Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
 width=
 width=மார்ச் 2008

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 3
சு.சத்தியச்சந்திரன்

“காவல் துறையினரும் மாஜிஸ்ட்ரேட்டும் சில நேரங்களில் லஞ்சப் பேர்வழிகளாக உள்ளனர். லஞ்சம் வாங்குவோராக மட்டும் இருந்தால் நிலைமை ஒருவேளை இவ்வளவு மோசமாக இல்லாமலிருக்கக்கூடும். ஏனென்றால், இரு தரப்பினரில் யார் வேண்டுமானாலும் அவரை விலைக்கு வாங்கிவிட முடியும். ஆனால் கெடு வாய்ப்பு என்னவென்றால், காவல் துறையினரும் மாஜிஸ்ட்ரேட்டுகளும் லஞ்சப் பேர்வழிகள் என்பதைவிட, அதிகமாக பாரபட்சக்காரர்களாக உள்ளனர். அவர்கள் இவ்வாறு இந்துக்களிடம் பாரபட்சமாகவும் தீண்டத்தகாதவர்களிடம் பகைமை உணர்வுடனும் நடப்பதால்தான் - தீண்டத்தகாதவர்களுக்குப் பாதுகாப்பும் நீதியும் மறுக்கப்படுகின்றன''
- டாக்டர் அம்பேத்கர், "நிர்வாகத்தின் எதிர்ப்பு நிலை' என்ற கட்டுரையில்

Raja's mother ரஞ்சித், விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி.நல்லாம் கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர். அவரும் அவருடைய தமக்கை லட்சுமியும் 20.1.1996 அன்று மாலை பிடாரிப்பட்டு கிராமத்து வயல்வெளியில் முயல் வேட்டைக்குச் செல்கின்றனர். அங்கு முயல் பிடிப்பதற்கான வலையை விரித்துவிட்டு முயல்களின் வருகைக்கு காத்திருக்கின்றனர். அப்போது அங்கு வந்த கோடக்கவுண்டர், ரங்கநாதன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய வன்னியர் சாதியைச் சேர்ந்த நபர்கள் லட்சுமியை காம இச்சையுடன் பார்க்கின்றனர். இவர்களிருவரும் வலைக்கு அருகேயுள்ள களத்தில் படுத்திருக்கின்றனர்.

இரவு 10 மணியளவில் லட்சுமியை ஒருவர் பின்புறமிருந்து குச்சியால் தட்ட அவர் விழித்தெழுகிறார். கண்விழித்துப் பார்த்தால் தலைப்பக்கமாக ஒருவரும், காலருகே ஒருவரும் நின்று கொண்டிருக்கின்றனர். மூன்றாவது நபர் லட்சுமியின் வலது பக்கம் நிற்கிறார். தலைமாட்டருகே நின்றிருக்கும் நபர் “எங்களுடன் வந்து சந்தோஷமாக இரு'' என்று லட்சுமியை நோக்கிச் சொல்ல, லட்சுமி கூச்சலிடுகிறார். அவர் எழுந்து கொள்ள முயலும்போது ஒருவர் லட்சுமியின் கைகளைப் பிடித்துக் கொண்டும், இன்னொருவர் கால்களைப் பிடித்துக் கொண்டும், மற்றுமொருவர் லட்சுமியின் முதுகைப் பிடித்தும் தூக்கிச் செல்கின்றனர்.

லட்சுமியின் அலறல் கேட்டு ரஞ்சித் எழுந்து அந்நபர்களைத் தடுக்கிறார். லட்சுமியின் கையையும் முதுகையும் பிடித்துத் தூக்கிக் கொண்டிருந்த இருவரும் தங்கள் பிடியைத் தளர்த்தி லட்சுமியை கீழிறக்கிவிட்டு, ரஞ்சித் தங்களைத் தடுக்கக் கூடாது என்று கூறி ரஞ்சித்தை கழிகளால் தாக்குகின்றனர். இதற்கிடையில், லட்சுமியின் வயிற்றின்மீது அமர்ந்திருந்த நபரின் கண்களில் லட்சுமி மண்ணை அள்ளி வீசுகிறார். அந்நபர் இத்தாக்குதலிலிருந்து மீள்வதற்குமுன் லட்சுமி தப்பித்து ஒரு புதருக்குப் பின்னே ஒளிந்து கொள்கிறார். ரஞ்சித் தான் இறக்கப் போவதாகவும் தன்னைக் காப்பாற்றும்படியும் கூச்சலிடுகிறார். சிறிது நேரத்தில் ரஞ்சித்தின் குரல் அடங்கிவிடுகிறது.

இரவு முழுவதும் லட்சுமி புதருக்குப்பின்னே மறைந்து கொண்டிருக்கிறார். விடிந்ததும் தேடிப் பார்த்தால், ரஞ்சித்தை காணவில்லை. முயல் பிடிப்பதற்காக அவர்கள் விரித்திருந்த வலையும், அவர்களுடைய உணவுப் பாத்திரமும் கூட காணவில்லை. அருகில் தேடிப் பார்த்துவிட்டு லட்சுமி ஊருக்குத் திரும்பி கண்ணம்மாள், பச்சையம்மாள், காசியம்மாள் ஆகியோரிடம் நடந்ததைக் கூறுகிறார். ஆண்கள் யாரும் அப்போது இல்லாததால் மேற்கொண்டு என்ன செய்வதென அவர்கள் குழப்பமடைகின்றனர்.

மறுநாள் 21.1.1996 மாலை 4 மணியளவில் பிடாரிப்பட்டியிலிருந்து வந்த ஒருவர் கிராமத் தலைவரின் நிலத்திலுள்ள கிணற்றில் ரஞ்சித்தின் பிணம் கிடப்பதாகச் சொல்கிறார். பிணத்தைப் பார்த்தபின், லட்சுமி கஞ்சனூர் காவல் நிலையத்தில் கொடுக்கும் புகாரின் பேரில் லட்சுமியிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டது (இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 354), சொற்ப காயம் விளைவித்தது (இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 302) ஆகியவற்றிற்காக மேற்கூறிய மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவுகள் பயன்படுத்தப்படவில்லை என்பதோடு, வழக்கை காவல் ஆய்வாளரே புலன்விசாரணை செய்து வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் எந்தக் குற்றமும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை என்று காவல் ஆய்வாளர் வழக்கமான ஒரு கொலை வழக்காகவே கையாண்டார். இச்சூழலில்தான் பாதிக்கப்பட்டோருக்கு சட்ட உதவி வழங்கிவந்த திண்டிவனம் பேராசிரியர் கல்யாணி இது குறித்து தக்க சட்ட நடவடிக்கை தேவை என்று கருதி, வழக்குரைஞர் பொ. ரத்தினத்தை அணுகினார். அவருடன் இக்கட்டுரையாளரும் ஆலோசித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரஞ்சித்தின் மனைவி மாரியம்மாள் சார்பில் ஒரு குற்றவியல் மனுவை தாக்கல் செய்தனர்.

ரஞ்சித்தின் குடும்பத்தினருக்கு 1.5 லட்சம் தீருதவித் தொகையை (Relief Amount) வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளின் படி வழங்கிட உத்தரவிட வேண்டுமென்றும், அதே விதிகளின்படி துணைக்காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு குறையாத அலுவலரை வழக்கின் புலன்விசாரணையை மேற்கொள்ளவும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவுகளை வழக்கில் சேர்த்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் அம்மனுவில் கோரப்பட்டது. அம்மனுவை இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி எஸ்.எம்.சித்திக் 19.2.1998 அன்று வழங்கிய தீர்ப்பில், மனுவில் வைக்கப்பட்டிருந்த மேற்படி கோரிக்கைகளை ஏற்று அதன்படியே உத்தரவிட்டார் (Mariammal, Vs. State of Tamil Nadu etc & Others 1998 I-LW (Cr) Ms. 285). குறிப்பாக, புலன்விசாரணை அதிகாரியாக துணைக் காவல் கண்காணிப்பாளர் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு இது.

வன்கொடுமை வழக்குகளில் தலித்துகளுக்கெதிரான நிர்வாகத்தின் எதிர்நிலையை பிரதிபலிக்கும் எண்ணற்ற வழக்குகளில் ரஞ்சித் கொலை வழக்கும் ஒன்று. பொதுவாகவே, வன்கெடுமை வழக்குகளில் தொடக்கம் முதலே வன்கொடுமை இழைத்தோரைக் காப்பாற்றும் முயற்சிகள் நடைபெறுகின்றன. ரஞ்சித் கொலை வழக்கில் புலன்விசாரணை அதிகாரியாக துணைக் காவல் கண்காணிப்பாளருக்குப் பதிலாக, காவல் ஆய்வாளரே வழக்கை புலன்விசாரணை செய்திருந்தால், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது இந்த ஒரு சட்டக் குறைபாட்டின் அடிப்படையிலேயே வன்கொடுமையாளர்கள் விடுவிக்கப்பட்டிருப்பார்கள். வன்கொடுமை வழக்குகளில் புலன்விசாரணை அதிகாரி வன்கொடுமைத் தடுப்புச் சட்டவிதிகளின்படி நியமிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய விரிவான முதல் தீர்ப்பு இது.

புலன் விசாரணையும் அதன் முக்கியத்துவமும்

புலன்விசாரணை என்பதை ‘ஒரு காவல் அதிகாரியோ அல்லது குற்றவியல் நடுவரின் உத்தரவுப்படி அதிகாரம் பெற்ற எந்த நபரோ குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி, குற்ற நிகழ்வைப் பற்றிய சாட்சியத்தை திரட்டுவதற்காக எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் உள்ளடக்கியதாகும்’ என குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 2(h) பொருள் தருகிறது.

இச்சட்டப்பிரிவை ஆய்ந்த உச்ச நீதிமன்றம், ஒரு குற்றம் குறித்த புலன்விசாரணை என்பது 1(1) குற்ற நிகழ்விடம் சென்றடைவது (2) வழக்கின் பொருண்மைகளையும், சூழ்நிலைகளையும் உறுதி செய்து கொள்வது (3) குற்றமிழைத்ததாகக் கருதப்படும் நபரைக் கண்டுபிடித்தல், கைது செய்தல் (4) குற்றச் சம்பவம் தொடர்பான தகவல்கள் அறிந்த நபர்களை விசாரித்து அவர்களிடம் வாக்குமூலங்கள் பெறுவது (5) குற்றம் நிகழ்ந்த இடத்தையும், அது தொடர்பான மற்ற இடங்களையும் பார்வையிட்டு தொடர்புடைய பொருட்களைக் கைப்பற்றுதல் (6) சேகரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு நிகழ்ந்தது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டிய குற்றமா என்று முடிவெடுப்பது எனில், அதற்குரிய குற்றப்பத்திரிகை உரிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது போன்றவற்றை உள்ளடக்கியதாக பல தீர்ப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கூறியவற்றை புலன் விசாரணை அதிகாரி செய்யத் தவறும்போது, அது குற்றமிழைத்தவருக்குச் சாதகமாக அமைகிறது. எனவே, ஒரு குற்றவியல் வழக்கில் புலன் விசாரணை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். வழக்கமான குற்றங்களுக்கே இவ்வாறெனில், வன்கொடுமை போன்ற மனிதத்தன்மையற்ற சமூகக் குற்றங்கள் இழைக்கப்படும் வழக்குகளில் புலன்விசாரணை அதிகாரியின் பங்களிப்பு மிகமிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

வன்கொடுமை வழக்குகளும் புலன் விசாரணை அதிகாரியும் வன்கொடுமை நிகழ்வுகளை வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தனித்தன்மையான சமூகக் குற்றமாகக் கருதுவதாலும், இவ்வன்கொடுமைகள் நுணுக்கமான வகைகளில் நிகழ்த்தப்படுவதாலும், இவ்வழக்குகள் துணைக்காவல் கண்காணிப்பாளருக்கு குறையாத பதவிநிலை வகிக்கும் அதிகாரியால் புலன்விசாரணை செய்யப்படவேண்டும் என்று வன்கொடுமைத் தடுப்புச் சட்டவிதி 7(1) கூறுகிறது. மேலும், புலன்விசாரணை செய்யும் அதிகாரிக்கு சில தகுதிகளையும் இவ்விதி வரையறுத்துள்ளது. இதன்படி, வன்கொடுமை வழக்கை விசாரிக்கும் புலன்விசாரணை அதிகாரி, அவருடைய முன்அனுபவம், வழக்கின் தன்மை குறித்து முன்கூட்டியே உணரும் தன்மை, நீதிச்சார்பு, சரியான திசையில் புலன்விசாரணை மேற்கொண்டு விரைந்து முடிக்கும் திறமை ஆகியவை கொண்டவராக இருத்தல் வேண்டும்.

விதி 7(2)இன்படி, புலன் விசாரணை விரைந்து 30 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பப்பட வேண்டும். அவர் அதை காவல் துறைத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். புலன் விசாரணை அதிகாரி நியமனமும், குளறுபடிகளும் பொதுவாக, வன்கொடுமை வழக்குகளில் சில ஆண்டுகளுக்கு முன்புவரை, வன்கொடுமை வழக்குகளை காவல் ஆய்வாளர் மட்டத்திலான அதிகாரிகளே மேற்கொண்டனர். தற்போது, இவ்விதி குறித்த விழிப்புணர்வு பரவலாக ஏற்பட்டபிறகு, இவ்வாறான குளறுபடிக்குப்பதில், புதுப்புது குளறுபடிகள் வன்கொடுமை வழக்குகளை வீணடிக்கும் நோக்கத்துடன் செய்யப்படுகின்றன.

இப்போது துணைக் காவல் கண்காணிப்பாளருக்கு தக்க நியமன ஆணை வழங்காமல் விடுவது அல்லது அவ்வாணையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் வேண்டுமென்றே விட்டுவிடுவது என வன்கொடுமையாளர்களுக்கு சாதகமான செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், வன்கொடுமைப்புகாரைப் பதிவு செய்தவுடன் துணைக்காவல் கண்காணிப்பாளர் மட்டத்திலான அதிகாரி சம்பவ இடம் சென்று புலன் விசாரணையை மேற்கொண்டு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி குற்றம் ஏதும் நிகழ்ந்ததாக விசாரணையில் தெரியவில்லை என்று கூறி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளை வழக்கிலிருந்து நீக்கி புலன்விசாரணையின் தொடர்ச்சியை காவல் ஆய்வாளர் போன்றோருக்கு மாற்றி உத்தரவிட்டு தன் பணியை முடித்துக் கொள்கிறார். இதுவும் சட்டப்படி தவறே. மேற்குறிப்பிட்ட ‘மாரியம்மாள்' (ரஞ்சித் கொலை) வழக்கு தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்றம் இக்கருத்தைத் தெரிவித்துள்ளது.

தவிரவும், ஒரு குறிப்பிட்ட வன்கொடுமை வழக்கை புலன் விசாரணை அதிகாரியாக துணைக் காவல் கண்காணிப்பாளர் தவிர காவல் ஆய்வாளர் போன்றோர் புலன்விசாரணை மேற்கொண்ட காரணத்திற்காகவே வன்கொடுமையாளர்களை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து உச்ச நீதிமன்றங்கள் தீர்ப்புகள் வழங்கியுள்ளன. இந்த அணுகுமுறை சட்ட அடிப்படையில் முழுக்க முழுக்கத் தவறானதாகும்.

எவ்வாறெனில், ஒரு வன்கொடுமை வழக்கின் புலன்விசாரணை காவல் ஆய்வாளர் செய்வதாலோ, துணைக் காவல் கண்காணிப்பாளர் மேற்கொள்வதாலோ எவ்விதத்திலும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு பாதகமாக (Prejudice) இருப்பதில்லை. இந்த ஏற்பாடு வன்கொடுமை வழக்குகளின் புலன்விசாரணை உரிய கவனத்துடன் கையாளப்பட வேண்டும் என்பதுதான். அச்சூழலில், புலன்விசாரணையை காவல் ஆய்வாளர் மேற்கொண்ட ஒரே காரணத்திற்காக வன்கொடுமையாளர்களை விடுவிப்பது எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல.

தகவல் பயன்பாடு

தற்போது தகவல் உரிமைச் சட்டம் - 2005 நடைமுறைக்கு வந்து ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு நாம் அறிந்ததே. இச்சட்டத்தின் கீழ் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ‘பொதுத் தகவல் அதிகாரி’ நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் கேட்டு விண்ணப்பம் செய்த 30 நாட்களுக்குள் கோரப்படும் தகவல்கள் அவ்வதிகாரியால் தரப்பட வேண்டும். 30 நாட்களுக்குள் மேல் தகவல் தராமல் தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் 250 ரூபாய் அதிகபட்சமாக 25,000 ரூபாய் வரை அபராதமாக, தகவல் அளிக்காத பொதுத் தகவல் அதிகாரி செலுத்த நேரிடும் என்றும், தகவல் உரிமைச்சட்டம் வழிவகுத்திருக்கிறது. இந்த அடிப்படையில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது தொடர்பான தகவல்களை, இச்சட்டத்தின் அடிப்படையில் கோருவதன் மூலம் புகார் / முதல் தகவல் அறிக்கை ஆகியவற்றை வீணடிக்க எடுக்கப்படும் முயற்சிகளைத் தடுக்கலாம்.

தடுப்பு நடவடிக்கைகள்

ஒரு வன்கொடுமைப் புகார் வழக்காகப் பதிவு செய்யப்பட்டவுடன் அவ்வழக்கை புலன்விசாரணை செய்யும் அதிகாரி வன்கொடுமைத் தடுப்புச் சட்டவிதிகளின்படி முறையாக நியமிக்கப்பட்டவர்தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள, தகவல் உரிமைச் சட்டப்படி தொடர்புடைய காவல் நிலையத்திலேயே மனு செய்து தகவல் பெறலாம். இதன் மூலம் புலன்விசாரணை அதிகாரியின் நியமனத்தை சட்டப்படி செய்ய வைக்கலாம். ஒருவேளை நியமனம் முறையாகச் செய்யப்படாமலிருந்தால், அதற்குரிய வகையில், நடைமுறைப்படுத்த காவல் துறையின் உயர் அதிகாரிகளை அணுகலாம். தேவைப்படின், நீதிமன்றத்தை அணுகியும் தக்க ஆணையைப் பெற முடியும்.

- காயங்கள் தொடரும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com