Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
K.R. Narayanan
டிசம்பர் 2005

மீள்கோணம்
அழகிய பெரியவன்

ஒரு நாள் என் கணக்கிலிருந்து பணம் எடுக்க எங்களூரில் இருக்கும் இந்தியன் வங்கிக்குப் போயிருந்தேன். வங்கி ஊழியர் என்னிடம் குறைந்தபட்சம் உங்கள் கணக்கில் 350 ரூபாயாவது இருக்க வேண்டும் என்றார். நான் சரி என்று தலையாட்டினேன். ஆனால், வங்கி ஊழியர் என்னிடம் மேற்கொண்டும் சில குறைகளைப் பட்டியலிடத் தொடங்கினார்.

Black Lady “ஏ.டி.எம். தொடங்கணும்னு சொல்றீங்க. கம்ப்யூட்டரைஸ்டு செய்யணும்னு கேக்கறீங்க... அதுக்கெல்லாம் நாங்க என்ன செய்யறது? அக்கவுண்ட்ல குறிப்பிட்ட அளவு பேலன்ஸ் வைக்க மாட்டேங்கிறீங்க. மத்த பேங்குகளைப் போய் பாருங்க... குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயாவது பேலன்ஸ் வைக்கணும் கணக்குல...'' அவர் என்னிடம் சொல்லிய இந்தக் குறைபாடுகளை, என் அருகில் இருந்த ஒரு தொழில் அதிபரிடம் சொல்லி, தன் கருத்துக்கு ஆதரவு திரட்டினார். எனக்கு எரிச்சலாய்ப் போனது.

“கொறஞ்சபட்சம் ஆயிரம் ரூபா பேலன்ஸ் வேணும்னா, ஏழை பாழைங்களால எப்படிங்க வங்கிக்கு வரமுடியும்? நீங்க இப்ப நியாயம் கேட்கிற இவரைப் போன்ற தொழில் அதிபர்களுக்குதான் ஓடி... ஓடி... லோன் தர்றீங்க. இவங்கதான் வங்கிக்கு திருப்பியே கட்டறதில்ல! நீங்க விரட்டியடிக்கிற ஏழைங்கதான் பயந்து கொண்டு கட்டறாங்க.'' நான் இருவரிடமும் குரலை உயர்த்திப் பேசினேன். இருவர் முகங்களும் இருண்டு போய்விட்டன. பதில் பேசவில்லை.

ஏழைகளுக்குச் சார்பாக எந்த வங்கியும் நடந்து கொள்வதில்லை. நாங்கள் இருக்க பயம் ஏன் என்று நெஞ்சில் கைவைத்துச் சொல்கிற மாதிரி, விளம்பரங்களை மட்டும் போட்டுக் கொள்கின்றன. அண்மையில், எங்கள் மாவட்டத்திற்கு நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் வந்திருந்தபோது வங்கிகளின் மீது புகார் சொல்லியும், தங்களுக்குக் கடன் உதவி வழங்கும்படி ஆணையிடக் கோரியும் ஆயிரக்கணக்கான புகார் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து குவிந்தன. அவர் பொது நிகழ்ச்சிகளில் பேசுகையில், வங்கிக் கணக்கில் குறைந்தபட்சம் 50 ரூபாய் இருந்தால் போதும். கல்விக் கடனுதவிக்கும், ஏழைகளுக்குக் கடன் தருவதற்கும் வங்கிகள் மறுக்கக் கூடாது என்று பேசினார். ஆனால், உண்மை நிலவரமோ வேறாகத்தான் இருக்கிறது.

"தாட்கோ' கடனுதவியையும், கல்விக்கடன் உதவியையும் இன்றளவும் பல வங்கிகள் தர மறுக்கின்றன. பல மேலாளர்கள் சாதிய நோக்கோடு நடந்து கொள்கின்றனர். உதவி கேட்டு வரும் வறியவர்களை விரட்டியடிக்கின்றனர். பணமுள்ளவனிடமே பணம் போய்ச் சேரும்படி இவ்வங்கிகள் மிகக் கவனமாய் பார்த்துக் கொள்கின்றன. மானியம் தேவையில்லை. தொழில் தொடங்க கடன் உதவியை தாராளமாக அளிக்கலாம் என்று பேசும் இவற்றின் "திட்டக் கர்த்தா'க்கள், இதுவரை வங்கிகளில் கடன் உதவி பெற்று, திரும்பச் செலுத்தாத பெரும் பண தலைகளின் பெயர்ப் பட்டியலை வெளியிடத் தயாராக இல்லை. 2004 கணக்கின்படி, இந்திய வங்கிகளின் வராக் கடன் ரூ. 96,084 கோடி. தமிழகம் இதில் மூன்றாவது இடம் (10,755 கோடி). அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, கடன் செலுத்தாத தொழில் அதிபர்களின் பட்டியலைப் புத்தகமாக வெளியிட்டுள்ளது. 164, லிங்குச் செட்டித் தெரு சென்னை முகவரியில் இந்த நூல் கிடைக்கும். இப்பட்டியலில் இருந்து சில எடுத்துக்காட்டுகள் :

பின்னி நிறுவனத்தில் வராக்கடன் தொகை : 117.84 கோடி
பாலாஜி ஹோட்டல்ஸ் : 187.29 கோடி
பி.பி.எல். லிட் : 96.71 கோடி

இப்படிப் போகும் இந்தப் பட்டியலில், ஏழைகள் யாரும் நிச்சயம் இல்லை. ஆனால், ஏழைகளிடம் மட்டும் வங்கிகள் வீம்பு பேசுகின்றன. கல்விக் கடன் பெற்று படித்து, தொழிற்கடன் பெற்று பிழைக்கும் தலித்துகளும், ஏழைகளும் முன்னேறி விடாதபடி பார்த்துக் கொள்ளும் இந்த வங்கிகளை முற்றுகையிட்டு ஏன் நமது அமைப்புகள், எந்த ஆர்ப்பாட்டம் செய்ய முன்வருவதில்லை என்பதுதான் விளங்கவில்லை!

------------------------------

Vizhippunarvu Magazine படிக்கின்ற காலம் என்பதைப் பெரும்பாலான நமது மாணவர்கள், பாடப் புத்தகங்களை மட்டும் படித்துத் தேறுகிற காலம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சமூகத்தைப் படிக்கிற, பிற குறைகளைப் படிக்கிற, உலகைப் படிக்கிற காலம் அதுதான். இதுபோன்ற பிற துறைகளில் கவனம் செலுத்துகின்ற மாணவர்கள் மிகக் குறைவு. ஆய்வு நோக்கம், புத்தக வாசிப்பும், இதழ்களைக் கொண்டு வருகிற முனைப்பும் அப்படியான சில மாணவர்களிடம் இருக்கின்றன.

மாணவர்களால் பல்வேறு இதழ்கள், பல காலகட்டங்களில் நடத்தப்பட்டே வந்திருக்கின்றன. "புதிய தடம்', "ஏர்', "வனம்' என்ற பட்டியலில் இப்போது மேலும் ஓர் இதழ் சேர்ந்திருக்கிறது. அது, அரசு சட்டக் கல்லூரி மாணவர்களால் நடத்தப்படும் "விழிப்புணர்வு' என்கிற இதழ். மதுரையிலிருந்து வெளிவரும் இவ்விதழ் நல்ல வடிவமைப்போடும், ஆழமான கட்டுரைகளோடும் வெளிவருகிறது. ஆய்வு நோக்கில் சில மாணவர்களால் கொண்டு வரப்படப் போவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் "வெண் மணி' இதழும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது.

"விழிப்புணர்வு'; 62, மாடக்குளம் தன்மைச் சாலை, பழங்காநத்தம், மதுரை 3; விலை : ரூ. 10

------------------------------

"கவர்ன்மெண்ட் பிராமணன்', "ஊரும் சேயும்', "உபாரா', "உச்சாலியா' போன்ற தலித் சுயசதைகளை மொழிபெயர்ப்பின் வழியே படித்த போதெல்லாம் தமிழில் இப்படியான சுயசரிதை நூல்கள் இல்லேயே என்று ஒரு ஆதங்கம் மனதில் கவியும். அந்த நெடுநாளைய ஆதங்கத்தைத் தீர்த்து வைத்திருக்கிறது. கே.ஏ. குணசேகரனின் சுயசரிதையான "வடு'. மிக எளிமையான அணுக்கத்துடன் இருக்கும் மொழி. நேரடியான சொல்றை. மனதை உலுக்கும் பதிவுகள் எதுவும் இல்லையென்றாலும், தேர்ந்தெடுத்த சம்பவங்களின் நேர்மையானப் பதிவு. இப்படியான கூறுகளெல்லாம் இச்சதையை மனதில் வலுவாக நிறுத்துகின்றன.

K.A. Gunasekaran சிறந்த நாடகக் கலைஞராகவும், இசைக் கலைஞராகவும் இன்று அறியப்படும் கே.ஏ. குணசேகரன் அவர்களின் ஆளுமை உருவாக்கத்தினை இச்சதையின் வழியே அறிய முடிகிறது. அவரின் குடும்பத்தில் தாத்தாவும், அவரின் உறவினர்கள் சிலரும் பாடகர்களாகவும், கூத்துக் கலைஞர்களாகவும் இருந்துள்ளனர். தன் தாத்தாவைப் பற்றி ஓடத்தில் இப்படி எழுதுகிறார் : “கூத்து நாடகம்னு ஆடும்போது இவருக்குப் பொம்பள வேசந்தான் கெடைக்குமாம். எந்த வேசத்துக்கும் குரல், உடல் எனப் பொருத்தமானவராக இருந்தாலும் பொம்பள வேசத்தைத்தான் உயர் சாதிக்காரங்க தாத்தாவுக்கு ஒதுக்கிக் கொடுத்திருக்காங்கன்னு மச்சான் எங்கிட்ட வருத்தப்பட்டுச் சொல்லியிருக்காரு. பறைச் சாதியில பொறந்திருந்தாலும் படிச்ச தெறமசாலிங்கறதால, உயர் சாதிக்காரங்களால அவரை ஒதுக்க முடியலை'' (பக்கம் : 77).

இந்த மரபோடு கிறித்துவச் சூழலும் அவருக்கு அமைந்திருக்கிறது. இன்று தலித் சமூகத்திலிருந்து பெரும் இசைக்கலைஞர்களாக உருவெடுத்திருக்கிற பலபேருடைய பின்னணியிலும் ஏதோ ஒரு வகையில் கிறித்துவச் சூழல் இழைந்திருக்கிறது. இது ஒரு கவனத்துக்குரிய அம்சம். இசை, பாட்டு என்கிற மரபான பாரம்பரியத்தைத் தனது வழிபாட்டுக்குரிய வடிவமாகக் கொண்டிருக்கும் சாதி இந்து பின்னணியைப் போன்றதொரு மாற்றுச் சூழலை தலித்துகளுக்கு கிறித்துவம் வழங்கியிருக்கிறது. இந்த அம்சங்களுடனான கிறித்துவச் சூழலும், குணசேகரனுக்கு அமைந்திருக்கிறது. இளையான்குடி ரசூலா சத்திர குடியிருப்பின் வில்சன், ஆர்மோனியச் சுதியோடு பாடக் கற்றுக் கொடுத்திருக்கிறார் அவருக்கு.

இந்தச் சுயசரிதை, இசுலாமோடு கிறித்துவத்தையும், இந்து சமயத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவும் உதவுகிறது. குணசேகரனின் இளமைக் கால வளர்ச்சியில் முஸ்லிம் நண்பர்களும், கிறித்துவ நண்பர்களும் கூடுதலாக இருப்பதைக் கணிக்க முடிகிறது. முஸ்லிம் நண்பர்களின் வீடுகளில் நடு வீடுவரை அவரால் செல்ல முடிந்திருக்கிறது. ஒரே தட்டில் அந்த நண்பர்களோடு அவர் தம் வீடுகளிலும் சாப்பிட்டிருக்கிறார். ஆனால், இது சாதி இந்துக்களிடம் முடிவதில்லை. சாதியம் அங்கே மனிதர்களை அண்டவிடாதபடியான நாயாக பற்களைக் காட்டியபடி கிடக்கிறது. பொதுவான இந்த ஒப்பீட்டுச் சித்திரத்துக்குள் ஒரே ஒரு சம்பவம் துருத்தியபடி தெரிகிறது. இளையான்குடியிலிருந்து தோவூரு போகும் வழியில் இருக்கிற கருஞ்சுத்தி இசுலாமியர் குடியிருப்புகளில், தண்ணீர் கேட்டால் சாதியைக் கேட்டுவிட்டு கையில் ஊற்றுவார்கள் என்கிறார்.

இது முரண்பட்டதாகவும், அதிர்ச்சி தரக்கூடியதாகவும் தோன்றலாம். ஆனால், தமிழகத்தில் பல இடங்களில் இசுலாமியர்களும் தலித்துகளிடம் இப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள். எங்களூரில் இத்தகு சம்பவங்கள் மிக இயல்பாக நடந்துள்ளன. இசுலாமியர் நடத்திய தேநீர்க் கடைகளில் தனிக் குவளைகள் வைக்கப்பட்டு இருந்தன. அன்றைய தலித் தலைவர்கள் எங்கள் ஊரில் சாதி ஒழிப்புக்கு, இசுலாமியர்கள் மற்றும் இந்துக்கள் ஆகிய இருவரோடும் போராடி இருக்கின்றனர்.

எல்லா தலித் சுயசரிதைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் வறுமையும் சாதிக் கொடுமைகளும் இச்சதையிலும் பரவியிருக்கின்றன. காலை சாப்பாடு ஊறவைத்த புளியங் கொட்டைகள்; பகலுக்கு ஒன்றும் கிடையாது. இரவுக்கு மட்டும் ஏதாவது இருக்கும். மழைக்காலங்களுக்குப் பின் நத்தையும், ஊமச்சியும்தான் உணவு. இவைகளை விவரிக்கும்போது, குணசேகரன் அவர்களின் மொழி, உணர்வுகளற்று நேரடியாக இருக்கிறது. படிக்கிறவர்களுக்குதான் அது பாதிப்பை உண்டாக்குகிறது. வேறு வகையில் சொன்னால், அழுது அழுது மறுத்திருக்கும் உணர்வின் மொழிதான் அது. அம்மா கட்டித் தந்த புளிச்சோற்றையே நான்கு நாட்களுக்கு வைத்துக் கொண்டு, சாப்பிட்டுவிட்டு பரிட்சை எழுதியதைச் சொல்கையிலும், பூஞ்சானம் பிடித்த அந்தச் சோற்றைத் தின்றதால் ரத்தபேதி உண்டானதையும் விவரிக்கையிலும்கூட, மொழி சலனமற்றுதான் இருக்கிறது. ஆனால், வாசிப்பவருக்கு பெரும் சலனத்தை உண்டாக்கிவிடும் பகுதிகள் இவை.

மொழிபெயர்ப்பின் வழியே நமக்குக் கிடைக்கும் தலித் சுயசரிதைகளிலும்கூட, வறுமையும், உணவைத் தேடி ஓடும் அம்மக்களின் பயணம் தனித்து நிற்கின்றன. ஊரில் நடக்கிற ஆதிக்க சாதி திருமணங்களின்போது கடைசி பந்தியில் இடம் பிடித்து சாப்பிட்டு வருவதையும், சோற்றை மறைத்து வெளியே கொண்டு வருவதையும் "கவர்ன்மெண்ட் பிராமண' னில் அரவிந்த மாளகத்தி விவரிக்கும்போது, ஒரு சாகசம்போல் தெரிகிறது. பசியாற்றிக் கொள்வது என்பது அம்மக்களைப் பொறுத்தவரை ஒரு சாகசம்தான். அதற்கு என்னவெல்லாமோ வேலைகளை செய்கிறார்கள் அவர்கள். முள்விறகு வெட்டி, செங்கல் அறுத்து, வீட்டு வேலைகளுக்குப் போய், காடு கழனிகளில் உழன்று பசியைத் தணித்துக் கொள்கின்றனர்.

இந்நூலில் கே.ஏ. குணசேகரன் அவர்களின் வாழ்க்கைப் போராட்டம், அலைவும், அவர் அனுபவித்த சாதிக் கொடுமைகளும் தன்மையானவைகளாகத் தெரிகின்றன. அவர் போகிற இடத்திலெல்லாம் சாதி அவரைத் துரத்தி வருகிறது. கீரனூல் அவர் அம்மாயி உடன் இருக்கையில், கடைக்கு நெல் எடுத்துப் போய் கொடுத்துவிட்டு (பண்டமாற்று) எண்ணெய் வாங்கி வருகிறார். வரப்பு மீது நடந்து வருகையில் எதிரே ஒரு ஆள் வருகிறார். அந்த ஆளுக்கு வழிவிடும் வகையில் வரப்பில் ஒரு காலும், வயலில் ஒரு காலுமாக நிற்கையில், பளார் என்று கன்னத்தில் ஓர் அறை விழுகிறது. சிறுவயதிலேயே சாதிய கட்டுப்பாடுகளை மீறக்கூடாதென்பதற்கான தீச்சூடாகவே அவரில் அது பதிய வைக்கப்படுகிறது. "பறப்பயலுக்குக் கொழுப்பப் பாரு' என்று சொல்லிக் கொண்டே விழுந்த அடிக்கு அழுகை பீறிட்டுக் கிளம்புகிறது. அம்மாச்சி அவரை சமாதானப்படுத்துகிறார்கள். "எப்பா, நாம பறைய வூடு, அவுக மறவூடு, அய்யாமாருக இல்லாட்டி நாச்சியாருக வந்தா நாமதான் எட்டு அடி தள்ளி நிக்கணும். அவுக போறதுக்கு நாமதான் மொதல்ல பாதை விடணும். அதுக்குதான் அந்த அய்யா அடிச்சிருக்காரு.''

Vadu கல்வியாலும், இஸ்லாம் மற்றும் கிறித்துவம் போன்ற மதங்களின் சமத்துவக் கருத்துகளாலும், இயல்பிலேயே ஒரு தலித்துக்கு இருக்கும் சாதியத்துக்கெதிரான கோபத்தாலும் குணசேகரனிடமிருந்து எழுகின்ற எதிர்ப்புகள், ஒவ்வோர் முறையும் அடக்கப்படுகின்றன. அவன் அம்மாச்சியோ, தாத்தாவோ அவர் சார்பிலே சாதிக்காரர்களிடம் மன்னிப்புக் கோருகிறார்கள். கல்லூரிக் காலங்களில் தன் திறமையினாலும், கல்வியாலும் சாதியத்தை எதிர்கொள்கிறார். ராமநாதபுரம் சேதுபதி கல்லூயில் முதல் தலித் மாணவராக நாட்டு நலப் பணிதிட்டத்துக்கும், கல்லூரி கவின்கலை மன்றத்துக்கும் செயலாளராகிறார். இப்படியாக, தன்னளவிலான சாதிய மேற்கொள்ளல்கள் அவரின் அப்பாவினாலும், தாத்தாவினாலும், மச்சான் முனியாண்டியாலும் நிகழ்த்தப்படுகின்றன. இவைகளெல்லாம் கல்வியாலும், திறமைகளினாலும் சாத்தியமாகின்றன. திறமையால் தலித்துகள் வெளியே தெரிய வருகையில், ஊர்க்காரர்கள் பெருமையில் பங்கு கேட்க வருகிறார்கள்.

குணசேகரன் அவர்களின் மைத்துனர் முனியாண்டி மருத்துவராகி மதுரை மருத்துவமனையில் இருக்கும்போது, ஊர்க்காரர்கள் நிறைய பேர் சிகிச்சைக்கென்று வருகிறார்கள். அவர்கள் (சாதி இந்துக்கள்) முனியாண்டியை மருத்துவமனையில் "சார்' என்றும், மதுரையில் "என்னப்பா' என்றும், ஊரில் "என்னடா' என்றும் விளிக்கின்றனர். இதைப் பதிவு செய்யும்போது, நகரில் சாதியம் லேசாய் நீர்த்திருப்பதை சொல்கிறார் குணசேகரன்.

ஒப்பீட்டளவிலே தமிழில் பிற மொழிகளைக் காட்டிலும் வெளிப்படையான, ஆத்திரத்துடனான தலித் சுய சரிதைகள் வரவில்லை. தொடக்கத்திலே விடிவெள்ளி அவர்களின் ‘கலக்கல்' என்று ஒரு சுயசரிதை வெளிவந்தது. அது, ரோமன் கத்தோலிக்க கன்னி மடத்திலே இருந்த ஒருவன் அனுபவங்களை உள்ளடக்கியது ஆகும். பிற பிரதிகளோடு அதை ஒப்பிட்டால், சில வாழ்க்கைக் குறிப்புகளைச் சொல்லுதல் என்பதோடு அது நிற்கிறது. தலித்துகளின் அசலான வாழ்க்கையைச் சொல்கிற எந்தப் பதிவுகளும் அதில் இல்லை. பாமாவுடையதும், ராஜ்கவுதமனுடையதும் தற்புனைவுகளாக ‘நாவல்'களின் வரிசையிலே வைக்கப்படுகின்றன. தலித் ஓர்மையுன் கூடிய சுயசரிதையாக ‘வடு' மட்டுமே தமிழில் இன்று முன் நிற்கிறது.

இந்தியத் தேசியம், தமிழ்த் தேசியம், திராவிடம் போன்ற பல்வேறு இயக்கங்களின் தாக்கங்கள், வேறெந்த இந்தியச் சமூகத்தைக் காட்டிலும் தமிழ்ச் சமூகத்தை மொண்ணை தட்டி வைத்திருக்கிறது. ஒரு போலி கவசமாக தலித் உணர்வுகளின் மீது பதிந்திருக்கும் இவை தரும் போலிப் பாதுகாப்பு உணர்வுகளால் சுருண்டிருக்கிறது தலித் வெளிப்பாடு. வெற்றுப் பெருமிதங்களும், தயக்கங்களும் பிடித்தாட்டுவதால், தலித் சுயசரிதைகள் இங்கு பெருகவில்லை. இந்தத் தேக்கத்தை உடைத்திருக்கிறது "வடு'.

தலித் சுயசரிதைகளின் பணி, புரையோடி மினுங்கும் பொதுச் சமூகத்தைக் கீறிவிடுவதுதான். அந்தக் காயத்திலிருந்து வழிவது நிச்சயம் உவப்பானதாய் இருக்காது. ‘வடு' தன் பங்குக்கு ஓர் அழுத்தமான கீறலை ஏற்படுத்திப் போகும்.

நூல் : ‘வடு'; ஆசிரியர் : கே.ஏ. குணசேகரன்; வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்; 669, கே.பி. சாலை, நாகர்கோவில் - 629 001; பக்கங்கள் : 128; விலை : ரூ. 65


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com