Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
அக்டோபர் 2008
ஜாதியும் வர்ணமும்
ஞான. அலாய்சியஸ்

உலக சமுதாயங்கள் அனைத்தும் அன்றும் சரி, இன்றும் சரி, ஒருங்கிணைந்து இயங்குவதில்லை. பல்வேறு அடிப்படையில் அமைந்த சிறிய, பெரிய குழுக்களை உள்ளடக்கிய கூட்டுச் சமுதாயங்களாகவே இயங்குகின்றன. இக்குழுக்கள் தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையில் அமைந்து செயல்படுகின்றன. நவீனத்தின் தொடக்க காலங்களில் இம்மாதிரியான குழுக்கள் எல்லாம் மறைந்து, சமுதாயங்கள் ஒருங்கிணைந்து செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்விதமாக சமூகத்துக்குள்ளான குழுக்கள் மறைந்து விடவில்லை. மாறாக, நவீனமடைந்த சமுதாயங்களில் குழுக்களின் அடிப்படையில் மாறுதல் ஏற்பட்டது.

aloysius பண்டைய சமுதாயங்களில் பல, மொழி அடிப்படையிலோ, மதத்தின் அடிப்படையிலோ ஒருங்கிணைக்கப்பட்டிருந்த போதிலும் - அவற்றுக்குள் பிறப்பாலோ, சூழ்நிலைகளாலோ, வேற்று இனக் கலப்பினாலோ இணைக்கப்பட்ட சிறு குழுக்கள் தொடர்ந்து செயல்பட்டே வந்தன. இவ்வகையான பண்டைய குழுக்களின் அடிப்படை அம்சங்கள், விரைவில் மாறாதவையாகவும், தொடர்ந்து நீடிக்கும் தன்மையுடையதாகவும் இருந்தன. மேலும் இக்குழுக்களில் தனி
மனிதர்கள் பெரும்பாலும் தன்னிச்சையாகப் போய் சேர்வதில்லை. அவர்களது உறுப்பினர் நிலை பெரும்பாலும் வழிவழியாக வருவது; பிறப்பால் ஏற்படுவது. ஆனால் நவீனத்தில் இம்மாதிரியான மாறாத, மறையாத குழுக்களின் அடிப்படையில் மாறுதல் ஏற்படுவதில்லை.

பிறப்பாலோ அல்லது பிறப்பைச் சார்ந்த ஓர் அம்சத்தின் அடிப்படையில் ஏற்பட்ட குழுமங்கள் மறைந்தோ, மங்கியோ போகவும் தன்னியல்பாக விரைவில் தோன்றி அழியக்கூடிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டே குழுக்கள் தோன்றவும் செய்கின்றன. ஆனால் இம்மாறுதல் எங்கும் எக்காலமும் ஒரே சீராக ஏற்படுவதில்லை. ஏனெனில் நவீனம் என்பது, ஒரு கருத்து லட்சியமே அன்றி வரலாற்று விளக்கம் அல்ல. ஆகவே எல்லா சமுதாயங்களிலும் குழுமங்களின் அடிப்படைகள் கலந்தே நிற்கும். மிக நவீனம் அடைந்துள்ளதாகக் கருதப்படும் மேலைச் சமுதாயங்களிலும் பிறப்பு சார்ந்த குழுக்கள் இல்லாமல் இல்லை. ஆனால் இதில் வேறுபாடு என்னவென்றால், அத்தகைய குழுக்கள், சமூக அரசியல் மதிப்பீடுகளில் முன்பு போலல்லாமல் இன்று மங்கியும் மழுங்கியுமே செயல்படுகின்றன.

பிறப்பும் பிறப்பு சார்ந்த அம்சங்களும், மனிதனுக்கும் மனித சமுதாயங்களுக்கும் முக்கியம் அல்ல. அம்மாதிரியான அம்சங்களின் அடிப்படையில் மனிதனையோ குழுக்களையோ அல்லது முழு சமுதாயங்களையோ எடை போடுவது மனிதத்தன்மை ஆகாது என்ற கொள்கை, கருத்தளவிலாவது ஓங்கி நிற்பதே இதற்குக் காரணம். நவீனத்தில் சமூக மதிப்பீடுகளின் அடிப்படை பிறப்பு அல்ல; செயல்பாடே என்ற புதிய நம்பிக்கையே கருத்தளவிலிருந்து இயங்குகிறது.
பிறப்பின் அடிப்படையில் குழுக்கள் ஏற்படுவதும், இக்குழுக்கள் அதே பிறப்பின் அடிப்படையில் தன்னை உயர்த்திக் கொள்வதும், பண்டைய சமுதாயங்களில் விரவிக்கிடந்த உண்மை என்பதை வரலாற்றின் மூலம் அறியலாம். இன்று "பிறப்பின் அடிப்படையில் சமூக மதிப்பீடு' என்னும் கொள்கையிலிருந்து விலகி விட்டதாக அறியப்படும் மேலைச் சமுதாயங்கள் - நேற்றுவரை அம்மாதிரியான அடிப்படைகளிலேயே இயங்கி வந்தன.

சமூகங்கள் பொதுவாக ஓதுவோர், ஆள்வோர், உழைப்போர் என்று பெருங்குழுக்களாக செயல்பட்டு வந்தன. இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், வரலாற்றில் பல்வேறு மோதல்கள் மூலம் தொடங்கிய இப்பிரிவுகள், இனக்குழுக்களாக மாறி, தனிமனிதர்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவ முடியாதபடி பிறப்பினால் வரையறுக்கப்பட்ட அரண்களாக மாறிவிட்டிருந்தன. ஆனால் இந்தக் கட்டுமானம் முதலில் கருத்தளவில் உடைக்கப்பட்டு, சிறிது சிறிதாக செயலளவுக்கும் கொண்டு வரப்பட்டது. பிறப்பினால் மதிப்பீடு என்னும் கொள்கையிலிருந்து அதற்கு எதிரிடையான, செயல்பாடுகளினால் மதிப்பீடு என்னும் மாற்றுக் கொள்கையை நோக்கி எழும் ‘அசைவு' இடப்பெயர்ச்சி அல்லது நிலை மாற்றத்தையே நவீனத்தின் உட்கருவெனக் கொள்ள வேண்டும்.

ஒரு சமூகத்தில், தனிமனிதனுக்கும் குழுக்களுக்கும் அவற்றின் பிறப்பு சார்ந்த தன்மைகளால் கொடுக்கப்பட்டு வந்த மதிப்பீடுகள் உயர்வோ, தாழ்வோ - குறைந்து கொண்டே வருகிறதா என்பதையும், அச்சமூகத்தில் பிறப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டு வந்த அதிகாரப்பங்கீடு, மாறியும் மறைந்தும் வருகிறதா என்பதையும் பொருத்தே - அச்சமுதாயம், நவீன, நல்லதொரு இலக்கை நோக்கி இடம் பெயர்கிறதா, இல்லையா என்பதை கணிக்க முடியும். இம்மாதிரியானதொரு விமர்சன - மதிப்பீட்டுக் களத்தில் நின்றே இன்றைய சாதிய சமுதாயத்தைப் பகுத்தறிய முடியும், வேண்டும். விமர்சன - மதிப்பீட்டுக் களத்தைத் தவிர்த்த ஆய்வும் வர்ணனையும், விடுதலைக்கான சமூக அறிவியலுக்கு வழிகோலாது.

aloysius சாதியும், சாதியமும் இன்று மாபெரும் சொல்லாடலாக, பல வகைப்பட்ட கருத்துக்களின் பொருளை நிர்ணயிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட ஒன்றாக விரவி நிற்கிறது. இது, இன்றைய நவீன இந்தியாவின் கட்டாயம் என்பதைப் பின்பு விவரிப்போம். அதற்கு முன்பு ‘சாதி' என்ற சொல் எதைக் குறிக்கிறது என்று சிந்தித்தால், அது இரு சமூக உண்மைகளை உள்ளடக்கியது என்று உணரலாம். ஒன்று, சாதி என்பது, பிறப்பாலும், பாலுறவாலும் ஒருங்கிணைக்கப்பட்ட அல்லது ஒருங்கிணைக்கப்பட்டதாக நம்பப்படும் இனக்குழுக்களைச் சுட்டுகிறது. இத்தகைய குழு அல்லது குழுக்கள், பல்வேறு அடிப்படையில் அமைந்தவையாக இருக்கலாம். தொழில் அடிப்படையிலோ, குறிப்பிட்ட சூழலியல் அடிப்படையில் எழுந்ததாகவோ, அல்லது தெய்வத்தையோ, சமயத்தையோ சார்ந்த குழுவாகவோ குழுக்களிடையே ஏற்பட்ட போரினால் பிரிந்து சென்ற ஒரு குழுவாகவோ இருக்கலாம். எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் பிரிந்து சென்ற கூட்டத்தார், நாளடைவில் சாதியாக உருவெடுப்பது, இந்திய வரலாற்றில் நாம் காணும் உண்மை. இந்தப் பொருளில் சாதி என்பது சாதிசனங்களைக் குறிக்கும்.

இச்சாதிகளுக்கிடையேயான உறவுகள் எப்பொழுதும் அமைதியாகவும் ஒருமைப்பாட்டுடனும் இயங்கின என்றும் சொல்வதற்கில்லை. எல்லா சமுதாயங்களையும் போலவே சாதிசமுதாயமும் சண்டை சச்சரவுகள், போர், அமைதி இவற்றின் மூலம் ஆதிக்க சாதி - அடிமை சாதி என்றபோக்குகளை தொடர வைத்தன. ஆதிக்கத்தின் அடித்தள சாதி சனங்களின் எண்ணிக்கை - தோள்பலம், சொத்து பலம், இருக்கும் இடங்களின் தன்மை, நீர்வளம், நிலவளம், இன்னும் பலவற்றைப் பொருத்தே அமைந்திருக்கும். இத்தகைய சமுதாயத்தில் ‘சாதி முறை' என்று ஒன்று இருந்ததில்லை. சமூக பலப் பரீட்சைகளில் வென்றவன் ஆதிக்க சாதி; தோற்றவன் அடிமைச்சாதி. ஆனால், வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவதுண்டு. ஆகவே ஆண்டான் சாதி அடிமை சாதியாவதும், அடிமைகள் பிறகு ஆண்டானாக மாறுவதும் கால இயல்பு.

ஆனால் இன்று நாம் சாதி என்று சொல்லும் போது, இந்த விளக்கம் மட்டும் சுட்டப்படுவதில்லை. சாதி என்றால் ‘சாதி முறை' என்ற ஒன்றும் குறிப்பிடப்படுகிறது. முறையென்னும் போது முறையாக வகுத்தது என்று பொருளாகிறது. அவ்வாறு வகுக்கப்பட்டதுதான் என்ன? அவ்வாறு வகுக்கப்பட்டதே "வர்ணமுறை'. சாதி என்பதன் பொருள் ‘வர்ணமுறை' என்று கொள்ளும்போது பிறப்பினால் உயர்வு - தாழ்வு கற்பிக்கப்படுகிறது. உயர்வு - தாழ்வு தோள்வலிமையின் மூலமோ, எண்ணிக்கையின் அடிப்படையிலோ, நிலம் முதலிய சொத்துக்களைக் கொண்டோ அல்லது கல்வி முதலான சிறப்பு குணங்களாலோ அல்லாமல் பிறப்பின் மூலம் என்று கற்பிக்கப்படுகிறது. இதன் உட்கருத்து என்னவெனில், இது மாற்ற முடியாதது, மாற்றவும் கூடாதது.

இம்மாதிரியான விளக்கத்தில் ஆயும் போது சாதிகள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருப்பதையே உணர்கிறோம். இத்தகைய அடுக்குகளில் சொருகப்படாத சாதியே இன்று கிடையாது. சமூகத்துக்குள் கட்டப்பட்ட இந்த அடுக்குமுறை, அரசு அமைப்புக்குள்ளும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உறுதிப்படுத்தப்படுவதையும் நாம் காணலாம். சாதிகள் ஒரு காலத்தில் ஆங்கங்கே சிதறி, குறைந்தபட்ச இடைச்செயல்பாடுகளோடு, பெருவாரியாகத் தனித்தியங்கும் தன்மை கொண்டவையாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில், இது ஒரு சாதி என்று ஒரு குழுவைச் சுட்டும்போது, அது ஏணிப்படியின் எந்தப்படியில் நிற்கிறது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. சாதியின் இந்த இரண்டாம் விளக்கத்தில் சமூக வாழ்வில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் உயர்ந்த சாதி உயர்ந்த சாதியே, தாழ்ந்தது தாழ்ந்ததே. மேலும் இம்மாதிரியான உயர்வு தாழ்வுகள் சொல்வதுபோல், முறை வகுத்தவர்களான பார்ப்பனர்கள் சொல்வது போல் வெறும் சமயசடங்குகளுக்காக மட்டுமே என்றும், ஒட்டுமொத்தமான சமூக வாழ்க்கையைப் பகுத்தாய்வதற்குப் பயன்படாதென்று வாதிடுவோரும் உண்டு.

ஆனால், சமூக வாய்ப்புகளும், அதிகாரங்களும், வள ஆதாரங்களும் ஒருங்கிணைக்கப்படாத, மய்யப்படுத்தப்படாத காலகட்டத்தில், ஏணிப்படிச் சமுதாயம் வெறும் சடங்கு முறையாகவே அன்று காட்சியளித்திருக்கலாம். ஆனால் இன்று சடங்கு முறையின் உட்கருவை சமூக முழுமையையும் உள்வாங்கிவிட்டதால், அடுக்குமுறை சமுதாயத்தின் எல்லா துறைகளிலுமே ஒரே மாதிரியாக வெளிப்படும்படியாகிவிட்டது. ஆகவே, அடுக்குமுறை சடங்குகள் சூழல் காரணமாக தொடங்கியிருந்தாலும் சுயமரியாதையில், சமூக அதிகாரத்தில், அரசியல் மற்றும் பொருளியலில் சமனமற்ற பங்கீட்டையே வலியுறுத்துகிறது. இது, சாதியக் கருத்தியலன்றி வேறல்ல.

சாதியின் இந்த இரண்டு விளக்கங்களும் வரலாற்றில் இரண்டு வெவ்வேறு ஊற்றுக்களிலிருந்து எழும்பியவை என்பது தெளிவு. "சாதிசனம்' என்ற இனக்குழுக்கள் வெகுகாலத்திய இயற்கை, சுற்றுச்சூழல் இவைகளின் செயல்பாடுகளாலும் அழுத்தங்களாலும் எழும்பி, மக்கள் தொகையின் குறைவு, ஊடகங்களின்மை இவற்றால் வளர்க்கப்பட்டு இன்றைய நிலைக்கு வந்துள்ளன. இவ்வேறுபாடுகளான - சாதி முறை அல்லது வர்ணமுறை என்பதோ ஒரு குறிப்பிட்ட கூட்டத்தாரால் முறையாக வகுக்கப்பட்டு, விதிக்கப்பட்டு பரப்பப்பட்டு வரும் ஒரு கருத்தியல். இதன் செயலாக்கம் சீராக இல்லாமலும் முழுமையடையாமலும் பல்வேறு உத்திகளின் மூலம் எதிர்க்கப்பட்டும் வருவதைக் காணலாம்.

சமூக அறிவியலின் தொடக்க காலங்களில் வர்ணமுறை காலத்தால் முந்தியது என்றும், முதலில் சாதிகள் நான்கு மட்டுமே என்றும், பிற இவைகளின் கலப்பால் எழுந்தவை என்றும் பலரால் கருதப்பட்டு வந்தன. ஆனால் வரலாற்றியலின் வளர்ச்சி - சிறப்பாக ஆரிய வடமொழிக்கு முற்காலத்திய பண்பாடுகள் பற்றி ஆய்வுகள் - சாதி பற்றிய கணிப்பை மாற்றிவிட்டன.
சுற்றுச்சூழல், தொழில், கடவுள் வழிபாடு, புலம் பெயர்ச்சி இவற்றின் அடிப்படையில் உருவான இனக்குழுக்கள் காலத்தால் மிக முந்தியவையாக அறியப்படுகின்றன. வர்ணமுறை மிகப்பிந்திய காலங்களில் இனக்குழுக்கள் மேல் திணிக்கப்பட்ட ஒரு கருத்தியலே என்ற உணர்வு இப்பொழுது மேலோங்கியுள்ளது. ஆனால் இன்றைய பிரச்சனை என்னவென்றால், வரலாற்றுப் போக்கில் இரண்டும் ஒன்றாகி, சாதி என்னும் சொல்லாடலாக உருவெடுத்து பொதுத்துறையை ஆக்கிரமித்துள்ளது.

இந்தப் பொருள் கலப்பு பெருமளவில் ஆதிக்க சாதிகளின் செயல்பாடுகளால் உருப்பெற்று, அவற்றின் ஆதிக்கத்தைத் தக்க வைக்கவே பயன்படுகிறது. ஆதிக்கத்திற்கும் அதனை எதிர்க்கும் அடிமட்டத்திற்கும் இடையே நடக்கும் இடையறாத கருத்தியல் போராட்டத்தில் சாதி பற்றிய இந்த இரண்டு விளக்கங்களும் ஒன்றுக்கொன்று மாறி நின்று, தோன்றி, ஆதிக்கத்தின் ஆதாரங்களை மறைக்கவும் மறுக்கவுமே உதவுகின்றன. சமூக அரசியலுக்குள்ளும் சமூக அறிவியலுக்குள்ளும் சாதி பற்றிய சர்ச்சை எழுவதையே ஆதிக்கம் விரும்புவதில்லை. சாதி என்னும் இலக்கை, அது தவிர்க்கவே முயலுகிறது. ஏனெனில் சாதியே அதன் அடிப்படை. எனவே சாதியைக் கூர்ந்து நோக்கும் எவ்விதக் கண்ணோட்டமும் ஆதிக்கத்திற்குப் பாதகமாகவே முடியும். ஆகவே ஆதிக்க கருத்தியல், சாதியைத் தவிர்ப்பதற்காக உலகப்பிரச்சனைகள் எல்லாவற்றையும் தனதாக்கிக் கொள்ளும். புதுப்புது பிரச்சனைகளை, பொதுவாக போலியானவற்றை எழுப்பிக் கொண்டேயிருக்கும்.

சாதியை ஒரு பிரச்சனையாக, எதிர்வினையாக அடிமட்டத்தினர் எழுப்பும் பொழுதுதான் சாதி ஆதிக்கத்திற்குத் தவிர்க்க முடியாத பிரச்சனையாகிறது. இவ்வாறாக எழுப்பப்படும் பிரச்சனையை எதிர்கொள்ளும் உத்தியாக இந்த இரண்டு விளக்கங்கள், ஆதிக்கத்திற்குத் துணைபுரிகின்றன. சிறப்பாக சாதி ஒழிப்புப் பிரச்சனையை அடிமட்ட ஒடுக்கப்பட்ட சாதிகள் எழுப்பும் பொழுது, அது சுட்டுவதெல்லாம் பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வர்ண முறையே. ஆனால் இதற்குப் பதிலாக, ஆதிக்கம் இனக்குழுக்கள் என்ற விளக்கம் மூலம் சாதி வசதியானது, தொன்று தொட்டு வருவது, சமூக காரியங்களுக்கு ஆதாரமானது, முக்கியமாக அடிமட்ட சனங்களுக்கு அடைக்கலம் போன்றது, ஏன் அது அவர்களது அடையாளம் என்று வாதிடும்.

இந்த வாதம் வர்ணமுறையினின்றும் அதனை ஒழிக்கவேண்டிய தேவையினின்றும் திசை திருப்பும் வாதமே. பொதுத்
துறையில் பிரச்சனையை உருவாக்குவது. சாதி என்ற இரு பொருள் கொண்ட ஒரு சொல் - கருத்து அல்ல; மாறாக பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வர்ணமுறையே. வர்ண முறை மறைந்தால் இனக்குழுக்களின் இறுக்கம் தளர்ந்து அதிகரிக்கும். குழுக்களிடையே பிறப்பால் உயர்வு தாழ்வு பற்றிய உணர்வுகளே, குழுக்களை இறுக்கமடையச் செய்கின்றன. இன்றைய காலகட்டத்தில் உயர்வு தாழ்வற்ற பல தரப்பட்ட "வெறும் வேற்றுமைகளினால் அறியப்படும் அல்லது உணரப்படும் இனக்குழுக்களால் நிறைந்ததே இந்தியா' என்ற மாயையை நிலைநிறுத்தவே, இறுக்கமடைந்த பிறப்பால் உறவு கொண்டாடும் இனக்குழுக்களின் ஆதிக்கம் மிகவும் பாடுபடுகிறது. இம்முயற்சிகள் சமூக அறிவியலில் தொடங்கி, அரசு கொள்கைகள், ஊடகங்கள் மற்றும் எளிய சமூக சொல்லாடல்களிலும் பரவி நிற்கின்றன. இந்த மாயையைக் கிழித்து பகுத்தறிவதே சமூக அறிவியலின் தொடக்கப்பணி.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com