Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu width=
 width=ஜனவரி 2009

சாதியம்: வரலாற்றுக்கு உட்படுத்தப்பட வேண்டும்
ஞான. அலாய்சியஸ்


buthar இந்தியா என்பது ஒரு சாதியச் சமூகமாக உள்ளது என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன் மூலமாகவே அதன் சாதியம் நிலைநிறுத்தப்பட்டும், உறுதிப்படுத்தப்பட்டும் வருவதைக் காணலாம். இந்திய சமூகம் இன்று சாதிய சமூகமாக வெளிப்படுவதால், அது என்றுமே இவ்வாறான சாதியச் சமூகமாகவே இருந்ததா? இல்லை யென்றால் என்றிலிருந்து, எவ்வாறு அது சாதிய சமூகமாக மாறுதலடைந்தது என்ற கேள்விகள் எழுகின்றன. இந்தியச் சமூகம் என்றுமே சாதியச் சமூகமாகவே இருந்து வந்திருக்கிறது என்ற கருத்து வெளிப்படையாக இல்லாவிட்டாலும், மறைமுகமாகவாவது ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது.

இந்து மதம் சனாதனமானது என்ற சொற்றொடரானது, உண்மையிலேயே சாதிய உறவுமுறை சனாதனமானது என்ற பொருளையே கொண்டிருக்கிறது. இதுவே "இந்து தர்மம்' என்றும் "சனாதன தர்மம்' என்றும் சொல்லப்படுகிறது. "தர்மம்' என்ற சொல் இத்துடன் இணைக்கப் பெறும்பொழுது, அது இயற்கையையொட்டியது என்றும், தர்மமானது என்றும் அதன் தன்மையையே அடிப்படையாகக் கொண்டது என்றும் பொருளாகிறது. அதாவது இந்தியச் சாதிய உறவுமுறை இயற்கைத் தன்மையை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இது வரலாற்றுக்கும், வரலாற்றில் நிகழும் மாறுதல்களுக்கும் அப்பாற்பட்டது என்றும் பொருளாகிறது. சாதிய முறை நீண்டகாலமாக இருந்து வரும் முறை என்பதால் - அது காலத்தாலும் வழக்கத்தாலும் நியாயப்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி அது எப்பொழுதுமே எதிர்காலத்திலும் இருக்கப்போவதும், இருக்க வேண்டியதென்றும் உட்கருத்துக்களைக் கொண்டுள்ளது.

இவ்வகையான கண்ணோட்டம், சாதிய உறவுமுறைகளால் சிறப்பும் பயனும் அடையும் சமூகக் குழுக்களுக்கும், சக்திகளுக்கும் இயல்பானதே. எந்தவொரு சமூகக் கட்டமைப்பும் தமக்குச் சாதகமாயுள்ள எதனையும் மாறுதல்களிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கான உத்தியே இது. சாதியமுறை இயற்கையையும், மனிதர்களின் இயற்கையான மாறுபட்ட குணங்களையும் அடிப்படையாகக் கொண்டது என்ற வாதம் முன்வைக்கப்படும்போது, அதனை மாற்ற முயல்வது இயற்கைக்கு விரோதமான செயல்பாடாகிறது. வரலாற்றுக்குட்பட்ட சமூக இயங்கியலை, வரலாற்றுக்கு அப்பாற்பட்டதாகக் கணக்கிடுவதுமே மதவாதமயமாக்குதலின் உட்கரு.

சாதிய உறவு முறை பற்றி ஆதிக்க சாதிகளினால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வலியுறுத்தப்பட்டு வரும் இக்கண்ணோட்டம் - காலாவட்டத்தில் சாதிய உறவு முறையால் இழப்புறும், அழிந்துவரும் சமூகக் குழுக்களின், அடிமைச் சாதிகளின் கண்ணோட்டமுமாக மாறுவதே - சாதியத்தின் முதல் மாபெரும் வெற்றியாகக் கருதப்படும். அதன்படியே இன்று சாதியத்தை எதிர்க்கும் அல்லது எதிர்ப்பதாகவாவது காட்டிக் கொள்ளும் சமூக சக்திகள், அந்த சாதிய எதிர்ப்பு இயங்கியலுக்குள்ளேயே, சாதியம் பற்றிய இக்கண்ணோட்டத்தை உள்வைத்தே இயங்குவதை இன்று காண முடிகிறது. என்றுமே சாதியம் என்ற முன்மொழிதலோடு செயல்படும் சாதி எதிர்ப்புக் கருத்துகள், அதன் தொடக்கக் கட்டத்திலேயே பலமிழந்து விடுகின்றன.

சாதிய எதிர்ப்பு என்பது அறிவிக்கப்பட்ட நோக்கமாக இருப்பினும், சாதியத்துக்குள் பங்கு பெறுவதே உடனடி இலக்காக மாறி விடுகிறது. சாதியத்துக்குள் பங்கு கேட்பதும், பெறுவதும், பெற்றதை உறுதிப்படுத்துவதும் தவிர்க்க முடியாத - உடனடி குறுநோக்கு இலக்காக இருந்த போதிலும் அதுவே, சாதியத்திற்கு தொடர்ந்து மறுவாழ்வளிக்கும் வழியாக மாறிவிடுவது கண்கூடு. தெரிந்தோ தெரியாமலோ பங்குபெறுவதே - இந்த இயங்கியல் இக்கட்டுக்கு அடித்தளமாக இருக்கிறது.

அடிமைச் சாதிகளின் எதிர்ப்புக் கண்ணோட்டம் இதனின்று மாறுபட்டதாக செயல்பட வேண்டும். என்றும் சாதியம் என்று இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டதாகக் காணப்படும் உணர்வு, என்றிலிருந்து சாதியம் என்ற கேள்விக்கு மாற வேண்டும். சாதியத்தை வரலாற்றுக்குட்படுத்துவதே சாதியத்தை மறுப்போரின் முதல் கருத்தியல் பணி. சாதியத்தை வரலாற்றுக்குட்படுத்துவதன் உட்கருத்து என்னவென்றால், வரலாற்றின் குறிப்பிட்டதொரு காலகட்டத்தில் சாதியம் துணைக்கண்டத்தில் எழுந்ததென்று சொல்லப்படுமானால், மற்றொரு காலகட்டத்தில் அதே சாதியம் வரலாற்றிலிருந்து அழிக்கப்படக் கூடும் என்ற அடிப்படைத் தத்துவம் உறுதிப்படும்.

இன்றுள்ள பெரும்பான்மையான சாதி எதிர்ப்பாளர்களுக்கு சாதி என்றாவது ஒழியும் என்ற நம்பிக்கை உணர்வு இருப்பதாகத் தெரியவில்லை. இவ்விதமாக நம்பிக்கையற்ற அல்லது பலவீனமான நமபிக்கையுடன் செயல்படும் எதிர்ப்பு, விரைவில் சாதியத்திற்குள் பங்கு பெறுவதோடும், பெற்ற பங்கைப் பெருக்கிக் கொள்வதோடும் நின்று விடுவது இயல்பே. இந்நிலையை, சாதியத்தை வரலாற்றுக்கு உட்படுத்திப் பார்க்கும் கண்ணோட்டம் ஓரளவுக்குச் சீர் செய்யக் கூடும்.

இரண்டாவதாக, பிற சமூக இயங்கியல்கள் போலவே சாதியமும் வரலாற்றிற்கு உட்பட்டதே என்றால், அந்த வரலாற்றுப் போக்கில் ஏற்றத் தாழ்வுகளும் மாறுதல்களும் ஏற்பட்டிருப்பதும் இயல்பே. பார்ப்பனிய சாதியம் வரலாற்றின் தொடக்கக் கட்டங்களிலிருந்து முறையாக, தொடர்ச்சியாக வளர்ந்து கொண்டே அல்லது பரவிக் கொண்டே வந்து, இன்றைய ஆதிக்க நிலையை அடைந்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. வரலாற்றின் பல காலகட்டங்கள் சாதியத்திற்கு எதிராகச் செயல்பட்டிருக்கலாம்; சாதியத்திற்கெதிரான சமூக சக்திகள் சில காலங்களில் வெற்றியும் அடைந்திருக்கலாம்; சாதிய எதிர்ப்பின் தாக்குதல்களால் சாதியமே உருமாறிப் போயிருந்திருக்கலாம்; திசை மாறியுமிருக்கலாம்.

வரலாற்றுச் சமூக வளர்ச்சியில் எம்மாதிரியான காலகட்டங்கள் சாதியத்திற்கு எதிராகச் செயல்பட்டு சாதியத்தை வென்றனவென்றும், எம்மாதிரியான சமூகத் தாக்குதல்கள் சாதியத்துடன் போராடி வெற்றி பெற்றன என்பவைகளுமான ஆய்வுகள், இன்று உடைக்க முடியாதபடி உறுதியாக வெளிப்படும் சாதியத்தின் உள் பலவீனங்களை எடுத்துக் காட்டும். அப்பலவீனங்களைச் சாதிய எதிர்ப்பு சக்திகளின் பலங்களாக மாற்றவும் உதவும்.

மூன்றாவதாக, சாதிய எதிர்ப்புகளை உள்ளடக்கிய வரலாற்றியங்கியலுக்கு உட்படுத்தி நோக்கும்போது எதிர்ப்புச் சக்திகளின் ஆளுமை, சுயமான அகநிலை படைத்த செயல் தன்மை வெளிப்பட வாய்ப்புண்டு. இன்றைய சாதியம் பற்றிய சொல்லாடலில் பெருவாரியாக ஆளுமையும் செயல் தன்மையும் சாதியச் சக்திகளின் குணங்களாகவும், சாதி எதிர்ப்பு சக்திகள் வெறும் எதிர்வினையாகவுமே கருதப்படுகின்றன. இது மட்டுமின்றி, சாதிய எதிர்ப்புகளும் சாதியத்தால் தோற்றுவிக்கப்பட்டவைகளே; அதனால் ஆட்டுவிக்கப்படுபவைகளே என்ற தோற்றத்திற்கும் இடமுண்டாகிறது. இந்தக் கண்ணோட்டத்தில் சாதியமே செயல் தன்மை கொண்டதாகவும், சாதிய எதிர்ப்பு செயலற்ற - பரிதாபத்திற்குரியதாகவுமே சித்தரிக்கப்படுகிறது.

இத்தகைய சிந்தனையும், சித்தரிப்பும் ஆதிக்கக் கருத்தியலின் வெளிப்பாடேயாதலால், அவற்றிலிருந்து மீளுவதற்கானதொரு வழி சாதியத்தை வரலாற்றுக்குட்படுத்துவதன் மூலம் திறக்க வாய்ப்பு உண்டு. இந்தியா ஒரு சமூக - சமத்துவ சமுதாயம் என்பதும், இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றைத் தொடர்ந்து வரும் - நீண்டதொரு சமத்துவப் போராட்ட வரலாறாகச் சித்தரிப்பதற்குப் போதிய ஆதாரங்கள் வெளிவந்துள்ளன என்பதும் உண்மையே. வரலாற்றை மாற்றியமைப்பதும் மரபினை மீட்டெடுப்பதும் தவிர்க்க இயலாத எதிர்ப்புக் கருத்தியல் பணிகளே.

சாதியம், என்றிலிருந்து என்பதை அடுத்து எழும் மற்றொரு கேள்வி சாதியம் எங்கே என்பது. இந்தியத் துணைக்கண்டம் மிகவும் பரந்து விரிந்த பலதரப்பட்ட சுற்றுப்புறச் சூழ்நிலைகளைக் கொண்டது மட்டுமின்றி, வரலாற்றில் பல்வேறு வகையான, சமனமற்ற முறையில் வளர்ச்சி பெற்ற சமுதாயங்களை உள்ளடக்கியது. இந்தியா ஒரு சாதிய சமுதாயம் என்று பேசப்படுவதில், இவ்வகையான இயற்கை மற்றும் செயற்கை மாறுபாடுகளும், சமத்துவமற்ற வளர்ச்சிகளும் குறைவாக மதிப்பிடப்பட்டு, மறைக்கவோ மறுக்கவோ படுகின்றன. இம்மாதிரியான வரலாற்றில் தோன்றிய மாறுபாடுகளும் வேறுபாடுகளுமே - சாதிய எதிர்ப்பு உணர்வுகளையும், உத்திமுறைகளையும் உள்ளடக்கியவை. இவற்றைத் தூண்டிவிட்டு, விரிவுபடுத்தி, உறுதிப்படுத்தி - சாதியத்திற்கு எதிராக நிலைநாட்டுவதற்கான வாய்ப்புகள் குறைந்து விடுகின்றன.

மேல்மட்டக் கட்டமைப்பு அளவில் இந்தியா ஒரு சாதிய சமுதாயம் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால் அதே சமயத்தில் இன்று காணப்படும் மேல்மட்ட சமுதாயக் கட்டமைப்பே இந்தியா என்று கூறுவதும் அல்லது ஏற்றுக்கொள்வதும் ஆதிக்கக் கருத்தியலுக்கு அடிபணிவதேயன்றி வேறல்ல. ஏனென்றால், வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தோன்றிய சாதியம் எங்கும் ஒரே அளவிலோ, ஒரே தன்மையிலோ வேரூன்றவில்லை; வெளிப்படுவதுமில்லை.

சாதியத்தை வரலாற்றுக்குட்படுத்துவதன் இரண்டாம் கட்டமாக, எங்கு சாதியம் என்ற கேள்விக்குப் பதில் எங்கிருந்து சாதியம் என்றும், எங்கெங்கு சாதியம் என்றும் கேட்பதிலேயே தெளிவு பெறும். இந்தியத் துணைக் கண்டத்தில் சாதியத்தின் உற்பத்தி என்று தொடங்கியது என்பதிலும், எங்கு தொடங்கியது

என்பதிலும் வரலாற்றறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை. எனினும், என்று, எங்கு என்ற கேள்விகள் சாதியம் பற்றியதான விவாதங்களில் எடுக்கப்படுவதோ, பேசப்படுவதோ இல்லை. இதுவும் ஆதிக்க சாதிகளின் கருத்தியல் வெற்றியே. என்றும் சாதி என்பது போல், எங்கும் சாதி என்பதால் - சாதியம் சொல்லாடல்கள் மூலம் தேசியமயமாக்கப்பட்டு, எல்லாப் பிரச்சினைகளுக்கும் அடித்தளமாயும், மேல்தளமாயும் அமைந்து விமர்சனக் கண்ணோட்டத்திற்கு அப்பாற்பட்டதாகி விடுகிறது.

எதிர்க் கருத்தியல் கண்ணோட்டத்தில் எழும் சாதியத்தின் வரலாறு வேறு. துணைக் கண்டத்தின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சில குறிப்பான அடையாளங்களுடன் தோன்றி, பல நூற்றாண்டுகளாக மற்ற இடங்களுக்குப் பல்வேறு காலகட்டங்களில், தவிர்க்க முடியாத மாறுதல்களோடு பரவி வந்திருக்கிறது; இன்னும் பரவிக் கொண்டும் இருக்கிறது. சாதியத்தின் பரவல் - வரலாறு பொதுவாக செழுமை கொண்ட, அறுவடை மிகுந்த நிலங்களை நோக்கியே சென்றிருப்பதை யும் வரலாற்றறிஞர்கள் சுட்டியுள்ளனர்.

சாதியத்தை உருவாக்கி, அதனால் பயனடைந்து வரும் சமூக சக்திகள், தொடக்க காலக் கட்டங்களில் சிறியதாகவே இருந்தபடியால் இங்கொன்றும் அங்கொன்றுமாக, சிறப்பாகப் படுகை நிலங்களில் மட்டுமே நவீன காலம் வரைக்குமே சாதியச் சமூகங்கள் உருவெடுத்தன, உறுதிப்படுத்தப்பட்டன. இதன் மறுபக்கம் என்னவென்றால், துணைக்கண்டத்தின் பெரும்பகுதி நவீன காலம் வரைக்கும் பார்ப்பனிய சாதியத்தால் பீடிக்கப்படாமலோ, எதிர்த்தோ வந்துள்ளது என்பதே. இன் றைக்கும்கூட பழங்குடியினர் வாழும் இடங்களில் சாதியம் இல்லை அல்லது மிக பலவீனமாகவே காணப்படுகிறது.

வளமை குறைந்த விளைச்சல் தளர்ந்த பெரும்பகுதி இந்தியாவில், சாதியத்தின் முழுமையான ஆக்கிரமிப்பு இன்று காணப்படுவதில்லை. இங்கெல்லாம் ஏறக்குறைய சமத்துவமான சமூக பலத்தோடு இயங்கும் பல்வேறு இனக்குழுக்களையே காண முடியும். இது மட்டுமின்றி, இந்தியாவில் சாதியம் உற்பத்தியான இடத்திலும் எங்கெங்கெல்லாம் பயணித்ததோ அங்கெங்கெல்லாம் சாதிய எதிர்ப்பும் உற்பத்தியானது அல்லது பரவியது என்பதே வரலாற்று உண்மை. சாதியத்தின் அடித்தளம் உழைப்பில்லாவொரு வர்க்கத்தை உள்ளடக்கி இருப்பதால் - ஒன்று, சிலவகையான இயற்கைச் சூழல்களில் வேரூன்ற இயலவில்லை. இரண்டு, உழைக்கும் வர்க்கங்களால் இடையறாது எதிர்க்கப்பட்டும் வந்தது, வருகிறது.

இக்கண்ணோட்டத்தில் இந்தியா ஒரு சாதிய சமூகம் என்பது மட்டுமின்றி, இந்தியா ஒரு சாதியற்ற சமூகம் என்றும் இந்தியா ஒரு சாதிய - எதிர்ப்பு சமூகம் என்று பேசப்படுவதற்கும், அதன் மூலம் அவ்வாறே மாற்றப்படுவதற்கும் ஆதாரங்களும் வாய்ப்புகளும் ஏற்படுகின்றன.

மூன்றாவது கட்டமாக, அதாவது என்று, எங்கு என்ற கேள்விகளுக்குப் பிறகு இந்தியா எப்படிப்பட்ட சாதிய சமுதாயம் என்ற வினா வரலாற்றுக்குட்படுத்துதலின் அம்சமாகத் தோன்றுகிறது. ஆதிக்கச் சாதிகள் பெரும்பாலும் முன்னுக்கு வைப்பதும், அவ்வாறு வைப்பதன் மூலம் அடிமைச் சாதிகளை எதிர்கொள்ளவோ அல்லது உள்வாங்கவோ தூண்டுவதும் ஒருமுகப்படுத்தப்பட்ட சாதியக் கருத்தியல் சித்திரமே. இத்தகைய சாதியம் எங்குமே நடைமுறையில் இல்லை என்பதோடு, இதனை கருத்தியல் மூலமாகவோ செயல்பாடுகள் மூலமாகவோ எதிர்க்கும் அடிமைச் சாதிகள் - இலக்கை நோக்கிச் செல்லாமல் திசை திருப்பப்படுகின்றன. கருத்தியலில் ஒருமைப்படுத்தப்பட்டு முன்னுக்கு வைக்கப்படும் சாதியம், செயல்பாட்டளவில் பல்வேறு கட்டமைப்புகளாக வெளிப்படுகின்றன. இந்த இரண்டு தளங்களை யும் அதன் தளங்களில் எதிர்கொள்ளாத கருத்தியல் செயலற்றே இயங்குகிறது.

இந்தியா ஒரு சாதிய சமூகம் என்று அதனை ஆதிக்கச் சாதிகள் வலியுறுத்தும்போதும், அதையே முழுமையான உண்மை என்று ஏற்றுக் கொண்டு அடிமைச் சாதிகள் எதிர்கொள்ளும்போதும், பல்வேறு வகையாக சிதறுண்டு அதனால் பலமிழந்து காணப்படும் சாதியங்கள் - ஒருமைப்படுத்தப்பட்டு வலிமை பெறுகின்றன என்பது, சாதிய எதிர்ப்பாளர்கள் உணர வேண்டியதொரு உண்மை. அடித்தளங்களில் சாதியம் இன்றும் சிதறியே காணப்படுகிறது; இது சாதியத்தின் பலவீனம். இதனை மறைக்கவும், மறுக்கவுமே ஆதிக்கக் கருத்தியல் "ஒருமைப்பாடு' என்னும் போர்வையில் இடையறாது முயன்று வருகிறது. அடிமைச் சாதிகளின் கருத்தியல் கண்ணோட்டத்தில் சிதறிக் கிடக்கும் சாதியத்தை இன்னும் சிதறடிப்பதும், அவ்வாறு சிதறடிப்பதன் மூலம் பலமிழக்கச் செய்வதுமே இலக்கு.

சாதியம் என்ற சொல்லாடலை ஏற்றுக் கொள்வதென்பதானது, அந்தச் சாதியத்தின் பின் நிற்கும் சமூகச் சக்திகளில் இடையே உள்ள முரண்பாடுகளை எதிர்ப்பிற்குச் சாதகமாகத் திசைதிருப்பத் தவறுவதே. சாதியத்தை அதன் உருவத்திலேயே எதிர்க்க வேண்டிய தளம் உண்டு. அது முக்கியமானதே. ஆனால் அதே நேரத்தில் அந்தத் தளத்தில் நின்று நடத்தப்படும் எதிர்வினைகளால் ஏற்படும் எதிர்பாராத விளைவுகள் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும். சாதியத்தின் ஒருமையும், பன்மையும், ஆதிக்கச் சாதிகளால் மாற்றி மாற்றி தமக்குச் சாதகமாக முன்வைக்கும் தருணத்தில், அதனை அடையாளம் கண்டு அதற்கேற்றவாறு சிக்கலானதொரு எதிர்க்கருத்தியலை உருவாக்க வேண்டியது காலத்தின் தேவை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com