Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu width=
 width=பிப்ரவரி 2008

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்
சிக்கல்களும் தீர்வுகளும் - 2
-சு. சத்தியச்சந்திரன்

ஓர் குற்றவியல் வழக்கின் அடித்தளமே அக்குற்ற நிகழ்வைக் குறித்து அளிக்கப்படும் புகார்தான். வன்கொடுமை நிகழ்வுகளுக்கும் இது பொருந்தும். குற்றம் என்பது, “சட்டம் தடை செய்துள்ள செயலைச் செய்வதோ அல்லது சட்டம் செய்ய வலியுறுத்தும் செயலைச் செய்யாமலிருப்பதோ ஆகும்.'” வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பொருத்தவரை, பிரிவு 3(1)இல் பதினைந்து விதமான வன்கொடுமைகள் குற்றங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவற்றிற்கு 6 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பிற சட்டங்களில் ஏற்கனவே குற்றம் எனப் பட்டியலிடப்பட்டிருக்கும் ஏழுவிதமான குற்றச் செயல்கள் பட்டியல் சாதியினர் அல்லது பட்டியல் பழங்குடியினருக்கு எதிராக செய்யப்படுமேயானால், அவை பிரிவு 3(2)இல் வன்கொடுமைகளாகக் கருதப்படும். இவற்றிற்கு, வன்கொடுமையின் தீவிரத்தன்மைக்கேற்ப அபராதம் தவிர, 7 ஆண்டுகள் வாழ்நாள் சிறை முதல் மரண தண்டனை வரை தண்டனையாக வரையறுக்கப்பட்டுள்ளன. இவை சட்டம் தடை செய்துள்ள குற்றங்களைச் செய்வதால் வன்கொடுமை எனக் கருதப்பட வேண்டியவை.

பொது ஊழியர் யார்?

இச்சட்டப்படி ஒரு பொது ஊழியர் கடை நிலை அரசு ஊழியர் முதல் குடியரசுத் தலைவர் வரையிலான அனைத்து அரசு அலுவலர்களையும் அனைத்துச் சட்டங்களும் இவ்வாறே குறிப்பிடுகின்றன. தன் கடமையை இச்சட்டம் வரையறுத்துள்ளவாறு செய்யாமலிருப்பாரேயானால், அதுவும் வன்கொடுமைக் குற்றம் என்று பிரிவு 4 கூறுகிறது.

பயன்படுத்தப்படாத சட்டப்பிரிவு :

இச்சட்டம் 1989இல் இயற்றப்பட்டிருந்தாலும் கூட, இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வழிமுறை சுட்டும் விதிகள் 6 ஆண்டுகளுக்குப் பிறகு, 1995இல்தான் வகுக்கப்பட்டது. எனவே, இச்சட்டமே 1995க்குப் பின்னரே நடைமுறைப்படுத்தப்பட்டது எனலாம். எனினும், இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய காவல் துறையினரும், 1995-விதிகளின் படி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு தீருதவிகள் (Reliefs) வழங்க வேண்டிய வருவாய்த்துறையினரும் பிரிவு 4இல் கூறியுள்ளவாறு இச்சட்டம் வரையறுத்துள்ள கடமையைப் பெரும்பாலான நிகழ்வுகளில் நிறைவேற்றுவதில்லை. தேசிய அளவிலேயே இதுதான் உண்மை நிலை என்ற போதும், இப்பிரிவின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை.

தமிழகத்தைப் பொருத்தவரையில், 1995 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் இப்பிரிவின் கீழ் ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என்பது வியப்பளிக்கும் உண்மை (வன்கொடுமைப் புகார்கள் அதிக அளவிலுள்ள தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பெற்ற ஆய்வு முடிவுகள் ‘வன்கொடுமைகளும் சட்ட அமலாக்கமும்’ எம்.ஏ.பிரிட்டோ, டாக்டர் அம்பேத்கர் பண்பாட்டு மய்யம், மதுரை, பக். 57 மற்றும் 192). இதே ஆய்வில் குறிப்பிட்டுள்ளபடி, ‘இச்சட்டப்பிரிவு நடைமுøறயில் ஓர் அழகு சாதனமே’ என்ற நீதிபதி புண்ணையா ஆணையத்தின் அறிக்கை வாசகமொன்று சுருக்கமாக விளக்குகிறது.

புகார்கள் சந்திக்கும் தடைகள்

ஒரு வன்கொடுமைப் புகார் காவல் நிலையத்தில் கொடுக்கப்படும்போது, அதைப் பதிவு செய்யாமலிருக்க காவல் நிலையத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகளும் முயற்சிகளும் பலவகை: (1) புகார் தரும் பாதிக்கப்பட்டோரை பலமுறை காவல் நிலையத்திற்கு வரச்சொல்லியும் காத்திருக்கச் செய்தும் அலைக்கழித்தல், உயர் அதிகாரிகளின் ஒப்புதல் பெற்ற பின்னரே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்று இல்லாத சட்ட நுணுக்கத்தைக் காரணம் காட்டி தாமதப்படுத்துதல்.

(2) வன்கொடுமை இழைத்தோர் ஆதிக்க சாதியினராகவும், பொருளாதார ரீதியில் வளமிக்கவர்களாகவும் இருப்பதாலும், பல நேரங்களில் அரசியல் பின்னணி கொண்டவர்களாகவும் உள்ளதால், அவர்களிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு பாதிக்கப்பட்டோரை புகாரை திரும்பப் பெறச் சொல்லியும், ‘சமரசம்’ செய்து கொள்ளச் சொல்லியும் ‘அன்புடன் அறிவுறுத்துதல்’.

(3) அவ்வாறான ‘அறிவுறுத்தலுக்கு’ அடிபணியாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி பிடிவாதம் பிடிப்பவர்களை வன்கொடுமை இழைத்தோருக்கு எதிராகக் குற்றம் இழைத்ததாகப் பொய் வழக்குப் போடுவதாக மிரட்டுதல்.

(4) பாதிக்கப்பட்டவர்கள் அப்படியும் ஒத்துழைக்காமல் போகும் நிகழ்வுகளில், வன்கொடுமை இழைத்தவர்களிடம் பாதிக்கப்பட்டவர்கள் மீது பொய்ப் புகார் பெற்று அப்புகாரை முதல் வழக்காகவும், பாதிக்கப்பட்டோர் அளிக்கும் உண்மைப் புகாரை இரண்டாவதாகவும் பதிவு செய்து, வன்கொடுமை வழக்கை வலுவிழக்கச் செய்தல்.

5) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தவுடன் சட்ட நடைமுறையின்படி அதை உரிய நீதிமன்றத்திற்கு அனுப்பாமல் தாமதித்தல்.

6) இத்தாமதத்தைப் பயன்படுத்தி புகாரின் உண்மைத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்க வாய்ப்பளித்து வன்கொடுமை இழைத்தோருக்குச் சாதகமாகச் செய்தல்.

7) காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும் முதல் தகவல் அறிக்கையின் நகலைத் தாமதமாக அனுப்புவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வன்கொடுமைச் சட்டவிதிகளின்படி தீருதவி கிடைப்பதைத் தாமதித்தல் என்பன, இம்மாதிரியான முயற்சிகளுள் முதன்மையானவை. இத்தனைத் தடைகளையும் மீறி முதல் தகவல் அறிக்கை பதிக்கச் செய்வது நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தின் முதல் படியே!

புகாரின் உள்ளடக்கம்

ஒரு புகார் இத்தடைகளை எல்லாம் மீறி பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, வழக்கு விசாரணை நடைபெற்று வன்கொடுமையாளர் சட்டப்படியான தண்டனை பெற ஏதுவான வகையில் சரியான தகவல்களுடன் தரப்பட வேண்டியது கட்டாயம். எனவே ஒரு வன்கொடுமைப் புகார் என்னென்ன தகவல்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

குற்றங்களின் வகைகள்

குற்றங்கள் அனைத்தும் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 2 (இ)ன்படி இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை, பிடியாணை வேண்டாக் குற்றங்கள் (Cognizable offences) மற்றும் பிடியாணை வேண்டும் குற்றங்கள் (Non- Cognizable offences) என்பன. பிடியாணை வேண்டாக் குற்றங்கள் என்பவை, குற்றம் செய்ததாகக் கருதப்படும் நபர் ஒருவரை நீதித்துறை நடுவர் வழங்கும் பிடியாணை இல்லாமலேயே கைது செய்யக்கூடிய குற்றங்களாகும். பிடியாணை வேண்டும் குற்றங்கள் என்பன நீதித்துறை நடுவர் பிடியாணை வழங்கியதன் அடிப்படையிலேயே, குற்றம் புரிந்ததாகக் கருதப்படும் நபரொருவரைக் கைது செய்யக்கூடிய குற்றங்களாகும்.

இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளில் குறிப்பிட்டுள்ள குற்றங்களில் பிடியாணை வேண்டா / வேண்டும் குற்றங்கள் எவையெவை எனக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் முதலாம் பின்னிணைப்பில் பட்டியலிடப்பட்டுள்ளன. இப்பட்டியலில் குறிப்பிடப்படாத, மற்ற சட்டங்களில் கூறப்பட்டுள்ள குற்றச் செயல்களுக்கு 3 ஆண்டுகள் வரையிலான தண்டனை அல்லது அபராதம் மட்டுமே விதிக்கத்தக்கவை. ‘பிடியாணை வேண்டும் குற்றங்கள்’ என்றும், மற்றவை ‘பிடியாணை வேண்டாக் குற்றங்கள்’ என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

எளிமையாகக் கூறவேண்டுமெனில், கொலை, கொலை முயற்சி, கொள்ளையடித்தல், பாலியல் வன்கொடுமை போன்ற தீவிரத்தன்மை அதிகமாக உள்ள குற்றங்கள் பிடியாணை வேண்டாக் குற்றங்கள் என்றும், சட்டவிரோதமாகக்கூடுதல், வாய்ச்சண்டை, சிறுகாயம் விளைவித்தல் போன்ற தீவிரத்தன்மை குறைவாக உள்ள குற்றங்கள் பிடியாணை வேண்டும் குற்றங்கள் எனலாம்.

பிணை குற்றங்கள்

அனைத்துக் குற்றங்களையும் பிணையில் விடக்கூடிய குற்றம் (Bailable offences), என குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 2(ச்)இல் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளைப் பொருத்தவரையில் எவையெவை பிணையில் விடக்கூடியவை, பிணையில் விடக்கூடாதவை என்பது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் முதலாம் பின்னிணைப்பில் பட்டியலிடப்பட்டுள்ளன. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்டவை தவிர, மற்ற சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச் செயல்கள் 3 ஆண்டுகள் வரை தண்டனைக்குரியவையும் அபராதம் மட்டுமே விதிக்கக்கூடியவையும் ‘பிணையில் விடக்கூடிய குற்றங்கள்’ என்றும் அதற்கு மேல் தண்டனைக்குரியவையும், 3 ஆண்டுகளுக்கும் குறைவாக இருந்தாலும் சிறப்புச் சட்டம் ஒரு குற்றத்தைக் குறிப்பாக ‘பிணையில் விடக்கூடாத குற்றமாகக்’ கருதலாம் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் கூறுகின்றது. பிணையில் விடக்கூடிய குற்றங்கள் என்பவை அக் குற்றத்தைப் புரிந்ததாகக் கருதப்படுபவர்களுக்கும் பிணையை உரிமையாக அளிக்கிறது. பிணையில் விடக்கூடாத குற்றங்களைப் பொருத்தவரையில் அந் நபரை பிணையில் விடலாமா, கூடாதா என்பதை தீர்மானிப்பது நீதித்துறையின் விருப்புரிமை (Discretion) ஆகும்.

எதிர்பார்ப்பு பிணை கிடையாது

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பொருத்தவரை, பிரிவு 3(1)இல் வரிசைப்படுத்தப்பட்டுள்ள பதினைந்து வன்கொடுமைகளுக்கு ஆறு மாதங்கள் முதல் அய்ந்தாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனை என்றிருப்பதால், வன்கொடுமைக் குற்றங்கள் பிடியாணை வேண்டாக் குற்றங்கள் என்பது தெளிவு. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனைப் பிரிவுகளுக்கு எதிர்பார்ப்பு பிணை (Anticipatory Bail) வழங்கக்கூடாது என இச்சட்டத்தின் பிரிவு 18 தடை செய்துள்ளதால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டக் குற்றங்கள் பிணையில் விடக்கூடாத குற்றங்களாகவே இச்சட்டத்தால் கருதப்படுகிறது.

புகாரில் தெரிவிக்க வேண்டிய தகவல்கள்

ஒரு வன்கொடுமைப் புகார் கீழ்க்கண்ட அடிப்படைச் செய்திகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்:

1) வன்கொடுமைக்குள்ளாக்கப்படும் நபர், பட்டியல் சாதியினராகவோ அல்லது பழங்குடியினராகவோ இருப்பது. அதே சமயம் வன்கொடுமை இழைப்பவர் அல்லது இழைப்பவர்களில் ஒருவரேனும் பட்டியல் சாதியினராகவோ அல்லது பட்டியல் பழங்குடியினராகவோ இல்லாமல், வேறு சாதியினராக இருப்பது.

2) சம்பவம் நடைபெற்ற நாள், நேரம், இடம், பங்கு பெற்ற நபர்கள்.

3) வன்கொடுமைச் செயலின் தெளிவான முழுமையான விபரம்.

4) வன்கொடுமையாளர் ஒருவருக்கு மேற்பட்டிருந்தால், ஒவ்வொரு நபரும் அக்குறிப்பிட்ட வன்கொடுமை நிகழ்வில் இழைத்த குறிப்பான குற்றச் செய்கை.

5) வன்கொடுமை நிகழ்த்தப்பெறக் காரணம் அல்லது பின்னணி.

6) வன்கொடுமைக்குச் சாட்சியாக இருந்த நபர்களின் பெயர், மற்ற விபரங்கள்.

7) ஒருவேளை புகார் காலதாமதமாக அளிக்கப்படுமேயானால், அதற்கான காரணம். ஒரு புகாரில் குற்ற நிகழ்வு குறித்த மேற்கூறிய தகவல்களே போதுமானவை.

குறிப்பிட்ட வன்கொடுமை எந்தெந்த சட்டப்பிரிவுகளின்படி குற்றமாகக் கருதப்படவேண்டும் என்பதைப் புகாரில் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. முதல் தகவல் அறிக்கை என்பது அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு கலைக் களஞ்சியமாக இருக்க வேண்டியதில்லை (An FIR need not be an encyclopedia) என்று உச்ச, உயர்நீதி மன்றங்கள் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளன. சம்பவம் குறித்து அனைத்து விபரங்களும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டு, புலனாய்வு அதிகாரி வழக்கைப் புலன் விசாரணை செய்யும் போது சாட்சிகளின் வாக்குமூலமாகப் பதிவு செய்யப்பட்டு ஆதாரமாகக் கொள்ளப்படும். மேலும், ஒரு புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச் செய்கைகள் எந்தெந்த சட்டத்தின் எந்தெந்தப் பிரிவுகளின்படி குற்றம் என்பதை முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்ய வேண்டியது காவல் அதிகாரியின் கடமையே.

யார் புகார் கொடுக்கலாம்?

ஒரு புகார் காவல் நிலையத்தில் நேரடியாகக் கொடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோர் உடல் ரீதியாக காயம் போன்ற பாதிப்புக்குள்ளாக்கப்பட்டிருந்தால், உயிருக்கு உடனடியாக ஆபத்து ஏற்படாத நிகழ்வுகளில், அவரை காவல் நிலையம் மூலம் உரிய குறிப்பாணை (Memo) பெற்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். காயம் உயிருக்கு உடனடியான ஆபத்தை விளைவிக்குமெனில், முதலில் அந்நபரை நேரடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம். இவ்வாறான சூழலில், மருத்துவமனையிலிருந்து பெறப்படும் தகவலின்படி (Intimation) காவல் துறை புகாரினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர் தவிர, அச்சம்பவம் குறித்து அறிந்த எந்த ஒரு நபரும் புகார் தந்து அதை முதல் தகவல் அறிக்கையாகப் (FIR) பதிவு செய்யலாம்.

புகாரில் குறிப்பிடவேண்டிய அம்சங்கள்

இச்சட்டப்பிரிவு 3(1)(இ)–ன் கீழ் நிகழ்ந்த வன்கொடுமை தொடர்பான ஒரு புகாரில் குறிப்பிடப்பட வேண்டிய குறைந்தபட்ச செய்திகளைப் பார்ப்போம். வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 3(1)(து) கூறுவதாவது :“பட்டியல் சாதியினராகவோ, பழங்குடியினராகவோ இல்லாத எவரொருவரும், பட்டியல் சாதியினரையோ, பழங்குடியினரையோ சார்ந்த ஒருவரைப் பொதுமக்கள் பார்க்குமாறு உள்ள ஏதேனும் ஓரிடத்தில் அவரைத் தம் மதிப்பை இழக்கும்படி தாழ்வுபடுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமானப்படுத்தினால் அல்லது மிரட்டி அச்சுறுத்துவாரேயானால், அவர் ஆறு மாதத்திற்குக் குறையாத ஆனால், அய்ந்தாண்டுகள் வரை நீடிக்கலாகும் ஒரு கால அளவுக்குச் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்துத் தண்டிக்கப்படுவதற்குரியவராவார்''.

இதன்படி இச்சட்டப்பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றச்செயல் குறித்தான புகாரில் தெரிவிக்கப்படவேண்டிய முக்கியத் தகவல்கள்: 1) பொதுமக்கள் பார்வையில் படும்படியான இடம் 2) பட்டியல் அல்லது பட்டியல் பழங்குடியினரல்லாத நபர்கள் 3) பட்டியல் சாதி அல்லது பட்டியல் பழங்குடியினர் 4) வேண்டுமென்றே அவமதித்தல்/ கேவலப்படுத்துதல் அல்லது அச்சுறுத்துதல். இவை தவிர சம்பவம் நடைபெற்ற நாள், நேரம், இடம் மற்றும் உள்நோக்கம் ஆகியவையும் குறிப்பிடப்பட வேண்டும்.

சாதிப்பெயரைச் சொல்லாமல் இழிவு படுத்தலாமா?

தமிழகத்தில் தலித்துகளுக்கெதிரான எந்தக் குற்றம் இழைக்கப்பட்டாலும், காவல் துறையினர் அவ்வன்கொடுமைக்குரிய சட்டப்பிரிவிற்குப் பதிலாக இச்சட்டப்பிரிவையே முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்து வருகின்றனர். பொதுமக்கள் பார்வையில் சாதிப் பெயரைச் சொல்லி எந்த ஒரு பட்டியல் சாதியினரையோ, பட்டியல் பழங்குடியினரையோ இழிவுபடுத்துவது இச்சட்டப்பிரிவின் படி வன்கொடுமைக் குற்றமென்றால் கூட, சாதிப்பெயரை நேரடியாகச் சொல்லாமல், சாதியை இழிவுபடுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பொதுமக்கள் பார்வையில் இழிவுபடுத்துவது கூட, இப்பிரிவின் படி குற்றமேயாகும்.

புகார் தரும் முறைகள்

முன்னரே கூறியபடி, வன்கொடுமைக் குற்றங்கள் அனைத்தும் பிடியாணை வேண்டாக் குற்றங்கள் என்பதால், வன்கொடுமை நிகழ்வு குறித்த புகார் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 154(1)இன் படி உடனடியாகப் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்ய தாமதிக்கப்பட்டாலோ அல்லது மறுக்கப்பட்டாலோ, புகாரைப் பதிவு செய்ய மறுத்த / தாமதித்த காவல்நிலையத்தின் உயர் அதிகாரியான மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு / மாநகரங்களில் காவல் துறை ஆணையாளருக்கு அப்புகார் நேரிலோ (அ) பதிவு அஞ்சலிலோ வழங்கப்பட வேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்ட பிரிவு 154(2) கூறுகிறது.

அவர் அப்புகாரை தானே விசாரிக்கலாம் அல்லது உரிய காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப் பணிக்கலாம். அப்படியும் புகார் பதிவு செய்தல் மறுக்கப்படுமேயானால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய வழக்குகளை விசாரிக்கும் குற்றவியல் நடுவரிடம் தனிப்புகார் கொடுத்து, புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ள குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு156 (3)இன்படி ஆணை பெறலாம். இம்முயற்சியும் பலனளிக்கவில்லையெனில், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 482இன்படி உயர்நீதிமன்றத்தை அணுகி தக்க ஆணை பெறலாம்.

புகாரை வீணடிப்பதைத் தவிர்த்தல்

பாதிக்கப்பட்டோரின் புகார் உள்ளது உள்ளபடியே பதிவு செய்யப்படவேண்டும். அதில் நீட்டல், குறைத்தல், திருத்துதல் செய்ய காவல் துறையினருக்கு அனுமதி இல்லை. ஆனால், நடைமுறையில் இவ்விதி பெரும்பாலும் மீறப்படுகிறது. இந்நிலையைத் தவிர்க்க வேண்டுமெனில், நேரில் காவல் துறையினரிடம் அளிக்கப்படும் புகாரின் நகல்களைப் பதிவு அஞ்சலில் அதே காவல் நிலையத்திற்கும், உயரதிகாரிகளான காவல் துறை கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளர் போன்றோருக்கும் அனுப்பி வைப்பது நல்லது, வாய்ப்புள்ளவர்கள் அதே புகாரை தந்தியாகவோ, தொலைநகல் (Telefax) மூலமாகவோ அனுப்பலாம். புகார் நகலை மின்னஞ்சல் வழியாகவும் (Online) உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கலாம்.

வருவாய்த்துறையினருக்கு மனு அளித்தல்

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள விதிகளின்படி, பாதிக்கப்பட்டோர் தீருதவி பெற உரிமை உள்ளதால், புகாரின் நகலை இவ்வாறே வருவாய்த்துறை உயர் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் (RTO), வட்டாட்சியர் போன்றோருக்கும் அனுப்பலாம். பட்டியல் சாதியினர் / பழங்குடியினர் குடியிருப்புகள் தாக்கப்படுவது, சூரையாடப்படுவது, தீக்கிரையாக்கப்படுவது போன்ற பெரிய அளவிலான வன்கொடுமை நிகழ்வுகளில் உடனடி தீருதவி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பெற இவை பெரிதும் உதவும். அதேபோல், வன்கொடுமை நிகழ்வுகளைப் பதிவு செய்யாமல் அதை மூடிமறைத்து சமரச முயற்சி என்ற பெயரில் காவல் துறை, உள்ளூர் தாதாக்கள், செல்வாக்கு பெற்ற அரசியல்வாதிகள் போன்றோர் பாதிக்கப்பட்டோரை நிர்பந்திப்பதையும் மாவட்ட ஆட்சியர் போன்றோருக்கு புகார் நகல் அனுப்பப்படும் நேர்வுகளில் பெரும்பாலும் தவிர்த்து விட முடியும்.

ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்துதல்

அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் பெருமளவில் வந்துவிட்ட இன்றைய சூழலில், மிகக் கொடூரமான வன்கொடுமைகள் குறித்து ஊடகங்களுக்குத் தகவல் தந்து வெளியிடச் செய்வதன் மூலம் வன்கொடுமை நிகழ்வுகள் பதிவு செய்யப்படுவதையும் இத்தகைய ‘சமரச’ முயற்சிகளை முறியடிக்கவும் முடியும். அப்போதுதான் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த உத்தியை திண்ணியம் வன்கொடுமை வழக்கில் வழக்குரைஞர் ரத்தினமும், கண்ணகி முருகேசன் படுகொலை வழக்கில் தோழர் தொல். திருமாவளவனும் கையாண்டுள்ளனர்.

-காயங்கள் தொடரும்

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 2 தலித்துகள் கொல்லப்படுகின்றனர்; 12 தலித்துகளுக்கு
கொடுங்காயம் விளைவிக்கப்படுகிறது; 3 தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்;
92 வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. – தேசிய குற்ற ஆவணக் காப்பகம்


அட்டவணை 1 : தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் - ஓர் ஒப்பீடு

வ. குற்றம் ஆண்டுகள்
2003 - 2004 , 2004 - 2005
எ.
2001 2002 2003 2004 2005 உள்ள உள்ள வேறுபாடு %
வேறுபாடு %
1. கொலை 763 739 581 654 699 12.6 2.3
2. பாலியல்
வன்முறை 1316 1331 1089 1157 1172 6.2 1.3
3. கடத்தல் 400 319 232 253 258 9.1 2.0
4. கொள்ளை 41 29 24 26 26 8.3 0.0 5. வழிப்பறி 133 105 70 72 80 2.9 11.1 6. கலவரம் 354 322 204 211 210 3.4 –0.5 7. காயம் 4547 4491 3969 3824 3847 –3.7 0.6 8. சிவில் உரிமை 633 1018 634 364 291 –42.6 –20.0 9. 1989 சட்டம் 13113 10770 8048 8891 8497 10.5 –4.4 10. பிற 12201 14383 11401 11435 11077 0.3 –3.1 மொத்தம் 33501 33507 26252 26887 26127 2.4 –2.8 அட்டவணை 2 : பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் ஓர் ஒப்பீடு வ. ஆண்டுகள் 2003 – 2004 2004 – 2005 எ. குற்றம் 2001 2002 2003 2004 2005 உள்ள உள்ள வேறுபாடு % வேறுபாடு % 2001 2002 2003 2004 2005 1. கொலை 167 189 185 156 164 –15.7 5.1 2. பாலியல் வன்முறை 573 597 551 566 640 2.7 13.1 3. கடத்தல் 67 69 69 79 72 14.5 –8.9 4. கொள்ளை 16 37 30 40 27 33.3 –32.5 5. வழிப்பறி 73 62 46 50 49 8.7 –2.0 6. கலவரம் 108 58 38 33 38 –13.2 15.2 7. காயம் 756 788 790 767 767 –2.9 0 8. சிவில் உரிமை 58 47 37 11 162 –70.3 1372.7 9. 1989 சட்டம் 1167 1800 1340 1175 1283 –12.3 9.2 10. பிற 2732 3127 2803 2658 2511 –5.2 5.5 மொத்தம் 6217 6774 5889 5535 5713 –6.0 3.2


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com