Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
 width=
 width=

பாபாசாகேப் பேசுகிறார்

இந்து சட்டவரைவை பிரதமர் நேரு திட்டமிட்டே நிறைவேற்ற மறுத்தார் - V

இந்து சட்ட வரைவு அவையின் முன்னால் இருந்த போதே, அது உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. ஓர் ஆண்டுவரை அதைப் பொறுக்குக் குழுவுக்கு அனுப்புவது அவசியம் என்றே அரசு கருதவில்லை. 1948 ஏப்ரல் 9 அன்று தான் அது பொறுக்குக் குழுவின் பரிசீலனைக்காக அளிக்கப்பட்டது. 1948 ஆகஸ்டு 12 அன்று தான் அந்த சட்டவரைவு குறித்த அறிக்கை அவைக்கு வழங்கப்பட்டது. 1948 ஆகஸ்டு 31 அன்று அந்த அறிக்கையை ஆய்வு செய்யக்கோரும் தீர்மானத்தை, அவையில் கொண்டு வந்தேன். தீர்மானத்தைக் கொண்டு வருவதற்காகவே சட்ட வரைவு அவையின் நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், 1949ஆம் ஆண்டின் பிப்ரவரி கூட்டத்தொடர் வரை, இந்தத் தீர்மானம் குறித்து விவாதம் நடைபெற அனுமதிக்கப்படவில்லை. பின்னர் விவாதம் அனுமதிக்கப்பட்டது.

Ambedkar அப்போதும் கூட தொடர்ந்த விவாதத்திற்காக அது அனுமதிக்கப்படவில்லை. அது விட்டுவிட்டுப் பத்து மாதங்களும், பிப்ரவரியில் 4 நாட்களும், மார்ச்சில் 1 நாளும், 1949 ஏப்ரலில் 2 நாட்களும் நடைபெற்றது. இதற்குப் பின்னர் 1949 டிசம்பரில் இச்சட்ட வரைவுக்கு ஒரு நாள் ஒதுக்கப்பட்டது. அது டிசம்பர் 19 ஆகும். அன்று தான் பொறுக்குக்குழுவினால் பரிந்துரைத்தபடியான எனது சட்ட வரைவு, பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1950ஆம் ஆண்டில் சட்ட வரைவுக்கு நேரம் எதுவும் கொடுக்கப்படவில்லை. அடுத்தபடியாக, அவையின் முன் சட்ட வரைவு வந்தது 1951 பிப்ரவரி 5ஆம் தேதியாகும். அப்போது சட்ட வரைவு ஒவ்வொரு விதியாகப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பிப்ரவரி 5, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே சட்ட வரைவுக்கு ஒதுக்கப்பட்டு, பின்னர் அது கிடப்பில் போடப்பட்டது.

இது, இப்போதைய நாடாளுமன்றத்தின் இறுதிக் கூட்டத் தொடராதலால், இந்த நாடாளுமன்றம் முடிவடைவதற்கு முன்பே இந்து சட்டத் தொகுப்பு சட்ட வரைவை நிறைவேற்றுவதா அல்லது புதிய நாடாளுமன்றத்திற்கு அதனை விட்டு விடுவதா என்பதை அமைச்சரவை தீர்மானிக்க வேண்டியிருந்தது. இந்த நாடாளுமன்றத் தொடரிலேயே இந்த சட்ட வரைவை நிறைவேற்றுவது என்று அமைச்சரவை ஒருமித்ததாக முடிவு செய்தது. ஆகவே சட்ட வரைவு நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்டது. மேற்கொண்டு விதி வாரியான பரிசீலனைக்காக 1951 செப்டம்பர் 17 அன்று அது எடுத்துக் கொள்ளப்பட்டது.

விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பிரதமர் ஒரு புதிய யோசனையை முன்வைத்தார். அதாவது, கிடைக்கக்கூடிய கால நேரத்திற்குள் சட்ட வரைவை முற்றிலுமாக நிறைவேற்ற இயலாது. ஆகவே சட்ட வரைவு முழுவதையும் நிறைவேற்ற அனுமதி அளிப்பதற்குப் பதிலாக, அதன் ஒரு பகுதியை சட்டமாக இயற்றுவது விரும்பத்தக்கது என்று அவர் யோசனை கூறினார். “மொத்தமும் இழந்துவிடக்கூடிய நிலையில் இருக்கும் போது, ஒரு பகுதியையாவது பாதுகாப்பது நல்லது” என்ற முதுமொழிக்கு இணங்க நானும் அதை ஏற்றுக் கொண்டேன்.

திருமணம் மற்றும் மணவிலக்குக்கான பகுதியை நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று பிரதமர் யோசனை கூறினார். இந்த வகையில், சிதைக்கப்பட்ட வடிவத்தில் சட்ட வரைவு தொடர்ந்தது. சட்ட வரைவு குறித்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் விவாதங்களுக்குப் பின்னர், பிரதமர் மற்றுமொரு யோசனையை முன்வைத்தார். திருமணம் மற்றும் மணவிலக்குப் பகுதி உட்பட, சட்ட வரைவு முழுவதையுமே கைவிட்டு விடலாம் என்பது அவரது யோசனையில் இருந்தது.

தலைமீது இடி விழுந்தது போல, இது எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான் பெரிதும் திகைத்துத் திணறிப் போய் எதையும் சொல்ல முடியாத நிலைக்கு வந்தேன். இந்த சிதைக்கப்பட்ட சட்ட வரைவும் போதிய கால நேரம் இல்லாத காரணத்தால் கைவிடப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்ள நான் தயாராக இல்லை. அமைச்சரவையின் மிகவும் ஆற்றல் வாய்ந்த பிற உறுப்பினர்களின் சட்ட வரைவுக்கும் பத்திரிகைத் துறை சட்ட வரைவுக்கும் எப்படி முன்னுரிமை வழங்கப்பட்டிருக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ள என்னால் முடியவில்லை...

ஆகவே அவகாசம் இல்லை என்பதால் சட்ட வரைவைக் கைவிடும் பிரதமரின் முடிவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனது பதவி விலகலுக்காக இந்த விரிவான விளக்கத்தை நான் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். ஏனெனில் நான் நோய்வாய்ப்பட்டிருப்பதன் காரணமாகவே பதவி விலகுவதாகக் கூறும்படி என்னிடம் சிலர் யோசனை கூறியுள்ளனர். இத்தகைய யோசனைகள் எதையும் நான் ஏற்கத் தயாரில்லை. நோய்வாய்ப்பட்டிருப்பதன் காரணமாக எனது கடமையைக் கைவிடும் கடைசி மனிதன் நான்தான்.

எனது பதவி விலகல் காலங்கடந்து நடந்துள்ளது என்றும், அரசின் வெளியுறவுத் துறைக்கொள்கை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் நடத்தப்படும் விதம் எனக்கு நிறைவளிப்பதாக இல்லை என்றும் நான் எண்ணியிருந்தால், முன்னதாகவே நான் பதவி விலகியிருக்க வேண்டும் என்று சிலர் கூறலாம். இக்குற்றச்சாட்டு நியாயமானது போல் தோன்றக்கூடும். -தொடரும்

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 14(2), பக்கம்: 1324)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com