Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
ஜனவரி 2006

ஜாதிக் கட்டுப்பாடு; ஊர் புறக்கணிப்பு பட்டினிச் சாவு - ஆபத்தில் பழங்குடியினர்
முருகப்பன்

17.12.2005 இரவு. விழுப்புரம் மாவட்டம் கொரலூர் கிராம நாட்டாமை ஜெயபால் தலைமையில், அம்மாவட்டத்தைச் சேர்ந்த சாதி இந்துக்கள் ஊர்க் கூட்டம் கூட்டியுள்ளனர். அதில், இருளர்களுக்கு இனி யாரும் வேலை கொடுக்கக் கூடாது. அப்படி கொடுப்பவர்கள் 500 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். இருளர்களின் ஆடு, மாடுகள் சாதி இந்துக்களின் இடங்களில் மேயக் கூடாது என ஊர்க்கட்டுப்பாடு போட்டுள்ளனர். அதற்குப் பிறகு நான்கு நாட்களும், அங்கு வாழ்ந்த 30 குழந்தைகள் உள்ளிட்ட 105 இருளர்களும், கஞ்சி காய்ச்சி குடிக்கக்கூட வழியில்லாமல் பட்டினியாகவே இருந்துள்ளனர். இன்னும் 4 நாட்கள் இந்நிலை நீடித்திருந்தால், சாதி இந்துக்களின் ஊர்க்கட்டுப்பாட்டால் பழங்குடி இருளர்களும், குழந்தைகளும் பட்டினியால் இறந்திருப்பர்.

Amavasai மேலே குறிப்பிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் செய்தி, "பழங்குடி இருளர் சங்க'த்திற்கு நான்கு நாட்கள் கழிந்து தெரிந்தவுடன் உண்மையைக் கண்டறிந்து, பட்டினிச் சாவைத் தடுத்து நிறுத்த அப்பகுதிக்கு விரைந்தோம். சங்கத்தின் முன் முயற்சியாக, இருவரிடம் 4 மூட்டைகள் அரிசி நன்கொடையாகப் பெற்று, கொரலூர் இருளர்களுக்கு அளிக்கப்பட்டது. அரிசி நன்கொடையாகக் கிடைத்த இரவு 12 மணிக்கு, அதைக் கஞ்சி வைத்து சாப்பிட்டனர்.

கொரலூர் கிராமம் கஞ்சனூர் அருகே உள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி (படையாச்சி) என்பவன் மகள் தனலட்சுமியின் ஆடுகள், பழங்குடி இருளரான ரமேஷ் என்பவன் வாழை, பூந்தோட்டங்களில் மேய்ந்துள்ளது. இதைப் பார்த்த ரமேஷ், ஒரு சிறு கல் எடுத்து வீசி ஆடுகளைத் துரத்தியுள்ளார். அப்போது தனலட்சுமி, ரமேஷைப் பார்த்து, “தொடப்பக் கட்டையால அடிப்பண்டா... சாண்டக் குடிச்சவனே... ஆட்ட ஏண்டா கல்லால அடிச்ச'' என்று திட்டியுள்ளார். அதற்கு ரமேஷ், "தோட்டத்தில் ஆடு மேய்ந்தது. அடிக்கவில்லை துரத்தினேன்'' என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட தனலட்சுமி, "இருளப் பையனுக்கு தோட்டம் ஒண்ணு வாழுதா' எனக் கேவலமாகத் திட்டியுள்ளார். பிறகு ஊருக்குள் சென்று, அவருடைய தாயார் மற்றும் அக்காவையும் கூட்டிக் கொண்டு இருளர் குடியிருப்பிற்குச் சென்று ரமேஷையும் மற்ற இருளர்களையும் தரக்குறைவாகவும், அவமானப்படுத்தியும் பேசியுள்ளார். அன்று மாலையே தனலட்சுமியின் தம்பி ராஜேந்திரன், ரமேஷை கடுமையாகத் தாக்கியுள்ளார். தடுத்த ரமேஷின் மனைவியையும் பிடித்து இழுத்து கீழே தள்ளி அசிங்கமாகத் திட்டியுள்ளார்.

மறுநாள் 4.12.2005 அன்று, இது தொடர்பாக கஞ்சனூர் காவல் நிலையத்தில், பழங்குடி இருளர் சங்கப் பொறுப்பாளருடன் சென்று ரமேஷ் புகார் கொடுத்துள்ளார். அதற்கு ரசீது கேட்டதற்கு, அங்கிருந்த தலைமைக் காவலர், "ரசீது வாங்கி வழிச்சி நக்கப் போறீயா'' என்று கேட்டுள்ளார். அன்று மாலை காவல் நிலையம் வந்த ஆய்வாளர் உஸ்மான் அலிகான், சாதி இந்துக்களுடன் சேர்ந்து கொண்டு, புகாரைத் திரும்பப் பெறும்படி இருளர்களை மிரட்டியுள்ளார். இருளர்கள் இதற்கு உடன்படாத நிலையில், காவல் ஆய்வாளர் கடும் கோபத்துடன் எழுந்து சென்று, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிறுவாலை . நாகராஜன் என்பவரை, சட்டையைப் பிடித்து இழுத்து, "உட்காருடா' என்று தள்ளியுள்ளார்.

பாதிக்கப்பட்டு புகார் கொடுக்க வந்தவர்களையே கைதி போல காவல் நிலையத்தில் உட்கார வைத்துள்ளனர். இதுமட்டுமின்றி புகாரை திரும்பப் பெற மறுத்து நியாயம் கேட்டதற்காக, 3 இருளர் பெண்கள் உள்ளிட்ட 6 பேர் மீது பொய்வழக்குப் போட்டுள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால், ஆடு மேய்ந்ததால் வாய்த்தகராறு நடந்த இடத்திலேயே இல்லாத ராஜவேல் என்பவரையும் மற்ற இரு ஆண்களையும் சேர்த்து மூன்று பேரையும் காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்தது. ராஜவேல், இருளர் சங்கத்தின் முகாம் தலைவர். பொறுப்புடனும், திறமையாகவும் பணியாற்றுபவர். இதன் காரணமாகவே போலிசார் இவரையும் கைது செய்துள்ளனர்.

Sundari இருளர்கள் மீது போடப்பட்ட பொய்ப் புகார், போலிசாரால் இரவு முழுவதும் பலமுறை எழுதி எழுதி கிழிக்கப்பட்டு, கடைசியாகத் தயாரிக்கப்பட்டதாகும். தனலட்சுமியை குற்றவாளியாக சேர்க்காத போலிசார், சாதி இந்துக்களிடம் 10,000 ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு, குற்றமிழைக்காத 6 இருளர்கள் மீது பொய்வழக்குப் போட்டு, 3 பேரையும் கைதும் செய்தனர். முதலமைச்சர் கட்டுப்பாட்டில் அதிநவீன வசதிகளுடனும், அதிகளவு ஊதியத்துடனும் இயங்கும் தமிழக காவல் துறையின் லட்சணம் இப்படி சந்தி சிரிக்கிறது!

கொரலூரில் ஊர்க்கட்டுப்பாடு இப்படி என்றால், கொத்தமங்கலத்தையும் கொஞ்சம் பார்த்து விடுவோம். இதுவும் ஆடு சம்பந்தப்பட்டதுதான். திண்டிவனம் வட்டம் செ. கொத்தமங்கலம் கிராமத்தில், இருளர் குடும்பங்கள் மொத்தம் 14 தான். வன்னியர்கள் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 2.12.2005 அன்று இருளரான அமாவாசை என்பவன் ஆடுகள், அந்த ஊர் நாட்டாமையான லட்சுமணக் (கவுண்டன்) கரும்பு நிலத்தில் மேய்ந்தது என்பதற்காக, அவருடைய மகன் சுந்தர்ராஜன் (கவுண்டர்), ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த அமாவாசையின் மகன் பூங்காவனம் என்கிற 18 வயது பையனை, கடப்பாரையால் அடித்துத் தள்ளியுள்ளார். இதைத் தடுத்த பூங்காவனத்தின் தாயார் பச்சையம்மாவை மாராப்பு சேலை, ஜாக்கெட்டை கிழித்து அவமானப்படுத்தி உள்ளார். மேலும், ஒரு சிறிய ஆட்டுக்குட்டியைப் பிடித்து ஓங்கி தரையில் அடித்துக் கொன்றுள்ளார். இது தொடர்பாக பெரிய தச்சூர் காவல் நிலையத்தில் பச்சையம்மா புகார் கொடுத்தார். போலிசார் வழக்குப் பதிந்து, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் சுந்தர்ராஜன் (கவுண்டரை) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து 4.12.2005 அன்று முதல் இக்கிராமத்திலும் இருளர்கள் ஊர்ப்புறக்கணிப்புக்கு ஆளானார்கள். இருளர்கள் யாருக்கும் வேலை கொடுக்கக் கூடாது என சாதி இந்துக்கள் முடிவெடுத்ததுடன், அங்குள்ள கடைக்காரர்களிடம், "இருளர்களுக்குப் பொருள் கொடுக்கக் கூடாது என்றும், மீறி கொடுத்தால் ஊர்க்கட்டுமானம் போட்டு சாதியைவிட்டு நீக்கிவிடுவோம்' எனக் கூறி கடைக்காரர்களை பொருள் தர விடாமல் தடுத்தனர். ஆனால், வன்னியர்களின் இந்த மிரட்டலை மீறி சிறீராம் (செட்டியார்) என்பவர், தன்னுடைய கடையில் தற்போது பொருள் கொடுத்து வருகிறார். இதுகுறித்து நடவடிக்கை கேட்டும், இருளர்களுக்குப் பாதுகாப்பு கேட்டும், கொத்தமங்கலம் முகாம் அமைப்பாளர் சங்கர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் திண்டிவனம் சார்பாட்சியருக்கு 21.12.05 அன்று புகார் செய்தார்.

Ramesh இந்நிலையில், 23.12.2005 அன்று சிறையில் இருந்து பிணையில் வெளிவந்த சுந்தர்ராஜன் (கவுண்டர்), தன் உறவினர்களுடன் பழங்குடி இருளர் குடியிருப்பிற்குச் சென்று, இருளர்களை மிகக் கேவலமாகப் பேசி மிரட்டியுள்ளார். மறுநாள் 24.12.2005 அன்று காலை 6 மணியளவில் சாதி இந்துக்கள், இருளரான ஆறுமுகம், அவர் மனைவி மங்கலட்சுமி என்பவரைத் தூண்டிவிட்டு, கூடவே சிவகொழுந்து (கவுண்டர்), அவர் மனைவி, மகள் அனைவரும் இருளர் குடியிருப்பிற்குச் சென்று, மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்பிய சங்கன் அக்கா காசியம்மாவின் கையை, காலைப் பிடித்துக்கொண்டு கடுமையாக அடித்துள்ளனர். கீழே விழுந்த காசியம்மாளின் மார்பிலும், வயிற்றிலும் சிவகொழுந்தும், ஆறுமுகம் ஏறி மிதித்துள்ளனர்.

இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட காசியம்மா, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கொஞ்ச நேரத்தில் அதே மருத்துவமனைக்கு ஆறுமுகம் மட்டும் வந்து சேர்கிறார். காவல் நிலையம் சென்று, சங்கர், காசியம்மாள் உள்ளிட்ட 5 பேர் மீது சாதி இந்துக்கள் தூண்டுதலின் பேரில் பொய்ப்புகார் கொடுத்துள்ளார் என்பது பிறகுதான் தெரிந்தது. அதன்பிறகு நடந்த சம்பவம் குறித்து காசியம்மாளும் புகார் கொடுத்துள்ளார். ஆனால் போலிசார், வன்னியர் தூண்டுதலின் காரணமாக ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் சங்கரையும் அவரது தந்தையையும் அவசர அவசரமாகக் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். "சங்கம் வச்சிகிட்டு எங்களப் பத்தி நோட்டீசா போடுற' என்று கூறி காவல் நிலையத்தில் சங்கரை, காவல் ஆய்வாளர் குமார் கடுமையாக அடித்துள்ளார்.

உண்மையான புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல், பொய்ப்புகாரில் பாதிக்கப்பட்டவர்களையே காவல் துறை கைது செய்கிறது. சாதி இந்துக்களும் போலிசாரும் (அரசு நிர்வாகம்) சேர்ந்து திட்டமிட்டுச் செய்யும் சதி இது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். காவல் துறை சாதியமயமாகி இருக்கிறது என்பதற்கு வேறு சான்றுகள் தேவையில்லை.

Chitra இரண்டு கிராமங்களிலும், ஜாதிக்கட்டுப்பாடு ஊர்ப்புறக்கணிப்பு என்ற பெயரில் இருளர்கள் சமூகப் புறக்கணிப்புக்கு ஆளானது குறித்து, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டும் அதிகாரிகள் அசையாமலிருக்கிறார்கள். இருளர்களுக்கு இழப்பதற்கு ஏதுமில்லை. ஆனால், அரசியல்வாதிகளுக்கும் இவர்களுக்கு அடிவருடியாக இருந்து அடிமை சேவகம் புரியும் அதிகாரிகளுக்கும் இழப்பதற்கு நிறைய உள்ளன. இது தேர்தல் நெருங்கும் நேரம். இருளர்கள் "தேர்தல் புறக்கணிப்பு' என்கிற ஆயுதத்தைக் கையில் எடுப்பார்கள். இதற்கு இந்த நாட்டு "ஜனநாயகம்' பதில் சொல்லியாக வேண்டும்.

சொந்த ஊரில் இருளர்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்டு வரும் நிலையில், ஜனநாயகம் செத்துப் போனால் தான் என்ன?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com