Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
அக்டோபர் 2008
அவ்வை-யார்
கமலப் பிள்ளை

ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன் போன்ற பழமையான தமிழ்ப் பாடல்களை நீங்கள் படித்திருக்கிறீர்கள் இல்லையா? அப்பாடல்களை எழுதியவர் அவ்வையார். அந்தப் பாடல்களை மட்டும் இல்லாமல் மேலும் பல பாடல்களையும் நூல்களையும் பாடியவர் தான் அவ்வையார். அவ்வையார் ஒருவரே அல்லர். பல காலங்களில், தமிழ் நாட்டின் பல பகுதிகளில் சுமார் எட்டு அவ்வைகள் வாழ்ந்ததாக அறிஞர்கள் சொல்கிறார்கள்.

அவ்வை என்றால் அம்மை என்று பொருள். அம்மை என்றதும் ஒரு வகையான நோயின் பெயர் என்று கூட, இக்காலத்தில் உள்ள உங்களைப் போன்ற குழந்தைகளில் சிலர் நினைத்துக் கொள்வார்கள். அம்மை என்றால் அம்மா, அன்னை என்று பொருள். ஆனால் அவ்வை என்ற சொல் கிழவி என்ற பொருளில் தான் இங்கு வழங்குகிறது. அது தவறு. திருமணம் செய்து கொள்ளாமல், பல நூல்களை கற்று, அறிவு முதிர்ச்சிப் பெற்று சமூகப் பணியோ, சமயப்பணியோ ஆற்றிய பெண்களை அக்காலத்தில் அவ்வை என்று அழைத்து இருக்கிறார்கள். தமிழ் நாட்டின் சில பகுதிகளில் அவ்வை என்ற தெய்வம் கூட இருக்கிறது. இது ஒரு சிறு தெய்வம்.

avvai ஒளவ்வை என்று எழுதுவதும் தவறு என்பதை குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டும். "ஒள' என்ற எழுத்தில் தொடங்கி எழுதுவதற்காக ஒரு சொல் வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஒளவ்வை என எழுதப்படுகிறது. "அவ்வை' என்று எழுதுவதே சரி.பல காலகட்டங்களில் இப்படி வாழ்ந்த அவ்வையார்களில் நான்கு அவ்வையார்களைப் பற்றி ஓரளவிற்கு வரலாறுகள் இருக்கின்றன. ஆனால் அவை கூட சிறிய அளவில்தான் இருக்கின்றன. அவர்கள் பின் வருமாறு :
1. சங்க கால அவ்வை
2. அங்கவை - சங்கவை அவ்வை
3. சோழர் கால அவ்வை
4. பிற்கால அவ்வை

1. சங்ககால அவ்வை 59 பாடல்களைப் பாடி இருக்கிறார். இக்காலம் கி.மு.300 முதல் கி.பி.250 வரையில் உள்ளது. சேரன் மாரி வெண்கோ, பாண்டியன் உக்கிரப் பெருவழுதி, சோழன் பெரு நற்கிள்ளி ஆகிய மூவேந்தர்கள் பற்றியும் அதியமான், எழினி, தொண்டைமான், பாரி ஆகிய குறுநில மன்னர்கள் பற்றியும் இவர் பாடலில் குறிப்புகள் உள்ளன. அதியமானிடம் நெல்லிக்கனி பெற்று உண்டது இவர்தான்.
"அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி
குறுகத் தறித்த குறள்'
என்று திருக்குறளை சிறப்பித்து பாடியது இவர்தான். இவர் நெஞ்சுரம் கொண்டவர், மன்னர்களிடமும், மக்களிடமும் பெருமதிப்பும், அறிமுகமும் கொண்டவர் பெண்ணிய சிந்தனை உடையவர் என்று கூறலாம்.

2. அங்கவை - சங்கவை கால அவ்வை வள்ளல் பாரி என்ற குறுநில மன்னன் போரிலே இறந்த பிறகு அவனுடைய மகள்களான அங்கவை சங்கவை ஆகிய இருவருக்கும் இந்த அவ்வை பாதுகாப்பு அளித்துள்ளார். அந்த இரு பெண்களும் தன் தந்தையின் நாட்டைப் பற்றி ‘அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்' என்று பாடி இருக்கிறார்கள். இவர்களின் பெயர்கள் தான் 'சிவாஜி' எனும் ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்தில் நகைச்சுவையாக இழிவுபடுத்தப்பட்டுள்ளது. அப்பெண்கள் அசிங்கமானவர்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கருப்பு நிறம் அசிங்கமானதும் இல்லை.

3. சோழர் கால அவ்வை : இவரின் காலம் 12ஆம் நூற்றாண்டு ஆகும். கொன்றை வேந்தன், ஆத்திச்சூடி, மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களை எழுதியவர் இவர்தான். இந்த அவ்வைகளோடு புராண கருத்துகளும், கதைகளும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. முருகனுக்கு அறிவுரை கூறியவர். அற்புதங்கள் செய்தவர் என்றெல்லாம் இவரைப் பற்றி பல கற்பனைக் கதைகள் உள்ளன. இக்கால அவ்வை எழுதிய ஒரு பாடல் உழவுத் தொழிலைப் போற்றுகிறது.
வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்
குடியுயரக் கோலுயரும்
கோலுயரக் கோனுயர்வான்

4. பிற்கால அவ்வை : பல தனிப்பாடல்களை பாடிய அவ்வை இவர். இவரோடும் புராணக் கதைகள் பிணைக்கப்பட்டுள்ளன.
அவ்வையை ஒரு பக்திப் பெண் எனவும், மந்திர மாயங்கள் செய்தவர் எனவும், இந்து கடவுளர்களான சிவன், முருகன் போன்றோரிடம் அருள் பெற்றவர், அவர்களோடு வாழ்ந்தவர் எனவும் பல கற்பனைக் கதைகள் இருக்கின்றன. அவ்வையைப் பற்றி இதைப் போன்ற கருத்துக்களை சொல்லி, திரைப்படங்களும் வந்துள்ளன. இந்த கற்பனைகளை நீங்கள் தள்ளிவிடுங்கள். ஆனால் அவ்வை என்பது அழகிய தமிழ்ச்சொல் என்பதையும், அக்காலத்தில் அறிவுடைய பெண்களை இப்படி அழைத்தனர் என்பதையும் நீங்கள் அறிய வேண்டும். கல்வி பெற்று ஆண்களுக்கு இணையாக பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் பெண் தான் அவ்வை என்பதை உணர வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com