Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Dalithmurasu
 width=
 width=மே 2009

ஜாதியின் தோற்றுவாய் எது?
ம. மதிவண்ணன்

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் முதல் நூல் தொகுப்பில் உள்ள முதல் இரு கட்டுரைகளையும் இங்கு அலசுவதற்கு சில காரணங்கள் உண்டு. அதில், சாதி மற்றும் மொழிவாரி மாநிலங்கள் குறித்து விவாதிக்கப்படுகின்றன. இவற்றுள் முதல் இரு கட்டுரைகளும் சாதி குறித்த அம்பேத்கரின் பார்வைகளை முன்வைக்கின்றன. இரண்டாவது கட்டுரையான ‘சாதி ஒழிப்பு' நூலின் மூன்றாவது பதிப்பின் முன்னுரையில், ‘இந்தியாவில் சாதிகள்' என்ற இத்தொகுப்பில் முதல் கட்டுரையையும் சேர்த்து வெளியிட விரும்பியதாகக் குறிப்பிடுகிறார் அம்பேத்கர். இவ்விரு கட்டுரைகளும் சேர்ந்து, ஒரு முழு நூல் என்கிற நிறைவைத் தரும் என்பது அவருடைய எண்ணம். அதனாலும் நடைமுறை சார்ந்த காரணங்களாலும் எனது தேர்வு சரியானதுதான் என்று கருதுகிறேன்.

Dalits ‘இந்தியாவில் சாதிகள்' என்ற கட்டுரை, கொலம்பியா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மானுடவியல் கருத்தரங்கில் படிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையாகும். இக்கட்டுரையில் சாதியின் தோற்றம், அதன் தொடக்கப்புள்ளி எது அல்லது யார்? அது எவ்வாறு பரவியது? என்பனவற்றை அவர் தெளிவுபடுத்துகிறார்.

சாதி என்பதன் சாரமாக புறமண முறையின் மீதான தடையும், கறாரான அகமண முறையும் இருக்கின்றன. இந்தியாவை தவிர்த்து பிற நாடுகளில் அகமணக் குழுக்கள் பரவலாக இருந்தாலும், அங்கெல்லாம் சாதிகள் தோன்றவில்லையே என்ற கேள்வி எழலாம். அந்தச் சமூகங்களுக்கும் இந்தியாவிலுள்ள சாதியச் சமூகத்திற்கும் உள்ள வேறுபாடு என்னவெனில், பிற சமூகங்கள் தனித்தனி பண்பாட்டைக் கொண்ட வெவ்வேறு இனக்குழுக்களாக அமைந்தவை. இந்தியாவில் உள்ள நிலை என்னவெனில், ஒரே பண்பாடும், வாழ்முறையும் கொண்ட ஒரே மக்கள் சமூகத்தை அகமண முறையின் மூலம் செயற்கையாகத் தனித்தனி அலகுகளாகத் துண்டாடிய நடைமுறை என அம்பேத்கர் விளக்குகிறார்.

அடிப்படையில் இந்தியச் சமூகம் புராதன காலப் பழக்கங்களைப் பேணுகின்ற ஒரு சமூகமாகும். புறமண முறை (தனது சாதிக்கு வெளியே மணம் செய்வது) என்பதுதான் புராதன காலச் சமூகப் பழக்கம். இப்போதும் கூட இந்தியாவில் புறமண முறைக்குச் சாதகமான சட்டதிட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ரத்த உறவுடையோர் திருமணம் செய்யக் கூடாது என்பது மட்டுமின்றி, ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்களிடையே திருமணம் செய்வது கூட, தெய்வ நிந்தனைக்குரியது என்பதுதான் இந்து சமூகத்தின் நடைமுறை. எனவே, அகமண முறை என்பது இடையிலே வந்து சேர்ந்த இந்தியாவுக்கு அந்நியமான நடைமுறை என நிறுவுகிறார் அம்பேத்கர்.

புறமண முறைக்குப் பதிலாக அகமண முறையைப் புகுத்தியதன் விளைவாகவே சாதி தோன்றியது. அவ்வாறு அகமண முறைக்கு ஒரு சமூகத்தை மாறச் செய்து, அகமண முறையிலேயே அச்சமூகத்தை நிலைத்திருக்கச் செய்ய வேண்டுமெனில் ஆண், பெண் சம எண்ணிக்கை பேணப்படுவது அவசியமான ஒன்றாக இருக்கிறது. இவ்வாறான சம எண்ணிக்கையைப் பேணும் நோக்கத்திலேயே கணவன் இறந்தவுடன் மனைவியை எரிக்கும் சதிப் பழக்கம் தோன்றியது என்கிறார் அம்பேத்கர். தேவைக்கு அதிகமாக இருக்கும் பெண்களை எரிப்பது போல், வலுவுடையவனாகவும், சட்டத்தை வகுப்பவனாகவும் உள்ள ஆணை எரிக்க முடியாது என்பதால், அவனுக்குத் துணையாகத் திருமண வயதை எட்டாத சிறுமிகளை மணம் முடிக்கும் பழக்கமும் தோன்றியது.

சாதியையும் அகமண முறையையும் பேணும் நோக்கத்தில், ஆண் – பெண் எண் ணிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை சரி செய்ய நான்கு வழிகளைக் கையாண்டனர். அவை : 1. விதவையை கணவன் உடலோடு எரித்து விடுவது 2. கணவனை இழந்தவரை அலங்கோலம் செய்து, கட்டுப்பாடுகளை விதித்து விதவைக் கோலம் பூண வைப்பது 3. மனைவியை இழந்தவன் மீது பிரம்மச்சரியத்தை விதிப்பது 4. பருவமெய்தாத சிறுமியை அவனுக்கு மணம் முடிப்பது.

தந்திரமான புகழுரைகள் மூலம் சாதி இந்து அறிஞர்கள் இவற்றைக் கடைப்பிடிப்பது புனிதமானது, வணக்கத்துக்குரியது என்று கூறினர். இதன் விளைவாக தோற்றுவிக்கப்பட்ட சாதி அப்படியே நிலை நிறுத்தப்பட்டு விட்டது.

சாதியின் தோற்றுவாய் அல்லது தொடக்கப்புள்ளியாகப் பார்ப்பனர்களே விளங்கினர் என்பது, அம்பேத்கர் அடுத்ததாக நிறுவுகிற செய்தி. சாதி என்பது தன்னைச் சுற்றி அரண் அமைத்துக் கொண்ட வர்க்கங்களின் தொகுப்பு. அவ்வாறு தன்னைச் சுற்றி அரணிட்டுக் கொண்ட முதல் வர்க்கமாகப் பார்ப்பனச் சாதி அல்லது பூசாரி வர்க்கமே இருந்தது. அகமண முறையைப் பேணும் மேற்கூறிய பழக்கங்கள் அனைத்தும் வழங்கப்படுகிற ஒரே சாதியாகப் பார்ப்பன சாதி மட்டுமே விளங்குகிறது. பார்ப்பனர் அல்லாத சாதிகளிடம் இப்பழக்கங்கள் காணப்பட்டாலும் அவை வெளியிலிருந்து பெறப்பட்டதாகவும், கறாராகவும் முழுமையாகவும் கடைப்பிடிக்கப்படாத நிலையிலும்தான் இருக்கின்றன. பார்ப்பன சாதியிலிருந்து ஒரு சாதி எவ்வளவு தூரத்துக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறதோ, அதைப் பொருத்த அளவுக்கு இப்பழக்கங்களிலிருந்து விலகி இருக்கின்றன. எனவே, சாதியின் தோற்றுவாய் பார்ப்பன வர்க்கமே.

இந்து சமூகத்தில் அறிவாளி வர்க்கமாகவும், செல்வாக்கு மிகுந்தவர்களாகவும் இருந்த பார்ப்பன வர்க்கம், தன்னை தனியே மூடுண்டதாக ஆக்கிக் கொண்டு சாதியாக மாறியது. அவர்களைப் போலச் செய்வதின் மூலம் பார்ப்பனர் அல்லாத பிறரிடமும் சாதி பரவியது. அதோடு இவர்களால் சமூக விலக்கம் செய்யப்பட்ட, இவர்களின் கொடுங்கோன்மையோடு ஒத்துப் போகாதவர்களும் – தனி சாதியாக உருவெடுக்க வேண்டிய அவலம் நிகழ்த்தப்பட்டது.

இதுவே சாதி இந்தியாவில் தோன்றிப் பரவிய கதை. இதைப் புரிந்து கொள்ளாமல், அய்ரோப்பாவிலிருந்து சாதியை ஆராய்பவர்கள் தேவையற்ற அளவுக்கு நிறத்தின் பங்கை சாதியில் அழுத்தம் கொடுத்துப் பார்க்கிறார்கள். இதற்கு அவர்களைப் பெரிதும் பாதித்து விட்ட தங்கள் நாட்டில் உள்ள நிறவேற்றுமை நடைமுறை தீர்மானகரமான பங்கை ஆற்றுகிறது என அவர்களை எள்ளி நகையாடுகிறார் அம்பேத்கர். இவையே முதல் கட்டுரையில் அம்பேத்கர் அலசும் செய்திகள்.

இரண்டாவது கட்டுரையான ‘சாதி ஒழிப்பு' 1936இல் எழுதப்பட்டது. லாகூரில் உள்ள ‘ஜாட்–பட்–தோடக்' மண்டல் என்கிற சாதிக்கு எதிரான அமைப்பு நடத்தவிருந்த வருடாந்திர மாநாட்டின் தலைமையுரையாக அம்பேத்கர் தயாரித்தது. அவ்வுரையின் உள்ளடக்கம் மாநாட்டு அமைப்பõளர்களை பீதி கொள்ள வைத்ததால், மாநாடே ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் அம்பேத்கர் அவ்வுரையை நூலாக வெளியிட்டார். அது பரவலான வரவேற்பைப் பெற்றதோடு, பெரும்பாலான இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. ‘தலித் முரசு' அக்டோபர் 2007 இதழ் இதற்கெனவே அர்ப்பணிக்கப்பட்டு, முழுமையாக வெளியிடப்பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

இக்கட்டுரையில், சமூக சீர்திருத்தங்களெல்லாம் தேவையற்றவை; அரசியல் சீர்திருத்தம் செய்தாலே போதுமானது என வாதிடுகிற அரசியல் சீர்திருத்தவாதிகள்; பொருளாதார சீர்திருத்தமே போதுமானது, சாதி ஒழிப்பு என்பது அவசியமற்றது என வாதிடுகிற பொருளாதார சீர்திருத்தவாதிகள்; சமூக சீர்திருத்தவாதிகளிலும் சாதியை ஒழிக்காமலே சில்லறை மாற்றங்களின் மூலம் சமூகத்தைச் சீர்திருத்திவிட முடியும் என வாதிடுகிற சமூகச் சீர்திருத்தவாதிகள்; சாதிக்குப் பதிலாக வர்ண வியஸ்தாவின் மூலம் குணத்துக்கேற்ப வர்ணமுறையை உயிர்ப்பிக்க முயல்கின்ற ஆரிய சமாஜிகள்; சாதியைப் பாதுகாக்க விழைபவர்கள்; நடுநிலை வகிக்கிறோம் என பசப்புபவர்கள் என அன்றைய சமூகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த அனைத்துப் பிரிவினரையும் விமர்சித்து, சாதி ஒழிப்பு என்பதன் அவசியம் என்ன? அதைச் சாதிப்பது எப்படி என்பது போன்ற கருத்துக்களை முன்வைப்பதாக அம்பேத்கரது இக்கட்டுரை இருக்கிறது.

அன்றைக்கு தீண்டத்தகாத மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் பட்டியலிட்டு, சான்றுகள் காட்டி, தீண்டத்தகாதாரைப் போன்ற உங்கள் சொந்த நாட்டு மக்கள் பொதுப் பள்ளியில் சேர முடியாமல், பொதுக் கிணறுகளில் நீர் எடுக்க முடியாமல், எல்லா விதக்கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கும் போது, நீங்கள் அரசியல் சீர்திருத்தம் செய்ய தகுதியானவர்களா என அரசியல் சீர்திருத்தம் பேசியவர்களிடம் கேள்வி எழுப்பினார் அம்பேத்கர்.

இந்து சமூகத்தில் அன்றைக்கு இருந்த சமூக சீர்திருத்தவாதிகளை அடுத்ததாகப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறார். சமூக சீர்திருத்தம் என்பது சமூகத்தை மாற்றிக் கட்டமைப்பது. ஆனால் அன்றைக்கு இருந்த சமூக சீர்திருத்தவாதிகள், படித்த மேட்டுக்குடி இந்துக்களாக இருந்தனர். அவர்கள் சாதி ஒழிப்பில் அக்கறை காட்டவில்லை. அதற்குப் பதிலாக இந்துக் குடும்பத்தை சீர்திருத்துவதையே சமூக சீர்திருத்தமாக வரித்துக் கொண்டனர். தங்கள் குடும்பங்களில் தாங்கள் உணர்ந்திருந்த குழந்தைத் திருமணம், சாதி, விதவை முறை போன்றவற்றை நீக்கவே உத்வேகம் கெண்டனர். எனவே, அரசியல் சீர்திருத்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மிக எளிதாக இவர்களை வென்று விட்டனர்.

பொருளாதாரச் சீர்திருத்தமே இன்றியமையாதது என்கிற சோஷலிஸ்டுகள், அய்ரோப்பாவிலுள்ள தங்கள் தோழர்களைப் பின்பற்றி வரலாற்றின் பொருளாதார விளக்கங்களை, இந்தியாவிலுள்ள உண்மைகளோடு பொருத்த முனைகிறார்கள் என அம்பேத்கர் விமர்சிக்கிறார். ஒரு தனி மனிதனின் சமூக நிலை அதிகாரத்தின் ஊற்றுக் கண்ணாக இருக்கிறது. கோடீஸ்வரர்கள், பக்கிரிகளுக்கும் சாதுக்களுக்கும் ஏன் கீழ்ப்படிய வேண்டும்? என்று கேள்வி எழுப்பி இதை விளக்குகிறார். இந்தியாவில் நீதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை விட, சாமியாரிடம் அதிக அதிகாரம் இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறார்.

இன்றைய அய்ரோப்பாவில் அதிகாரத்தின் ஊற்றுக்கண்ணாக சொத்து இருப்பதை வைத்து, நேற்றைய அய்ரோப்பாவிலும் இன்றைய இந்தியாவிலும் சொத்துதான் அதிகாரத்தின் ஊற்றுக் கண்ணாக இருக்க முடியும் என நம்புவது சோசலிஸ்டுகளின் தவறு. மதம், சமூக அந்தஸ்து, சொத்து ஆகியவை அதிகாரம் மற்றும் ஆதிக்கத்தின் ஊற்றுக் கண்களாக இருப்பவை. ஒவ்வொரு சமயத்திலும் இவற்றில் ஒவ்வொன்று மேலோங்கி அதிகாரமளிப்பதாக இருக்கும். எனவே, மதச்சீர்திருத்தம் மற்றும் சமூக சீர்திருத்தத்தின் (சாதி ஒழிப்பின்) அவசியத்தை அவர்கள் உணர வேண்டும் என்கிறார்.

மேலும், கீழ்க்கண்ட கேள்விகளை சோசலிஸ்டுகளுக்கு அவர் முன்வைக்கிறார். அவை, இந்தியப் பாட்டாளியும், புரட்சியும் பற்றியவை.

1. இந்தியப் பாட்டாளிகள் ஒன்றுபட்டு புரட்சி செய்வார்களா?

2. அதற்கு அவர்களைத் தூண்டுவதாக எது இருக்கும்?

3. இந்தியப் பாட்டாளியிடம் ஏழை, பணக்காரன் என்பதைத் தவிர சாதி, மதம், அந்தஸ்து, மேல், கீழ் என வேறு வேறுபாடுகள் எதுவும் கிடையாதா?

4. அவ்வாறு வேறுபாடுகள் இருக்குமெனில், அவர்களை ஒன்றுபடுத்துவதாக எது இருக்கும்?

இதுபோன்ற கேள்விகளை எழுப்பி, சாதியை எதிர்கொள்ளாமல் புரட்சியை நடத்த முடியாது என உறுதியாகக் கூறுகிறார் அம்பேத்கர்.

இன்றைக்கு இருக்கிற நவீன மநுவாதிகள் போல் அன்றைக்கு இருந்த மநுவாதிகள் சாதியை நியாயப்படுத்தினர். சாதி என்பது உழைப்புப் பிரிவினைதான். அதில் தீங்காக எதுவும் இல்லை. இனத் தூய்மையையும் ரத்தத் தூய்மையையும் காப்பதுதான் சாதியின் நோக்கம் என்றெல்லாம் இவர்கள் பசப்பினர். சாதி என்பது உழைப்புப் பிரிவினையன்று; உழைப்பாளர்களின் பிரிவினை. உழைப்பாளர்களைப் பிரிவினை செய்து அவர்களைப் படிநிலை அமைப்பில் நிரந்தரமாகப் பூட்டிவிடும் ஏற்பாடு. அவ்வாறே, சாதியால் ரத்தத் தூய்மையையும் இனத் தூய்மையையும் காக்க முடியாது. உண்மையில் இனங்களும் ரத்தமும் கலந்த பிறகுதான் சாதி தோன்றியது. அதோடு வளர்ச்சி குன்றிய, உடல் சத்து வேண்டிய குள்ளர்களான மூன்றாம் தர மனிதர்களைத்தான் இந்தியாவிலுள்ள சாதிகள் தந்திருக்கின்றன. பத்துக்கு ஒன்பது பேர்கள் ராணுவத்துக்கு தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்ட நாடு இந்தியா. எனவே, இன மேம்பாட்டியலின் அடிப்படையில்தான் சாதி செயல்படுகிறது என்பது அபத்தம்.

நாலாயிரம் சாதிகளுக்குப் பதிலாக நான்கு வர்ணங்களாக சமூகத்தை மறுகட்டமைப்பு செய்து, சமூக சீர்த்திருத்தம் செய்து விடலாம் என்பது ஆரிய சமாஜிகளின் கருத்து. வர்ணாசிரம தர்மம் பிறப்பின் அடிப்படையில் இருந்ததை எல்லாரும் எதிர்த்ததால், தாங்கள் கட்டியெழுப்பவிருக்கும் நான்கு வர்ண அமைப்பில் வர்ணத்தை குணத்தின் அடிப்படையில் பிரிக்க வேண்டும் என்றனர். நீங்கள் சொல்லும் புதிய நால்வர்ண அமைப்பு பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற பழைய பெயர்களிலேயே ஏன் அமைய வேண்டும்? புதிய நம்பிக்கைகளை வளர்த்தெடுக்க வேண்டுமெனில் புதுப்பெயர்கள் இடப்பட வேண்டாமா? சாதியில் உயர்ந்த நிலையை அனுபவிக்கும் ஒருவன், குணத்தின் அடிப்படையில் அவனுக்கு அளிக்கப்படுகிற கீழ் நிலைக்குப் போக எப்படி ஒப்புக் கொள்ளுவான்? அவனைக் கட்டாயப்படுத்த முடியுமா?

வர்ண முறையை நடைமுறைப்படுத்த வேண்டுமெனில், சாதியை உடைக்க வேண்டும் அல்லவா? நவீன அறிவியல் குணங்களின் அடிப்படையில் சில வகுப்புகளாகப் பிரித்து, தொகுப்புகளாக அவர்களை குவிக்க முடியும் என்பதை ஏற்கவில்லை அல்லவா? சதுர்வர்ணத்தை பரிந்துரைப்பவர்கள் மக்களை வெற்றிகரமாகப் பகுத்து, அவற்றை மீறுவோர் மீது மநுதர்மம் விதிக்கும் தண்டனைகளைச் செயல்படுத்தத் தூண்டுவோம் என உறுதி கூறுவார்களா? சதுர்வர்ண அமைப்பில் பெண்களின் நிலை என்ன? இவை போன்ற கேள்விகளை எழுப்பி, பிறவி முட்டாளைத் தவிர வேறெவனும் நால்வர்ணத்தை வெற்றிகரமாக உயிர்ப்பிக்க முடியும் என நம்ப மாட்டான்.

Ambedkar Radio அதை நடைமுறைப்படுத்த முடியும் என்றே வைத்துக் கொண்டாலும், இந்த ஏற்பாட்டில் சூத்திரன் தனது அடிப்படைத் தேவை களுக்காக ஏன் பிறரை நம்பியிருக்க விடப்படுகிறான்? அவனுக்கு எதிராக பிற வர்ணத்தார் ஒன்றுபட்டோ, தனித்தனியாகவோ திரண்டாலோ, அவனைக் காக்க வேண்டிய தமது கடமைகளைக் கைவிட்டாலோ என்ன நடக்கும்? அதனால் சதுர்வர்ணம் கொடுமை யானது. புதிதாய் இருந்தாலும் சரி, பழையதாக இருந்தாலும் சரி என ஆரிய சமாஜிகளின் வாதத்தை நிராகரிக்கிறார் அம்பேத்கர்.

சாதிப் பிரச்சனை குறித்து நடுநிலை அணுகுமுறையைக் கைக் கொள்பவர்களில், சாதியில் வினோதமான வெறுக்கத்தக்க எதுவுமில்லை என்பவர்களின் வாதத்தை எடுத்துக் கொள்கிறார் அம்பேத்கர். இவர்கள், இந்து மதத்தில் மட்டுமா சாதி இருக்கிறது; முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறித்துவர்கள் என்பவர்களிடமும் கூடத்தான் சாதி இருக்கிறது என்று சாக்கு சொல்வார்கள். இந்துக்களிடம் இருக்கிற சாதியும், இந்துவல்லாத பிற சமூகங்களில் இருக்கிற சாதியும் அடிப்படையிலேயே வேறுபட்டிருப்பதைச் சுட்டிக் காட்டுவதோடு, அவ்வேறுபாடுகளையும் பட்டியலிடுகிறார் :

1. இந்துக்களை ஒன்றிணைக்கும் பிணைப்புகள் என்று எதுவும் இல்லை. இந்து அல்லாதோரிடம் அவ்வாறான பிணைப்புகள் நிறைய உள்ளன.

2. இந்துக்களிடம் சாதிக்கு இருக்கும் சமூக முக்கியத்துவம் இந்து அல்லாதவர்களிடம் இல்லை. சாதி விதிகளை மீறியதற்காக ஒரு முஸ்லிமையோ, சீக்கியரையோ சாதியில் இருந்து விலக்கி வைக்க மாட்டார்கள்.

3. பிற மதத்தினரிடையே சாதியைக் கடைப்பிடிப்பது என்பது ஒரு புனிதமான மதக்கடமையாக இல்லை. இந்துக்களிடமோ அது கட்டாயக் கடமை. பிற மதத்தினரிடையே சாதி என்பது வெறுமனே ஒரு பழக்கம். பிற மதத்தவர் சாதியை ஆரம்பித்து வைக்கவில்லை. சாதி அவர்களிடம் மிஞ்சி இருக்கிறது அவ்வளவுதான்.

எனவே, சாதிப்பிரச்சனையில் நடுநிலைமை வகிப்பது என்பது, உண்மையில் சாதிக்கு ஆதரவான நிலையை எடுப்பதுதான் என அவர் நிறுவுகிறார்.

சாதியை ஒழிக்கும் வழியாக ஜாட் பட் தோடக் மண்டல் அமைப்பினர் தேர்ந்து கொண்ட சாதி மறுப்புத் திருமணத்தை அம்பேத்கர் பாராட்டினாலும், அம்முறையில் பெரிய வெற்றி கிடைத்து விடாது என்கிறார். சாதி மறுப்புத் திருமணங்களும் சமபந்தி விருந்துகளும் ஏன் இந்துக்களிடம் பெரிய அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை என்றால், அவற்றுக்குத் தடையாக இந்து மதத்தின் சாஸ்திரங்கள் இருக்கின்றன. சாஸ்திரங்களுக்கு விரோதமான ஒன்றைச் செய்வது மதவிரோதம். எனவேதான் இந்துக்களிடம் அது வரவேற்பைப் பெறவில்லை. சாதி மறுப்புத் திருமணங்கள் பரவலாகாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடப்பதால் பெரிய பயன் எதுவும் விளையப் போவதில்லை.

எனவே, உண்மையிலேயே சாதி ஒழிக்கப்பட்டு சமூக மாற்றம் வர வேண்டுமானால், சாதிக்கு ஆதாரமாக இருக்கிற சாஸ்திரங்களோடு, இந்து மதத்தையும் ஒழிக்க வேண்டும். இந்து மதம் என வழங்கப்படுவது உண்மையில் ஒரு மதமே அல்ல. கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதிக்கின்ற ஒரு சட்டங்களின் தொகுப்புதான். எனவே அதை ஒழிக்க வேண்டும் என்பதில் மதவிரோதம் என்று எதுவுமில்லை. எனவே, நான் மதம் மாற முடிவு செய்து விட்டேன் என்று தனது உரையை முடிக்கிறார்.

இத்தொகுப்பிலுள்ள முதல் கட்டுரையை அம்பேத்கர் 1916 இல் எழுதியிருக்கிறார். அப்போது அவருக்கு வயது 25. அந்தக் கட்டுரையை வாசித்தீர்கள் என்றால், அந்த இளம் வயதிலேயே அவரது மேதமை மட்டுமல்ல; அவ்வுரை முழுக்க ஒரு துடிப்பும், நம்பிக்கையும் தெரியும். நான் அவநம்பிக்கைவாதி அல்ல; தெரிந்து கொள்ளாத பகுதியில் இருப்பதை முடியாது என விலக்கிவிட மாட்டேன்; என்னால் அது முடியும் என்பது தெரியும் என்று தனது உரையின் தொடக்கத்தில் சொல்வார்.

செனார்ட், நெஸ்பீல்ட், ரிஸ்லி என்கிற மேலைய அறிஞர்களின் ஆய்வையும், டாக்டர் கெட்கரின் ஆய்வையும் வெகு சாதாரணமாக எதிர்கொண்டு, அவற்றைக் கடந்து தனது ஆய்வை எடுத்துச் செல்கிறார். அந்த சிந்தனையாளர்கள் இருபது ஆண்டுகள் கழித்து ‘சாதி ஒழிப்பு' என்கிற நூலின் தொடக்கத்தில் தன்னைக் குறித்து அன்றைக்கு நாட்டிலிருந்த சாதி இந்துக்கள் என்ன மாதிரியான மதிப்பீட்டை வைத்திருந்தார்கள் என்று மனம் விட்டுக் கூறுகிறார் கேளுங்கள் : ‘‘இந்துக்கள் என்னை வெறுக்கின்றனர். தங்கள் தோட்டத்தில் உலவும் ஒரு பாம்பாகவே என்னைக் கருதுகின்றனர்.''

அதே போன்று தனது உரையின் முடிவில் இப்படிக் குறிப்பிடுகிறார்:

‘‘எனது ஒரே பரிசு தேசியப் பத்திரிகைகள், தேசியத் தலைவர்கள் என்பவர்களின் குற்றச் சாட்டுகள் மற்றும் வசைமாரி ஆகியவை மட்டும்தான்."


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
பொரம் போக்கு
2009-06-25 02:05:00
puramboakku@gmail.com

அம்பேத்கர் எவ்வளவு சிறந்த அறிங்கர் என்பது அவரது ஆய்வு மற்றும் எழுத்துக்கள் மூலம் புலனாகிறது.

அம்பேத்காரின் ஆய்வுகள் பற்றிய கட்டுரைகளை வெளியிடும்போது, அம்பேத்காரின் எழுத்துக்களை அடைப்புக் குறிக்குள் " " வெளியிடவும். அம்பேத்காரின் அச்சு அசலான வார்த்தைகளா, அல்லது கட்டுரையாளரின் கருத்தா என்பது தெளிவில்லாமல் உள்ளது.


கட்டுரையாளரின் கருத்துக்களை தனிப் பத்தியில் வெளியிடுவது தெளிவை உண்டாக்கும்.

அம்பேத்கர் ஆய்வுகளை உணர்ச்சி அடிப்படையில் மேற்க்கொள்ளாமல், அறிவின் அடிப்படையில் ஆய்வு செய்து இருக்கிறார்.

//இந்து சமூகத்தில் அறிவாளி வர்க்கமாகவும், செல்வாக்கு மிகுந்தவர்களாகவும் இருந்த பார்ப்பன வர்க்கம், தன்னை தனியே மூடுண்டதாக ஆக்கிக் கொண்டு சாதியாக மாறியது. அவர்களைப் போலச் செய்வதின் மூலம் பார்ப்பனர் அல்லாத பிறரிடமும் சாதி பரவியது. அதோடு இவர்களால் சமூக விலக்கம் செய்யப்பட்ட, இவர்களின் கொடுங்கோன்மையோடு ஒத்துப் போகாதவர்களும் – தனி சாதியாக உருவெடுக்க வேண்டிய அவலம் நிகழ்த்தப்பட்டது.

இதுவே சாதி இந்தியாவில் தோன்றிப் பரவிய கதை. இதைப் புரிந்து கொள்ளாமல், அய்ரோப்பாவிலிருந்து சாதியை ஆராய்பவர்கள் தேவையற்ற அளவுக்கு நிறத்தின் பங்கை சாதியில் அழுத்தம் கொடுத்துப் பார்க்கிறார்கள். இதற்கு அவர்களைப் பெரிதும் பாதித்து விட்ட தங்கள் நாட்டில் உள்ள நிறவேற்றுமை நடைமுறை தீர்மானகரமான பங்கை ஆற்றுகிறது //.

அம்பேத்கர் சாதி எப்படி படிப் படியாக உண்டாகியது, எப்படி இருக்கமாககியது என்பதை எல்லாம் ஆராய்ச்சி செய்து இருக்கிறார்.

நம்மைப் போல எல்லாப் பழியையும் இந்து மதத்தின் மேலே போட்டு விட்டு, தங்களுடைய தொழில் வசதிக்காக, தங்களுக்கு வேலை செய்ய கூலி ஆட்கள் தேவை என்பதற்காக சாதிக் கட்டுமானத்தை இறுக்கிக் கட்டி, ஒரு பிரிவினரை நசுக்கி வைத்த பண்ணையார் க்ரூப்புகளை நைசாக தப்புவிக்க முயலவில்லை.

punithan
2009-06-25 10:33:00
punithan.puni@yahoo.co.uk

pagutharivdun kudiya ilaikya parivarthani yethvum indiakul innum natakavellio?palangala punikathaivali katundukedika karanum kalviamiba? indiya mulumikumana melanmy mozhikurmi sathi yenum mananoiyi olikum.

Dr. V. Pandian
2009-06-26 10:30:00
porkkaiponds@yahoo.co.in

அம்பேத்கர் காலத்திலேயே இந்த மார்க்ஸியர்களை இவ்வளவு தூரம் வாங்கு, வாங்கென்று வாங்கியும், அவர்கள் இன்னும் திருந்தவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. திட்டமிட்டு இவர்கள் திருந்தாமல் இருக்கிறார்கள் போல் உள்ளது. திட்டமிட்டுச் செயல்படுத்தும் மார்க்ஸியமல்லவா இவர்களின் திருத்தப்பட்ட மார்க்ஸியம். இவர்கள் ஒரிஜினலான மார்க்ஸியம் பேசினால் கூட, அது நமது மண்ணுக்கு ஏற்றதா என்று அன்றே பார்க்கச் சொன்ன அம்பேத்கர் ஒரு மேதையே.

கல்வியும், பொருளாதார அந்தஸ்தும் தாழ்த்தப்பட்ட மக்கள் வசம் வந்தால், ஜாதி உண்மையிலேயே மறையும். முன்பு போன்ற ஒரு இறுக்கம் இப்போது இல்லை என்பது உண்மை. இது உண்மையான மனமாற்றம் மக்கள் மத்தியில் வந்துள்ளது என்பதன் வௌிப்பாடு. அதனால் தான், நல்ல கல்வியும், பொருளாதார அந்தஸ்தும் வருமானால், அந்த விரைவிலேயே ஜாதியும் அழிய வாய்ப்புள்ளது.

இந்து மதத்தைப் புறக்கனித்துவிட்டு, தமிழரின் ஆதிகால ஆன்மீகத்திற்கு திரும்புவது சிறந்தது. தமிழரின் ஐந்து திணைகளின் தெய்வங்களை உள்வாங்கித்தான் இந்துமதக் கடவுள்கள், பெயர் மாற்றத்துடன், கீழ்த்தரமாண குணாதிசயங்களோடு உருவாக்கப்பட்டன.

கேவலமாக திரிக்கப்ட்ட நமது தெய்வங்கள், கலைநயத்தோடு கூடிய கோயில்களில், குடியேறியுள்ளன. அந்தக் கோயில்கள் தமிழரின் அடையாளமாகிவிட்டன. இந்த கோயில்களிலிருந்து நமது ஒரிஜினல் தெய்வங்ளைப் பிறித்தெடுப்பது தான் இயலாத காரியம் என்று எண்ணுகிறேன்.

தமிழகத்தைப் பொருத்தவரை இந்து மதம் 'கல்லில் எழுதப்பட்டுள்ளது'.

அழிப்பது கடினம் தான்.

யாராவது நல்லதொரு வழி கூறமுடியுமா?

பொரம் போக்கு
2009-06-27 12:08:00
puramboakku@gmail.com

// தமிழரின் ஐந்து திணைகளின் தெய்வங்களை உள்வாங்கித்தான் இந்துமதக் கடவுள்கள், பெயர் மாற்றத்துடன், உருவாக்கப்பட்டன//.

இதில் உண்மை இருக்கிறது. இந்து மதத்தில் இரண்டு விசயங்கள் உள்ளன.
ஒன்று தத்துவம். இரண்டாவது வாழ்க்கையில் தத்துவத்தை உணர்ந்து விடுதலை அடைவதற்கான வழிகள்.

இந்து மதத்தில் பல வழிகள் கூறப் பட்டுள்ளன.

1) பலனில் கவனம் செலுத்தாமல், கடமையை சிறப்பாக செய்வது 2) செயலின் பலனைத் தியாகம் செய்வது 3) துறவு 4) தியானம் 5) பக்தி... இன்னும் பல வழிகள் கூறப் பட்டுள்ளன.

வட இந்தியாவில் வாழ்ந்தவர்கள் வேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த காலத்தில், தென்னிந்தியா, குறிப்பாக தமிழர்கள், பக்திக்கு, கடவுள் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தனர்.

கடவுள் வழிபாட்டு வழியானது எளிதாகவும், ஆன்மீக வாழ்க்கையில் விரைவான முன்னேற்றத்தைக் குடுப்பதாகவும் இருந்ததால், எல்லா இந்துக்களும் பக்திக்கே முக்கியத்துவம் குடுக்க ஆரம்பித்தனர்.

குறிஞ்சிக்கு முருகன், முல்லைக்கு கண்ணன், மருதத்துக்கு இந்திரன், நெய்தலுக்கு வருணன், பாலைக்கு காளி - இந்த தெய்வங்கள் இந்து மதத்தின் ஆதி தெய்வங்களுள் முக்கியமானவை.

எனவே இப்போது உலகெங்கும் அனுசரிக்கப் பட்டு வரும் இந்து வழிபாட்டு முறை உண்மையில் தமிழர் வழிபாட்டு முறையே என்பது உண்மைதான்!

ஒரு நண்பர் தலித் சங்கராச்சாரியார் ஆக முடியுமா என்று கேட்டபோது கீழ்க்கணடவாறு பின்னோட்டம் அளித்து இருந்தேன்.

இந்தியாவின் ஆன்மீக‌ வ‌ர‌லாற்றைப் புர‌ட்டிப் பார்த்தால், அத‌ன் முக்கிய‌ நாய‌க‌ர்க‌ள் கிருஷ்ண‌ர், புத்த‌ர், ச‌ங்க‌ர‌ர், அப்ப‌ர், விவேகான‌ந்த‌ர் போன்ற‌வ‌ர்களில், ச‌ங்க‌ர‌ர் ம‌ட்டுமே பார்ப்ப‌ன‌ ச‌முதாய‌த்தைச் சேர்ந்த‌வ‌ர் என்ப‌து தெரிய‌வ‌ரும்.

நான் நண்பர்களிடம் ஒரு முக்கியமான கேள்வியை கேட்க விரும்புகிறேன்.

சங்கராச்சாரியார் ஆவது என்றால் என்ன? பில்லியன் கணக்கில் சொத்துக்கள், கல்லூரிகள், சக்தி வாய்ந்த அரசியல் செல்வாக்கு இவைகளைப் பெற்று, அதனால் பலரும் வந்து பார்க்கும்படியாகவும், கும்பிட்டு செல்லும்படியாகவும் உள்ள நிலை தான் சங்கராச்சாரியார் ஆவது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

அப்படி என்றால் இப்படிப்பட்ட சங்கராச்சாரியார் பதவிக்கும், பிற மாண்புமிகு, மான மிகு பதவிகளுக்கும் என்ன‌ பெரிய‌ வேறுபாடு?

இப்ப‌டிப்ப‌ட்ட‌ “சங்கராச்சாரியார்” ப‌த‌வி வேண்டுமென்றால், அர‌சாங்க‌மே ஆங்காங்கே ம‌ட‌ங்க‌ளை உருவாக்கி, அருகிலே கோவில், அத‌ற்க்கு நில‌ங்களையும், க‌ல்லூரிக‌ளையும் அளித்து (ஐ.ஐ.டி. களை உருவாக்குவ‌து போல‌) த‌லித் ச‌மூக‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ளை “சங்கராச்சாரியார்” ஆக‌ நிய‌மித்து விட‌லாமே!

காஞ்சியில் உள்ள‌ ம‌ட‌மே த‌மில் நாட்டில் உள்ள‌ பார்ப்ப‌ன‌ர்களால் உருவாக்க‌ப் ப‌ட்ட‌ நிறுவ‌ன‌ம்தானே ? ஆதி ச‌ங்க‌ர‌ரின் வாழ்க்கை வ‌ர‌லாறு தெளிவாக‌ உள்ளதே? அதில் அவ‌ர் நிருவிய 4 ம‌ட‌ங்க‌ள் பூரி, சிருங்கேரி, துவார‌கா, ப‌த்ரினாத் என‌பாக‌த்தானே உள்ளது?

அப்ப‌டி அவ‌ரால் உருவாக்க‌ப் ப‌ட்ட‌ இந்த‌ 4 ம‌ட‌ங்களை விட‌, அவ‌ர் பேரை வைத்து உருவாக்க‌ப் ப‌ட்ட‌ காஞ்சி ம‌ட‌ம் தானே பேரும் புக‌ழும் பெற்று விள‌ங்கிய‌து? அத‌ற்க்கு கார‌ண‌ம் ப‌ண‌மும், அரசிய‌ல் செல்வாக்கும் தானே?

அது ம‌ட்டும் இல்லாம‌ல் ஆதி ச‌ங்க‌ர‌ர் தானே உருவாக்கிய‌ நான்கு ம‌ட‌ங்க‌ளிலும் இப்பொது என்ன‌ பெரிய‌தாக சாதித்து விட்டார்க‌ள்? அப்படி அவ‌ர்க‌ள் ச‌ங்க‌ர‌ரின் க‌ருத்தை ம‌க்க‌ளிட‌ம் ச‌ரியாக‌ ப‌ர‌ப்பியிருந்தால் ம‌க்க‌ள் எப்ப‌டி ஜெயெந்திர‌ரிட‌ம் ஏமாறுவார்க‌ள்?

ச‌ங்க‌ரரின் முக்கிய‌ சிற‌ப்பு, அவ‌ர‌து த‌த்துவ‌ க‌ண்டுபிடிப்புதான்.

போகிற‌ போக்கில் சில மட‌ங்க‌ளையும் அமைத்து விட்டுப் போனார்.

ஆதி ச‌ங்க‌ர‌ர் த‌ன்னுடைய‌ ஆன்மீக‌ ச‌க்தியை நாலாக‌ப் பிரித்து, நாலு ம‌ட‌ங்க‌லிலும் கொஞ்ச‌ம் ஒட்டி வைத்து விட்டுப் போனாரா? அந்த‌ ச‌க்தி க‌திர் வீச்சாக‌ வ‌ருப‌வ‌ர் மீது பிர‌காசிக்கிறதா?

என‌வே ம‌ட‌ம், ம‌ட‌ம் என்று ம‌ட‌த் த‌னமாக அலைவ‌து எத‌ற்க்கு?

நான் சொல்லுவ‌து என்னவென்றால் அத்வைத‌ ம‌ட‌மோ, க‌ட‌வுள் ம‌ட‌மோ‍ - அதை உருவாக்கிய‌வ‌ர்க‌ள் ஆராய்ச்சிக‌ள் தொட‌ர்ந்து ந‌டை பெற‌ அமைப்புக‌ள உருவாக்குவார்க‌ள்.

ஆனால் பின்னே வ‌ருப‌வ‌ர்க‌ள் ஆராய்ச்சியை ப‌ர‌ணில் போட்டு விட்டு சொத்து குவிப்பு, சொகுசு என்று ஆக‌ வேண்டிய‌தைப் பார்ப்ப‌துதான் ந‌ட‌க்கிறது.

புத்த‌ர், ச‌ங்க‌ர‌ர், அப்ப‌ர், விவேகான‌ந்த‌ர் ஆகியோர் த‌ங்க‌ள் ஆன்மீக‌ப் ப‌ணியைத் துவ‌க்கிய‌ போது அவ‌ர்க‌ளிட‌ம் ப‌ண‌ம், அர‌சிய‌ல் செல்வாக்கு இருந்த‌தா?

அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் வாழ்க்கையில் ப‌ணத்தையோ, செல்வாக்கையோ ந‌ம்பிய‌து உண்டா? ப‌ணமோ, த‌ங்க‌மோ, செல்வாக்கோ, ப‌த‌வியோ-‍இந்த‌ உல‌கத்தில் ம‌க்க‌ள் அடைய‌ விரும்பும் எந்த‌ பொருளும்- அவ‌ர்க‌ளைக் காக்க‌ முடியாது என்ப‌து தானே ஆன்மீக‌த்தின் அடிப்ப‌டை?

தொண்ணூராயிர‌ம் கோடி ரூபாய் ம‌திப்புள்ள சொத்துக்க‌ள், திருபாய் அம்பானியை ம‌ர‌ண‌த்தில் இருந்து காக்க‌ முடிந்த‌தா?

ஆஃப்கானில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ குழுவிட‌ம் சிக்கிய‌ ஒருவ‌ரை அமேரிக்க‌, ருஷிய‌, சீன‌, இந்திய‌ நாடுக‌ள் கூட்டாக‌ அறிக்கை விட்டாலும் காக்க‌ நமுடியுமா? அப்ப‌டி மாட்டிக் கொள்ளாம‌ல் அவ‌ர் “ப‌த்திர‌மாக”‌ வீட்டில் இருந்தாலும் அவ‌ர் எத்த‌னை நாள் சாகாம‌ல் “ப‌த்திர‌மாக”‌ இருக்க‌ முடியும்?

ந‌ம் நெருங்கிய‌ உற‌வின‌ர்க‌ள் சாகும் நிலையில் இருந்தால் அழுவ‌த‌த் த‌விர‌ ந‌ம்மால் ஆவ‌து வேரென்ன‌?

எந்த‌க் க‌ட‌வுளாவது இந்த‌ உல‌க‌த்தில் எந்த‌ ம‌னித‌னையோ, மிருக‌த்தியோ எப்போதும் சாகாம‌ல் க‌ப்பாற்றீ வைத்து இருக்கிறாரா?

இந்த‌ சாவு, நோய் ஆகிய‌ பிர‌ச்சின‌க‌ள் ம‌ட்டும் அல்லாம‌ல் இன்னும் எத்த‌னையொ பிரச்சினைக‌ள் ந‌ம்மை வ‌ந்து தாக்குகிற‌தே‍?

பிரச்சினைக‌லுக்கு அடிமையாக‌ வாழ்ந்து, நோயால் வ‌ருந்தி, க‌டைசியில் சாகும் நாம், ந‌ம்முடைய‌ வாழ்க்கைய‌ நாமே தீர்மானிக்கும் வ‌லிமை உடைய‌வ‌ராக‌, அடிமை நிலையிலிருந்து முழு விடுத‌லையான‌ நிலையை, அதாவ‌து எந்த‌ துன்ப‌மும் ந‌ம்மை தாக்க‌ முடியாத‌ அள‌வுக்கு முழு விடுத‌லையான‌ நிலையை அடைய‌ முடியுமா?

என்னுடைய‌ க‌வ‌லையும் அக்க‌றையும் க‌ட‌வுளைப் ப‌ற்றி அல்ல‌‍‍- ம‌னித‌னைப் ப‌ற்றித்தான்‍

நான் உட‌ப‌ட இந்த‌ உல‌கிலுள்ளா எல்லா ம‌னித‌ர்களூம், கொடுமையான‌ இய‌ற்க்கையின் கையில் சிக்கி த‌விக்கும் அடிமை நிலையில் உள்ளதாக‌வே நான் க‌ருதுகிரேன். ஆனால் இந்த‌ உல‌கில் ந‌ம‌க்கு கிடைக்கும் சிறு வெற்றிக‌ளை வைத்து நாம் வ‌லிமை உடைய‌வ‌ர் என்று எண்ணி ம‌ய‌ங்கி விடுகிறோம், என்ப‌தாக‌வே முடிவுக்கு வ‌ருகிரென்! என்னைப் பொருத்த‌ வ‌ரையில் இது ஒரு மிக‌ முக்கிய‌மான PROBLEM .

இத‌ற்க்கு யாராவ‌து SOLUTION க‌ண்டுபிடித்தால் அவ‌ர்க‌ள் ஆதி ச‌ங்க‌ர‌ர், புத்த‌ர், விவேகான‌ந்த‌ர், “நாமார்க்கும் குடி அல்லோம்” அப்ப‌ர் வ‌ரிசையில் சேருவார்க‌ள்.

என‌வே ‘தலித்த சங்கராச்சரியாக்கனும்னு’ என்று கூறுவ‌து, ஆதி ச‌ங்க‌ர‌ர், புத்த‌ர் போன்ற‌ நிலையை அடைவ‌தா? அது சிறிது க‌டின‌ம் என்றாலும் நிச்ச‌ய‌ம் முடியும். க‌டின‌ உழைப்பு, விடா முய‌ற்சி இவைதான் தேவை. அதை அப்ப‌டி ஆக‌ விரும்பும் ஒருவ‌ர்தான் அந்த‌ உழைப்பை அளிக்க‌ வேண்டும். இந்த‌ நிலையை அடைய‌ ப‌ண‌மோ, அர‌சிய‌ல் செல்வாக்க்கோ உத‌வ‌ முடியாது.

ஆனால் என‌வே நீங்க‌ள் ‘தலித்த சங்கராச்சரியாக்கனும்னு’ என்று கூறுவ‌து, ‘ஜெயெந்திர‌ர் போல‌ சங்கராச்சாரியார்’ ஆவ‌து என்றால் அது சிறிது எளிதான‌து. அத‌ற்க்கு தேவை ப‌ண‌ம், அர‌சிய‌ல் செல்வாக்கு, ஆள் பல‌ம் இவைதான்.

ஒருவ‌ர் சங்கராச்சாரியார் ஆவ‌து என்ப‌து பார்ப்ப‌ன‌ர்க‌ளின் கையில் இல்லை.

நான் கூறிய கடின உழைப்பு, விடா முயற்சி ஆகியவை, இது போல பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவிலில் பூசனை செய்யும் உரிமையை பெறுவதற்க்கோ, பார்ப்பணர்கள் உருவாக்கிய மடத்தில் தலைமை பதவி பெறுவதற்க்கோ அல்ல.

நான் கூற வந்தது தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் புத்தர், ஆதி சங்கரர், விவேகானந்தர் போன்ற நிலையை அடைவது பற்றிதான்.

புத்தர் என்ன செய்தார்? அவருடைய கால கட்டத்தில் மிகப் பெரிய வேள்விகளை நடத்திக் கொண்டிருந்த பார்ப்பனர்களிடம் சென்று “என்னையும் உங்கள் யாக குண்டங்களில், நான் விருப்பப் படும் மந்திரங்களை ஓதி, யாக குண்டத்தில் நெய்யை விட்டு, யாகம் செய்ய விடுங்கள்” என்று கூறிக் கொண்டு இருந்தாரா? புத்தர் பார்ப்பனர்களை பற்றிக் கவலைப் படவில்லை. அவருடைய கருணை மனம், உலக மக்களின் துயரங்களுக்கு ஒரு விடிவை கண்டு பிடிக்க விரும்பியது. தன்னுடைய கடின உழைப்பு , விடா முயற்சி மூலம் துயரத்தில் இருந்து விடுதலை பெரும் வழியை அவர் கண்டு பிடித்தும் விட்டார். வேள்விகளை “கட்டிக் கொண்டு அழுத” பார்ப்பனர்களை தாண்டி ஆன்மீகத்தில் வேகமாக மேலே சென்று விட்டார்.

உலகமே புத்தரை பின் பற்ற ஆரம்பித்து விட்டது. ஆனால் புத்தர் ஆன்மீகத்தில் உயரிய நிலையை அடைந்து விட்டதை புரிந்து கொள்ளும் அளவுக்கு அக்கால பார்ப்பனருக்கு ஆனமீக அறிவு இருந்தது. எனவே அவர்களும் புத்தரை பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள்.

நான் கூறிய நிலை இது போன்றதுதான். “த‌லித் ச‌முதாய‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ள், உல‌க‌ ம‌க்க‌ளுக்கு உத‌வ‌க் கூடிய‌ உய‌ரிய‌ ஆன்மீக‌ உண்மைக‌ள க‌ண்ட‌றியும் நிலைக்கு உய‌ர‌ முடியும்” என்ப‌துதான் நான் கூறுவ‌து.

கோவில்கள் என்பவை, அதில் வழிபாடு செய்யும் பக்தர்களின் அர்ப்பணிப்பு எண்ணத்தினால் தான் ஆன்மீக வலிமை பெறுகின்றன.

பழனி கோவிலின் மூல விக்கிரகம், போகர் என்னும் சித்தர் தானே உருவாக்கி வழிபட்டு வந்த விக்கிரகம்தான். போகருடைய சிறந்த பக்தியினால்தான் அந்த இடம் புனிதமாக கருதப் பட்டு பிற்காலத்தில் பெரிய கோவிலாக உருவாக்கப்பட்டது.

காலஹஸ்தியில் உள்ள கோவில் கண்ணப்ப நாயனாரின் பக்தியின் சிறப்பு கருதி உருவாக்கப்பட்டது.

போகரோ, கண்ணப்பரோ, 1500 கிலோ தங்கம் வைத்து, இலட்சக் கணக்கானவர் வந்து குமியும் கோவில் கட்டவில்லை. அவர்கள் ஒரே ஒரு சிலையை வைத்து காட்டிலே, மலையிலே தனிமையிலே ஆன்மீகத்திலே கவனம் செலுத்தினார்கள்.

போகரைப் போல, கண்ணப்பரைப் போல, புத்தரைப் போல, ஆதி சங்கரரைப் போல ஆறுமுக சாமியாரோ, நீங்களோ, நானோ பக்தியில், ஆன்மீகத்தில் அர்ப்பணிப்பு காட்டி நாமே ஆன்மீகத்தில் உயர முடியும். அப்போது நாம் வழி பட்ட சிறிய இடம் பிறகு பெரிய கோவிலாகக்க கூடும்.

ஆனால் அதை நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும்.

ஆனால் நீங்கள் “பார்ப்பனர்கள் ஆங்கீகரிக்கவில்லை, பார்ப்பனர்கள் அனுமதிக்கவில்லை” என்று, பார்ப்பனர் வாயால் பாராட்டுப் பெறுவது, அவர்களால் அங்கீகாரம் பெறுவது, அவர்கள் தங்கள் கட்டுப் பாட்டில் வைத்து இருக்கும் கோவிலகளில் பூசனை வழிபாடு செய்ய அனுமதி – என்று பார்ப்பனர்கள் பின்னாலேயே சென்று கொண்டிருக்கும் வழியையே முக்கியமாக கருதுகிறீர்கள்.

நான் புத்தரைப் போல. சங்கரரைப் போல, விவேகானந்தரைப் போல பார்ப்பனர்களையும் தாண்டி மேலே சிந்திக்கும் முறையைக் கூறுகிறேன்.

பார்ப்பனர்களை முன்பு மரியாதை செய்து அவர்களைப் பின்பற்றியது போல, இப்போது பார்ப்பனர்களைத் திட்டிக் கொண்டே அவர்களைப் பின் பற்றும் செயல்தான் நடக்கிறது.

இன்னும் எத்தனை நாட்கள் பார்ப்பனர்களின் பின்னாலே செல்லும் செயல் என்பது தெரியவில்லை.

பார்ப்பனர்களோ, முட்டாள் தனமாக ஆன்மீக வலிமையை முற்றிலும் இழந்தவர்களாக ஜெயேந்திரர் போன்றவர்களைன் காலில் விழுவதை தவிர வேறேதும் அறியாத வகையில், பணம், பதவி, அதிகாரம் இதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.

அவர்களோடு முண்டியடித்துப் போராடுவது ஆட்சி அதிகாரத்தை, சொத்தை கைப்பற்றும் செயலாகவே இருக்குமே தவிர உண்மையான ஆன்மீக உயர்வாக அமையாது.

நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை! நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்.


பார்ப்ப‌ன‌ர்க‌ள் தான் புத்த‌ர் பின்னெ, ச‌ங்க‌ர‌ர் பின்னெ ஓடினார்க‌ளெ த‌விர‌- புத்த‌ர், ச‌ங்க‌ர‌ர் ஆகியோர் பார்ப்ப‌ன‌ர்க‌ள‌ல் உருவாக்க‌ப் ப‌ட‌வில்லை.

இன்றைக்கு இருக்கும் பார்ப்ப‌ன‌ர்க‌ளுக்கு, அதாவ‌து எல்லோராலும் பார்ப்ப‌ன‌ர் என்று அழைக்க‌ப் ப‌டுப‌வ‌ர்க‌ளுக்கு, யார் ச‌ரியான‌ ஆன்மீக‌ வாதி என்று க‌ண்டு பிடிக்கும் அளவுக்கு கூட‌ ஆன்மீக‌ அறிவும் கிடையாது, அத‌ப் ப‌ற்றி அக்க‌ரையும் இல்லை. இவ‌ர்க‌ள் ம‌திப்ப‌து, ப‌ண‌த்தை, ப‌ட்ச‌ண‌த்தை, ப‌த‌வியை தான். எனவே இவ‌ர்க‌ளுக்கு ச‌ரியான‌ குரு ஜெயெந்திர‌ர் தான்.

இந்தியாவின், இந்து ம‌த‌த்தின் உண்மை ஆன்மீக‌ த‌லைமை வெற்றிட‌மாக‌ உள்ள‌து. த‌லித் ச‌முத‌ய‌த்தின‌ர் அதைப் புரிந்து கொண்டால் அந்த‌ த‌ல‌மைப இட‌த்தை அவ‌ர்க‌ள் நிர‌ப்ப‌லாம்.
த‌லித் ச‌முதாய‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ள் சங்கராச்சாரியார் ஆக ச‌ரியான‌ நேர‌ம் இதுவெ!



nallasivam
2009-07-21 07:08:00
dineshnallasivam@gmail.com

i like to read and know Ambethkar and his thoughts and works entirely. could u please inform to my mail id regarding for any books in tamil



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP