Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu Febraury issue
பிப்ரவரி 2006

“ஒரு மீனவ மாட்டுக்கு பத்து சேரிக்காரன் சமம்''
பூவிழியன்

Fishermen village இயற்கையின் கொடூரத் தாக்குதல்கள் பூகம்பம், சுனாமி, நிலச்சரிவு, கடல் கொந்தளிப்பு, வெள்ளம், புயல் என வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து மனித இனத்தை அச்சுறுத்தி வருகின்றன. இதுபோன்ற இயற்கைப் பேரழிவுகள் நடக்கும் போதெல்லாம், பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்க வைப்பதில் இருந்து நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளைச் செய்வதுவரை அரசும், அரசு சாரா நிறுவனங்களும், பிற சமூகத்தினரும் பாதிப்பிற்குள்ளான சேரி மக்கள் மீது தொடர்ந்து பாகுபாட்டையே கடைப்பிடித்து வருகின்றன.

இயற்கைப் பேரழிவு ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதித்தாலும், அது தலித் மக்கள் மீது மீண்டும் மீண்டும் சாதிய வன்கொடுமையை ஏவுகிற ஒரு நிகழ்வாகவே மாறிவிடுகிறது. கடந்த நவம்பர் கடைசி வாரத்தில் பெய்யத் தொடங்கிய கனமழை, தமிழகத்தையே வெள்ளக்காடாக மாற்றியது. அதனைத் தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் கட்டுக்கடங்காத வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால், இந்தத் தொடர் கனமழையிலும், வெள்ளப் பெருக்கிலும் அல்லலுறும் சேரி மக்கள் மீது சாதி ரீதியானப் பாகுபாடுகள் நிகழ்த்தப்படுகின்றன என்பது, கள ஆய்வு செய்து பார்க்கும்போது தெரிய வந்தன.

தமிழகத்தில் 23.11.2005 அன்று பெய்யத் தொடங்கிய தொடர் கனமழை, தொடக்கத்தில் 12 மாவட்டங்களை வெள்ளக்காடாக மாற்றியது. பிறகு இதன் பாதிப்பு 22 மாவட்டங்களைத் தாக்கியது. இதனால் மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வரத்தும் தொடர்ந்து அதிகரித்ததால், கொள்ளிடம் ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டது. நாகை மாவட்டத்தில் கொள்ளிட ஆற்றின் கரைகளில் ஏற்பட்டுள்ள உடைப்பு, புதிதாக உருவானதல்ல. கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் உடைந்த பகுதிகள்தான். ஆனால் அந்தக் கரைகளை உயர்த்தி, கான்கிரீட் தடுப்புச் சுவர்களை உருவாக்கி உடைப்பைத் தடுக்கிற வேலையை அரசு செய்யவில்லை. இந்தத் தாழ்வான பகுதிகளில் தலித் மக்கள்தான் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். எனவேதான், இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளில் அரசு அலட்சியம் காட்டுகிறது.

25.11.2005 அன்று தலித் மக்களை முன்னெச்சரிக்கை காரணமாக வெளியேற்றியபோது, தலித் மக்களின் உயரிய சொத்தான மாடுகளையும், ஆடுகளையும் பாதுகாக்கிற நடவடிக்கையில் அரசு ஈடுபடவில்லை. தலித் மக்களைப் பள்ளிகளில் தங்க வைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளின் வகுப்பறைகளைத் திறந்துவிடாமல், வராண்டாவில் கும்பல் கும்பலாகத் தங்க வைத்துள்ளனர். சீர்காழி புத்தூர் பாலிடெக்னிக், சியாமளா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சபாநாயக (முதலியார்) இந்து மேல்நிலைப் பள்ளி, புதுப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில், தலித் பெண்கள் உறங்குவதற்கும், உடைகள் மாற்றுவதற்கும் வசதிகள் ஏற்படுத்தித் தராமல் கேவலப்படுத்தி உள்ளன. இது தவிர, ஆரப்பள்ளத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்களை, ஆச்சாள்புரம் பெரிய கோவிலிலும் பிற்படுத்தப்பட்ட மக்களை, சபரி ராசா திருமண மண்டபத்திலும் பிரித்து தங்க வைத்துள்ளனர்.

தாண்டவன்குளம் தலித் மக்களை, அங்குள்ள அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் தங்குவதற்கு அனுமதி மறுத்துள்ளார், பள்ளியின் தாளாளர் அருளழகன். மேலும் "பறப்பயலும், பள்ளப் பயலும் தங்குவதற்கு நான் என்ன சத்திரமா கட்டி வைத்துள்ளேன்' என்று கேவலமாகப் பேசியுள்ளார். புதுப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில், புளியந்துறை கிராம தலித்துகள் சுமார் 1500 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாலை 6 மணிக்கு தலித்துகளை வகுப்பறைகளில் இருந்து வெளியேற்றி வராண்டாவில் படுக்கச் சொல்லியும், மின்சாரத்தைத் துண்டித்தும், கழிவறைகளைப் பூட்டியும் மக்களை அலைக்கழித்தனர்.

கடந்த 2004 டிசம்பர் 26 அன்று உலகத்தையே உலுக்கிய ஆழிப்பேரலை (சுனாமி), கடற்கரைச் சமூகத்தையே விழுங்கியது. ஆனால், மீனவச் சமூகம் மட்டுமே கடற்கரைச் சமூகம்; கடலுக்குச் சொந்தமானவர்கள் என்கிற வதந்தியும் இங்கு இடையறாது பரப்பப்பட்டது. தலித்துகளும் மீனவர்களைப் போல, கடற்கரை வாழிடங்களையும், கடற் தொழிலையும் முதல் நிலைத் தொழிலாகக் கொண்டு வாழ்கிறார்கள் (தூத்துக்குடி, தரங்கம்பாடி, வானகி, திருல்லைவாசல், பிச்சாவரம் கிள்ளை, கல்பாக்கம், சென்னை). ஆனால், ஆழிப்பேரலை முகாம், நிவாரணம், மறுவாழ்வுப் பணிகள் மீனவர்களை மட்டுமே தன்மைப்படுத்தி நடந்தது. அடுத்த நிலையில் பாதிப்பிற்குள்ளாகிய தலித்துகளை அது சற்றும் திரும்பிப் பார்க்கவில்லை. அன்று புறக்கணிக்கப்பட்ட நிலை, இன்று வெள்ளம் மற்றும் கொள்ளிடக்கரை உடைப்பினால் ஏற்பட்டுள்ள பேரழிவு வரை பாதித்துள்ளது.

தமிழக அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் சாதியத் தன்மையுடன் வெளிப்படுகிறது. சுனாமி நடந்த அடுத்த இரண்டு நாட்களுக்குள் தமிழக அரசு ஓர் ஆணையை வெளியிட்டது. முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் நிவாரணமாகத் தர வேண்டும் (அரசாணை நிலை எண். 574, தேதி : 28.12.2004) என்று அறிவிக்கப்பட்டது. அன்றைக்கு வெளியிடப்பட்ட இன்னொரு அரசாணையில் (அரசாணை நிலை எண் 575, தேதி : 28.12.2004) உடனடி நிவாரணமாக மாநில இயற்கைச் சீற்ற நிவாரண நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கீழ்க்கண்டவைகளை வழங்க வேண்டுமென்பதுதான் அது : ஒரு வேட்டி, ஒரு புடவை, இரண்டு கம்பளிப் போர்வை, 60 கிலோ அசி, 3 லிட்டர் மண்ணெண்ணெய், ஆயிரம் ரூபாய் பருப்பு, எண்ணெய், மற்ற மளிகைச் சாமான்களுக்கு; ரூபாய் ஆயிரம் சமையல் அடுப்பு பாத்திரங்களுக்காக; தற்காலிகக் குடியிருப்பு ஏற்படுத்த ரூபாய் இரண்டாயிரம்.

Fishermen village அது தவிர, 31.12.2004 அன்று மீனவர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கும் ஆணையையும் (நிலை எண்.583) அரசு வெளியிட்டது. அதாவது, ஒரு வேட்டி, ஒரு புடவை, இரண்டு கம்பளிப் போர்வை வீதம், 60 கிலோ அசி, 3 லிட்டர் மண்ணெண்ணெய், ரூபாய் இரண்டாயிரம் மளிகைப் பொருட்கள், எண்ணெய், பாத்திரங்கள் வாங்க என அது கூறுகிறது. சுனாமியால் பெரும்பான்மையான மீனவர்கள் பாதிக்கப்பட்டனர் என்பது உண்மை. அதே போல, வெள்ளப் பெருக்கு மற்றும் கொள்ளிடக் கரை உடைப்பு ஏற்பட்டதால், முழுபாதிப்படைந்தவர்கள் தலித்துகள் என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். சுனாமியில் மீனவர் என்று ஒரு அடையாளத்தை வைத்து ஆணை வெளியிடும் அரசு, வெள்ளப் பாதிப்பில் தலித்துகளுக்கென்று நிவாரணம் குறித்த அரசாணையை ஏன் வெளியிடவில்லை?

சுனாமி தாக்கிய பிறகு 28.12.04 அன்று வெளியிட்ட அரசாணையில், சமையல் அடுப்பு வாங்குவதற்கு ஆயிரம் ரூபாயை தர சம்மதித்து ஆணையிடுகிற ஆட்சியாளர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீட்டை முற்றிலும் இழந்து தெருவுக்கு வந்த தலித்துகளுக்கும் இழப்பீட்டுத் தொகை ரூபாய் 1000 என அறிவித்ததை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஆக,ஒரு மீனவன் ஒரு அடுப்பின் மதிப்புதான் ஒரு சேரிக்காரனின் மொத்த வாழ்க்கையே என்பது, சாதியப் பாகுபாடின்றி வேறென்ன? அதே போன்று சுனாமியால் இறந்துபோன மாட்டிற்கு ரூ. 10,000 வழங்கிய அரசு, முழுவதும் இடிந்துபோன வீட்டிற்கு 2,000 ரூபாய் என்றும், லேசான பாதிப்பு என்றால் 1,000 ரூபாய் என்றும் கூறுகிறது. பத்து சேரிக்காரனின் மொத்த மதிப்பு, ஒரு மீனவ மாட்டிற்குச் சமம் என அரசு சொல்கிறதா?

மேலும், 6.1.2005 அன்று வெளியிட்ட அரசாணை (நிலை எண்.10) இல் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றிற்கு 8000 ரூபாய் மதிப்புள்ள தற்காலிகக் குடியிருப்பு கட்டித்த தர மற்றும் இடம் தேர்வு செய்ய, அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது . ஆனால், தலித்துகளின் வாழ்நிலையை அடையாளம் கண்டு, தற்காலிகக் குடியிருப்புகளை அமைக்காதது ஏன்? அதே அரசாணையில் தற்காலிகக் குடியிருப்புகள் அமைப்பதற்கும், நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் உறவை ஏற்படுத்திக்கொண்டு, பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு உதவிகளைச் செய்ய வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், வெள்ளப்பாதிப்பில் தலித் மக்கள் பாதிக்கப்பட்டபோது, முகாம் மற்றும் நிவாரணங்களில் தொண்டு நிறுவனங்கள் தலித் மக்களுக்கு உதவி செய்யக் கூடாது (நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன்) எனத் தடுத்தது ஏன்?

அண்மையில் நடைபெற்ற கடைசி சட்டமன்ற விவாதங்களில்கூட, முதலமைச்சரும் எதிர்க்கட்சியினரும் பல தனிப்பட்ட விரோதங்களுக்காக ஆவேசமாக மோதிக் கொண்டனர்; பலமுறை வெளிநடப்புச் செய்தனர். ஆனால், தலித் மக்கள் மீதான சாதிப் பாகுபாடுகளைச் சுட்டிக்காட்டி, நடவடிக்கை எடுக்க குரல் கொடுக்கவோ, வெளிநடப்புச் செய்யவோ எவருமே தயாராக இல்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com