Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu width=
 width=பிப்ரவரி 2009

தமிழகத்தின் தலித் அகதிகள்
மதிவண்ணனுடன் கண்ணன் - காளிங்கராயன்

“இரு தரப்பு மக்களிடையே மோதல், பலர் படுகாயம், வன்முறையில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் காவல் துறை கைது செய்தது....'' என்பது போன்ற ஆறு வரி செய்திக் குறிப்பினை – நாளிதழ்களின் ஏதேனும் ஒரு மூலையில் நாள்தோறும் கண்டும் காணாமலும் கடந்து போய்க் கொண்டிருக்கிறது இந்தச் சமூகம். அச்சிறு செய்திக் குறிப்பின் பின்னே ஆதிக்க சாதி அமைப்புகளால் செயல்படுத்தப்பட்டு வருகிற அநீதியும், சாதிய வன்முறையும் உள்ளுறைந்து கிடக்கிறது. கோவை மாவட்டம் அவிநாசிக்கருகில் உள்ள நம்பியாம்பாளையம் என்கிற கிராமத்தில், தற்போது நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கும் சமூகக் கொடுமையே இதற்கு சான்று. ஒருபுறம் ஆதிக்கசாதிக் கவுண்டர்களின் கொலை வெறித் தாக்குதல் தொடங்கி, சமூகப் புறக்கணிப்பு வரையும்; மறுபுறம் காவல் துறையினரின் பொய் வழக்குகள் என இருமுனைத் தாக்குதல்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்றனர், அக்கிராமத்தைச் சார்ந்த தலித் மக்கள்.

Nambipalayam சிறிய அளவில் தொடங்கிய தனிநபர் மோதலை காரணமாக்கி, அங்கேயொரு சாதிக்கலவரத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் – அப்பகுதியின் ஆதிக்கசாதிக் கவுண்டர்கள். கவுண்டர்களால் பிரச்சனையின் மய்யமாக முன்னிலைப்படுத்தப்படும் ஜெகந்நாதன் என்கிற தலித் இளைஞர், ஊராட்சித் தலைவரின் மகனை அடித்தார் என்று கூறி நூற்றுக்கணக்கான கவுண்டர்கள் திரண்டு அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். சேரியிலுள்ள அவரது வீட்டிலிருந்து ஊரின் பொதுச் சாவடி வரை அடித்தவாறே இழுத்துச் சென்றுள்ளனர். அப்போது அடிபட்ட காயங்களின் மீது உப்பைத் தடவியும் துன்புறுத்தியுள்ளனர். ஜெகந் நாதனின் வயதான பெற்றோர் உட்பட, எல்லா தலித் ஆண்களையும் பெண்களையும் கேவலமாக வசையாடியபடி உதைத்துத் தள்ளியிருக்கின்றனர்.

இதில் பாதிக்கப்பட்ட ஜெகந்நாதன், ஊராட்சித் தலைவர் முத்துசசி மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முறையீடு செய்துள்ளார். பதிலுக்கு முத்துசாமியும் ஜெகந்நாதன் அவரைத் தாக்கியதாகவும், பொது குடிநீர் குழாயை சேதப்படுத்தியதாகவும் காவல் துறையினர் பொய் வழக்குத் தொடுத்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்து செயல்படும் தலித் விடுதலைக் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் இப்பிரச்சனையில் தலையிட்டுள்ளனர். பல்வேறு ஜனநாயக அமைப்புகளுடன் இணைந்து போராட்டங்களை நடத்தத் தொடங்கிய நிலையில், அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகள் வழக்கம்போல கைதுகள் – விடுவிப்புகள் – சமாதானப் பேச்சுவார்த்தைகள் என்று சாதி இந்துக்களை ஆற்றுப்படுத்தும் விதமாகவே நடந்து கொண்டுள்ளனர்.

அதன்பின்னர், வன்கொடுமையின் உச்சபட்ச வடிவமாக மாபெரும் சமூகப் புறக்கணிப்புக்கு தலித் மக்கள் ஆளாக்கப்பட்டனர். தலித் மக்கள் வாழும் சேரிக்கு தண்ணீர் விடுவது நிறுத்தப்பட்டது. கடைகளில் அரிசி முதலிய பொருட்கள் வழங்கப்படுவதில்லை. இளைஞர்கள் பணியாற்றி வந்த விசைத் தறிகள் மூடப்பட்டு வேலை மறுக்கப்பட்டது. ஊருக்குள் வரும் தனியார் பேருந்து, சேரிக்குள் வருவது நின்று விட்டது. கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக்குள் தலித் குழந்தைகளை அனுமதிக்கக்கூடாது என்ற மிரட்டலுக்கு தலைமை ஆசிரியர் பணியாததால், அது மட்டும் நடக்கவில்லை. இவ்வாறு அரசு எந்திரத்தை முழுவதுமாய் கட்டுப்படுத்தி தலித் மக்களை சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாக்குவது, ஆதிக்க சாதியினரின் தொடர் நடவடிக்கையாக இருக்கிறது.

முற்றிலுமாக ஊர்க் கவுண்டர்களின் சமூகப் புறக்கணிப்பிற்கு ஆளான தலித் மக்கள், தங்களுக்குப் பாதுகாப்பும், வாழ்வுரிமையும் கோரி 12.2.2009 முதல் அவிநாசி – ஈரோடு சாலையில் உள்ள இலங்கைத் தமிழ் அகதி மக்கள் தங்கியுள்ள சந்தைப் பேட்டை அகதி முகாமில் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியோர் உட்பட சுமார் 400 பேர் அங்கு தஞ்சமடைந்துள்ளனர். கொங்குநாடு என்று தற்போது கவுண்டர்களால் "பெருமை'யுடன் அழைக்கப்படும் இந்த மேற்கு மாவட்டங்களின் (ஈரோடு, கோவை, சேலம், நாமக்கல்) பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சாதிய வன்கொடுமைகளுக்கு உள்ளாகிற மக்களாக அருந்ததியினர் உள்ளனர். தூய்மைத் தொழில், செருப்பு கட்டுதல் தவிர, பெரும்பாலும் விவசாயக் கூலிகளாக கவுண்டர்களின் பண்øணயத்தில் வேலை செய்து வந்த அவர்களின் தற்போதைய இளைய தலைமுறையினர் பண்ணை யத்திலிருந்து வெளியேறி – ஓரளவு சுயமரி யாதையுள்ள விசைத்தறி தொடங்கி, பல்வேறு தொழில்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அதுவே கவுண்டர்களின் தற்போதைய கோபத்திற்கான முக்கியக் காரணமாக இருக்கிறது.

நம்பியாம்பாளையத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு சில இளைஞர்கள் தலித் விடுதலைக் கட்சியில் இணைந்து பணியாற்றத் தொடங்கியபோதே கவுண்டர்கள் ஒன்றுதிரண்டு பிரச்சனையை உருவாக்கியிருக்கிறார்கள். தலித் இளைஞர்களால் தொடங்கப் பெற்ற அவ்வமைப்பு பெரிய அளவில் போராட்டங்கள் ஏதும் செய்து விடவில்லை. அருந்ததியர்களை தேர்தல் நோக்கில் ஒருங்கிணைக்கும் பணியை மட்டுமே அது மேற்கொண்டது. அதற்கே கவுண்டர்கள், தலித் இளைஞர்களை ஊர் பஞ்சாயத்து முன்பு அடித்து – வதைத்து அமைப்பைக் கலைத்து விடும்படி மிரட்டி உள்ளனர். ஆனால் அவர்கள், அதற்கு மறுத்து நீங்கள் எங்களைக் கொன்றாலும் பரவாயில்லை, அமைப்பைக் கலைக்க முடியாது என்று உறுதியாக நின்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, தலித் விடுதலைக் கட்சியின் கொடிக்கம்பத்தை நாட்டுவதற்கான முயற்சியில் தலித் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக ஊரின் அனைத்துக் கட்சி கவுண்டர்களும் ஒன்றுதிரண்டு, தலித் விடுதலைக் கட்சியின் கொடியை ஊருக்குள் வரவிடக்கூடாது என்பதற்காக, அனைத்துக் கட்சிக் கொடிகளையும் அப்புறப்படுத்தி விட்டனர். மேலும், இரவு முழுவதும் விசைத்தறிக் கூடங்களில் பணியாற்றி விட்டு பகலில் ஓய்வெடுக்கச் செல்லும் இளைஞர்களை – கோயில் திருவிழாக்கள் மற்றும் சாவு வீடுகளுக்குப் பறையடிக்க வந்தே தீர வேண்டுமென்று மிரட்டி அழைத்துள்ளனர்.

கொங்கு நாடு, கொங்கு வேளாளர் என்கிற சொல்லாடல்களுக்குப் பின்னேயுள்ள சாதி அரசியல் இங்கே கவனிக்கப்பட வேண்டும். தற்போது சுற்று வட்டார 30 கிராமங்களைச் சேர்ந்த கவுண்டர்கள் ஒன்றிணைந்து, நம்பியாம்பாளையம் தலித் மக்களுக்கு எதிரான சாதிய வன்முறையில் இறங்கியுள்ளனர். கொங்கு வேளாளரின் பேரவை முடிந்ததும் (15.02.2009) உங்களை வசமாக கவனித்துக் கொள்கிறோம் என்று பலமுறை மிரட்டல் விடுத்துள்ளனர். “நாங்களே நேராக அடித்தால்தானே, பி.சி.ஆர். போடுவே, வேற வகையிலே நாங்க கவனிச்சுக்கிறோம்'' என்று கூலிப்படை வைத்துக் கொலை செய்து விடுவதாகப் பேசிக் கொள்கிறார்கள் என்று அச்சத்துடன் தெரிவிக்கின்றனர் அருந்ததியினர்.

ஆள், அம்பு, அரசியல் செல்வாக்கு, பணபலம் என வலுவான அதிகாரத்தில் உள்ள ஒரு கும்பல், ஒன்றுமறியாத மக்களைத் தாக்க முனையும்போது, அதனைத் தடுத்து அம்மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறை, நீதித்துறை போன்ற அரசு நிர்வாக அமைப்புகள் – அதிலிருந்து விலகி தாக்குகிற ஆதிக்க சாதியனருக்கே ஆதரவாகச் செயல்படும்போது – அம்மக்கள் தமது சொந்த மண்ணி லிருந்தே புலம் பெயர்ந்து வேறிடத்தில் அகதிகளாகத்தான் வாழ நேரிடும். அத்தகைய அவல நிலையிலேயே நம்பியாம்பாளையம் கிராம தலித் மக்கள் உள்ளனர்.

இத்தகைய சூழலில் வைத்துத்தான் கொங்கு வேளாளரின் "அரசியல் (ஜாதி) எழுச்சி'யை நாம் கவனத்துடன் பார்க்கவேண்டியுள்ளது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டுமென்று மாநாட்டில் கோரிக்கை விடுத்துள்ளனர் அவர்கள். சிங்களப் பேரினவாத அரசின் கொடுந்தாக்குதலுக்கு அஞ்சி உயிர் பிழைப்பதற்காக, உலகின் பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தமிழீழ மக்கள். அவர்களுக்காக நாம் சிந்தும் கண்ணீரும், மேற்கொள்ளும் போராட்டங்களும் உண்மையெனில், ஆதிக்க சாதியினரின் தாக்குதலுக்கு அஞ்சி சொந்த மண்ணிலேயே புலம்பெயர்ந்து அகதிகளாக இம்மக்கள் வாழ நேர்ந்துள்ளதற்கு, நாம் எந்த வகையில் பொறுப்பேற்கப் போகிறோம் என்ற கேள்வி – நம்மை வெட்கமும், பெரும் குற்றவுணர்வும் கொள்ளச் செய்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com