Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu width=
 width=ஜனவரி 2009

எல்லா ஆயுதப் போராட்டங்களும் ஜனநாயகத்திற்கு எதிரானவை அல்ல
சந்திப்பு : பூங்குழலி


(கடந்த இரு இதழ்களில் வெளிவந்த எஸ்.ஏ.ஆர்.கிலானியின் பேட்டி இந்த இதழுடன் நிறைவடைகிறது.)

இந்தியாவின் ஒட்டுமொத்த நீதித்துறையும் வகுப்புவாத சிந்தனையோடு இருப்பதாகச் சொல்கிறீர்களா?

Gilani ஒட்டுமொத்தமாக வகுப்புவாத சிந்தனையோடு இருப்பதாகச் சொல்ல மாட்டேன். ஆனால், நீதிமன்றங்களில் வகுப்புவாத சிந்தனைப் போக்கு இருக்கத்தான் செய்கிறது. அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. முன் தீர்மானங்கள் இருக்கின்றன. அவை முஸ்லிம்களுக்கு எதிராக மட்டுமல்ல. பினாயக் சென் ஒரு முஸ்லிம் அல்ல. மாவோயிஸ்டுகள் என்று முத்திரைக் குத்தப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் முஸ்லிம்கள் அல்லர்; பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள். ஆனால் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுபவர்களுக்கு எதிராக, ஒரு பாகுபாடான சிந்தனைப் போக்கு இருக்கத்தான் செய்கிறது. பினாயக் சென்னுக்கு கீழ் நீதிமன்றம் மட்டுமல்ல; உச்ச நீதிமன்றமும் பிணையை மறுக்கிறது. அவர் ஒரு முஸ்லிம் அல்ல. அதனால்தான் சொல்கிறேன். வகுப்புவாத சிந்தனைப் போக்கு மட்டுமல்ல; பல விதங்களில் முன் தீர்மானங்களும் பாகுபாடுகளும் இருக்கின்றன. இந்த நாட்டின் பிரதமர் கூறிய அதே செய்தியைத்தான் நானும் சொல்கிறேன். இந்த நாட்டின் நீதித்துறை நிலைகுலையும் நிலையில் இருக்கிறது. ஒட்டுமொத்த அமைப்பும்

அழுகிப் போயிருக்கிறது.

அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் இந்தியாவின் நீதித்துறையில் உள்ள ஊழல் பற்றிய செய்திகள் வெளிவந்தன - கீழ் நீதிமன்றங்கள் தொடங்கி மேல் நீதிமன்றங்கள் வரை. அதிலும் மேல் நீதிமன்றங்களில் ஊழலும் மேலாகவே இருக்கிறது; கீழ் நீதிமன்றங்களை விட அதிகமாகவே உள்ளது. அதோடு நீதித்துறையினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே ஒரு கிரிமினல் கூட்டு உள்ளதைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதிகாரத்தில் உள்ளவர்களை திருப்திப்படுத்தவே எல்லாமும் நடக்கின்றன. இத்தனைக்கும் பிறகு நீதித்துறையில் என்னதான் மிச்சமிருக்க முடியும்? அதனால்தான் சொல்கிறேன். வகுப்புவாத சிந்தனை மட்டுமல்ல; பாகுபாடுகளும் உள்ளன. தங்கள் உரிமைகளுக்காகப் போராடுபவர்களுக்கு எதிரான பாகுபாடுகள். அவர்கள் தலித்துகளாக இருக்கலாம்; பழங்குடியினராக இருக்கலாம்; பல்வேறு அரசியல் கருத்தியலைக் கொண்டிருப்பவர்களாக இருக்கலாம். நிச்சயமாக பாகுபாடு இருக்கத்தான் செய்கிறது.

பல்வேறு கொடுமைகளையும் சந்தித்துப் போராடி, விடுதலை பெற்ற மறு நாளே தொடர்ந்து போராடப் போவதாக அறிவிக்கிறீர்கள். கைதுக்கு முன்னரே நீங்கள் ஒரு போராளியாகவே வாழ்ந்திருந்த போதும், இத்தனைத் துன்பங்களுக்குப் பிறகு உங்கள் குடும்பத்தினர் இதனை எப்படி எடுத்துக் கொண்டனர்?

s_court நான் கைது செய்யப்பட்டு, மூன்றாம் தர என்று சொல்லக் கூடிய அல்லது அதற்கும் கீழாக ஏதேனும் சொல்ல முடியுமானால், அத்தகைய துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டேன். எல்லா வகையான மனிதத்தன்மையற்ற கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டேன். எனது குடும்பத்தினரை கடத்தினர். மூன்று நாட்கள் கடத்தி வைத்திருந்தனர். எனது மனைவியும் இரண்டு குழந்தைகளும் கடத்தப்பட்டனர். அச்சமயம் எனது குழந்தைகள் சின்னஞ் சிறியவர்களாக இருந்தனர். பள்ளிக்குக்கூட செல்லாத வயது. அவர்கள் காவல் துறையினரால் கடத்தப்பட்டனர். எனது சகோதரரை கடத்தினார்கள். படித்துக் கொண்டிருந்த எனது இரு மைத்துனர்களைக் கடத்தினார்கள். உடல் ரீதியான சித்ரவதைகள் மூலம் என்னிடமிருந்து எந்தத் தகவலையும் பெற முடியாத நிலையில் எனக்கு உளவியல் ரீதியான அழுத்தங்களை கொடுக்கத் தொடங்கினார்கள். அவர்கள் சொல்லும்படியான ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை நான் கொடுக்க வேண்டும் என வற்புறுத்தினார்கள். நான் அவ்வாறு செய்ய மறுத்தால் என் கண் முன்னால் எனது மனைவி வன்புணர்வு செய்யப்படுவார் என்றும், என் குழந்தைகள் கொல்லப்படுவார்கள் என்றும் அச்சுறுத்தப்பட்டேன்.

என் குடும்பத்தினர் மூன்று நாட்கள் காவல் துறையினரின் பிடியில் அவதிப்பட்டனர். என் குடும்பத்தினர் என்னைச் சிறையில் பார்த்துள்ளனர். கைவிலங்கிடப்பட்ட நிலையில் பார்த்துள்ளனர். ரத்தம் வழிய வழிய நின்ற நிலையில் கண்டுள்ளனர். அதோடு அவர்களே ஆயுதம் ஏந்தியவர்களுக்கு இடையே ஒரு சிறிய அறையில் அடைத்து வைக்கப்பட்ட நிலையை கடந்துள்ளனர். அவர்களும் பலவித உளவியல் ரீதியான கொடுமைகளை நேரடியாக சந்தித்துள்ளனர். எனது மகன் அச்சமயம் தொடக்கப் பள்ளிக்குக்கூட செல்லவில்லை. அவ்வளவு சிறியவன். அவன் என்னை காவல் துறையினரின் பிடியில் கண்டிருக்கிறான். முதன் முதலாக அவன் என்னைச் சிறையில் வந்து பார்த்தபோது, அவனுடன் எனது மனைவியும் உறவினர் ஒருவரும் வந்திருந்தனர். எனது உறவினர் சிறையில் எனக்கு என்ன மாதிரியான வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன என்பதைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார். என்ன மாதிரியான படுக்கை வழங்கப்பட்டுள்ளது என்று கேட்டார். உடனே எனது மகன், "என்ன மாதிரியான படுக்கை என்று எனக்குத் தெரியும்' என்று கூறினான். "இரண்டு கருப்புப் போர்வைகள் வழங்கியிருப்பர். ஒன்று விரித்துக் கொள்ள; மற்றொன்று போர்த்திக் கொள்ள' என்று கூறினான். அவன் காவல் துறையினரின் பிடியில் என்னைப் பார்த்திருக்கிறான். அதை நினைவு வைத்திருக்கிறான். அதோடு நான் உங்களை கை விலங்கில் பார்த்திருக்கிறேன் என்று நினைவுபடுத்திக் கூறினான். அவனுக்கு அது ஒரு வகையான அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

தற்போது அவன் ஆறாம் வகுப்பு படிக்கிறான். அவன் தொலைக்காட்சியில் ஓர் அரசியல் விவாத நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ "உண்மைகள்' என்று நிகழ்ச்சியில் சொல்லிக் கொண்டிருந்தனர். அவன் உடனே, "எல்லாம் பொய்; எதுவும் உண்மையில்லை' என்று கூறினான். இது மாதிரியான பாதிப்புகளைத்தான் அவனிடம் காண முடிகிறது.

சமூகத்திலும் பல்வேறு அனுபவங்களை நாங்கள் சந்தித்திருக்கிறோம். நான் குடியிருந்த பகுதியில் முஸ்லிம்கள் குடியிருக்கவில்லை. சொல்லப் போனால் அந்தப் பகுதியில் குடியிருந்த ஒரே முஸ்லிம் நானாகத்தான் இருந்தேன். தொடக்கத்தில் மிகவும் கடினமாகவே இருந்தது. அந்தப் பகுதி பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருந்ததால், நான் அந்தப் பகுதியில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்தேன். அதுவே மிகுந்த சிரமத்திற்குப் பிறகு தான் கிடைத்தது. பின்னர் எனது குடும்பத்தினருடன் குடியேறியபோது, எனது வீட்டு உரிமையாளரிடம் பலரும் ஏன் ஒரு காஷ்மீரியை குடியமர்த்தியிருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதனால் சுற்றிலும் ஓர் இறுக்கம் நிலவியது. நான் கைது செய்யப்பட்டதும் அது அதிகமாகியது. எனது தொலைபேசி, காவல் துறையினரால் எடுத்துச் செல்லப்பட்டது. அதனால் எனது குடும்பத்தினர், எனது உறவினர்களிடம்கூட தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் வெளியே சென்றுதான் தொலைபேசி அழைப்புகள் செய்ய இயலும். ஆனால் அந்தப் பகுதியில் எனது குடும்பத்தினரை அறிந்திருந்த காரணத்தினால், யாரும் தொலைபேசியைப் பயன்படுத்த அனுமதிக்கவில்லை. எனது மகளை பள்ளியில் சேர்க்க வேண்டிய பருவம் வந்தபோது, எந்தப் பள்ளியும் அவரை சேர்த்துக் கொள்ளவில்லை. முற்போக்காக சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தும் எந்தப் பள்ளியும் எனது மகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் எனது மகளை காஷ்மீருக்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டியிருந்தது. எனது மகன் அந்த வயதைக்கூட எட்டவில்லை. அவன் அவரைவிட சிறியவனாக இருந்தான்.

என் குடும்பத்தினர் எங்கு சென்றாலும்... ஓ! இவர்கள் கிலானி குடும்பத்தினரா? என்று ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியான பாகுபாடுகளை சந்திக்க வேண்டியிருந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட உடன் அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து காலி செய்ய நிர்பந்திக்கப்பட்டனர். அதனால் வேறு இடங்களில் வீடு தேடிக் கொண்டிருந்தனர். ஆனால் தில்லியின் எந்தப் பகுதியிலும் அவர்களுக்கு வீடு கொடுக்க எவரும் தயாராக இல்லை. முஸ்லிம்கள் பகுதியில்கூட வீடு கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் எனது சகோதரர் காவல் துறையினரிடம் சென்று, கிலானிக்கு தில்லியெங்கும் சொத்துக்கள் இருப்பதாகச் சொன்னீர்களே, அவை எங்கிருக்கின்றன என்று சொன்னால் அவற்றில் ஒன்றில் நாங்கள் குடி புகுந்து கொள்வோம் என்று கேட்டார். அப்படி எதுவும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் பல வீடுகளை வாங்கியிருப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால் அவை எங்கிருக்கின்றன என்று சொல்லுங்கள் என்று கோபமாக கேட்டுள்ளார். இறுதிவரை எனது குடும்பத்தினருக்கு யாரும் வீடு கொடுக்கவில்லை. இறுதியாக, காவல் துறையினரே ஆலோசனை வழங்கினார்கள். நீங்கள் இன்னார் என்பதைச் சொல்லாமல் உங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் கிலானி குடும்பத்தினர் என்பதை மறைத்து வீடு தேடுங்கள், கிடைக்கும் என்று கூறினார்கள். அப்படிதான் அவர்கள் இறுதியாக ஒரு வீட்டைப் பிடிக்க முடிந்தது. அவர்கள் தங்கள் அடையாளத்தை மறைக்க வேண்டியிருந்தது. அவர்கள் என்னை சந்திக்க வருவார்கள். ஆனால் வீட்டு உரிமையாளருக்கு அவர்கள் என் குடும்பத்தினர் என்று தெரியாது. இத்தகைய கடும் மன உளைச்சல்களுக்கு அவர்கள் ஆளாக நேர்ந்தது. அவர்கள் மிக மோசமான உளவியல் அழுத்தத்திற்கு ஆளானார்கள்.

Gilani இத்தனைக்குப் பிறகும் நீங்கள் மீண்டும் பொது வாழ்வில் பணியாற்ற, உங்கள் குடும்பத்தினர் சம்மதிக்கிறார்களா?

அவர்கள் அனைத்தையும் பார்த்திருக்கிறார்கள். என்னைச் சுற்றி நடந்தவற்றை மட்டுமல்ல, எங்கள் நாடான காஷ்மீரில் நடப்பதும் அவர்களுக்குத் தெரியும். அவர்கள் என்னுடனேயே இருக்கிறார்கள். நாட்டின் பிற பகுதிகளில் நடப்பவற்றைக் குறித்தும் அவர்கள் அறிவார்கள். அவர்கள் மிகப் பெரிய அழுத்தங்களுக்கு ஆளானதால், உலகெங்கிலும் உள்ள பாதிக்கப்பட்ட மக்களோடு அவர்களால் தங்களை எளிதாக அடையாளப்படுத்திக் கொள்ள முடிகிறது. என்னை ஒரு முறை சிறையில் வந்து சந்தித்தபோது, என் மனைவி என்னிடம் கூறியதை என்னால் மறக்கவே முடியாது. “நானும் எனது பிள்ளைகளும் என்றும் உங்களுக்கும் உங்கள் போராட்டத்திற்கும் உறுதுணையாக இருப்போம் என்ற உறுதியை உங்களுக்கு அளிக்கிறேன்'' என்று அவர் கூறினார். இது எனக்கு மிகப் பெரிய பலத்தை அளித்தது. நான் வெளியில் வந்த பிறகும் இத்தனை இன்னல்களை சந்தித்த பிறகும், எனது உறவினர்களில் சிலர் எங்கள் மீதான அக்கறையில் பலவித அறிவுரைகளை சொல்வதுண்டு.

ஒரு முறை ஓர் உறவினர் என்னிடம் "நீ போதுமான அளவுக்கு துன்பப்பட்டு விட்டாய். இனியாவது காஷ்மீரைப் பற்றியும் இது போன்றவற்றைக் குறித்தும் பேசாதே' என்று கூறினார். எனது தாய் இதைக் கேட்டுக் கொண்டிருந்தார். பொதுவாக ஒவ்வொரு தாயும் தனது மகனைப் பாதுகாக்கவே விரும்புவார். இருப்பினும் எனது தாய் அந்த உறவினரிடம் என்ன கூறினார் என்றால், "ஒருவேளை என் மகனால் இந்தப் பிரச்சினையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியுமானால், அவன் அவனது பங்கை தொடர்ந்து ஆற்ற வேண்டும் என்றே நினைக்கிறேன்' என்று கூறினார். உங்கள் குடும்பத்தினரிடமிருந்து வரும் இது போன்ற கருத்துக்களும், அர்ப்பணிப்பும் உங்களுக்கு நிச்சயமாக பெரும் பலத்தையும் ஊக்கத்தையும் அளிக்கிறது. அதனால்தான் சொல்கிறேன், எனது குடும்பத்தினர்தான் என்றும் எனக்கு பலம் அளிப்பவர்களாக இருக்கிறார்கள்.

அரசியல் கைதிகளுக்கான ஓர் அமைப்பைத் தொடங்கியிருக்கிறீர்கள். அரசியல் கைதிகள் என்று சொல்லும்போது தோழர் தியாகு ஒரு நேர்காணலில், ‘இந்தியாவில் அரசியல் கைதிகள் என்று யாரும் கிடையாது' என்று சொல்லியிருக்கிறார். உங்கள் அமைப்பில் யாரை அரசியல் கைதியாக வரையறுக்கிறீர்கள்?

உண்மைதான். சட்டப்படி இந்தியாவில் அரசியல் கைதிகள் என்று யாரும் கிடையாதுதான். இன்று நீங்கள் எந்த சிறைக்குச் சென்று அரசியல் கைதிகளை காண விரும்புவதாகக் கூறினாலும், அப்படி யாரும் இங்கு கிடையாது என்ற பதில்தான் கிடைக்கும். ஆனால் உண்மையில் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். அய்க்கிய நாடுகள் அவை, கைதிகள் குறித்த ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அரசியல் கைதிகளை அங்கீகரித்துள்ளது. அரசியல் கைதிகள் என்று ஒரு பிரிவை அது குறிப்பிட்டுள்ளது. ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களையும் அரசியல் கைதிகள் என்று அய்.நா. அங்கீகரித்துள்ளது. அய்.நாவின் இந்த அறிக்கையில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. இதைத்தான் இரட்டை நிலைப்பாடு என்கிறேன். உலக அளவில் ஒன்றை ஒப்புக் கொண்டு அதில் கையெழுத்திட்டு விட்டு, மறுபுறம் உங்கள் நாட்டில் அதை செயல்படுத்துவதில்லை.

மேற்கு வங்காளத்தில் அரசியல் கைதிகள் என்று ஒரு பிரிவு வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கென ஒரு சட்டம் உள்ளது. ஆனால் அந்த சட்டம் தற்போது நடைமுறையில் இல்லை. ஆக, முதலில் நாடெங்கும் சென்று மக்களைத் திரட்ட உள்ளோம். ஏனெனில் மக்களுக்கு தவறான செய்திகளே சென்றடைகின்றன. உண்மையான அரசியல் கைதிகள் மக்கள் மத்தியில் தவறாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர். அதனால் முதலாவதாக அரசியல் கைதிகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டியுள்ளது. உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது.

அரசியல் கைதிகள் என்று யாரை அடையாளம் காண்பீர்கள்?

உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட நெறிமுறைகளின் அடிப்படையிலேயே நாங்களும் அரசியல் கைதிகளை அடையாளம் காண்கிறோம். மாறுபட்ட அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்கள். தங்கள் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள். மாறுபட்ட அரசியல் கருத்தியல்களை, கொள்கைகளைக் கொண்டவர்கள். அந்த கருத்தியல் மற்றும் கொள்கையின் அடிப்படையில் போராடுபவர்கள். காஷ்மீரிலோ, வடகிழக்கு மாகாணங்களிலோ தங்களின் தன்னுரிமைக்காகப் போராடுபவர்களானாலும் சரி, தமிழ்த் தேசியவாதிகளைப் போல தங்களின் தேசிய அடையாளத்திற்காகப் போராடுபவர்களானாலும் சரி, மாவோயிஸ்டுகளைப் போல தங்களின் நில உரிமைக்காகப் போராடுபவர்களானாலும் சரி, தங்கள் சமூக உரிமைகளுக்காகப் போராடும் தலித்துகளானாலும் சரி, தங்கள் நிலப் பறிப்புக்கு எதிராகப் போராடி வரும் பழங்குடியினரானாலும் சரி, இடப்பெயர்வுக்கு எதிராகப் போராடுபவர்களானாலும் சரி - இவை எல்லாமே அரசியல் கருத்தியல்கள். அவர்களது நோக்கம் மக்களின் மேம்பாடே. ஒரு மேம்பட்ட நல்ல சமுதாயமே அவர்களின் கனவு. அவர்கள் தங்களின் சுயநலத்திற்காகப் போராடவில்லை. அவர்கள் கொள்ளையடிக்கவில்லை. நாம் அவர்களின் கருத்தியலோடு வேறுபடலாம். அவர்களின் போராட்ட வழிமுறை நமக்கு உடன்பாடாக இல்லாதிருக்கலாம். அது ஆயுதப் போராட்டமா அல்லது அறவழிப் போராட்டமா என்று நாம் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. எல்லா ஆயுதப் போராட்டங்களும் ஜனநாயகத்திற்கு எதிரானவை அல்ல. அப்படி ஜனநாயகத்திற்கு எதிரானது என்றால், சுபாஷ் சந்திர போசை நீங்கள் என்னவென்று கூறுவீர்கள்? பகத்சிங்கை எப்படி அழைப்பீர்கள்?

எல்லா ஆயுதப் போராட்டங்களையும் ஒட்டுமொத்தமாக ஜனநாயக விரோதமானது என்று கூறிவிட இயலாது. நீங்கள் தற்போது நடக்கும் அனைத்து ஆயுதப் போராட்டங்களின் பின்னணியையும் ஆராய்ந்தால், இந்த மக்கள் தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடியிருக்கிறார்கள் என்பதைக் காணலாம். மிக நீண்ட காலத்திற்கு அவர்கள் அறவழியில் போராடியிருக்கிறார்கள். அந்த வழிமுறைகள் எல்லாம் பயனளிக்காமல் போன பிறகு வேறு வழியின்றி ஆயுதங்களை எடுக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான் சொல்கிறேன். ஆயுதப் போராட்டங்களை ஜனநாயக விரோதமானது என்று ஒதுக்கிவிட முடியாது. ஆக இது போன்ற குழுக்களை, அமைப்புகளைச் சார்ந்த கைதிகளை அரசியல் கைதிகளாகத்தான் நடத்த வேண்டும். ஆனால் அதே வேளை, அந்த அமைப்புகள் வெறுப்பை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தால், மனித நேயத்திற்கு எதிரானதாக, ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானதாக இருக்குமானால் அது வேறு. ஆனால் மக்களின் நலனுக்காக உழைப்பவர்கள் மக்களின் பொது நன்மைக்காகப் போராடுபவர்கள் - ஒரு மேம்பட்ட சமுதாயத்திற்காகப் போராடுபவர்கள். அவர்கள் எல்லாம் நிச்சயமாக அரசியல் கைதிகள்தான்.

உங்களுடைய செயல்திட்டங்களை சொல்லுங்கள்.

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய பிரச்சாரத்தை முன்னெடுப்பது. இந்த அரசியல் கைதிகள் யாரென மக்களுக்கு சொல்வது. அந்த இயக்கங்களின் உண்மை நிலையை எடுத்துரைப்பது. அரசு மற்றும் ஊடகங்கள் நடத்தும் பொய்ப் பிரச்சாரங்களை முறியடிப்பது. இது முதன்மைப் பணி.

இரண்டாவதாக, இந்தியாவில் அரசியல் கைதிகளின் தகுதி நிலையை பெற்றுத் தரப் போராடுவோம். பல்வேறு அரசியல் கட்சிகளைச் சந்தித்து, அவர்களின் தேர்தல் அறிக்கையில் இதுவும் இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்துவோம்.

இவற்றிற்கு மேலாக, எங்கள் அடிப்படைக் கோரிக்கை என்னவெனில், அரசியல் கைதிகள் அனைவரும் எவ்வித முன் நிபந்தனையுமின்றி விடுவிக்கப்பட வேண்டும். ஏனெனில், அவர்கள் மீதான நேர்மையான விசாரணை சாத்தியமற்றது என்பதை கண்டிருக்கிறோம். ஒட்டுமொத்த அமைப்பும் அவர்களுக்கு எதிரான முன் தீர்மானங்களைக் கொண்டதாகவே உள்ளது. அதனால்தான் அவர்களை விடுவிக்கக் கோருகிறோம்.

இவற்றிற்கு இடையே இந்த அரசியல் கைதிகளுக்கு சட்டப்பூர்வமாக செய்யக் கூடிய உதவிகளையும் செய்ய உள்ளோம். இந்த அமைப்பை உருவாக்குவதற்கு முன்பே நான் விடுதலை பெற்ற உடனேயே 2004இல் அரசியல் கைதிகளுக்காகப் பணியாற்றுவேன் என்று உறுதி கூறினேன்.

அதன்படி கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஓர் அமைப்பை உருவாக்கினோம். அந்த தளத்தில் இயங்கிக் கொண்டிருந்த சில நண்பர்கள், மாணவர்கள் மற்றும் நான் சிறையில் இருந்தபோது எனக்காக குரல் கொடுத்த வழக்குரைஞர்கள் என நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த அமைப்பை உருவாக்கினோம். தமிழ் நாட்டிலிருந்து ஒரு பெண், வடகிழக்கிலிருந்து ஒரு பெண் எனப் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் எங்களுடன் இணைந்து பணியாற்றினர். அப்போதிருந்து நாங்கள் இதில் பணியாற்றிக் கொண்டிருந்தோம். அதே நேரத்தில் இதனை விரிவுபடுத்த வேண்டும் என்றும் விரும்பினோம். அதற்காகவும் முயற்சிகள் எடுத்தோம். பலரை சந்தித்தோம். இணைந்து பணியாற்ற முடிவெடுத்தோம். இணைந்து இந்த அமைப்பை உருவாக்கினோம். எங்களுக்குள்ள வரையறைகளுக்கு உட்பட்டு எங்களால் இயன்ற சட்டப்பூர்வமான உதவிகளை வழங்கி வருகிறோம். இந்தியத் துணைக் கண்டத்தில் பல முனைகளிலும் உள்ள மக்கள், ஒரு பொது நோக்கத்திற்காக ஒருங்கிணைந்து செயல்படுவது இதுவே முதன் முறை என நினைக்கிறேன். இது எங்களுக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கிறது. கண்டிப்பாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறோம்.

மரண தண்டனை ஒழிப்பு தங்களுடைய செயல்திட்டத்தில் வருகிறதா?

எங்கள் தேசிய மாநாட்டில், மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். ஒருவருக்கு உயிரை நம்மால் வழங்க இயலாதபோது, அதை எடுக்க எந்த உரிமையும் நமக்கு கிடையாது. அது மட்டுமல்ல, ஆயுள் தண்டனை என்பது 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கக் கூடாது என்பதையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். பல தளங்களில் நாங்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளோம். மக்களின் துணையோடு எங்கள் லட்சியத்தை அடைவோம் என்று உறுதியாக நம்புகிறேன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com