Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
நவம்பர் 2005

இருளர் வாழ்வு இன்னும் இருளிலா?
விழி.பா. இதயவேந்தன்

Irular rally

ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பழங்குடியினரை கூண்டோடு சாகடித்தது போல், தமிழகத்திலும் பழங்குடியினர் வாழ்வியல் ஆதாரங்கள் தொலைந்து, நிம்மதி இழந்து அம்மக்கள் பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கின்றனர். இவற்றால் பழங்குடிச் சமூகம், கடந்த 100 ஆண்டுகளில் பிற சமூகத்தினரைப் போன்று மக்கள் தொகை அடிப்படையில் அதிகரிக்காமல், மிகவும் குறைந்து கொண்டே வருவதைப் பல ஆய்வுகள் நிரூபிக்கின்றன. பழங்குடியின இருளர் சமூகத்தைச் சேர்ந்த அத்தியூர் விஜயா என்பவர், புதுச்சேரி காவல் துறையினரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதால்தான் 4.10.1996 அன்று ‘பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்' தொடங்கப்பட்டது. சங்கம் தொடங்கிய நாள் முதல் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் உள்ள இருளர்மீதான வன்கொடுமைகள், வழக்குகள், போராட்டங்கள் எனத் தொடர்ந்து இன்று 10 ஆம் ஆண்டில் சங்கம் வலுவோடு செயல்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம், அடக்குமுறைக்கு எதிராக இருளர்கள் ஒன்றிணைவதும் உறுதியோடு தொடர்ந்து நிற்பதும்தான்.

தமிழகப் பழங்குடியினரின் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து குறிப்பாக இழந்துபோன நிலங்களை மீட்கும் முகமாக தமிழகப் பழங்குடியினர் நிலவுரிமை மாநாடு, 15.10.2005 அன்று திண்டிவனத்தில் எழுச்சியோடு தொடங்கியது. தாரைத் தப்பட்டம் முழங்க, தலித்துகளும் பழங்குடியினரும் பெருந்திரளாகப் பங்கேற்றனர். தலித்துகள் மண்ணுரிமைக்காக பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் எனப் போராட்டங்கள் நடத்தும் இவ்வேளையில், தமிழகமெங்கும் உள்ள பழங்குடியினர் தங்களுக்கான நிலவுரிமையைப் பெற கோரிக்கை வைப்பதுதான் இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

காலையில் தொடங்கிய தொடக்க அரங்கத்திற்குப் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க மாநிலத் தலைவர் ப. இளங்கோவன் தலைமை வகித்தார். "கடந்த 9 ஆண்டுகளில் தொடங்கிய எங்கள் சங்கம் எத்தனையோ பிரச்சினைகளை, பொய் வழக்குகளை சந்தித்தது. ஏன் என்று கேட்க ஆளில்லாத பழங்குடியினர் மீது வன்கொடுமை நிகழ்த்தப்படும்போது, அதைத் தடுப்பதற்காக உருவானதே எங்கள் சங்கம். பழங்குடியினருக்கு ஆதரவாக செயல்பட்டால் என் மீதும் போலிஸ் நடவடிக்கை எடுக்கிறது. நமது சங்கத்திற்கு மிகப் பெரும் பாதுகாப்பு, விடுதலைச் சிறுத்தைகளின் பொதுச் செயலாளர் தொல். திருமாளவன் அவர்கள் இன்று நமது நிகழ்வில் கலந்து கொள்வதாகும்'' எனத் தமது அறிமுக உரையில் பேராசிரியர் கல்யாணி பேசினார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
Tirumavalavan and social activists

மாநாட்டைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய தொல். திருமாவளவன், "தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் இருந்தாலும், பழங்குடியினர் தொடர்பு நமக்கு அதிகம் கிடைப்பதில்லை. இன்று நில உரிமைக்கான மாநாடு நடைபெறுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் ஆரம்பத்தில் தாழ்த்தப்பட்டோர் மண்ணுரிமைக்காகப் போராட்டங்களைத் தொடங்கியது. இந்த மண்ணின் மைந்தர்களுக்கு மண்ணுரிமை இல்லை. இந்த தேசமே நமது தேசம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின நிலமற்ற கூலிகளான நாம் மண்ணிலிருந்து பிடுங்கப்பட்டு சிதறியிருக்கிறோம். நமக்கும் மண்ணிற்கும் உள்ள உறவு உழைப்பு ஒன்றுதான். உழைத்து யாருக்கோ மூட்டை கட்டிக் கொடுக்கிறோம். இந்த மண்ணை ஆளுவதற்கு எங்களுக்கு தகுதி உண்டு என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். நம்மிடம் நிலம் இல்லை, அதிகாரம் இல்லை, இன்னும் ஆயுதங்கள் ஏதுமின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பழங்குடியினர் பற்றி ஒரு சிலர்தான் ஆய்வு செய்திருக்கிறார்கள். ஆனால், புத்தகமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் பழங்குடி இருளர்கள். பழங்குடியினர் கோரிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் ஆதக்கிறது'' என்றார்.

பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் உ. மலர்: "இந்த மாநாட்டுக்கு எல்லா இனத்தையும் சேர்ந்தவர்கள் வந்திருப்பது மகிழ்ச்சி. இந்தக் கூட்டம் எதுக்கு வெச்சாங்க, இன்னாத்துக்கு வெச்சாங்கன்னு எங்கிட்ட நாளைக்கி எங்க சனங்க கேப்பாங்க. எங்களுக்கு சாதி சர்ட்டிபிகேட் வேணும், ஏதாவது பிரச்சினை என்றால் விழுப்புரம் மாவட்டத்துல போலிசில் புகார் கொடுக்க முடியவில்லை. ஏன்னா பயம். முதல் தகவல் அறிக்கை போடுவதில்லை. அடிச்சவன் புகார் கொடுத்தா உடனே முதல் தகவல் அறிக்கை காப்பி கொடுக்கிறான். எனக்கு படிக்கத் தெரியாது. எங்க புள்ளங்களாச்சும் படிக்கணும்தான் சாதி சர்ட்டிபிகேட் கேக்கிறோம்.''

இருளப்பு செல்வக்குமார் - ஆதிவாசிகள் கூட்டமைப்பு : "ஆதிவாசிகளின் அடையாளம், உரிமைகள் மறுக்கப்படுகின்றன. புதுவையில் ஆதிவாசிகள் அங்கீகரிக்கப்படவில்லை. நான் இருளன். நிலவுரிமைக்காக சிறை சென்றிருக்கிறேன். நமது சொந்தங்கள் தேவையற்று இன்றும் 11 பேர் கடலூர் மத்தியச் சிறையில் தண்டனை அனுபவிக்கிறார்கள். அரசு முதலாவதாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள தன்னாட்சி உரிமையை வழங்க வேண்டும். அதைச் செய்யாமல் சான்று கொடுக்க நீ யார்? நிலம் கொடுக்க நீ யார்? ஓட்டு வாங்குவதற்காக அரசியல்வாதிகள் எப்படி வேண்டுமானாலும் வருவார்கள். அதன் பிறகு ஆதிவாசிகளை கவனிக்க மாட்டான்.''

கக்கனூர் ‘வீர முழக்கம்' கலைக் குழுவினர் வழங்கிய கலை நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. மலையகத் தொழிலாளிகள் நடனம் மற்றும் ‘சிதம்பரத்தில் பத்மினி, திண்டிவனத்தில் ரீட்டாமேரி, பெண்கள் மீது வன்முறைகள் தொடருதே, காக்கிச் சட்டை வெறி நாய்கள் குதறுதே' எனும் பாடலும் கலை நிகழ்ச்சியும் வெகுவாய் மக்களைக் கவர்ந்தது. பிற்பகல் நடந்த தீர்மான அரங்கிற்கு தலைமை தாங்கிப் பேசிய பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க மாநில பொருளாளர் ஏ. ஜெகதீசன், ‘நிலம் வேண்டும் நிலம் வேண்டும் என்றால் கிடைக்காது. காணி நிலமானாலும் போராடினால்தான் நமக்குக் கிடைக்கும்' என்றார். இந்நிகழ்வில் பூபால் வரவேற்க, வழக்குரைஞர் கவுதம சன்னா, சு. லட்சாதிபதி காசிநாதன், பன்னீர்செல்வம், கா. பாலமுருகன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினார்கள்.

பழங்குடியினர் இருப்பிடங்களை இந்திய அரசியலமைப்புச் சட்டம் அய்ந்தாவது அட்டவணையின் கீழ்க் கொண்டுவர வேண்டும், தங்கராஜ் அறிக்கை (1990) பரிந்துரையின்படி சிதறி வாழும் பழங்குடியினர்க்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும், பழங்குடியினர்க்கு வீட்டு மனைப்பட்டா/தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும், சாதிச் சான்று கால தாமதமின்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
Irular social activists

மாலையில் திண்டிவனம் மீனாட்சி திரையரங்கிலிருந்து தொடங்கிய மாபெரும் பேரணியில், இரண்டாயிரம் பேருக்கு மேல் ஒன்று திரண்டு அணி வகுத்தது அந்நகரை உலுக்கியது. பேரணிக்கு கு. பூபதி தலைமையேற்க, கா. ருக்கு தொடங்கிவைத்தார். பாம்பு படம் பொறித்த சங்கக் கொடிகளுடன் ஊர்வலம் மீண்டும் பொது அரங்கில் வந்து முடிந்தது. ப. சிவகாமி எழுதிய ‘தமிழகப் பழங்குடியினர் நிலவுமை' என்னும் நூல் வெளியிடப்பட்டது. வழக்குரைஞர் லூசி தலைமை ஏற்க, கா.வ. கன்னியப்பன் வரவேற்புரை ஆற்றினார். நூலை அத்தியூர் விஜயா வெளியிட, அமிர்தா பெற்றுக் கொண்டார். பேராசியர் கோச்சடை, பழங்குடியினர் வாழ்க்கை முறையை விளக்கி அதற்கு இந்நூல் தரும் எண்ணற்ற விளக்கங்களைச் சுட்டிக்காட்டினார்.

விழி.பா. இதயவேந்தன் தொகுத்த ‘பழங்குடியினர் கதை, கவிதை, கட்டுரைகள்' நூலை தைலாபுரம் சந்திரா வெளியிட, ரஞ்சிதம் பெற்றுக் கொண்டார். "பழங்குடியினரின் கலாச்சாரங்களைப் பதிவு செய்யும் இந்நூலில், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் எழுதிய படைப்புகளும் தலித்துகள் பழங்குடியினர் பற்றி எழுதிய படைப்புகளும் இடம் பெற்றுள்ளன. பழங்குடியினர் மட்டுமே அவர்கள் வாழ்க்கைப் பதிவுகளை எழுதி அடுத்த நூல் வெளிவர வேண்டும். ‘புதிய கோடாங்கி' பல்வேறு பழங்குடியினரின் இத்தகைய வாழ்க்கை முறைகளைப் பதிவு செய்திருக்கிறது’' என்றார் ப்ரதிபா ஜெயச்சந்திரன்.

இறுதியாக நடந்த பொது அரங்கத்திற்கு, பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சு. ஆறுமுகம் தலைமை ஏற்க, ச.சு. ஜைனுதீன் வரவேற்றுப் பேசினார். தந்தை பெரியார் திராவிடக் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி, விடுதலைச் சிறுத்தைகள் துணைப் பொதுச் செயலாளர் ஏ. விஜயராகவன், மனித உரிமை இயக்கம் வழக்கறிஞர் லூசி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மேலவளவு முருகேசன் வழக்கிற்கு, பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் தங்கள் சொந்த உழைப்பிலிருந்து இவ்வழக்கினை நடத்தி வரும் வழக்கறிஞர் ரத்தினம் அவர்களிடம் ரூ.5,000/ நன்கொடையாகக் கொடுத்தது.

இருளர்கள் வாழ்வு இனி இருளில் இருக்காது என்பதை மெய்ப்பிக்கும் வகையில், பழங்குடியினரின் எழுச்சிமிக்க இந்த நிலவுரிமை மீட்பு மாநாடு நடந்தேறியது.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com