Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
ஆகஸ்ட் 2008

ராஜபரம்பரை என்று சொல்லிக் கொள்வதற்கு வெட்கப்பட வேண்டும்: ஆ.சிவசுப்பிரமணியன்
நேர்காணல்: கீற்று நந்தன்

சென்ற இதழில் வெளிவந்த ஆ.சிவசுப்பிரமணியம் அவர்களின் நேர்காணல், இந்த இதழிலும் தொடர்கிறது...

A.Sivasubramanian மாமன்னன் என்று சொல்லப்படும் ராஜராஜன் காலத்தில்தான் நிறைய பேர் பஞ்சம் பட்டினியோடு வாழ்ந்தார்கள் என்று ஒரு கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். அதற்கான தரவுகளை எங்கிருந்து பெற்றீர்கள்?

கல்வெட்டுகளிலிருந்துதான். மக்கள் பஞ்சம் பட்டினியில் நலிந்து போனதால் தங்களைத் தாங்களே கோயில்களுக்கு விற்றுக்கொண்டார்கள். ராஜராஜன் காலத்தில் மட்டுமல்ல, சோழ மன்னர்கள் காலங்களிலும் இதுபோல் நடந்து இருக்கின்றன. ஒரு சமூகம் எதில் முதலீடு செய்கிறதோ, அதை வைத்துதான் அதற்கு வருவாய் கிடைக்கும். இதற்கு வட இந்தியாவைச் சேர்ந்த அப்தர் அலி என்பவரின் ஆய்வுக் கட்டுரை நமக்கு துணை செய்கிறது. ‘முகலாய ஆட்சியில் நிலப்பிரபுக்கள்' என்ற அவருடைய கட்டுரையில் ‘மான்செப்தார்கள்' பற்றி கூறுகிறார். மான்செப்தார்கள் இங்கிருக்கிற ஜமீன்தார்கள் மாதிரி. அவர்களுக்கு நான்கைந்து அல்லது பத்து கிராமங்கள் வரை கொடுக்கப்படும். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பரப்பளவுக்கு ஏற்ப அவர்கள் பேரரசுக்கு தொகைகளை செலுத்த வேண்டும். இதற்காக மான்செப்தார்கள் வரி வசூல் செய்ய வேண்டும்.

ஒரு மான்செப்தார் ஏழு லட்சம் பொன் பேரரசுக்கு கட்ட வேண்டும் என்றால், பத்து லட்சம் அல்லது பன்னிரெண்டு லட்சம் வரை மக்களிடம் வசூல் செய்வார். மன்னருக்குத் தரவேண்டிய ஏழு லட்சத்தைக் கொடுத்துவிட்டு, மீதியை அவர் எடுத்துக்கொள்வார். இதனால் சாதாரண மக்கள் தான் துன்பம் அடைந்தனர். மான்செப்தார்கள் என்ன செய்தார்கள் என்று பார்க்க வேண்டும். அவர்கள் ஒரு நாளைக்கு பல கிலோ இறைச்சியை உண்ணக்கூடிய ராஜாளி கழுகுகளை வளர்த்து இருக்கின்றனர். அவற்றைப் பயிற்றுவித்து வேட்டைக்கு அனுப்பி வைத்தனர். அவை பறந்து சென்று பறவைகளை வேட்டையாடி வரும். இதற்காக ஒரு நாளைக்கு இறைச்சி அதிக அளவில் வாங்கவேண்டிய நிலை. அதுமட்டுமல்ல, சிறுத்தை, புலி போன்ற விலங்குகளை அவர்கள் கூண்டுகளில் அடைத்து வைத்து வளர்த்திருக்கின்றனர். உலவுவதற்கு அவைகளுக்குத் தேவையான இடங்களையும் வைத்திருந்தனர். இவற்றையெல்லாம் பராமரிக்க அதிக செலவு ஆகியிருக்கிறது. அது மட்டுமல்ல, நீரூற்றுடன் கூடிய பூங்காக்கள், செயற்கை நீரூற்றுகள் ஆகியவற்றையும் அமைத்திருக்கின்றனர். இந்த முதலீடு எல்லாம் அரசுக்கு எந்த வருவாயையும் ஈட்டித்தரவில்லை.

மிகவும் மோசமானது என்று சொல்லக்கூடிய ‘பிரமதேயங்கள்' கூட பரவாயில்லை; ஒரு குறிப்பிட்ட அளவுள்ள நிலத்தைப் பயன்படுத்தி பார்ப்பனர்களுக்குத் தந்துவிட்டு அதற்கு வரி செலுத்த வேண்டும். அதில்கூட அரசுக்கு வருவாய் இருந்தது. ‘காடு ஒன்றை நாடாக்கி' என்று சொல்வார்கள். விளைநிலங்கள் அதிகமானால் மன்னனுக்கு வரி அதிகமாக கிடைக்கும். அதனால்தான் நீர்ப்பாசன வசதிகளையெல்லாம் செய்து தந்தனர். ஆனால் மான்செப்தார்கள் செய்த செயல்களால், அரசுக்கு எந்த வருவாயும் திரும்பி வரவில்லை. அதுதான் மொகலாய ஆட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது.

சோழர்களுக்கும் அதுதான் பிரச்சனை. அவர்கள் மாபெரும் கோயில்களை கட்டினர். கிராமங்களைவிட பெரிய கோயில்கள் கட்டப்பட்டன. கோயில்களில் விளக்கெரிக்க, பூசைகள் நடத்த பெரும் செலவானது. கோயில்கள் பெரிய நிறுவனமாகி வேலைவாய்ப்புகள் உள்ள இடமாக மாறிவிட்டன. நட்டுவனார்கள், நடனமாடக்கூடிய பெண்கள், நெல்குத்தும் பெண்கள், பூசாரிகள் என்று கோயில்களை நிர்வகிக்க பெரும் செலவானது. இதற்கு கோயில் நிலங்களிலிருந்து தான் வருவாய் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனால் அரசாங்கத்துக்கு எந்தப் பயனும் இல்லை. வருவாய் இல்லாத முதலாகத்தான் அவை இருந்தன. கோயில்களில் கல்வி கற்றுத் தருகிறார்கள் என்றால், அது மேல்நிலை சமூகங்களுக்கு மட்டும்தான் கிடைத்தது. தலித்துகளுக்கு கோயில்களில் உரிமை கிடையாது. கோயில் பொருளாதாரம் என்பது, சமூகத்திற்குப் பயன்படாமல் போய்விட்டது.

ஒருவரிடம் கேட்டேன், பொறியியல் படிப்பு படித்துவிட்டு எம்.பி.ஏ. படிக்கிறாங்களே இந்த இரண்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று. அவர் சொன்னார், ‘தொடக்கக்காலத்தில் நல்ல நோக்கத்தோடுதான் அது உருவாக்கப்பட்டது.ஒரு பொருளை நல்ல முறையில் பயன்படுத்தி வருவாயை ஈட்டுவது எப்படி என்று சொல்லிக்கொடுத்தது. ஆனால் இப்போது பிறர் உழைப்பை எப்படி சுரண்டலாமென்றுதான் அது சொல்லித் தரப்படுகிறது' என்றார்.

மேலும் அவர் ஒரு விஷயத்தையும் கூறினார். திருநெல்வேலிக்கு நெல்லை எக்ஸ்பிரசில் வரும் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டது. தூத்துக்குடிக்கும் திருநெல்வேலிக்கும் ஒரே வண்டிதான். மணியாச்சியில் வந்து பிரிந்துவிடும். இந்த டீசல் எஞ்ஜின் திருநெல்வேலியிலிருந்து மாலையில்தான் புறப்படும். அதுவரை என்ஜின் ஓடிக்கொண்டு தான் இருக்க வேண்டும். அதை நிறுத்திவிட்டு மாலையில் மீண்டும் தொடங்கலாம் என்றால், அதனால் ஆகும் எரிபொருள் செலவு மிகவும் அதிகமாகும். மேலும் நேரமும் செலவாகும். அதனால் அதன் என்ஜினை Shunting Trip ஆக மாற்றிவிடுவார்கள். வேகமாகச் செல்லக்கூடிய விரைவு வண்டியின் என்ஜினை மெதுவாகச் செல்லக்கூடிய உள்ளூர் வண்டிக்கு பொருத்தி விடுவார்கள். அதுபோய் வந்து மீண்டும் பழைய வண்டியிலேயே பொருத்தப்பட்டு இயக்கப்படும்.

இந்த பொருளாதாரத் திட்டத்தில் எதுவுமே சும்மா இருக்கக்கூடாது. எப்படியாவது பயன்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மேத்தூர் ராஜ்குமார் ஓர் ஆய்வுக்கட்டுரை எழுதி இருந்தார். அதில் வணிகர்கள் வாணிபத்தில் ஈட்டும் உபரியான வருவாயை, மற்ற நாடுகளில் ‘கில்டு'களை ஆரம்பித்து பட்டறைத் தொழிலில் முதலீடு செய்தனர். தொழிற்புரட்சிக்குப் பிறகு பட்டறைத் தொழில்கள் பெரும் தொழிற்சாலைகளாக மாறின. ஆனால் சோழர் காலத்தில் வணிகர்கள் உபரியான வருவாயை பட்டறைத் தொழிலில் முதலீடு செய்யாமல் நிலங்களில் முதலீடு செய்தனர். இதனால் சோழர்கள் கால பொருளாதாரம் தேக்க நிலையிலிருந்து நலிவுற்றது என்று அவர் சொல்லியிருக்கிறார். இது உண்மைதான்.

விஜய நகர காலத்திலும் இதுதான் நடந்தது. ஆங்கிலேயர் காலத்தில் ஒரு செயற்கைப் பொருளாதாரம்தான் உருவாக்கப்பட்டது. இயற்கையாக இங்கிருக்கிற பட்டறைத் தொழிலிலிருந்து தொழிற்சாலைகள் வராமல், அவனுடைய நாட்டிலிருந்த தொழில்களை இங்கு வந்து புகுத்தியதால் ஏற்பட்டது. அது இன்னொரு வளர்ச்சியாய் போயிருக்கிறது.

உங்களுடைய முக்கியமான பதிவு அது. ‘மொகலாய மன்னர்கள் இந்து கோயில்களை கொள்ளையடித்தனர்' என்பது ஆர்.எஸ்.எஸ்.வாதம். அதற்கு மாற்றாக, இந்து மன்னர்களே கோயில்களைக் கொள்ளையடித்திருக்கிறார்கள் என்று எழுதியிருந்தீர்கள். அதைப் பற்றி சொல்லுங்கள்.

இந்து என்ற சொல்லே அந்த காலகட்டத்திற்குப் பொருந்தாது. சும்மா வார்த்தைக்கு வேண்டுமானால் அப்படி வைத்துக் கொள்ளலாம். நான்கூட அப்படித்தான் எழுதியிருப்பேன். சைவ மன்னர்களும் வைணவ மன்னர்களும் மற்ற சமய கோயில்களைக் கொள்ளையடித்திருக்கின்றனர். கோயில் பொருளாதாரம் என்று சொல்லலாம். அப்போதெல்லாம் கோயில்களில் தங்கம், வெள்ளி, தானியங்கள் என்று குவித்து வைத்திருப்பார்கள். கோயில்களை கொள்ளையடிப்பது என்பது கோயில்களிலுள்ள தங்கம், வெள்ளி, தானியங்களை கொள்ளையடிப்பது. இது குறித்து ‘புதிய காற்று' இதழில் விரிவாக எழுதியிருக்கிறேன்.

நாட்டார் வழக்காற்றியல் என்னும்போது ‘நாட்டார்' என்ற சாதிப்பெயரும் வருகிறதே. நாட்டார் வழக்காற்றியலில் சாதியம் எப்படி வந்தது?

இங்கு நாட்டார் வழக்காற்றியல் என்று எதைக்குறிக்கிறோமோ, அதை ஆங்கிலத்தில் Popular Antiquities என்று சொன்னார்கள். நமது தனித்தமிழ் இயக்கம் மாதிரி ஆங்கிலத்தில் உள்ள லத்தீன் சொற்களை மாற்றிவிட்டு, தூய்மையான ஆங்கிலோ சாக்சன் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிஞர்கள் நினைத்தனர். ஜான் தாமஸ் என்பவர் 1846 ஆம் ஆண்டு Popular Antiquities என்ற வார்த்தையை நீக்கிவிட்டு FOLKALORE என்ற வார்த்தையினை உருவாக்கினார். இரு சொற்களின் சேர்க்கையாக இது அமைந்தது Folk+lore

FOLK என்றால் யார்? அது ஒரு குழு. LORE என்பது வழக்காறு. ஒரு குழுவின் வரலாறு. அவர் பழைய மதிப்பு மிக்கவற்றை மனதில் வைத்து இவ்வார்த்தையை வைத்தார். இந்தக் காலத்தில் செல்லாத காலணா அல்லது ஓட்டைக்காசு கிடைத்தால், அதற்கு ஒரு மதிப்பு உண்டல்லவா? அந்தப் பொருளில்தான் அந்தச் சொல்லை அவர் பயன்படுத்தினார். அது தொன்மையானது என்பதற்காக FOLK என்பதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் காலமான அமெரிக்க மானுடவியலாளர் ஆலன் டெண்டிஸ், ‘தனக்கென தனித்துவமான அடையாளங்களைக் கொண்ட ஒரு குழு' என்று விளக்கமளிக்கிறார். தனித்துவமான அடையாளம் என்றால் மதம், மொழி, தொழில், இனம், வாழக்கூடிய ஒரு பகுதி என்பவையாகும். இவற்றில் ஏதேனும் ஒன்றுகூட குழுவை இணைக்கும் தனித்துவ அடையாளமாகும். இரண்டு ஆட்கள் இருக்கிறார்கள் என்றால் ஒருவரோடு ஒருவர் இணைவதற்கு மதம் ஒரு காரணமாக இருக்கலாம், மொழி ஒரு காரணமாக இருக்கலாம், தொழில் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் எண்ணிக்கை என்பது குறைந்தது இரண்டுபேர் கொண்ட குழுவாக இருக்க வேண்டும்.

LORE என்பது வழக்காறு. வழக்காறு காலம் கடந்தது அல்ல; உறைந்து போனதும் அல்ல. திருவக்கரையிலுள்ள ஒரு மரம் பூமியில் புதைந்து உறைந்து போயுள்ளதே அதைப் போன்றதல்ல. அது மாறுதலுக்கு உட்பட்டது, புதிதாக தோன்றுவது, மறைவுக்கு ஆட்பட்டது. எடுத்துக்காட்டாக ஏற்றப்பாடல். பம்புசெட் வந்தபிறகு ஏற்றப்பாடலைக் காண முடியவில்லை. ஏற்றப்பாடலை கற்றுக்கொள்கிறேன் என்று இப்போது போனால், வரலாற்றைப் பின்னோக்குகிறோம் என்று பொருள். கடல் மீனவர்களின் ‘அம்பா' பாடல்களும் எந்திரப் படகுகள் வந்த பிறகு இல்லாமல் போய்விட்டன. சில பழக்க வழக்கங்கள் மாறிப்போய் கிடக்கின்றன. கோலம் போடுவதை எடுத்து கொள்வோம். கோலம் போடுவது நமது வழக்காறு. ஆனால் இப்போது கோலம் போடுவதை படிக்க நேரமில்லை. முன்பெல்லாம் பக்கத்து வீட்டில் எதிர் வீட்டில் கோலம் போடுவதைப் பார்த்து பழகி, பண்டிகைக் காலங்களில் போட்டுப்பார்த்து கற்றுக்கொண்டனர். இப்போது அதற்கெல்லாம் நேரமில்லை. ஆனால் கோலம் போட்டாக வேண்டும். அதனால் ‘ஸ்டிக்கர்'களை வாங்கி வந்து ஒட்டிவிடுகின்றனர். கோலம் போடும் வழக்காறு ஸ்டிக்கராக மாறியிருக்கிறது.

காளை மாட்டுக்கு ‘திருஷ்டி' படும் என்ற காரணத்தோடு கறுப்புக்கயிற்றைக் கட்டுவது வழக்காறு. அதை இப்போது லாரிகளில் கட்டுகின்றனர். எனவே வழக்காறு என்பது மாறக்கூடியது, புதிதாகத் தோன்றுவது மற்றும் காலத்திற்கு ஏற்ப தொடரக்கூடியது. தமிழில் FOLKLORE என்பது நாட்டுப்புறம், நாட்டுப்புறவியல் நாட்டுப்புற வழக்காறு என்று வழங்கப்படுகிறது. ஆனால் இது ஓர் ஆபத்தை விளைவித்தது. நாட்டுப்புறம் என்பது கிராமம் என்றுதான் புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் நகரத்தில் கூட தப்பாட்டம், கரகாட்டம் போன்றவை ஆடப்படுகின்றன. கிராமியக்கலை என்பது பின் தங்கிய கலையாகக் கருதப்படுகிறது. நாட்டுப்புறவியலும் அப்படியேதான். ஆய்வுகளும் நகரத்தைப் புறக்கணிக்கின்றன. ஆலைகளில் பாடல்கள் உருவாக்கப்பட்டன. மலைத்தோட்டங்களில் தேயிலை காபி உருவாக்கிய போதும் புதிய பாடல்கள் உருவாக்கப்பட்டன. எனவே FOLK என்பது ஒரு நாட்டுக்கு உரிய பகுதி. நாடு என்பது சின்ன சின்ன அளவிலானவை. அதே நேரத்தில் பெரிய அளவிலான நிலப்பரப்பு என்றும் கொள்ளப்படும்.

நான் சொல்வது தேவக்கோட்டை பகுதிகளில் உள்ள ‘நாடு'களைப் போன்றதாகும். அது சாதி என்ற அளவில் இருக்கிறது. அது வேறு. அந்த நாட்டுக்குரிய வழக்காறு நாட்டார் வழக்காறு. நீங்கள் சொல்வது மாதிரி நாட்டார் என்பது சாதியைக் குறித்தாலும், அந்தப் பொருளில் அது வழங்கப்படவில்லை. தனக்கென தனித்துவ அடையாளங்களைக் கொண்ட ஒரு குழு என்ற அளவில்தான் அறிவுலகம் அதைப் புரிந்து கொண்டுள்ளது.

நாட்டார் வழக்காறு ஆய்வில் சாதிக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது?

நான் முன்பே சொன்ன மாதிரி, டெண்டிஸ் முன்வைத்த மதம் போன்ற தனித்துவ அடையாளங்களோடு நாம் சாதியையும் சேர்க்க வேண்டியுள்ளது. நமக்கு சாதி என்ற அடையாளம் இருக்கிறது. உணவு பழக்க வழக்கங்களைப் பார்த்தாலும் பொதுவான சமையல் முறை என்று இருந்தாலும், ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு சமையல் முறை இருக்கிறது. ஆடை அணிவது, விழாக்கள் நடத்துவது, வாழ்க்கையோடு தொடர்புடைய சடங்குகள் அனைத்தும் சாதியின் அடிப்படையில் தான் உள்ளன. சாதியக் கூறுகளை ஆய்வு செய்யும் நம்மைப்போன்ற முற்போக்காளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. உள்ளதை உள்ளபடி ஆய்வு செய்ய வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அதை நிறுவுவதற்காக சாதிய மேலாண்மையை அல்லது சாதிய சிறுமையை நிலைநிறுத்த துணைபோகக்கூடாது.

நாட்டார் பண்பாட்டில் ‘மேல்சாதி'க்காரனை கண்டதும் துண்டை இடுப்பில் கட்டுவது வழக்காறு. இத்தகைய சாதிய அடிமைத்தனத்தை வெளிப்படுத்தும் ஆய்வுகளை விட, சாதிகளுக்கு இடையே உள்ள உறவுகளை ஆய்வு செய்வதும், சாதிகளுக்கு இடையேயுள்ள ஒற்றுமைக் கூறுகளை ஆய்வு செய்வதும் அவசியமாகும். பகையுணர்வை வெளிப்படுத்தக்கூடிய ஆய்வுக்கு அவசியமே இல்லை. சாதி பற்றிய ஆய்வினை நாம் செய்யும்போது பரிசுத்தவான்களாகத்தான் இருக்கவேண்டும் என்பது இல்லை. சாதிக்குள்ளே போக வேண்டும். சாதிய ஆதிக்கம் எப்படி வெளிப்பட்டிருக்கிறது என்பது அப்போதுதான் தெரியும். இன்றைக்கும் சாதி ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. எனவே சாதியைப் பற்றிய ஆய்வு தவறில்லை.ஆனால் எதை வெளிப்படுத்த வேண்டும், எதை வெளிப்படுத்தக்கூடாது என்பது முக்கியம். சாதிகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை வளர்க்கும் ஆய்வுகளை நாம் தவிர்க்கலாம். எதைப் பாதுகாக்க வேண்டும், எதை வெளிப்படுத்த வேண்டும் என்பது மிகவும் முக்கியம். இந்த ஒலிப்பதிவுக் கருவி எல்லாவற்றையும் பதிவாக்கும். ஆனால் ஓர் ஆய்வாளன் ஒலிப்பதிவு நாடா அல்ல. எதை வெளிப்படுத்த வேண்டுமோ அதை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும்.

தலித்துகளில் ஒரு பிரிவினர் தங்கள் சாதிதான் உயர்ந்தது என அதற்கேற்ப வரலாறுகளைக் கூறும்போது, அவர்களுக்குள் பிரிவினை வராதா? மேலும், இது பார்ப்பனிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த துணை போகாதா?

தலித்துகளில் கிட்டத்தட்ட எழுபது சாதிகள் இருக்கின்றன. இதில் பதினேழு சாதிகள் அதிக அளவில் இருக்கின்றன. இங்கே வருத்தப்பட வேண்டிய செய்தி என்னவென்றால், ஒரு சாதி தன் அடையாளத்தை அல்லது பெயரை அது தீர்மானிக்காமல், அதை வேறு யாரெல்லாமோ தீர்மானிக்கிறார்கள் என்பதுதான். மேலும், தலித்துகளில் உள்ள சில பிரிவினர் தலித்துகளிலேயே தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று கூற ஆரம்பித்தனர். இது, பார்ப்பனியத்தின் ஊடுறுவலை உறுதி செய்தது. அதனால்தான் அந்தந்த சாதியினர் தங்கள் அடையாளங்களைத் தேட ஆரம்பித்தனர். பள்ளர்கள் புராணங்களில் தங்கள் அடையாளத்தைத் தேட ஆரம்பித்தனர். தேவேந்திரகுல வேளாளர்கள் என்ற பெயர் இந்திரனோடு தொடர்புடையதாக இருக்கிறது. இங்கே தலித்தல்லாதவர்களுடைய எண்ணம் என்னவாக இருக்க வேண்டும் என்றால், ஒரு சாதி தன்னை எப்படி அழைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்கிறதோ, அப்படியே ஏற்றுக்கொள்வது என்பதாகத்தான் இருக்க வேண்டும். வேறு சாதிப்பிரிவினர் அல்லது சாதியே இல்லை என்பவர்களும் அவர்களுக்கு வேறு பெயரிட்டு அழைக்க முடியாது. அவர்களை என்ன பெயர் கொண்டு அழைக்க வேண்டுமோ, அதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்பதே நூற்றுக்கு நூறு சதவிகிதம் நியாயமாக இருக்க முடியும்.

Ambedkar பட்டியலில் உள்ளவர்களை, தலித்துகள் என்ற பொதுப்பெயரிலும் அழைக்க முடியாது. பிற்படுத்தப்பட்ட அல்லது மிகப்பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இருக்கும் தேவர்களை தேவர் என்றுதான் குறிப்பிடுகிறோம். நாடார்களை நாடார் என்றுதான் குறிப்பிடுகிறோம். அவர்களை ‘பி.சி.' என்றோ ‘எம்.பி.சி.' என்றோ அழைப்பதில்லை. அவர்கள் சொந்த சாதிப் பெயர்களைக் கொண்டுதான் அழைக்கப்படுகிறார்கள். அப்படியிருக்க இவர்களை மட்டும் ஏன் பொதுப்பெயர்களைக் கொண்டு அழைக்க வேண்டும்? கல்வி, வேலைவாய்ப்புக்கு வேண்டுமானால் இந்தப் பட்டியல் பயன்படலாம். ஆனால் அவரவர்களுக்கான தனி அடையாளம் என்பது முக்கியமாக இருக்கிறது. தலித் என்ற பொது அடையாளம் வரலாற்று நியாயமாக, சமூகவியல் நியாயமாக இருக்கலாம். ஆனால் அப்படித்தான் அழைக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்த முடியாது.

இதனால் தலித்துகளுக்கிடையிலான ஒற்றுமை பாதிக்கப்படாதா?

தலித்துகளுக்குரிய ஜனநாயக உரிமையில் நாம் தலையிட முடியாது. அவர்கள் ‘பறையர்' என்றோ ‘பள்ளர்' என்றோ ‘அருந்ததியர்' என்றோ அழைத்துக் கொள்ளட்டும். ஆனால், தேவேந்திரகுல வேளாளர்கள் என்பது புராணமயமாக்கல். இந்துத்துவத்துடன் தொடர்புடையது என்றாலும் அவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளும்போது, நாம் ஒன்றும் சொல்ல முடியாது. இன்னும் சிலபேர் தங்கள் பெயரோடு சேர்த்தே பள்ளர் என்றும் பறையர் என்றும் கையெழுத்திடுவதை பார்க்கலாம். நீங்கள் இழிவுஎன்று சொன்னால் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? ‘அய்யர்' என்று நீ மட்டும் போடும்போது நானும் போடுகிறேன் என்பவர்களும் உண்டு. இதில் எது சரி, எது தவறு என்பதை காலப்போக்கில் வரலாறுதான் தீர்மானிக்கும்.

இப்போது ஜனநாயக சக்திகள் செய்ய வேண்டியது என்னவென்றால், உத்தப்புரத்தில் சுவரை இடிப்பதற்காகப் போராடியவர்கள், சட்டமன்றத்தில் பேசியவர்கள் எல்லாம் தலித்தல்லாதவர்கள்தான். அதைப்போல தலித்துகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் செயல்பாட்டினை நடைமுறைப்படுத்த வேண்டும். அம்பேத்கர் சொல்வதைப் போல திருத்தப்பட வேண்டியவர்கள் யார் என்றால், சாதி இந்துக்கள்தான். சேரிகளைத் திருத்துவது அங்கிருக்கிற குழந்தைகளுக்கு தலைக்கு எண்ணெய் தடவுவது. இதையெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். சாதி இந்துக்களை திருத்துங்கள் என்றார். அதை செய்ய வேண்டும். ஏனென்றால் சாதி என்பது மனதில் இருக்கிறது. மனதில் இருக்கும் சாதியை நீக்க என்ன செய்ய வேண்டும். சுயசாதி அடையாளத்தை ஒழிக்க வேண்டும். சுயசாதி மறுப்புள்ளவர்களாக தங்களை தலித்தல்லாதவர்கள் காட்ட வேண்டியது அவசியம். இதை அவர்கள் தங்கள் வாய்ப்புக்கு ஏற்ற வகையில் சுயசாதி தொடர்பிலிருந்து துண்டித்துக்கொண்டு, ஜனநாயகப் பூர்வமாக அவர்களை நெருங்க வேண்டும். அப்போதுதான் தலித்துகளுக்கு நம்பிக்கை ஏற்படும். வரலாறு நெடுகிலும் அவர்கள் பலரால் பல காலங்களில் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். அதனால் அவர்கள் சந்தேகக்கண்கொண்டுதான் பார்ப்பார்கள். அது இயல்பு. அதைத் தவறு என்று நம்மால் சொல்ல முடியாது.

மூவேந்தர்கள் பற்றி சொல்லும்போது, எல்லா சாதிக்காரர்களும் அவர்களை தங்கள் சாதியென்று சொந்தம் கொண்டாடுகிறார்களே?

மூவேந்தர்கள் என்று பேசும்போது, அவர்களின் பூர்வீகமே சிக்கலுடையது. சோழ மன்னர்கள் ஆந்திரப்பகுதியிலுள்ள வேங்கி நாட்டுப் பெண்களை மணந்து கொண்டு அதன் பிறகு வந்த பெண்வழி வாரிசுகள்தான் பிற்காலத்தில் மன்னர்களாக வந்தனர். அப்படியானால் தமிழ் மரபே உடைந்து போகிறதல்லவா? இன்னும் ஒன்று, மன்னர்கள் இரண்டுவிதமான மண உறவுகளை வைத்திருந்தனர். பட்டத்தரசி என்று அரண்மனைகளில் வாழக்கூடியவர்கள்; அவர்கள் ஒன்றிலிருந்து மூன்று பேர்வரை இருப்பார்கள். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குத்தான் பட்டம் சூட்டுவார்கள். அடுத்து அவர்களின் ‘வைப்பாட்டி'களுக்குப் பிறந்தவர்கள். மன்னர்கள் எல்லா ஊர்களிலும் இருக்கும் பெண்களை இதைப் போல் பயன்படுத்தியிருக்கின்றனர்.

நான் வேடிக்கையாகக்கூட சொல்வது உண்டு. தமிழ்நாட்டில் எல்லா சாதியிலும் ஏதோ ஒரு வகையில் ராஜரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லா சாதிப்பெண்களையும் மன்னர்கள் அப்படி வைத்திருந்திருக்கின்றனர். சாதிக்காரர்கள் தங்களை மன்னர் பரம்பரையினர் என்று சொல்லுவதை ‘மேல்நிலையாக்கம்' என்று சொல்லலாம். அதைத் தவிர வரலாறாக அதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதைப் பார்த்து சிரிக்கலாமே தவிர, எதிர்க்க வேண்டியதில்லை. இதில் என்ன முக்கியம் என்றால் ஒரு மன்னன் கூட இதற்கு விதிவிலக்கல்ல.

ஜமீன் ஊர்களில் பார்த்தீர்களானால், குலையில் வைத்த பெண் தெய்வங்களைப் பார்க்கலாம். அவர்கள் எல்லாம் அரண்மனையிலிருந்து அழைப்பு பெற்றவர்கள். அரண்மனைக்குப் போகாமலேயே செத்துப்போனவர்கள். பெற்றோர்களால் கொல்லப்பட்டவர்கள். அரண்மனைக்குப் போய்வந்து செத்துப் போனவர்கள். மன்னர்களின் பாலியல் வன்முறையினால் செத்தவர்கள்தான் இவர்கள். இவர்களை தெய்வமாக வைத்து வணங்கி வருகின்றனர். வரலாறு என்பது அறிவியல் பூர்வமான வரலாறாக இருந்திருக்குமேயானால், யாருமே தங்களை ‘ராஜபரம்பரை' என்று சொல்ல வெட்கப்படுவார்கள். தேவேந்திர குல வேளாளர்கள் ராஜராஜனை சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஆனால் அவன் நானூறுக்கும் மேற்பட்ட பெண்களை, அவர்களின் விருப்பம் பற்றி கவலைப்படாமல் அழைத்துக் கொண்டு வந்து சூடுபோட்டு ‘தேவரடி'யார்களாக மாற்றிய கொடுமைக்காரன். இத்தகைய வரலாறுகளையெல்லாம் சொன்னால், யாரும் மன்னர்களை சொந்தம் கொண்டாட மாட்டார்கள். இதற்கெல்லாம் வரலாற்று ஆவணம் உண்டு.

சந்திப்பு : ‘கீற்று' நந்தன்
நேர்காணல் அடுத்த இதழிலும்...


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com