Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
டிசம்பர் 2008


இந்தியா : ஒருமையும் பன்மையும்
ஞான.அலாய்சியஸ்

alosious இன்றைய இந்திய சமூகம் தனித்துவமானது என்றும், அதற்கே உரித்தான அதன் சிறப்பான அடையாளங்கள் - இந்த சமூகத்தின் வரலாறு, மரபு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் வெளிப்படுவன என்றும், அவை காலங்காலமாக நம் மோடு இருவை என்றும், அதனால் அவை கட்டிக்காக்கப்பட வேண்டியவை என்றும் பேசப்படுகிறது. இந்தக் கருத்து அன்றாட சொல்லாடலிலும், அறிவுசார்ந்த துறைகளிலும் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இம்மாதிரியான சொல்லாடல்களின் அடித்தளத்தில் - அதிகாரம் பற்றிய முரண்பாடுகளும் போராட்டங்களும் - மாபெரும் பனிமலைபோல் அமிழ்ந்து கிடப்பது, பலரின் சிந்தனைக்கு எட்டுவதில்லை. ஏனெனில் இந்திய சமூகத்தின் தனித்துவ அடையாளக் குவியல்களின் நடுவில் ஒளிந்திருப்பது, சாதி என்னும் பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வைக் கற்பிக்கும் சமூக உறவு முறையே ஆகும்.

இந்த உண்மையை ஆதிக்கமும் அதன் கருத்தியலும், பல்வேறு வகையில் முரண்பட்ட வகைகளில் கூட பயன்படுத்துவதை உணரலாம். சில சந்தர்ப்பங்களில் இந்திய சமூகத்தின் தனித்துவத்தை பெரும் கண்டுபிடிப்பாகவும், காலங்காலமாக அழியாது வருவது என்று பெருமையாகத் தூக்கிப் பிடிப்பதும், வேறு சில சந்தர்ப்பங்களில் சாதிமுறை என்பது இல்லாத ஒன்று; காலனிய ஆதிக்கத்தில் முன்னுக்கு வைக்கப்பட்ட மாயை என்றும், சாதிமுறை அழிந்து வருகிறது; ஏன் ஏறக்குறைய அழிந்தே விட்டது என்றும் முன்னுக்குப்பின் முரணாகப் பேசி நிலைமையை சமாளிக்க முயல்வதும் ஆதிக்கத்தின் தனித்திறனே. ஆனால், இவற்றைக் கடந்து கருத்தியல் பார்வையில் இச்சொல்லாடல்களைக் கூர்ந்து நோக்கினால், இதில் பல்வேறு சிக்கல்கள் மூடிமறைக்கப்பட்டிருப்பதை உணர முடியும்.

இந்தியா ஒரு சாதிய சமூகம் என்ற சொற்றொடரில் மூன்று சிறப்பான, நமக்குத் தேவையான கூறுகளைத் தனிமைப்படுத்திப் பார்க்கலாம் : 1. இந்தியா என்பது ஒரு சமுதாயம் என்ற சொல்லாடல் பிரச்சனை 2. அச்சமூகம் ஒரு சாதிய சமூகமாக உருவாகிய வரலாற்றுப் பிரச்சனை 3. இந்தியாவின் ஒருமுகத்தன்மைக்கும் அதன் சாதிய நிலைக்குமிடையிலான சமூக - அரசியல் சிக்கல்.

இந்திய ஒருமுகத்தன்மை என்னும் சொல்லாடலைக் கேள்விக்குட்படுத்தும் போது எழும் அய்யங்கள் பல : இந்தியா என்பது எப்பொழுதுமே ஒரே சமுதாயமாக இருந்ததா? இந்தியா என்பது எப்பொழுதாவது ஒரு சமூகமாக இருந்ததா? இந்தியா என்பது எப்பொழுது ஒரு சமுதாயமாக மாறியது? இந்தியா என்பது இப்பொழுதாவது ஒரு சமுதாயமாக இயங்குகிறதா? இந்தியா என்பதைப் பற்றி ஒரு சமூகமாகப் பேச இயலுமா? அல்லது அவ்வாறு நாம் எண்ணும் போதும், பேசும் போதும் நாம் என்ன செய்கிறோம்? அவ்வெண்ணத்தின், பேச்சுக்களின் சமூக - அரசியல் விளைவுகள்தான் என்ன? அப்படிப்பட்ட ஒருமையான இந்தியா வரலாற்றுக் கட்டத்தில் உருவாக்கியிருந்தால் அத்துடன் கூடவே உருவாகிய சம - சமூக உருவாக்கங்கள் எவை?

ஆதிக்கச் சொல்லாடலுக்குள் இந்தியா என்னும் ஒருமுகத்தன்மை பெரும்பாலும் கேள்விக்கு அப்பாற்பட்டது. சொல்லாடலின் அடித்தளத்தில் காணப்படும் கருத்து, இந்தியா என்ற ஒருமை நிலைப்பாடு, காலத்தால் கணிக்கக் கூடிய ஒன்றல்ல. அது "சனாதனமானது'. அது உறங்கிக் கொண்டிருந்தது. இப்பொழுது விழித்துக் கொண்டது. இந்தத்தளத்தில் இந்திய ஒருமையைப் பற்றிய கேள்விகளை எழுப்புவதே குற்றமாகக் கருதப்படுகிறது.

இதனை உரக்கப் பேசுவோர், அரசியல் வலதுசாரிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். இதனை வெளிப்படையாகவோ வன்முறையாகவோ பேசாமல், ஆனால் அவ்வாறு பேசப்படுவதால் வரும் பயன்களை மவுனமாக அனுபவித்தும், அவ்வாறு பேசுவோருக்கு எதிர்ப்பு மிகுதிப்படாமலும் பார்த்துக் கொள்வோர் - இன்றுஅரசியல் நடுநிலையினர் என்றோ அல்லது இடது சாரிகள் என்றோ அழைக்கப்படுகின்றனர். இவர்களுடைய வெளிப்படையான, கருத்துநிலை என்னவென்றால், இந்திய ஒருமை என்பது காலனியாதிக்கத்தின் மீது ஏற்பட்ட வெறுப்பு - எதிர்ப்பு மூலம் உருவானது. இந்நிலையிலும் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட ஒரு தெளிவின்மையைக் காணலாம். இந்திய ஒருமை காலனியாதிக்கத்தின் காலகட்டத்தில் உருவாகிய ஒன்று என்றால், அது காலனியாதிக்கத்தின் மூலம் உருவாக்கப்பட்டதா? அல்லது காலனியாதிக்கத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பின் மூலம் உருவானதா? இரண்டிற்குமிடையே எப்படி வேறுபாடு காண்பது? இந்நிலையில் வலதுசாரிகளின் நிலைக்கும் பின்னவர்களின் நிலைக்கும் முரண்பாடு எங்கே? எவ்வளவு தூரம்? முன்னவர் பின்னவர் நிலைகளுக்கிடையே மிகுந்து வெளிப்படுவது, தொடர்ச்சியே அன்றி முரண்பாடு அல்ல.

ஆனால் இவற்றில் பொதுவாக ஆதிக்கத்துக்குள் வெளிப்படும் தெளிவான, உறுதியான உடன்பாடு என்னவென்றால், இந்திய ஒருமை எப்படி வந்ததாயிருந்தாலும், எத்தனை காலத்ததாயினும் அது ஆதிக்கத்திற்கு அனுசரணையான நிலை என்பதே. ஆகவே இதுபற்றித் துல்லியமாகவோ, துரிதமாகவோ ஆராய்வது தேவையற்றது.

இக்கருத்துக்கு மாறாக, இந்திய ஒருமையின் தேவையும், மதிப்பீடும் எவ்வாறாயிருப்பினும் அந்த ஒருமையின் உருவாக்கத்தை வரலாற்றுக்குட்படுத்துவது, அடித்தட்டு மக்களின் விடுதலைக்கான கண்ணோட்டத்தில் இன்றியமையாதது என்பதே நமது நிலை. தொடர்ந்து முன்னேறி வரும் வரலாறு மற்றும் சமூக அறிவியல் பண்பாடு பற்றிய ஆய்வுகளில் உருவாகி வரும் ஒத்தியைவு என்னவென்றால், இந்தியா என்பது ஒரு சமூக இயங்கியலாக முதன் முறையாகப் பேசப்பட்டது, பத்தொன்பதாம் நூற்றாண்டின் காலனியாதிக்கத்தின் காலகட்டத்திலும், அக்காலனியாதிக்கத்தின் பாதிப்புகளின் விளைவாகவுமே. அதற்கு முற்பட்ட சிற்சில பண்டைய ஏடுகளில் இந்தியா என்ற சொல்லும், அதன் மூலம் ஒரு சமூகம் சுட்டப்பட்டிருந்தாலும் அவை அனைத்தும் பூகோள ரீதியான ஒருமையே தவிர, சமூகவியல், சமூக இயங்கியல் கண்ணோட்டத்தில் கூறப்பட்டவை அல்ல. பிந்தைய இரண்டாயிரம் ஆண்டுகளை வரலாற்று - அரசியல் கண்ணோட்டத்தோடு கூர்ந்து நோக்கினால் ஓர் உண்மை புலப்படும். இந்தக்காலகட்டத்திற்குள் ஒருமைப்பட்ட அரசியலுக்குள் இந்தியா வந்த காலங்கள் இல்லை என்றே கூற வேண்டும்.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட அசோகன் காலத்தில் மட்டுமே "தமிழகம் தென் இந்தியா' தவிர்த்து இந்தியாவின் பெரும்பகுதி, ஓர் அரசியல் குடைக்குள் ஒருங்கிணைக்கப்பட்டது. அடுத்தடுத்து வந்த பேரரசுகள் அனைத்தும் பெரும்பாலும் வட இந்தியாவிலேயே செயல்பட்டன.

பேரரசுகள் நிலவிய மொத்தக் காலத்தையும் கணக்கிடுவோமானால், அதுவும் மிகக்குறுகிய காலமாக உணரப்படும். மாறாக பிந்தைய காலத்தின் பெரும்பகுதி சிதறிய, சிறிய - பெரிய, பல்வேறு மொழிவழிச் சமூகங்களாகவும் அவை சார்ந்த அரசியல் அமைப்புகளாகவுமே இருந்து வந்திருக்கின்றன என்பதும் தெரியவரும். இயற்கையாகவே நீண்ட காலமாக வரலாற்றில் உருவாகி வந்த இந்தியா பன்மையானதென்றும், இடையிடையே ஒருமைக்காக செய்யப்பட்ட முயற்சிகளைத் தக்க வைக்க முடியாமல் பேரரசுகள் உடைவதும் - உடைந்த பொழுதெல்லாம் சுற்றுப்புறச்சூழல்கள், பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் பிரதேசங்கள் அமைவதும், மாறி மாறி வந்த வரலாற்று நிகழ்ச்சிகள் என்பதும் விளங்கும்.

இந்திய வரலாறு ஒருமைக்கும் பன்மைக்கும் நடந்து வந்த போராட்டம் என்று கூட வர்ணிக்கலாம். ஆனால் அத்தகைய வர்ணிப்பும் இன்றைய நிலையிலிருந்து கூறுவதெனில், இங்குள்ள ஒருமைச் சக்திகளுக்குத் தேவைக்கதிகமான மதிப்பீடு வழங்குவது ஆகும். ஏனென்றால் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளாக நிலவிவரும் இந்தியா என்ற கட்டமைப்புக்குட்பட்ட சமூக, அரசியல் வாழ்க்கை, காலம் தவிர்த்த தோற்றத்தை பெருவாரியாக உண்டாக்கிவிட்டது. இன்றைய நிகழ்கால இந்தியாவே பின்னுக்கும் முன்னுக்கும் நீட்டிக்கப்பட்டு, என்றுமே இந்தியா, என்றென்றும், இந்தியா என்னும் கற்பனைக்கு அடித்தளமாகிவிட்டது.

முதன்முதலில் காலனியாதிக்கத்தின் காலகட்டத்திலும் அவ்வாதிக்கத்தின் பாதிப்புகளின் விளைவுகளாகவுமே இந்திய ஒருமை, சமூக - அரசியல் கட்டமைப்பாக உருப்பெற்றது என்று கூறும்போது, அதற்கான சமூக - பண்பாட்டு அடித்தளங்கள் காலனியாதிக்கத்திற்கு முன்பும் இல்லாமல் இல்லை. கடந்த காலங்களில் அவ்வகையான பண்பாட்டு அடித்தளங்கள், சமூக சக்திகளாகச் செயல்பட்டு அவற்றின் கண்ணோட்டத்திற்கேற்றவாறு ஒருங்கிணைப்பு முயற்சிகளில் ஈடுபடாமலில்லை. அத்தகைய ஈடுபாடுகளில் சிற்சில வெற்றிகளும் பெறாமல் இல்லை. எனினும் சமூக, பொருளாதார, பண்பாட்டு புதிய கட்டமைப்புக்கு அடிப்படையாக மாற்றப்பட்டது - காலனி ஆதிக்கக் காலத்திலும் தயவிலும்தான். இந்திய ஒருமையே இந்திய நவீனமாக உருவெடுத்த இந்தக் காலனிய காலகட்டம், நாம் எடுத்துக் கொண்ட பிரச்சனைக்கு இதுவே மிக முக்கியமாக அமைகிறது.

சாதிய சமூகத்தின் இரண்டாவது அம்சத்தை ஆராய்வதற்கு முன் இன்றைய இந்திய ஒருமையின் சமூக முகத்தை வெளிப்படுத்துவது அவசியமாகிறது. இந்தியத் துணைக்கண்டம் சுற்றுப்புறச்சூழல், வாழ்க்கை முறை, பேச்சுமுறை மற்றும் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு காலங்காலமாக, வளர்ந்து வரும், சிறியதும் பெரியதுமான பல்வேறு பக்குவ நிலைகளில் தென்படும் பிரதேசங்களின் தொகுப்பே. இப்பிரதேசங்களில் வாழும் பெருவாரியான, உழைக்கும் மக்களுக்கான சமூக, அரசியல் ஒருமை அப்பிரதேசங்களே.

எனவே, பூகோள ரீதியில் இந்தியா என்ற துணைக்கண்டத்திற்குள் பல்வேறு ஒருமைகளும் முழுமைகளும் காணப்படுகின்றன. ஆனால் இப்பன்மையான ஒருமைக்குள்ளும் இன்று தென்படுவது, பிரதேசம் தவிர்த்த பிரதேசம் தாண்டிய மிகச்சிறிய ஆனால் மிகச் சக்திவாய்ந்த சமூகக் கூறுகள் இத்துணைக்கண்டத்தில் பரவிக்கிடப்பதே. இச்சமூகக் கூறுகளுக்கு எந்தவொரு பிரதேசமும் முழுமையுமல்ல; ஒருமையுமல்ல. இதன் கண்ணோட்டத்தில் முழுமையும், ஒருமையும் எல்லா பிரதேசங்களையும் உள்ளடக்கிய ஒன்று. இந்தச் சமூகக் கூறுகள் மேல்மட்டத்தில் அதாவது உழைப்பிலோ உழைப்பின் மூலம் பிரதேச உருவாக்கத்திலோ பங்கு பெறாமல் பிரதேசங்களை அடக்கி ஆள்வதையே குறிக்கோளாகக் கொண்டிருப்பதால் - அவை அனைத்தையும் தன்னுள், தனக்காக, தன் உருவாக்கத்தில் முழுமையாக முன்வைக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் துணைக்கண்டம் முழுவதும் மேல்மட்டத்தில் விரவி காணப்படும் இத்தகைய சிறுபான்மை சமூக சக்திகள், ஒரு காலத்தில் துணைக்கண்டத்திற்கு வெளியிலிருந்து வந்தவை. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளாக பல பாகங்களுக்கும் பரவியவை. இன்னும் பரவிக் கொண்டிருப்பவையே. பிரதேச ஒருமைகளின் நீண்ட காலகட்ட உருவாக்கங்களில் பங்கு பெறாத காரணத்தால் இவை தேடும் ஒருமையும் முழுமையும், வரலாற்றுப் பிரதேசங்களுக்கு அப்பாற்பட்டது. இந்த ஒருமைக் கனவு, உழைப்பிலோ, உருவாக்கத்திலோ வேரூன்றியிராமல் - ஆள்வதிலும் ஆதிக்கத்திலுமே குறியாயுள்ளது.
இதன் இன்றைய சமூக முகமே - சமஸ்கிருதப் பார்ப்பனியம். இது, சிறுபான்மையாயினும் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பல இடங்களில் தென்படுகிறது; ஏறக்குறைய எல்லா இடங்களிலும் மேல்மட்டத்தில் காணப்படுகிறது. சமயம், குறியீடு, பழங்கதைகள் மூலம் மக்களையும் மனங்களையும் கோர்வைப்படுத்த முயலுகிறது. நமது கவனமெல்லாம் இந்தியாவின் இன்றைய ஒருமையைக் கேள்விக்குட்படுத்துவது மட்டுமே. இன்றைய மாதிரியில்லாமல் வேறு மாதிரியான இந்திய ஒருமை முடியுமா, முடியாதா? முடியுமானால் அது எந்த மாதிரி என்பது பின்னர்
விவாதிக்கப்படும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com