Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
அக்டோபர் 2008


கோழைகளான ஆண் கடவுள்களா பெண் கடவுள்களுக்கு சக்தி கொடுத்தார்கள்? - II

Ambedkar வேதத்தில் வரும் பெண் கடவுள்களையும் புராணப் பெண் கடவுள்களையும் ஒப்பிடும்போது, சில சுவையான கேள்விகள் எழுகின்றன. வேத இலக்கியத்தில் அசுரர்களுக்கு எதிரான போர்கள் பற்றிய குறிப்புகள் நிறைய உள்ளன. ஆனால், அசுரர்களுக்கு எதிரான இந்தப் போர்களில் எல்லாம் ஆண் கடவுள்களே போர் புரிகிறார்கள். வேதங்களில் பெண் கடவுள்கள் போரில் பங்கேற்கவில்லை. வேத காலத்தில் அசுரர்களுடன் ஆண் கடவுள்கள் மட்டுமே போரிட்டதற்கு பதிலாக, புராண காலத்தில் பெண் கடவுள்கள்தான் போரிடுகிறார்கள்.

வேதகாலக் கடவுள்கள் செய்ததைப் புராணப் பெண் கடவுள்கள் செய்ய வேண்டியிருந்தது. ஏன்? புராண காலங்களில் கடவுள்கள் இல்லாமல் போனார்கள் என்பது காரணமாக இருக்க முடியாது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய கடவுள்கள் இருந்தார்கள். அசுரர்களுடன் போரிடுவதற்கு இவர்கள் இருந்தபோது, ஏன் பெண் கடவுள்கள் போரிட வைக்கப்பட்டார்கள்?

புராணங்களில் பெண் கடவுள்களில் பல பெயர்கள் காணப்பட்ட போதிலும் உண்மையில் அய்ந்து பெண் கடவுள்கள் தான் இருக்கிறார்கள். சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, துர்க்கை, காளி. சரஸ்வதியும், லட்சுமியும் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் மனைவிகள். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் புராணக் கடவுள்களாக ஏற்கப்பட்டவர்கள். பார்வதி, துர்க்கை, காளி ஆகியோர் சிவனின் மனைவிகள். ஆனால் சரஸ்வதியும் லட்சுமியும் எந்த அசுரர்களையும் கொல்லவில்லை. வீரச் செயல்கள் எதையும் செய்யவில்லை. இது ஏன் என்பது தான் கேள்வி.

பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் ஆற்றல் உண்டு. சக்தி கொள்கையின்படி இது அவர்களுடைய மனைவிகளிடம் உறைந்திருக்க வேண்டும். அப்படியானால் சரஸ்வதியும் லட்சுமியும் அசுரர்களுடன் போர் செய்யாதது ஏன்? சிவனின் மனைவிகள் மட்டுமே இதைச் செய்கிறார்கள். இங்கேயும் பார்வதியின் பங்கு துர்க்கையின் பங்கிலிருந்து வேறுபட்டுள்ளது. பார்வதி ஒரு சாதாரணப் பெண்ணாகக் காட்டப்படுகிறார். துர்க்கைக்குக் கூறப்படுவது போன்ற வீரச் செயல்கள் பார்வதிக்குக் கூறப்படவில்லை.

துர்க்கையை போலவே பார்வதியும் சிவனின் சக்தியாவாள். அப்படியென்றால் அவளிடம் றைந்த சிவனின் சக்தி மந்தமாகவும், உறங்குவதாகவும், இன்னும் சொல்லப்போனால் இல்லை என்று கூறும் அளவுக்குச் செயலற்றதாகவும் இருந்தது ஏன்?

தர்க்கரீதியாகப் பார்க்கும் போது, ஒவ்வொரு கடவுளுக்கும் சக்தி இருக்கிறது என்றால், வேதக் கடவுள்களுக்கும் அது இருந்திருக்க வேண்டும். அப்படியானால் வேதக் கடவுள்களின் மனைவிகளுக்கு இந்தக் கொள்கை ஏன் கூறப்படவில்லை? வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது, புராணக் கடவுள்களிடம் சக்தி இருந்தது என்று கூறுவதற்கு நியாயம் எதுவும் இல்லை. மேலும், பார்ப்பனர்கள் துர்க்கையை மட்டுமே அசுரர்களை அழிக்கவல்ல வீராங்கனையாக ஆக்கியதன் மூலம் - தங்களுடைய கடவுள்களையெல்லாம் பரிதாபமான கோழைகளாக ஆக்கி விட்டதை உணரவில்லை.

கடவுள்கள் அசுரர்களை எதிர்த்துப் போரிட்டு வெல்ல முடியாது என்றும், தங்களைக் காப்பாற்றுவதற்குத் தங்கள் மனைவிகளின் உதவியைக் கெஞ்சிக் கேட்க வேண்டியிருந்தது என்றும் தோன்றுகிறது. அசுரர்களை எதிர்ப்பதில் புராணக் கடவுள்கள் எவ்வளவு திறனற்றவர்களாகப் பார்ப்பனர்களால் காட்டப்படுகிறார்கள் என்பதற்கு, மார்க்கண்டேய புராணத்திலிருந்து ஓர் எடுத்துக்காட்டே போதுமானது:

“அசுரர்களின் அரசனான மகிஷன் ஒரு முறை தேவர்களைப் போரில் தோற்கடித்து, அவர்களை வறுமைக்குள்ளாக்கினான். தேவர்கள் பிச்சைக்காரர்களாகி பூமியில் திரிந்து கொண்டிருந்தனர். இந்திரன் இவர்களை முதலில் பிரம்மாவிடமும் பின்பு சிவனிடமும் கூட்டிச் சென்றான். இவர்கள் இருவரும் தேவர்களுக்கு உதவ முடியாததால் விஷ்ணுவிடம் சென்றார்கள். விஷ்ணு தேவர்களின் பரிதாப நிலையைக் கண்டு உள்ளம் வருந்தியதால், அவரது முகத்திலிருந்து ஒளி வெள்ளம் புறப்பட்டது. அவற்றிலிருந்து ‘மகாமாயை' (துர்க்கையின் மற்றொரு பெயர்) என்ற பெண் உருவம் தோன்றியது.

மற்ற கடவுள்களின் முகங்களிலிருந்தும் ஒளி வெள்ளங்கள் புறப்பட்டு, மகாமாயையினுள் புகுந்தன. இதனால் மகாமாயை ஒரே ஒளிமயமாக நெருப்பு மலையைப் போல ஆகிவிட்டார். பின்னர் கடவுள்கள் தங்களுடைய ஆயுதங்களை அந்தப் பயங்கரமான உருவத்திடம் கொடுத்து விட்டார்கள். அவள் அச்சமூட்டும்படியான பெரும் கூச்சல் எழுப்பிக்கொண்டு, காற்றில் மேலே பாய்ந்து அசுரனைக் கொன்று தேவர்களின் துன்பத்தைத் தீர்த்தாள்.''

இப்படிக் கோழைகளான கடவுள்களிடம் என்ன வல்லமை இருக்க முடியும்? அவர்களிடம் வல்லமை இல்லையென்றால், அவர்கள் எப்படி அதைத் தங்கள் மனைவிகளுக்குக் கொடுக்கமுடியும்? பெண் கடவுள்களிடம் சக்தி இருப்பதால் அவர்களை வழிபட வேண்டும் என்று கூறுவது, ஒரு புதிர் மட்டுமல்ல; பொருந்தாத பொருளற்ற கூற்றுமாகும். சக்திக் கொள்கை ஏன் உருவாக்கப்பட்டது என்பதற்கு விளக்கம் தேவைப்படுகிறது. சந்தையில் ஒரு புதிய பொருளை விற்பனைக்குக் கொண்டு வருவதற்காக, பார்ப்பனர்கள் பெண் கடவுள்களை வழிபடும் முறையைத் தொடங்கி வைத்து, தங்கள் கடவுள்களைத் தாழ்ந்த நிலைக்கு இறக்கி விட்டார்களா?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com