Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
 width=
 width=பிப்ரவரி 2009

ஈழம் - குருதியில் பூக்கும் நிலம்
இளம்பரிதி

“இறுதியாக நான் கொல்லப்படும்போது அரசாங்கம்தான் அந்தக் கொலையை நிகழ்த்தியிருக்கும். எனது மரணம் சுதந்திரத்தின் தோல்வியாகப் பார்க்கப்படக் கூடாது என்று நான் விரும்புகிறேன். தனி மனித விடுதலைக்கான ஒரு புதிய உலகத்தை உருவாக்குவதற்கான சக்திகளை எனது மரணம் திரட்டும் என்று நான் நம்புகிறேன். இப்போது நாம் பேசவில்லையென்றால், பேச முடியாதவர்களுக்காகப் பேச யாரும் இருக்க மாட்டார்கள்.''

– லசந்த விக்ரமதுங்க,

"தி சண்டே லீடர்' என்ற வார இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வந்த லசந்த விக்ரமதுங்க, 8.1.2009 அன்று காலை தன் அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் இலங்கை அரசப்படையின் ஆதரவாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

“என் உடலைக் காவல் துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதைப் புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.''

– முத்துக்குமார்,

Eelam women "பெண்ணே நீ' என்ற வார இதழில் கணினி தட்டச்சு ஊழியராகவும் திரைத்துறையில் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்து வந்த முத்துக்குமார், சென்னை சாஸ்திரி பவன் வளாகத்தில் 29.1.2009 அன்று தனக்குத்தானே தீயிட்டுக் கொண்டு உயிர் நீத்தார்.

இலங்கையில் போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, எதேச்சதிகாரமாய் இலங்கை அரசு ராணுவ பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிடத் தொடங்கி, அதற்குப் பதிலடியாய் அநுராதபுரம் ராணுவ விமானத் தளத்தை விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் கடந்த அக்டோபர் 22, 2007 அன்று முற்றுகையிட்டு, பெரும் சேதத்தை ஏற்படுத்திய பிறகு, இலங்கை ராணுவத்தின் பயங்கரவாத வியூகம் தீவிரத் தன்மையடைந்தது. நார்வே அரசின் சமாதானத் தூதுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு (இலங்கை அரசாலும்), விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பேச்சாளராக செயற்பட்டு வந்த, சு.ப. தமிழ்ச்செல்வனின் படுகொலையை ஒட்டியே, தமிழகத்தில் இலங்கை அரசின் இனப்படுகொலைகளுக்கு எதிரான கண்டனக் குரல்களும், ஈழ ஆதரவுப் போராட்டங்களும் மீண்டும் எழத் தொடங்கின. இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டிருப்பதைக் காரணம் காட்டி, தமிழ்ச் செல்வனுக்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வருக்கும் காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

சர்வதேச மனிதாபிமானத்தின் ஊற்றுக் கண்களைத் திறக்க தமிழ்ச்செல்வனின் படுகொலையும், இலங்கை அரச பயங்கரவாதத்திற்கு எதிரான கண்டனங்களை வலுப்படுத்த, சிங்களப் பத்திரிகையாளரான லசந்தாவின் படுகொலையும், ஈழ மக்களுக்கு ஆதரவான குரல்களை ஒருங்கிணைக்க முத்துக்குமாரின் (தற்)கொலையும் பெரிதும் உதவியதில் முக்கியத்துவம் பெற்றன. இம்மூவரையும் ஈழ விடுதலைப் போராட்டத்தின் நடுவில் வரலாற்றுத் தேவைகளாக எழுந்த பரப்புரையாளர்களாக, இறுதிப் போரென வர்ணிக்கப்படும் இக்காலகட்டத்தில் குறிப்பது அவசியமெனப்படுகிறது.

இலங்கையில் இன விடுதலை அரசியலானது, படுகொலைகளின் ஊடாகவே தன் வரலாற்றை எழுதிச் செல்கிறது; அல்லது படுகொலைகளின் வரலாறாகவே பதிவு செய்யப்படுகிறது. உலகின் அனைத்து வரலாறும் படுகொலைகளின் வழியாகவே ரத்தத்தால் எழுதப்பட்டவை தாம் என்ற புரிதல் இருந்த போதிலும், இலங்கை இனப்படுகொலை அல்லது விடுதலைப் போராட்டமானது, நம் சமகாலத்தின் வரலாறாக இருப்பதால் நாம் பங்கேற்பாளராகவோ, பார்வையாளராகவோ இடம்பெற வேண்டியது கட்டாயமாகிறது. அதிலும் மொழி, இனம், சாதி என்ற அடித்தளத்தில் வேறு எவரையும் விட இந்தியத் தமிழராகிய நாம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இணைப் பயணிகளாக இருக்க வேண்டிய நெருக்கடியில், மூன்றாவது தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்நெருக்கடியைச் சமாளிக்க வரலாற்றை ஆய்வு செய்வது இங்கு அவசியமாகிறது.

தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக வாழ நிர்பந்திக்கும் சிங்கள இனவெறியர்கள், தம்மை மட்டுமே இலங்கைத் தீவின் தொல்குடியினர் என கருதிக் கொள்கின்றனர். கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் இந்தியத் துணைக் கண்டத்தின் இன்றைய ஒரிசா பகுதியிலிருந்து "விஜயன்' என்ற ஆரிய இன வழிவந்த மன்னன், தம் படையினரோடு இலங்கையில் குடியேறியதைக் குறிக்கும் வகையில், 1983ஆம் ஆண்டு அவனது வருகையின் 2500 ஆம் ஆண்டு நிறைவு அஞ்சல் தலையை இலங்கை அரசு வெளியிட்டது. விஜயனைத் தம் மூதாதையனாக ஏற்றுக் கொண்டுள்ள சிங்கள இனம், இந்தியாவிலிருந்து பின்னர் இறக்குமதி செய்து கொண்ட பெருஞ்செல்வமாக பவுத்தம் இருக்கிறது. ஆனால் ஈனயானம், மகாயானம் என ஆரியர்களால் ஊனமாக்கப்பட்டதைப் போலவே, இலங்கையிலும் பவுத்த நெறி ஊனமாக்கப்பட்டு, இன்று மரணப் படுக்கையில் வீழ்ந்துள்ளது. சிங்களம் பவுத்தத்தை இறக்குமதி செய்து கொண்டது எனில், தமிழர்கள் தமக்கென பெரும் கேடாய் இந்து மதத்தைத் தருவித்துக் கொண்டனர் என்றால் மிகையல்ல.

சிங்கள மன்னர்களுக்கும் தமிழ் மன்னர்களுக்கும் இடையிலான ஆயிரமாண்டுகாலப் போர்களின் தொடர்ச்சியில், அய்ரோப்பியர்களின் உலக மேலாதிக்கத்திற்கான படையெடுப்புகளின் வரலாற்றுக்காலம், கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் இலங்கைத் தீவுடனான வணிகத் தொடர்புடன் தொடங்கியது. 1505ஆம் ஆண்டு சிங்களர்களோடு வணிகத் தொடர்பு கொள்ள, போர்ச்சுக்கீசியர்கள் தம்மை எதிர்த்துப் போரிட்ட தமிழ் மன்னன் சங்கிலியனை சிறைப்பிடித்து பின்னர் தூக்கிலிட்டனர். 177 ஆண்டு போர்ச்சுக்கீசியர்களின் காலனி ஆதிக்கத்தை, 1659ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் கண்டி மன்னனோடு வணிக ஒப்பந்தம் செய்து முடிவுக்குக் கொண்டு வந்தனர். ஏறத்தாழ 112 ஆண்டுகள் நிலைப்பெற்றிருந்த டச்சுக்காரர்களின் ஆதிக்கம், ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் வருகையோடு முற்றுப் பெற்றது. ஆங்கிலேயரைக் கடைசிவரை எதிர்த்துப் போரிட்ட பண்டார வன்னியன், இன்னொரு தமிழ் மன்னனின் காட்டிக் கொடுப்பால் இறுதியில் கொல்லப்பட்டான்.

1833இல் தமிழ் மற்றும் சிங்களப் பகுதிகளை இணைத்து ஆங்கிலேயர் ஒற்றையாட்சியைக் கொண்டு வந்தனர். தமது ஆட்சியதிகாரத்திற்கென கோல்பு×க் ஆணைக்குழு (1833)வை நியமித்து, அதன் பரிந்துரையின் அடிப்படையில் சட்ட நிர்வாக மற்றும் சட்ட நிரூபண சபைகளை உருவாக்கிக் கொண்டனர். இக்காலத்திற்குச் சற்று முன்னர்தான் இந்தியா, மலேசியா மற்றும் இலங்கையின் மலையக நில வளத்தைச் சுரண்டிக் கொழுக்க, ஆங்கில ஏகாதிபத்தியம் மலையகப் பயிர்களை அறிமுகப்படுத்த முடிவெடுத்தது. அதற்கென 1800களின் தொடக்கக் காலங்களில் தென் தமிழ் நாட்டிலிருந்து மலையகத்தை மேம்படுத்த, பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தமிழர்கள் இலங்கையிலும் மலேசியாவிலும் குடியமர்த்தப்பட்டனர். பள்ளர், பறையர், முக்குவர், மீனவர், நாடார், வன்னியர், மருத்துவர் மற்றும் குறைந்த அளவில் முக்குலத்தோர் சாதிகளைச் சேர்ந்தவர்கள், இம்மலையகத் தோட்டத் தொழிலாளர்களாக இலங்கையில் குடியேற்றப்பட்டனர்.

ஏறத்தாழ 70 ஆண்டுகளில் 3 லட்சம் ஏக்கர் நிலங்கள் செப்பனிடப்பட்டு, காப்பி, ரப்பர், தேயிலைத் தோட்டங்களும், இத்தொழிலாளர்களின் குடியிருப்புகளும் உருவாகின. இக்காலகட்டங்களில் இத்தோட்டங்களின் கூலி உழைப்புக்காக, இலங்கைக்கு வருவதும் போவதுமாக இருந்த தமிழர்களில் 3 லட்சம் மக்கள் கடல் பயணங்களின் போது – நடுக்கடலில் மூழ்கியும், குடியிருப்புகளில் போதிய மருத்துவமின்றி நோய்களிலும், வேலையிடங்களில் பாம்பு, பூச்சிகள் உள்ளிட்ட நச்சுப் பிராணிகளால் தீண்டப்பட்டும் மரணமடைந்திருக்கின்றனர். கடுமையான உடலுழைப்பு ஆற்றல் கொண்ட இம்மக்களைக் கொண்டே, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தரைவழிச்சாலை, ரயில்வே இருப்புப்பாதை, பாலங்கள், துறைமுகங்கள், ரயில்வே நிலையங்கள், ஏரிகள் போன்றவற்றை ஆங்கில ஏகாதிபத்தியம் நிர்மாணித்தது. இன்றைக்கும் இலங்கையின் வருவாயில் 60 சதவிகிதம் வரை ஈட்டித்தரும் தேயிலை, காபி, ரப்பர் ஆகிய தோட்டப் பயிர்களை விளைவித்துத் தருகிற மலையக மக்கள் – இலங்கையின் குடிமக்களாக அங்கீகரிக்கப்படாமலும், தாய்நாடான தமிழகத்தில் தமது வேர்களை இழந்தவர்களாக திரும்பிவர வழியற்றவர்களாகவும் "நாடற்றவர்கள்' என்ற வகையினத்துள் வாழும் கொடுமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கொடும் சுரண்டலுக்கு ஆட்பட்டு, தமது உரிமைகளுக்குப் போராடிய போதெல்லாம், இன மற்றும் மொழி அடிப்படையில் மலையக மக்களின் துயர் துடைக்க இலங்கையின் பூர்வீகத் தமிழர்கள் முன்வரவில்லை. மாறாக, இலங்கையிலும் மலேசியாவிலும் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த இத்தமிழர்களைச் சுரண்டிக் கொழுக்க, ஆங்கிலேயர்களுக்குக் கங்காணி வேலையும், கணக்கன் வேலையும் செய்து, தம் வளத்தைப் பெருக்கிக் கொண்ட சாதியினராக, வெள்ளாளர்களும் செட்டியார்களுமே இருந்தனர்.

ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திற்குப் பிறகு, மலேசியாவிலும் இலங்கையிலும் இதே மலையகத் தோட்டங்கள் பலவற்றை இச்சாதியினர் தமது உடைமையாக்கிக் கொண்டனர். இத்தோட்டத் தொழிலாளர்களாக இருந்த தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களை கொடும் சுரண்டலுக்கு உட்படுத்தியதோடல்லாமல், இம்மக்களின் மீது சாதிய ஒடுக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விட்டனர். மலையக உழைக்கும் மக்கள் தொழிலாளர்களாக ஒன்றிணைவதைத் தடுக்க, இம்மக்களிடையே சாதி பாகுபாடுகளையும், தீண்டாமைக் கொடுமைகளையும், இந்துமத மூட ழமைகளையும் வளர்த்தெடுத்தனர். மேலும் சிறுவணிகம், வட்டித் தொழில், கொத்தடிமைத் தரகு ஆகியவற்றிலும் பெருஞ்செல்வம் சேர்த்தனர்.

மலேசியாவிலும், இலங்கையிலும் ஒன்றுமறியா மக்களின் உழைப்பில் கொள்ளையடிக்கப்பட்ட இப்பெரும் பணத்தைத் தான், தமிழகத்தின் விளைநிலங்களிலும் வட்டிக் கடை, நகைக்கடை, வளர்ந்து வரும் தொழில்கள் ஆகியவற்றிலும் மூலதனமாக்கி, இந்திய – தமிழக அதிகார வர்க்கத்தின் மய்யங்களாகத் தம்மை நிறுவிக் கொண்டனர். ஆயிரம் ஜன்னல் வீடு, பழமையின் எச்சம், பழந்தமிழர் அடையாளம் என்றெல்லாம் பெருமை பாராட்டப்படும் "செட்டிநாடு' வீடுகள் சுட்ட செங்கற்களாலும், பர்மா தேக்கு மரங்களாலும் கட்டப்பட்டவை அல்ல. மாறாக, ஒடுக்கப்பட்ட மக்களின் குருதியாலும் சதையாலும் கண்ணீர் பிசைந்து நிர்மாணிக்கப்பட்டவை. குடியிருக்கக் குடிசை இல்லõத மக்கள் நடுவில் கொழுப்பெடுத்த சாதித் திமிரைப் பறைசாற்ற, மாட மாளிகைகளை வீடுகளெனக் கட்டி வாழும் செட்டி நாட்டுத் தமிழர்கள் தமிழ்ப் பண்பாட்டின் விழுமியங்கள் எனில், வர்க்கச் சுரண்டலையும் சாதிய ஒடுக்குமுறையையும் உண்டு செரித்து இளைப்பாறும் "தமிழ்த் தேசியம்' – ஒடுக்கப்பட்ட மக்களின் ஆயிரமாண்டு கால அவலம் அன்றி வேறென்ன?

1883இல் புத்தளம் முதல் கண்டி வரையான இந்திய வம்சாவழித் தமிழர்கள் வாழ்ந்த மேற்குப் பகுதியும் தொல்குடி தமிழர்கள் வாழ்ந்த வடக்கு – கிழக்குப் பகுதிகளும் சிங்களர்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்த தென் இலங்கையும் ஆங்கிலேய காலனி ஆட்சியின் நிர்வாகத்தில் இணைக்கப்பட்டன. இந்தியாவில் 526 சமஸ்தானங்களும் பல்வேறு பிரதேசங்களும் இணைக்கப்பட்டு, ஒரே நாடென ஆங்கில அரசால் நிர்வாகம் செய்யப்பட்டது போலவே, இலங்கையின் அதிகார அமைப்பும் ஒற்றையாட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1880இல் கொட்டாஞ்சேனை என்ற இடத்தில் கத்தோலிக்கர்களுக்கும் பவுத்தர்களுக்கும் இடையே மூண்ட மதக் கலவரத்தில் சிங்கள மற்றும் தமிழ் கிறித்துவர்கள் மத அடையாளம் வழி இணைந்தே இருந்தனர்.

இந்நிலையில் வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிரான தேச உணர்வு இந்தியாவைப் போலவே, இலங்கையிலும் முகிழ்த்தது. ஆனால், அவ்வுணர்வு பிரித்தானிய பிரித்தாளும் சூழ்ச்சியில் நாளடைவில் இந்தியாவில் இந்து – முஸ்லிம் என வகைப்படுத்தப்பட்டது போல, தமிழர் – சிங்களர் எனப் பிளவுண்டது. ஆனால், இப்பிளவிற்கு இருவேறு தேசிய இனமாக தமிழர்களும் சிங்களர்களும் இருந்ததே அடிப்படைக் காரணமாகவும் இருந்தது. 1919 இல் இலங்கை தேசிய காங்கிரஸ், இலங்கையின் சுதந்திரக் கோரிக்கையை வலியுறுத்தி தொடங்கப்பட்டது. பொன்னம்பலம் அருணாச்சலம் என்ற தமிழரே அதன் முதல் தலைவரானார். 1920 இல் வழங்கப்பட்ட அரசியல் சீர்திருத்தத்தின்படி, சட்ட சபையில் 13 சிங்களர், 3 தமிழர் என பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது. இதனால் காங்கிரஸ் தலைமைக்குள் முரண்பாடுகள் எழுந்து, பொன்னம்பலம் அருணாச்சலம் வெளியேறினார். இதனைத் தொடர்ந்தே, தமிழர்களின் உரிமைகளைப் பேசுவதற்கான அவசியத்தில் "தமிழர் மகாசனசபை' உருவாக்கப்பட்டது. 1931இல் வயது வந்தோர் அனைருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது.

1927–1931 காலகட்டத்தில் ஆங்கிலேயரால் நியமிக்கப்பட்ட டெனாமூர் ஆணைக்குழு, தமிழர்கள் முன்வைத்த விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. 1944இல் இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களைத் தலைவராகக் கொண்டு தொடங்கப்பட்டது. இதே ஆண்டில் சோல்பரி பிரபு தலைமையில் பிரித்தானிய அரசுக் குழு சுதந்திரம் வழங்குவது தொடர்பாக இலங்கைக்கு வருகை தந்து இரு தரப்பினரையும் சந்தித்து. “இலங்கையில் ஆட்சியுரிமை இருபெரும் மொழிவழி சமூகங்களிடையே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். சம குடியுரிமை பெற்றவர்களாக வாழ்வதையே தமிழர்கள் விரும்புகின்றனர்'' என பொன்னம்பலம் தலைமையில் தமிழர்கள் வலியுறுத்தினர். ஆனாலும் 1945 அக்டோபர் 9இல் சோல்வரி ஆணைக்குழு, இலங்கைக்கு ஒற்றையாட்சியைப் பரிந்துரைத்துச் சென்றது. எவ்வித சம உரிமைகளும் சம வாய்ப்புகளும் வழங்கப்படாத நிலையில் 1948 பிப்ரவரி 4இல் சிங்கள ஆளும் வர்க்கத்திடம் இலங்கையின் ஆட்சி அதிகாரம் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் கையளிக்கப்பட்டது.

Eelam women உடனடியாக, 15.11.1948 அன்று பத்து லட்சம் மலையக மக்களும் இலங்கையின் குடியுரிமை அற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். 1953 இல் நடந்த ஆளும் கட்சியான அய்க்கிய தேசிய கட்சியின் மாநாட்டில் தமிழும் சிங்களமும் ஆட்சி மொழியாக்கப்படும் என தீர்மானம் இயற்றப்பட்டது. 1954இல் இலங்கையின் பிரதமராகயிருந்த ஜான் கொத்தலவலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உரையாற்றும் போதும், மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். 1951இல் சிறீலங்கா சுதந்திரக் கட்சியைத் தொடங்கியதிலிருந்து இதே தீர்மானத்தை வலியுறுத்தி வந்த பண்டாரநாயகா, தமது வாக்குறுதியைக் கை கழுவிவிட்டு 5.6.1956இல் சிங்களமே ஒரே ஆட்சி மொழி என சட்டம் இயற்றினார். 22.5.1972இல் பவுத்தமே முகாமை பெற்ற அரச மதமாகவும் நடைமுறைக்கு வந்தது. சிங்களர்கள் மொழி வழியாகவும், மத அடிப்படையிலும் ஒன்றிணைக்கப்பட்டனர். ஆனால் தமிழர்கள் பூர்வீக ஈழத் தமிழர்கள், இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள் என வரலாற்றுக் காலம், வாழிடம், பின்பற்றும் மதம் எனும் வகைப்பாடுகளில் பிரிந்தே நின்றனர். மொழி, தமிழர்களை ஒன்றிணைக்கவில்லை.

இதற்கிடையில் இலங்கைத் தமிழர்களிடையே இன வேறுபாடுகளைக் கடந்து அவர்களை உழைக்கும் வர்க்கமாக அணிதிரட்டும் நோக்கத்தோடு, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஈழத்திலும் மலையகத்திலும் காலூன்றியது. உழைக்கும் வர்க்கம் என்ற அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாகவும் செயல்பாட்டாளர்களாகவும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களே அணி திரண்டனர். இத்தகைய அணி திரட்டல் இயல்பிலேயே, தமிழர்களிடையே சாதி – தீண்டாமைகளுக்கு எதிராகவும், ஆதிக்கச் சாதித் தமிழர்களின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் கருக் கொண்டது.

கம்யூனிஸ்ட் கட்சி ஒடுக்கப்பட்டவர்களின் – தீண்டத்தகாத மக்களின் கட்சியென ஆதிக்க சாதியினரால் பிரச்சாரம் செய்யப்பட்டு, கட்சியின் ஊழியர்கள் தாக்கப்படுவதும் சில நேரங்களில் கொல்லப்படுவதும் நடந்தது. 1950 – 1970களுக்கு இடைப்பட்ட ஈழத் தமிழர்களின் வரலாற்றில் கம்யூனிஸ்ட்டுகளால் நிகழ்த்தப்பட்ட சாதி எதிர்ப்பு – தீண்டாமை ஓழிப்புப் போராட்டங்களுக்கான வரலாறும் முதன்மையானதாகவே இங்கு பரிசீலிக்கப்பட வேண்டும். இலங்கையின் தமிழ்ச் சமூகத் தலைமைப் பாத்திரத்தை அரசியல் – பொருளியல் அம்சங்களில் வகித்து வந்தவர்கள் (சைவ) வேளாளர்களே. தமிழகத்தில் பார்ப்பனரல்லாதோர் இயக்கமாகத் தொடங்கி, பின்னாளில் வேளாள சாதியினரின் அரசியல் தலைமையைப் பிரதிநிதித்துவப்படுத்திய திராவிட இயக்கம், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் 1949 செப்டம்பரில் அண்ணாவால் தொடங்கப்பட்டது. இதே காலத்தில்தான் 1949 டிசம்பரில் தந்தை செல்வாவால் தமிழரசுக் கட்சியும் தோற்றுவிக்கப்பட்டது. மொழியை முன்னிறுத்தி, தமிழர்களை ஒன்றிணைக்கவும், தமது சமூக – அரசியல் மேலாண்மையைத் தக்க வைத்துக் கொள்ளவும் வேளாளர்கள், தமிழ்த் தேசிய கருத்துருவாக்கத்தைக் கட்டமைக்கத் தொடங்கினர். தமிழகத்திலும் சரி, ஈழத்திலும் சரி, சைவத் தமிழ் அறிஞர்கள் 1800களின் நடுவிலிருந்தே இந்து மத வளர்ச்சியையும் தமிழை செம்மொழியாகத் தரப்படுத்துவதையும் இணைத்தே செய்து வந்தனர்.

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு சைவத் தமிழ் கருத்துருவாக்கம் அரசியல் எழுச்சிக்காக, தேசியக் கோட்பாடாக முன்மொழியப்பட்டபோது – "மதநீக்கம்' செய்யப்படாததாகவே இருந்தது. தமிழகத்தில் தந்தை பெரியார் தலைமையில் இந்துமத எதிர்ப்புப் பணிகள் நடைமுறையில் இருந்த காரணத்தினால், தமிழ்த் தேசியக் கருத்தாடல் முற்றாக மதநீக்கம் செய்யப்படாவிட்டாலும், நடைமுறையில் இந்து மதத்திலிருந்து விலகி நின்றது. ஆனால், ஈழத்திலோ சைவத் தமிழ்த் தேசியம் அரசியல் ரீதியாக, இன்னும் மேன்மைப்படுத்தப்பட்ட – இந்துமயமாக்கப்பட்ட கருத்துருவமாகவும் கோட்பாடாகவுமே முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய அரசியல் கோட்பாட்டில் "மதநீக்கம்' செய்வதும் பகுத்தறிவுவாதம் முன்வைக்கப்படுவதும், தமது சமூக மேலாதிக்கத் தலைமைக்குத் தாமே வெட்டிக்கொள்ளும் சவக்குழி என்பதை யாழ்ப்பாண வேளாளத் தலைமை உணர்ந்தே இருந்தது. இந்து மதத்தைக் கட்டிக் காப்பதில் பார்ப்பனர்களுக்கு இருக்கும் சமூகப் பதற்றமும், முனைப்பும், பெருவிருப்பும் ஈழத்தில் வேளாளர்களுக்கு இருந்தது. இன்றும் இருக்கிறது.

1956இல் தமிழ் உரிமை மறுப்புச் சட்டத்தை எதிர்த்து, அறப்போராட்டம் நடத்தக் கூடியிருந்த தமிழர்கள் மீது சிங்களக் காடையர்கள் எதிர்பாராதவொரு தாக்குதலை நிகழ்த்தியதன் விளைவாக ஏறத்தாழ 150 தமிழர்கள் பலியாயினர். 26.7.1957இல் பண்டாரநாயக – செல்வா ஒப்பந்தமும் 24.3.1965இல் டட்லி சேனநாயக – செல்வா ஒப்பந்தமும் தமிழர் உரிமைகளை முன்மொழிந்து போடப்பட்டன. 1972இல் சிறீமாவோ பண்டார நாயக ஆட்சிக் காலத்தில் சிங்கள பவுத்தர்கள் மட்டுமே இலங்கையின் அதிபராக முடியும் என குடியரசுச் சட்டத் திருத்தம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து சிங்களவர்களை விட, படித்தவர்களாகவும் அரசுப் பணிகளில் இருப்பவர்களாகவும் தமிழர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பதை முடக்கும் விதமாக, கல்வியைத் தரப்படுத்துதல் என்ற போர்வையில் சிங்களர்களுக்கு மதிப்பெண் சலுகைகளும் பாடத் திட்ட முறைகளில் மாற்றமும் சிங்கள மொழிக்கு முக்கியத்துவமும் தரப்பட்டன.

இதற்கிடையில் 1964இல் மலையகத் தமிழர்களின் குடியுரிமை தொடர்பாக, இந்தியப் பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரிக்கும், இலங்கை பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயகவுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தம், மூன்றில் ஒரு பங்கினரின் வாழ்க்கைக்கு மட்டுமே உத்திரவாதம் அளித்தது. ஏனையோர் மூன்றாம் தரக் குடிமக்களாகவே மலையகத்தில் இருத்தப்பட்டுள்ளனர். இவ்வொப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையிலிருந்து தமிழக மலைக் கிராமங்களில் குடியமர்த்தப்பட்ட மக்களில் ஒரு பகுதியினர், கொடைக்கானலிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள குண்டுப்பட்டி என்ற ஊரில் வாழ்கின்றனர். இந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மலையக மக்கள் சாலை வசதி கேட்டு "தேர்தல் புறக்கணிப்பு' செய்தார்கள் என்ற காரணத்தினால், 1997இல் வேளாள – சாதி இந்துக் கட்சியான தி.மு.க. தன் குண்டர்களை ஏவி, அம்மக்களின் குடியிருப்பைத் தாக்கி அழித்து, கடும் உழைப்பில் சேகரித்து வைத்திருந்த பொருட்களை நாசமாக்கியும் கொள்ளையடித்தும், இரு அப்பாவிகளைக் கொன்றும் பழி தீர்த்தது.

இத்தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட குண்டர்கள் பலரும் பிழைப்பதற்காக மதுரை உசிலம்பட்டிப் பகுதியிலிருந்து மலையேறி வந்த, குண்டுப்பட்டிக்கு சற்றே தொலைவில் வசித்து வருகிற பிரன்மலைக் கள்ளர் சாதியினரே. இதே போன்றதொரு தாக்குதலும் வன்முறையும் கொடியங்குளம் என்ற ஊரில் இன்னொரு வேளாள – சாதி இந்துக் கட்சியான அ.தி.மு.க. காலத்தில் நிகழ்த்தப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, தி.மு.க. ஆட்சியில் தாமிரபரணி ஆற்றில் அடித்துக் கொல்லப்பட்ட மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் யாவரும், சொந்த நாட்டிலேயே கொத்தடிமைகளாக சுரண்டப்படும் ஒடுக்கப்பட்ட மக்களே. ஆக, ஈழத்திலும் தமிழகத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நசுக்கி காலடியில் வைத்துக் கொண்டுதான், வெள்ளாள – சாதி இந்து தலைமை தமிழ்த் தேசிய கருத்துருவாக்கங்களைச் செய்து வருகிறது. ஆனால், செயற்கையானதொரு தமிழின ஒற்றுமைக்கு அறைகூவும் அரசியல் சூழ்ச்சிக்கு, ஒடுக்கப்பட்ட மக்கள் காலங்காலமாகப் பலியாகி வருவதும் இன்னும் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

– அடுத்த இதழிலும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com