Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
அக்டோபர் 2006
பாபாசாகேப் பேசுகிறார்

எங்களுடைய இழப்பிற்காக நீங்கள் ஏன் கண்ணீர் சிந்துகிறீர்கள்?

என்னுடைய பவுத்த சகோதரர்களே! நேற்றும் இன்று காலையும் மதமாற்ற (தீக்ஷா) நிகழ்வு நடைபெற்ற இடத்தின் முக்கியத்துவத்தை சிந்தனையாளர்கள் புரிந்து கொள்வது, சற்றுக் கடினமானதாக இருக்கலாம். நாம் இந்தப் பொறுப்பை ஏன் சுமக்க வேண்டும், அதன் தேவை என்ன, அதனுடைய விளைவு என்ன என்பது குறித்து கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இதைப் புரிந்து கொண்டால்தான் நாம் முன்னெடுத்துச் செல்லும் பணியின் அடிப்படையை பலப்படுத்த முடியும்.

Ambedkar இம்மதமாற்ற நிகழ்வுக்காக ஏன் நாக்பூரை தேர்ந்தெடுத்தீர்கள் என்று என்னிடம் பலரும் கேட்டார்கள். இந்நிகழ்வை ஏன் வேறு இடங்களில் நடத்தவில்லை? ஆர்.எஸ்.எஸ். (ராஷ்டிரிய சுவயம் சேவக் சங்) நாக்பூரில் மய்யம் கொண்டிருப்பதால், அவர்களை நெருக்கடிக்கு ஆட்படுத்தும் வகையில், இது இங்கு நடத்தப்பட்டதாக சிலர் கூறினர். இதில் துளியும் உண்மை இல்லை. நாம் எடுத்துக் கொண்ட பணி மிகப் பெரியது. நம் வாழ்வின் ஒவ்வொரு நிமிடம் இதற்குப் போதவில்லை. எனவே, மற்றவர்களை சீண்டிப் பார்க்க எனக்கு நேரம் இல்லை. இந்த இடத்தைத் தேர்வு செய்வதற்கு வேறொரு காரணம் உண்டு. இந்தியாவில் பவுத்தத்தைப் பரப்பியவர்கள் நாகர்களே என்பது, பவுத்த வரலாறு படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆரியர்களைக் கடுமையாக எதிர்த்தவர்கள் நாகர்கள்.

ஆரியர்களுக்கும் ஆரியர் அல்லாதவர்களுக்கும் பல கடுமையான சண்டைகள் நடைபெற்றன. புராணங்களிலும் ஆரியர்கள் நாகர்களை எரித்துக் கொன்றதற்கு, எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன...

பல்வேறு காரணங்களுக்காக நாம் அவர்களை (ஆர்.எஸ்.எஸ்.) எதிர்க்கலாம். ஆனால், இந்த இடத்தைத் தேர்வு செய்ததன் நோக்கம், எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக அல்ல. இம்மாபெரும் பணியை நான் மேற்கொண்டதற்காக, பல்வேறு மக்களும் பத்திரிகைகளும் என்னை விமர்சிக்கின்றனர். சில விமர்சனங்கள் மிகவும் கடுமையானதாக இருக்கிறது. நான் ஏழை தீண்டத்தகாத மக்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக அவர்கள் கருதுகிறார்கள். மதமாற்றத்தால் அவர்களுடைய உரிமைகளை அவர்கள் இழக்க நேரிடும் என்று நம்முடைய சமூகத்தைச் சார்ந்த மக்களே தவறான பிரச்சாரங்களை செய்கிறார்கள். நம்மில் படிப்பறிவில்லாத மக்களை பழைய பழக்கவழக்கங்களையே பின்பற்றும்படி அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

கடந்த காலங்களில் நாம் இறைச்சி சாப்பிடக் கூடாது என்பதற்காகவே ஓர் இயக்கம் இருந்தது. தீண்டத்தகுந்தவர்கள் எருமை மாட்டின் பாலை குடிப்பார்களாம். ஆனால், அந்த எருமை இறந்துவிட்டால் அதை நாம் சுமந்து சென்று அடக்கம் செய்ய வேண்டுமாம். இது, கேலிக்கூத்தாக இல்லையா? "கேசரி” என்ற பத்திரிகையில் முன்பொரு முறை, "சில கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் 50 மாடுகள் இறப்பதாகவும் அந்த மாட்டினுடைய கொம்பு, இறைச்சி, எலும்பு மற்றும் வால் பகுதியை விற்பதன் மூலம் தீண்டத்தகாத மக்கள் 500 ரூபாய் சம்பாதிக்க முடியும்' என்றும் எழுதியிருந்தனர்.

ஒரு முறை நான் சங்கம்நேர் என்ற ஊருக்கு ஒரு கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். அப்பொழுது "கேசரி” பத்திரிகையின் செய்தியாளர் என்னிடம் ஒரு சீட்டைக் கொடுத்து கேட்டார் : "நீங்கள் உங்கள் மக்களை செத்த மிருகங்களை சுமக்க வேண்டாமென்று அறிவுறுத்துகிறீர்கள். அவர்கள் எவ்வளவு ஏழ்மையில் உழலுகிறார்கள்! அவர்களுடைய பெண்களுக்கு உடுத்த புடவையோ, அணிந்துகொள்ள "ஜாக்கெட்டோ'கூட இல்லை. அவர்களுக்கு உணவு இல்லை, நிலம் இல்லை. இவ்வளவு அவலமான நிலையில் வாழும் இம்மக்கள், செத்த மாட்டைத் தூக்கி அதன் மூலம் அய்நூறு ரூபாய் சம்பாதிப்பதை மறுக்கின்றீர்களே! இது உங்கள் மக்களுக்கு மாபெரும் இழப்பில்லையா?'

நான் அவரைக் கேட்டேன். உங்களுக்கு எத்தனைக் குழந்தைகள்? நீங்கள் மொத்தம் எவ்வளவு பேர்? "எனக்கு அய்ந்து குழந்தைகள்” என்றும், "என்னுடைய அண்ணனுக்கு ஏழு குழந்தைகள்” என்றும் அவர் பதிலளித்தார். நான் சொன்னேன்: அப்படி எனில் உங்கள் குடும்பம் மிகப் பெரியது. எனவே, நீங்களும் உங்கள் உறவினர்களும் இந்த கிராமத்தில் செத்துப் போகும் அனைத்து மிருகங்களையும் சுமந்து செல்வதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் அய்நூறு ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். நானும் ஒரு அய்நூறு ரூபாய் உங்களுக்குத் தருகிறேன். என்னுடைய மக்கள் உணவுக்கும் உடைக்கும் என்ன செய்வார்கள் என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால், நீங்கள் ஏன் இதை செய்யக் கூடாது. நீங்கள் இதை செய்தால், அது உங்களுக்கு மிகுந்த பயனை அளிக்குமல்லவா? எனவே, செத்த மிருகங்களை இனி நீங்கள் தூக்குங்கள்.

ஒரு பார்ப்பன சிறுவன் நேற்று என்னிடம் வந்து கேட்டான். உங்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவைகளிலும் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறதே, அதை ஏன் நீங்கள் கைவிடுகிறீர்கள்? நான் சொன்னேன், நீ "மகர்” ஆக மாறி நாடாளுமன்ற, சட்டப் பேரவைகளில் உள்ள இடங்களைக் கைப்பற்றிக் கொள். பார்ப்பனர்கள் இடஒதுக்கீட்டைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, ஏன் "மகர்” களாக மாற மறுக்கிறார்கள்? நான் அவர்களிடம் கேட்க விரும்பும் கேள்வி இதுதான் : எங்களுடைய இழப்பிற்காக நீங்கள் ஏன் கண்ணீர் சிந்துகின்றீர்கள்? உண்மையில் ஒரு மனிதனுக்கு சுயமரியாதைதான் தேவையே ஒழிய, பொருளாதாரப் பயன்கள் அல்ல.

-தொடரும்

15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி ஆற்றிய உரை


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com