Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
டிசம்பர் 2008
காலணியில் நசுங்கும் தொழிலாளர்கள்
அழகிய பெரியவன்

ambur_strike


சாப்பிடுகிற ஒவ்வொரு கவளம் சோற்றின் அரிசி மணிகளும் நெடுந்தூரம் பயணம் செய்து, நம் கைகளை அடைகின்றன. உணவுத்தட்டில் அவற்றைக் கொண்டு வந்து சேர்க்க எத்தனையோ பேர் உழைக்க வேண்டியுள்ளது. எல்லாமே கூட்டு உழைப்பு. நாம் உடுத்தும் வேட்டியை கூட்டு உழைப்பில் நெய்து முடிக்க, இரண்டு நாட்களுக்கும் மேலாகும். ஒரு சேலையை நெய்யவோ பல பேர் பல நாட்கள் உழைக்க வேண்டும். ஒரு காலணியை செய்து முடித்திட இரண்டொரு நாள் ஆகும். அதை செய்வதற்குத் தேவையான தோல் பதப்படுத்தப்பட்டு வரவோ ஒரு மாதத்துக்கும் மேலாகிவிடும். மனிதனின் வாழ்க்கையில் இணுக்கு இணுக்காய் இப்படிப் பல்லாயிரம் மனிதர்களின் உழைப்பு ஊடுபாவாய் பின்னிப் பிணைந்திருக்கிறது. உழைப்பைப் பெற்றுக் கொள்ளும் மனிதர்கள் உழைப்பவர்களை ஒரு கண நேரமும் எண்ணிப் பார்ப்பதில்லை. முதலாளிகளும், அரசும், அதிகாரிகளும் உழைக்கின்றவர்களை உயிர்களாகவே மதிப்பதில்லை.

கடந்த இரு ஆண்டுகளாகத் தீவிரமடைவதும், ஒடுக்கப்படுவதுமாக காலணி தொழிலாளர் போராட்டங்கள் ஆம்பூரில் நடந்து வருகின்றன. இப்போராட்டங்களை நிறுத்துவதற்கு அரசு நிர்வாகம் இதுவரை எதையும் செய்யவில்லை. காவல் துறையோ முதலாளிகளின் கையாளாக நின்று தொழிலாளர்களை ஒடுக்கி வருகிறது. தமிழகத்தின் நந்தி கிராம் போலவும், சிங்கூர் போலவும் கருதத்தக்க இப்போராட்டங்கள், எந்தப் பத்திரிகைகளிலும் எழுதப்படவில்லை; எந்த தொலைக்காட்சிகளிலும் காட்டப்படவில்லை!

இந்தியாவில் உற்பத்தியாகும் தோல் மற்றும் தோல் பொருட்களில் சுமார் 10 சதவிகிதம், வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இருந்து தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாட்டின் 25 சதவிகித காலணிகள் இங்கிருந்தே ஏற்றுமதியாகின்றன. தோல் ஏற்றுமதியாளர்களில் இருபதுக்கு நான்கு பேரும், காலணி ஏற்றுமதியாளர்களில் இருபதுக்கு அய்ந்து பேரும் ஆம்பூர்காரர்களே! வேலூர் மாவட்டத்தில் இருக்கின்ற ஆம்பூர், பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய நகரங்களிலிருந்து மட்டும் ஆண்டொன்றிற்கு சுமார் 15,000 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.

இம்மாவட்டத்தில் இயங்கி வரும் சிறியதும், பெரியதுமான 4,800 தொழிற்சாலைகளில் 50,000 தொழிலாளர்கள் வேலை செய்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் 35,000 தொழிலாளர்கள் ஆம்பூர் தோல் தொழிற்சாலைகளில் பணிபுரிகிறார்கள். ஆம்பூரில் இன்று இயங்கி வருகின்ற 43 தோல் பதனிடும் தொழிற்சாலைகள், 24 கச்சா தோல் தொழிற்சாலைகள், 36 தோல் முழுமை செய்யும் தொழிற்சாலைகள், 25 காலணி தொழிற்சாலைகள், 96 சிறிய தோல் தொழிற்சாலை அலகுகள் ஆகியவற்றிலிருந்து 1283.35 கோடி காலணிகள் ஆண்டொன்றுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இத்தொழிற்சாலைகளின் முதலாளிகள் செல்வச் செழிப்பில் மிதக்கிறார்கள். அரசு அவர்களைப் பாதுகாக்கிறது. காவல் துறை அவர்களிடம் கைகட்டி நிற்கிறது. ஆனால் அத்தனை கோடிகளையும் தமது உழைப்பினால் சாத்தியமாக்கும் தொழிலாளர்கள் குறைந்த பட்ச கூலியையோ, தொழிலாளர் சட்டங்களுக்கு உட்பட்ட உரிமைகளையோ, பெற முடியாத கொத்தடிமைகளாய் இருக்கிறார்கள். சுற்றுச்சூழல் சீர்கேட்டால் வாழ்வதற்குக் கூட அருகதையற்ற நகரமாய் அறிவியலாளர்களால் அறிவிக்கப்பட்டு விட்ட ஆம்பூரில், தோல் பொருட்கள் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் வாழக்கூடாதவர்களாய் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

நூறு ஆண்டுகள் பழைமையான தோல் பொருள் தொழிலில், வேலூர் மாவட்டத்தில் 1924 ஆம் ஆண்டிலேயே தொழிற்சங்கங்கள் தோன்றின. இந்தியாவிலேயே தோல் தொடர்பான தொழிற்சாலைகள் முதன் முதலில் தொடங்கப்பட்ட வாணியம்பாடியில்தான் இப்படிப்பட்ட சங்கங்கள் தோன்றின. தொழிலாளர் சங்கங்கள் தலித் தலைவர்களாலேயே முதலில் உருவாக்கப்பட்டன. இதற்கான காரணம் மிக எளியது. தோல் பதனிடுதல் மற்றும் தோல் பொருட்கள் தயாரித்தல் போன்ற தொழில்கள் அருவருப்பானவையாகவும், தீட்டானதாகவும் கருதப்பட்டன. கலப்பையினால் பூமியைக் கீறுவதால் வேளாண் தொழில் பாவமானது என்று சொல்லும் மநுஸ்மிருதி, தோல் வணிகத்தையும், தொழிலையும் ‘திக்குவனும்' ‘காருவாரனும்' செய்ய வேண்டும் என்று ஒதுக்குகிறது. இவர்கள் இருவரும் ‘கலப்பு சாதிகள்' என்று இழிவுபடுத்தப்பட்டவர்கள்.

இன்றும் தோல் மற்றும் தோல் பொருட்கள் தொழிலில் தலித் மக்களும், சிறுபான்மையினரும்தான் அதிகமாக ஈடுபடுத்தப்படுகிறார்கள். இத்தொழிலாளர்களில் பெண்களே அதிகம். தலித் பெண்கள் மட்டும் 80 சதவிகிதம் உள்ளனர். ஓசூர், திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய தொழில் நகரங்களில் தொழிலாளர் பெறும் ஊதியத்தை விடவும் இங்கேதான் குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்படுவதாக தொழிற்சங்கத் தலைவர்கள் சொல்கிறார்கள். சாதிதான் இதற்குக் காரணமாக இருக்கிறது. இம்மாவட்டத்துக்கு தொடர்ந்து கிடைக்கும் பார்ப்பன, ஆதிக்கசாதி தொழிலாளர் நல அலுவலர்களால் தலித் தொழிலாளர் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன. முஸ்லிம் முதலாளி களிடமோ சாதியப் பார்வையும், அலட்சியமும் இருக்கிறது.

வடஆர்க்காடு மாவட்ட தோல் பதனிடுவோர் சங்கம், அய்.என்.டி.யு.சி. ஆகியவையே இத்தொழிலாளர்களுக்காக தொடங்கப்பட்ட முதல் சங்கங்கள். இன்று கட்சிக்கொரு சங்கம் வந்துவிட்டது. இச்சங்கங்களில் பெரும்பான்மையானவை முதலாளிகளோடு இணங்கிப் போய்விடுபவை என தொழிலாளர்களால் குற்றம் சாட்டப் படுகின்றன. ஆம்பூரில் இருக்கும் பெரும்பாலான தோல் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி சாலைகளில் அரசு நிர்ணயித்திருக்கிற அடிப்படைக் கூலி வழங்கப்படுவதில்லை. பெரும் கட்டடங்களில், நிலையாக இத்தொழிற்சாலைகள் இயங்கினாலும் தோல் பதனிடுதல் மற்றும் காலணி தயாரிப்பு தொழில்களை அமைப்பு சாரா தொழில்களாகவே அரசு அறிவித்துள்ளது. இத்தொழிலாளர்களுக்கு கிடைக்கப் பெறாத உரிமைகள் பல இருக்கின்றன. காலணி தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு தொழிலாளருக்கு, ஒரு நாள் அடிப்படைக் கூலியாக ரூ.58, அகவிலைப் படி ரூ.18, ரூ.76 தரப்பட வேண்டும். இது, அடிப்படை கூலிச் சட்டம் 1948இன்படி தமிழ்நாடு அரசால் நிர்ணயிக்கப்பட்டது (அக்.2004).

தோல் பதனிடுகிற ஒரு தொழிலாளிக்கு 142 ரூபாய் ஒரு நாள் ஊதியமாக வழங்கப்பட வேண்டும். காலணி தொழிலில் ஈடுபடும் ஒருவர், நிரந்தர அகவிலைப்படி மற்றும் தினசரி கூலியுடன் சேர்த்து மாத ஊதியமாக ரூ.4,500 குறைந்தபட்சம் பெற வேண்டும் என்பது விதி. ஆனால் இந்த அடிப்படைக் கூலி ஆம்பூரிலுள்ள தொழிற்சாலைகளில் வழங்கப்படுவதில்லை. பத்திலிருந்து பதினைந்து ஆண்டுகள் வேலை செய்த ஒருவருக்குத்தான் இந்த ஊதியம் கிடைக்கும். இம்மாதிரியான தொழிலாளர்கள் தொழிற்சாலை ஒன்றுக்கு அய்ம்பது பேருக்குத்தான் இருப்பார்கள். பத்து ஆண்டுகள் பணிபுரிந்தாலும் தொழிலாளர்களைப் பணிநிரந்தரம் செய்வதில்லை. தொழிற்சாலை நட்டத்தில் ஓடுவதால், வேறு ஒரு முதலாளி குழுமத்துக்கு விற்று விட்டோம், ஒப்பந்தம் போட்டு விட்டோம் என்பதைப் போன்ற பொய்யான காரணங்களைக் கூறி, எப்போதுமே தொழிலாளர்களைப் பணி நிரந்தரமின்றி வைத்திருப்பார்கள். வருங்கால வைப்பு நிதி, மருத்துவ உதவி போன்றவை கிடையாது. சில தொழிற்சங்கங்கள் இவற்றைக் கேட்கிறபோது முதலாளிகள், தமக்கு ஏற்ற வகையில் அவர்களோடு ஓர் ஒப்பந்தம் போட்டுக் கொள்வார்கள். அந்த ஒப்பந்தம் தொழிலாளர் நலச்சட்டங்களுக்கு விரோதமாக இருந்தாலும் தொழிலாளர் நல அலுவலர் அதற்கு ஒப்புதல் அளிப்பார். போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்தக் கூடாது. தொழிலாளர்கள் கேள்வி கேட்டால் ‘ரவுடி'களை கூட்டி வந்து உதைப்பார்கள். தோல் திருடியதாகப் பொய் வழக்கும் போடப்படும். இது இங்கு தொடர் கதை.

சில ஆண்டுகளுக்கு முன்பு ‘தமிழ்நாடு தொழிற்சங்க நடுவம்' இப்பகுதியிலே சங்கம் கட்டத் தொடங்கியது. தொழிற்சங்க நடுவத்தின் வருகை இப்பகுதியில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. என்.எம்.ஜக்காரியா, சால்கோ, டி.ஏ.டபிள்யூ., எஸ்.எஸ்.சி., மிடில் ஈஸ்டு, சுரா லெதர்ஸ், இர்பாஸ், இன்டர்நேஷனல் பிரைம் போன்ற மிக முக்கியமான காலணி மற்றும் பதனிடும் தொழிற்சாலைகளில் குறுகிய காலத்துக்குள் தமிழ் நாடு தொழிற்சங்க நடுவத்துக்குக் கிளைகள் உருவாகின.

சுமார் 4000 தொழிலாளர்கள் இச்சங்கத்தில் உறுப்பினர்களாயினர். காலணி மற்றும் பதனிடுதல் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் உண்மை நிலையை, தமிழ் நாடு தொழிற் சங்க நடுவம் மக்களின் கவனத்துக்கு கொண்டு வந்தது. அந்த உண்மைகள் அதிர்ச்சி அளிக்கின்றவை. ஆம்பூரில் இருக்கும் "யுனெஸ்கோ' மற்றும் "புளோரின்ட்' ஆகிய இரு காலணி தொழிற்சாலைகள் மட்டுமே சட்டப்படியான குறைந்த பட்ச கூலியை தொழிலாளர்களுக்கு அளிக்கின்றன. மற்றவை தருவதில்லை. "மிடில் ஈஸ்டு' என்ற பதனிடும் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு பத்து நாள் கூலி மட்டுமே வழங்கப்படும். இருபது நாள் கூலி தரப்படாது. அகவிலைப்படி தொகையோ ஓர் ஆண்டு தாமதமாகத் தரப்படும். தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தும் சூழலில் இருந்து தப்பிக்க, முதலாளிகள் பல உத்திகளைக் கையாளுவார்கள். ஒப்பந்த வேலை, தொழில் நிலைக்கு ஏற்ப வேலை (Job Work) ஆகியவையே அந்த உத்திகள்.

foot_worker
இந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மருத்துவ உதவியோ, அகவிலைப்படியோ, பேறுகால ஊதியமோ கேட்க முடியாது. நேரக் கட்டுப்பாடும் கிடையாது. 12 மணிநேரம் கூட கட்டாய உழைப்பை செலுத்தி, கேட்கிற வேலையை முடித்துக் கொடுக்க வேண்டும். முதலாளிகளின் மலிவான உத்திகளில் மற்றொன்று, பெண்களை அதிக அளவில் வேலையில் சேர்த்துக் கொள்வது. பத்தாம் வகுப்பைக் கூட கடக்காத இளம் தலித் பெண்கள் பெருவாரியாக இத்தொழிற்சாலைகளில் பணியமர்த்தப்படுகின்றனர். தமிழ்நாடு குழந்தைத் தொழிலாளர் சட்டம், குழந்தையின் வயதை 14 என்று வரையறுப்பது இங்கு பெருமளவில் உதவுகிறது. 14 முதல் 20 வயது நிரம்பிய இப்பெண்கள் முதலாளிகளை கேள்வி கேட்பதில்லை. பயந்து வேலை செய்வார்கள். தங்களின் உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வு இருக்காது. கொடுக்கும் கூலியை வாங்கிக் கொள்வார்கள். இப்பெண்களுக்கு ரூ.15லிருந்து ரூ.20 வரை ஒரு நாள் கூலியாகத் தரப்படும். வருங்கால வைப்பு நிதி பிடிப்பதில்லை.

தொழிலாளர்களை அழைத்து வர போதிய பேருந்து வசதிகள் கிடையாது. ஆடு மாடுகளைப் போல அடைத்து வரப்படுவர். தொழிற்சாலைகளுக்கு உள்ளே உணவகமோ, உணவு அறைகளோ, ஓய்வு அறையோ கிடையாது. போதுமான குளியலறை, கழிப்பறைகளும் இருப்பதில்லை. கழிவறைகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் அய்ந்து நிமிடங்களுக்கு மேல் அனுமதிக்கப்படுவதில்லை. குழந்தைக் காப்பு மய்யங்கள் இந்த தொழிற்சாலைகளில் கிடையாது. விடுப்பு எடுக்க அனுமதி இல்லை என்பதால், ஒரு நாள் பணிக்கு செல்லவில்லை என்றாலும் இரு நாட்களுக்கான கூலி பிடித்தம் செய்யப்பட்டு விடும்; அல்லது ஒரு வாரம் கட்டாய விடுப்பு அளிக்கப்படும். தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை. உப்பு தண்ணீரையே தொழிலாளர்கள் குடித்துத் தீரவேண்டும். முதலுதவி வசதிகள் கிடையாது. இந்த உரிமை மீறல் செயல்களுடன் பெண்கள் மட்டுமே பணியிடங்களில் சந்திக்கக் கூடிய பாலியல் கொடுமைகளும் சேர்ந்து கொள்ளும். பெண்கள் முதலாளிகளுக்கும், மேலாளர்களுக்கும் உடன்படும்படி கட்டாயப்படுத்தப்படுவர். வயிற்றில் கை வைப்பது, இடுப்பில் கிள்ளுவது, இடிப்பது என வக்கிரங்கள் தொடரும். தொழிலாளியை அடிப்பது. இரு பொருள்படும்படி ஆபாசமாகப் பேசுவது போன்றவை மிக மிக இயல்பானவை. இப்படிப் பல கொடுமைகளை தொழிற்சங்க நடுவம் வெளிப்படுத்தியது.

தமிழ்நாடு தொழிற்சங்க நடுவமும், புரட்சிகர தொழிலாளர் முன்னணியும் 2007ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமது தொழிற்சங்கப் பணிகளைத் தொடங்கின. “அடிமை ஒருவனிடம், அவனின் அடிமைத்தனத்தை உணர்த்திவிட்டால் போதும். அவன் போராடத் துணிந்து விடுவான்” என்பது அம்பேத்கர் சொன்ன கலகத்தின் சூத்திரம். இந்த சூத்திரத்தின் பலனை தொழிற்சங்க நடுவம் நேரில் கண்டது என்றே சொல்ல வேண்டும். கடந்த ஆண்டின் இடைப்பட்ட மாதங்களில் ஆம்பூரில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்களை அந்நகரம் வேறெப்போதும் பார்த்திருக்காது. போனோவென்சர், எஸ்.எஸ்.சி. காலணி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் இருபதுக்கும் மேற்பட்ட அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த ஆண்டு சூன் மாதத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர். ஆறு மாதமாக பேச்சுவார்த்தைக்கு உடன்படாத தொழிற்சாலை நிர்வாகம் உடனே இதற்குப் பணிந்தது.

மாவட்ட ஆட்சித் தலைவர் எதிரில் நடைபெற்ற அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. சில நாட்கள் கழித்து சென்னையில் கோட்டையை நோக்கிப் பேரணியாக செல்ல முயன்ற 3000 தொழிலாளர்களை காவல் துறை கைது செய்தது. இதற்குப்பிறகு வேலூரில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் 470 ரூபாய்க்கு மேல் ஊதிய உயர்வு வழங்க முடியாது என அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட 49 தொழிலாளர்களை தொழிற்சாலை நிர்வாகம் நீக்கியது. இதைக் கண்டித்து தொழிற்சாலை முற்றுகைப் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். கலவரங்களை அடக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் ‘வஜ்ரா' கவச வாகனங்களுடன் காவல் துறை வந்து சேர்ந்தது. கண்மூடித்தனமாக தடியடி நடத்தப்பட்டது.

தொழிற்சாலையிலிருந்து புறப்பட்டுப் போய் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களை மீண்டும் தடியடி நடத்தி கலைத்தது காவல் துறை. நகரின் வேறொரு மூலையில் இருக்கும் டி.ஏ.டபிள்யூ. காலணித் தொழிற்சாலை தொழிலாளர்கள், இச்செய்தி அறிந்து சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர். அங்கும் சென்ற காவல் துறை தொழிலாளர்களை அடித்து விரட்டியது. இப்படி ஒரே நாளில் பெண் தொழிலாளர்கள் மீது மூன்று முறை தடியடி நடத்தியது, வேறெந்த தொழில் நகரங்களும் கண்டிராதது. அச்சுறுத்தல்களுக்கு அந்தந்த தொழிலாளர் சங்கங்கள் உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கினார்கள்.

இறுதியாக, இத்தொழிற்சாலை நிர்வாகங்கள் தொழிலாளர் ஊதிய உயர்வு உள்ளிட்ட சில அடிப்படை உரிமைகளை ஏற்றுக் கொண்டு ஒப்பந்தம் போடும் நிலைக்குத் தள்ளப்பட்டன. போனேவென்சர் மற்றும் எஸ்.எஸ்.சி. காலணி தொழிற்சாலைகளில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்கள், தமிழ்நாடு தொழிற்சங்க நடுவத்தின் முதற்கட்டப் போராட்டங்களாகக் கருதப்பட வேண்டும். இப்படி தடியடி பட்டு, கைதாகி, உண்ணாமல் இருந்து, ஒப்பந்தங்களை தொழிலாளர்கள் போடச் செய்தாலும், முதலாளிகள் அவற்றை செயல்படுத்துவதில்லை என்று புகார்கள் வருகின்றன. பேச்சு வார்த்தை, அது இது என்று ஓர் ஒப்பந்தம் போடுவதற்கு இரண்டு ஆண்டுகளை தொழிற்சாலை நிர்வாகம் வேண்டுமென்றே ஓட்டிவிடும். ஓர் ஒப்பந்தத்தின் காலமோ அதிக பட்சம் நான்கு ஆண்டுகள்தான் என்பதால், தொழிலாளர்களுக்கு ஒப்பந்தப் பயன்கள் குறுகிய காலமே கிடைக்கும்.

foot_worker
பொதுவாக தொழிற்சங்க ஒப்பந்தம், ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலைக்கு மட்டுமே உரியது. ஒப்பந்தப் பயன்கள் பிற தொழிற்சாலைக்கும் கிடைக்க வேண்டும் என்றால், அந்தத் தொழிற்சாலை தொழிலாளர்கள் போராட வேண்டும்; அல்லது அங்கிருக்கும் தொழிற்சங்கங்கள் முயற்சி எடுக்க வேண்டும். தொழிற் சட்டங்கள் பல இருந்தாலும் தமிழகம் முழுக்கவும் ஒரே மாதிரியான கூலி விகிதங்களோ, தொழிலாளர் நலப் பலன்களோ முதலாளிகளால் வழங்கப்படுவதில்லை. ஒருங்கிணைக்கப்படாத தொழில்களில் இந்த நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. நவீன கணினி விளையாட்டில் இருப்பதைப் போல, பலமட்ட புதிர் பாதைகள் நிறைந்தது தொழிற்சங்கப் போராட்டம். ஒரு தொழிற்சாலையில் போராட்டம் நிறைவு பெற்றால் அடுத்ததை நோக்கி அது நகர வேண்டும். அப்படித்தான் தொழிலாளர் போராட்டம், ஆம்பூர் துத்திப்பட்டில் இயங்கும் என்.எம். ஜக்காரியா காலணி தொழிற்சாலைக்கு மாறியது.

என்.எம்.ஜக்காரியா காலணி தொழிற்சாலையில் 1200 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களில் 900 பேர் பெண்கள். இத்தொழிற்சாலையில் தமிழ் நாடு தொழிற்சங்க நடுவம் கிளையை உருவாக்கியது. ஆம்பூரில் இருக்கும் தொழிற்சாலைகளில் உள்ள அதே நிலைதான் இங்கும் இருந்தது. தொழிலாளர்களுக்கு சட்டப்படியான அடிப்படை கூலி இல்லை. மருத்துவ உதவியோ (இ.எஸ்.அய்.), வருங்கால வைப்பு நிதியோ (பி.எப்.) பேறுகால விடுப்போ இல்லை. கூடுதல் நேர வேலை இந்த தொழிற்சாலையில் கட்டாயமானது. 10 முதல் 14 மணி நேரத்துக்கு ஒரு தொழிலாளி வேலை செய்ய வேண்டியிருக்கும். தொழிலாளர்களை மேற்பார்வை செய்பவர்கள், இரு பொருள்படும்படி பெண்களை பேசுவார்கள். மேலாளர்களோ, முதலாளியோ பார்வையிடும்போது, வேலையில் சுணங்கும் தொழிலாளர்கள் அடிக்கப்படுவார்கள், இத்தொழிற்சாலையில் தொழிற்சங்கங்கள் எதுவும் இல்லை.

எந்த அரசியல் கட்சியும் சங்கம் தொடங்காமல் இருக்க தொழிற்சாலையே பணம் தருகிறது. புகார்கள் வராமலிருக்க தொழிற்சாலை நிர்வாகமே தனக்குச் சாதகமான சிலரைக் கொண்டு ‘போலி தொழிற்சங்கம்' ஒன்றை உருவாக்கி, தொழில் தகராறுகள் சட்டம் 12(3)இன்படி ஓர் ஒப்பந்தத்தைப் போட்டுக் கொண்டது. அடிப்படை கூலியோ, போனசோ, வேறு பயன்களோ இந்த ஒப்பந்தத்தில் இல்லை. இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்து தொழிலாளர் நல அலுவலரும் கையெழுத்திட்டிருக்கிறார்.

தமிழ்நாடு தொழிற்சங்க நடுவம், இத்தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர் இடையிலே ஒரு கிளையை உருவாக்கியது, பெருவாரியான தொழிலாளர்கள் உறுப்பினர்களாகி விட்டனர். இத்தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாளர்களை கட்டாயமாக வெளியேற்றியது நிர்வாகம். தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம், முற்றுகைப் போராட்டம் என நடத்தியதால் தொழிற்சாலையைச் சுற்றி 200 மீட்டருக்குள் போராட்ட நடவடிக்கைகள் எதையும் நடத்தக்கூடாது என்று நீதிமன்ற ஆணை ஒன்றை பெற்றது தொழிற்சாலை. காவல் துறை தொழிற்சாலையின் முன் நிரந்தரமாக நிறுத்தப்பட்டது. தொழிலாளர்கள் அத்தொழிற்சாலையின் முன்னால் சாகும் வரை உண்ணா நிலை போராட்டத்தை நடத்தினர். தொழிற்சாலை நிர்வாகம் இதைக் கண்டுகொள்ளவில்லை. உண்ணாநிலை போராட்டத்தின் இரண்டாம் நாளன்று நாற்பது தொழிலாளர்கள் மயக்கமடைந்தனர்.

“தொழிலாளர்கள் ஒருவர் பின் ஒருவராக மயக்கமடைந்து தூக்கிக் கொண்டு வரப்படுகிறார்கள். ஆம்பூர் பொது மருத்துவமனையில் அவர்களை கிடத்த போதிய படுக்கைகள் இல்லை. ஒரு கட்டிலில் இரண்டு பேர்கள் எனப் படுக்க வைத்து சிகிச்சை தரப்பட்டது. போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. காவல் ஆய்வாளர் அந்த நேரத்தில் வந்து மயக்கமுற்றவர்கள் நடிப்பதாக கிண்டல் பேசினார்'' என்று சொல்கிறார், இப்போராட்டங்களில் தொழிலாளர் பக்கம் நின்ற யாழன் ஆதி. தொழிலாளர்கள் அரசின் கவனத்தை ஈர்க்கவும் முயன்றனர். 3.10.2008 அன்று மூன்றாயிரம் தொழிலாளர்கள் சென்னையில் பேரணி நடத்தி, முதல்வர் குறை தீர்வு பிரிவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். அரசிடமிருந்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மீண்டும் தொழிலாளர்கள் போராடத் தொடங்கினர்.

தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை காவல் துறை கைது செய்தது. வேலூர் தொழிலாளர் நல அலுவலகத்துக்கு முன்னால் திரளாகச் சென்ற தொழிலாளர்களையும் காவல் துறை விரட்டி அடித்து கைது செய்தது. “ஆம்பூரிலிருந்து பள்ளிகொண்டாவரை சுமார் 500 காவல் துறையினர், வேலூர் போகிற பேருந்துகளிலெல்லாம் ஏறி பெண் தொழிலாளர்களை கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையின் போது பொது மக்கள் சிலரையும் கூட கைது செய்தது காவல் துறை. காவல் துறையிடமிருந்து தப்பிக்க கரும்புத் தோட்டங்களிலும், தென்னந்தோப்புகளிலும் பதுங்கிக் கிடந்தனர் தொழிலாளர்கள். கைது செய்த பெண்களிடம் ஆண் காவலர்கள் ஆபாசமாகப் பேசி, சீண்டியிருக்கிறார்கள். திருமண மண்டபங்களில் தவிக்க விட்டிருக்கிறார்கள்'' என்கிறார்கள் மக்கள்.

வேலூர் சென்ற தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என ஏமாற்றி அழைத்துப்போய் 23 பெண் தொழிலாளர்களையும், 8 ஆண் தொழிலாளர்களையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது காவல் துறை. தமிழ்நாடு தொழிற்சங்க நடுவத்தின் தலைவர் ராமமூர்த்தியையும், செயலாளர் ரூபனையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறது. சுமார் ஒரு மாதம் கழித்து அண்மையில் தான் கைது செய்யப்பட்ட தொழிலாளர்களும், ரூபனும் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

போராட்டங்களை ஒடுக்குவதிலும், தொழிலாளர்களை கைது செய்வதிலும், தேடுதல் வேட்டை என்ற பெயரிலும் காவல் துறை கடுமையான மனித உரிமை மீறல்களை ஆம்பூரில் நடத்தியுள்ளது. போலி சங்கத்துடன் போட்ட ஒப்பந்தம் செல்லும் என்று பிடிவாதமாய் இருந்து வருகிறது தொழிற்சாலை நிர்வாகம். தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அது வெளியேற்றியிருக்கிறது. தொழிலாளர் நலத்துறையோ முதலாளிகளுக்கு தலையாட்டுவதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. நிலைமை இன்றும் கூட அதே நிலையில் நீடித்து வருகிறது. வினோதமான நோய்கள் மக்களை வீழ்த்துகின்றன. வேறு வேலையோ, விவசாயமோ செய்ய வழியின்றி நிற்கும் மனிதர்கள் இங்கே ஒரே புகலிடமாக நாடுவது காலணி தொழிற்சாலைகளைத்தான்.

தொழிலாளர்கள் கூலி போதவில்லை என்றால், “அரசு இரண்டு ரூபாய்க்கு அரிசி போடுகிறதே, அதை வாங்கித் தின்னுங்கள்'' என்கிறார்கள் முதலாளிகள். ஒரு நிமிடத்துக்கு 45 ஆயிரம் ரூபாயை பில்கேட்ஸ் சம்பாதிப்பதாக செய்திகள் சொல்கின்றன. இந்திய முதலாளிகளும் அப்படி சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பும் அரசு, தொழிலாளர்கள் வதைக்கப்படுவதை பார்த்துக் கொண்டு வாய்மூடிக்கிடக்கிறது. சென்ற நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் அன்னிய நாடுகளின் தொழில் முதலீடு ரூ.8,300 கோடி டாலர். இப்படி வந்து மொய்க்கும் கழுகுகளுக்கு சேவை செய்யவே அரசுக்கு நேரம் இல்லை போலத் தெரிகிறது. சிங்கூரிலும், நந்திகிராமிலும் நடந்த பொய்ப்பரப்புரைகளே ஆம்பூரிலும் நடந்து கொண்டுள்ளன. தீவிரவாதிகளின் பின்னணியில் தொழிலாளர்கள் நின்று செயல்படுகிறார்கள் என்கிறது அரசும், நிர்வாகமும். பசிக்கின்ற மக்கள், வயிறுகளின் பின்னணியிலும் சுயமரியாதையின் பின்னணியிலும் நின்றுதான் எப்போதும் போராடுகின்றனர் என்பதை அரசு மறந்து விடுகிறது.

போராட்டங்கள் தற்காலிகமாக அடக்கப்படலாம். ஆனால் அழுத்தம் அதிகரித்தால் ஆர்டீசியன் ஊற்றுப்போல தன்னியல்பாய் அது மீண்டும் பீறிட்டு வெடிக்கும். அன்னிய செலாவணிக்காக "தொழில் அமைதி' கெட்டுவிடாதபடி பார்த்துக் கொள்ளும் அரசு நிர்வாகமோ, காவல் துறைக்கும், அதிகாரிகளுக்கும் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து தற்காத்துக் கொள்ளும் முதலாளிகளோ அப்போது மவுனமாக இருந்துவிட முடியாது.

வேடிக்கை பார்க்கும் தொழிற்சங்கங்கள் !

Ruban
தமிழ்நாடு தொழிற்சங்க நடுவம் என்ற தொழிற்சங்க அமைப்பே அண்மையில் நடந்த காலணி தொழிலாளர்களின் போராட்டங்களை முன்னின்று நடத்தியது. இதன் செயலாளர் ரூபன் காவல் துறையாலும், முதலாளிகளாலும் தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டுள்ளார். தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் சேர்வதும், பெரும்பாலான தொழிற்சாலைகளிலிருந்து அதற்கு ஆதரவு திரள்வதும் முதலாளிகளுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.

முதலாளிகளுடன் உடன் போகும் உள்ளூர் பத்திரிகைகள் போராட்டத்தின் உண்மைச் செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்து வருகின்றன. இந்த ஒற்றுமையை குலைக்கவும், தொழிலாளர்களைப் பிரிக்கவும் காவல் துறை பல வகையிலும் முயன்று வருகிறது. ரூபன் மீது போடப்பட்ட வழக்குகள் அத்தனையும் பொய் வழக்குகள் என்கிறார்கள் தொழிற்சங்க நடுவத்தினர். அவர்மீது போடப்பட்ட குண்டர் தடைச் சட்டம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்த பிறகே ரூபனுக்கு விடுதலை கிடைத்துள்ளது.

ரூபன் மீது இருக்கும் சில வழக்குகளில் ஆம்பூர் கீழ் நீதிமன்றம் பிணை வழங்கினாலும், வேறு சில வழக்குகளில் அவர் கைது செய்யப்படவில்லை என்று கூறி காவல் துறை அவரை விடுவிக்கவில்லை. ஆனால், அவர் நீதிமன்றக் காவலில் தான் அப்போது இருந்தார். பிணை ஆணையும் கையில் வழங்கப்படவில்லை; அஞ்சலில் அனுப்பப்பட்டது. மூலைக்கு மூலை இப்படி அவர் இழுத்தடிக்கப்பட்டார். ரூபனை மீண்டும் வழக்கில் சிக்க வைக்க தற்போது நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் முதலாளிகள். ரூபன் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர் என்பதால், மற்ற தொழிற்சங்கத் தலைவர்கள் வேடிக்கைப் பார்க்கிறார்கள்.

குறைந்த பட்ச கூலி வேண்டும்

foot_worker.
என்.எம்.ஜக்கரியா மற்றும் பிற காலணி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர் நிலை மற்றும் போராட்டங்களைப் பற்றி அறிய ஓர் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. வழக்கறிஞர் பொ. வே. ஆனந்த கிருட்டிணன் தலைவராக இருந்த இக்குழுவில் வழக்கறிஞர்கள் மணிமொழி, மார்த்தாண்டம், வைத்தீஸ்வரன், அம்மு ஆகியோரும், அழகியபெரியவன் மற்றும் யாழன் ஆதி ஆகியோரும் உறுப்பினர்களாக இருந்தனர். இக்குழு, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களையும், காவல் துறை அதிகாரிகளையும், சிறையில் இருந்த தொழிலாளர்களையும், மாவட்ட ஆட்சித் தலைவரையும், தொழிற்சங்க நடுவத்தின் பொறுப்பாளர்களையும் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தது. இக்குழு கீழ்க்கண்ட பரிந்துரைகளை அளித்துள்ளது.

1.சட்டப்படியான குறைந்தபட்ச கூலியை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
2. தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பிற உரிமைகளை வழங்க வேண்டும்.
3. அரசு ஓர் ஆய்வுக் குழுவை அனுப்பி தொழிற்சாலைகளை ஆராய வேண்டும்.
4. மனித உரிமை ஆணையம், பெண்கள் ஆணையம் ஆகியவை தலையிட்டு தொழிலாளர்களின் நிலையை கண்டறிய வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com