களில் வெறும் 5 பேர் மட்டுமே மிக அதிகபட்ச படிப்பாக 10 ஆம் வகுப்பு படித்துள்ளனர்.

வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படுகின்ற தேநீர் மற்றும் உணவுக்கடைகளில் தீண்டாமை கடைப் பிடிக்கப்படுகிறது. முருகன், தம்பிசாமி, கலியபெருமாள், துரைக்கண்ணு ஆகிய வன்னியர்கள் நடத்துகின்ற தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் உள்ளது. உணவுக்கடைகளில் தலித்துகள் செருப்பினை வெளியே தெருவில் கழற்றிவிட்டு, கீழே தரையில் உட்கார்ந்து சாப்பிடும் இழிநிலை தொடர்கிறது. கோவிலில் சென்று கடவுளை வழிபடவும் கூட, தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திட்டுக்காட்டூர் தலித்துகள், பேருந்தில் சாதி இந்துக்களுடன் சமமாக அமர்ந்து செல்லமுடியாத நிலையே இன்று வரை நடைமுறையில் உள்ளது. தலித் மக்கள் மீது, சாதி இந்துக்கள் தீண்டாமை பாகுபாடுகளை கடைப்பிடிப்பது மட்டுமின்றி, வன்கொடுமைத் தாக்குதல்களிலும் ஈடுபடுகின்றனர். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சிலரால், தலித் சமூகத்தை சேர்ந்த ஆண்களும் பெண்களும் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்.

தேர்தலின்போது தலித்துகள் சுதந்திரமாக வாக்களிக்க இயலாமல், சாதி இந்துக்களுக்கு ஆதரவான வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி தலித் மக்கள் மிரட்டப்படுகிறார்கள். தலித் பெண்கள் சாதி இந்து ஆண்களால் பாலியல் ரீதியாக இழிவுபடுத்தப்படுகிறார்கள். சென்ற ஆண்டு, "எப்படி எங்கள் நிலத்தின் வழியே செல்லலாம்?' என தலித்துகளை தாக்க வந்த வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் பாசுபாதம் என்பவர், தன்னுடைய துணிகள் அனைத்தையும் கழற்றிவிட்டு வெற்றுடம்புடன் சென்று, தலித் பெண்களிடம் ஆபாசமாக சண்டையிட்டுள்ளார்.

தங்களுக்கு நிகழ்ந்த தீண்டாமைக் கொடுமைகளையும் தாக்குதல்களையும் யாரிடமும் சொல்லவே பயந்து, அவர்களுக்குள்ளேயே பேசிக்கொள்ளக் கூட தலித் மக்கள் தயங்குகின்றனர். பேசியதும், பேசுவதும் தெரிந்தால் எந்த நேரத்திலும் கிராமத்தைச் சேர்ந்த சாதி இந்துக்களால் தாக்குதலுக்கு ஆளாவோம் என்ற அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.
29.6.08 அன்று இரவு 6 மணியளவில் வன்னியர் சாதியைச் சேர்ந்த குமரவேல், அப்பு, நாகராஜ், பாசுபாதம், உரி, குமரகுரு, பாஸ்கரன், ராஜயோகம், சகுந்தலா ஆகிய 9 பேரும் தலித் குடியிருப்பிற்குள் நுழைந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் 8 தலித்துகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். புகாரைப் பெற்ற போலிசார், சாதி இந்துக்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீதே பொய்வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது பிணையில் வந்துள்ள தலித் மக்கள், சாதி இந்துக்களால் மீண்டும் தாக்கப்படுவோம் என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.

Thittukattur விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தலித் மனித உரிமைக்காக செயல்படுகின்ற ‘இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மய்யம்' இக்கிராமத்தை ஆய்வு செய்து, திட்டுக்காட்டூர் தலித் மக்களை தீண்டாமைக் கொடுமையிலிருந்து மீட்டெடுக்க அரசிடம் தொடர்ந்து முறையிட்டு வருகிறது. அதன் இயக்குநர் வே. அ. ரமேஷ்நாதனிடம் இது குறித்து கேட்டபோது, “திட்டுக்காட்டூர் தலித் மக்கள் மனித மாண்புடன் அச்சமின்றி வாழ, இங்குள்ள 19 குடும்பத்தினரையும், தலித்துகள் பெரும்பான்மையாக வாழ்கின்ற வேறு பகுதியில் குடியமர்த்தி, அரசு தனது பொறுப்பில் இலவச வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். மேலும், தலித் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு, இலவச நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் இக்கிராம தலித் மக்களுக்கு 2 ஏக்கர் இலவச நிலம் வழங்கிட வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்த, மாவட்ட நிர்வாகம் உரிய முன்முயற்சிகள் எடுக்க வேண்டும்.

தலித் குழந்தைகளை அரசு தனது பொறுப்பில் படிக்க வைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். தலித் மக்கள் மீது நிகழ்கின்ற வன்கொடுமை மற்றும் பாகுபாடுகளை களைவதற்கான சீரிய நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும். திட்டுக்காட்டூர் தலித் மக்களுக்கு தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறையைப் பின்பற்றி வரும் சாதி இந்துக்கள் மீது தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதோடு, அத்தேநீர்க் கடைகளை நிரந்தரமாக முடக்கி வைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தலித் மக்களை சமூகப் புறக்கணிப்பு செய்பவர்கள் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பிரிவு 17இன் கீழ் கூட்டு அபராதம் விதிப்பதோடு, இக்கிராமத்தை தீண்டாமை கிராமமாக அறிவிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்டுக்காட்டூர் தலித் மக்களுக்கு வாக்குரிமையை மட்டும் அளித்துள்ள அரசு, அவர்களின் வாழ்வுரிமையையும் பாதுகாக்க வேண்டும்'' என்றார்.

தலித் மனித உரிமைக் கண்காணிப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் இப்பிரச்சனை குறித்துப் பேசும் போது, “நாம் எங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றே தெரியவில்லை. அடுத்த நூற்றாண்டில் நிலாவில் மனிதன் குடியிருக்கலாம் என்கிறார்கள். ஆனால் இங்கு பூமியில் தலித் மக்கள் வாழ முடியாத நிலை உருவாகியுள்ளது. திட்டுக்காட்டூர் போன்று எத்தனையோ தலித் கிராமங்கள் உள்ளன. இவை பற்றி அரசு கவலைப்படப் போவதில்லை. இதை உணர்ந்துதான் அம்பேத்கர், இது போன்ற நிலையை சந்திக்கும் தலித் மக்களை, அதே மாவட்டத்தில் தலித்துகள் அதிகமாக வாழ்கின்ற பகுதியில் குடியமர்த்த வேண்டும் என்று கூறியுள்ளார். வட இந்தியாவில் அவ்வாறு செய்துள்ளார்கள். தமிழக அரசு இவ்வாறு செய்ய முன்வருமா? விசாரிக்கின்றோம் என்றோ, அமைதிக் குழு அமைக்கின்றோம் என்றோ தலித்துகளின் வாழ்க்கையை அது தள்ளி வைக்கும். தேர்தல் பேரம் தொடங்கிவிட்ட நிலையில் கண்டுகொள்ளாமல் போகவும் வாய்ப்புள்ளது. சமூக அக்கறையுள்ளவர்கள்தான் இது குறித்து அரசுக்கு ஒரு நெருக்கடியை உருவாக்க வேண்டும். அப்போதுதான் திட்டுக்காட்டூர் தலித்துகளுக்கு தீர்வு கிடைக்கும்'' என்றார்.

தலித் மக்களுக்கெதிரான வன்கொடுமைகள் நடைபெற்று நான்கு மாதங்களுக்குமேலாகியும், இதுவரை அரசு
எத்தகைய உதவியையும் செய்யவில்லை. இலங்கைத் தீவில் அல்லலுறும் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தலைவர்கள், ஜாதித் தீவில் அல்லலுறும் சேரித் தமிழர்களுக்கு குரல் கொடுக்க முன்வருவார்களா?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com