Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
மே 2006

கொல்லும் பசி - கொழுக்கும் பங்குச் சந்தை

அ. முத்துக்கிருஷ்ணன்

Poor child பாலியல் தொழிலைப் போலவே நடன விடுதிகள், சூதாடும் விடுதிகள் எனப் பல கேளிக்கைத் தொழில்கள் முறையான உரிமத்துடன் நடைபெற்று வருகின்றன. மேற்குறிப்பிட்ட அனைத்தும் தனி மனித விருப்பம் சார்ந்தவை. இதனால் சம்பந்தப்பட்டவர்களின் உடல் நிலை, நிதி நிலை, குடும்பம் மட்டுமே பாதிப்புக்குள்ளாகும். ஆனால், மத்திய - மாநில அரசுகளே அங்கீகரித்து நடத்தும் சூதாட்டம் ஒன்றுள்ளது. அது, மும்பை சூதாட்டம். நம் நாட்டின் பொருளாதாரத்தையே நிர்ணயிக்கும் அளவுக்கு செல்வாக்குப் பெற்றுள்ளது. மு மும்பை சூதாட்டத்தின் லாப விகிதங்கள், குறியீட்டு எண்களாக நாள்தோறும் அறிவிக்கப்படுகின்றன. நாளேடுகள், தொலைக்காட்சிகள், ராசிபலன்கள் போல தினம் இந்த எண்களை அச்சிடத் தவறுவதேயில்லை. சுரண்டல் லாட்டரிக்கு நிகரான சமூகத் தீமையிது. இச்சூதாட்டத்தின் குறியீட்டு எண்ணை ‘சென்செக்ஸ்' என்று அழைக்கிறார்கள். இம்மாதம் இந்த எண், தன் வாழ்நாளில் முதல் முறையாக 12 ஆயிரத்தைக் கடந்தது. 10 ஆயிரத்தை ‘பங்குச் சந்தை காளை' விஞ்சிய நேரத்தில், விதர்பாவில் 301 ஆவது நபர் தற்கொலை செய்து இறந்தார். தற்கொலை விவசாயம் தொடர்புடையது; ‘சென்செக்ஸ்' பங்குச் சந்தை - வர்த்தகம் தொடர்புடையது. விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கைக்கும் ‘சென்செக்ஸ்' குறியீட்டுக்கும் நெருங்கியத் தொடர்புள்ளது.

இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் முதலீடு செய்திருப்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 20 லட்சம். கடந்த 2004 மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்போதைய ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி, தனது தேர்தல் பிரச்சாரத்தை ‘இந்தியா ஒளிர்கிறது' என்ற வாசகத்தை முன் வைத்து செய்தது. அவர்கள் ஆட்சிக் காலத்தில் சிவப்புக் கம்பள வரவேற்புடன் தாராளமயம் தறிகெட்டு ஆடியது. பன்னாட்டு நிறுவனங்கள் கட்டுப்பாடுகளின்றி அனுமதிக்கப்பட்டன. மாநில - மத்திய அரசுகள் இவர்களின் சேவகர்களாக மாறி, அந்தச் சேவையில் தங்கள் நேரத்தையும், அரசு கையிருப்பையும் கரைத்தன. பாரதிய ஜனதா கட்சி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு, மிகவும் பொருத்தமான பதிலை வாக்குச் சீட்டு அளித்தது. நரியின் சாயம் வெளுத்தது.

ஆனால், நம் கதையில் ஒரு நரி போய் அடுத்த நரி வந்தது. பாரதிய ஜனதா கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான வாக்குகள்தான் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர வைத்தது. காங்கிரஸ் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தவுடன், பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றம் வரும் எனப் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களில் பலர் தற்காலிகமாகப் பின்வாங்கினர். அவ்வளவுதான் சூதாட்ட விடுதியை நடத்துபவர்களின் பிழைப்பு இனி என்ன ஆவது! ஊடகங்களின் கூப்பாடு தாங்க முடியவில்லை.

பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்த மே 17 அய், செப்டம்பர் 11வுடன் ஒப்பிட்டு ‘டைம்ஸ் ஆப் இந்தியா' நாளேடு தலையங்கம் தீட்டியது. அதன் முதல் பக்கத்தில் 2.34 லட்சம் கோடி ரூபாய் இழப்பு எனக் கொட்டை எழுத்துகளில் அச்சடித்தது. பங்குச் சந்தை தரைமட்டம் ஆகிவிட்டதாக தலையங்கங்கள் ஆர்ப்பரித்தன. அமெரிக்க இரட்டை கோபுரங்களைப் போல, மும்பை முதலால் தெரு பங்குச் சந்தை கட்டடம் நொறுங்கி விழுவது போன்ற ‘கிராபிக்ஸ்' படங்கள் வெளியிட்டன. விமானத்தைக் கடத்தி பங்குச் சந்தை மேல் மோத வைத்தது இடதுசாரிகள்தான் என்பதையும் தெளிவுபடப் பேசின கட்டுரைகள். காங்கிரஸ் அரசாங்கத்தை இடதுசாரிகள் ஆதரிக்கப் போவதாக அறிவித்தவுடன் வில்லன்கள் யார் என்பது பட்டவர்த்தனமாகியது. எதிர்பார்த்தது போல் இல்லாமல் கதை திசை மாறியது. இரண்டு நாட்களில் சாய்ந்து தலைக்குப்புற விழுந்து கிடந்த பங்குச் சந்தை காளை, மீண்டும் எழுந்து நின்றுவிட்டது. 2.34 லட்சம் கோடி ரூபாய் மீட்டெடுக்கப்பட்டது.

Share market இந்திய மக்கள் தொகையில் 1.15 சதவிகிதம் பேர் மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்கள். மறுபுறம் இந்தியாவிலுள்ள 65 சதவிகித குடும்பங்களுக்கு வங்கிக் கணக்குகூட கிடையாது. இந்தியாவில் நடிகைகளின் தற்கொலைக்கு நம் ஊடகங்கள் காட்டும் பரிவும், அக்கறையும் இதுவரை நிகழ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளின் தற்கொலைக்கு கிடைத்ததில்லை. நடிகைகளின் வாழ்வு அவலம் நிறைந்தவைதான். நடிகையின் மரணம் அவலம் என்றால், அதைவிடக் கூடுதல் கவனம் காட்ட வேண்டிய விசயம், தினமும் கடனில் மூழ்கி பூச்சிக்கொல்லியை அருந்தும் விவசாயக் குடும்பங்களின் சாவுகள். விவசாயிகளின் தற்கொலைகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்திருக்க வேண்டும்; விவாதங்கள் நடந்திருக்க வேண்டும். இவை மூலம் உருவாகும் நெருக்கடிகள், அரசாங்கத்திற்குப் பெரும் கேள்வியாக உருவாகியிருக்க வேண்டும். ஆனால், காலத்தின் தேவைகளை ஊடகங்கள் உணர்ந்ததில்லை.

காலனிய வீழ்ச்சிக்குப் பிறகு மென்பொருள் தொழிற்சாலை அதிகப்படியான வளர்ச்சியைக் கண்டுள்ளது. சமூகத்தில் அதிகளவு வருமானம் பெறுபவர்கள் இவர்களே. மிகவும் அதிகமாக செலவு செய்யும் வர்க்கமாகவும் இவர்கள்தான் முதலிடத்தில் இருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் நாம் ஆடம்பரத்தின் உச்சங்களைப் பார்த்து வருகிறோம். நகர வாழ்க்கையின் பகட்டை அறிவிக்கும் விதமாக ஆடம்பரத் திருமணங்கள் நடைபெறுகின்றன. இந்திய அளவில் மாதவ்ராவ் சிந்தியா வீட்டுத் திருமணம், தமிழ் நாட்டில் ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணம் தொடங்கி, அண்மையில் நடைபெற்ற ‘சகாரா' குடும்பத் திருமணம், லட்சுமி மிட்டல் குடும்பத் திருமணம் என மனித நாகரிகம் தளைத்ததிலிருந்து இத்தனை ஆடம்பரங்களை இந்த பூமி கண்டிருக்காது. நடுத்தர குடும்பத்தின் திருமணச் செலவுகூட சாதாரணமாக சில லட்சங்களை எட்டிவிட்டது. ஆடம்பர மோகம் யாரை விட்டது.

ஆனால், கேரளாவின் வயாநாட்டில், ஆந்திராவின் அனந்தபூரில் தன் மகளின் திருமணத்தை நடத்த வேண்டிய காலகட்டம் நெருங்க, நடத்த இயலாமையில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை ஏறுமுகத்தில் உள்ளது. திருமணத்திற்காக காலமெல்லாம் சிறுகச் சிறுக சேமித்த பணத்தை பீ.டி. பருத்தியின் ஓராண்டு சாகுபடி விழுங்கி விட்டது. இந்திய கிராமங்கள் ‘முதிர்கன்னி'களின் வெப்பம் நிறைந்த மூச்சுக் காற்றில் அலைக்கழிந்து கொண்டிருக்கின்றன. கிராமங்களே தீர்ந்து காணப்படுகின்றன. தற்கொலைகள் கிராமங்களின் இயல்பைத் தின்று செரிக்கிறது.

உதவி கேள்; சிறையில் அடைபடு!


மதிலெத்தி தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார். தன்னுடைய மரணத்திற்கு முன்பு யாருக்காவது நன்மை கிடைக்கட்டும் என்று கருதிய அவர், ரத்ததானம் செய்ய செஞ்சிலுவை சங்கத்திற்குச் சென்றார். அவர்கள், ரத்தத்தை எடுத்துக் கொள்கிறோம்; ஆனால் பணம் எதுவும் தர முடியாது என்றனர். மதிலெத்திக்கு கோபம் கொப்பளித்தது. அவர்களிடம் இவர் பணம் கேட்கவேயில்லை. 11.8.2005 அன்று ரத்ததானம் செய்தார்.

Mathilethi மதிலெத்தி விவசாயக் கூலி அல்ல. அவர் 12 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் ஒரு குறு விவசாயி. தொடர்ந்து விவசாயம் செய்ததால், அவருக்கு மிஞ்சியது மூன்று லட்சம் கடன் மட்டுமே. மதிலெத்தி 12 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து வங்கி மூலம் கடன் வாங்கத் தயாராக இருந்தார். எனவே, ஆந்திர முதல்வரை சந்தித்து, அவர் கைப்பட மனு அளித்தார். இம்மனுவை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பதாக முதல்வர் கூறினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் யாரை சந்தித்து விசாரிப்பதென்று தெரியவில்லை. தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டார்.

தற்கொலை செய்யும் மனநிலையில் உள்ள விவசாயிகளுக்கு ஆதரவளித்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை அளிக்கும் தொலைபேசி உதவி மய்யம் ஆந்திராவில் உள்ளது. நம்பிக்கை இழந்த மதிலெத்திக்கு தொலைபேசி உதவி மய்யத்தின் விளம்பரம் கண்ணில் பட்டது. இம்மய்யத்தைத் தொடர்பு கொண்டு அதன் மண்டல வருவாய் அதிகாரியை சந்தித்தார். அவரோ வருவாய் ஆய்வாளர் தான் நிலைமையை விசாரித்து முடிவெடுப்பார் என்றார். இதில் விசாரிக்க என்ன இருக்கிறது? அவருக்கு வேண்டியது கடன். அடமான நிலப் பத்திரம் கையில் உள்ளது.

மதிலெத்தி கடனில்தான் உள்ளார் என்று வருவாய் ஆய்வாளர் சான்று வழங்கி, கடனுக்கு சிபாரிசு செய்ய மதிலெத்தியிடம் இரண்டாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டனர். மதிலெத்தியிடம் லஞ்சம் கொடுக்க பணம் இல்லை. அதன் பிறகு வருவாய் ஆய்வாளர் மதிலெத்தியின் கிராமத்திற்குச் சென்று அவரது வீட்டைப் பார்வையிட்டனர். இந்த அதிகாரிகள் பார்வையிட்டதால், இனி அந்த ஊரில் யாரும் அவருக்கு கடன் கொடுக்க முன்வர மாட்டார்கள்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மீண்டும் ஆட்சியரை சந்திக்க முயன்றார். மணிக்கணக்காகக் காத்திருந்தும் பயனில்லை. வேறுவழியின்றி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மயங்கி விழுந்தார். அங்குள்ள கடைநிலை ஊழியர்கள் அவரை உடனடியாக நிஜாம் மருத்துவ அறிவியல் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். நிலைமை மோசமானவுடன் பல உயர் அதிகாரிகள், மதிலெத்தியுடன் அன்று மருத்துவமனைக்கு நூறு கிலோ மீட்டர் தூரம் பயணித்தனர். இந்த அதிகாரிகளுக்கு பல மாதங்களாக மதிலெத்தியைச் சந்திக்க சில நிமிடங்கள்கூட கிடைக்கவில்லை. ஆனால், மருத்துவமனையில் அங்கிருந்த இரண்டு வாரத்திற்கு பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் செலவழித்தனர்.

மருத்துவம் முடிந்து வீடு திரும்பிய மதிலெத்தியை வீடு புகுந்து கைது செய்தது ஆந்திர காவல் துறை. அவர் மீது தற்கொலை முயற்சி வழக்கு போட்டது. காவல் நிலையத்தில் ஒரு நாளும், பதினைந்து நாட்கள் சிறையிலும் அடைத்தனர். ஊர்க்காரர்கள் பொது நிதி திரட்டி பிணையில் எடுத்தனர். இரண்டாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்திருந்தால், எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது என்பது சிலர் கருத்து. இன்னும் மதிலெத்தியின் விதை அறுவடை ஒப்பந்தம் நிலுவையில் உள்ளது.

- பி. சாய்நாத், ‘தி இந்து' நாளேட்டில்
இந்த அவலங்களுக்குத் தீர்வு காண பிரதமர் மன்மோகன் சிங், தேசிய விவசாயிகள் ஆணையத்தை அமைத்தார். ‘பசுமைப் புரட்சி'யின் பெயரில் இந்திய விவசாயத்தை நிர்மூலமாக்கிய எம்.எஸ். சுவாமிநாதன், அதன் தலைவராக நியமிக்கப்பட்டது வேடிக்கையின் உச்சம். இந்த ஆணையத்தின் முதல் கூட்டம் நிகழ்ந்ததே நம் ஊடகங்களுக்குத் தெரியாது. நாட்டின் இன்றைய சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமிது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது என்பது ஏதோ கிராமம் சார்ந்த பிரச்சனை அல்ல.

ஆயிரக்கணக்கான விவசாயிகளின் சாவு நோய் அல்ல; அது நோயின் அறிகுறி. எதிர்காலம் சந்திக்கப் போகிற மிகப் பெரும் அபாயத்தின் எச்சரிக்கை இந்தத் தற்கொலைகள். கூடிய கூட்டத்தில் ஏராளமான கருத்து மோதல்கள் நிகழ்ந்தன. எனவே, எந்த முடிவையும் எட்ட முடியவில்லை. வங்கி சார்ந்தவர்களையும் விவசாயிகளையும் நீங்கள் ஒன்றாக அமர வைத்தால், அங்கே கலவரத்தை தோற்றுவிக்கப் போகிறீர்கள் என்று பொருள். நெருப்புப் பொறிகள் பறக்கத்தான் செய்தன. விவசாயிகள், தொழிற்சங்கங்கள், வங்கி அதிகாரிகள், இன்சூரன்ஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், அறிவியலாளர்கள், பத்திரிகையாளர்கள் என எல்லோரும் இரண்டு செய்திகளை ஒப்புக் கொண்டனர். ஒன்று, இந்திய கிராமப்புறங்கள் கடந்த பத்தாண்டுகளில் கடும் அவலங்களை சந்தித்து வருகின்றன. இரண்டு, இந்த அவலங்கள் அனைத்தும் அரசின் கொள்கைகளால் ஏற்பட்டவை.

விவசாயத் துறையில் அரசு முதலீடு குறைந்ததே பல தளங்களில் பிரச்சனை உருவானதற்கான முதல் காரணம். கிராமப்புறங்களில் இயங்கி வந்த கூட்டுறவு வங்கிகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது. வங்கிகள் பின்வாங்க தனியார், தனிநபர் மற்றும் கந்து வட்டிக்குழுக்கள் உள்ளே நுழைந்தனர். நகரத்தில் நீங்கள் போர்டு, ஹ¤ண்டாய், மெர்சிடஸ் கார்களை 6 சதவிகித வட்டியில் வாங்கலாம். ஆனால், கிராமத்தில் டிராக்டர் வாங்க இதுபோல் மூன்று மடங்கு அதிக வட்டி செலுத்த வேண்டும்.

இந்தியாவில் கண்களில் பூச்சி பறக்க பசியில் தவிப்பவர்களின் எண்ணிக்கை 40 கோடி. மொத்த ஆப்பிரிக்காவிலுள்ள பசித்த வயிறுகளை விட, அதிகமானவர்கள் இங்கு வறுமையின் கோரப்பிடியில் உள்ளனர். இவை எல்லாம் இங்குள்ள ஊடகங்களுக்கு முக்கியச் செய்திகள் அல்ல. ஆறுதல் அளிக்கும் செய்தியாக உச்ச நீதிமன்றம், ஆறு மாநில அரசுகளை பட்டினிச் சாவுகளைத் தடுக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டியுள்ளது. குளிர் சாதன அறையிலமர்ந்து வம்பளக்கும் உள்துறை செயலர்கள்தான் தனிப்பட்ட முறையில் பொறுப்பு எனவும் கூறுகிறது உச்ச நீதிமன்றம். உலகில் அய்ந்து நொடிகளுக்கு ஒரு குழந்தை பசியால் துடித்து செத்துக் கொண்டிருக்கிறது. இதில் பெரும் பகுதி குழந்தைகள் இந்தியர்கள். விவசாயிகள் மட்டுமல்ல, நெசவாளர்கள், தச்சர்கள் என கிராம சமூகத்தினர் பலரும் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவில் அதிகளவு தற்கொலை நிகழ்ந்த மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரபாபு (நாயுடு)வை இந்த ஊடகங்கள் தலையில் வைத்துக் கொண்டாடி, அவரை ‘முன்மாதிரி முதல்வர்' என அறிவித்ததையும் மறந்துவிடக் கூடாது.

விவசாயிகளை, விவசாயக் கூலிகளை அந்த வேலைகளிலிருந்து அப்புறப்படுத்துவது திட்டமிட்டு நிகழ்த்தப்படுகிறது. கடனில் மூழ்கியவர்கள் இரவோடு இரவாக சட்டி பானைகளுடன் கிராமங்களிலிருந்து பதுங்கி வெளியேறுகிறார்கள். பல பேருந்து நிலையங்களில் கூட்டம் கூட்டமாக நீங்கள் இவர்களைக் காணலாம். இதில் முதல் முறையாகப் பேருந்தில் ஏறுபவர்கள் ஏராளம். பேருந்து நிலையங்களை ஒட்டிய தேநீர்க் கடைகள் அருகே தலையைப் பிடித்து வாந்தி எடுத்துக் கொண்டு, கைக்குழந்தைகளுக்கு வட்டையில் பால் ஆறவைக்கும் காட்சிகள் மனதில் ரணமாய்ப் பதிகிறது. பேருந்துகளும் ரயில் பெட்டிகளும் இவர்களை சுமந்து கொண்டு எங்கு செல்வது என அறியாது குழம்பிக் கிடக்கின்றன. இந்த இடப்பெயர்வுகள் மூலம் ரயில்வேயும், போக்குவரத்துத்துறையும் அதிகப்படியான லாபங்களை ஈட்டி வருகின்றன.

Widow ஊடகங்கள் எங்கே திசைமாறின? ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட்ட வரலாறு உள்ளதா? மிகவும் மங்கலான சித்திரமே மிஞ்சுகிறது. மேட்டிமைத்தனம், அலட்சியம், பேராசை மட்டுமே இன்று மந்திரங்களாக மிஞ்சியுள்ளன. எளிய குரல்களை அலட்சியப்படுத்திக் கொண்டே இருக்கிறது நம் ஊடகங்கள். சமூகத்தின் விளிம்பு எதார்த்த நிலையுடன் இயங்கத் துடிக்கும் பத்திரிகையாளர்கள்கூட நொ¡ந்து போய் உள்ளனர். சூழ்நிலையைக் கையாள முடியாது திணறுகின்றது இந்திய ஊடகங்கள். உலகமயத்துடன் பத்திரிகைகளில் ஒருவித கொண்டாட்ட மனோபாவம் தொற்றிக் கொண்டது. எல்லாம் கொண்டாட்டம் - எல்லாம் வெற்றி. அவர்களின் கணிப்புப்படி எல்லா வெற்றிகளும் உலக மயத்தின் பலன், எல்லா தோல்விகளும் நம் தேசம் சார்ந்தவை. சுரண்டல் அடிமைத்தனம், ஜாதியம், அடக்குமுறை எனப் பல சொற்கள் பெரு ஊடகங்களின் அகராதிகளிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றன. பொதுவாக, இன்று பொதுமக்களிடையே ஒரு நம்பிக்கை திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. திறனற்ற அரசாங்கங்கள்தான் தேசம் தறிகெட்டுப் போனதற்கு காரணம்; அதனால் அரசாங்கத்தின் பங்களிப்பு எவ்வளவு குறைகிறதோ அவ்வளவு இழப்பீடும் குறைவு. எல்லாவற்றையும் தனியார் வசம் ஒப்படைத்துவிடலாம்.

மேற்கூறிய இந்த முட்டாள்தனங்களை நீங்கள் கேள்வி கேட்க முயன்று பாருங்கள். கணப்பொழுதில் நீங்கள் ஜோல்னாகாரர், ஏழைகளின் மாபியா, காம்ரேட், பொருளாதார நிபுணர் என முத்திரை குத்தப்படுவீர்கள். இவைகளை எல்லாம் உங்கள் மூளைகள் யோசிக்காமல் நீங்கள் நாளை பன்னாட்டு நிறுவன பத்திரிகையாளர் சந்திப்புகளுக்குச் சென்று காஜு கத்லி, பெர்கர், பீசா தின்ற கையை நக்கிக் கொண்டு ‘பெப்சி' குடித்துவிட்டு, அவர்கள் கொடுக்கும் அறிக்கைகளை செய்திகளாக மாற்றினால், நீங்கள் வெற்றிகரமானப் பத்திரிகையாளர். ஊடகங்கள் தங்கள் திசைமானிகளைத் தொலைத்துவிட்டு, திக்குத் தெரியாமல் திரிந்து கொண்டிருக்கின்றன. தொண்டாகத் தொடங்கியது தொழிலாக மாறி, தனது கோரப் பற்கள் நீண்டு நிற்கிறது. சுதந்திரத்திற்கு முந்தைய ஊடகங்களுக்கு நோக்கமிருந்தது. இன்றைய ஊடகங்களுக்கு கொண்டாட்டம், கேளிக்கை மட்டுமே மிஞ்சி நிற்கிறது. உலகமயத்திற்குப் பிறகான மாற்றங்களில் எல்லா நாளிதழ்களும், புத்தகங்களும் ஒரே மாதிரியாய் மாறிவிட்டன. ஊடகங்களுக்கு இருக்கும் கொடிய நோய் தீர்க்கப்படும் எல்லைகளுக்குள்தான் உள்ளது. பொது மக்களின் அக்கறையுடனான பங்களிப்புதான் இதனைத் தீர்வு நோக்கிச் செல்ல உதவும். மக்களின் பங்களிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

ஊடகங்களில் விவசாயிகளின் தற்கொலை குறித்து விரிவான உரையாடல்கள் வேண்டும். சென்னையில் நடக்கும் அழகிப் போட்டிகள் மட்டுமல்ல; உலகின் பிற பகுதிகளில் நடைபெறும் அழகுப் போட்டிகளையும் இங்குள்ள பத்திரிகைகள் தலைப்புச் செய்தியாக்குகின்றன. நட்சத்திர இரவுகளின் செய்தி, சுவாசத்திற்கு ஒப்பாக வெளியிடப்படுகிறது. அச்செய்தி மொத்தத்தில் 50 ஆயிரம் வார்த்தைகளாக அச்சேறுகிறது. 500 நிமிட தொலைக்காட்சி நிகழ்வுகள், 300 மணி நேர காட்சிகளாகப் படம் பிடிக்கப்படுகின்றன. இந்தியா இவர்களுக்கு மட்டுமே ஒளிர்கிறது. பங்குச் சந்தை இவர்களின் குல தெய்வம். தடைகளற்ற சுதந்திர வர்த்தகம், பணக்காரர்களின் சோசலிசமாகக் கருதப்படுகிறது. தொழில் தனது எல்லா அறநெறிகளையும் தொலைத்து ரத்தம் குடிக்கும் காட்டேரி போல் மாறி நிற்கிறது. நடப்பிலுள்ள மனிதத் தன்மையற்ற பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக வாக்களித்த பின்னும் மீண்டும் உலகமயத்தை முன்னெடுத்துச் செல்லும் அடிமைத்தன அணுகுமுறைகளே கூச்சமற்றுப் பின்பற்றப்படுகின்றன. மத்திய நிதி அமைச்சர்கள், உலகவங்கி இசையின் தாளவாத்தியத்துக்கு அடி தப்பாமல் ஆடுகிறார்கள்.

விருதுநகர் மாவட்டத்தின் கமிஷன் மண்டியில் எள்ளின் விலை கிலோ எட்டு ரூபாய்; தரமான எள் கிலோ ரூபாய் பத்து. இந்த எட்டும் பத்தும்தான் இந்திய விவசாயிகள் சாவை அறிவிக்கும் எண்கள். ஆனால், அதே விருதுநகரிலிருந்து தொலைக் காட்சியில் வண்ணமயமான விளம்பரங்களில் நடிகைகள் நடனம் ஆட, அந்த நல்லெண்ணெய் விலை கிலோ 80 ரூபாய். இந்த 80 ரூபாய்தான் பங்குச் சந்தையின் பொலிவான அறிகுறி. பஞ்சாப் மாநில ராம்கர்ஹன் விவசாயி அரும்பாடுபட்டு வியர்வை சிந்தி விளைவிக்கும் உருளைக்கிழங்கை, கம்பெனி ஆட்கள் ரகம் பார்த்து அவர்களது அறுவை எந்திரத்தில் பொருந்தக் கூடிய உருளைக்கிழங்கை மட்டும் கை பார்த்து விலைக்கு வாங்குகிறார்கள். விளைச்சலில் கால் பங்கைக் கழித்து விடுகிறார்கள். அப்படி அவர்கள் வாங்கும் விலை கிலோவுக்கு 80 பைசா முதல் 120 பைசா வரைதான். அதே கிழங்கு சிப்ஸ், கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் கொரித்துக் கொண்டு நமக்கு சாப்பிட சிபாரிசு செய்யும் பொழுது, அதன் விலை கிலோவுக்கு 500 ரூபாய். அந்த சிப்ஸ் பாக்கெட்டை 10 ரூபாய்க்கு வாங்குபவர்களிடம் அதில் எத்தனை கிராம் உள்ளது எனக் கேட்ட பொழுது யாருக்கும் தெரியவில்லை. அந்த பாக்கெட்டில் உள்ளது வெறும் 18 கிராம் மட்டுமே. வாங்கும் பொருளின் அளவுகூட தெரியாத மயக்கம்; மந்தைத்தனம்.

லண்டனில் இந்திய காப்பித்தூள் தான் விலை அதிகமானது. அங்குள்ள சாமானியர்கள் இந்திய காப்பித்தூளை வாங்க இயலாது. இங்கு கேரளாவில் காப்பித் தோட்டங்களில் பணிபுரிபவர்களும், சிறு விவசாயிகளும் தற்கொலை செய்து கொள்வதற்கு நாம் சாட்சியாக இருக்கிறோம். இந்த ஒட்டு மொத்த சோகம், அவலம் மனிதன் உருவாக்கிக் கொண்டவையே. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் சீனாவிலிருந்து பல பொருட்கள் இந்திய சந்தைக்கு வர இருப்பதாக செய்திகள் வந்தன. அப்போது மக்களிடையே அதிகமான தகவல் பரிமாற்றங்களை காண முடிந்தது. இன்டர்நெட்டில் தங்களுக்கு விலைப்பட்டியல் வந்திருப்பதாக பலர் கையில் அச்சடித்த துண்டறிக்கைகள் வைத்திருந்தார்கள். சந்தைக்கு வர இருக்கும் பொருள்கள், அதன் விலைகள் என அந்தப்பட்டியல் நடுத்தர மற்றும் உழைக்கும் வர்க்க மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தங்கள் வாழ்வின் ஏக்கம் நனவாகப் போவதைப் போல, மகிழ்ச்சியின் அலைகள் திசையெங்கும் பரவின.

Farmers selling goods சைக்கிள் ரூ. 200, பிரிட்ஜ் ரூ. 500, டூவிலர் ரூ. 1,800, கார் ரூ. 28,000, கோழிக்கறி ரூ. 5, ஆட்டுக்கறி ரூ. 12, ரேடியோ ரூ. 20, தொலைக்காட்சி ரூ. 350 என அது 80 பொருட்கள் அடங்கிய பெரிய பட்டியல். சீனக்கார்கள் சென்னையில் ஓடிக் கொண்டிருப்பதாக மதுரையில் பேச்சு. சீன இரு சக்கர வாகனம் திருநெல்வேலியில் ஓடுகிறது; சீன சைக்கிளை மடக்கி வீட்டுக்குள் எடுத்துச் செல்லலாம் என விதவிதமான தகவல்கள். அந்தந்த ஊரில் பலர் சில திருமண மண்டபங்களைக் கட்டி, இதுக்கு சீனாக்காரர்கள் முன்பணம் கொடுத்து விட்டதாகவும், அவர்களைப் பார்த்ததாகவும் தகவல்களை மிகுந்த விவரிப்புடன் தெரிவித்தார்கள். விசாரித்த பொழுது, இந்தியா முழுமையிலும் இந்தத் தகவல்கள் ஒரே நேரத்தில் வலம் வருவதை உறுதிப்படுத்த முடிந்தது. அந்த நேரத்தில் கார், இரு சக்கர வாகனங்களின் விற்பனை ஏறக்குறைய நின்று போனது. பிறகு என்ன சொல்லவா வேண்டும்? படையெடுத்து விட்டார்கள் இந்திய முதலாளிகள். அப்போதைய தொழில் துறை அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைச்சர் வாக்குறுதிகள் அளித்தார். இந்திய ஊடகங்கள் முதலாளிகளுக்கு ஆதரவாக செய்திகள் மற்றும் கட்டுரைகளை மளமளவென வெளியிட்டன. இருந்தும் மக்கள் மனங்களில் படிந்திருந்த நம்பிக்கையை அழிக்க முடியவில்லை.

தங்கள் தொழில் பாதிக்கப்பட்டுவிடும் என்றவுடன் அமைச்சரை முற்றுகையிட்டு, இந்திய முதலாளிகள் பேரங்கள் நடத்தினார்கள். ஆனால், அதே சீனாவிலிருந்தும் மற்ற பல நாடுகளிலிருந்தும் இந்திய சந்தை விலையைவிட கிலோவுக்கு 50 காசு, 25 காசு விலை குறைந்தவுடன் பூண்டு, வெங்காயம் எனப் பல விவசாய விளைபொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இங்கு நம் மண்ணில் விளைந்த தக்காளி, வெங்காயம், பருத்தி என சந்தைக்கு ஏற்றி வந்த விளைச்சலை அப்படியே ஊருக்குள் கொட்டிவிட்டு வண்டி வாடகைக்கு கடன் வாங்க நகரம் முழுக்க அலையும் மனிதர்கள் எதிர்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

எழவு விழாமல் வேறு என்ன விழுகும்? இதன் மூலம் ஒரு செய்தி பட்டவர்த்தனமாகிறது. இந்த விவசாயிகளுக்காக பேரங்கள் நிகழ்த்த, அவர்களுக்கான வலுவான அமைப்பு இல்லை என்பதுதான். விவசாயம் தொடர்புடைய எல்லா செய்திகளையும் அறிவுஜீவிகள் உருவாக்குகிறார்கள். நாள்தோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இடம் பெயர்கிறார்கள் சொந்த நாட்டில் அகதிகளாய். மத்தியப் பிரதேச சவயபானி கிராமத்தில் கடந்த ஆண்டில் பத்து ரூபாய் கூலிக்கு 9 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்துள்ளது. ஆம்! இந்தியா தனது கிராமங்களில் தினம் தினம் செத்துக் கொண்டேயிருக்கிறது. பங்குச் சந்தை காளை மட்டும் கொழுத்துத் திரிகிறது.

நன்றி: Locus interrupts – Jeremy Seabrook,
The Media – Prem Bhatia, Lost the Compass – P.Sainath



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com