Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu width=
 width=மே 2009

மாற்றுப்பாதை - சுதாகர் கத்தக்
யாழன் ஆதி

‘மாற்றுப் பாதை'யைத் தொடங்கும்போது, சில வரையறைகளை நாம் வைத்திருந்தோம். அதில் ஒன்று, இப்பகுதி யில் இடம்பெறும் தலித் எழுத்தாளர்கள் தங்களுடைய ஆக்கங்களை நூலாக வெளியிட்டிருக்க வேண்டும் என்பது. ஆனால் சுதாகர் கத்தக் அவர்களுக்கு இது பொருந்தாது. எண்பதுகளில் எழுதத் தொடங்கிய இவர், இன்று வரை தன் எழுத்துக்கு நேர்மையாக இருக்கிறார். இதுவரை பதினாறு சிறுகதைகளை அவர் எழுதியிருக்கிறார். அந்த எழுத்துகளின் தீவிரமும் உண்மை யும் அவருக்கு இந்த விதிவிலக்கை வழங்கி இருக்கின்றன.

Sudhakar Kattak ஓர் எழுத்தாளர் தான் வாழ்கின்ற காலத்திற்கும் சமூகத்திற்கும் உண்மையாக இருப்பதும், அவர் அதற்கான புகழ் வெளிச்சங்களைத் தேடி அலையாமல் இருப்பதும் இன்று அரிதான செய்திதான். ஆனால் தன்னுடைய ஆழ்ந்த வாசிப்பின் ஊடே தன்னை சூழ்ந்திருக்கின்ற சமூகத்தின் மீதான தேடலிலும், அதிதீவிரமான எழுத்தின் மீதான நம்பிக்கை வெளியிலும் தகவமைத்துக் கொள்கின்ற போது, புகழ் மயக்கத்திற்கு ஆட்படாமல் அப்பட்டமாக இருப்பது என்பதுதான் சுதாகர் கத்தக்கின் இருப்பு!

வணிக இதழ்களில் உறுதியற்ற எழுத்துகளை சரசரவென எழுதி, பரபரவென பேசப்படுவதை அவர் ஒருபோதும் ஒத்துக் கொள்வதில்லை. இந்த தேதிக்குள் கதை ஒன்று வேண்டும் என்னும் தேவைக்கு, குறிப்பிட்ட தேதிக்குள் கதையடிக்கும் கொடுமைக்குத் தன்னை இழக்காதவர் சுதாகர் கத்தக். பதினாறு கதைகளை மட்டுமே தான் எழுதினாலும் எழுதுவதிலிருந்து விலகிச் செல்லாதவர் அவர். தான் எழுதுவதில் மனித வாழ்வை, அதன் துன்பங்களை, இயல்புகளைப் பதிய வைக்கும் பண்பாட்டுப் பிரதிகளை உருவாக்குவது அவருடைய தன்மை. ஆனால் கொஞ்சம் மொழியையும் கதை செய்யும் நுட்பத்தையும் வைத்துக் கொண்டு, வாழ்விலிருந்து விலகி கற்பனையுடன் கதைக்கும் தொழில் வல்லமையை அவர் ஏற்றுக் கொள்வதில்லை.

தலித் வாழ்வின் அனுபவங்களுடன் அவர் சிறுகதைகளை அணுகுகிறார். தன் நினைவில் இருக்கும் வாழ்வின் எச்சங்களை கலையாக்கும் திறனை பிரதிகளாக்கும்போதுதான் அது சிறந்த ஆக்கமாக உருவாகிறது. அதை விடுத்து இலக்கியக் கோட்பாட்டு சட்டத்துக்குள்ளோ, பருண்மை, அரூபம் என்னும் நிலைகளுக்குள்ளோ தலித் இலக்கியம் வரவே முடியாது என்பதும், அது தன் இயல்பான சமூக அக்கறையுடனேதான் எழுகிறது என்பதும் அவருடைய கருத்து. அத்தகைய எழுத்துச் சுதந்திரத்தோடு மட்டுமே தன்னால் எழுத முடியும் என்னும் கூர்த்த நம்பிக்கையில் தோன்றுகின்றன அவருடைய ஆக்கங்கள்.

அதனால்தான் வணிகச் சூழலில் சிக்கிக் கொள்ளாமல், தன்னுடைய பங்களிப்பை ஓசையின்றி செய்து வருகிறார். தன்னுடைய ஆக்கங்களை வெளியிடுவதில் அவர் சிற்றிதழ்களையே முன்னிலைப் படுத்துகிறார். ‘கணையாழி', ‘மனஓசை', ‘பாலம்', ‘தலித்', ‘கனவு', ‘உன்னதம்', ‘புதுவிசை', ‘புதுஎழுத்து' போன்ற சிற்றிதழ்களில் எழுதியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் ஒரு கதைகூட எழுதவில்லை.

ஆனால் தலித் வாழ்வு தரும் நெருக்குதல் அவரை எழுத விடாமல் செய்ததில்லை. சமூகத்தைப் பற்றிய புரிதல், மனித வாழ்வின் இருளடர்ந்த பகுதியை எழுதி நிரப்புதல், அனுபவத் தின் கூறுகளை அதன் தேவைக்கு ஏற்ப கதையாக்கும் சூழல் வாய்க்கும் போதெல்லாம் அவர் எழுத முற்படுகிறார். அதனால் தான் அதிக காலமானாலும், குறைவாகவே எழுதினாலும் சுதாகர் கத்தக் ஆக்கத் திறன் கொண்ட எழுத்தாளுமையாகத் திகழ்கிறார்.

தொழில்மயமான நெய்வேலியில் பிறந்து வளர்ந்தாலும் அச்சூழலுக்கு எதிராக தன்னை ஆக்கிக் கொண்ட தன்மையே இலக்கியத்தில் அவருக்கு முக்கிய இடத்தை அளித்திருக்கிறது. பொருளாதாரத்தை மட்டுமே கணக்கில் கொள்கிற தொழில் சார்ந்த தளத்திலிருந்து, வாழ்வின் இழைகளைப் பின்னுகின்ற இலக்கியம் சுதாகர் கத்தக்கிற்கு வாய்த்திருக்கிறது. விடுமுறைக் காலங்களில் பாட்டி வீடுகளுக்குச் செல்லும்போது மனதில் பதிந்த அனுபவங்களையே சிறுகதையாக்கி இருக்கிறேன் என்கிறார்.

தலித் சூழலில் வளர்ந்த பெற்றோர்கள் என்றாலும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்ய கல்வி மிகவும் முக்கியமானது என்று உணர்ந்த குடும்பமாக கத்தக்கின் குடும்பம் இருந்தது. அதனால் அவருக்கும் அவருடைய சகோதரிகளுக்கும் கல்வி தடையின்றி கிடைத்தது. மூன்று சகோதரிகளுடன் பிறந்த அவர், குடும்பத்திற்கு ஆற்ற வேண்டிய அனைத்தையும் மிகப் பொறுப்போடு ஆற்றியதையும், எந்தத் தருணத்திலும் தன் குடும்பம் தன்னுடைய இலக்கிய முயற்சிகளுக்குத் தடையாக இல்லாததையும் மிக்க நெகிழ்ச்சியோடு அவர் நினைவு கூர்கிறார். அவருடைய அன்னையின் அரவணைப்பும் அவருடைய படிப்பு சார்ந்த தூண்டலுமே தன் எழுத்துகளுக்கு காரணம் என்று கூறும் அவர், ஒரு பொறியாளராக இருந்தாலும் நுட்பமாக வாழ்வினை அனுபவங்களினூடே எழுதும் கதைக்காரராக, மக்கள் மொழியில் அழகியல் கெடாத பிரதிகளாக்கு வதில் கைதேர்ந்தவராக இருக்கிறார்.

ஆக்கம் என்பது ‘சமூக மானுடவியல்' என்பதை உள்ளடக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். சமகால நிகழ்வுகளையும், சமூக அரசியலையும் கொண்டிருக்க வேண்டும். இப்படி அமைந்த ஆக்கங்களே உண்மையானதாக இருக்க முடியும் என்னும் சுதாகர் கத்தக், பூமணி மற்றும் டேனியலின் எழுத்துகள் அவ்வாறு இருப்பதாகக் கூறுகிறார். என்.டி. ராஜ்குமாரை உக்கிரமான செவ்வியல் கவிஞராக அடையாளம் காண்கிறார். மனித வாழ்வைத் தொலைவில் நின்று கேலி பேசக் கூடியதாக, சமூகத்தோடு தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாத அல்லது மக்களின் வாழ்விலிருந்து தன்னை துண்டித்துக் கொண்டு வெறும் மொழி யையும் கதை செய்யும் கலையினையும் கொண்டிருப்பவர்களை – அவர் எத்தகையவராயினும் ஏற்க முடியாது என்கிறார்.

தலித் கதையாடல் என்பது வாய் மொழிக் கதைகளின் நீட்சியாகவும், நாட்டார் மரபியல் தெய்வங்களின் கதைகளாகவும், சாதி அமைப்பின் மீது கடுமையான கோபம் கொண்டவையாகவும், மேட்டுக்குடிகள் திணிக்கும் அறங்களின் மீது வெறுப்பைக் கக்குவதாகவும் இவற்றைத் தன்னகத்தே கொண்ட மனிதர்களை அவர்களின் மொழியினூடாகவே சித்தரிப்பனவாகவே தான் கதைகளை எழுதுவதாகவும் கூறுகிறார் கத்தக்.

சமூக உணர்வு, சமகால அரசியல், நேரடியாகக் கூறும் எதார்த்த வகை சித்தரிப்பு, இறுக்கமான மொழி சார்ந்து எழும் எதிர்க் கேள்விகள் ஆகியவை தலித் இலக்கியத்தின் மய்யக் கண்ணிகளாக இருக்க வேண்டும் என்பதும், தனக்கு தொடர்பில்லாத விஷயங்களைத் தொட்டு எழுதி, அப்போதைய தேவைக்காக சிலிர்ப்புடன் எழுதி உருவாக்கும் தன்மை அவரிடத்தில் இல்லை. அவர் மொழியிலேயே கூறினால், ‘‘துயரத்துடன் கோபத்தை சமூகத்தின் பல தளங்களுக்கும் போய்ச் சேரும்படி வீசுகிறேன். முஷ்டியை உயர்த்துவது என் நோக்கமல்ல. மாறாக முஷ்டி இருப்பதை அறிவுறுத்தத்தான். சில கணங்களில் அதிக பட்சமான கோழையை வாயில் அடக்கி காறி உமிழ்வதற்கும் நான் தயாராக இருக்கிறேன்'' என்கிறார்.

‘‘நீண்ட மணல் தெரு. ஆடுகளின் புழுக்கையும், மாடுகளின் சாணியும் கலந்து கிடக்கும். அதில் நடந்து எனது பாட்டனார் வீட்டுக்கு நான் போய்க் கொண்டிருப்பேன். ‘மன்னார்குடியாங்க மொவனா? இப்பத்தான் வர்ரீயா, எட்டியேய் பாருங்கடி கட்ன பொண்டாட்டிய உட்டுட்டு ஒத்த ஆளா வர்றத. செரி போவுது, அதுக்கு இப்டியா மொளக்கா குஞ்சிய ஆட்டிட்டு வருவே.' இதை சொன்ன பவுருச்சி அத்தை தூக்கு மாட்டிக் கொண்டாள். மாறாத, வற்றாத அன்புடன் அவள் தின்னக் கொடுக்கும் வெள்ளை அரிசி முறுக்கையும், தண்ணீர் விட்டு கரைத்த மாவில் சுடும் அதிரசத்தின் சுவையையும் என் நாக்கு கவனமாக இன்னும் தேக்கி வைத்திருக்கிறது.''

– இவ்வாறு வாழ்வைப் பதிவாக்குகிறது சுதாகர் கத்தக்கின் எழுத்து.

சிறுகதை அவருக்குப் பிடித்தமானதாக இருந்தாலும் நாவல் எழுத வேண்டும் என்னும் உந்துதலும் அவருக்கு உண்டு. ‘கனவு' இதழில் அவர் எழுதிய ‘நட்சத்திரங்களுடன் பேசுபவள்' என்ற கதை குறிப்பிடத்தகுந்தது. ‘தலித்' இதழில் அவர் எழுதிய ‘வரைவு' சிறுகதை ‘கதா' விருதினைப் பெற்றுத் தந்தது. இலங்கையிலிருந்து வெளிவந்த ‘சரிநிகர்' இதழ் அக்கதையினை மறுவெளியீடு செய்திருந்தது. ‘நிழல்' இதழில் அவர் எழுதிய பஷீர் பற்றிய கட்டுரை குறிப்பிடத்தக்கது. பிரமிள் குறித்து அவர் எழுதிய கட்டுரையையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

குழந்தைகளுக்காக எழுத வேண்டும் என்னும் பேரவா அவருக்கு இருக்கிறது. ‘உதவி' என்னும் சிறுகதையினை குழந்தைகளுக்காக ‘சிறுவர் மணி'யில் அவர் எழுதி பரிசினைப் பெற்றிருக்கிறார்.

தன் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக ‘வேர்கள்' ராமலிங்கம் மற்றும் புதுவை பிரெஞ்சு நிறுவனத்தைச் சேர்ந்த கண்ணன் அவர்களையும் வைத் திருக்கிறார். ‘வேர்கள்' ராமலிங்கம் தனக்கு இலக்கியம் குறித்த பல கதவுகளைத் திறந்தவர் என்றும், அவரிடம் இல்லாத சிற்றிதழ்களே இல்லை என்றும், எந்தெந்த புத்தகங்களையெல்லாம் வாசிக்க நினைத் திருந்தாரோ அவற்றையெல்லாம் ராமலிங்கம் வைத்திருந்ததாகவும் வாஞ்சையோடு கூறுகிறார். கண்ணனின் விமர்சனங்கள் முக்கியப் பங்களிப்பு தருவன என்பது அவருடைய கூற்று. அவர்களின் நட்பு எப்பேர்ப்பட்டது என்பதையும் சிலாகிக்கிறார் சுதாகர் கத்தக்.

ஒரு தலித் படைப்பாளி உறுதியான கொள்கையுடன், விலை போகாதவராக, சமூகத்தை தன் எழுத்துகள் மூலம் விமர்சிப்பவராக, தான் இயங்கும் தளம் எது, அது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தவராக இருக்க வேண்டும் என்னும் சுதாகர் கத்தக்கின் கூற்றுக்கு அவரே எடுத்துக்காட்டு.

ரித்விக் கத்தக் என்னும் ஆகச் சிறந்த வங்காளத் திரைப்பட இயக்கு நரின் பெயரில் இருக்கும் ‘கத்தக்' என்பதைத் தன் பெயரின் பிற்பகுதியாக வைத்திருக்கும் சுதாகர் கத்தக்கின் கதைகள் அடங்கிய தொகுப்பு ஒன்று மிக விரைவில் தமிழுக்கு வர வேண் டும். அது ஒரு புதிய இலக்கணத்தை உருவாக்கும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com