Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
 width=
 width=மார்ச் 2008

எறையூர் தலித் மக்களின் சுயமரியாதைக்கானப் போராட்டம்

கிறித்துவர்களிடமும் சாதி உணர்வு மேலோங்கி, அது தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமையாக மாறியிருப்பது கண்டு, எøறயூரில் என்னதான் நடக்கிறது என்பதை அறிய புறப்பட்டோம். பேருந்தில் இருந்து இறங்கிய எங்களை வரவேற்றது தீயணைப்பு வண்டியும், கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருந்த காவல் துறையினரும்தான். அந்த ஊர் முழுவதும் மயான அமைதி. எறையூரில் பதற்றம் நிலவுவதால் வெளி ஆட்களை ஊருக்குள் காவல் துறையினர் விடுவதில்லை என்று ஏற்கனவே எங்களுக்கு தகவல் கிடைத்தது.

Eraiyur அங்கு சாலையோரமாக ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். அவரிடம் நாங்கள் இப்பிரச்சனை குறித்து விசாரித்தோம். அவர் வாயைத் திறக்கும் போதே சாதிவெறி கொப்பளித்தது. “அய்யய்யோ அந்த சண்டய பத்தி கேக்காதம்மா. இந்த காலனி ஆளுவ அநியாயம் பண்றாங்க. இவங்க அவங்களுக்காக எவ்வளவோ பாடுபட்டாங்க. ஆனா இன்னிக்கு இவங்க வனவாசம் இருக்காங்க. மூணு, நாலு தலைமுறையா வேற, வேற வழியாத்தான் போயிட்டு வராங்க. இப்போ வந்து இப்படிப் போவோம்னா என்ன அர்த்தம்? கோயில் உள்ள யாராவது நோட்டீஸ் ஒட்டுவாங்களா. அசிங்கம் பண்ணிட்டாங்க இந்த காலனி ஆளுங்க'' என்றார். நீங்க கிறித்துவரான்னு கேட்டதற்கு, ‘நான் கிறிஸ்தவரில்ல. படையாச்சி’ என்று இதுவரை வன்னிய கிறித்துவர்களுக்காக வக்காலத்து வாங்கிப் பேசிய வன்னிய இந்து, தன் சாதிப் பெயரை திமிரோடு சொன்னார்.

அதற்குப் பிறகு காவலர்கள் கூட்டமாக உட்கார்ந்திருக்கும் இடங்களைத் தவிர்த்துவிட்டு ஊருக்குள் சென்றோம். அங்கு தலித் மக்கள் வாழும் ஒரு வீட்டிற்குச் சென்று, அந்த வீட்டில் இருந்த ஒரு பெண்ணிடம் இப்பிரச்சனை குறித்து கேட்டோம். தங்களால் இங்கு வாழவே முடியாதென்றும் எங்கேயாவது சென்று கூலி வேலை செய்து பிழைத்துக் கொள்கிறோம் என்றும் சொல்லி அழுதார்.

எறையூர் உளுந்தூர்ப்பேட்டைக்கும் திருக்கோவிலூருக்கும் இடையில் இருக்கும் ஒரு பெரிய கிராமம். இங்கு சுமார் பத்தாயிரம் வன்னிய கிறித்துவ குடும்பத்தினரும், 600 தலித் கிறித்துவ குடும்பத்தினரும் வாழ்ந்து வருகின்றனர். இதுதவிர, இந்து வன்னியர் மற்றும் தலித் குடும்பங்களும் அங்கே வசிக்கின்றனர். இங்குள்ள ஜெபமாதா அன்னை தேவாலயத்தின் பிரதான வாயிலில் வன்னியர்கள் மட்டுமே செல்ல வேண்டும்.

தலித் மக்கள் பக்கவாட்டில் உள்ள ஒரு கால்வாயை ஒட்டியுள்ள நுழைவாயிலின் வழியாகத்தான் செல்ல வேண்டும். அந்த வழியாகத்தான் திருமணம் முடித்து வர வேண்டும். அதே வழியாகத்தான் பிணத்தை எடுத்துச் செல்ல வேண்டும். இந்த தேவாலயத்தில் எது நடந்தாலும் அதை தலித்துகளுக்கு தனியாகவும், வன்னியர்களுக்கு தனியாகவும் நடத்தி தன் சாதி அடõவடித்தனத்தைக் காட்டுவதே இங்குள்ள பங்குத்தந்தையின் இறைப்பணியாக உள்ளது.

60 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த தேவாலயத்திற்குள்ளே தலித்துகள் உள்ளே நுழைந்து வழிபட முடியாது. வெளியே நின்றுதான் வணங்க வேண்டும். பின்னர், மெல்ல, மெல்ல நிகழ்ந்த போராட்டங்களால் தலித் மக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தேவாலயத்திற்குள் ‘பறைசாலை’ என்று ஒரு பகுதி ஒதுக்கப்பட்டு, அங்கே தான் தலித்துகள் நிற்க வைக்கப்பட்டனர். இன்றும் தலித் சிறுவர், சிறுமியர் பொதுவான இடத்தில் அமர்ந்து வழிபட்டால், வன்னிய சிறுவர்கள் அவர்களை இண்டி இடுக்கி வெளியே தள்ளும் கொடுமையும் நடந்து கொண்டிருக்கிறது.

1999ஆம் ஆண்டு ஒரு தலித் பாதிரியாருடைய தாயின் பிணத்தை தேவாலயத்தின் பிரதான வாயில் வழியாக எடுத்து வரக் கூடாது என்று எறையூர் வன்னிய கிறித்துவர்கள் அட்டகாசம் செய்தனர். இறந்தவர்களுக்கான எந்த முறையான சடங்கையும் செய்ய விடாமல் பிணத்தை கல்லால் அடித்த கொடூரமும் நிகழ்ந்தது.

இதன் தொடர்ச்சியாகத்தான் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற திருவிழாவின் போது, வன்னிய ஆண்கள் தங்கள் கைகளில் இருந்த செல்போன் மூலம் புகைப்படங்கள் எடுத்து தலித் பெண்களை தொந்தரவு செய்துள்ளனர். தங்கள் சமூகப் பெண்களை புகைப்படம் எடுத்து அவமானப்படுத்தியதால் கோபமடைந்த தலித்துகள், வன்னியர்களிடம் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ‘உங்கள கோயிலுக்குள்ள விட்டால் எங்க புள்ளைங்க மேலயே பழிபோட எவ்ளோ தைரியம் உங்களுக்குச் என்று சகட்டு மேனிக்கு தலித் மக்களைப் பேசியுள்ளனர் வன்னிய கிறித்துவர்கள்.

மனம் நொந்து போன தலித் மக்கள், அன்றைய தினத்திலிருந்து ஜெபமாதா அன்னை தேவாலயத்திற்குள் செல்வதில்லை. அதற்கு பதிலாக தங்களுடைய பகுதியிலேயே உள்ள சிறிய கோயிலான சகாயமாதா அன்னை தேவாலயத்தில் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த தேவாலயத்திற்கு அங்கீகாரம் வழங்கி, தனி பாதிரியாரை நியமிக்க வேண்டும் என்று தலித் மக்கள் உரிமை கோரினர். இது தொடர்பாக கடலூர் புதுச்சேரி மறை மாவட்டப் பேராயர் ஆனந்தராயரிடம் மனு கொடுத்தனர். ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சிறிய தேவாலயத்தை நாங்கள் தான் கட்டினோம். எனவே, அந்த தேவாலயமும் எங்களுக்குதான் சொந்தம். அதில் தலித் மக்கள் பங்கு கேட்க முடியாது என்று தங்களின் ஆதிக்கத்தை தேவாலயத்திற்குள் கட்டி எழுப்பி, சாதி ராஜ்யத்தை வன்னியர்கள் நடத்தி வருகின்றனர். உருவத்தை வைத்து வழிபடத் தொடங்கியது நாங்கள்தான். அதன் சுற்றுச் சுவரை வன்னிய கிறித்துவ பெண் ஒருவர் வேண்டுதலின் பேரில் கட்டிக் கொடுத்தார். அதற்காக இந்த தேவாலயம் எங்களுடையதுதான் என்று எங்களுக்கு துரோகம் இழைக்கின்றனர் வன்னியர்கள் என்று தங்களின் நியாயங்களை கூறுகின்றனர் தலித் மக்கள்.

இந்நிலையில், தலித் கிறித்துவர்கள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்து, சகாயமாதா தேவாலயத்தில் மேற்கொண்ட பட்டினிப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் இணைப் பொதுச்செயலர் சிந்தனைச் செல்வன் தொடங்கி வைத்தார். மார்ச் 7 அன்று தொடங்கிய அறப்போராட்டத்தில், தொடர்ந்து பட்டினி கிடந்து இரு பெண்கள் மயக்கமடைந்தனர்.

8.3.2008 அன்று இரவு தேவாலயத்திற்குள் “தீண்டாமைப் பேயை ஓட்டு, இல்லையேல் கோயிலை இழுத்துப் பூட்டு'' என்ற வாசகம் அச்சிடப்பட்ட சுவரொட்டியை விடுதலைச் சிறுத்தை கட்சியினர் ஒட்டினர். 9 அன்று காலையில் கோரிக்கை மனு ஒன்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று, தேவாலயத்தின் பிரதான வாயிலில் நுழைந்து பங்குத் தந்தையிடம் கொடுக்க தலித் மக்கள் திட்டமிட்டிருந்தனர். இதனை வன்னியர்கள், கோயிலை தலித் மக்கள் பூட்ட வருவதாக வதந்தியை ஊர் முழுவதும் பரவவிட்டு, தங்களின் சாதி வெறியாட்டத்திற்கு பயன்படுத்திக் கொண்டனர். மேலும், தலித் மக்கள் வாழும் பகுதிக்குச் சென்று அவர்களை அடித்து நொறுக்குவது மற்றும் அவர்களின் உடைமைகளை சேதப்படுத்துவது என்று வன்னியர்கள் திட்டம் தீட்டினர்.

ஜெபமாதா அன்னை தேவாலயத்தின் பங்குத் தந்தையும் தலித் மக்களை தாக்குவதற்கான திட்டத்தில் தன் பிரதான பங்கை செலுத்தினார். அதன் விளைவாக, காலை 8.30 மணிக்கு நடத்த வேண்டிய பூசையை முன்னதாக எட்டு மணிக்கே தொடங்கினார். வன்னியர்கள் ஒன்றும் தெரியாதது போல தேவாலயத்தில் வழிபட்டுக் கொண்டிருந்தனர். தலித் மக்கள் இருக்கும் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே குடிநீர் விடப்பட்டதால், அவர்களில் கொஞ்சம் பேர் தண்ணீர் பிடிக்கச் சென்றனர்; கொஞ்சம் பேர் போராட்டத்தை முடிக்க கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்தனர். கொஞ்சம் பேர் சிறிய தேவாலயம் அருகே பட்டினிப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். தலித் மக்கள் பிரிந்திருக்கும் நேரம் பார்த்து, காலையிலேயே தங்கள் வெறியாட்டத்தை ஆடத் தொடங்கினர் வன்னிய கிறித்துவர்கள்.

Eraiyur இதற்கிடையே காவல் துறை உயர் அதிகாரிகள், பங்குத்தந்தையிடம் சென்று தலித் மக்கள் பிரதான வாயில் வழியாக கொண்டு வரும் மனுவை பெற்றுக் கொள்ளுமாறு பேசியுள்ளனர். ஆனால் அந்த வன்னிய பங்குத் தந்தை பிரதான நுழை வாயில் வழியாக தலித் மக்கள் வருவதற்கு அனுமதி மறுத்துள்ளார். இதனால் காவலர்களும் எங்களுக்கு வேறு வழியில்லை. போராட்டம் நடத்தும் தலித் மக்களுக்கு நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என்ற சொல்லிவிட்டனர்.

இந்த நேரம் பார்த்து ‘பழைய காலனி' என்று சொல்லப்படுகிற தலித் மக்கள் வாழும் பகுதியில் வன்னிய சாதி வெறியர்கள் நுழைந்து தாக்க ஆரம்பித்தனர். "அடிங்க ஆனா காயம் இருக்கக் கூடாது. உயிர் சேதாரம் ஆகக்கூடாது, என்று சொல்லிச் சொல்லி தலித் மக்களை தாக்கியுள்ளனர். அவர்கள் கூலி வேலை செய்து சிறுகச், சிறுக சேகரித்த உடைமைகளை சேதப்படுத்தினர். தலித் மக்களின் மொத்த வீடுகளும் சூறையாடப்பட்டன. ஒரு வீடுகூட தாக்குதலில் இருந்து தப்பவில்லை. வீட்டில் இருந்த நாற்காலிகள், கட்டில், மெத்தை, டிவி, பிரிட்ஜ், போட்டோ, டிவிடி என அனைத்துப் பொருட்களும் உடைக்கப்பட்டு தெருக்களில் வீசப்பட்டன. அரிசி, பருப்பு, உப்பு, புளி என எல்லாம் சாலையில் கொட்டப்பட்டு மண்ணோடு மண்ணாக்கப்பட்டன.

இந்த தாக்குதலைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். வன்னியர்களின் தாக்குதலை கட்டுப்படுத்த காவலர்கள் முனைந்த போது, வன்னியர்கள் கற்களை வீசி காவல் துறையினர் மீது எதிர்த் தாக்குதல் நடத்தியுள்ளனர். தலித்துகள் மீதான வன்னியர்களின் தாக்குதல், கொஞ்சம் நேரம் மட்டும் காவல் துறைக்கும் வன்னியர்களுக்குமான சண்டையாக மாறியது. இதன் உச்சகட்டமாக காவல் துறையினர் சுட்டதில் வன்னிய கிறித்துவர்கள் இருவர் உயிரிழந்தனர். கலவரத்திற்குப் பிறகு அமைச்சர் பொன்முடி கலவர இடத் தைப் பார்வையிட்டுச் சென்றார். இரண்டு நாட்கள் அரசு உணவு வழங்கியது. அதன் பிறகு யாரும் எட்டிக் கூட பார்க்கவில்லை. ஆனால் நான்கைந்து நாட்களாகப் பட்டினியாக கிடந்தார்கள் பாதிக்கப்பட்ட மக்கள்.

தாக்குதலைப் பற்றி அல்லிமுத்து என்ற தலித் பெண் கூறும்போது, “சண்டையா இருந்ததால நா புள்ளைங்கள ஸ்கூல்ல இருந்து கூட்டிக்கிட்டு வந்தேன். அப்போ திருநா மாதிரி வாட்டமா எதிர்க்க ஒரு கும்பல் வந்திச்சி. வழியில மாட்ன என்ன அவங்க அடிக்க வந்தாங்க. நா இந்துன்னு சொன்னா உட்டுடுவாங்கன்னு நெனச்சி, "நான் இந்து'ங்கன்னு சொன்னேன். அப்போ கூட என்ன விடல அடிச்சாங்க. என் ஊட்டு ஓட்டயெல்லாம் கடப்பாறையால அடிச்சி நொறுக்கிட்டாங்க'' எனக் கூறி அழுதார்.

தீண்டாமைக்கு எதிராகப் போராடிய தலித் கிறித்துவர்களை மட்டும் சாதி வெறியர்கள் தாக்கவில்லை. இந்து மதத்தில் இருக்கும் தலித் மக்களையும் சேர்த்தே தாக்கினார்கள். அதேபோல நன்கு படித்தவர்கள், வெளிநாடு சென்று கொஞ்சம் வசதியாக இருப்பவர்கள்யார் யார் எனப் பார்த்து அவர்களின் வீடுகளும், உடைமைகளும் சூறையாடப்பட்டன. இவ்வளவு பிரச்சனைக்குப் பிறகு தலித் மக்கள் அன்றாட வாழ்க்கை நடத்துவதே பெரிய சவாலாக உள்ளது.

நிலங்கள் முழுவதும் சாதி இந்துக்களிடம் உள்ளன. தலித்துகளில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் விவசாயக் கூலிகள். தலித்துகள் அவர்களின் நிலங்களில்தான் வேலை செய்தாக வேண்டும். பிரச்சனைகளுக்குப் பிறகு அவர்கள் யாரும் வேலைக்குச் செல்வதில்லை. இதனால் கூலியும் இல்லை. மாடு வைத்திருப்பவர்கள் பால் கறந்து கொண்டு போனால், கூட்டுறவு சொசைட்டியில் வாங்க மறுத்து விடுகிறார்கள். எந்த வீட்டில் நுழைந்தாலும் சாவு வீடு போலவே எல்லோரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

வீடுகளை அடித்து நொறுக்கும் போது ஒரு வீட்டில் ‘கோமா’வில் கிடந்த வயதான மூதாட்டியைக் கூட விட்டு வைக்கவில்லை வெறியாட்ட கும்பல். பாட்டியை அடித்து உதைத்ததில் முகம், கழுத்து, கை என உடல் முழுவதும் காயங்களுடன் ரத்தக் கட்டு ஏற்பட்டுள்ளது. அவரும் இறந்து விட்டதாக மார்ச் 22 அன்று செய்தி வந்தது. கோமாவில் இருப்பவரைக் கூட இப்படி தாக்கியதற்குக் காரணம், இவரது மகனான மேத்யூ பட்டினிப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தார் என்பதுதான்.

இவரது தாயை தாக்கியது போலவே தலித் மக்களுக்காக அங்கு தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்த ரட்சகநாதனின் தாயையும் அடித்துள்ளனர். “என்ன அடிச்சாப் பரவாயில்ல, எம்புள்ளைக்கு மூத்தரத்த குடிக்க வெச்சானுங்க'' என்று கதறுகிறார் மரிக்கொழுந்து. இதேபோல முன்னணியில் இருந்து செயல்பட்டவரான குழந்தைசாமி வீட்டில் உள்ள துணிமணிகள், அவரின் பட்டப்படிப்புச் சான்றிதழ் அனைத்தையும் வெளியே போட்டு எரித்து, தாங்கள் இந்து மதத்தில் இருந்து வந்தவர்கள் என்பதை நிரூபித்து விட்டு அடுத்த வீட்டை உடைக்கவும், எரிக்கவும் சென்றுள்ளனர்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இந்தப் பிரச்சினையில் தொடர்ந்து போராடி வருகின்றனர். தமிழர்களுக்காகப் போராடுகின்ற ராமதாசுக்கு தலித்துகள் தமிழர்களாகத் தோன்றவில்லை போலும்! முல்லை பெரியாறு, காவேரி, ஒகேனக்கல் மற்றும் பல்வேறு பிரச்சினைகளில் தமிழகத்திற்கு அநீதி இழைக்கக் கூடாது என்று பக்கத்து மாநிலக்காரர்களை எதிர்த்துப் போராடிவரும் தமிழ்த் தேசியவாதிகள், இது நாள் வரை பாதிக்கப்பட்ட தலித்துகளைப் பற்றி வாயைத் திறக்கவில்லை.

மதம் மாறிய தலித் மக்கள் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்படாததால், அவர்கள் மீது இவ்வளவு பெரிய தாக்குதல்களை நடத்தியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் எந்த வழக்கும் பதிவு செய்ய இயலவில்லை என்பதை தலித் இயக்கங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்து, கிறித்துவர் என்ற பாகுபாடின்றி தலித் மக்கள் கோருவதெல்லாம் தங்களுக்கு உத்தரவாதமான, கண்ணியமான வாழ்க்கை வேண்டும். விவசாய நிலங்கள் அவர்களிடம் இல்லை. அவர்களின் நிலங்களை நம்பியே வாழ்கின்றனர். ‘எங்களை அடிப்பவர்களிடம் நாங்கள் எப்படி வேலைக்குச் செல்வது? அதனால் எங்களுக்கு இலவசமாக விவசாய நிலங்களை அரசு கொடுக்க வேண்டும்' என்கின்றனர்.

தலித் கிறித்துவர்களைப் பொறுத்தமட்டில், பிறசாதியினர் போலவே தாங்களும் தேவாலயத்தில் பாகுபாடின்றி வழிபட உரிமை வேண்டும். தங்களுக்கென்று தனி பாதை, தனி சுடுகாடு, தனி பிணம் எடுத்துச் செல்லும் வண்டி என்று எதுவும் இருக்கக் கூடாது. தங்கள் தெருவுக்கும் சப்பரம் வர வேண்டும். இல்லை என்றால் சிறிய சகாயமாதா கோயிலில் தனி பாதிரியாரை நியமித்து பங்கு பிரித்துக் கொடுக்க வேண்டும். “பணமாகவும், நகையாகவும், பொருட்களாகவும் நிறைய இழந்து விட்டோம். பாதிக்கப்பட்ட எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். நாங்கள் மனிதர்களாக மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும்'' என்கின்றனர் சுய மரியாதைக்காகப் போராடும் இந்த தலித் மக்கள்.

-நம் சிறப்புச் செய்தியாளர்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com