Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
ஜூலை 2005
பறையடிப்பது குற்றமா?

விடுதலைப் பார்வையில் தலித் கலைகள்


- கே.எஸ். முத்து


மதுரை தமிழ்நாடு இறையியல் கல்லூரியிலுள்ள ‘தலித் ஆதார மய்யம்' 1995 இல் தொடங்கி வைத்த தலித் கலைவிழா, தலித் கலைகளை அடையாளம் கண்டு அரங்கேற்றுவதற்கான மேடையை அமைத்துக் கொடுத்தது. அப்போது சிலர், “கலைகளில்கூட ஏன் தலித் கலைகள் என்று பார்க்கிறீர்கள்? எது தலித் கலை? தலித் கலைஞர்களுக்கான அடையாளம் என்ன?'' என்பது போன்ற கேள்விகளை முன் வைத்தனர். அக்கேள்விகளுக்கான பதில்களை விளக்கிய பின்பும், மீண்டும் மீண்டும் கேள்விகளை எழுப்பிக் கொண்டே வருகிறார்கள்.

மனிதச் சமூகம் வர்க்கம், இனம், மொழி, மதம், சாதி, படித்தவன், படிக்காதவன் எனப் பிரிந்துதான் கிடக்கிறது. இப்படி ஏற்கனவே துண்டாடப்பட்டுக் கிடக்கிற சமூகத்தை, தலித்துகள்தான் வரிந்து கட்டிக் கொண்டு பிரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், மனித இன வரலாற்றை எழுதியவர்கள் மிகக் கவனமாக கல்வி மறுக்கப்பட்ட தலித்துகள் குறித்த வாழ்வியல் உண்மைகளை இருட்டடிப்பு செய்தது மட்டுமின்றி, அவர்களை இழிவான - கீழ்த்தரமான பார்வையிலேயே பதிவு செய்திருக்கின்றனர்.

இத்தகைய திரிபுவாத அரைகுறைக் கருத்துகள் - குற்றாலக் குறவஞ்சி, பள்ளு, நொண்டி நாடகம், நந்தனார் சரித்திரம் போன்ற இலக்கிய நூல்களில் ஏராளமாகக் கிடக்கின்றன. கரைபடிந்த வரலாற்றுப் பக்கங்கள் உணர்த்தும் பாடத்தையும், நிகழ்கால சாதியச் சமூகம் விளைவித்துக் கொண்டிருக்கும் இலக்கிய வன்கொடுமை அனுபவங்களையும், விடுதலைக்கான உலைக்களத்தில் வார்த்தெடுக்கப்பட்ட பின்னரே தலித் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் தங்களுக்கான கலை இலக்கியங்களை, புதிய பார்வையில் படைத்தளிக்க முன்வந்துள்ளனர். தலித் கலைகளும் அதே பாய்ச்சலோடுதான் விடுதலைக்கான திசைகளில் இன்று அணி வகுத்துக் கொண்டிருக்கின்றன.

"கலை கலைக்காக', "கலை மக்களுக்காக' என இரண்டு கோட்பாட்டு முறைகள் கலை மற்றும் பண்பாட்டுத் தளங்களில் நிகழ்த்தப்படுகின்றன. அதிகாரத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு கோலோச்சும் சக்திகளையும், ஆதிக்க வர்க்கத்தினரையும் போற்றிப் புகழ்ந்து பாடுவதும் அவர்கள் செய்கின்ற ஊழல்களை, சுரண்டும் கொடுமைகளை, ஏற்படுத்தும் அவலங்களை மறைத்து அவர்களுக்காகப் பரிந்து பேசுவது, நடிப்பது, ஆடுவது, எழுதுவது முதலியவற்றை கலை, கலைக்காக எனப் பொருள் கொள்ளலாம். அடித்தட்டு மக்களின் பார்வையிலிருந்து இவ்வுலக நடப்புகளைக் கூர்ந்து கவனித்து, ஆதிக்கச் சாதிகளை அதிகார வர்க்கங்களை கலை இலக்கிய வடிவங்கள் மூலம் எதிர்ப்பதை ‘கலை மக்களுக்காக' எனப் பொருள் கொள்ளலாம். இவ்விரண்டு அளவுகோல்களின் அடிப்படையில் இன்று பண்பாட்டுத் தளங்களில் எழுதுவோர், பாடுவோர், பேசுவோர், ஆடுவோர், நடிப்போர் யார், யார் எனவும் அவர்கள் யார் பக்கம் நிற்கிறார்கள் என்பதையும் நாம் அடையாளம் காண முடியும்.

சாதியை நிலைநாட்டுதல், இந்து மதவெறியைத் தூண்டுதல், பாசம், காமம், போதை, பேராசை போன்ற சீரழிவுக் கலாச்சார உணர்வுகளை விதைத்தல், தனி நபரை முன்னிலைப்படுத்துதல், ஆதிக்க மனப்பான்மையை ஏற்படுத்துதல், ஒற்றைப் பண்பாட்டை மய்யப்படுத்துதல் இவைகளை உள்ளீடாகக் கொண்ட பார்ப்பனிய, சாஸ்திரிய, மேற்கத்திய கலைகள் வெகு மக்களின் மனதில் ‘தரமானவை', ‘புனிதமானவை' என்றதொரு பொய்யான எண்ணத்தை உருவாக்கியுள்ளன. எடுத்துக்காட்டாக, காமசூத்திரத்தின் செயல்வடிவமான ‘பரத நாட்டியம்' தெய்வீக நடனமாக, தேசியப் பண்பாட்டின் பெருமையை உணர்த்தும் ஆட்டமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பரத நாட்டியத்தின் வரலாறு என்னவென்பதை ஆங்காங்கே இருக்கின்ற இந்துக் கோயில்களின் சிலைகள் வெளிப்படுத்தும் ‘காமலீலை' களைக் கொண்டு அவதானிக்க இயலும். என்னைப் பார், என் அழகைப்பார், என் அங்க உறுப்புகளைப் பார், என்னுடல் அசைவுகள் ஏற்படுத்தும் கிளர்ச்சிகளைப் பார் என ஆர்ப்பரிக்கும் ஆபாச நடனமான பரத நாட்டியத்தைப் பார்க்கின்ற பார்வையாளரின் மனதுக்குள் பிற்போக்குத்தனமான, கழிசடைத்தனமான உணர்வுகளையே எழுப்புகின்றன.

மணிக்கணக்கில் விடிய, விடிய அந்த ஆட்டத்தை வேடிக்கை பார்த்தாலும் அது ஒருபோதும் விடுதலை உணர்வைத் தூண்டாது. ஏனெனில், அந்த நடனத்தில் அழகியல், மென்மை என்பது அடிப்படைப் பண்புகளாக இருப்பதால், உழைக்கும் மக்களை மயக்க நிலையில் வைத்திருக்கவே அக்கலை உதவுகிறது. ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களின் கலைகள் யாவும் கூட்டுச் சிந்தனை கொண்டவை. சமத்துவம், ஒற்றுமை, எதிர்ப்புணர்வு, போர்க்குணம், எளிமை, அழகியல் போன்ற மானுட நேர்மறைப் பண்புகளைக் கொண்டவை. உரத்தன்மை, கூட்டுத்தன்மை, கடினத்தன்மை என்பதே இக்கலைகளின் அடிப்படை சாரம்சமாகும்.

விடுதலை உணர்வை ஒவ்வொரு பார்வையாளன் மனதிலும் ஊட்டக்கூடிய ஆற்றல், தலித் கலைகளுக்கு உண்டு. தலித் கலைவெளிப்பாடுகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதாக இல்லாமல், உண்மையானதாக உண்மை வாழ்வோடு இணைந்ததாக நம்பப்படுகிறது. அவை முழுவதுமாக ஒரு சடங்கு நடத்தப்படும்போது, பயன்படுத்தப்படும் பொருள்களின் உணர்வுபூர்வத் தன்மையைப் பெற்றிருக்கின்றன. இந்த உணர்வுப்பூர்வ வெளிப்பாடு, அழகியல் தன்மையைப் பாராட்டி மட்டும் நின்றுவிடுபவைகளாக இல்லாமல், அதைப் பார்ப்பவனை அதில் பங்கு கொள்ளவும், அதே உணர்வு நிலையை பெறவும் நிர்பந்திக்கிறது.

மனித சமூகத்தைச் சிதறடிக்கும் சாதி அமைப்பிற்கெதிராகக் கூடிவாழும் உயர்வகை மரபைப் போற்றும் தலித் கலைகள் தன்மையில் மனித ஒற்றுமையை முன்வைக்கின்றன. நரம்புகளில் துடிப்பேற்றும் பறை இசையும், போர் உத்தியை வெளிப்படுத்தும் கழியாட்டம், ஒயிலாட்டம், சில்லாட்டம் போன்ற கலைவடிவங்கள் மனித உறவில் போற்றி வளர்க்கப்பட்டவை. கும்மியும் கரகமும் வெளிப்படுத்தும் அழகியலும் நளினமும் மண்ணிசையோடு ஒன்றிக் கலந்தவை. அக்கலைகளின் உயிர்த்துடிப்பும் தனித்தன்மையும், மக்களின் வாழ்வனுபவங்களில் வெளிப்படுபவை. அவற்றின் அழகியலும், நேர்த்தியும் உள்ளடக்கமும் தலித் மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை. எந்தவொரு இசைக்கல்லூரியிலோ, பல்கலைக் கழகத்திலோ அல்லது பண்பாட்டுக் கலாசாலையிலோ சென்று கலைகளுக்கான இலக்கணங்களைப் படித்தறிந்துவிட்டு, இத்தகைய கலைவடிவங்களை தலித் மக்கள் உருவாக்கவில்லை. மாறாக, உற்பத்தி உறவுகளில் அவர்கள் நேரடியாக ஈடுபட்டிருந்த போது, அவர்களால் உருவாக்கப்பட்டு நிகழ்த்தப்பட்டு வருவதே இக்கலைகளின் சிறப்புத் தன்மையாகும்.



செவ்வியல் கலைகளும், மேற்கத்திய கலைகளும் புதிய புதிய வேகத்தில் பண்பாட்டுத் தளத்தில் வந்திறங்கிய போதும், அவைகளால் தாக்குப் பிடிக்க முடியாமல் வந்த வேகத்திலேயே அடையாளம் தெரியாமல் அடித்துச் செல்லப்படும் சூழலில், இங்கு ‘கலாச்சார வெற்றிடம்' என்பது தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது. எந்த ஒரு கலை வடிவம் எல்லாக் காலத்திற்கும் பொருந்தக்கூடிய வகையில் மக்களின் ரசனை உணர்வை பூர்த்தி செய்துவிட முடியாது. பல்வேறு சமூக நெருக்கடிகள், பிரச்சனைகளினூடாகத்தான் கலையும், ரசனையும் கடந்து செல்ல வேண்டியுள்ளது.

ஆனால், தலித் கலைகளோ, காலத்தையும் மீறி பண்பாட்டுத் தளங்களில், சமூக அரங்குகளில் நிகழ்த்தப்பட்டு வருவதை யாரும் குறைத்து மதிப்பிட இயலாது. ஏனெனில், அக்கலைகள் பொழுதுபோக்கு அம்சங்களை மட்டும் கொண்டிருக்கவில்லை. மக்களைப் போராடத் தூண்டும் வலிமையையும் அவை பெற்றுள்ளன. ஒடுக்குண்ட, அடிமைப்படுத்தப்பட்ட மக்களை பண்பாட்டுத் தளத்தில் விடுவிக்கக் கூடிய ‘பேராற்றல்' தலித் கலைகளுக்கு உண்டு என்பதை, சமகால நிகழ்வுகள் பல உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

"உலக அளவில் மனித சமூகங்கள் மீது நடந்த பல்வேறு வன்முறைகள், கொடுமைகள், தாக்குதல்கள், ஆதிக்கங்களுக்கு எதிராக முதல் குரல் ஆங்காங்கே கலை இலக்கியங்களில் எழுந்திருக்கிறது. மனிதச் சாவுகளை நோக்கி எழும் கலகங்களாகவே இவை இருந்து வந்திருக்கின்றன. இசையிலும் இவ்வகைக் கலகம் மிக நேரடியாகவும், சில சமயம் சங்கேதமான குறியீடாகவும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. உலக நாகரீகம் என்று கூறிக் கொண்ட சமூகங்கள் எந்த இனத்தை, எந்த நிறத்தைக் கேவலமானதாக ஒதுக்கி வைக்க வேண்டியதாக பல நூற்றாண்டுகளாக நிர்பந்தித்து வந்ததோ, அந்த இனம்தான் இன்று உலகிற்கான இசையைத் தந்து கொண்டிருக்கிறது. அந்த நிறம்தான் உலகிற்கான ஆட்டத்தை தந்து கொண்டிருக்கிறது. அவைகளில் ஒன்றுதான் பறையிசையும் அதன் வீரியமிக்க ஆட்டமும்.

இப்பேரண்டத்தை தன் போரிசையால் கவர்ந்திழுக்கும் பறையிசைக் கருவியும், அப்பேரிசையை முழக்கும் இசைக் குடிகளும் சங்க காலத்திலோ, காப்பிய காலத்திலோ இழிவாக நடத்தப்படவில்லை. மநுதர்மத்தை செயல்வடிவமாக்கிய சோழர்களின் ஆட்சிக்குப் பின்னரே, ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் பறையிசையும் அதனை இசைப்போரும் தீண்டத்தகாதவைகளாக முத்திரை குத்தப்பட்டன. சோழர் காலத்திற்கு முன் பறையும், அதை இசைக்கும் குடிகளும் தீண்டத்தகாதோர் என நடத்தப்பட்டதற்கான குறிப்புகள் இல்லை. ஆனால், பறை சமூகத்தில் மதிப்புமிக்க ஓர் இசைக்கருவியாக இருந்ததற்கான சான்றுகள் நிறைய இருக்கின்றன.

சாதியக் கட்டமைப்பை உடைத்தெறிய தொடர்ந்து போராடிக் கொண்டு வரும் தலித் மக்களை, சாதியத்தை உள்வாங்கிக் கொண்டோர் கீழ்த்தரமாக நடத்துவது, மிகப் பெரிய மனித உரிமை மீறல் என்பதை நாடறியும். அவர்களது மூளைக்குள் இத்தகைய பிற்போக்குத் தனமான, விலங்காண்டித்தனமான சிந்தனை நீடித்து வருவதையெண்ணி நமக்கு கவலை இல்லை. ஆனால், தலித்துகளில் சிலர் படித்துப் பட்டம் பெற்று அரசு அலுவலகங்களில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணிபுரிவோர், தாங்கள் இன்னாரென்பதை சாதியச் சமூகம் அடையாளம் கண்டுகொள்ளாதபடி நகரங்களில் மறைந்து பயந்து வாழ்வோர், மதத்தை மாற்றிக் கொண்டோர் மத்தியிலும் பறையிசை குறித்தும், அதை இசைப் போர் குறித்தும் தவறான மதிப்பீடுகள் இருப்பதை சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. சாதி இந்து மனநிலை, நடுத்தர நகர்ப்புற தலித்துகளிடம் இருக்கலாமா?

‘நாங்கள் மறந்து தொலைத்ததை, வீதியில் போட்டு எரித்து அழித்ததை, இவர்கள் மேடையேற்றி அடித்து எங்களைக் கேவலப்படுத்துகிறார்கள்' என சிலர் குமுறுகிறார்கள். சரி பறை அடிக்காத இவர்களை சாதி இந்துக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? இவர்களை சரிசமமாக நடத்துகிறார்களா? பறையடிக்கவில்லை என்பதற்காக வாழ்த்துகிறார்களா? என்றால் இல்லை. பறையடிப்பது அவமானம், இழிவு என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களும், அதை விமர்சனத்துக்கு உட்படுத்திக் கொண்டிருப்பவர்களும், பறையிசைப்பதையே தங்களுடைய தொழிலாகக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பறையிசைக் கலைஞர்களின் வாழ்க்கைக்கு மாற்று வேலை திட்டத்தையும் வகுத்தளிக்க வேண்டிய சமூகப் பொறுப்புணர்வும் இன்று மிக அவசியமானதாகும்.

யானைக்குத் தன் பலம் தெரியாது என்று சொல்வார்கள். அதுபோல பறையிசைக் கருவியின் வரலாறு மற்றும் பெருமைகளை பறையடிப்போரே தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்கிற நிலை உள்ளது. சாதி இந்துக்கள் நினைப்பது போல ‘பறை' சாதாரண சாவுக்கு அடிக்கும் பறை மட்டுமல்ல; பறை உழைக்கும் மக்களுக்குரிய ஆட்டக்கருவி. உலகிலேயே தாளக்கருவிகளின் சுதியை அதிகரிக்க நெருப்பை பயன்படுத்தும் ஒரே கருவி பறை மட்டுமே. இதுமட்டுமே ஒலிவாங்கி உதவியின்றி காற்றைக் கிழித்துச் செல்லும் கருவியாகும். தோலிசைக் கருவிகளுக்கெல்லாம் தாயாக விளங்கி வருவது இப்பறையிசைக் கருவிதான். வரலாற்றின் பல கட்டங்களில் தலைசிறந்த தகவல் தொடர்பு சாதனமாக, அதிவிரைவில் செய்தியைக் கொண்டு செல்லும் ஊடகக் கருவியாக விளங்கிய பறை, மன்னர்களின் அரசவைக் கூடங்களிலும், கோயில் திருவிழாக்களிலும் முழங்கியது. பார்ப்பனியச் சூழ்ச்சியால் இப்பறை, பிணத்திற்கு முன் இசைக்கப்படும் கருவியாகத் திணிக்கப்பட்டது.

சாதி இந்துக்களின் கொலை மிரட்டல்களால் கூப்பிட்ட நேரம் ஓடோடி வந்து, கூலியின்றி இசைக்க தலித் கலைஞர்கள் நிர்பந்திக்கப்பட்டனர். கிராமப்புறங்களில் காணப்படும் குலசாமி முன்னோர் வழிபாட்டு விழாக்களில் தலித்துகள் பறையடிக்க வற்புறுத்தப்பட்டனர். பல ஊர்களில் இத்தகைய ஆதிக்க சாதிகளின் வற்புறுத்தலுக்கு அடிபணிய மறுத்த தலித்துகள், கொடூரமாகத் தாக்கப்பட்டனர். பறையடிக்க மறுத்ததால், பல ஊர்களில் கோயில் திருவிழாக்கள் நடைபெறாமல் நின்று போயின. திருவிழா நடைபெறாத காரணத்தால் கலவரங்கள் மூண்டன.

எடுத்துக்காட்டாக, இழவுக்கு சேதி சொல்வது, பறையடிப்பது, செத்த பிணங்களைப் புதைப்பது போன்ற அடிமைத் தொழில்களை செய்ய மறுத்த தஞ்சை மாவட்டத்திலுள்ள குருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த குருமூர்த்தியின் கட்டை விரலை அக்கிராமத்து சாதி இந்துக்கள் 5.6.1994 அன்று துண்டித்து, அதை ஒரு கண்ணாடிக் குடுவையில் போட்டு காட்சிக்காக வைத்தனர்.

இதேபோன்று அய்யம்பாளையம் மாரியம்மன் கோயில் திருவிழாவில் பறையடிக்க மறுத்ததால் கலவரம் மூண்டு, அக்கோயில் விழா நடைபெறாமல் போனது. இவ்வாறு சமூக மாற்றத்திற்காக, சாதி ஒழிப்புக்காக, சமத்துவ உலகைப் படைப்பதற்காக பறையைக் கையாளும்போது, பறை ஒரு இசைக்கருவி என்ற நிலையைக் கடந்து அது விடுதலைக்கான கருவியாகவும் மாறுகிறது.

திண்ணியத்தில் நடந்த வன்கொடுமையின் உச்சத்தை உலகமே அறியும் வகையில், தொகுப்பு வீடு கட்டிக் கொடுக்கத் தவறிய சுப்பிரமணியன் என்ற தலைமையாசிரியரின் அயோக்கியத்தனத்தை தண்டோரா போட்டு அறிவித்தது பறை. ஊரெல்லாம் பறையடித்து நம்மை அவமானப்படுத்தி விட்டானே என்ற ஆத்திரத்தில், நியாயம் கேட்டவனின் வாயில் மலத்தைத் திணித்தான். பலமுறை வீடுகட்டிக் கொடுக்கும்படி கெஞ்சிக் கூத்தாடி கேட்ட கருப்பையா, தன்னிடமிருந்த பறையை ஒரு சமூகக் குற்றவாளியின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்துவதற்கான போர்க்கருவியாகப் பயன்படுத்தினார். இந்த இடத்தில் பறை என்பது, விடுதலைக்கருவியாக கையாளப்பட்டதை உணர்ந்து கொள்ள முடியும். அதுவரை பிணத்திற்கு அடிக்கும் சாப்பறை, போர்ப்பறையாக ஒலித்தபோது, சாதி இந்துக்களின் இதயங்களில் "பறையிசை' பேரிடியாக விழுந்து எதிர்ப்புத் தன்மையை வெளிப்படுத்தியது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


- விடுதலைப் பார்வை தொடரும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com