Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu width=
 width=பிப்ரவரி 2008

“கோட்பாட்டளவில் உறவுகளை வளர்த்த லட்சத்தில் ஒருவர் ஏபி. வள்ளிநாயகம்”

சமநீதி எழுத்தாளர் ஏபி.வள்ளிநாயகம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு திருச்செந்தூரில் 30.6.2007 அன்று நடைபெற்றது. இவ்வீரவணக்கக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆற்றிய உரை :

இன்று சென்னை கலைவாணர் அரங்கில், முதல்வர் கலைஞர் அவர்களின் தலைமையில் அரசு விழாவில் நான் பங்கேற்றிருக்க வேண்டும். புத்தர் பரிநிர்வாணம் அடைந்து 2550 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி தமிழக அரசு நடத்துகிற விழா அது. அந்த பவுத்த நெறிக்காகத் தன் வாழ்வை ஒப்படைத்துக் கொண்ட அண்ணன் ஏபி. வள்ளிநாயகம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியிலே பங்கேற்பதில் நான் பெருமை அடைகிறேன்.

இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு அண்ணன் ஏபி. வள்ளிநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதில் எனக்கு ஓர் ஆறுதல். இங்கே பேசிய எல்லோரும் அவருடன் நெருங்கிப் பழகியதை நினைவு கூர்ந்தார்கள். எனக்கும் அப்படி மறக்க முடியாத நிகழ்வுகள், சந்திப்புகள் அண்ணன் ஏபி. வள்ளிநாயகம் அவர்களுடன் உண்டு. 1992-93 வாக்கிலே மதுரை மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் பல்வேறு போராட்டங்களை அடுத்தடுத்து நடத்திக் கொண்டிருந்த காலம். மராட்டிய மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளைக் கண்டித்தும், புரட்சியாளர் அம்பேத்கர் நூலகம் எரிக்கப்பட்ட வன்முறையைக் கண்டித்தும், மராட்டிய பல்கலைக்கழகத்திற்கு புரட்சியாளர் அம்பேத்கர் பெயரிட வேண்டியும், சிவசேனை தலைவர் பால் தாக்கரேயைக் கைது செய்யச் சொல்லி கோரியும் ரயில் நிறுத்தப் போராட்டம் நடந்த நேரமது.

கோவையில் அரசு ஊழியனாகப் பணிபுரிந்து கொண்டிருந்த என்னை காவல் துறையின் உளவுத்துறை அதுவும் ‘கியூபிராஞ்ச்’ போலிசார் கண்காணித்து பல்வேறு இடங்களில் நடந்த வெடிகுண்டு சம்பவங்களோடு தொடர்புள்ளவர்களுக்குத் தொடர்புள்ளவன் என்று கூறி, கோவையிலிருந்து மதுரைக்கு கைது செய்து என்னை கடத்தி வந்தது. இதை எதிர்த்து மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து, இப்படியொரு இயக்கம் வளர்கின்றது என்று உலகிற்கு தெரியவந்து கொண்டிருந்தது.

அப்போது பா.ம.க.வின் தத்துவ அணி செயலாளராக இருந்த அண்ணன் ஏபி. வள்ளிநாயகம் அவர்கள் என்னை வந்து சந்தித்தார்கள். அய்யா ராமதாஸ் அனுப்பினார்கள் என்றும், திருமாவளவன் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாய் இருக்கிறாரே அவரைப் பார்த்துவிட்டு வாருங்கள் என்று சொன்னதாகவும் கூறினார். தொடர்ந்து மூன்று நாட்கள் என்னை வந்து சந்தித்து, ராமதாசுடன் பேசுங்கள், பழ. நெடுமாறனிடம் பேசுங்கள் என்று வற்புறுத்தினார்.

நான்காம் நாள் மிகுந்த கோபத்துடன் தன்னுடைய ஆலோசனைகளைத் தந்த ஏபி.வள்ளிநாயகம் அவர்களின் வார்த்தைகளின்படியே பழ. நெடுமாறன் அவர்களைச் சந்தித்தேன். மதுரை கோரிப்பாளையத்தில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. அந்தப் பொதுக் கூட்டத்தை நடத்துகின்ற, ஒருங்கிணைக்கின்ற அனைத்து வேலைகளையும் அண்ணன் ஏபி.வள்ளிநாயகம் செய்தார்கள்.

தலித் இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அக்கூட்டத்தில் பங்கேற்றனர். அதன்பிறகு காவல் துறை என்னைக் கைது செய்து, மதுரையிலிருந்து திருப்பத்தூருக்கு கொண்டு சென்றது. என்னை விடுதலை செய்யக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டனர் தலித் பெண்கள். நான் விடுதலை செய்யப்பட்டேன். எந்த விசாரணையும் நடக்கவில்லை. இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலைகளில் என் அருகில் நின்று, அரசியலில் நிலையான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று என்னை ஊக்கப்படுத்தியவர், துணிவைத் தந்தவர் ஏபி. வள்ளிநாயகம் அவர்கள்.

அதற்குப்பிறகான இடைப்பட்ட காலங்களில் அவரைச் சந்திக்க முடியாத சூழல்கள். ஆனால் தலித் மக்களின் தலைவர்களைப் பற்றி ‘விடுதலை இயக்க வேர்களும் விழுதுகளும்’ என்ற கட்டுரையை அவர் ‘தலித் முரசி’ல் எழுதி வருவதைத் தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன். எழுத்துப்பணியிலே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் என்பதை அறிந்தேன். அப்படிப்பட்ட ஒருவரை திடீரென்று நாம் இழந்திருக்கிறோம் என்பது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. அண்ணன் ஏபி.வள்ளிநாயகம் பழகுகிற காலங்களில் எப்போதும் சாதி அடையாளத்தோடு பழகியவர் கிடையாது.

பிறருடைய சாதி அடையாளத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் என்றுமே இருந்ததில்லை. அவர் சாதிய ரீதியாக உறவுமுறைகளை வளர்த்துக் கொள்ளாதவர். தமிழர்கள் எங்கே சென்றாலும் சாதி அடையாளத்தை தேடுபவர்களாகவேதான் இருக்கிறார்கள். ஆனால் லட்சத்தில் ஒருவர்தான் அவற்றைக் கடந்து கோட்பாட்டு அளவில் உறவுகளை வளர்க்கக் கூடியவர்களாக இருக்கின்றனர். அண்ணன் ஏபி. வள்ளிநாயகம் கோட்பாட்டளவில் உறவுகளை வளர்த்த லட்சத்தில் ஒருவர் ஆவார்.

தோழர் ஓவியா அவர்களும் மூடநம்பிக்கைகளற்ற சாதி மறுப்புத் திருமணத்தை அண்ணன் ஏபி.வள்ளிநாயகம் அவர்களுடன் நிகழ்த்திக் கொண்டதைப் பற்றி பெருமையாக வெளியே பேசாதவர்கள். அதனால்தான் பகுத்தறிவு வாழ்வியலுக்கான சான்றாளர்களாக அவர்கள் இன்னும் இருக்கிறார்கள். சாதிய உணர்வு இல்லாமல் சாதியை ஒழித்தால்தான் சமத்துவத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் ‘தலித் தலைமை’ வேண்டும் என்று அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் மீது அன்பு கொண்டவராக இருந்தார்.

அண்ணன் ஏபி. வள்ளிநாயகம் அவர்களும் அருமைத் தோழர் ஓவியா அவர்களும் தோழமை என்பதைத் தாண்டி குடும்ப உறவோடு என்னை நேசித்தவர்கள். அவர்களின் இல்லத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்ற என்னை அழைத்தார்கள். திறப்பு விழாவிற்கு எனக்கு புதுத்துணிகளையும் எடுத்துக்கொடுத்து அன்பு செலுத்தினர் என்பதை மறக்க முடியாது.

மிகச்சிறந்த அம்பேத்கர்வாதியாக, பவுத்த நெறியாளராகத் திகழ்ந்தவர் ஏபி.வள்ளிநாயகம் அவர்கள், சுயமாக சிந்திக்கக்கூடியவர். சதந்திரமாக எழுதக்கூடியவர். அதனால்தான் யாருடைய தலைமையையும் ஏற்காமல் தன்னுடைய எழுத்துகளை மிகவும் சுதந்திரமாக எழுதி வந்தார் அவர். தலித் மக்களின் வரலாற்றைத் தோண்டி எடுத்து எழுதியதன் மூலம், தலித் மக்களின் எழுச்சியை இயக்கங்கள் மட்டுமல்ல, எழுத்தாளர்கள், அறிஞர்கள், போன்றவர்களும் ஏற்படுத்துகின்றனர் என்பதற்கு பெரும் சான்றாக அமைந்தவர் ஏபி. வள்ளிநாயகம் அவர்கள். ஏபி. வள்ளிநாயகம் போன்றவர்களின் சிந்தனைகள், எழுத்துகள் நமக்கு நம்பிக்கையூட்டுவதுடன் நமக்கு வழிகாட்டியாகவும் இருக்கின்றன. அவர் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது உங்களுக்கெல்லாம் பெருமை. என்னோடு இருந்தவர், பழகியவர், உரமூட்டியவர் என்று எனக்குப் பெருமை. அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் வீரவணக்கம் செலுத்துகிறது.

நெருக்கடியான சூழ்நிலைகளில் என் அருகில் நின்று, அரசியலில் நிலையான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று என்னை ஊக்கப்படுத்தியவர், துணிவைத் தந்தவர் ஏபி. வள்ளிநாயகம் அவர்கள். தலித் மக்களின் தலைவர்களைப் பற்றி ‘விடுதலை இயக்க வேர்களும் விழுதுகளும்’ என்ற கட்டுரையை அவர் ‘தலித் முரசி’ல் எழுதி வருவதைத் தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன். எழுத்துப்பணியிலே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் என்பதை அறிந்தேன்
. 
நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com