Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
அக்டோபர் 2008
வென்றது போராட்டம் - பின்னடைவும் பின்னிழுப்பும்
அழகிய பெரியவன்

“பின்னடைவு, பின்தங்கல், தாழ்ந்து போதல் - இவை மனித சமுதாயத்தினுடைய உரிமைகளை மாத்திரம் அல்ல; வாய்ப்புகளை மாத்திரம் அல்ல; அவர்களுடைய சுயமரியாதையையே கெடுக்கக் கூடியவை என்பதால் - யாரும் பின்னடைவுக்கு ஆளாவதோ அல்லது பின்தங்குவதோ கூடாது.''
- முதலமைச்சர் மு. கருணாநிதி, விரிவுரையாளர் பணி நியமன விழாவில் ஆற்றிய உரையிலிருந்து..."தினத்தந்தி' 1.10.2008

ambedkar_ பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் விட்டு வைக்கப்பட்டிருந்த தலித் மக்களுக்கான கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்கள் அண்மையில் நிரப்பப்பட்டன. தமிழக முதல்வர் அவர்களே ஒரு விழாவில், புதிதாகப் பணியில் அமரப் போகிறவர்களை நெஞ்சார வாழ்த்தி, பணி நியமன ஆணைகளை வழங்கினார்! கடந்த ஆட்சியைப் போல இல்லாமல், புதிய பணி நியமனங்கள் இந்த ஆட்சியில் செய்யப்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால் அப்படி செய்யப்படும் அனைத்துப் பணி நியமனங்களுக்கும் இதுபோலவே விழாவினை நடத்தி, பணி ஆணைகளை முதலமைச்சர் நேரடியாக அனைவருக்கும் வழங்குவதில்லை. பணி நியமன ஆணை பெறுகின்றவர்களில் அடையாளமாக சிலரை மட்டும் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து முதல்வரோ, அத்துறை சார்ந்த அமைச்சரோ ஆணையை வழங்கி விடுவார்கள். கடந்த ஆண்டு இதைப்
போலவே சுமார் 1000 கல்லூரி விரிவுரையாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்ட போது கூட, இப்படி விழா ஒன்றை நடத்தி அந்த ஆணைகளை வழங்கவில்லை.

இப்போது மட்டும் தலித் மக்களுக்கான நிரப்பப்படாமல் இருந்த பின்னடைவுப் பணியிடங்களில் கல்லூரி ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்கிறபோது, விழா வைத்து ஆணைகளை வழங்குவதன் நோக்கம் என்ன? இந்த அரசு தலித் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்று காட்டிக் கொள்வதற்குத்தான். எல்லோருக்கும் நலம் பயக்கும் அரசு இப்படி விளம்பரப்படுத்திக் கொண்டு, ஒரு சமூகத்தினருக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று வலிந்து சொல்வது - அவ்வரசு கொண்டிருக்கும் குற்ற உணர்ச்சியையும், தயக்கத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

30.9.2008 அன்று பணி நியமனம் செய்யப்பட்ட 482 கல்லூரி விரிவுரையாளர்களின் நியமனத்தைப் பொறுத்தவரை, அரசு குற்ற உணர்ச்சி கொள்வதற்குப் போதிய காரணங்கள் இருக்கின்றன. நிரப்பப்பட்டவை அனைத்தும் பின்னடைவுப் பணியிடங்கள் (Backlog Vacancies) ஆகும். தமிழக அரசின் பணி நியமனங்களின் போது தலித் மக்களுக்கு 18 சதவிகித இடங்களும், பழங்குடியினருக்கு ஒரு சதவிகித இடமும் வழங்கப்படுவது, தமிழக அரசு கடைப்பிடித்து வரும் நடைமுறையாகும்.

இந்த இடஒதுக்கீட்டு விகிதப்படி பணி நியமனங்கள் நடைபெறுவதாக ஒரு பொதுக்கருத்து இங்கு நிலவுகிறது. ஆனால் அரசு செய்யும் எல்லா பணி நியமனங்களிலும், இந்த இடஒதுக்கீட்டு விகிதம் கடைப்பிடிக்கப்படுவதில்லை. அதனால் பல்வேறு அரசுத் துறைகளில் தலித்துகளுக்கான இடங்கள் நிரப்பப்படாமலேயே விடப்பட்டுவிடும். இன்றளவும் கூட சுமார் 16,943 பணியிடங்கள் அவ்வாறு நிரப்பப்படாமல் இருக்கின்றன. இப்பணியிடங்களை நிரப்பக்கோரி அவ்வப்போது பல்வேறு தலித் அமைப்புகளும், கட்சிகளும் வெறும் கோரிக்கைகளை மட்டும் வைத்தபடியே இருந்தன.

1996இல் இக்கோரிக்கைகள் வலுவடைந்தன. அவ்வாண்டில் தி.மு.க. அரசு பதவியேற்ற போது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலராக கிருத்துதாசு காந்தி, இ.ஆ.ப. அவர்கள் இருந்தார். அவரின் முயற்சியால் வெளிச்சத்திற்கு வந்த தலித் மக்களின் பின்னடைவுப் பணியிடங்கள் குறித்து, புதிய தமிழகம் கட்சியின் தலைவரும் சட்டப் பேரவை உறுப்பினருமாக இருந்த டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள், சட்ட மன்றத்தில் பிரச்சினையை எழுப்பினார். அரசு வெள்ளை அறிக்கை தர வேண்டும் என்றார் அவர். டாக்டர் கிருஷ்ணசாமியின் கோரிக்கை அரசால் ஏற்கப்பட்டது. முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களால் இதற்கென ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.

தமிழ் நாடு பொதுப்பணிகளில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் பங்கேற்பு குறித்து அறிக்கை தர அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் தலைவராக அன்றைய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சமயநல்லூர் எஸ். செல்வராஜ் நியமிக்கப்பட்டார். 13.9.1997 அன்று ஏற்படுத்தப்பட்ட இக்குழுவிலே சட்டப் பேரவை உறுப்பினர்களான கோமதி சீனிவாசன், ஏ.எஸ். பொன்னம்மாள், செங்கை சிவம், எஸ்.அழகுவேலு, வி.பி. ராஜன், எஸ். புரட்சிமணி, ஜி. பழனிச்சாமி, சோ. கருப்பசாமி, டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் உறுப்பினர்களாகவும், கிருத்துதாசு காந்தி செயல் உறுப்பினராகவும் இருந்தனர். சுமார் ஓராண்டுக்குப் பிறகு 3.8.98 அன்று இக்குழு தனது அறிக்கையை அரசுக்கு அளித்தது. இவ்வறிக்கையின் படி, தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட அனைத்துத் துறை பணியிடங்களில் 17,538 இடங்கள் நிரப்பப்படாமலிருந்தது தெரிய வந்தது. ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 86 துறைகளில் கல்லூரிக் கல்வித் துறையில் மட்டும் அதிகபட்சமாக 595 விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே விடப்பட்டிருந்தன.

இந்தப் பின்னடைவுப் பணியிடங்களை படிப்படியாக நிரப்பி விடுவதாக அரசு வாக்குறுதி அளித்தது. படிப்படியாக முன்னேறி வரும் ஒரு சமூகத்துக்கு, இந்த வாக்குறுதியே நம்பிக்கையின் ஒரு படியாக இருந்தது. ஆனால், வாக்குறுதி காற்றில் கலந்த ஒலியைப்போல் படிப்படியாய் மங்கி மறைந்தது. தி.மு.க. அரசால் ஒப்புக் கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்ட தலித் பின்னடைவுப் பணியிடங்களை, அவர்கள் தந்த வாக்குறுதியின் படி நிரப்பக்கோரி எடுக்கப்பட்ட இரண்டு முயற்சிகளை இங்கு கவனமாக நாம் நினைவில் கொள்ள வேண்டும். பத்திரிகையாளர் பி.ஆர். சுபாஷ் சந்திரன் மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளே அவை.

தி.மு.க. ஆட்சியின் போது பத்திரிகையாளரான பி.ஆர். சுபாஷ் சந்திரன், தலித் மக்களுக்கான பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பக்கோரி 1999இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார் (எண்.16087/99). இன்றைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான கே.ஜி. பாலகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தபோது 14.1.2000 அன்று அவர்கள் முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. தற்போதைய உயர் நீதிமன்ற நீதிபதி வி. தனபாலன் அவர்கள் சுபாஷ் சந்திரனுக்காக அன்றைக்கு வழக்குரைஞராக வாதிட்டார். தலைமைச் செயலர் மூலமாக பதிலளித்த அரசு, 5 ஆண்டுகளுக்குள் இப்பணியிடங்களை நிரப்பி விடுவதாக உறுதியளித்தது. அதை ஏற்ற நீதிபதி, 5 ஆண்டுகளுக்குள் பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பும்படி உத்தரவிட்டார். ஆனால் அரசு அவ்வாறு செய்யவில்லை. நீதிமன்ற உத்தரவு அலட்சியப்படுத்தப்பட்டது. தி.மு.க. ஆட்சி போய் அ.தி.மு.க. அரசு மே 21, 2001இல் ஆட்சிக்கு வந்தது. அ.தி.மு.க. அரசும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அலட்சியப்படுத்தியது. அய்ந்தாண்டுகளுக்கு யாரையும் வேலை என்று வாய் திறக்கவிடவில்லை. "பூச்சாண்டி' அதட்டிய குழந்தையாகக் கிடந்தனர் மக்கள். மீண்டும் மே 26, 2006இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது.

இந்தத் தீர்ப்புக்குப் பிறகு ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன. இதற்கிடையில் 18.9.2006 அன்று 1000 கல்லூரி விரிவுரையாளர்களை நிரப்புவதாக விளம்பரம் அளித்திருந்த இன்றைய அரசு, அதிலும் 522 தலித் பின்னடைவுப் பணியிடங்களைப் பற்றி எதையும் குறிப்பிடவில்லை. 14.1.2000 அன்று வழங்கிய நீதிமன்றத் தீர்ப்பை அரசு மதிக்கவில்லை. அது கொடுத்த வாக்குறுதிகள் அலட்சியத்தாலும், அதிகார மெத்தனத்தாலும் அந்த நீதிமன்ற வளாகத்திலேயே பறக்க விடப்பட்டுவிட்டன. எங்களுக்குரிய ஒதுக்கப்பட்ட, பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புங்கள் என்று கேட்க உணர்வுள்ள எந்த தலித் பட்டதாரிகளும் முன் வரவில்லை. பொதுநல வழக்கொன்றின் மூலம் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பின்னடைவுப் பணியிடங்களில் விரிவுரையாளர் பதவிகளை உடனே நிரப்பும்படி கேட்டிருந்தார். முந்தைய தீர்ப்புக்குப் பிறகு ஆறு ஆண்டுகள் கழித்துப் போடப்பட்ட இவ்வழக்கின் மீது (W.P. 50131/06) 26.7.2007 அன்று நீதிமன்றம் தனது தீர்ப்பினை அளித்தது.

G.O நீதிபதி எஸ்.கே. முகோபாத்தியா, “அரசியல் கட்சிகள் பொது நல வழக்கினை தொடுக்க முடியாது. எனினும் பாதிக்கப்பட்டவர்கள் உயர் கல்வித் துறை செயலாளரிடமோ, ஆதிதிராவிடர் நலத்துறையிடமோ விண்ணப்பம் தரலாம். நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நீதிமன்றத்தை நாடலாம்'' என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். நாட்டிலுள்ள குடிமக்களின் கடைசிப் புகலிடமாக நீதிமன்றங்கள் தான் இருக்கின்றன. அந்த நீதிமன்றங்கள் கூட, தலித்துகளுக்கு புகலிடமளிப்பதில்லை; அவர்களை உள்நாட்டு ஏதிலிகளாக்கி விடுகின்றன. டாக்டர் கிருஷ்ணசாமியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அப்படித்தான் பார்க்க வேண்டும்.

2003இல் "டெஸ்மா' சட்டத்தில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் செ. குப்புசாமியும்; உச்ச நீதிமன்றத்தில் மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியின் டி.கே. ரங்கராஜனும் தொடுத்த பொது நல வழக்குகளை தள்ளுபடி செய்யாமல் விசாரித்து தீர்ப்பளித்த நீதிமன்றங்கள், ஒரு தலித் அரசியல் கட்சித் தலைவர் பொது நல வழக்கு தொடுத்த போது மட்டும் அதைத் தள்ளுபடி செய்து விட்டன. எல்லா வழிகளும் அடைபட்டு விட்டன. மேலும் நகர முடியாதபடி தடுப்பரண் எழுப்பப்பட்டுவிட்டது. இப்படியே ஓராண்டு காலம் கழிந்தது.

திடீரென்று கவிந்த அந்தக் கொடும் மவுனத்தை உடைப்பதற்கு முன் வந்தõர் பேராசிரியர் அய். இளங்கோவன். கல்லூரிப் பணியிலே அவர் இருப்பதால் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்த பல மனுதாரர்களை அணுகுவதற்கான வாய்ப்பு அவருக்கு இருந்தது. ஆனால் அணுகியவர்கள் வழக்குப் போட மறுத்து விட்டார்கள். இதற்கு முன்னர் வழக்குப் போட்ட ஒருவருக்கு வேலைக்கான உத்தரவாதம் பறிபோனது என்று உயர் கல்வி பட்டதாரிகளிடையேயும், வேலை தேடுவோரிடையேயும் நிலவிய வதந்தி அதற்கொரு காரணம். ஆனால் சில பெண்கள் வழக்குப் போட முன்வந்ததாக இளங்கோவன் கூறுகிறார்: “பெண்கள் தான் வழக்குப் போட முன்வந்தார்கள். வாணியம்பாடியைச் சேர்ந்த தென்னமுதன் மகள் வித்யா குமாரியும், வேலூரைச் சார்ந்த கவுதமின் மகள் செல்வகுமாரியும் தான் அவ்வாறு முன்வந்தவர்கள். அதே போல சென்னையில், ‘புரொபஷனல் கூரியரில்' பணியாற்றி வந்த டி. தனபால் என்பவர் கூட முன்வந்தார். வாணியம்பாடியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் கையெழுத்து மட்டும் போடுவேன் என்றார்.''

மேலே குறிப்பிடப்பட்ட இம்மூவருக்கும் 522 விரிவுரையாளர் பணிநியமனத்தில் வேலை கிடைக்கவில்லை! அதற்குக் காரணம் இவர்களுக்குப் போதிய அனுபவ மதிப்பெண்கள் இல்லை என்பது தான். செல்வகுமாரி பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர்; வித்யாகுமாரி பாலிடெக்னிக்கில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். டி. சுப்பிரமணியன், புரபஷனல் கூரியரில் பணி புரிகிறார்.

உயர் கல்வி பட்டதாரிகள் யாரும் முன்வராத நிலையில், ‘தலித் முரசு' சார்பாக 25.9.2007 அன்று அவ்விதழ் ஆசிரியர் புனித பாண்டியன் ஒரு பொது நல வழக்கினைத் தொடர்ந்தார் (W.P. எண்.31258/07). அவரைத் தொடர்ந்து வித்யாகுமாரி மற்றும் செல்வகுமாரி ஆகியோர் (வ.எண்.31603/07) வழக்கினைத் தொடர்ந்தனர். இவ்வழக்குகளுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட உயர் கல்வித் துறை அரசாணையில் (எண்.216, நாள் 5.7.2007), “1998 அறிக்கையின்படி ஆதிதிராவிடருக்கான பின்னடைவுப் பணியிடங்கள் 595 என கணக்கிடப்பட்டது. இவற்றுள் 73 விரிவுரையாளர்கள் அரசாணை 635/14.12.98இன் படி பணியமர்த்தப்பட்டு விட்டனர்.

மீதமுள்ள 522 பணியிடங்கள் 3 கட்டங்களாக நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, முதற்கட்டமாக 300 பணியிடங்களை நிரப்ப அரசு ஆணையிடுகிறது. மீதமுள்ள 222 பின்னடைவுப் பணியிடங்களை, அரசுக் கல்லூரிகளில் சுயநிதிப்பாடப் பிரிவுகளை முறையான பாடப்பிரிவுகளாக மாற்றுவதாலும் மற்றும் சுழற்சி முறையை அறிமுகப்படுத்துவதாலும் உருவாக்கப்படும் விரிவுரையாளர் பணியிடங்களில், 122 பணியிடங்களை இவ்வினத்தவரைக் கொண்டு சிறப்பு நியமனம் மூலம் நிரப்பலாம் எனவும், மூன்றாவது கட்டமாக ஓய்வு பெறுபவர்களால் இக்கல்லூரிகளில் காலியாகும் விரிவுரையாளர் பணியிடங்களில், மீதமுள்ள 100 பணியிடங்களை சிறப்பு நியமனம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்களைக் கொண்டு நிரப்பலாம் எனவும் முடிவு செய்து, அரசு அவ்வாறே ஆணையிடுகிறது'' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே உருவாகி நிரப்பப்படாமல் இருக்கும் பணியிடங்களே பின்னடைவுப் பணியிடங்கள் என்று கருதப்படும். ஆனால் இனிமேல் உருவாகப் போகும் பணியிடங்களையும் இதனோடு சேர்த்து அரசு கணக்குச் சொன்னது. எனவே, இப்பின்னடைவுப் பணியிடங்களை உடனடியாக முழுவதுமாக நிரப்ப ஆணையிட வேண்டும் என்று பேராசிரியர் அய். இளங்கோவன், உயர் நீதிமன்றத்தில் 22.10.2007 அன்று பொது நல வழக்கு ஒன்றினை தொடர்ந்தார் (W.P.33637/07). இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஏ.பி.ஷா மற்றும் வி. ராமசுப்பிரமணியம் ஆகியோர், இரண்டு மாதங்களுக்குள் 522 தலித் விரிவுரையாளர் பணியிடங்களையும் அரசு நிரப்ப வேண்டும் என 19.11.2007 அன்று உத்தரவிட்டனர்.

வழக்கம் போலவே அரசு இரண்டு மாதங்கள் கடந்த பின்னரும் இப்பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் இப்பின்னடைவுப் பணியிடங்களை நிரப்ப முயற்சிக்காததால், பேராசிரியர் இளங்கோவன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்று மேலும் ஒரு வழக்கை (நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 296/2008) 11.3.2008 அன்று தொடுத்தார். வழக்கு விசாரணை, நீதிபதி டி. முருகேசன் மற்றும் நீதிபதி பெரிய கருப்பையா ஆகியோர் அடங்கிய சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பென்ஞ்ச் முன்பு 18.3.2008 அன்று விசாரணைக்காக வரவிருந்தது.

வழக்கிலிருந்து தப்பிக்க அவசர அவசரமாக 18.3.2008 அன்று பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவதற்கான செய்தித்தாள் விளம்பரம் வெளியிடப்பட்டது. இப்போதும் அரசின் அலட்சியம் போகவில்லை. இளங்கலைப் பட்டத்தையும் முதுகலைப்பட்டத்தையும் ஒரே முதன்மைப் பாடத்தில் வைத்திருப்பவரே - இப்பணி நியமனத்திற்கு தகுதியானவர் என்று அந்த விளம்பரத்தில் அரசு அறிவித்திருந்தது. பேராசிரியர் அய். இளங்கோவன் மீண்டும் நீதிமன்றத்தை நாடினார். அவரால் மேலும் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது (W.P. 9586/2008). கல்லூரி விரிவுரையாளர் பணியிடம் முதுகலைப் பட்டத்தைக் கொண்டே தேர்வு செய்யப்படுவதால், அடிப்படைத் தகுதியாக ஏதாகிலும் ஒரு பட்டப் படிப்பு இருந்தால் போதும் என்ற அவரின் வாதத்தை நீதிமன்றம் ஒப்புக் கொண்டு, அதையே தீர்ப்பாகவும் 28.4.2008 அன்று அளித்தது. இதனைத் தொடர்ந்து அவமதிப்பு வழக்கு விசாரணை இறுதியாக வரவிருந்த 19.9.2008 அன்று, விரிவுரையாளர் பணி நியமனப் பட்டியல் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டது.

பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் இப்பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆறு ரிட் மனுக்கள் தொடுக்கப்பட்டு, மிக நீண்ட நீதிமன்றப் போராட்டங்கள் நடத்தப்பட்ட பிறகு, நீதிமன்ற ஆணையின் படி நிரப்பப்பட்ட பணியிடங்களை அரசு இன்று தாமே முன்வந்து நிரப்பியதாகக் கூறி விழா வைத்து நம்பச் சொல்கிறது. கோப்பையில் நெய் வழிகிறது என்றால், கேட்டுத்தான் ஆகவேண்டும் போலிருக்கிறது!

தலித் மக்கள் தங்களுடைய உரிமைகளை இழக்கிறபோது தன்னை நாடி கெஞ்ச வேண்டும் என்று அரசு நினைக்கிறது. நீதிமன்றம் சென்று ஆணை பெற்று வந்தாலோ, நானே செய்தேன் என்று தனது அதிகாரத்தை காட்டிக் கொள்கிறது. எப்படியானாலும் அதிகாரத்தின் காலடியில் தலித் மக்கள் எப்போதும் விழுந்து கிடக்க வேண்டும் என்பது தான் அரசின் எண்ணம். இருக்கின்ற சட்டங்களையும், உரிமைகளையும் கூட நீதிமன்றத் தலையீடும், அறிவுறுத்தலும் இன்றி தலித் மக்களால் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை நீடிக்கிறது எனில், ஜனநாயக அரசின் கடமைதான் என்ன?

“சட்டம் எவ்வாறு இயற்றப்படுகிறது என்பதை விடவும் அது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதுதான் முக்கியமானது'' என்கிறார் அம்பேத்கர். உண்மைதான். சட்டத்தை நடைமுறைப்படுத்த தடையாக இருப்பது, நமது நாட்டு நிர்வாகத்தினரின் ஆதிக்க சிந்தனைதான். இதற்கு மிகச்சிறந்த சான்றாக இவ்வழக்கின்போது நடைபெற்ற நீதிமன்ற வாதமே இருக்கிறது. பேராசிரியர் அய். இளங்கோவன் அவர்களின் வழக்கிற்கு எதிராக அரசுத் தரப்பில் நேர்நின்ற வழக்குரைஞர் அரசின் கருத்தினை தமது வாதத்தில் தெளிவாக்கியுள்ளார்:

“அரசு ஏற்கனவே பணிநியமனம் செய்த 1000 விரிவுரையாளர்களில், 222 இடங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கியுள்ளது. இப்போது பின்னடைவுப் பணியிடங்கள் என்ற வகையில் 522 இடங்கள் கோரப்படுகின்றன. இன்னும் செய்யப்போகிற 1000 பணி நியமனத்திலும் இடஒதுக்கீட்டின்படி மேலும் 200 இடங்கள் வழங்கப்படலாம். இப்படி ஒரே நேரத்தில் 900-க்கும் மேற்பட்ட விரிவுரையாளர் பணியிடங்களில் தாழ்த்தப்பட்டவர்களை நியமித்தால் உயர் கல்வியின் தரம் பாதிக்கப்படும்...'' அப்போது நீதிபதி குறுக்கிட்டு, “தமிழ்நாட்டில் 69 சதவிகித இடங்கள் ஒதுக்கீட்டின் படிதான் நிரப்பப்படுகின்றன. அப்படியெனில் இந்த ஒதுக்கீட்டின் படி நிரப்பப்படும் இடங்களால் கல்வியின் தரம் பாதிக்கப்படும் என்று சொல்ல விரும்புகிறீர்களா?'' என்று கேட்டிருக்கிறார். அய். இளங்கோவன் சார்பில் வாதிட்ட வழக்குரைஞர் அரி பரந்தாமன், “அரசின் கருத்து இதுவானால், அதை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்'' என்று வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் அரசு பிரமாணப் பத்திரம் எதையும் வழங்கவில்லை. அப்படி வழங்காவிட்டாலும், அரசின் நிலைப்பாடு தெளிவாகிவிட்டது!

“அடித்தள மக்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோரின் நலனில் அக்கறை கொண்டதுதான் கழக அரசு'' என்று இப்பணி நியமன ஆணை வழங்கும் விழாவிலே பேசியிருக்கிறார், உயர் கல்வித்துறை அமைச்சர். “பின் தங்கியவர்கள் என்பதற்கு பதிலாக பிற்படுத்தப்பட்டோர் என மாற்றியது தி.மு.கழகம்'' என்றிருக்கிறார் முதல்வர். மகிழ்ச்சிதான். ஆனால் பேசுவதும், எழுதுவதும் மட்டுமே தலித் மக்களுக்கான தீர்வாக ஒருபோதும் ஆகிவிடாது. பின்னடைவு என்பது சுயமரியாதைக்கு கேடானது. தலித் மக்கள் பின்தங்கிவிடக்கூடாது என்பது முதல்வரின் விருப்பமாக அவ்விழாவில் ஒலித்திருக்கிறது. தலித் மக்களின் உள்ளக்கிடக்கையும், உரிமைக் குரலும் கூட அதுவேதான். ஆனால் இச்சாதிய சமூகமும், அரசதிகாரமும் தான் அவர்களைப் பின்னடைய வைக்கிறது. அவர்களாகவே ஒருபோதும் பின்தங்கி விடுவதில்லை.

30.9.2008 அன்று சென்னைப் பல்கலைக் கழக பவழ விழா அரங்கில் முதல்வரால் பணி நியமன ஆணை வழங்கப்பட்ட விழாவிலே, சுபாஷ் சந்திரன், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரின் முயற்சிகளைப் பற்றியோ, பேராசிரியர் அய். இளங்கோவன் அவர்களின் தொடர் வழக்குகளால் நீதிமன்றம் அரசுக்கு விதித்த உத்தரவு மற்றும் கெடு ஆகியவற்றை குறித்தோ எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இந்த முயற்சிகள் அனைத்தும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. இப்பணி நியமன ஆணைகளை பெற்றுக் கொண்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இம்முயற்சிகளைப் பற்றி ஒன்றும் தெரியாது. இப்பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் பற்றி இன்று பல கருத்துக்கள் நிலவுகின்றன.

செத்த பிணங்களை தூக்கி வைத்துக் கொண்டு நிவாரணம் கோரி அழுகிறவர்களால், ஒரு காலும் போராட முடியாது. நமக்குத் தேவை நிவாரணமல்ல; உரிமை. இலக்கை அடையும் வரை போராடுவதே போராட்டம்! அப்படிப் போராடிய "தலித் முரசு' மற்றும் பேராசிரியர் அய். இளங்கோவன் ஆகியோரின் முயற்சிகள் இல்லாமல் இருந்திருந்தால், இப்பின்னடைவுப் பணியிடங்கள் அடைவிலே போடப்பட்டிருக்கும். நிரப்பப்பட்டிருக்காது.

1996 தொடங்கி, 2008 வரையுள்ள நெடுங்காலத் தொடரில் இங்கொன்றும் அங்கொன்றுமாக பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பச் சொல்லி ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. ஆனால் அவை போராட்டங்களாக மாற்றப்படவில்லை. அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் அறிக்கைப் போர் நடத்துவதோடு நின்றுகொண்டன. டாக்டர் கிருஷ்ணசாமி மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு கூட ஒரு போராட்டமில்லை. உயர் கல்விப் பட்டதாரிகளோ நாகரீக வார்த்தையில் சொல்வதெனில், "தன்னுணர்வோடு' ஒதுங்கி நின்று கொண்டனர். போராடினால் வாழ்க்கை போய்விடும் என்ற முட்டாள்தனமான பொதுக் கருத்து அவர்களிடையே நிலவியது. அய். இளங்கோவன் அவர்களின் முயற்சியால் நீதிமன்றம் ஆணையிட்ட பிறகே அரசு இப்பணியிடங்களை நிரப்பியிருக்கிறது. நீதிமன்ற ஆணை மூலம் "தலித் முரசு'ம் பேராசிரியர் இளங்கோவனும் அரசை செய்ய வைத்திருக்கிறார்கள்.

இப்பணி நியமனங்களை அடிப்படையாகக் கொண்டு தலித் மக்களுக்கு பல்வேறு கேள்விகள் எழுகின்றன. சுபாஷ் சந்திரன் வழக்கில், அய்ந்து ஆண்டுகளுக்குள் பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பிவிடுவதாக வாக்குறுதி கொடுத்த முந்தைய தி.மு.க. அரசும், அடுத்து வந்த அதிமுக அரசும் 1998லிருந்து 2006-க்குள் ஏன் அதை நிறைவேற்றவில்லை? புதிதாகப் பதவியேற்ற தி.மு.க. அரசு முதலில் நியமனம் செய்த 1000 விரிவுரையாளர் பணி இடங்களுடன் 522 பின்னடைவுப் பணியிடங்களை ஏன் இணைக்கவில்லை? அதற்குப் பின்னர் நீதிமன்றம் விதித்த காலக்கெடுவான 2 மாதங்களில் இப்பணியிடங்கள் ஏன் நிரப்பப்படவில்லை? நீதிமன்ற அவதூறு வழக்கு போடும் வரைக்கும் காத்திருந்தது எதற்காக? 2007ஆம் ஆண்டு டிசம்பரில் நிரப்பப்பட்ட 1000 விரிவுரையாளர்களுக்கு விழா வைத்து ஆணை வழங்கப்படவில்லையே. இதற்கு மட்டும் எதற்கு விழா? பிற துறைகளில் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கிற தலித் மக்களுக்கான 16,943 பணியிடங்களை எப்போது நிரப்பப் போகிறார்கள்?

அரசின் வாக்குறுதிகளில் மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. ஆண்டுக்கு ஒரு முறை சட்டப் பேரவையில் தரப்படும் அரசின் வாக்குறுதி நிறைவேற்றத்தை ஆய்வு செய்வதற்கு என்று ஒரு குழு உண்டு. அந்த சட்டப்பேரவை உறுதி மொழிக் குழுவுக்கே கூட, அரசின் வாக்குறுதிகளின் மீது நம்பிக்கை இருக்காது என்றே தோன்றுகிறது. சமூக அளவிலும் அரசியல் மற்றும் பொருளாதார நிலைகளிலும், கல்வியிலும் நம்பிக்கைகளை இழந்து நிற்கும் தலித் மக்களுக்கோ வாக்குறுதிகள் வெறும் சொற்களே. சொற்களை உயிராக்கி அம்மக்களை நம்பிக்கை கொள்ளச் செய்வது, அரசின் செயற்பாட்டில்தான் இருக்கிறது.

தலித் மக்கள் மற்றும் பழங்குடியினர் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் எந்த வேறுபாடுமின்றி, எல்லா அரசுகளும்
தங்களின் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றன. இந்த பொதுக் கருத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று தி.மு.க. அரசு நினைக்குமானால், உடனடியாக நிரப்பப்படாமல் இருக்கின்ற 16,943 பணி இடங்களை நிரப்ப வேண்டும். அப்போது தான் எதிர் வரும் காலங்களில் தலித் மக்கள் இந்த அரசின் மீது நம்பிக்கை கொள்வார்கள். "ஆத்தாள் பெருமையை அண்ணன் வீட்டில் போய் சொன்ன கதை'யாக, தங்கள் பெருமையை மட்டுமே தம்பட்டம் அடித்துக் கொண்டு தொடர்ந்து இந்த அரசும் இருக்குமானால், அதனால் அவர்களுக்குக் கிடைக்கப் போவது தலித் மக்களின் வெறுப்பும், புறக்கணிப்புமே


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com