Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
 width=
 width=மார்ச் 2008

அடித்து நொறுக்கும் இளவழகி!
அழகிய பெரியவன்

Ilavazhagi with her family

இளவழகி தலித் சமூகத்திலிருந்து வந்தவர். இந்த ஒரு சொல்லே அவரைப் பற்றி முழுமையாக அறிமுகம் செய்து விடும் ஆற்றல் கொண்டதுதான். ஆனால் மீண்டும் மீண்டும் வலிகளையும் அவலங்களையும் சொல்லித்தான் சுரணையற்ற பொதுச்சமூகத்திற்கு உணர்த்த வேண்டியுள்ளது. அவருடைய தந்தை இருதயராஜ், ரிக்ஷா இழுக்கும் தொழிலாளி. அம்மா செல்வி, வீட்டை நிர்வகிப்பவர். தங்கைகள் இலக்கியாவும், செவ்வந்தியும் தத்திமுத்தி படித்துக் கொண்டிருப்பவர்கள்.

இளவழகியின் வீடு வியாசர்பாடியில் இருக்கிறது. வியாகுலம் மிக்க மனிதர்கள் வாழும் அப்பகுதிக்குச் செல்ல, வடசென்னையின் புழுதி பறக்கும் சாலைகளின் வழியே பயணம் செய்ய வேண்டும். எப்போதுமே பிணம் எரியும் வாடையால் சூழப்பட்ட ஓட்டேரி மயானம். சாண நாற்றம் நின்று நிலவியபடி சென்னை நகருக்கே இறைச்சி தரும் ஆடு, மாடு இறைச்சிக்கூடம் கொண்ட ‘கானாவின் திருவையாறான' புளியந்தோப்பு. வெண்திரையில் நடித்து, மக்களின் வாழ்விலும் நடித்துக் கொண்டிருக்கும் அரசியல் நடிகர்களின் உருவப் படங்கள் வரையப்பட்ட பின்னி ஆலையின் நீண்ட சுவர்கள். இவற்றின் வழியே குலுக்கல்களுடன் நீளும் அப்பயணம் முடியும் போது நம் மனதையும் குலுக்கிவிடும்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டித் தந்திருக்கும் தீப்பெட்டியைப் போன்ற சிறிய அறையைக் கொண்ட சிமென்ட் குடிசை வீட்டில் வசிக்கிறார் இளவழகி. இளவழகி பத்தாம் வகுப்புடன் தனது படிப்பை நிறுத்திக் கொண்டார். அவர் படித்தது கன்னிகாபுரத்தில் இருக்கும் அரசினர் பெண்கள் ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப்பள்ளியில். விளையாட்டின் மீது அவர் கொண்ட தீவிர ஈடுபாடு மட்டுமே படிப்பை நிறுத்தியதற்கு காரணமாக இருக்க முடியாது. ஒவ்வொரு முறை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதும் மாநில அளவிலான கேரம் போட்டிகள் வந்துவிடும். மற்றொரு முறை அவருடைய அப்பாவுக்கு கால் எலும்பு முறிந்துவிட்டது. இந்த காரணங்கள் எல்லாவற்றையும் விடவும் பிறிதொரு காரணம் எப்போதும் இருந்தது. அது ஏழ்மை நிலை. போட்டிகளில் பங்கேற்க ஆகும் செலவுகளுக்காக நிதி ஆதாரம் தேடி அலைய வேண்டிய நெருக்கடி. தனிப்பயிற்சி வைத்து படிப்பைத் தொடர முடியாத நிலை.

மேலும் மேலும் படிக்கவில்லையே என்ற ஏக்கம் இளவழகிக்கு இப்போது இல்லை. இன்னும் ஒரு குமாஸ்தா உருவாவதால் நாட்டுக்கு எந்தப் பயனும் ஏற்பட்டு விடப்போவதில்லை என்பதை ஒருவேளை அவருக்கு உள்ளுணர்வு உணர்த்தியிருக்கலாம். நாட்டுக்கும், இளவழகி உருவான தலித் சமூகத்துக்கும் வேண்டியது சாதனையாளர்களும், வாகையர்களும்தான். இன்று அவர் அந்த நிலையைத் தான் எட்டிப்பிடித்திருக்கிறார். கல்விக்காக இந்த அரசும், நிறுவனங்களும் எவ்வளவோ செலவழிக்கின்றன; திட்டங்களைத் தீட்டுகின்றன. ஆனால் மிகையான திறன்கள் இருந்தும் தனி வகை (Exceptional Children) குழந்தைகளாக உருவாகும் இவரைப் போன்றவர்கள் வளர்வதற்கும், வாழ்வதற்கும் எந்தத் திட்டங்களும் நடைமுறையில் இல்லை என்பதே உண்மை.

தனி வகை குழந்தைகளில் மிகைதிறன் கொண்ட குழந்தைகளை சமூகம் பொறாமை, காழ்ப்புணர்வு கண்களோடு பார்ப்பது மட்டுமின்றி, அவர்களின் செயல்களை வேண்டாத வேலை என்றும் நினைக்கிறது. அதுமட்டுமின்றி, அவர்களின் தேவைகளும் விருப்பங்களும் சராசரிகளால் புரிந்து கொள்ள முடியாதவையாகவே இருந்து விடுகின்றன. இளவழகியின் வாழ்விலும் அதுதான் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் ஒரே ஆறுதல் அவருக்கு உண்டு. அவரை அவருடைய பெற்றோர்களும், ஆசிரியர்களும் புரிந்து கொண்டுள்ளனர். வீட்டில் தேவையான அளவு ஊக்கமும் ஆதரவும் அவருக்கு இருந்திருக்கிறது. அவருடைய பள்ளியில் இருந்த உடற்கல்வி ஆசிரியரும், தலைமையாசிரியரும் அவருக்கு உதவியுள்ளனர். முதன் முதலாக அவருக்கு ஒரு கேரம் பலகையை வாங்கித் தந்தது அவர்கள்தான்.

இந்தியாவில் நிலவும் சாதிய சிந்தனையில் இருவேறு கருத்து நிலைகள் திறமையைப் பற்றி நிலவுகின்றன. அது ஆதிக்க சாதியினரின் திறமை, ஒடுக்கப்பட்ட மக்களின் திறமை என்று இரு நிலைப்பட்டது. ஆதிக்க சாதியினரின் திறமை மட்டும்தான் இங்கு மதிக்கவும் போற்றவும் படுகிறது. இடஒதுக்கீடு, உயர் பதவி, பட்டம், பாராட்டு, விருது, அங்கீகாரம், ஆதரவு என்று எல்லா மட்டங்களிலும் இவ்வகை கருத்து நிலைதான் ஆதிக்கம் செலுத்துகிறது. தமக்கு கேடயமாக திறமையைப் பயன்படுத்தும் ஆதிக்கச் சாதியினர், ஒடுக்கப்பட்ட மக்களின் திறமையை மூர்க்கமுடன் நிராகரித்து விடுகின்றனர்.

இந்தியாவில் கலையும், பண்பாட்டு விழுமியங்களின் மிகச்சிறந்த கூறுகளும், திறமையும் ஒடுக்கப்பட்ட மக்கள் திரளிடம் குவிந்துள்ளன. ஆனால் அவை ஒருபோதும் ஆதிக்க சாதியினரால் அங்கீகரிக்கப்படுவதில்லை. அரசும், அதிகாரமும் ஆதார வளமும் அவர்களிடமே குவிந்திருப்பதால் ஆதிக்கச் சாதியினர் ஒடுக்கப்பட்ட மக்களின் கலைகளையும், திறமைகளையும் எளிதாக கீழே தள்ளிவிடுகின்றனர். இந்தியாவின் விளையாட்டு வாரியங்கள் ஆதிக்கச் சாதியினரின் கைப்பிடியில் தான் இயங்குகின்றன. கலைத்துறைகளும் அறிவுத்துறைகளும் கூட அப்படித்தான். அவர்களை மீறி ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து கிளம்பும் திறமையாளர்கள் வரமுடிவதில்லை.

வினோத் காம்ளி, தன்ராஜ் பிள்ளை, பாலாஜி, தடகள வீராங்கனை சாந்தி என சாதி ஆதிக்கவாதிகளால் வஞ்சிக்கப்பட்டவர்களின் பட்டியல் நீள்கிறது. உலக அளவிலும் கருப்பர்களுக்குக்கூட இந்த நிலைதான் இருந்தது. களத்தில் ஓடுவதற்கு அணிந்து கொள்ள காலணிகள் இல்லாத நிலையிலும், ஒலிம்பிக் போட்டியில் காற்றைப் போல ஓடி தங்கப்பதக்கம் பெற்றார், ஜெசி ஓவன்ஸ் எனும் கருப்பர். ஆனால் அவருடன் கைகுலுக்க மறுத்துவிட்டான் இட்லர்!

வெள்ளையர்களால் விளையாட்டுக் களத்தில் வீழ்த்த முடியாத கருப்பர்கள், வாழ்க்கைக் களத்தில் கருணையின்றி வீழ்த்தப்பட்டார்கள். விளையாட்டில் பின்பற்றப்படுவதைப் போன்ற எந்த விதிகளையும் வாழ்வின் களத்தில் பின்பற்ற வேண்டிய அவசியம் வெள்ளையர்களுக்கு இல்லை. நிறவெறி, ஒடுக்குமுறை, வறுமை, பொய்யான குற்றச்சாட்டுகள் என திரும்பும் பக்கமெல்லாம் குத்தீட்டிகளை செலுத்தி கருப்பர்களை சாய்த்தார்கள்.

எண்ணத்தின் வேகத்துக்கு சவால் விடும்படி ஓடிய ஜெசி, பிற்காலத்தில் குதிரைகளோடும், பிற விலங்குகளோடும் ஓடி பிழைக்கும்படி சர்க்கஸ்காரனாக மாற்றப்பட்டது அப்படித்தான். பென் ஜான்சன் முதல், மரியன் ஜோன்ஸ் வரை போதை மருந்து குற்றச்சாட்டில் சிக்கவைக்கப்பட்டது அப்படித்தான். வாழ வழியின்றி திருடர்களாகி, பல கருப்பின கூடைப்பந்து ஆட்டக்காரர்கள் சிறைகளில் இருப்பதும் அப்படித்தான்.

அவர்களிலே இச்சூழல்களை தமக்கு சாதகமாக்கி, தடைகளையே நடுங்க வைத்தவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதை வரலாறு நமக்குச் சொல்கிறது. 1960களில் புகழ் பெற்ற பெண்ணாகக் கருதப்பட்டவர் வில்மா ருடால்ப். கருப்பினப் பெண்ணான இவருக்கு உடல் குறைபாடும் இருந்தது. 12 வயது வரை அவர் நடக்கவில்லை. ஆனால் தனது அயராத பயிற்சியின் விளைவாக ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்றார். கருப்பினத்தவர் சந்தித்த நிறவெறியும், உடல் குறைபாடும் அவருக்கு இருபெரும் தடைகளாக அன்று இருந்தன.

இதைப்போன்றே வேறு வகைப்பட்ட சாதியம், ஏழ்மை என்ற இருபெரும் தடைகள் இளவழகிக்கும் இருந்தன. ஆனால், அந்தச் சூழல்களைக் கடந்து வில்மாவைப் போல அவர் வென்றிருக்கிறார்.

தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள், பத்து லட்ச ரூபாய் நிதியை அளித்து மிகப்பெரும் அங்கீகாரத்தையும், ஆதரவையும் இளவழகிக்கு கொடுத்திருக்கிறார். இன்று இளவழகியின் மிகவும் நெரிசலான ஒற்றை அறை கொண்ட வீடு, நாட்டின் பெரும் செய்தியாளர்களால் மொய்க்கப்படுவதற்கும், காட்சி ஊடகங்கள் அவருடைய நேர்த்தியான கருப்பு முகத்தை மாய்ந்து மாய்ந்து காண்பிப்பதற்கும், நாட்டின் மற்றொரு முன்மாதிரியாக அவர் மாறுவதற்கும் கடந்து வந்த பாதை சிக்கலும், சிடுக்கலும் கொண்ட தலித் வாழ்விடத்தின் பாதையைப் போன்றது.

Ilavazhagi கேரம் விதைகள் அல்லது கேரம் மனிதர்கள் என்று அழைக்கப்படும் கருப்பு, வெள்ளை வட்டுக்களையும், சிவப்பு நிறம் கொண்ட அரசி எனும் வட்டையும் பலகையின் நான்கு மூலையிலும் உள்ள குழிகளுக்குள் அடித்து வீழ்த்தும் அளவுக்கு எளிமையானது அல்ல அவரின் போராட்டம். அது உண்மையான போராட்டம். நான்கு திசைகளிலும் உள்ள மனிதத் தடைகளை அடித்து வீழ்த்தி வெற்றி பெறும் தத்துவார்த்த உள்ளடக்கத்தினை எதார்த்த வாழ்விலும் இவ்விளையாட்டு அவருக்கு அளித்திருக்கிறது.

இளவழகியின் தந்தைக்கு கேரம் விளையாட்டின் மீது ஈடுபாடு அதிகம். அவர் தன் மகளை ஒரு விளையாட்டு வீரராக்க விரும்பியிருக்கிறார். வீட்டிலும் உள்ளூர் அளவிலும் இளவழகி ஆடி பயிற்சி பெற்றிருக்கிறார். அதிகாரப்பூர்வமான போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் ஆடுவதற்கு வயதும், திறனும் இருந்தும் அவரால் ஆடமுடியாமல் போயிருக்கிறது. 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தான் அவர் முதன்முதலாக ஆடியிருக்கிறார். அப்போது அவருக்கு வயது 16. முதல் ஆட்டத்தில் அவர் எட்டாம் இடத்தையே பெற முடிந்திருக்கிறது. ஆனால் அடுத்தடுத்து ஆடி மிக இளையோர் மற்றும் முது இளையோர் பிரிவுகளில் இருமுறை தொடர்ந்து 3 ஆண்டுகளாக வாகையர் பட்டத்தினை வென்றிருக்கிறார்.

2006ஆம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்ற உலக கேரம் வாகையர் போட்டியில் வாகையர் பட்டமும், 2008 பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி பிரான்சில் நடைபெற்ற 5ஆவது உலக கேரம் வாகையர் போட்டியில் வாகையர் பட்டமும் பெற்றுள்ளார். கணக்கற்ற பரிசுகளைப் பெற்றிருக்கும் இவர், ஒவ்வொரு முறை வென்று வரும்போதும் இவரை வரவேற்க யாரும் வருவதில்லை. பல நேரங்களில் துணைக்கு யாரும் இன்றி தனியாகவே போட்டிக்குச் சென்று வந்திருக்கிறார்.

இப்போட்டிகளுக்கு நுழைவுக் கட்டணம் கட்டுவதற்கென ஒவ்வொரு முறையும் இவரும் இவருடைய குடும்பமும் பட்ட வேதனைகள் கசப்பு மிக்கவை. 2003 ஆம் ஆண்டு, இரண்டாவது உலக கேரம் போட்டிக்கு அமெரிக்கா செல்ல வேண்டிய நிலை. இவரின் கையில் பணம் எதுவும் இல்லை. அப்போட்டிக்குச் செல்ல வேண்டும் என்றால் 75,000 ரூபாய் கட்ட வேண்டும். இளவழகிக்கு மிகக் கசப்பான அனுபவங்கள் அப்போதுதான் கிடைத்தன.

இளவழகியும் அவருடைய தந்தையும் கடந்த ஆட்சியில் இருந்த அதிகாரிகளையும், துறை செயலாளர்களையும் அணுகியபோது, ‘இல்லை' என்ற விடைகளே கிடைத்தன. அவர்களில் ஒருவரின் சொற்கள் இளவழகியை சிதறு தேங்காயாக உடைத்துவிட்டது. “கேரம் ரோட்டுல விளையாடுற கேம். இதுக்கெல்லாம் அங்கீகாரம் கிடைக்காது. இந்த கேமுக்கெல்லாம் எதுவும் செய்யணும்னு எந்த ஒதுக்கீடும் இல்ல'' மனம் தளராத இளவழகி ஒரு மனுவை முதல்வரின் குறை தீர்வு தனிப் பிரிவுக்கு தந்து விட்டு திரும்பி வந்துவிட்டார்.

ஆனால், அவருக்கு வேறு இடங்களிலிருந்து கரங்கள் நீண்டன. இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான கிருத்துதாஸ் காந்தி அவர்கள் உதவி செய்தார்கள். அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று சிறந்த வீராங்கனை பட்டத்துடன் திரும்பிய அவருக்கு வீட்டில் ஒரு கடிதம் காத்திருந்தது. அது முன்னாள் முதல்வரின் தனிப்பிரிவிலிருந்து வந்திருந்த கடிதம். தான் வென்று வந்ததற்கு பாராட்டோ என்று நினைத்தார் இளவழகி. ஆனால், கேரம் விளையாட்டுக்கு உதவ முடியாது; அதற்கான நிதியும் இல்லை. தனியார் நிறுவனங்களை அணுகி உதவிகளைப் பெறவும் என்று கடித வரிகள் இருந்தன.

2003 இல் மட்டுமல்ல, தொடர்ந்தும் இதே நிலைதான். 2006 இல் டில்லியில் நடைபெற்ற உலக கேரம் போட்டியில் வாகையர் பட்டம் பெற்றுத் திரும்பிய போதும் இந்த நிலை மாறவில்லை. இடையறாத முயற்சியில் நிலைமைகள் சிறிது மாறின. 2008ஆம் ஆண்டு பிரான்ஸ் செல்வதற்கு உதவிகள் கிடைத்தன. இளவழகிக்கும், அவருடைய குடும்பத்துக்கும் எப்போதும் உதவி செய்து வரும் கிருத்துதாஸ் காந்தி அவர்களும், அவரைப் போன்றே மற்றொரு இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான அபூர்வா அவர்களும், ‘தமிழ்நாடு கேரம் சங்க’த்தினரும், ‘பாலம்’ அமைப்பினரும் உதவிகள் செய்தனர்.

அவர் இந்த முறை வென்று வாகையர் பட்டத்துடன் திரும்பிய போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் ஒரு பெரிய கூட்டம் வரவேற்கக் காத்திருந்தது. ‘தமிழ் மய்யம்’ சார்பில் கவிஞர் கனிமொழியும், ஜெகத் கஸ்பரும் ஒரு லட்சம் ரூபாய் பரிசினை அளித்தனர். தாமாகவே முன்வந்து அவருக்குப் பணி நியமன ஆணையை வழங்கி, கொளப்பாக்கம் சிறீராமானுஜம் பொறியியல் கல்லூரி மகிழ்ச்சி கொண்டது.

இளவழகியும் அவருடைய குடும்பத்தினரும், கிருத்துதாஸ் காந்தி அவர்களின் மீதும், ராமானுஜம் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினர் மீதும் பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளனர். ‘வார்த்தைகளைத் தவிர, அவர்களுக்கு பதில் செய்ய வேறு எதுவுமில்லை எங்களிடம்’ என்கிறார்கள் நெகிழ்ச்சியுடன். எல்லா விளையாட்டுகளையும் போலவே கேரம் விளையாட்டிலும் ஆண் ஆதிக்கம், சாதி ஆதிக்கம், அதிகார முறைகேடுகள் ஆகியவை நிறைந்திருப்பதாக கேரம் விளையாடும் பல விளையாட்டு வீரர்களும் சொல்கின்றனர்.

இந்த விளையாட்டுத் துறை அதிகாரிகள் பரிசுப் பணத்தை வழங்குவதில்லை, வெற்றி பெற்றதற்குரிய சான்றிதழ்களை தருவதற்குக்கூட பணம் கேட்கிறார்கள் என்கிறார்கள் அவர்களில் சிலர். ஆனால், இளவழகிக்கு குறைகளைப் பற்றிய கவலையை விட நிறைகளை நோக்கிய நாட்டமே அதிகமாக உள்ளது. அவர் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. உதவி செய்தவர்களை நன்றியுடன் நினைத்து குறிப்பிடுவதோடு, தன்மீதும், தன்போன்ற சகவீரர்கள் மீதும், கேரம் விளையாட்டு மீதும் கவனத்தை ஈர்க்கவே விரும்புகிறார்.

கேரம் ஆடும் பலகை மட்டுமே அடைத்துக் கொள்ளக்கூடிய தன் வீட்டையும், விருதுகளை துணிப்பைகளில் சுற்றி இரும்புக் கட்டிலுக்குக் கீழே போட்டு வைத்திருக்கும் அவலத்தையும் சுட்டிக் காட்டுகிறார். அவருக்கு தொடர்ந்த பயிற்சிக்கான உதவியும் வசதிகளும் உடனடி தேவை. அப்போதுதான் அவர் வாகையர் பட்டத்தையும், உலகத் தரவரிசையில் முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும் முடியும். அவருக்கு ஓரளவாவது விசாலமான ஒரு வீடு தேவை. தான் வென்ற தருணங்களை நினைவூட்டிக்கொண்டே இருக்கும் விருதுகளையும், படங்களையும் வைத்துக்கொள்ளவும் பிறருக்கு அதை பெருமிதமாய்க் காட்டவும், இயல்பாய் இருக்கவும் வீடு அவசியம்.

அவருக்கு மற்றொரு தலையாய தேவை ஓர் அரசுப் பணி. உலக சதுரங்கப் போட்டியில் கோடி கோடியாய் பரிசு பெற்று, வெளிநாட்டிலேயே வீடு, வசதி, வாழ்க்கை என்று இருக்கும் ஆனந்த் போன்றவர்க்கும், கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு அரசும், பிற நிறுவனங்களும் கணக்கின்றி பரிசுகள் தருகின்றன. இப்பரிசுத் தொகைகள் பதினைந்து லட்சம், இருபத்தைந்து லட்சம், ஒரு கோடி என்று நீள்கிறது. விளம்பர நிறுவனங்கள் அவர்களை சூழ்ந்து கொள்கின்றன. அப்படி எதுவும் கவனத்திற்கு வராத கேரம் போன்ற விளையாட்டுகளுக்கு தரப்படுவதில்லை. தேசிய விளையாட்டான ஹாக்கியே இங்கு கவனிப்பாரற்று இருக்கிறது!

இந்த ஆரவாரங்களுக்கு இடையில் கேட்கும் கவன ஈர்ப்புக்குரலான இளவழகியின் குரல் மெல்லியதுதான். ஆனால் நியாயமானது. மிகவும் வன்மையானதும் கூட. இருப்பவர்களுக்கே தருவதும், ஒரு சிலரையே பாராட்டுவதும் அநீதியானது. ஆனால், அந்த அநீதிதான் இந்தியாவில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அந்த அநீதிக்கு எதிராகத் தனது மோதும் வட்டினைக் கொண்டு போரினை நிகழ்த்துகிறார் இளவழகி.

சாலையோர விளையாட்டு!

கேரம் - வெள்ளையர் அல்லாதோரால் உருவாக்கப்பட்டு ஆடப்பட்ட விளையாட்டு. இன்று ஆடப்படும் கேரம் விளையாட்டுக்கு இருநூறு ஆண்டு வரலாறு உண்டு. ஆனால், இதேபோன்ற சாயலுடன், பல பெயர்களில் பல ஆயிரம் ஆண்டுகளாக இவ்வகை விளையாட்டு ஆடப்பட்டு வந்திருக்கிறது. கேரம் என்ற சொல், தென்கிழக்கு ஆசியாவின் திமோர் எனும் பகுதியிலிருந்து உருவான சொல். இந்தியாவில் தான் கேரம் உருவானது என்று சிலர் சொல்கிறார்கள். அதனாலேயே இவ்விளையாட்டுக்கு ‘இந்திய விரல் பில்லியர்ட்ஸ்’ என்ற பெயரும் இருக்கிறது.

ஆசிய நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் இவ்விளையாட்டு ஆடப்படுகிறது. சீனா, பங்களாதேஷ், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இவ்விளையாட்டை ஆடுகிறார்கள். சீனாவில் இவ்விளையாட்டை ஆடத்தெரியாதவர்கள் யாருமே இல்லை என்ற அளவிற்கு நிலைமை இருக்கிறது.

நமது நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் இன்று கேரம் விளையாட்டில் முன்னணியில் உள்ளனர். அவர்களில் இளவழகி, உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் நிற்கிறார். கேரம் ஆடுவதற்கு மன ஒருமையும், நுண்ணறிவும் வேண்டும். தெருக்களிலும், சாலையோரங்களிலும் விளையாடப்படும் விளையாட்டு இது. எனவே, இவ்விளையாட்டில் விளிம்பு நிலை மக்களே அதிக ஆர்வம் செலுத்துகிறவர்களாகவும், ஆடுகிறவர்களாகவும் உள்ளனர். சென்னையில் தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கால் பந்துக்கு அடுத்து இந்த விளையாட்டு மிகவும் புகழ் பெற்றது. இறந்துபோன சில கேரம் ஆட்டக்காரர்களின் கல்லறைகள், கேரம் பலகை போலவே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளன. அவ்விளையாட்டு வீரர்கள் கேரம் மீது எவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தார்கள் என்பதன் சான்று இது.

அம்பேத்கரைப் போலவே நானும்...

எனக்கு படிப்பின் மீது ஆர்வம் இருந்தாலும், விளையாட்டில் பெரிய நிலைக்கு வர வேண்டும் என்று விரும்பியே கேரம் விளையாட்டில் கவனம் செலுத்தினேன்.

சதுரங்கம், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை நான் தேர்ந்தெடுத்திருந்தால், அதிகம் செலவு செய்திருக்க வேண்டிய நிலை உருவாகியிருக்கும். அதனால்தான் விரலுக்கு ஏற்ற வீக்கம் போல இந்த விளையாட்டைத் தேர்ந்தெடுத்தேன்.

எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டு நானும் என் தந்தையும் அணுகாத அதிகாரிகள் இல்லை, அமைச்சர்கள் இல்லை, தனியார் நிறுவனங்கள் இல்லை. எல்லோருமே உதவ மறுத்து விட்டார்கள். சிலர் உதவுகிறேன் என்று வாக்குறுதி அளித்தும் ஏமாற்றிவிட்டார்கள். ஆனால், இப்போது நிலைமை மாறியிருக்கிறது.

தமிழக முதல்வர் கலைஞர், மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி, உயர் அதிகாரிகளான கிருத்துதாஸ் காந்தி, அபூர்வா, உயர் காவல் அதிகாரி திலகவதி, ராமானுஜம் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினர் ஆகியோர் எனக்கு உதவியிருக்கிறார்கள், உறுதுணையாகவும் இருக்கிறார்கள்.

நான் கடந்த 2000-த்திலிருந்து இன்று வரை பல வயது நிலைகளில் ஆடி வருகிறேன். மிக இளையோர் பிரிவிலும் (Sub Junior), இளையோர் (Junior) பிரிவிலும் இரண்டுமுறை தொடர்ந்து 3 ஆண்டுகளாக (Hatrit) வாகையர் பட்டம் பெற்றுள்ளேன். உலக வாகையராக (World Champion) இருமுறை பட்டம் வென்றுள்ளேன். என் சாதனைகளின் அடிப்படையில் பெண்களுக்கான ‘அர்ஜூனா விருது’ பெறவேண்டும் என்பதே என் விருப்பம், இலக்கு.

டென்னிஸ், சதுரங்கம், பில்லியர்ட்ஸ், மேசை டென்னிஸ் போன்றவையும் உள்ளரங்க விளையாட்டுகள்தானே? அவைகளுக்கு தரும் முக்கியத்துவத்தை கேரம் விளையாட்டுக்கும் தரலாம் அல்லவா?

தமிழகத்தின் மிகப்பெரும் தொழில் நிறுவனங்கள் எங்கோ வெளிநாட்டில் இருக்கும் விளையாட்டு வீரர்களையும், வெளிமாநில வீரர்களையும் ஏலம் எடுத்து தமது அணிக்கு ஆட வைத்து பெரும் செலவு செய்கின்றனர். அந்த செலவில் ஒரே ஒரு சதவிகிதத்தையாவது கேரம் விளையாட்டுக்கும், உள்ளூர் விளையாட்டு வீரர்களுக்கும் தரலாமே? உள்ளரங்க விளையாட்டுகளை வளர்க்க நான் என்னை அர்ப்பணித்துக் கொள்வேன்.

ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்து, அச்சமூகத்துக்கும் இந்திய மக்களுக்கும் உழைத்த அம்பேத்கரைப் போலவே நானும் என் துறையில் உருவாக வேண்டும் என்பதே என் ஆசை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com