Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
 width=
 width=மார்ச் 2009

மாற்றுப்பாதை
-
யாழன் ஆதி

""எப்படி ஒன்றாய்
வளர்க்கப் போகிறோம்
இந்த முற்றத்தில்
சோறு போடும் பன்றிகளையும்
நீ கொண்டு வரும்
முல்லைச் செடிகளையும்''
மதிவண்ணன் மிகவும் அமைதியானவர். அவருடைய அமைதி கடலின் ஆழத்தைப் போன்றது. கடல் தன் ஆழத்தில் எத்தகைய தரவுகளை, நுட்பங்களை, குமுறல்களை வைத்திருக்குமோ அதைப் போன்றதொரு ஆளுமைதான் மதிவண்ணன். அவர் அமைதியாக நடத்தும் உரையாடல்கள் சுருள் அலைகளாய் வரக்கூடியன. அவருடைய இடையறாத வாசிப்பும் சமூகத்தின் மீதான அவதானிப்பும், படைப்பின் கூர்மையை செதுக்கிக் கொண்டே இருக்கின்றன. பொதுமையான வாழ்வின் பரப்பில் தலித் வாழ்க்கை பெரும் பாரமாய் இருக்கும் சூழலில், அவருடைய எழுத்தின் கூர்மை கோடைக் காலத்து சூரியக்கதிர்களைப் போன்றவை. அவரைப் படித்தவுடன், அடிவயிற்றில் ஒரு குற்ற உணர்வுடனான பீதி உருவாவதை எவரும் உணராமல் இருக்க முடியாது.

மே 2002இல் வெளிவந்த மதிவண்ணனின் "நெரிந்து' ஆற்றொண்ணாத கோபத்துடனும், அதே நேரத்தில் நேர்த்தியான வார்த்தைகளின் பின்னலாகவும் தலித் கவிதைத் தளத்தில் அதிர்வினை ஏற்படுத்தியது. எதிர்நிலையில் நின்று கேட்கும் அவருடைய இருப்பு, எவராலும் எதிர்கொள்ள முடியாததாக இருந்தது. அக்கேள்விகளின் வெம்மை, உண்மையின் வடிவமாகவே இயங்குவதால் மதிவண்ணன் எவராலும் மறுக்க முடியாத ஆளுமையாக அறியப்பட்டார்.

""ஆகப்போவதொன்றுமில்லை
எல்லா எத்தனமும் வீணே
யெனினும் / முளையொன்றோடு பிணைத்துன் /
கழுத்தைச் சுற்றிக் கிடக்கும்
வலிய சங்கிலியின் / இரும்புக் கண்ணிகளைக் கடித்துக்
கொண்டாவது இரு.''
விடுதலைக்கான கருத்தியலை அதன் எல்லா வகை சாத்தியங்களோடும் விதைத்துக் கொண்டேயிருக்கிறது, மதிவண்ணனின் எழுத்துகள். கவிதையில் அவர் பயன்படுத்தும் சொற்கள் அவருடைய வாழ்வின் பின்புலத்திலிருந்து எழுந்து வருபவை. தலித் என்னும் பொது நிலையிலிருந்து மீறி மேலும் அடக்கப்பட்ட இனக்குழுவாக அடையாள மீட்பு செய்யப்பட வேண்டிய அருந்ததியர்களின் வாழ்வின் விழுமியங்கள் அல்லது கேள்விகள் என்பவை, அவருடைய உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன.

மதிவண்ணனின் கவிதைகள் பேசுகின்ற உள்ளீடான பொருள், இந்து மதத்திற்கு எதிரானது. அந்த வகையில் ஒரு தலித் ஆக்கம் எதைச் செய்ய வேண்டுமோ, அதை மிகச் சரியாக செய்கிறது. பெருதெய்வம், சிறுதெய் வம் என்னும் சாதிய அடையாளங்கள், சாமிகளுக்கும் கற்பிக்கப்பட்ட கப டத்தை மிகத் தெளிவாகக் காட்ட வல்லன மதிவண்ணனின் ஆக்கங்கள். அந்த அரசியல் என்பது மட்டும்தான் தங்களையும் இந்துவாக உணரும் தலித்துகளை அல்லது தங்களுக்கு கீழும் சாதிகள் இருக்கின்றன என்னும் அவர்களின் அர்த்தமற்ற நம்பிக்கைகளையும் விசாரிப்பின் வட்டத்திற்குள் நிறுத்துகிறது.

அவருடைய "நமக்கிடையிலான தொலைவு' என்னும் இரண்டாம் கவிதைத் தொகுப்பில், ""தீட்டாகும் நாளென்று/வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறாய்/குறுகுறுப்புடன் பம்முகிறது/கர்ப்பகிரகம்/மீசை இழந்து நிற்கும் தேவனருகில்/ கால்களை நெருக்கிச் சேர்த்து / தொடைகளை இறுக்க அழுத்திக் கொண்டு / சங்கடத்தில் நிற்கின்றனர் / தேவியர் அந்த அரையிருட்டில்''

தீட்டு என்னும் சொல்லொன்றால் புறந்தள்ளப்பட்ட உடல்களின் கொடு மைகளை வெளிப்படுத்துகிறார். அது தலித்தாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், இதுவரை இவர்களைப் புறந்தள்ளியே பார்க்கும் மதவாத அரசியலை, கக்கூசில் தவறி விழுந்த முன்னோர்களின் செருப்புத் தைக்கும் ஊசியால், கவிதை கட்டத் தெரிந்திருக்கும் அவரது பேனாவால் நிமிண்டுகிறார்.

அகம், புறம் என விரிந்து கிடக்கும் தமிழ்க் கவிதைக்கான வெளியில், மிகச் சரியான நீட்சியாக அவருடைய எழுத்து தம்மை மாற்றிக் கொள்கிறது. கவிதைக்கான சொற்களை அவர் தேர்ந்தெடுக்கும் பாங்கு கவனிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியது. அவருடைய சொற்கள் செவ்வியல் இலக்கியச் சொற்கள். தேவைப்படும் பட்சத்தில் அவர் பயன்படுத்தும் தலித் வாழ்வியல் சொற்கள் வசவு சொற்களாகவும் இருக்கும். தலித் அழகியலின் ஓர்மையை அந்தச் சொற்கள் தருகின்றன. ஆனால் விமர்சகர்களால் அவை பொறுத்துக் கொள்ள முடியாதவையாக இருக்கின்றன. அவற்றையும் கடந்து அவர் கவிதையில் தொனிக்கும் எள்ளல், அரசியலை மய்யப்படுத்தியது ஆகும்.

தங்கள் கவிதைகளைப் பற்றி "நவீன கவிதையின் தாத்தா'வாகக் கருதப்படும் ஞானக்கூத்தன், "விமர்சன சாம்ராட்' வெங்கட் சாமிநாதன், சுஜாதா போன்றவர்கள் ஒரு வார்த்தை கூறிட மாட்டார்களா என சில எழுத்தாளர்கள் ஏங்கிக் கிடக்கையில், அவர்களை எள்ளுவது எதிர் நிலை அழுத்தத்தை உருவாக்குகிறது. எடுத்துக்காட்டாக, ஞானக்கூத்தனின் வரிகளான "தமிழ்தான் எனக்கும் மூச்சு. ஆனால் நான் அதைப் பிறர் மேல் விட மாட்டேன்'' என்னும் ஆதிக்க வரிகளை மிக நுட்பமாக மதிவண்ணன் நெட்டித் தள்ளுவார்.

""நாற்றமெடுக்கும் குசுவை / பிறர்மேல் தாராளமாய் விடும் நீ / மூச்சை மட்டும் விடாமலிருப்பதில் / ஒளிந்துள்ள / அக்ரஹார ஆச்சாரம் / எனக்குத் தெரியாததாலும்...'' என்று எழுதுவார். "சாதியமும் சில தின்னுட்டு பேண்டான்களும்'

என்னும் கவிதையை வெங்கட்சாமிநாதனுக்கும் என்று "உம்' என்னும் இழிவு சிறப்பும்மையை போட்டுக் காட்டுவதில் மதிவண்ணனின் மொத்த இலக்கியக் கோட்பாடும் விளங்கி விடும்.

காதல் கவிதைகளை எழுதும்போது, அவருடைய உயர்ந்த அன்பும் அதற்காக அவர் பயன்படுத்தும் உத்தியும் கூட, தமிழ்க் கவிதை உலகில் மதிவண்ணனுக்கு என்று தனி இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஒரே தொகுப்பில் அகம், புறம் சார்ந்த கவிதைகள் தொகுக்கப்படும்போது, அவற்றிற்கிடையிலான மென்மையான அதே நேரத்தில் ஆழ்ந்த வேறுபாட்டை நாம் மதியின் கவிதைகளில் உணரலாம். காதல் சார்ந்த அவருடைய அகமனக் கவிதைகள், மெல்லிய பூடகத்தை தனக்கே உரித்தான உணர்வினை வெளிப்படுத்தும்.

மதிவண்ணனின் கவிதைகள் மட்டுமல்ல, அவருடைய கட்டுரைகளும் தமிழ் உலகம் உன்னிப்பாக கவனித்துப் பேசப்படக் கூடியன. அவருடைய விமர்சனங்கள் நேரில் நின்று கேள்விகளைத் தொடுக்கும் ஒரு கலகக்காரனின் உயரும் குரலுக்கு நிகரானது. அவரின் மாறுபட்ட வாசிப்பு எப்படி தான் சார்ந்திருக்கும் சமூகத்தின் வாழ்வியலை தூக்கிப் பிடிக்கிறது என்பதை அவற்றை வாசித்துக் கொண்டிருக்கும்போதே உணரலாம். பெரியார் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு அவர் தந்த பதிலடிகள் அப்படித்தான் இருந்தது. இப்போதிருக்கும் திராவிட கட்சிகளின் செயல்பாடுகளிலிருந்தோ, பெரியார் பேசியதை முன்பின் தொடர்பின்றி மேற்கோள் காட்டியோ பெரியாரின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் தலித்துகளுக்கு எதிரானவை என்று சொல்லிவிட முடியாது என்பதை அவர் நிறுவினார்.

"புதிய தடம்' சூலை – செப்டம்பர் 2003 இதழில், அவர் எழுதிய அயோத்திதாசரின் பார்ப்பனியச் சிந்தனைகள்

என்னும் கட்டுரை, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. அதன் மூலம் தலித்துகள் தங்களின் உட்

சாதிக்குள்ளேயே சிந்தித்துக் கொள்ள முடியாது என்ற அவரின் கருத்து, பெரும்பான்மையான தோழர்களை, அயோத்தி

தாசரை மறுவாசிப்பு செய்ய வைத்தது. சுந்தர ராமசாமியால் மொழிபெயர்க்கப்பட்ட "தோட்டியின் மகன்' என்னும் தகழியின் நாவலைக் குறித்த மதியின் கூர்த்த பார்வை, தகழி உட்பட மொழிபெயர்ப்பாளரின் தலித்துகள் குறித்த பொதுப் புத்தியை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அது மட்டுமல்ல, மலையாளத்தில் அந்த நாவல் வெளிவந்து அய்ம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மொழிபெயர்க்கப்பட்டு வெளியாவதின் வர்த்தக நோக்கத்தையும் தமிழுலகிற்கு வெளிப்படுத்தியது. இலக்கியம், கவிதை, நாவல்கள் என அவருடைய கட்டுரைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

ஆறு சதவிகித உள் ஒதுக்கீட்டிற்கான நியாயங்கள் நிறைந்த அவருடைய எழுத்து காலத்தால் அழியாதது.

உள் ஒதுக்கீட்டிற்காக ஆந்திராவில் நடத்தப்பட்ட "மாதிகா'க்களின் "தண்டோரா' இயக்கச் செயல்பாடுகளை தமிழுக்கு

ஆவணமாக்கித் தந்துள்ளார். ஊடகங்கள், பிற தலித் இயக்கங்கள் உள் ஒதுக்கீட்டை எதிர்க்கும் குதர்க்க அரசியலை, மிக நேர்த்தியாக தன் எழுத்தில் பதிவு செய்கிறார் மதிவண்ணன்.

"நெரிந்து', "நமக்கிடையேயான தொலைவு' ஆகிய கவிதைத் தொகுப்புகளும், "வெளிச்சங்களைப் புதைத்த

குழிகள்', "உள் ஒதுக்கீடு : சில பார்வைகள்', "அருந்ததியர்களாகிய நாங்கள்', "உள் ஒதுக்கீட்டை விழுங்க ஊர்ந்து வரும்

பாம்புகள்' போன்ற நூல்களை எழுதியிருக்கும் மதிவண்ணன், ஈரோடு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் "எக்ஸ்' கதிர்கள் பிரிவில் பணியாற்றுகிறார். இவர், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்.

ஓர் எழுத்தாளனின் கருத்து, கற்பனாவாதங்களைக் கடந்து உண்மையாக இருக்க வேண்டும் என்பது மதிவண்ணனின் ஆதங்கம். தன் ஆக்கத்திற்கும் தன் சமூகத்திற்கும் மிக உண்மையாக இருப்பதே மதிவண்ணனின் சிறப்பு. மதிவண்ணனை கண்டு கொள்ளாமல் தவிர்க்கும் தமிழிலக்கிய உலகின் போக்கு, தமிழுக்கு ஆகப்பெரிய இழப்பு.

- யாழன் ஆதி


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com