Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
மே 2007

பஞ்சாயத்து தலைவர்கள் படுகொலை: சுதந்திரமாக நடமாடும் கொலைக் குற்றவாளிகள்!

எழுத்தாளர்களின் உண்மை அறியும் குழு அறிக்கை

திருநெல்வேலி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மருதன்கிணறு கிராமப் பஞ்சாயத்தின் தலைவர் சேர்வாரன் மற்றும் கோவில்பட்டி அருகிலுள்ள நக்கலமுத்தன்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் ஜக்கன் ஆகியோர், அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்ட பிறகு, தென்மாவட்டங்களில் பதற்றம் நிலவுகிறது. எனவே, எழுத்தாளர்களின் முன் முயற்சியில் ஆறுபேர் கொண்ட குழு, மேற்கண்ட கிராமங்களுக்கு உண்மை அறியும் நோக்கோடு சென்று வந்தது. அதில் இடம் பெற்றோர்:

சிறீதர கணேசன், ம.மதிவண்ணன், குமரன்தாஸ், தேவதேவன், லேனாகுமார், சு.க. சங்கர்

இக்குழு 24.3.2007 அன்று, மருதன் கிணறு கிராமத்திற்குச் சென்றது. முதலில் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் அரிகிருஷ்ணன் (தேவர்) மற்றும் நாட்டாமை ராமசாமி (தேவர்), கிட்டப்பா (தேவர்), சண்முகப் பாண்டியன், மாரியப்ப பாண்டியன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவிடம் பேசினோம். அவர்கள் பின்வருமாறு கூறினர்:

“சம்பவம் நடந்த தினத்துக்கும் முன்தினம் இரவு எட்டு மணிவரை, இங்கனதான் பேசிக்கிட்டிருந்தான். இரவில் என்ன நடந்துச்சின்னு தெரியல. அவனுக்கு எந்தச் சீக்கும் இல்லை. எப்பமும் எங்களுடன்தான் இருப்பான். தலைவர் என்கிற அகராதி கிடையாது. எங்க எதிரிலே உட்காரக்கூட மாட்டான். பஞ்சாயத்துத் தலைவர் என்கிற முறையில் அதிகாரிகளைப் பார்க்கப் போகிற போதும்கூட உட்கார மாட்டான். பக்கத்திலே நிக்குதே இந்த மரம், இதுலதான் சாஞ்ச மாதிரி குத்தவச்சி உக்காந்திருப்பான். எல்லாரும் வேணும்னு நினைக்கிறவன். தனிப்பட்ட முறையில் யாரிடமும் கோபம் இல்லை. துணைத் தலைவரா இருக்கிற சுமதியாலும் அவருடைய கணவர் நீல் ராஜரத்தினத்தாலும்தான் அவனுக்கு இடைஞ்சல். சமீபமாக்கூட சட்டையப் பிடிச்சி இழுத்து துணைத் தலைவர் சுமதி அவன அடிச்சாங்க. தலைவர் கொலை செய்யப்பட்டதும் மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து வந்து சங்கத்துக்காரங்க (அருந்ததியர் அமைப்புகள்) மறியல் போராட்டம்னு பண்ணியும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த உரையாடல் நடந்து கொண்டிருக்கும்போதே, இடையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஒரு இளைஞர் வந்து இறங்கி, “நான்தான் நீல் ராஜரத்தினம். என்னைப் பார்க்க வேண்டும் என்று சொன்னீங்களாமே. நான் வெளியே போகவேண்டிய வேலை இருக்கிறது. இன்னும் அரைமணி நேரம்தான் வீட்டில் இருப்பேன். வந்து பாருங்கள்'' என்று சொல்லிவிட்டுப் போனார். மேலும் சிறிதுநேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு, துணைத்தலைவர் சுமதியின் வீட்டுக்குச் சென்றோம். துணைத்தலைவரின் கணவர் நீல் ராஜரத்தினம், தன் தரப்பு கருத்துகளைச் சொன்னார். பஞ்சாயத்துத் துணைத்தலைவர் சுமதி மற்றும் அரியதேவர் (சுமதியின் அண்ணன்) ஆகியோர் உடன் இருந்தனர்.

“நான் பி.இ. படிச்சிருக்கேன். கோயம்புத்தூரில படிச்சேன். இங்கே போஸ்ட் மாஸ்டரா வேலை செய்றேன். கேபிள் டி.வி.யும் நடத்திகிட்டிருக்கேன். நீங்க பாத்து பேசிகிட்டு வந்த அரிகிருஷ்ண (தேவர்) என் சித்தப்பாதான். அவர்தான் இருபது வருஷமா பிரசிடெண்டா இருந்து வந்தார். நாங்க கிறித்துவ தேவர். அவங்க இந்து தேவர். இங்கு சி.எஸ்.அய். கிறித்துவ குடும்பங்கள் 5 இருக்கு. 1934 வாக்கில் அம்மா வழி தாத்தா மதம் மாறி டிரைவர் வேலையில் சேர்ந்தார். எங்கப்பாதான் எங்க சித்தப்பாவ ஜெயிக்க வச்சார். நான் என் மனைவிய நிக்க வச்சது, எங்க சித்தாப்பாவுக்குப் புடிக்கல. அதிலே இருந்துதான் ரெண்டு பக்கமும் உரசல். எதுத்தாப்பல இருக்குற இந்த ஓட்டு வீடு எங்க குடும்பச் சொத்து. தாத்தா வீடு. எனக்கும் அதுல பங்கு இருக்கு. அத நான் கல்லெறிஞ்சி உடச்சதா, எங்க சித்தப்பா ஓடுகளை கழட்டிட்டுப் போலிஸ் கம்ப்ளைண்டு குடுத்தார்.

“ஜனவரி 26 ஆம் தேதி தலைவரை (சேர்வாரன்) நான் சக்கிலியப்பய என்று திட்டியதாக போலிஸ் கம்ப்ளைண்டு. தலைவருக்காக பஞ்சாயத்து போர்டில் கிளார்க்கா வேலை செய்யும் செல்வம் (தேவர்) தான் பெட்டிசன் எழுதிக் கொடுத்தார். சாட்சி இல்லாததினால அது தள்ளுபடி ஆகிவிட்டது. தலைவருக்கு ஒரு வார காலமாவே உடம்பு சரியில்லை. இந்நிலையில்தான் பிப்ரவரி 19 ஆம் தேதி என்னைக் கைது செய்து ஸ்டேசனில் வச்சாங்க. அப்புறம் போயி பாடிய பாத்திருக்காங்க. பாடியில காயம் இல்லை. காயம் இல்லன்னு உடனே கைவிலங்குகள கழட்டிட்டு நாற்காலியில் உக்கார வச்சாங்க.

“பிணத்தை சொந்தக்காரங்க வாங்கிக்க மறுத்து, மறியல் பண்ணினதால, தீண்டாமை தடுப்புச் சட்டத்தில் கொலை என்று எப்.அய்.ஆர். போட்டாங்க. ரெண்டு நாள் உள்ள இருந்தேன். இன்ஸ்பெக்டருக்கான ரூமில் சவுகரியமாகத்தான் இருந்தேன். டி.எஸ்.பி. ஆபீசுக்கு எதிரேதான் எங்க வீடு இருக்கு. அதனாலே டி.எஸ்.பி. எனக்கு உதவியா இருந்தாரு. அம்பது நாளுல ஒண்ணும் பிரச்சனை இல்லன்னா கேச மூடிடுவாங்க. கேசுல இருந்து ஈஸியா வெளிய வந்திரலாம்னு இருக்கேன்!

“ஆபீசுல எனக்கு கீழ வேலை செய்ற போஸ்ட்மேன் ஒரு எஸ்.சி.தான். இருந்தாலும் அவர்தான் முன் தேதிபோட்டு 17 ஆம் தேதியே எழுதின மாதிரி ஒரு லீவ்லெட்டர், ஒரு மாசத்துக்கு கேட்டு அனுப்பிட்டாரு. அதனால் வேலைக்கும் ஒண்ணும் பிரச்சனையில்ல. தலைவருதான் ரொம்ப இடைஞ்சலா இருக்கானேன்னு வருத்தப்பட்டுகிட்டிருந்தேன். அவனும் இயற்கையா செத்துட்டதால, ஸ்டேசன்ல இருக்கும்போதே ஒரு பெரிய சந்தோஷமாவும் இருந்திச்சு. இனிமே நம்மதான் தலைவர். இடைஞ்சலும் போயி, ஆண்டவர் பெரிய அதிகாரத்தையும் நம்ம கையில குடுத்துட்டாரேன்னு திருப்தியாவும் இருந்திச்சி.''

இவரிடம் பேசி முடித்ததற்குப் பிறகு அருந்ததியர் குடியிருப்புக்குப் போனோம். அங்கிருந்த மறைந்த தலைவரின் குடும்பத்தாரிடம் பேசினோம். எஸ். ராமன் (மறைந்த தலைவரின் மூத்த மகன்) :

“எங்கப்பாவுக்கு மொத்தம் அஞ்சு பிள்ளைங்க. ஆண் 2, பெண் 3. இருபது வருஷமா தேவர் சாதிக்காரங்கதான் பஞ்சாயத்துத் தலைவரா இருந்தாங்க. இப்பதான் இதை எஸ்.சி.க்கு ஒதுக்கியிருக்காங்க. இங்க தேவமாருதான் மெஜாரிட்டி. பள்ளர்கள் வீடு 60 இருக்கும். அருந்ததியர் 6 வீடு. பள்ளரை எதிர்த்து நாங்க நின்னோம். பள்ளர் தோத்துப் போனாங்க. நாங்கள்ளாம் அடிமட்டத்துல உள்ளவங்க. எங்களால ஒண்ணும் செய்ய முடியாது. இதமாதிரி ஒரு சம்பவம் அவங்க தெருவுல நடந்திருந்தா, இன்னிக்கு என்னென்னமோ வெல்லாம் நடந்திருக்கும். போலிஸ் சப்போர்ட்டும் அவங்களுக்கு இருக்கு. கலெக்ட்டர சந்திச்சப்போ இயற்கைச் சாவுதான் என்றுதானே டி.எஸ்.பி. சொன்னார் என்று சொன்னார். டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன், நீல்ராஜரத்தினம் வீட்டுலதான் குடியிருக்கிறார். அந்தப் பழக்கத்துல அவங்களுக்கு சப்போர்ட்டா நடந்துக்கிறார்.'' கருப்பியம்மாள் (மறைந்த தலைவரின் மனைவி) :

“அவருக்கு உடம்புக்கு எந்த தொந்தரவும் இல்லை. வைஸ் பிரசிடெண்டு வீட்டுக்காரரு பொய் சொல்றாரு. யாரும் வந்து வைத்தியம் பாக்கல. பஞ்சாயத்து கூட்டம் முடிஞ்சு வந்தாலே பிரச்சனைதான். வெளியில வந்தவுடனே துணைத் தலைவி புருஷனும் மத்தவங்களும் சண்டைக்கு வந்தாங்க. காலைல அஞ்சு மணிக்கு "வெளிய' இருக்கப் போன ஆளு. நைட்டுல நாளைக்கு 19 ஆம் தேதி குருவி குளத்துல கூட்டம்னு சொல்லிகிட்டிருந்தாரு. காலைல பொணமாத்தான் தூக்கிட்டு வந்தாங்க. போலிஸ்காரங்க கதவைச் சாத்திட்டு போட்டோ பிடிக்கிறோம்னு மெரட்டி கைரேகை வாங்கினாங்க.''

இரண்டு ஊர்களிலுமே பஞ்சாயத்துத் தலைவர்களாயிருந்தவர்கள் அருந்ததியர்கள். இக்குறிப்பிட்ட ஊர்களில் அவர்கள் மிகவும் சொற்ப எண்ணிக்கையில் வாழ்ந்து வருகிறார்கள். இரண்டு ஊர்களிலுமே கொலையாளிகளுக்குத் துணையாக தமது சாதி சார்ந்த அரசியல்வாதிகளின் அதிகாரம், செல்வாக்கு முதலியவை உதவியாக இருந்ததை உணர முடிந்தது. அதோடு காவல் துறை அதிகாரிகள் எப்போதும் போல, சாதி இந்து கொலையாளிகளுக்கு உதவியாகவே இருந்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக மருதங்கிணறு சேர்வாரன் கொலை வழக்கில் நாயக்கர் சாதியைச் சேர்ந்தவராகச் சொல்லப்படும் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணனின் – கொலையாளிகளுக்குச் சார்பான நிலைப்பாட்டை, எல்லாருமே குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

உண்மை அறியும் குழு சென்றபோது, கொலைக்குற்றவாளிகள் என்று சொல்லப்படுபவர்கள் இருவருமே, அதே ஊர்களில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. கொலையாளிகளின் சாதியைச் சேர்ந்த அரசியல்வாதிகள், கொலையாளிகளுக்கு உதவியாகவே இருக்கிறார்கள். ஆனால், கொலையுண்டவர்களின் சாதியைச் சேர்ந்த சொற்பமான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாயே திறக்காமல், யாருக்கு வந்த விருந்தோ என்று இருக்கிறார்கள்.

மாநில, மய்ய அரசியல் சார்ந்த பதவிகளில் போதிய பிரதிநிதித்துவமின்றி இருக்கும் பிரதிநிதிகளுக்கும், பாதிக்கப்பட்டோருக் காக குரல் கொடுக்கத் துணிவு இல்லாத நிலையில், உள்ளூர் பஞ்சாயத்து அளவிலான அதிகாரம் அர்த்தமற்ற ஒன்றாகவே படுகிறது. இச்சூழ்நிலையில்தான் படுகொலை போன்ற பெரிய அளவிலான குற்றங்கள் புரிந்தவர்களும் பெரிய அளவில் எந்த தண்டனை யுமின்றி சுதந்திரமாக நடமாடும் நிலையும் ஏற்படுகிறது. அதனால்தான் இதுபோன்ற படுகொலைகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. உண்மை அறியும் குழுவின் பரிந்துரைகள் :

1. அரசியல் மட்டத்திலும் காவல் துறை மட்டத்திலுமான தலையீடுகள் இன்றி, நியாயமான முறையில் வழக்கு நடைபெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும்.
2. இறந்தவர்களைச் சாந்திருந்த குடும்பத்தாரின் துயர் துடைக்கும் வகையில், இறந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை அளிக்க வேண்டும்.
3. இதுபோன்ற வன்கொடுமைகளில் தொடர்ந்து ஈடுபடும் சாதி இந்துக்களுக்கு கூட்டு அபராதங்கள் விதிப்பது, பகுதி அளவில் இடஒதுக்கீட்டுப் பயன்களை மறுப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்க ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
4. பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளில், துணைத்தலைவர் பதவியும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்க்கே ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இதன் மூலம் துணைத் தலைவர் பதவியை வைத்துக் கொண்டு, பட்டியல் சாதியைச் சேர்ந்த உள்ளாட்சித் தலைவர்களை மேலாதிக்கம் செய்வது தடுக்கப்படும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com