Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
நவம்பர் 2008


வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே! எங்களிடம் வராதீர்கள்
சிறுபான்மையினர் கல்லூரிகளும் தலித் மாணவர்களின் எண்ணிக்கையும்-3
அய். இளங்கோவன்

படிப்பதற்கு உரிமை அற்றவர்களாக தலித்துகள் இருந்தபோது, ஆதிக்க சாதியினர் வேதங்களைப்படித்துக் கொண்டிருந்தனர். தலித் மக்கள் படிக்கத் தொடங்கிய போதோ, அவர்கள் கல்லூரிகளில் இருந்தனர். தலித் மக்கள் தொடக்கப் பள்ளியைத் தாண்டி உயர்நிலைப் பள்ளிகளுக்கு வந்த போதோ, அவர்கள் உயர் கல்வி ஆய்வில் ஆழ்ந்திருந்தனர். தலித் மக்கள் கல்லூரிகளிலே அடியெடுத்து வைத்தபோது, ஆதிக்க சாதியினர் தொழில் நுட்பப் படிப்புகளுக்குத் தாவினர். தலித் மக்கள் உயர் கல்விக்கு வந்து சேர்ந்த போது, அவர்கள் கணிப்பொறி படிப்புகளுக்குப் போய்விட்டிருந்தனர். தலித் மக்கள் கணிப்பொறி கல்விக்கு வரத் தொடங்கியபோது, ஆதிக்க சாதியினர் தகவல் தொழில்நுட்பத் துறையில் தொத்திக் கொண்டனர். தலித்துகள் தகவல் தொழில்நுட்பத் துறையில் நுழைய முயன்று கொண்டிருக்கிற இன்றோ-ஆதிக்க சாதியினர் ‘நானோ' தொழில்நுட்பத்தில்...

ambedkar தலித் மக்கள் ஆதிக்க சாதியினரை எட்டிப்பிடிக்க முடியாதபடி, தடுப்பு ஆட்டம் இங்கே ஆண்டாண்டு காலமாய் தொடர்ந்தபடியே இருக்கிறது. ஆதிக்க சாதியினரைத் தொடமுடியும் என்ற நம்பிக்கையோ, போட்டியில் பங்கேற்பதற்கான மூளை பலமோ தலித் மக்களிடம் இல்லாமலில்லை. தலித்துகளுக்கு எதிராக உருவாக்கப்படும் சாதிய, ஆதிக்க மனோபாவத் தடைகளே அவர்களைத் தோற்கடிப்பதற்கான தந்திரங்களாக இன்றைக்கும் இருக்கின்றன.

ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதும் கிடைகின்ற புள்ளிவிவரங்களைக் கொண்டு, அவரவர் நோக்கில் ஒப்பீடுகள் பலவும் செய்யப்படுகின்றன. தலித் நோக்கிலும் அப்படியான ஒப்பீடுகள் செய்யப்படுவதுண்டு. 1961ஆம் ஆண்டு கணக்குப்படி, அன்று 6.4 கோடியாக இருந்த தலித் மக்களில் 10 சதவிகிதம் பேர்தான் எழுதவும் படிக்கவும் அறிந்திருந்தனர். 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 45 சதவிகித தலித் மக்கள் படித்திருப்பதாக சொல்லப்பட்டது. இது, 4.5 மடங்கு வளர்ச்சி. இந்த வளர்ச்சி 40 ஆண்டுகளில் வந்திருக்கிறது. 1961இல் 24.5 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் கல்வி நிலையோ 2001இல் 54 சதவிகிதமாக வளர்ந்திருக்கிறது.

வரலாற்றைப் புரட்டினால் அறிந்து கொள்ளலாம். தலித் மக்களுக்குப் "போனால் போகட்டும்' என்ற தரும சிந்தனையிலும், "புண்ணியம்' என்ற எண்ணத்திலும் தான் தொடக்கக் காலத்தில் கல்வி வழங்கப்பட்டது. வெள்ளையர்கள் கூட தலித் கல்வியில் ஆர்வம் காட்டவில்லை. இந்தியாவில் கல்வி நிலையங்களைப் பற்றி ஆராய்ந்த ஹண்டர் ஆணையம் (1882), “தீண்டத்தகாத மக்களுக்கு கல்வி அளிக்கலாம். ஆனால் அதனால் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுமானால், அதற்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை'' என்று குறிப்பிட்டிருந்ததை தன் நூலொன்றில் டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

தலித் மக்களுக்கு வெறுமனே எழுதப் படிக்க சொல்லித்தரும் கல்வி மட்டும் போதாது; உயர் கல்வியும், தொழில் நுட்பக் கல்வியும் அளிக்கப்பட வேண்டும்; வெளிநாடுகளுக்கு தலித் மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்பது, அம்பேத்கரின் தொடக்கக் கால கோரிக்கையாகவே இருந்தது. 1942ஆம் ஆண்டு அக்டோபர் 29 அன்று அம்பேத்கர் அவர்களால் கவர்னர் ஜெனரல் லின்லித்தோவுக்கு அளிக்கப்பட்ட மனுவில் இக்கோரிக்கையைப் பார்க்கலாம். 1942ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 150(2)இன் படி, வெள்ளை அரசிடமிருந்து சுமார் 16 கல்வி நிறுவனங்கள் அன்று நிதியுதவி (மானியம்) பெற்று வந்துள்ளதை அம்மனுவில் அம்பேத்கர் சுட்டிக்காட்டுகிறார். ஆண்டொன்றுக்கு சுமார் 8,99,100 ரூபாய் இந்த கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், காசி இந்து பல்கலைக்கழகம், ரபீந்திரநாத் (தாகூர்) அவர்களால் தொடங்கப்பட்ட விஸ்வபாரதி மற்றும் சாந்திநிகேதன் போன்றவையும் இதில் அடக்கம். இத்தனியார் கல்வி நிறுவனங்களில் அலிகார் மற்றும் காசி பல்கலைக்கழகங்கள் இரண்டு மட்டுமே ஆண்டொன்றுக்கு ஆறு லட்சம் ரூபாயை மானியமாகப் பெற்றிருக்கின்றன. அந்த ஆறு லட்சம் ரூபாயும் ஆதிக்க சாதி இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் போய் சேர்ந்திருக்கின்றன. அப்படியெனில், தலித் மக்கள் உயர் படிப்பு படிக்கவும் அரசு உதவித் தொகைகளை வழங்க வேண்டும் என்பது, அம்பேத்கரின் வாதமாக அன்று இருந்தது. அம்பேத்கர் சுட்டிக்காட்டும் அந்தக் கல்லூரிகளில் நிச்சயமாக தலித்துகள் யாரும் அன்று படித்திருக்க வாய்ப்பில்லை.

இந்தியாவில் பல்வேறு சமூகப் பிரிவினரிடையே கல்வியறிவு எப்படிப் பரவியுள்ளது என்பதை அறிய 1930இல் அமைக்கப்பட்ட ஹர்தோக் குழுவின் புள்ளிவிவரங்களும் கூட, இதையேதான் சொல்கின்றன. 1930இல் தலித் மக்களிடையே கல்லூரியில் படித்தவர்கள் வெகு சொற்பம். சென்னையில் 47 பேர், மும்பையில் 9 பேர், வங்காளத்தில் (தலித் மற்றும் தலித் அல்லாதவர் சேர்த்து) 1670 பேர், அய்க்கிய மாநிலங்களில் 10 பேர், பஞ்சாபிலும், பீகாரிலும், ஒரிசாவிலும் எவரும் இல்லை. மத்திய மாநிலங்களில் 10 பேர் என்றுதான் அப்போது உயர் கல்வி படித்த தலித்துகள் இருந்தனர். இந்த உயர்கல்வி கூட தொழில்நுட்ப, அறிவியல் படிப்புகளாக இருந்திருக்க முடியாது.

எனவேதான் அம்பேத்கர், “வெறும் பட்டப் படிப்பு அல்லது சட்டத்துறைப் படிப்பை முடிப்பது, தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அதிகப் பயன் அளிக்காது. இந்துக்களுக்குக் கூட அது அதிக பலன் அளிக்கவில்லை. எது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு உதவுமெனில், விஞ்ஞானத்திலும் தொழில் நுட்பத்திலும் உயர்தரக் கல்வி கற்பதுதான். அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் கல்வி என்பது தாழ்த்தப்பட்ட சாதியினரின் சக்திக்கு அப்பாற்பட்டது. எனவேதான் பலர் தங்கள் குழந்தைகளை வெறும் பட்டப்படிப்புக்கோ, சட்டத்துறை படிப்புக்கோ அனுப்புகிறார்கள். அரசு உதவியில்லாமல், விஞ்ஞானத்திலும், தொழில்நுட்பத்திலும் உயர் கல்வியின் கதவுகள் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ஒருபோதும் திறந்திருக்க மாட்டா.

இது விசயத்தில் மத்திய அரசு அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்பதே சரியானதும் நியாயமானதுமாகும்.'' (டாக்டர் அம்பேத்கர் தமிழ் நூல் தொகுப்பு : 19; பக்.35) என்று சொல்லியிருக்கிறார். இந்த உயர் கல்விக்கு ஆண்டொன்றுக்கு தலித் மாணவர்களுக்கென 2 லட்சம் ரூபாயை அரசு வழங்க வேண்டும். அவர்கள் வெளிநாடு சென்று கற்க விரும்பினால், ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்துகிறார்.

சுமார் 3 ஆண்டுகள் கழித்து 1.2.1945 அன்று பம்பாயில் தலித் மாணவர்களின் நலனுக்கான ஒரு கல்லூரியை நிறுவுவதற்காக அம்பேத்கர், மய்ய அரசிடம் ரூபாய் 6 லட்சம் கடன் கேட்டு ஒரு கடிதத்தினை எழுதினார். அவர், அக்கடிதத்தில் தலித் மாணவர்கள் உயர் கல்வி பெறுவதற்குத் தடையாக இருக்கும் காரணங்களைக் குறிப்பிட்டுள்ளார். வறுமை, கல்லூரியில் இடம் பெற முடியாத சிக்கல், விடுதி கிடைக்காமை ஆகிய அம்மூன்று காரணங்களில் இரண்டாவதை அவர் தெளிவாக வரையறுக்கிறார்: “பொருளாதார உதவி மூலம் தீர்க்க முடியாத ஒரு பிரச்சினை உள்ளது. கல்லூரிகளில் இடம் பெறுகிற பிரச்சினைதான் அது. கல்லூரிகளில் இடம் பெறுவோரின் எண்ணிக்கையை பல்கலைக்கழகமோ, அரசோதான் நிர்ணயிக்கின்றன. குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் மாணவர்கள் கல்லூரிகளில் சேர்க்கப்படுகிறார்கள்.

கல்லூரிப் படிப்பை மேற்கொள்ள விரும்பும் தீண்டத்தகாத வகுப்பு மாணவர்களுக்கு இது மிகுந்த சிரமத்தைத் தருகிறது. இதுதான் ஒரு பேரிடராகத் தோன்றுகிறது. மற்ற வகுப்பாரை விட தீண்டத்தகாத வகுப்பு மாணவர்கள்தான் இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். “இதற்கு முக்கியக் காரணம், பெரும்பாலான கல்லூரிகள் தனியார் அமைப்பால் நடத்தப்படுவதும், அமைப்பு ரீதியாகவும், அலுவலர் ரீதியாகவும் இந்த அமைப்புகள் வகுப்புவாதத் தன்மை கொண்டிருப்பதுமே ஆகும். எனவே, இதன் காரணமாக கல்லூரியின் நோக்கமே வகுப்புவாதத் தன்மை கொண்டதாகிறது. இந்த வகுப்புவாதத் தன்மை மாணவர் சேர்க்கையிலும் பிரதிபலிக்கிறது. இதனால் உயர் வகுப்பினர் சேர்க்கையில் முன்னுரிமை பெறுகிறார்கள். தீண்டத்தகாத வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு சேர்க்கை முடிந்து விட்டதாகக் கூறி இடம் மறுக்கப்படுகிறது.'' (டாக்டர் அம்பேத்கர் தமிழ் நூல் தொகுப்பு 36; பக்.549)

நாடு விடுதலையடைந்தும் அம்பேத்கரின் கனவு நிறைவேறவில்லை. உயர் கல்வி பெறும் தலித்துகளின் எண்ணிக்கை இன்றளவும் குறைவாகத்தான் இருக்கிறது. அட்டவணை 1இல் குறிப்பிடப்படும் சொற்ப சதவிகித தலித்துகள் கூட முக்கியத்துவம் இல்லாத, அறிவியல் தொழில் நுட்பப் பாடப் பிரிவுகளைச் சாராத, உயர் படிப்புகளைப் படித்தவர்களாகவேதான் இருப்பார்கள் என்பது உறுதி. அரசு, ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் இதுவரை தலித்துகள் எந்தெந்த பாடப்பிரிவுகளில் உயர் கல்வி பெற்றுள்ளனர் என்பதை ஆய்வு செய்து ஓர் வெள்ளை அறிக்கை வெளியிடுமானால், இந்த உண்மை வெளியாகும். ஆனால் எந்த அரசும் இதைச் செய்யாது. எந்த தலித் அமைப்புகளும், கட்சிகளும் இதைக் கேட்கவுமில்லை.

அண்மையில் கல்லூரிப் பட்டமளிப்பு விழாவொன்றில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், நாட்டிலுள்ள அரசுக்
கல்லூரிகளின் "தரத்தை'ப் பற்றி தன் வாயாலேயே ஒப்புக் கொண்டார். உண்மைதான். நவீன வசதிகளும், தரமும் அற்றுதான் பெரும்பாலான அரசுக் கல்லூரிகள் இருக்கின்றன. தனியார் கல்லூரிகளோ இங்கு வசதிகளுடனும், நவீன கட்டமைப்புகளுடனும் இருக்கின்றன. இக்கல்லூரிகளை நடத்தும் சிறுபான்மையினர், கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக,
எத்தனை தலித் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் இடம் தந்திருக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளில் தலித் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இடங்களையும், பாடப்பிரிவுகளையும் ஆய்வுக்கு உட்படுத்தினால் அதிர்ச்சி ஏற்படுகிறது; ஆத்திரம் பொங்குகிறது. வரலாறு திரும்புகிறது என்று சொல்வதுண்டு. தலித் மக்களைப் பொறுத்தவரை வரலாறு திரும்பவில்லை. தொடக்க நிலையில் இருப்பதைப் போலவே நகராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிறு குழந்தைகள் என்னிடம் வருவதைத் தடை செய்யாதிருங்கள்; பரலோக ராஜ்ஜியம் அவர்களுடையது என்று ஏசுவின் கொள்கையைப் பிரசங்கித்து வரும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள், தலித் குழந்தைகளை (தலித் மாணவர்களை)
மட்டும் தங்களின் கல்லூரிகளின் பக்கமே வராதபடி, உயர் கல்விப் பரலோக வாயிலில் நின்று தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிறுபான்மையினர் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளிலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பெறப்பட்ட கடந்த பத்து ஆண்டுகளுக்கான விவரங்களை ஆய்வுக்கு உட்படுத்தினால்-தலித் மாணவர்களும், பழங்குடியின மாணவர்களும் மிகக் கடுமையான முறையிலே ஏமாற்றப்பட்டும், விரட்டப்பட்டும் இருப்பதை அறிய முடிகிறது. 22 கல்லூரிகளிலிருந்து மட்டுமே இதுவரை தகவல் கிடைத்துள்ளன. இவற்றில் 13 கல்லூரிகள் கிறித்துவர்களாலும், 5 முஸ்லிம்களாலும் நடத்தப்பட்டு வருகின்றன. 1999 முதல் 2008 வரையிலான பத்தாண்டுகளில் இக்கல்லூரிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளிலே சேர்க்கப்பட்டிருக்கும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 1,41,553. இவர்களிலே தலித் மாணவர்கள் 9,581. பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கையோ 692.

Chennai-High-Court.jpg கடந்த பத்தாண்டுகளில் தலித் மாணவர்களை 13.8 சதவிகிதமும், பழங்குடியின மாணவர்களை 0.49 சதவிகிதமும்
மட்டுமே சேர்த்துக் கொண்ட சிறுபான்மை மற்றும் தனியார் கல்லூரிகளை நாம் என்னவென்று அழைப்பது? இவர்களின் முதலாளிகள் பலருக்கும் மக்கள் மத்தியிலே "கல்வி வள்ளல்கள்' "கல்விக் கடவுள்கள்' என்றெல்லாம் பட்டப் பெயர்கள் இருக்கின்றன. அப்படியானால் தலித்துகளுக்கு கல்வி கொடுக்கிற பேர்வழி என்று சொல்லிக்கொண்டு கொடுக்காமல் இருக்கிறவர்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்கள்-"துரோகிகள்', "ஏமாற்றுக்காரர்கள்' என்பன போன்ற பட்டங்களையன்றி வேறென்ன தரமுடியும்?

சென்னையிலுள்ள லயோலா கல்லூரி, மேல் விஷாரம் சி. அப்துல் ஹக்கீம் கல்லூரி, அதிராம்பட்டிணம் காதர் முகைதீன் கல்லூரி, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, சிறீவைகுண்டம், சிறீ கே.ஜி.எஸ். கல்லூரி, திருப்பனந்தாள் கே.வி.எஸ். எஸ். கல்லூரி ஆகியவற்றில் கடந்த பத்தாண்டுகளில் சேர்க்கப்பட்ட தலித் மாணவர்களின் எண்ணிக்கை, சராசரியாக 22 சதவிகிதத்துக்கு மேல் இருக்கிறது. மற்ற 16 கல்லூரிகளிலோ தலித் மாணவர்களின் சேர்க்கை சராசரி 9.5 சதவிதமாகத்தான் இருக்கிறது. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் பழங்குடியின மாணவர்களின் பத்தாண்டு கால சேர்க்கை சதவிகிதம் 1.66. லயோலாவிலோ இது 2.11 சதவிகிதமாகும். பிற 20 கல்லூரிகளில் 0.24 சதவிகித பழங்குடியின மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களை இடஒதுக்கீட்டு வரைமுறைக்கும் அதிகமாக சேர்த்திருக்கிறோம் என்று விவரங்களை அளித்துள்ள கல்லூரிகள் பெருமிதம் கொள்ள எதுவும் இல்லை! ஏனெனில் அவை அனைத்திலும் ஒரே மாதிரியான சேர்க்கை முறையே பின்பற்றப்பட்டிருக்கிறது. தலித் மாணவர்கள் அறிவியல், தொழில் நுட்பப் பிரிவுகளில் அதிகமாக சேர்த்துக் கொள்ளப்படவில்லை. மாறாக வரலாறு, தமிழ் இலக்கியம், பொருளாதாரம் போன்ற பாடங்களிலேயும், அறிவியலில் ஒரு கலைப் பாடம் எனக் கருதப்படும் விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆகியவற்றிலேயும் தான் அதிகமாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலை இளங்கலையிலும் முதுகலையிலும் ஒரே விதமாகவே இருக்கிறது. ஆய்வு நிலையான எம்.பில். வகுப்புகளில் தமிழ்ப் பாடத்தில் மட்டுமே தலித் மாணவர்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளனர். சில கல்லூரிகளிலே சமூகப் பணி மற்றும் சமூகவியலில் தலித்துகளுக்கு அதிக இடம் தரப்பட்டுள்ளது. இப்பாடப் பிரிவுகளில் மனித வள மேம்பாடு தொடர்பான சிறப்புப் பிரிவுகள் எம்.பி.ஏ.வுக்கு இணையானவையாகக் கருதப்படுபவையாகும். ஆனால் இச்சிறப்புப் பிரிவுகள் பெரும்பாலும் தலித் மாணவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை.

இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்பிரிவுகளில் கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பாடப் பிரிவுகளில் தலித் மாணவர்களின் சேர்க்கை 10 சதவிகிதமாகவே உள்ளது. பழங்குடியினருடையதோ 0.1 சதவிகிதத்துக்கும் குறைவு. கார்ப்பரேட் செக்டார், உயிர் வேதியியல் மற்றும் தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பம், சுற்றுலா போன்ற பாடப்பிரிவுகளில் தலித்துகளோ, பழங்குடியினரோ சொல்லிக் கொள்ளும்படி இக்கல்லூரிகளில் சேர்க்கப்படவில்லை. திருப்பத்தூரில் இருக்கும் தூய நெஞ்சக் கல்லூரியும், கோவை நிர்மலா கல்லூரியும், குன்னூர் பிராவிடன்ஸ் கல்லூரியும் பழங்குடி மக்கள் அதிகம் கொண்ட பகுதியிலே இயங்கி வருபவையாகும். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் முறையே 57,1,10 என்ற எண்ணிக்கையில்தான் பழங்குடி மாணவர்களை இக்கல்லூரிகள் சேர்த்துக் கொண்டுள்ளன.

அதிராம்பட்டிணம் காதர் முகைதீன் கல்லூரி, பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, சிறீவைகுண்டம் கே.ஜி.எஸ். கல்லூரி, நாகர்கோயில் மகளிர் கிறித்துவக் கல்லூரி, திருப்பனந்தாள் கே.வி.எஸ். கல்லூரி ஆகியவற்றில் இந்தப் பத்தாண்டுகளில் ஒரே ஒரு பழங்குடியின மாணவர் கூட சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பது அதிர்ச்சியைத் தருகிறது. கல்வியின் விழுமியங்களுக்கு மாறாக இக்கல்லூரிகள் நடக்கின்றன. அறிவியல் தொழில் நுட்பப் பாடப் பிரிவுகளில் அனுமதிக்கப்படும் பழங்குடியின மாணவர் எண்ணிக்கை 50க்கும் குறைவாகவே இருக்கிறது.

இந்த வகுப்புகளில் சேர்க்கையின் போது கடைப்பிடிக்கப்படும் 1 முதல் 100 வரையிலான சுழற்சிப்புள்ளிகளில் 50ஆவது புள்ளியில் தான் பழங்குடியினருக்கான முறை (கூதணூண) வருகிறது. 2, 6, 12, 16, 22 என தலித்துகளுக்கான சுழற்சிப்புள்ளிகள் கணக்கிடப்படுவதால், அவர்களுக்குக் கூட இப்பாடப் பிரிவுகளில் இடம் கிடைத்துவிட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பழங்குடியினருக்கோ அந்த வாய்ப்பும் இல்லை. இதைப் போன்ற நடைமுறை சாக்குப் போக்குகளை சொல்லி இந்தக் கல்லூரிகள் ஏமாற்றி விடலாம். ஆனால் மானுட அறத்தின்படி குற்றமிழைத்தவை. ஏகலைவனின் கட்டை விரலை வெட்டிக் கொண்ட துரோணனின் சாதி வெறியை, யுகங்கள் தாண்டியும் நடத்தி வருவதற்கு இவர்கள் வெட்கப்பட வேண்டும்.

1986 ஆம் ஆண்டு அரசு ஒரு முடிவு எடுத்தது. அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் இருக்கும் கலைப்பாடங்கள் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெறுவதிலோ, சமூக நிலையைப் பொருளாதார ரீதியாக உயர்த்திக் கொள்வதிலோ எவ்வகையிலும் பயனளிக்கவில்லை. எனவே அவற்றை நீக்கிவிடலாம் என்றது. ஆசிரியர்கள் நடுவிலே அப்போது போராட்டங்கள் வெடித்தன. உடனே அரசு சுயநிதி முறையை அறிமுகப்படுத்தியது. சுயநிதிப் பாடங்களில் அறிவியல், தொழில் நுட்பப் பிரிவுகள் சேர்க்கப்பட்டு தலித்துகளுக்கு எட்டாத நிலையில் வைக்கப்பட்டன. கலைப்பாடங்களை வைத்துக் கொள்வது, சிறுபான்மையினர் கல்லூரிகளுக்கு வசதியாகப் போய்விட்டது. அந்த இடங்களில் தலித் மாணவர்களை சேர்த்து கணக்கு காட்டி விடுவதற்கு அவை உதவுகின்றன.

கலைப்பாடங்கள் படிக்கிறவனை நெகிழ்வாக ஆக்கிவிடும். வரலாற்றைப் பிடிக்காமல் வரலாறு போன்றவற்றைப் படித்துக் கொண்டேயிருக்கலாம். இதுபோன்ற பாடங்களைப் படித்துவிட்டு எழுத்தர்களாகவும், நான்காம் நிலை பணியாளர்களாகவும், வேலையற்றவர்களாகவும் தலித்துகள் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் அதிகாரப் பொறுப்புகளில், தொழில் நிர்வாகங்களில், அறிவியல் ஆய்வகங்களில், ஊடகத் துறையில் அவர்கள் வந்துவிடக் கூடாது என்று சாதி இந்துக்கள் நினைக்கின்றனர். சிறுபான்மையினரும் தங்களை இதனோடு இணைத்துக் கொள்கின்றனர். இது ஒரு கல்விச் சதி. இச்சதியை குற்ற உணர்வும், அற உணர்வுமின்றி சிறுபான்மையினர் செய்து வருகின்றனர்.

அம்பேத்கரின் காலம் தொடங்கி இன்று வரையிலும் தலித்துகள் அறிவியல் தொழில்நுட்ப உயர் கல்விகளில் வஞ்சிக்கப்பட்டே வருகின்றனர். சிறுபான்மையின-தனியார் கல்வி நிறுவனங்கள் அந்த துரோகத்தில் பங்கேற்றும் வருகின்றன. ஆனால் இவர்களின் மத பீடங்களோ ஏசு சமாரியர்களை நேசித்தார் என்றும், நபிகள் ஒரு கருப்பு அடிமையைத்தான் தொழுகைக்கு அழைக்க அமர்த்தினார் என்றும் பிரசங்கித்து வருகின்றன. எத்தனை முரண்பாடு!
- அடுத்த இதழிலும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com