Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu width=
 width=நவம்பர் 2007

நாள்தோறும் அச்சுறுத்தும் ஜாதி இந்துக்கள்

மா. பொன்னுச்சாமி

கருவந்தா கிராமம். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் வட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு விவசாயக் கூலிகளான தலித்துகள் 42 குடும்பங்களும், வியாபார முதலாளிகளான நாடார்கள் 2000 குடும்பங்களும் வசித்து வருகின்றனர். தென்காசி, ஆலங்குளம், ஊத்துமலை காவல் சரகத்திற்கு உட்பட்ட கருவந்தா, அச்சங்குன்றம் மற்றும் தலித்துகள் வசிக்கக்கூடிய மற்ற கிராமங்களிலும் அங்குள்ள சாதி இந்து நாடார்களுக்கு அடிமைத் தொழில் செய்து வருகின்றனர். ஆண்டாண்டு காலமாக அடிமைத் தொழில் செய்து வந்த கருவந்தா கிராமத்து தலித்துகள் பிணம் எரிப்பது, எழவு சொல்லப் போவது, குழி வெட்டுவது போன்ற வேலைகளுக்கு ஆறு பேருக்கு 200 ரூபாய் கூலி போதாது என்று 2006 ஆம் ஆண்டிலிருந்து நாடார்களுக்கு அடிமைத் தொழில் செய்ய மறுத்து விட்டனர். இதற்குப் பிறகுதான் பிரச்சினை தொடங்கியது.

Affected dalit students அக்டோபர் 10 அன்று மாலை 3 மணியளவில் தலித் பகுதிக்கு வரவேண்டிய குடிதண்ணீர் வரவில்லை. ஆனால், அதே வரிசையில் உள்ள நாடார் பகுதிக்கு தண்ணீர் வர, உடனே மாரிச்சாமி மற்றும் சில நபர்கள், தண்ணீர் வராத குழாயை தோண்டிப் பார்த்து அதிலிருந்த பிளாஸ்டிக் துகள்கள், பாலித்தின் பைகள் அடைத்திருந்ததை எடுத்து சுத்தம் செய்து மீண்டும் சரிசெய்து குழாயை மாட்டி விட்ட பின்பு தண்ணீர் சீராக வந்தது. அங்கு வந்த குத்தாலிங்கம் மற்றும் சில நபர்கள், "பொணம் எரிக்க முடியாத பயலுகளுக்கு தண்ணி ஒரு கேடா, சக்கிலியப் பயலுக எவனுக்குமே தண்ணி விட முடியாதுடான்னு'' மாரிச்சாமி சரி செய்த குழாயை திரும்ப மூடச் சொல்லி அடித்துள்ளனர்.

இதைக் கேள்விப்பட்ட கருவந்தா பஞ்சாயத்து தலைவரின் கணவர் அங்குள்ள துப்புரவுப் பணியாளரை அழைத்து, மூடி இருந்த குழாயை திறக்கச் சொல்லியிருக்கிறார். குழாயை திறந்த துப்புரவுப் பணியாளரை அதே சாதி வெறி கும்பல் மீண்டும் தாக்கியுள்ளது. இங்கு நடந்த சண்டையை விலக்கிவிட நிராயுதபாணிகளாய் சென்ற தலித்துகளை சாதிவெறியர்கள் இரும்பு பைப், கம்பு மற்றும் கம்பிகளால் கடுமையாக அடித்துள்ளனர். அனைத்து தலித் வீடுகளையும், கதவுகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். அப்பெண்களை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியுள்ளனர்.

13 வயது சிறுமியான தமிழ்ச்செல்வி நம்மிடம், "சட்டையை புடிச்சு இழுத்து என்னய ஒருத்தன் முள்ளுக்குள்ள தள்ளிவிட்டு மிதிச்சான்னு'' கூறினார். "அண்ணாச்சி என்னய விட்டுருங்க நான் ஒன்னும் செய்யலன்னு சொல்லியும், என் தலைமுடியை புடிச்சி என் கன்னத்துல அடிச்சாங்க, ஓடச் சொல்லி விரட்டுனாங்க. பிள்ளைங்க எல்லாரும் பனை மரத்துக்கு ஓடிட்டோம்'' என்று காந்தா என்ற சிறுமி நம்மிடம் பயந்து கொண்டே பேசினார். இவ்வளவு நடந்தும் தங்களது வெறி அடங்காமல் மீண்டும் ஆயுதங்களோடு வந்த குத்தாலிங்கம் கும்பல், கருப்பசாமி (55), சுப்பன் (65), பாலகிருஷ்ணன் (45), பெருமாள் (70), சேர்வாரன் (60) ஆகியோரை கொடூரமாக வெட்டி வீழ்த்தியுள்ளது. சாதி வெறிக் கும்பல் வெட்டும்போது, பஞ்சாயத்து தலைவரின் கணவரும் நாடார் சாதி இந்துக்களும், எந்தவித சலனமுமின்றி வேடிக்கை பார்த்துள்ளனர்.

வெட்டுப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பதற்கு அங்குள்ள எந்த வாகனங்களும் தயாராக இல்லை. ஏனென்றால், அங்குள்ள வாகனங்கள் அனைத்தும் நாடார்களுக்கு சொந்தமானவை. திட்டமிட்டே நடைபெற்ற இந்த வன்கொடுமைகளுக்கு எல்லாருமே ஆதரவாக இருந்துள்ளனர். வெட்டுப்பட்டவர்களை அழைத்துக் கொண்டு 6 கி.மீ. தொலைவில் உள்ள ஊத்துமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். காவல் துறை வழக்கம் போல வழக்குப் பதிவு செய்ய மறுத்திருக்கிறது. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் 11 பேர் மீதே பொய்வழக்குப் பதிவு செய்துள்ளது.

மேலும், இக்கிராமத்தில் உள்ள குழந்தைகள் அனுபவிக்கின்ற கொடுமைகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கின. இக் கிராமத்திலுள்ள டி.டி.டி.ஏ. (TDTA)நடுநிலைப் பள்ளி, சி.எஸ்.அய். சபைக்குட்பட்டது. இங்குள்ள ஆசிரியர்களான கிறித்துவ நாடார்கள், இந்துக்களைப் போலவே தங்களது வெறியை பிஞ்சுகள் மீது காட்டுகின்றனர்.

இங்குள்ள ஆசிரியர்களுக்கு தலித் மாணவ மாணவிகள்தான் தேநீர், வடை வாங்கி வர வேண்டும்; ஆசிரியர்கள், மாணவர்கள் பயன்படுத்திய கழிவறைகளை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும்; சிறு குழந்தைகள் அல்லது ஆசிரியர்களின் குழந்தைகள் மலம் கழித்தால் அதை அள்ளிப்போட வேண்டும்; பள்ளிக் கூடத்தில் யார் வாந்தி எடுத்தாலும் தலித் மாணவர்கள்தான் மண் அள்ளிப் போட்டு மூட வேண்டும்; வகுப்பறைகளில் தலித் மாணவர்கள் தனியேதான் உட்கார வேண்டும். அங்குள்ள தேவாலய திருவிழாக்களில் தலித் மாணவர்கள்தான் குப்பைகளை அகற்றுவதற்கும், வாழைமரத் தோரணங்களை கட்டுவதற்கும் வேலையாட்களாகப் பயன்படுத்தப்படுகின்றனர்.

இங்குள்ள மாணவர்கள் சேகர், மாரிச்செல்வம், முத்துமாரி, சம்பத் குமார் ஆகியோர் "எங்கள எல்லா பிள்ளைகளும் சக்கிலியப் பயலே, சக்கிலியப் புள்ளனுதான் கூப்பிடுவாங்க; பேர் சொல்லி கூப்பிட மாட்டாங்க. இத நாங்க எங்க எச்.எம். (தலைமை ஆசிரியர்) ஜேசு பாலசுந்தர்சிங் சார்கிட்டயும், ராஜலீலாவதி டீச்சர்கிட்டயும் சொன்னா, உங்கள சக்கிலியப் பயலேன்னு சொல்லாம பிராமணப் புள்ளேன்னா கூப்பிடுவாங்கன்னு திட்டுறாங்க. எங்க பள்ளிக்கூடத்தில் வாரம் ஒரு முட்டைதான் போடுவாங்க. அதுவும் எங்களுக்குப் பிஞ்ச முட்டைதான் கிடைக்கும். ஆயாம்மா கிட்ட கேட்டா, தினம் உங்க வீட்டுல முட்டைதான் திம்பியோ, இங்க வந்து நொர நாட்டியம் பேசுற சக்கிலியக் கழுதன்னு எங்களத் திட்டுவாங்க'' என்கின்றனர்.

இவ்வளவு கொடுமைகளையும் நாள்தோறும் சந்தித்து, உயிருக்கு பயந்துதான் தலித்துகள் தங்களது வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பு கோரி வழக்குப் பதிவு செய்த தலைவர் மரியதாஸ்-அருந்ததியர் மகா சபை, தமிழ்நாடு அருந்ததியர் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் கவுதமன், மாநில அமைப்பாளர் எஸ்.கே. பழனிச்சாமி, அருந்ததியர் ஒருங்கிணைப்புப் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜக்கையன் மற்றும் சி.பி.எம். கட்சியினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com