Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
அக்டோபர் 2007
சாதியை ஒழிக்கும் வழி என்ன?

முன்னோட்டம்

1935 டிசம்பர் 12 அன்று, ‘ஜாத்பட்தோடக் மண்ட'லின் சாதி இந்துக்களின் சமூக சீர்திருத்த அமைப்பின் செயலராகிய திரு. சான்ட் ராமிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது:

அன்புள்ள டாக்டர் சாகிப்,

தங்கள் 5ஆம் தேதிய கடிதத்துக்கு மிக்க நன்றி. உங்கள் அனுமதியைக் கேட்காமல் அதைப் பத்திரிகையில் வெளியிட்டதற்கு மன்னிப்புக் கோருகிறேன். அதை வெளியிடுவதால் எந்தக் கெடுதலும் ஏற்படும் என நான் கருதவில்லை; ஆதலால் வெளியிட்டு விட்டேன். நீங்கள் மாபெரும் சிந்தனையாளர். உங்கள் அளவுக்கு சாதிப் பிரச்சனையைப் பற்றி ஆராய்ந்தவர் வேறு யாருமில்லை என்பது, என் தாழ்மையான கருத்து. உங்கள் கருத்துக்களால் நானும் எங்கள் மண்டலும் எப்போதுமே நன்மை அடைந்து வந்துள்ளோம். உங்கள் கருத்துக்களை "கிராந்தி'யில் நான் பலமுறை வெளியிட்டு உள்ளேன்; பல மாநாடுகளில் விளக்கிப் பேசியும் இருக்கிறேன்.

"சாதி அமைப்பு எந்த மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டதோ, அந்த மதக் கோட்பாடுகளை அழித்தொழிக்காமல் சாதியை உடைப்பது சாத்தியம் இல்லை'' என்ற உங்கள் புதுக் கருத்தை, விவரமாக அறிய ஆவலாக உள்ளேன். எனவே, கூடிய விரைவில் இக்கருத்தை விரிவாக எழுதுங்கள். நாங்கள் உங்கள் கருத்தை எடுத்து மேடை மூலமாகவும், வெளியீடு மூலமாகவும் பிரச்சாரம் செய்ய வசதியாக இருக்கும். தற்சமயம் தங்களின் அந்தக் கருத்து எனக்கு சரியாகப் பிடிபடாமல் உள்ளது.

****

எங்களின் ஆண்டிறுதி கருத்தரங்குக்கு, நீங்கள்தான் தலைமை வகிக்க வேண்டும் என்று எங்கள் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. உங்கள் வசதிக்கேற்ப எங்கள் தேதியை நாங்கள் மாற்றிக் கொள்ள முடியும். பஞ்சாப்பில் சுதந்திரமாக செயல்படும் ‘அரிஜன்'கள் உங்களைச் சந்திக்கவும் தம் திட்டங்களை உங்களுடன் விவாதிக்கவும், ஆவலாயிருக்கிறார்கள். எனவே, லாகூரில் நடைபெற உள்ள கருத்தரங்குக்கு தலைமை ஏற்க அன்புடன் இசைவளித்தீர்களானால், ஒரே கல்லில் இரண்டு மாம்பழங்கள் கிடைத்தது போலாகும். எல்லா தரப்பு ‘அரிஜன'த் தலைவர்களையும் நாங்கள் அழைக்க உள்ளோம். எனவே, அவர்களிடம் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் உங்களுக்கு வாய்ப்பாகும்.

எம் துணைச் செயலர் திரு. இந்திர சிங் அவர்களை, பம்பாய் சென்று உங்களைச் சந்திக்கும்படி மண்டல் பணித்துள்ளது. அவர் கிறிஸ்துமஸ் நாளன்று உங்களை சந்தித்து, கருத்தரங்கில் கலந்து கொள்ளும்படி நேரில் கேட்டுக் கொள்வார்.

****

எனக்குத் தெரிய வந்த வரையில், ஜாத்பட்தோடக் மண்டல், சாதி இந்துக்களிடையே உள்ள சமூக சீர்த்திருத்தவாதிகளின் அமைப்பாகும். இந்துக்களிடமிருந்து சாதி அமைப்பை அகற்றுவதே அதன் ஒரே லட்சியம். பொதுவாக, சாதி இந்துக்கள் நடத்தும் எந்த நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொள்ள விரும்புவதில்லை. சமூக சீர்திருத்தம் பற்றிய அவர்களின் நிலைப்பாட்டுக்கும் என் நிலைப்பாட்டுக்கும் ஒத்துப் போவதில்லை. எனவே, அவர்களுடன் சேர்ந்து இயங்குவது கடினமாக இருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக, அவர்களின் சகவாசம் எனக்கு மிகவும் அசவுகரியமாகவே இருக்கிறது. எனவே, முதல்முறை என்னை ‘மண்டல்' அணுகியபோது நான் அவர்கள் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டேன். ஆனால், "மண்டல்' அதை ஏற்காமல் மீண்டும் தன் உறுப்பினர் ஒருவரை பம்பாய்க்கு அனுப்பி, அழைப்பை ஏற்றுக் கொள்ளும்படி என்னை வற்புறுத்தியது. இறுதியில் நான் தலைமை வகிக்க ஒத்துக் கொண்டேன்.

மண்டலின் தலைமையகம் உள்ள லாகூரில் உயிர்த்தெழுதல் திருநாளை ஒட்டி ஆண்டிறுதி கருத்தரங்கு கூடுவதாக இருந்தது. ஆனால், 1936 மே மாத இடையில் நடத்தும்படி தள்ளி வைக்கப்பட்டது. இப்போது மண்டலின் வரவேற்புக் குழு, கருத்தரங்கையே ரத்து செய்துவிட்டது. என் தலைமை உரை அச்சிடப்பட்டு, பல நாட்களுக்குப் பிறகே ரத்து அறிவிப்பு வந்தது. உரையின் படிகள் இப்போது என்னிடம் கிடக்கின்றன. தலைமை உரையாக அதை வெளியிடும் வாய்ப்பு, எனக்குக் கிடைக்காததால், சாதி அமைப்பு உருவாக்கியுள்ள பிரச்சனைகள் பற்றிய என் கருத்துக்களை அறியும் வாய்ப்பு, பொதுமக்களுக்கு கிடைக்காமல் போகிறது. பொதுமக்கள் அக்கருத்துக்களை அறியவும், என்னிடம் கிடக்கும் அச்சிட்ட பிரதிகளைப் பயன்படச் செய்யவும், அவற்றை நான் விற்பனைக்குக் கொண்டு செல்லவும் தீர்மானித்தேன். பின்வரும் பக்கங்களில் அந்த உரை உள்ளது.

என் கருத்தரங்கத் தலைமைப் பதவி ரத்தானது எப்படி என்பதை அறிய பொதுமக்கள் ஆர்வமுடன் இருக்கலாம். முதலில் உரையை அச்சிடுவது குறித்து வாதம் எழுந்தது. உரையை பம்பாயில் அச்சிட வேண்டும் என்று நான் விரும்பினேன். சிக்கனம் கருதி அதை லாகூரில் அச்சிட விரும்பியது ‘மண்டல்'. நான் ஒப்புக்கொள்ளவில்லை. பம்பாயிலேயே அச்சிட வேண்டும் என வலியுறுத்தினேன். அதற்குப் பதிலாக ‘மண்டல்' உறுப்பினர்கள் பலரின் கையெழுத்திடப்பட்ட ஒரு கடிதம் வந்தது. அதிலிருந்து :

27.3.36

மதிப்புக்குரிய டாக்டர் ஜி,

திரு. சான்ட் ராமுக்கு நீங்கள் எழுதிய 24 ஆம் தேதிய கடிதத்தை நாங்கள் கண்டோம். சற்று ஏமாற்றமடைந்தோம். ஒருவேளை இங்கு எழுந்துள்ள நிலைமையை, நீங்கள் முழுமையாக உணர்ந்து கொள்ளவில்லை போலும். பஞ்சாப்பில் உள்ள இந்துக்கள் ஏறக்குறைய அனைவரும் நீங்கள் இந்த மாகாணத்துக்கு வருவதை எதிர்க்கிறார்கள். ‘ஜாத்பட்தோடக் மண்டலை' மிகமிகக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். எல்லா தரப்பில் இருந்தும் சொல்லத்தகாத வார்த்தைகளால் கண்டனங்கள் எழுந்துள்ளன. பாய் பரமானந்த், எம்.எல்.ஏ. (முன்னாள் தலைவர், ‘இந்து மகா சபை') மகாத்மா ஹான்ஸ் ராஜ், டாக்டர் கோகல் சந்த்நரங் (உள்துறை சுயாட்சி அமைச்சர்), ராஜா நரேந்திர நாத், எம்.எல்.சி. உட்பட எல்லா இந்து தலைவர்களும் மண்டலின் இந்த நடவடிக்கையிலிருந்து விலகிக் கொண்டு விட்டனர்.

இருந்தாலும், ஜாத்பட்தோடக் மண்டலை நடத்துவோர் (முக்கியமாக சார்ஜன்ட் சான்ட்ராம்) இதை எல்லாம் சமாளித்துக் கொள்ளலாம் என்பதிலும், உங்கள் தøலமையைக் கைவிட வேண்டியதில்லை என்பதிலும் உறுதியாக இருக்கிறார்கள். மண்டலுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், மண்டலுடன் ஒத்துழைப்பது உங்கள் கடமையாகிறது. ஒருபுறம், இந்துக்கள் ‘மண்டலை' வாட்டி வதைக்கும்போது, மறுபுறம் நீங்களும் அதன் கஷ்டத்தை அதிகரித்தால், அது மிகவும் வருந்தத்தக்கதும் கெடுவாய்ப்பானதுமாக ஆகிப்போகும்.

தாங்கள் இதனைப் பரிசீலித்து, எங்கள் எல்லார்க்கும் நல்லதே செய்வீர்கள் என நம்புகிறேன்.

****

இந்தக் கடிதம் எனக்குத் திகைப்பை ஏற்படுத்தியது. உரையை அச்சிடுவதில் கொஞ்சம் அதிகமாக செலவாவது குறித்து மண்டல் ஏன் இவ்வளவு வருந்த வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. இரண்டாவதாக, நான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதற்காக சர் கோகல் சந்த் நரங் போன்றவர்கள், உண்மையிலேயே ஒதுங்கி விட்டார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஏனென்றால், சர் கோகல் சந்த் நரங் கைப்பட எழுதிய பின்வரும் கடிதம் எனக்கு வந்திருந்தது :

5, மாண்ட்காமரி சாலை
லாகூர், 7.2.36

அன்புள்ள டாக்டர் அம்பேத்கர்,

ஈஸ்டர் விடுமுறையில் லாகூரில் நடக்க உள்ள ஜாத்பட் தோடக் மண்டலின் ஆண்டு விழாவிற்கு, தாங்கள் தலைமை ஏற்க ஒப்புக் கொண்டதாக மண்டலைச் சேர்ந்தவர்களிடமிருந்து அறிந்தேன். மகிழ்ச்சி. லாகூருக்கு வரும்போது நீங்கள் என்னுடன் தங்கியிருந்தால், அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். மற்றவை நேரில்.

தங்கள் உண்மையுள்ள,
ஜி. சி. நரங்

உண்மை எதுவாக இருந்தாலும், இந்த நெருக்கடிக்கு நான் இணங்கவில்லை. இந்நிலையில், ‘பிரச்சனையை நேரில் பேசித் தீர்க்க' திரு. ஹர் பகவன் என்பவரை பம்பாய்க்கு அனுப்புவதாக மண்டல்காரர்கள் எனக்கு தந்தி அடித்தனர். ஹர் பகவன் ஏப்ரல் 9 அன்று பம்பாய் வந்தார். உரையை பம்பாயில் அச்சிடுவதா, லாகூரில் அச்சிடுவதா என்பது பற்றி அவர் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. சொல்லப் போனால், தன் பேச்சில் அவர் இந்தப் பிரச்சனையைத் தொடவே இல்லை. உரையின் உள்ளடக்கத்தை மட்டுமே அவர் அறிய ஆவல் காட்டினார். எனக்கு செய்தி விளங்கியது. உரையை லாகூரில் அச்சிடுவதில் மண்டலின் நோக்கம் பணச் சிக்கனமல்ல, உரையின் உள்ளடக்கத்தை அறிய வாய்ப்புக் கிட்டும் என்பதுதான். நான் உரையின் படியொன்றை அவரிடம் தந்தேன். உரையின் சில பகுதிகள் அவருக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. அவர் லாகூருக்கு திரும்பி விட்டார். லாகூரில் இருந்து பின்வரும் கடிதத்தை அனுப்பியிருந்தார் :

லாகூர்
14.4.36

அன்பார்ந்த டாக்டர் சாகிப்,

நான் 12 ஆம் தேதி பம்பாய் வந்து சேர்ந்தேன். அய்ந்தாறு நாட்கள் தொடர்ந்து இரவில் ரயில் பயணத்தின்போது தூக்கம் கெட்டதால், வந்து சேர்ந்த நாள் முதலே உடல் நலமில்லை. இங்கு வந்ததும் நீங்கள் அமிர்தசரஸ் வந்து சென்றதாக அறிந்தேன். உடல் நலத்துடன் இருந்தால் நான் உங்களை சந்தித்திருக்கக் கூடும். உங்கள் உரையை திரு. சான்ட்ராமிடம் மொழிபெயர்க்கத் தந்துள்ளேன். உரை அவருக்கு மிகவும் பிடித்துள்ளது. ஆனால், 25 ஆம் தேதி அச்சுக்குத் தருவதற்குள் உரையை மொழிபெயர்த்துவிட முடியுமா என்று அய்யப்படுகிறார். எப்படியும் அதற்கு பரவலான விளம்பரம் கிட்டும்; இந்துக்களை அவர்களின் தூக்கத்தில் இருந்து அது தட்டி எழுப்பும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

பம்பாயில் உங்களிடம் நான் சுட்டிக்காட்டிய பகுதியை, எம் நண்பர்கள் சிலர் வாசித்தார்கள். அவர்களுக்குக் கொஞ்சம் சந்தேகம் தட்டியுள்ளது. எந்த அசம்பாவிதமும் இன்றி கருத்தரங்கு இனிதே முடிய வேண்டும் என விரும்பும் நாங்கள், குறைந்த பட்சம் இப்போதைக்கு ‘வேதம்' என்ற சொல்லை நீக்கிவிட வேண்டுமென விரும்புகிறோம். நீங்களே இதில் நல்ல முடிவு எடுக்கும்படி விட்டு விடுகிறேன். இறுதிப் பத்திகளில் இந்த உரை உங்கள் சொந்த உரை என்றும், பொறுப்பு மண்டலுடையது அல்ல என்றும் நீங்கள் தெளிவுபடுத்தி விடுவீர்கள் என நம்புகிறேன். இப்படிச் சொல்வதைப் பொருட்படுத்த மாட்டீர்கள் என்றும், 1000 பிரதிகளையும் எங்களுக்கு அனுப்பி வைப்பீர்கள் என்றும் நம்புகிறேன். அதற்கான தொகையைத் தந்துவிடுகிறோம்.

இது தொடர்பாக இன்று உங்களுக்கு ஒரு தந்தி அனுப்புகிறேன். இத்துடன் 100 ரூபாய்க்கான காசோலையை இணைத்துள்ளேன். பெற்றுக் கொண்ட விவரம் தெரிவிக்கவும். பற்றுச் சீட்டையும் தக்க நேரத்தில் அனுப்பி உதவவும். வரவேற்புக் குழுவின் கூட்டத்தைக் கூட்டியுள்ளேன். அவர்களின் முடிவை உடனடியாக உங்களுக்குத் தெரிவிப்பேன். நீங்கள் என் மீது காட்டும் அன்புக்கும், உங்கள் உரையைத் தயாரிப்பதற்கு நீங்கள் எடுத்துக் கொண்ட சிரமங்களுக்கும் - என் உளம் கனிந்த நன்றியை அன்பு கூர்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள். உண்மையிலேயே உங்களுக்கு நாங்கள் பெரிதும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

தங்கள் உண்மையுள்ள,
ஹர் பகவன்

பின் குறிப்பு: உரைப் படிகளை அச்சான உடன் பயணிகள் ரயில் மூலம் அனுப்பி வையுங்கள். அவற்றை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

****

நான், கையெழுத்துப் படியை அப்படியே அச்சகத்தாரிடம் கொடுத்து, 1000 படிகள் அடிக்கச் சொன்னேன். எட்டு நாட்கள் கழித்து ஹர் பகவனிடம் இருந்து மற்றுமொரு மடல் வந்தது:
லாகூர்
22.4.36

அன்புள்ள டாக்டர் அம்பேத்கர்,

உங்கள் தந்தியும் கடிதமும் கிடைக்கப் பெற்றோம். அதற்காக எங்கள் நன்றி உரித்தாகுக. உங்கள் விருப்பப்படி, நாங்கள் மீண்டும் கருத்தரங்கை ஒத்தி வைத்துள்ளோம். ஆனால், பஞ்சாப்பில் நாள்தோறும் வெப்பம் அதிகரித்து வருவதால் 25, 26 தேதிகளில் நடத்திவிடுவது நல்லதாகும் எனக் கருதுகிறோம். மே மாத இடையில் வெயில் மிகக் கடுமையாக இருக்கும். பகல் பொழுதில் அமர்வை நடத்துவது வசதியாக இருக்காது. எப்படியும் மே மாத இடையில் நடத்தினாலும் எல்லாம் கூடிய வரை இனிதே நடைபெற எங்களால் இயன்ற வரை முயலுவோம்.

இருப்பினும், ஒரு செய்தியை தங்களின் அன்பான கவனத்துக்கு நாங்கள் கொண்டுவர நேர்ந்துள்ளது. மதமாற்றம் பற்றிய உங்கள் அறிவிப்பு குறித்து, எங்களில் சிலர் கொண்டுள்ள அய்யப்பாடு பற்றி உங்களிடம் நான் சுட்டிக்காட்டியபோது, அது நிச்சயம் ‘மண்டலின்' எல்லைக்கு உட்பட்டது அல்ல என்றும், இது தொடர்பாக உங்கள் மேடையில் இருந்து எதுவும் வெளியிடும் உத்தேசம் தங்களுக்கு இல்லை என்றும், கையெழுத்துப் படியை என்னிடம் தந்தபோது, நீங்கள் என்னிடம் அதுவே உரையின் முக்கியப் பகுதி என்றும் - இன்னும் இரண்டு மூன்று பத்திகளையே முடிவாகச் சேர்க்க விரும்புகிறீர்கள் என்றும் உறுதி செய்தீர்கள். உங்கள் உரையின் இறுதிப் பகுதி எங்களுக்குக் கிடைத்ததும், அது மிக நீண்டு இருப்பது கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். அவ்வளவையும் வெகு சிலரே முழுவதுமாகப் படிக்க முடியும் என்பதே எங்கள் அச்சத்துக்குக் காரணம்.

மேலும், அதில் நீங்கள் ‘இந்து சமூகத்தில் இருந்து வெளியேறத் தீர்மானித்து விட்டதாகவும், ஓர் இந்து என்ற முறையில் அதுவே உங்கள் கடைசி உரையாக இருக்கும்' என்றும் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளீர்கள். வேதங்கள் முதலான இந்துக்களின் புனித நூல்களின் அறத்தன்மையையும், அறிவார்ந்த தன்மையையும் தேவையின்றி தாக்கியுள்ளீர்கள். இந்து மதத்தின் சட்டப் பகுதியை விரிவாக ஆராய்கிறீர்கள். எடுத்துக் கொண்ட பிரச்சனையுடன் இது எவ்விதத் தொடர்புமற்றது; சில பகுதிகள் முற்றிலும் தலைப்புக்குப் பொருத்தமற்றதாகவும் தொடர்பற்றதாகவும் இருக்கிறது. என்னிடம் நீங்கள் தந்த பகுதியுடன் உரையை முடித்திருந்தால், நாங்கள் மகிழ்ச்சி அடைந்திருப்போம்; அல்லது தேவையானால் பார்ப்பனியம் முதலியவற்றைப் பற்றி நீங்கள் எழுதி இருந்தவற்றை மட்டும் சேர்த்துக் கொண்டிருக்கலாம். இந்து மதத்தை முற்றாக ஒழிப்பது பற்றிக் கூறுவதும், இந்துக்களின் புனித நூல்களின் அறத்தன்மையைச் சந்தேகிப்பதும், இந்து சமூகத்திலிருந்து வெளியேறும் உங்கள் எண்ணத்தை வெளிப்படுத்துவதுமான கடைசிப் பகுதியும் பொருத்தமானதாக எனக்குப் படவில்லை.

எனவே, கருத்தரங்கப் பொறுப்பாளர்கள் சார்பில் நான் உங்களை மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மேற்சொன்ன பகுதிகளை நீக்கி விடுங்கள். என்னிடம் முதலில் தந்த அளவிலோ, பார்ப்பனியம் பற்றி சில பத்திகள் சேர்த்தோ உரையை முடித்து விடுங்கள். தேவையின்றி தூண்டிவிடும் விதமாக உரையை அமைப்பது, அறிவுடைமையாகப்படவில்லை. உங்கள் உணர்வுகளை எங்களில் பலரும் பகிர்ந்து கொள்கிறோம். இந்து மதத்தை மறுசீரமைப்பதற்கான உங்கள் இயக்கத்தில் ஒன்றுபட மிகவும் விரும்புகிறோம். உங்கள் கொள்கைக்கு ஆள் சேர்க்க நீங்கள் முடிவு செய்யும் பட்சத்தில், பஞ்சாப்பில் இருந்து சீர்த்திருத்தவாதிகளின் பெரும் படையே உங்களுடன் வந்து சேரும் என்று உறுதி கூறுகிறேன்.

உண்மையில், சாதிப் பிரச்சனையை நீங்கள் அக்கு வேறு ஆணிவேறாக ஆராய்ந்திருப்பதால், சாதி அமைப்பு என்ற தீமையை ஒழிப்பதில் - நீங்கள் எங்களுக்கு முன்னணியில் நிற்பீர்கள். ஒரு புரட்சியை நிகழ்த்துவதன் மூலம் எங்கள் கரங்களைப் பலப்படுத்துவீர்கள். இந்த மாபெரும் பணியின் மய்யமாக உங்களை ஆக்கிக் கொள்வீர்கள் என்று எண்ணினோம். ஆனால், உங்கள் அறிவிப்பு - அதுவும் பல முறை செய்யப்பட்டதும் - தன் ஆற்றலை இழந்து சலிப்பேற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நீங்கள் மீண்டும் இக்கருத்தை முழுவதுமாக ஆலோசிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

"இந்துக்கள் தம் சொந்த பந்தத்தையும் மதக் கருத்துக்களையும் உதறிட நேர்ந்தாலும் கூட, தயங்காமல் சாதி அமைப்பை ஒழிக்கும் பணியில் நேர்மையாக உழைக்க முன்வருவார்களானால், அந்தப் பணியில் முன்னணிப் பங்கை ஆற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைவேன்' என்று உங்கள் உரையை முடித்தால், அது மிகவும் சிறப்பாக இருக்கும் என்று யோசனை கூறுகிறேன். அப்படி செய்வீர்களானால், அந்த முயற்சிக்கு பஞ்சாப்பில் இருந்து உடனடி ஆதரவு கிட்டும் என்று உறுதியாகக் கூறுவேன். ஏற்கனவே நிறைய பொருள் செலவு மற்றும் தாமதம் ஆகிவிட்டது.

எனவே, மேலே கூறியபடி உங்கள் உரையை மட்டுப்படுத்திக் கொண்டதாக மறு கடிதத்தில் தெரிவித்து உதவினால், நன்றி உள்ளவனாவேன். உரையை முழுவதுமாகத்தான் பதிப்பிக்க வேண்டும் என்று இன்னமும் நீங்கள் வற்புறுத்தினால், அது சாத்தியப்படாது என்று மிக்க வருத்தத்துடன் கூறுகிறோம்.

அதைவிட, கால வரையறையின்றி கருத்தரங்கை ஒத்திப்போடுவதே எங்களுக்கு நல்லதாகும். இப்படித் திரும்பத் திரும்ப தள்ளிவைப்பதால், மக்களிடையே எங்கள் மீதுள்ள நல்லெண்ணத்தை விடுவோம் என்றாலும் வேறு வழியில்லை. இருந்தாலும் சாதி அமைப்பைப் பற்றிய உங்கள் உரை, இதுவரை எழுதப்பட்டவற்றிலேயே மதிப்புமிக்கது. அதை எழுதியதன் ­மூலம் எங்கள் மனதில் அழியாத இடம் பெற்று விட்டீர்கள் என்பதையும் நாங்கள் கூறவேண்டும். இதைத் தயாரிப்பதில் உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்காக என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. வாழ்த்துகளுடன்,
தங்கள் உண்மையுள்ள,
ஹர் பகவன்

****

இதற்கு நான் பின்வரும் பதிலை அனுப்பினேன் :
27.4.1936

அன்புள்ள திரு. ஹர்பகவன்,

உங்கள் 22ஆம் தேதிய கடிதம் கிடைக்கப் பெற்றேன். ‘உரையை முழுவதுமாக அச்சிட வேண்டுமென நான் வலியுறுத்தினால், கருத்தரங்கை காலவரையறையின்றி ஒத்திப்போட நேரும்' என்ற முடிவுக்கு வரவேற்புக் குழு வந்திருப்பது கண்டு வருந்துகிறேன். நானும் என்னுடைய பதிலைக் கூறியாக வேண்டும். மண்டலின் சூழலுக்கு ஏற்றவாறு என் உரையை சுருக்கியே ஆக வேண்டுமென மண்டல் வற்புறுத்தினால், நானும் கருத்தரங்கை ரத்து செய்யவே கூறுவேன். தெளிவற்ற சொற்கள் எனக்குப் பிடிக்காது. என்னுடைய முடிவு, உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால், தன் உரையைத் தயாரிப்பதற்கு ஒவ்வொரு தலைவருக்கும் உரிமை உண்டு. மாநாட்டில் தலைமை தாங்கும் கவுரவத்துக்காக, அந்த உரிமையை விட்டுத்தர என்னால் முடியாது. தனக்கு சரியென்று பட்ட வகையில் தான் தலைமையேற்கும் மாநாட்டை வழிநடத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் தலைமையேற்கும் ஒவ்வொருவருக்கும் உண்டு. ‘மண்டலை'த் திருப்திப்படுத்துவதற்காக, அந்தக் கடமையை விட்டுவிட என்னால் முடியாது. இது, கொள்கைப் பிரச்சனை. எனவே இதில், எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை என்று எண்ணுகிறேன்.

வரவேற்புக் குழுவின் முடிவு சரியா என்ற சர்ச்சைக்குள் நான் போகப் போவதில்லை. ஆனால், என்மேல் பழியைப் போடுவதான சில காரணங்களை நீங்கள் தந்திருப்பதால், அவற்றுக்கு நான் பதில் கூறியாக வேண்டும். முதலாவதாக, வரவேற்புக் குழு ஆட்சேபித்திருக்கும் உரைப்பகுதியின் கருத்துகள், மண்டலுக்குப் புதியவை என்பதை மறுக்கிறேன். அதற்கு திரு. சான்ட்ராமே சாட்சி. அவருக்கு நான் எழுதிய பதில் ஒன்றில் - "சாதி அமைப்பை உடைக்க உண்மையான வழி, சமபந்தி விருந்துகளோ, கலப்பு மணங்களோ அல்ல; சாதியை தோற்றுவிக்க காரணமாக உள்ள மதக் கோட்பாடுகளை ஒழிப்பதே' என்று கூறி இருந்தேன். இது ஒரு புதுமையான கருத்து என்றும் எனவே இதை விளக்கி எழுதுமாறும் திரு. சான்ட் ராம் கேட்டுக் கொண்டார்.

திரு. சான்ட் ராமின் இந்த வேண்டுகோளுக்கிணங்கியே, ஒரு வரியில் என் கடிதத்தில் எழுதிய கருத்தை என் உரையில் விரிவாக எழுத வேண்டும் என நினைத்தேன். எனவே, உரையின் கருத்துக்கள் முற்றிலும் புதிது என்று நீங்கள் கூற முடியாது; அல்லது குறைந்தது, உங்கள் மண்டலின் உயிராகவும் கலங்கரை விளக்கமாகவும் நிற்கும் திரு. சான்ட் ராமுக்காவது அவை புதியதல்ல.

ஆனால், நான் இதற்கும் மேலே சென்று கூறுகிறேன் - நான் என் உரையின் அந்தப் பகுதியை எழுதியது என் விருப்பத்திற்காக மட்டுமல்ல. என் வாதத்தை நிறைவு செய்ய அந்தப் பகுதி இன்றியமையாதது என்பதாலும் ஆகும். அந்தப் பகுதியை உங்கள் குழு பொருத்தமற்றது, தொடர்பற்றது என்று சித்தரித்ததைப் படித்து வியந்தேன். நான் ஒரு வழக்குரைஞர். உங்கள் குழுவினரைப் போலவே எனக்கும் பொருத்தப்பாட்டின் இலக்கணம் தெரியும். நீங்கள் ஆட்சேபிக்கும் பகுதி, மிகவும் பொருத்தமானது மட்டுமல்ல; முக்கியமானதும் கூட என அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறேன். உரையின் இந்தப் பகுதியில்தான் சாதி அமைப்பை உடைப்பதற்கான வழிவகையை விவாதித்துள்ளேன்.

சாதியை ஒழிக்க மிகச் சிறந்த வழி என நான் கண்ட முடிவு, திகைப்பூட்டுவதாகவும் வேதனை அளிப்பதாகவும் இருக்கலாம். என் ஆய்வுமுறை தவறானது என்று சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், சாதியின் பிரச்சனைகளை அலசும் உரையில், சாதியை எப்படி ஒழிக்க முடியும் என்பது பற்றி வெளிப்படையாக நான் விவாதிக்கக் கூடாது என்று நீங்கள் சொல்ல முடியாது.

உங்கள் இன்னொரு குற்றச்சாட்டு, உரையின் நீளத்தைப் பற்றியது. இந்தக் குறைக்கு உரையிலேயே நான் மன்னிப்புக் கோரியுள்ளேன். ஆனால், இதற்கு உண்மையில் யார் காரணம்? உங்களுக்கு தொடக்கத்தில் நடந்தது எல்லாம் தெரியாது போலும்; ஏனென்றால், முதலில் நான் என் வசதிப்படி ஒரு சுருக்கமான உரையை எழுதவே திட்டமிட்டிருந்தேன். காரணம், விரிவான ஆய்வுரையை எழுதுவதற்கான நேரமோ, தெம்போ என்னிடம் இருக்கவில்லை. ‘மண்டல்'தான் சாதி ஒழிப்பு குறித்து ஆழமாகவும் முழுமையாகவும் விவாதிக்கும்படி கூறியது. அதோடு சாதி அமைப்பு தொடர்பான கேள்விப் பட்டியலை எனக்கு அனுப்பியிருந்தது. மண்டலின் எதிராளிகள் அடிக்கடி கிளப்பும் இக்கேள்விகளுக்கு திருப்திகரமாக பதிலளிக்க மண்டல் சிரமப்படுவதால், அக்கேள்விகளுக்கு என் உரையில் பதில் தருமாறும் கேட்டிருந்தது. மண்டலின் விருப்பத்தை நிறைவு செய்யும் முயற்சியாகவே உரை இவ்வளவு தூரம் நீண்டு விட்டது. ஆகவே, உரையின் நீளத்துக்கு நான் காரணமல்ல என்பதை இப்போது ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

இந்து மதத்தை அழிப்பது பற்றி நான் பேசியதற்கு, ‘மண்டல்' இவ்வளவு தூரம் வேதனைப்படும் என நான் எதிர்பார்க்கவில்லை. முட்டாள்கள்தான் வார்த்தைகளுக்குப் பயப்படுவார்கள் என்று நான் நினைத்தே இருந்தபோதும், மக்கள் மனதில் தவறானப் புரிதல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, மதம் என்றும் மதத்தை அழிப்பது என்றும் நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்பது குறித்து விளக்க நான் மிகுந்த சிரமம் எடுத்துக் கொண்டுள்ளேன். என் உரையைப் படிக்கும் யாரும் என் கருத்தைத் தவறாகப் புரிந்து கொண்டுவிட முடியாது என்பது உறுதி. போதிய விளக்கம் இருந்தும் ‘மத ஒழிப்பு' போன்ற வெறும் வார்த்தைகளைக் கண்டு உங்கள் ‘மண்டல்' மிரள்கிறது என்றால், அது என் மதிப்பில் உயரவில்லை. சீர்திருத்தவாதியின் நிலைப்பாட்டை எடுத்துவிட்டு, பிறகு (அதை நடைமுறையில் கடைப்பிடிப்பது ஒரு புறம் இருக்கட்டும்) அந்த நிலைப்பாட்டின் தர்க்க ரீதியான விளைவைப் பார்க்கக்கூட மறுக்கிற எவரையும் யாரும் மதிக்க முடியாது.

என் உரையைத் தயாரிப்பதில், எந்தவிதக் கட்டுப்பாட்டுக்கும் நான் ஒத்துக் கொள்ளவில்லை என்பது உங்களுக்கே தெரியும். உரையில் என்ன வரவேண்டும், என்ன வரக்கூடாது என்று எனக்கும் ‘மண்டலு'க்கும் இடையில் ஒரு முறைகூட விவாதம் எழவில்லை. இக்கருத்து பற்றி நான் கொண்டுள்ள எண்ணங்களை விவாதிக்க, எனக்கு சுதந்திரம் உண்டு என்று உள்ளபடியே நான் எடுத்துக் கொண்டேன். உண்மையில், நீங்கள் பம்பாய்க்கு ஏப்ரல் 9ஆம் தேதி வரும்வரை, நான் எந்த விதமான உரையைத் தயார் செய்து வருகிறேன் என்பது ‘மண்டலு'க்குத் தெரியாது. நீங்கள் பம்பாய்க்கு வந்தபோது, ஒடுக்கப்படும் வகுப்புகளின் மதமாற்றம் பற்றிய என் கருத்தை வெளியிட, உங்கள் மேடையைப் பயன்படுத்த விரும்பவில்லை என்று நான்தான் வலிய வந்து கூறினேன்.

உரையில் நான் அந்த வாக்குறுதியை சரியாகக் கடைப்பிடித்துள்ளேன் என்றே நினைக்கிறேன். போகிற போக்கில் மறைமுகமாக ‘நான் இங்கு இருக்க மாட்டேன் என்பதற்காக வருந்துகிறேன்...' என்றவாறு தொட்டுச் செல்வதைத் தவிர, உரையில் இதைப் பற்றி எங்குமே பேசவில்லை. இவ்வளவு மேலோட்டமாகவும் மறைமுகமாகவும் வெளியிட்ட ஒரு கூற்றையே நீங்கள் ஆட்சேபிப்பதைப் பார்க்கும்போது, நான் பின்வரும் கேள்வியைக் கேட்டே ஆகவேண்டும்: உங்கள் கருத்தரங்குக்கு தலைமை தாங்க ஒத்துக் கொண்டதற்காக, ஒடுக்கப்படும் வகுப்புகளின் நம்பிக்கை மாற்றம் குறித்த என் கருத்துகளை நிறுத்தி வைக்கவோ, கைவிடவோ செய்வேன் என்று நினைத்தீர்களா? அப்படி நினைத்திருந்தால், அது உங்கள் தவறு; அதற்கு நான் பொறுப்பல்ல. என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து கவுரவித்ததற்காக, என் மதமாற்றத் திட்டத்தின் மீது எனக்குள்ள நம்பிக்கையைக் கைவிட வேண்டும் என்று, உங்களில் யாராவது ஒருவர் குறிப்பாகச் சொல்லி இருந்தால் கூட, நான் வெளிப்படையான நேரடியான சொற்களில் - எனக்கு உங்கள் கவுரவத்தைவிட, என் நம்பிக்கையே பெரிது என்று சொல்லி இருப்பேன்.

உங்கள் 14 ஆம் தேதிய கடிதத்துக்குப் பிறகு வந்துள்ள இந்த கடிதம் எனக்கு அதிர்ச்சியை அளித்தது. யார் அதைப் படித்தாலும் அவர்களும் அதிர்ச்சி அடையவே செய்வார்கள். வரவேற்புக் குழுவின் இந்த திடீர் தலைகீழ் மாற்றத்திற்கு காரணம் புரியவில்லை. உங்கள் 14 ஆம் தேதிக் கடிதத்தின்போது, குழுவிடம் இருந்த நகல் வரைவுக்கும் இப்போது நான் கொடுத்துள்ள இறுதி வரைவுக்கும் (எதன் அடிப்படையில் நீங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முடிவு எடுக்கப்பட்டதோ), சாரத்தில் எந்த வேறுபாடும் இல்லை. பழைய வரைவில் இல்லாத எந்த ஒரு புதிய கருத்தும் இறுதி வரைவில் சேர்க்கப்பட்டுள்ளதாக உங்களால் காட்ட முடியாது. ஒரே வேறுபாடு என்னவென்றால், இறுதி வரைவு விளக்கமாக எழுதப்பட்டிருப்பதுதான். எனவே, ஏதாவது ஆட்சேபணை தெரிவிப்பதென்றால், 14 ஆம் தேதியே நீங்கள் சொல்லியிருக்க முடியும். சொல்லவில்லை. அதற்குப் பதில் 1000 படிகள் அடிக்கச் சொல்லிவிட்டீர்கள்.

நீங்கள் தெரிவித்த வார்த்தை மாற்றங்களை ஏற்பதோ, மறுப்பதோ என் உரிமை என்று சொல்லிவிட்டீர்கள். அவ்வாறே அச்சடித்த 1000 படிகளும் என்னிடம் கிடக்கின்றன. எட்டு நாட்கள் கழித்து உரைக்கு ஆட்சேபணை தெரிவித்தும் அதை மாற்றாவிடில், கருத்தரங்கு ரத்தாகும் என்றும் எழுதுகிறீர்கள். உரையில் எந்த மாறுதலும் செய்வதற்கான வாய்ப்பில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஒரு கால்புள்ளியைக் கூட மாற்ற முடியாது என நீங்கள் பம்பாய் வந்திருந்தபோது நான் சொன்னேன். என் உரையைத் தணிக்கை செய்வதை அனுமதிக்க முடியாது என்றும், நான் அளிக்கும் வடிவத்திலேயே உரையை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறினேன். உரையின் கருத்துகளுக்கான முழுப் பொறுப்பும் என்னைச் சேர்ந்தது. கருத்தரங்கு அவற்றை ஏற்காவிட்டால், அவற்றுக்கு எதிராக கருத்தரங்கு தீர்மானம் நிறைவேற்றினாலும் கவலையில்லை என்றும் சொன்னேன்.

என் கருத்துகளுக்காக ‘மண்டல்' சிரமப்பட்டுவிடக் கூடாது என்பதிலும், உங்கள் கருத்தரங்குடன் மிக நெருக்கமான உறவில் சிக்கிவிடக்கூடாது என்பதிலும் - மிகுந்த கவனமாக இருந்திருக்கிறேன். என் உரை தலைமை உரையாக அல்லது தொடக்க உரைபோல் இருக்கட்டும். தலைமையேற்கவும் தீர்மானங்களைக் கவனிக்கவும் வேறு ஆளைப் பாருங்கள் என்றும் மண்டலிடம் யோசனை சொன்னேன். 14 ஆம் தேதி இது பற்றி முடிவெடுக்க வேறு யாரையும் விட, உங்கள் குழுவுக்கு மேலான வாய்ப்பு இருந்தது. அதைச் செய்ய குழு தவறிவிட்டது. இதற்கிடையில், அச்சு செலவும் வைத்துவிட்டீர்கள். கொஞ்சம் கூடுதல் மன உறுதியைக் கடைப்பிடித்தீர்களானால், இதைத் தவிர்த்திருக்க முடியும்.

உங்கள் குழுவின் முடிவுக்கும், உரையின் கருத்துகளுக்கும் தொடர்பில்லை என்று உறுதியாகக் கூறுகிறேன். அமிர்தசரசில் நடைபெற்ற ‘சீக்கிய பிரச்சார மாநாட்டிற்கு' நான் வந்திருந்ததற்கும், நீங்கள் எடுத்த முடிவுக்கும் வேண்டுமானால், நிரம்ப தொடர்புண்டு என்று நம்ப காரணங்கள் உள்ளன. ஏப்ரல் 14 ஆம் நாளிலிருந்து 22 ஆம் நாளுக்குள் உங்கள் குழு அடித்த குட்டிக்கரணத்துக்கு, வேறு எதுவும் திருப்திகரமான காரணமாக இருக்க முடியாது. இந்த சர்ச்சையை நான் நீட்டக்கூடாது. என் தலைமையின் கீழான கருத்தரங்க அமர்வு ரத்தாகிவிட்டது என்று உடனடியாக அறிவித்துவிடும்படி கேட்டுக் கொள்கிறேன். கெடு முழுவதும் தீர்ந்து விட்டது. இனிமேல் முழு உரையை உங்கள் குழு ஏற்க முன் வந்தாலும், தலைமை தாங்க நான் தயாராக இல்லை. உரையைத் தயாரிப்பதில் நான் பட்டுள்ள பாட்டைப் புரிந்து கொண்டு பாராட்டியதற்கு நன்றி கூறுகிறேன். கண்டிப்பாக இந்த வேலையால் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். என் ஒரே வருத்தம் என்னவென்றால், உடல் நலமில்லாத நேரத்தில் இந்த வேலைக்காக இவ்வளவு கடுமையாக உடலை வருத்த நேர்ந்ததே என்பதுதான்.

உங்கள் உண்மையுள்ள,
பி.ஆர். அம்பேத்கர்



என் தலைமையை மண்டல் ரத்து செய்ததன் காரணங்களை, மேற்கண்ட கடிதப் போக்குவரத்து வெளிப்படுத்தி இருக்கும். இப்போது குற்றம் யாருடையது என்பதை வாசகரே தீர்மானித்துக் கொள்ள முடியும். ஒரு தலைவரின் கருத்துகளில் உடன்பாடு இல்லாததால், தலைவரையே ரத்து செய்தது இதுவே முதல்முறை என்று எண்ணுகிறேன். அப்படி இல்லாவிடினும், சாதி இந்துக்களின் கருத்தரங்குக்குத் தலைமை தாங்க நான் அழைக்கப்பட்டது, என் வாழ்வில் கண்டிப்பாக இதுவே முதல்முறை. ஆனால், இது தோல்வியில் முடிந்தது பற்றி வருந்துகிறேன். ஆனால், தம் வைதீக சகாக்களிடமிருந்து துண்டித்துக் கொள்ள விரும்பாத சாதி இந்துக்களின் சீர்திருத்தப் பிரிவினருக்கும், சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டே ஆக வேண்டும் என்பதைத் தவிர, வேறு மார்க்கம் இல்லாதிருக்கும் சுயமரியாதையுள்ள தீண்டத்தகாத மக்களுக்கும் இடையிலான உறவு வேறு எப்படி முடியும்?

ராஜகிருகம் - பி.ஆர். அம்பேத்கர்
தாதர், பம்பாய் - 14
15.5.1936


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com