Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu width=
 width=மே 2009

உலக அரங்கில் ஜாதியை மறைக்கும் இந்தியா
அய்.நா. அவையில் சாதிய விவாதத்தை – பா.ஜ.க. அரசைப் போலவே தடுத்த காங்கிரஸ் அரசு

இனவெறிக்கு எதிரான உலகளாவிய மாநாடு 2001 ஆம் ஆண்டு டர்பனில் நடைபெற்றது. இம்மாநாட்டு முடிவுகளை நடைமுறைப்படுத்தியது பற்றி மதிப்பீடு செய்ய, ஜெனிவாவில் அய்க்கிய நாடுகள் அவை அண்மையில் (ஏப்ரல் 20 – 24, 2009) கூட்டிய மாநாடு உப்புச் சப்பற்று முடிவுற்றது. இஸ்ரேலை எதிர்த்து ஈரான் அதிபர் முகமது அகமதி நிஜாத்தின் அறிக்கை மீதான உரத்த சப்தம், அதனைத் தொடர்ந்த அவரது வெளிநடப்பையும் தவிர்த்து, இம்மாநாடு பற்றிய வேறு எந்தச் செய்தியையும் வெகுஜன ஊடகங்கள் வெளியிடவில்லை. டர்பன் மாநாடு நடைபெற்றபோது மாநாட்டின் விவாதப் பொருள், எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக எழுந்த கடுமையான விவாதங்களை பல வாசகர்கள் நினைவில் வைத்திருப்பார்கள். இச்சூழலில், எட்டாண்டுகளுக்குப் பிறகு இனவெறி, இது தொடர்பான பிற பாகுபாடுகள் குறித்த முதல் உலக மாநாடு சலனமற்று முடிவுற்றது மிகுந்த வியப்பை அளிக்கிறது.

Dalits செப்டம்பர் 2001இல் இனவெறியின் ஒரு குறிப்பிட்ட வடிவமே சாதிப் பாகுபாடு என்ற இந்தியர்களின் கோரிக்கை பெரும் சர்ச்சைக்குரியதாக இருந்தது. அப்போது மய்ய அரசில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு டர்பன் மாநாட்டு ஆவணங்களில், தனது ‘வளரும் வல்லரசின்' அதிகார தந்திரம் மற்றும் சட்ட, தர்க்க அளவிலான வாதங்கள் மூலம், சாதி தொடர்பான எந்தக் குறிப்பையும் முற்றாக இடம் பெறாமல் கவனமாக பார்த்துக் கொண்டது. அரசின் இந்நிலைப்பாட்டிற்குப் பின்னால் இந்தியாவை பன்னாட்டு ஆய்விற்கு உட்படுத்துவதற்கான எதிர்ப்பில், இந்து தேசியம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர்வையில் மறைந்திருந்தது என்பது வெளிப்படையான ஒன்று.

இனவெறி, இனப்பாகுபாடு, அந்நியர் மீதான காழ்ப்புணர்வு, சகிப்பின்மை ஆகியவற்றை எதிர்த்து நடைபெற்ற மாநாட்டில் சாதிப் பாகுபாட்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரிய தலித் ஆர்வலர்கள் சமகால உலகில் பிறப்பு, தொழில் மற்றும் சமூகக் குழுவமைப்பின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்படும் பாகுபாடு – வெளிப்படையாகவும் முதன்மையா கவும் உள்ளதென வாதாடினர். சாதிப் பாகுபாடு, அரசமைப்புச் சட்டம் மற்றும் அரசின் கொள்கை முடிவுகளையும் மீறி இந்தியாவில் உள்ள மக்களை பாதிப்பதுடன், தெற்காசிய நாடுகளில் உள்ள பிற மக்களையும் பாதிக்கிறது.

இந்து மத பழக்க வழக்கங்களை உலகளாவிய ஆய்விற்கு உட்படுத்த, இந்து தேசியவாத பாரதிய ஜனதா அரசு அனுமதிக்க மறுத்தது தெரிந்த ஒன்றே. ஆனால் எட்டரை ஆண்டுகளுக்கு மேலான பிறகும்கூட, காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, முந்தைய அரசைப் போலவே டர்பன் மறு சீராய்வு மாநாட்டில் சாதிப் பாகுபாடு தொடர்பான எந்த ஒரு விவாதத்தையும் அனுமதிக்காமல் விடாப்பிடியாக இருந்துள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்க வந்த 40 அரசு சாரா அமைப்புகளில் தலித் மற்றும் சிறு தேசிய இனத்தைச் சார்ந்த 33 அமைப்புகளை, இந்திய அரசுப் பிரதிநிதிகள் பங்கேற்க விடாமல் தடுத்தது மட்டுமின்றி, முந்தைய பாரதிய ஜனதா அரசு சாதி தொடர்பான குறிப்புகளை இம்மாநாட்டு ஆவணங்களில் இடம் பெறாமல் செய்த நிலைப்பாட்டையே இப்போதும் எடுத்துள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டம் சாதி பாகுபாட்டை தடை செய்துள்ளது. அதே வேளையில் இப்பாகுபாட்டிற்கு ஆட்படுவோருக்கு உதவிட பல வழிகளையும் வகுத்துள்ளது என்பதை மறுக்க முடியாது. செய்யத் தவறிய பல நடவடிக்கைகளை தவிர்த்து இதுபோன்ற பாகுபாடுகளை எதிர் கொண்டுள்ள பல நாடுகளை விட, இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் சிறப்பாகவே உள்ளன. எனினும் சாதியச் சிந்தனையோடு செயல்படும் அரசு அதிகாரிகளும் சாதி எதிர்ப்புச் சட்டங்களை மழுங்கடிக்கச் செய்ய அரசும், அதன் நிர்வாக அமைப்புகளும் தொடர்ந்து துணை புரிவதும் மறுக்க முடியாததே.

சாதிப் பாகுபாடு நமது சமூகத்தில் ஆழமாக நிலைப்பெற்றுள்ளது. நடுநிலையான அரசு நிறுவனங்கள் எல்லாவற்றிலும் அது பரவியுள்ளது. இந்திய அரசு விடாப்பிடியாக உலகளாவிய அமைப்பின் முன் சாதியம் தொடர்பான சங்கதியை விவாதிக்க விடாமல் தடுத்துள்ளது, ‘உயர் சாதி' இந்தியாவின் ஒழுக்கக்கேட்டின் அடையாளம் என குற்றம் சாட்டுவதில் துல்லியமான காரணிகள் உள்ளன.

இச்சமூக எதார்த்தத்தை மறுப்பதில் எவருக்கும் நன்மை இல்லை. இதனை மறுப்பதன் மூலமே மேற்கத்திய நாடுகள் இந்தியாவின் பிற பிரச்சினைகளை கையிலெடுப்பதையும், உலகளாவிய அழுத்தத்தை தவிர்க்கவுமே என்றால் அது முடியாது. குறைகளையும், தவறுகளையும் நேர்மையுடன் ஒப்புக் கொள்வதே தவறுகளை திருத்திக் கொள்ள மேற்கொள்ளும் தேவையான நடவடிக்கையாகும். மேலும், இது மேற்கத்திய நாடுகளின் தூதரக மேலாதிக்கத்தைத் தவிர்க்கவும், எதிரிகளை நண்பர்களாக ஆக்கிக் கொள்ளவும் உதவும். இதுவே உள் நாட்டில் சாதி எதிர்ப்பு இயக்கங்களை வலுப்படுத்தவும் வெளிநாட்டில் உள்ள தலித் மக்களை ஆதரிப்பதாகவும் இருக்கும். பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாட்டையே காங்கிரஸ் அரசும் தொடர்ந்து கடைப்பிடிக்கிறது என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது என்றாலும், இந்நாட்டின் அடுத்த அரசை தேர்ந்தெடுக்க உள்ள பொதுத் தேர்தல் சூழலில் இங்கு இது பற்றிய பொது விவாதம் எதுவும் நடைபெறவில்லை என்பது வியப்புக்குரியதாக உள்ளது.

டர்பன் மாநாடு சாதிப் பாகுபாடு குறித்து சரியான நிலைப்பாட்டை எடுக்கத் தவறிவிட்டபோதும், பாலஸ்தீனியர்கள் சந்திக்கும் பாகுபாடு மற்றும் ஒதுக்கப்படும் நிலை தொடர்பாக நீர்த்துப் போனதொரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இஸ்ரேலும் அமெரிக்காவும் மாநாட்டிலிருந்து வெளிநடப்பு செய்து, தொடர்ந்து மாநாட்டு நடவடிக்கைகளையும் புறக்கணித்துள்ளன. ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, போலந்து போன்ற நாடுகளும் இப்புறக்கணிப்பில் கலந்து கொண்டுள்ளன. யூத ஆதிக்கமும் இனவெறியும் ஒன்றே என்று கண்டனம் எழுந்துள் ளதும், அதனைத் தொடர்ந்த வெளிநடப்பும் இந்நாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவிற்கு தத்தம் நாடுகளில் இனவெறி, இனப்பாகுபாடு, அந்நியர் மீதான காழ்ப்புணர் வுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதிலிருந்து தப்பித்துக் கொள்ள உதவியுள்ளன.

அரபு மற்றும் இஸ்லாமியர் மாநாட்டு அமைப்பின் தூதரக உறவு பலத்தால் இனவெறி ஆவணங்களில் பாலஸ்தீனம் இடம் பெற முடிந்த நிலையில், உலக அரங்கில் தலித் அமைப்புகளின் வலிமையற்ற, நீர்த்துப் போன இயக்கங்களால் சுமார் 30 கோடி மக்களை பாதிக்கும் பாகுபாடு மட்டும் இவ்வாவணத்தில் இடம் பெற முடியாமல் போய் விட்டது.

Economic & Political Weekly-ன் தலையங்கம் (மே 16, 2009) – தமிழில்: பொழில்




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com