Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
மே 2007

“இந்தியனே வெளியேறு'' - வடகிழக்கின் விடியலுக்கான முழக்கம்

மீனாமயில்

"இந்தியனே வெளியேறு' என்ற இந்த முழக்கம் – தேசாபிமானிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கலாம். பலருக்கு பல கேள்விகளையும், குழப்பத்தையும் இம்முழக்கம் ஏற்படுத்தலாம். தங்கள் உரிமைகளை நசுக்கும் இந்திய ராணுவத்தினரை வெளியேறச் சொல்லி இப்படிப் போராடுவது - பாகிஸ்தானியர்களோ, வங்க தேசத்தினரோ, இலங்கை மக்களோ அல்லது வேறெந்த நாட்டினரோ அல்ல. இந்தியாவில் உள்ள காஷ்மீரிகள் மற்றும் அசாம், நாகலாந்து, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநில மக்களும்தான் இப்படிப் போராடி வருகின்றனர்.

நள்ளிரவில் இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து "விடுதலை' பெற்றபோது, பல மாநில மக்களின் உரிமைகள் – இந்திய ஒருமைப்பாட்டுக்குள் முடக்கப்பட்டன. சாதி, மதம், மொழி என எல்லா பாகுபாடுகளுக்கும் விளக்கேற்றி வைத்துதான் இந்திய ஜனநாயகம் ஒளி பெற்றது. வெள்ளையர்களை வெளியேற்றிய கையோடு, சாதி மத ஆதிக்கவாதிகள் சர்வாதிகாரத்தை கையிலெடுத் தனர். "வேற்றுமையில் ஒற்றுமை' என்ற முகமூடியை அணிய பல தரப்பு மக்களும் நிர்பந்திக்கப்பட்டனர். அணிய மறுத்தவர்கள் வேட்டையாடப்பட்டனர். அவசர அவசரமாக இந்திய அரிதாரத்தைப் பூசிக்கொண்டு, மக்கள் அனைவரையும் இந்து ராஜ்ஜியத்துக்குள் இழுக்கும் கபட நாடகமும் அரங்கேறியது. அரிதாரமே உண்மை என மதி மயங்கி, பலர் தங்கள் சுயத்தை இழந்துவிட, பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் இந்து சாம்ராஜ்யத்துக்கும் இந்திய ஒருமைப்பாட்டுக்கும் காவு கொடுக்க விரும்பாத காஷ்மீரிகளும், வடகிழக்கு மாநிலத்தவரும் – இன்று வரை எண்ணற்ற உயிர்களை பலி கொடுத்து, தங்கள் உரிமைகளை மீட்கப் போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்ட குணம்தான் அவர்களை இந்திய தேசாபிமானிகளுக்கு எதிரிகளாக்கியது. பாகிஸ்தான் எல்லையில் இருப்பதால், காஷ்மீரிகளின் துயரமாவது அவ்வப்போது செய்தியாக வெளியே கசியும். ஆனால், வடகிழக்கு மக்களின் நிலை இன்னும் பரிதாபமானது. பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் வடகிழக்கு மாநிலங்கள், எந்த விதத்திலும் இந்தியாவோடு தொடர்பில்லாதவை. அவர்களின் பண்பாடு, பாரம்பரியம், தோற்றம், தொழில்கள், வாழ்க்கை முறை எல்லாமே இந்திய வேஷத்துக்குப் பொருத்தமற்றவை. உண்மையில், பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு முன்பும் சரி, காலனியாதிக்கத்தின் போதும் சரி, வடகிழக்குப் பகுதிகள் இந்தியாவோடு எந்தத் தொடர்புமின்றி, ஒரு குறுநாடாகவே தனித்து இயங்கி வந்தன. விடுதலைக்குப் பின்னர்தான் இவை மாநிலங்களாக இணைக்கப்பட்டன.

அதிகாரம் கைமாறியபோதும் வடகிழக்குப் பகுதிகளுக்குப் பெருமளவில் சுயாட்சி அதிகாரம் வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது : “இந்தப் பகுதிகளை விருப்பத்துக்கு மாறாக, இந்திய யூனியனோடு இணைக்க இயலாது. இந்த பிரதேசங்கள் தனித்துப் பிரிந்து போக விரும்புகிறபோது, அப்படிப் போக உரிமை இருக்கிறது'' என்கிறது அந்தத் தீர்மானம்.

ஆனால், மக்களின் விருப்பமோ, அனுமதியோ இன்றி ஒவ்வொரு மாநிலமாக இந்திய யூனியனோடு இணைக்கப்பட்டது. வெண்கலக் கடைக்குள் யானை புகுந்தது போலானது, வடகிழக்கு மாநிலங்களின் நிலை. அப்படி இணைக்கப்பட்ட பிறகும் நீண்ட காலத்திற்கு, தாங்கள் இந்தியாவில் இருக்கிறோம் என்ற உணர்வே அந்த மக்களுக்கு ஏற்படவில்லை. பிற மாநிலத்தவரைப் பார்த்தால் “நீங்கள் இந்தியர்களா?'' என்று கேட்குமளவுக்கு அவர்கள் தனித்தன்மையோடு இருந்தனர். இந்நிலையில்தான், கொட்டிக் கிடந்த இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதற்காகப் பெரிய பெரிய மூட்டைகளோடு பன்னாட்டு நிறுவனங்களும், அரசியல்வாதிகளும் படையெடுத்தனர்.

பாரம்பரியமாக மண்ணின் மக்களாக வாழ்ந்து வந்த பழங்குடியினரின் இருத்தலே அங்கு கேள்விக்குறியானது. வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களின் ஆதிக்கம் கை ஓங்க, சொந்த மண்ணில் வாழ்வைத் தொலைத்தனர் வடகிழக்கு மக்கள். எல்லாமே கூறுபோடப்பட்ட நிலையில், மக்களுக்கு காய்கறிகள்கூட கிடைப்பது அரிதானது. பழங்குடியின மக்களின் தனித்துவ அடையாளம் சூறையாடப்பட்டது. குறிப்பாக, அவர்கள் இந்து மதப் பட்டியலில் இருக்க நிர்பந்திக்கப்பட்டனர். இந்த துரோகமும், உரிமை மீறல்களும் மக்களை கிளர்ந்தெழச் செய்தன.

வெள்ளையர்களை விரட்டியடிப்பதற்காக உருவான போராட்டக் குழுக்கள் மீண்டும் உயிர் பெற்றன. “வெள்ளையனே வெளியேறு'' என்று முழங்கிய மக்கள், “இந்தியனே வெளியேறு'' என்று முழங்க வேண்டியதாயிற்று. இந்தப் போராட்டக் குழுக்கள் தங்களுக்கு சுயாட்சியை வழங்கக் கோரி, ஆயுதமேந்திப் போராட்டம் நடத்தின. இந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் வடகிழக்கு மாநிலங்கள் குலைப்பதாகக் கருதி, அவற்றைப் பதட்டம் நிறைந்த பகுதிகளாக அறிவித்தது அரசு. விளைவு, போராட்டக் குழுக்களை ஒடுக்க, இந்திய ராணுவம் அப்பகுதிகளில் குவிக்கப்பட்டது.

"வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை வழி நடத்திய இந்தியப் போராட்டக் குழுக்களை ஒடுக்குவதற்காக, ஆங்கிலேயர்கள் இயற்றிய ஆயுதப்படைச் சிறப்புச் சட்டத்தை வடகிழக்கு மாநிலங்களில் நடைமுறைப்படுத்தியது இந்திய அரசு. அடிப்படை உரிமைகளை நசுக்கும் இச்சட்டத்தை துளியளவும் மாற்றாமல் – "ஆயுதப் படை (அசாம், மணிப்பூர்) சிறப்பு அதிகார அவசரச் சட்டம் 1958' என்ற பெயரில் மட்டும் சிறிய திருத்தம் செய்து, தன் மக்கள் மீது ஏவி விட்டது இந்திய அரசு. 1980 ஆம் ஆண்டு வடகிழக்கு மாநிலங்களிலும், 1990 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரிலும் இக்கொடிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. எல்லைப் பாதுகாப்புப் படையினர், அசாம் ரைபிள்ஸ், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ், சீக்கியப் படைப்பிரிவு, தேசிய பாதுகாப்புப் படை எனப் பல்வேறு பெயர்களில் பயிற்று விக்கப்பட்ட இந்திய ராணுவத்தினர், ஆயுதப் படையினராக இந்தப் பகுதிகளில் ஏவி விடப்பட்டனர்.

ஆயுதப்படை சிறப்புச் சட்டம், ராணுவத்தினருக்கு எல்லையில்லா சுதந்திரத்தை வழங்குகிறது. இச்சட்டத்தின்படி, ராணுவத்தினர் எந்த வீட்டிலும் தன்னிச்சையாக நுழைந்து தேடுதல் வேட்டை நடத்தலாம். வாரண்ட் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்; விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யலாம். சுட்டும் கொல்லலாம். இதில் கொடுமை என்னவென்றால், அப்படி நிகழ்த்தப்படுகிற எந்த "என்கவுன்டர் கொலை'க்கும் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது விசாரணை நடத்த இச்சட்டம் தடை விதிக்கிறது. அப்படியே நடத்த முற்பட்டாலும், அதற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும். இந்நிலையில் இதில் எங்கிருந்து விசாரணை நடத்தி, மக்கள் தங்களுடைய நீதியைப் பெறுவது?

ஆயுதப் படையினருக்கு வழங்கப்பட்ட இந்தக் கட்டுப்பாடற்ற சுதந்திரம், அவர்களை வேட்டை மிருகங்களாக்கியது. காம வெறி தலைக்கேறும் போதெல்லாம் பெண்கள் விசாரணைக்கென இழுத்துச் செல்லப்பட்டனர். அப்படி கொண்டு செல்லப்பட்டவர்கள் பிணமாகக் கிடந்தனர் அல்லது காணாமல் போயினர். அரசாங்கக் கணக்குப்படி மட்டும், இதுவரை மணிப்பூரில் சுமார் இருபதாயிரம் பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். போராட்டக் குழுவை ஒடுக்குவதுதான் அரசின் நோக்கமென்றால், நியாயமான முறைகளில் அதை என்றோ நிறைவேற்றியிருக்கலாம். உண்மையில் ஆயுதச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது, மணிப்பூரில் இருந்த போராட்டக் குழுக்களின் எண்ணிக்கை நான்கே நான்குதான்.

இப்போது இருபத்தைந்து. அரசுதான் அநீதியின் வாயிலாக மக்களைப் போராளிகளாக்கி இருக்கிறது. ராணுவத்துக்கு தீனி போடவும் அதன் மூலம் போலி தேசப்பற்றை வளர்த்து விடவும் – இந்திய அரசு பணயம் வைத்தது தன் சொந்த மக்களை. மக்களுக்கெதிரான இச்சட்டத்தை திரும்பப் பெறச் சொல்லி, பல ஆண்டுகளாக மனித உரிமை அமைப்புகளும், பெண்கள் அமைப்புகளும், பொது மக்களும் போராடி வருகிறார்கள். எத்தனை விதமானப் போராட்டங்கள்? ஒவ்வொன் றுமே உயிரை நடுங்கச் செய்பவை!

மணிப்பூரைச் சேர்ந்த கவிஞரும் போராளியுமான இரோம் ஷர்மிளா சானு, ஆறு ஆண்டுகளாகப் பட்டினிப் போராட்டம் நடத்தி வருகிறார். நவம்பர் 2, 2000இல் போராட்டக் குழு ஆயுதப் படை அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்க விரும்பிய ஆயுதப் படையினர், பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பத்து பேர் உயிரிழந்தனர். செய்தித் தாள்களின் முதல் பக்கத்தில் வெளிவந்த ரத்தக் கறை படிந்த அந்த புகைப்படங்கள், இரோம் ஷர்மிளாவின் உடலை நடுங்கச் செய்தது. பதட்டத்தோடு வீடு திரும்பியவர், அமைதியாக தன் குடிசையில் இருந்தபடி சாகும் வரை பட்டினிப் போராட்டத்தை அறிவித்தார்.

இரோமின் உடல்நிலை மோசமாகிற போதெல்லாம், அவரைக் கைது செய்து வலுக் கட்டாயமாக மருத்துவமனையில் சிறை வைத்து, ட்யூப் வழியாக திரவ உணவை செலுத்தியது அரசு. “மருத்துவமனைக்கு பதில் என்னை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லுங்கள். எனக்கான நீதி அங்குதான் கிடைக்கும்'' என தன் மெல்லிய ஆனால் உறுதியான குரலில் முழங்கினார் இரோம். ஏழ்மையான குடும்பத்தில் எட்டாவது குழந்தையாக இரோம் பிறந்தபோது, அவரது தாய்க்கு பால் சுரக்கவில்லை. இரவு நேரத்தில் இரோமைத் தூக்கிக் கொண்டு அவரது தந்தை வீடு வீடாகச் செல்வார். கைக் குழந்தை இருக்கிற தாய்மார்கள் இரோமுக்குப் பாலூட்டுவார்கள். இப்படியாக பல தாய்மார்களிடம் தாய்ப்பால் குடித்துதான் இரோம் வளர்ந்தார். “அந்த தாய்மார்களுக்கு தான் செய்ய வேண்டிய கடமையாகத்தான் இரோம் இந்தப் பட்டினிப் போராட்டத்தைக் கருதுகிறார்'' என்கிறார், இரோமை மருத்துவமனையில் கவனித்துக் கொள்ளும் அவரது அண்ணன் சிங்காஜித்.

இரோமின் குடும்பம் மட்டுமல்ல, வடகிழக்கு மாநிலப் பெண்கள் அனைவருமே இதே மன உறுதியோடும், போராட்ட குணத்தோடும்தான் இருக்கிறார்கள். எப்போது முழு கடையடைப்பு, சாலை மறியல் அறிவிக்கப்பட்டாலும் அதற்கு முன்னிலை வகித் தனர். கடந்த 2004 ஆம் ஆண்டு தங்ஜம் மனோரமா என்ற பெண், ஆயுதப் படையினரால் பாலியல் வல்லுறவு செய்யப் பட்டு, கொல்லப்பட்டதைக் கண்டித்து – மணிப்பூர் தாய்மார்கள் நடத்திய நிர்வாணப் போராட்டம், மனித உரிமையில் நம்பிக்கை கொண்டவர்களை உறைய வைத்தது. “இந்திய ராணுவம் எங்கள் சதையை தின்கிறது'',

“இந்திய ராணுவம் எங்களை பலாத்காரம் செய்கிறது'' என வெற்றுடம்போடு ஆயுதப் படைப்பிரிவு அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் துயரங்களையும், அநீதியையும் உலகுக்கு உணர்த்தியதற்காக அவர்கள் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவித்தனர். மாதக்கணக்கில் நீடித்த போராட்டங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மணிப்பூர் மக்களுக்கு ஆதரவு திரண்டது. 32 சமூக அமைப்புகள் அந்தப் போராட் டங்களுக்கு கைகொடுத்தன. அதன் விளைவாக, இம்பால் மாவட்டத்தில் மட்டும் அந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட்டது.

இத்தகைய போராட்டங்களை எந்த கட்சியின் அரசும் பொருட்படுத்துவதில்லை. இக்கொடுஞ்சட்டத்தை நியாயப்படுத்தவே அவை முயல்கின்றன. “வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்புச் சட்டம் கட்டாயம் தேவை; இச்சட்டம் இல்லையெனில் ராணுவத்தால் பதட்டமான சூழலைக் கையாள முடியாது. ராணுவத்தினருக்கு எதிராகக் கிளம்பும் புகார்களை பொருட்படுத்தக் கூடாது. அப்போதுதான் ராணுவத்தினர் மனசாட்சியோடும் பாகுபாடின்றியும் நடந்து கொள்ள முடியும்'' என்ற சுயநலக் கருத்தை வெளிப்படுத்துகிறார், ராணுவ உயரதிகாரிகளில் ஒருவரான அரவிந்த் ஷர்மா.

சர்வதேச மனித உரிமைகளையும், மனிதநேய சட்டங்களையும் ஆயுதப் படையினர் தொடர்ந்து அத்து மீறுகின்றனர் என்றாலும், நீதிமன்றம் இதில் மிக அலட்சியமாகவே செயல்பட்டது. 1980, 82, 84, 85 மற்றும் 1991இல் தொடுக்கப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம்,

“ஆயுதப்படைச் சட்டம் காரணமில்லாமல் நடைமுறையில் இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த விதிமுறையையும் அது மீறவில்லை'' என தீர்ப்பளித்தது. மேலும், "பதட்டமான பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மறு பரிசீலனை செய்ய வேண்டும். ராணுவ அதிகாரி மீது வழக்குத் தொடர விரும்புகிறவர்கள், அரசாங்க அனுமதியோடுதான் அதைச் செய்ய இயலும். மத்திய அரசு அப்படி அனுமதி மறுக்கிற பட்சத்தில் நீதிமன்ற அனுமதியைப் பெறலாம்'' என்று கூறி யுள்ளது. நீதிமன்றத்தின் "நீதி' இதுதான். ஆனால், இந்தத் தீர்ப்பு பரவலாக அதிர்ச்சியைக் கிளப்பியது. நிலைமையை இது மேலும் மோசமடையச் செய்யும் என வெளிப்படையாக விமர்சனங்கள் கூறப்பட்டன. 1997இல் வெளிவந்த இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து தேசிய மனித உரிமை ஆணையம், ராணுவத்தினர் சூழலை கவனமாகக் கையாள அந்தந்த அமைச்சகங்களுக்குப் பரிந்துரை செய்தது.

தொடர்ச்சியான போராட்டங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டிய நிர்பந்தத்தில் மன்மோகன் சிங், 2004இல் ஓர் உறுதிமொழியை அளித்தார். அதன்படி, "ஆயுதப்படை சிறப்புச் சட்டத்திற்குப் பதிலாக மனித உரிமைகளுக்கு பங்கம் விளைவிக்காத வேறொரு நல்ல சட்டம் கொண்டு வரப்படும். அச்சட்டம் தேசப் பாதுகாப்புக்கான உத்திரவாதத்தையும் அளிக்கும்' என்று வாக்குறுதி அளித்தார். இதற்காக அமைக்கப்பட்ட பரிசீலனைக் குழு, இன்றுவரை எந்த முடிவுக்கும் வந்ததாகத் தெரியவில்லை.

இந்நிலையில் "அம்னஸ்டி இன்டர்நேஷனல்' அமைப்பு, இந்திய அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. ஆயுதப்படை சிறப்புச் சட்டம் நடைமுறையில் உள்ள பகுதிகளில், மனித உரிமை மீறல் கள் அப்பட்டமாக நடந்துள்ளதாகவும், இந்திய அரசு இந்த உரிமை மீறல்களை ஊக்குவிப்பதாகவும் அது கூறியுள்ளது. சர்வதேச மனித உரிமைக் கூட்டமைப்பின் உறுப்பினராக இருப்பதால், இந்திய அரசு சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் அது வலியுறுத்தி யுள்ளது. ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை உடனே நீக்கவும், எதிர்காலத்தில் உருவாக்கப்படும் பாதுகாப்புச் சட்டமானது, சர்வதேச மனித உரிமைக் கோட்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் அது கடுமையாகக் கூறியுள்ளது. காஷ்மீரிலிருந்தும் இச்சட்டத்தை அப்புறப்படுத்த, அம்னஸ்டி இன்டர்நேஷனல் பரிந்துரைத்திருக்கிறது. தவிர, ராணுவத்தினர் செய்ய வேண்டிய, செய்யக் கூடாத செயல்களையும் அது பட்டியலிட்டுள்ளது. “முடிவில்லாத காலத்துக்கு, விளக்க முடியாத காரணங்களுக்காக, நடைமுறையில் இருக்கும் அறிவிக்கப்படாத அவசர நிலை'' என்று வடகிழக்கு மாநிலங்களின் சூழலை விளக்குகிறது, அம்னஸ்டி இன்டர்நேஷனல்.

ஆனால், இதற்கெல்லாம் இந்தியாவின் போலி தேசாபிமானிகள் செவிமடுப்பார்களா என்பதே கேள்வி. பல்வேறு பண்பாடு, மொழி, வாழ்க்கை முறையைக் கொண்ட மக்களைத் துப்பாக்கி முனையில் இணைத்து, இந்து சாம்ராஜ்யத்துக்குள் அடைத்ததே – இந்திய ஜனநாயகத்தின் மிகப் பெரிய சாதனை! அப்படி இணைய மறுக்கிறவர்களே தீவிரவாதிகளாகவும், நக்சலைட்டுகளா கவும் சித்தரிக்கப்பட்டு, ஆயுதங்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். கிரிக்கெட்டில் இந்தியா பாகிஸ்தானை வெல்ல வேண்டும்; எல்லையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானிய ராணுவத்தினரைக் கூறு போட வேண்டும் என்பதுதான் பொதுப் புத்தியின் தேசப்பற்றாக இருக்கிறது. நாட்டைக் காக்கிறவர்கள் என ராணுவத்தினருக்குதான் எத்தனை மரியாதை! தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் அப்பாற்பட்டவர்களாக அவர்களை சட்டமும் அரசாங்கமுமே நடத்துவது மூடத்தனமில்லையா?

ஒரு குடும்பத்தின் நலனுக்காக ஒரு உறுப்பினரை இழக்கலாம்; ஒரு ஊரின் நலனுக்காக ஒரு குடும்பத்தை இழக்கலாம்; ஒரு சமூகத்தின் நலனுக்காக ஒரு ஊரை இழக்கலாம்; ஒரு நாட்டின் நலனுக்காக ஒரு இனத்தையே அழிக்கலாம் என்பதுதான் சர்வாதிகாரிகளின் கோட்பாடு. இந்தியாவில் இந்து ஆதிக்கவாதிகள் ஊன்றி வளர்த்தது இந்தக் கோட்பாட்டைத்தான். அதனால்தான் காஷ்மீரிகளையும், வடகிழக்கு மக்களையும் வேட்டையாடி, இந்திய ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதை அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள்.

அவரவர் உணவு, உடை, வாழ்க்கை முறை, மதம் மற்றும் பண்பாட்டைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை, எந்த சமூகம் தன் மக்களுக்கு மகிழ்ச்சியோடு வழங்கியிருக்கிறதோ, அதுவே ஜனநாயக நாடு. இந்தியா அப்படியொரு ஜனநாயக நாடாக எப்போதும் இல்லை. எல்லைகளை வளைப்பது என்பது வெறும் புவியியல் சார்ந்த பிரச்சனை அல்ல; அது உணர்வு ரீதியாக ஆராயப்பட வேண்டிய கோட்பாடு. ஆனால், ஆதிக்க அரசியலில் அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. இந்திய தேசியத்தை வணங்கி அதற்குள் மூழ்கிப் போய்விட்டால், எந்தப் பிரச்சனையும் இல்லை. அடிமைத்தனம் பழக்கமாகி, பின் அதுவொரு போதையாகி விடும். அப்படி மூழ்க முடியாதவர்கள்தான் "இந்தியனே வெளியேறு' என்று முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

*********************

"நான் அங்கு (மாலமிற்கு) ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன். இன்னும் சில நாட்களில் நடக்கவிருக்கும் அமைதிப் பேரணிக்கான திட்டமிடல் கூட்டம் அது. அங்கு நான் செய்தித் தாள்களின் முதல் பக்கத்தில், பொது மக்களின் ரத்தம் சிதறிய பிணங்களைப் பார்த்தேன். இதுதான் என்னை இந்த மரணப் போராட்டத்தின் பக்கம் திசை திருப்பியது. ஒன்றுமறியாத மக்கள் மீது ஆயுதப் படையினர் ஏவும் வன்முறைகளைத் தடுத்து நிறுத்த, எனக்கு வேறு வழி தெரியவில்லை. அமைதிப் பேரணி என்பது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றியது. நிலைமையை மாற்ற, ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயம் எனக்கு உருவானது. எனக்கிருக்கும் ஒரே வழி அதுதான். ஏனென்றால், பட்டினிப் போராட்டம் என்பது என் உணர்வு சார்ந்தது. இதில் உடலை வருத்திக் கொள்வது என்பதே கிடையாது. இது நான் செய்தே ஆகவேண்டிய கடமை. எனக்கு தற்கொலை எண்ணம் துளிகூட கிடையாது. அப்படி இருந்தால், உங்களுடன் இத்தனை இயல்பாகப் பேசிக் கொண்டிருப்பேனா? எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உண்மைக்காக நான் போராடுகிறேன். கடைசியில் உண்மைதான் வெல்லும்."

டெல்லியைச் சேர்ந்த குறும்பட இயக்குநரான கவிதா ஜோஷிக்கு, இரோம் ஷர்மிளா அளித்த பேட்டியிலிருந்து...

மீறலே வாழ்க்கை!

பல ஆண்டுகளாக வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் ஆயுதப் போராட்டங்கள், அங்கு ஒரு பாதுகாப்பின்மையை உருவாக்கிவிட்டன. நாகா மக்களுக்கான சுய நிர்ணயத்தை வலியுறுத்தி தொடங் கப்பட்ட போராட்டங்கள், வெவ் வேறு வடிவங்களை எடுத்து மிகவும் சிக்கலானதாகி விட்டது. மணிப்பூரின் இந்தப் பிரச்சனைக்குரிய அரசியல் வரலாறோடு, பொருளாதார வளர்ச்சியின்மை, போதைப் பொருட்கள் கடத்தல், ஊழல் போன்றவை இணைந்து சூழலை மோசமாக்கிவிட்டன. மனித உரிமை மீறல் என்பது, மணிப்பூரின் அன்றாட நிகழ்வாகிவிட்டது.

ஆயுதப் படை சிறப்புச் சட்டம் குறித்து "அம்னஸ்டி இன்டர்நேஷனல்' அமைப்பின் ஆய்வறிக்கையிலிருந்து


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com